3 May 2020

அடி மேல அடி விழுந்தா அம்மிக்கல்லும் எழுந்து நடக்கும்!

செய்யு - 437        

            திட்டைக்கு வந்துட்டுப் போன கையோட ரவி அத்தான் வேலங்குடி போனுச்சு. பெரியவரு மொகங் கொடுத்துப் பேசாம உக்காந்து இருந்தாரு. செயா அத்தைத்தாம் ஓடிப் போயி மருமவனெ கவனிச்சித் தண்ணியக் கொடுத்து டீத்தண்ணியப் போட்டுக் கொடுத்துச்சு. 
            ரவி அத்தான் மொகம் கொடுத்து பேசாம உக்காந்திருந்த பெரியவர்ரப் பாத்துக் கேட்டுச்சு, "மாமா! எந் தங்காச்சி எங்க?"ன்னு. மொத கேள்வியே பயங்கரமா இருக்கேன்னு மொகத்தத் தூக்கிப் பாத்தாரு பெரியவரு.
            "நாம்ம ன்னா ஒந் தங்காச்சிய வேட்டியலயா முடிஞ்சி வெச்சிருக்கேம்?"ன்னாரு பெரியவரு சுருக்குன்னு.
            "நீஞ்ஞல்லாம் இருக்குற நம்பிக்கையில்லத்தாம் மாமா நாம்ம இருக்கேம்!"ன்னுச்சு ரவி அத்தான் அடுத்ததா.
            "பொண்ணுன்னா பெரியவங்க சொல்றதெ கேக்கணும். கேக்காம அது பாட்டுக்குக் கெளம்பிப் போனா நாம்ம ன்னா பண்றது? எங்கிட்டெ கூட ஒரு வார்த்தெ கேக்கல. ஒம் மாமியாக்காரி இருக்கா. அவ்வேகிட்டெ கூட ஒரு வார்த்தெ சொல்லல. புருஷங்காரனும் இருக்காம். அவ்வேங்கிட்டயும் ஒரு வார்த்தெ சொல்லல. அது பாட்டுக்குக் கெளம்பிப் போறதுன்னா நாம்ம ன்னா செய்யணுங்றே? வளப்பு அப்பிடி இருக்கு யாரு எக்கேடு கெட்டுப் போனா ன்னா? நாம்ம நம்ம பாட்டுக்குப் போவம்ன்னு!"ன்னாரு பெரியவரு.
            "செரி மாமா! நீஞ்ஞ சொல்றதெ நாம்ம ஏத்துக்கிடறேம். தப்புச் சொல்லல. ஆன்னா தனம் எஞ்ஞப் போயிருக்கு? ஒஞ்ஞ மச்சங்கார்ரேம் வூட்டுக்குத்தான போயிருக்கு. அதுக்கு அப்பிடிப் போறதுக்கு உரிமெ இல்லியா? கோவிச்சுக்கிட்டெ போயிருக்குன்னே வெச்சிக்குவோம். பெரியவங்க நீஞ்ஞத்தானே அதெ சரி பண்ணி வுடணும். நீஞ்ஞளே இப்பிடி இருந்தீங்கன்னா ன்னா பண்றது? அதுக்காகாத்தாம் மூணு மாசம் ஆயியும் ஒஞ்ஞகிட்டெ அதெ பத்தி ஒரு வார்த்தெ பேசல. நேர்ல வந்தும் ன்னா ஏதுன்னு கேக்கல. அஞ்ஞ நாம்ம திட்டைக்குப் போயிட்டுத்தாம் இஞ்ஞ வர்றேம். அங்கப் போயி எந் தங்காச்சிக்கு ஆதரவால்லாம் ஒண்ணும் பேயல. தப்பு ஒம் மேலத்தாம் இருக்குன்னு தங்காச்சியத்ததாம் பேசிட்டு வர்றேம்!"ன்னுச்சு ரவி அத்தான்.
            "செரி போனது போயாச்சு. வாரணுமா இல்லியா? போன நீயாவது அழைச்சாந்து வாரணுமா இல்லியா? அஞ்ஞயே கெடந்தா நமக்கு ன்னா மருவாதி? நம்மள ன்னாத்தா பண்ணச் சொல்றே? ன்னா பண்ணணும்னு எதிர்பாக்குறே?"ன்னாரு பெரியவரு.
            "நாம்ம அழைச்சிட்டு வாரத்தம் பாத்தேம். சித்தப்பா ஒரு வார்த்தெ சொன்னா கெளம்பிடும் தனம். ஆன்னா சொல்ல மாட்டேங்றாரு!"ன்னுச்சுப் பாருங்க ரவி அத்தான், அந்த எடத்துல செயா அத்தைப் பிடிச்சிக்கிடுச்சு.
            "அவ்வேம் ஏம் போன்னு சொல்லுவாம்? இஞ்ஞ பேச்சுன பேச்சு அப்பிடி! எத்தனெ நாளு வெச்சிப்பேன்னு சவாலு வுட்டா? அவ்வேம் எந் யம்பீ பிடிவாதக்கார்ரேம். அப்பிடித்தாம் இருப்பாம். அவனுக்கு ன்னா தலையெழுத்தா நம்ம வூட்டுப் பொண்ணு கொண்டு போயி சோத்தப் போட்டு வெச்சிப் பாத்துக்கிடணும்னு? அவ்வேம் ரோஷமா இருக்காம். அத்து யாரு வூட்டுப் பொண்ணு. நம்ம வூட்டு மருமவ்வே. நாம்மத்தாம் போயி அழைச்சிட்டு வாரணும். மித்த எல்லாத்துக்கும் வியாக்கியானம் பேசிப்புட்டா சரிபட்டுப் போயிடுமா? ச்சும்மா வறட்டு வேதாந்தம் பேசுறதுன்னா உக்காந்து நாளு கணக்கா பேசிப்புட்டா ஆச்சா?"ன்னுச்சு செயா அத்தை.
            பெரியவரு மொகத்தைத் தூக்கி செயா அத்தைய ஒரு மொறைப்பு மொறைச்சாரு. போய்யா இதெல்லாம் எத்தனெ தடவெப் பாத்தாச்சுங்றது போல‍ செயா அத்தையும் அவரை அலட்சியமா ஒரு பார்வைப் பாத்துச்சு. பெரியவருக்கு அந்தப் பார்வை ஒண்ணே தூக்கி வாரிப் போடுறாப்புல பண்ணிடுச்சு.
            "இத்தெ இப்பிடியே வுட்டுக்கிட்டு இருக்க முடியாது. ஒரு முடிவுக்கு வாஞ்ஞ மாமா. நீஞ்ஞ பெரியவங்க. நாம்ம சொல்லப் படாது. இருந்தாலும் சொல்றேம். ஒஞ்ஞளுக்கு தெரியாததோ, புரியாததோ யில்ல. நாம்ம அப்பிடில்லாம் செய்யுற ஆளு கெடையாது. அப்பிடிச் செய்யுறதுக்கும் மனசு நமக்கு வாராது. இருந்தாலும் நாம்ம சொல்றேம்ன்னு மனசுல எதுவும் நெனைச்சிக்க வாணாம். ன்னா பீடிகைப் போடுறேம்ன்னு நெனைக்காதீயே. பொண்ண கொடுத்து பொண்ண எடுத்திருக்கேம். இஞ்ஞ அப்பிடியே நடந்ததெ அஞ்ஞ அப்பிடியே செய்யுறதுக்கு நமக்கு நேரம் ஆவாது. அப்பிடில்லாம் நாம்ம பண்ணப் போறதில்ல. அதுக்காக எந் தங்காச்சிக்கு இப்பிடிய ஆவுறதெ பாத்துட்டும் நாம்ம ச்சும்மா இருக்க முடியாது. பெரியவங்கப் பாத்து ஒரு நல்ல முடிவா எடுங்க. மேக்கொண்டு நாம்ம ஒண்ணும் சொல்ல விரும்பல!"ன்னுச்சு சொல்லிட்டுக் கெளம்ப எத்தனிச்சுப் பாத்தது ரவி அத்தான்.
            அதெ கேட்டதும் செயா அத்தைக்கு ஒரு மாதிரியா போயிடுச்சு. பெரியவரு மொகத்துல அறை பட்டது போல அப்பிடியே உக்காந்திருந்தாரு. ஏற்கனவே பொண்டாட்டிக்காரித் தாக்கி, இப்போ மருமவ்வேன் தாக்குனா மனுஷன் என்னா பண்ணுவாரு. கொஞ்சம் நெலகொழைச்சாப்புலத்தாம் இருந்தாரு ஆளு.
            "நாம்ம கெளம்புறேம் யத்தே! மாமா!"ன்னாரு ரவி அத்தான்.
            "மருமவப் புள்ளே வந்து சாப்புடாம போறதா?"ன்னுச்சு செயா அத்தை.

            "அதாங் தண்ணிக் குடிச்சேம். டீத்தண்ணியயும் குடிச்சேம். வவுறு நெறைஞ்சாப்புல ஆயிடுச்சு. சாப்புட்ட மாதிரித்தாம் இருக்கு. இப்பவே கெளம்புனா திருவாரூரு போயி சென்னைப் பட்டணத்துக்கு வண்டியப் பிடிச்சிடுவேம். பிடிச்சா காலையில போயி எறங்கிடுவேம். அஞ்ஞ கலா வேற தனியா இருக்குது. இஞ்ஞ தனியா நின்னா எந் தங்காச்சிய அழைச்சிட்டப் போறதுக்கு சித்தப்பா இருக்காரு. அஞ்ஞ ஒஞ்ஞப் பொண்ணுக்கு யாரு இருக்கா சொல்லுங்க!"ன்னு சொல்லிப்புட்டு மேக்கொண்டு எதையும் எதிர்பார்க்காம ரவி அத்தான் கெளம்பிடுச்சு.
            பெரியவரு அடுத்ததா நடக்கப் போற சம்பவத்தெ எதிர்பாக்கல. ரவி அத்தான் கெளம்பிப் போன ரெண்டாவது நாளு, கலா அத்தாச்சி அது மட்டும் தனியா சென்னைப் பட்டணத்துலேந்து வேலங்குடிக்கு வந்துச்சு. பெரியவரு அரண்டுப் போயிட்டாரு.
            கலா அத்தாச்சி வூட்டுக்குள்ள நொழைஞ்சதும், நொழையாதுமா, "நீயி மட்டுமா தனியே வந்தே?"ன்னாரு பெரியவரு.
            "அவுங்களும்தாம் வந்தாங்க. இஞ்ஞ வர்றேம்ன்னுத்தாம் சொன்னாக. வூட்டுக்கு வர்ற வேணாம்ன்னு நாம்மத்தாம் அவுகள திருவாரூர்ல அஞ்ஞ பஸ் ஸ்டாண்டுலயே நிக்க வெச்சிட்டு நாம்ம மட்டும் பஸ்ஸப் பிடிச்சி வர்றேம்!"ன்னுச்சு கலா அத்தாச்சி.
            "அவ்வளவு தூரம் வந்தவுகளுக்கு இஞ்ஞ இருக்குற வேலங்குடிக்கு வந்துட்டப் போறதுல என்னவாம்?"ன்னாரு பெரியவரு.
            "நீஞ்ஞ வர்ற மாதிரியா வெச்சிருக்கீங்கப்பா? அன்னிக்கு வந்தப்போ மொகங் கொடுத்துக் கூட பேச மாட்டேங்றீயளாம். சொல்லிட்டு ரொம்ப வருத்தப்பட்டாரு. நம்ம குடும்பத்தெ பொருத்த வரைக்கும் யண்ணிதானே மூத்த மருமவ்வே. ஒரு பொண்ணு வாரதுக்குள்ளயே இந்தப் பாடு படுத்துறீயளே? இன்னும் நாலு பொண்ணுக இந்த வூட்டுக்கு வந்தாவணும். நீஞ்ஞ இப்பிடிப் பண்றதெ ஒறவு மொறையில, வகையறாவுல எவனாச்சிம் கேள்விப்பட்டா ஒருத்தனும் பொண்ண கொடுக்க மாட்டாம்!"ன்னுச்சு கலா அத்தாச்சி.
            "கலியாணம் ஆயி பொறந்த எடம் போயாச்சு. யப்பங்காரனுக்குப் பாடத்தெ எடுக்குறே? என்னத்தெ சொல்றது நாம்ம?"ன்னாரு பெரியவரு ஒரு மாதிரியா.
            "பாடம்லாம் யில்ல யப்பா! ஒஞ்ஞக் காலத்துலயே நின்னுகிட்டுப் பேசப் படாதுங்றேம். காலம் மாறிட்டே வருது. காலத்துக்கு ஏத்தாப்புல அனுசரிச்சித்தாம் போவணும். அதெச் சொல்ல வர்றேம். யப்பா! ஒரு விசயத்தெ நீஞ்ஞப் புரிஞ்சிக்கணும். நம்ம வூட்டுப் பொண்ணு அஞ்ஞக் குடித்தனம் பண்ணுதுங்ற ஞாபவம் இருக்கணும். அதெ மறந்துப்புட்டு ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணக் கூடாது!"ன்னுச்சு கலா அத்தை.
            "ஒம் புருஷம் சொல்லிக் கொடுத்து அனுப்புனானா யிப்பிடியெல்லாம் பேசுன்னு?"ன்னாரு பெரியவரு.
            "ஒஞ்ஞப் புத்தி அப்பிடித்தானே போவும். அவரு ஒண்ணும் சொல்லல. திட்டையில ஒம்மட மாமா இதெ சரிப் பண்ணிடுவாரு. நாமளும் போயிப் பேசிட்டு வந்தேம்ன்னுத்தாம் சொன்னாரு. இஞ்ஞ நீஞ்ஞ பேசுனதெ கடெசி வரைக்கும் சொல்லவே யில்ல. சொல்லவும் மாட்டேன்னுட்டாரு. நாம்மத்தாம் மல்லுகட்டிப் பிடிவாதமா கேக்கப் போயி ஒளறிக் கொட்டுனாரு. பெறவுதாம் நாம்ம கெளம்பி யண்ணம் வூட்டுக்குப் போயி சத்தம் போட்டேம். அவரு தடுத்துதாம் பாத்தாரு. நாம்ம கேக்குறாப்புல யில்ல. அஞ்ச சத்தத்தப் போட்டுட்டு இஞ்ஞக் கெளம்புனேம். தனியாத்தாம் கேளம்புனேம். அப்பயும் தடுத்தாரு. நாம்ம போறதுல பிடிவாதமா நின்னதுல அவரு ஒண்ணும் பண்ண முடியாம மனசு கேக்காம கட்டுன பொண்டாட்டிய தனியா தூரமா அனுப்பக் கூடாதுன்னு கூட வந்தாரு. அஞ்ஞ கடையில பாக்க வேண்டிய வேலைக அப்பிடியே கெடக்கு. எல்லாத்தையும் போட்டுப்புட்டு ஓடி வந்தாரு. இஞ்ஞ வூட்டுக்கும் வாரதாத்தாம் சொன்னாரு. நாம்மத்தாம் ஒஞ்ஞள மதிச்சிப் பேசாத வூட்டு வாசல்ல நீஞ்ஞ மிதிக்க வாணாம்ன்னு சொல்லிட்டு நாம்ம மட்டும் தனியா வந்தேம். நல்ல முடிவா எடுப்பீங்கன்னு நம்புறேம். அப்பிடி எடுக்கலன்னா ஒஞ்ஞளுக்குக் கலாங்ற பொண்ணு இருக்குறதெ மறந்துப்புடுங்க. ஒஞ்ஞளுக்குப் பொண்ணு புள்ளைக்கா கொறைச்சலு? நாம்ம இனுமே இந்த வூட்டுப்பக்கம் காலடி எடுத்து வைக்கிறதா வாணாமாங்றது நீஞ்ஞ எடுக்குற முடிவுலத்தாம் இருக்கு. இதுக்கு மேல நாம்ம பேச விரும்பல. கெளம்புறேம்ப்பா! யம்மா கெளம்புறேம்!"ன்னுச்சு கலா அத்தை.
            "ன்னாடி வந்தே! படபடன்னு பொறிஞ்சித் தள்ளுனே. வெந்நித் தண்ணியக் கால்ல ஊத்திக்கிட்டவ போல கெளம்புறேங்றே? ஒரு வாயி டீத்தண்ணியக் குடிக்கலீயே?"ன்னுச்சு செயா அத்தை.
            "அஞ்ஞ நம்மட புருஷம் அனாதியா திருவாரூரு பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு கெடக்குறாரு. கெளம்புனதுலேந்து பச்சத் தண்ணி பல்லுல படல. நாம்ம மட்டும் இஞ்ஞ விருந்துச் சாப்புட்டுப் போனா நல்லாவா இருக்கும்? அதுவும் கலியாணத்துக்குப் பெறவு அழைப்புல்லாம் முடிஞ்சி ஒத்தையா வந்திருக்கேம். ஒத்தையா சாப்புட்டப் போவக் கூடாதும்மா. சோடியாத்தாம் வந்துச் சாப்புட்டுப்புட்டுப் போவணும்பாங்க. நாம்ம அவுங்களோட சோடியா வந்தே சாப்பிட்டுக்கிறேம். சோடியா வந்து சாப்புடுற மாதிரிக்கி நடந்துப்பீங்க யில்லே?"ன்னுச்சு கலா அத்தாச்சி. சொல்லிப்புட்டு அது பாட்டுக்கு விடுவிடுன்னு கெளம்பி வாசல்ல கடந்து நடக்க ஆரம்பிச்சிடுச்சு.
            நடக்க ஆரம்பிச்சது என்ன நெனைச்சதோ திரும்ப விடுவிடுன்னு வூட்டுக்குள்ள வந்து பெரியவரு காதுல ஏதோ குசுகுசுன்னு சொன்னச்சு. சொல்லிப்புட்டுத் திரும்பவும் பழையபடி விடுவிடுன்னு வூட்டை வுட்டு ‍வெளியில வந்து வேலிப்படல தொறந்துகிட்டு நடக்க ஆரம்பிச்சிடுச்சு. போனவ திரும்பி வாராளே, சரித்தாம் இங்கத்தாம் இருக்கப் போறான்னு நெனைச்ச செயா அத்தைக்குப் பகீர்ன்னு ஆயிப் போச்சுது.
            செயா அத்தை ஒடனே ஓடியாந்து தெருவுலயே கட்டிப் பிடிச்சிக்கிட்டுத் தடுத்துப் பாத்துச்சு. கலா அத்தை கேக்கறாப்புல யில்ல. திமிறிக்கிட்டு, கையப் பிடிச்சி ஒதறி விட்டுப்புட்டுப் போயிக்கிட்டே இருந்துச்சு. போறப்பவே, "நாம்ம சென்னைப் பட்டணத்துல போயி எறங்குறதுக்குள்ள நல்ல சேதி எங் காதுல வுழுவணும். வுழுந்தா அடுத்த பஸ்ஸப் பிடிச்சி புருஷங்காரரோட வந்து விருந்தே சாப்புட்டுட்டுப் போறேம்!"ன்னுச்சு கலா அத்தாச்சி.
            கலா அத்தாச்சிக் கெளம்பிப் போன கொஞ்ச நேரத்துல பெரியவரு நல்ல வெள்ளை வேட்டியா ஒண்ணுத்தெ பொட்டியிலேந்து எடுத்துக் கட்டுனாரு. வானத்து நீலத்துச் சட்டைய எடுத்து மாட்டுனாரு. மண்டைப் பெருத்த கடிகாரத்தைக் கையில கட்டி தேங்காப்பூ துண்டு ஒண்ண எடுத்து தோள்ல போட்டுக்கிட்டு, பெட்டி ஓரத்துல மடிச்சி வெச்சிருந்த பழைய தெனசரி பேப்பர ஒண்ணு எடுத்துக் கக்கத்துல வெச்சிக்கிட்டாரு. அப்பிடியே கையில ஒரு துணிப் பையையும் கையில எடுத்துக்கிட்டு வந்து வாசல்படிகிட்டெ கெடந்த செருப்ப மாட்டுனாரு.
            செயா அத்தைக்குப் புரிஞ்சிப் போயிடுச்சு. புருஷங்கார்ரேம் ஏதோ காரியமா வெளியில கெளம்புறார்ன்னு. ஆனா எங்க கெளம்புறார்ன்னுத்தாம் புரியல. வெளியில கெளம்புறப்ப எதுவும் கேக்க முடியாது. கேட்டாக்க அபசகுனமா எஞ்ஞப் போறதுன்னா கேக்கறதுன்னு எரிஞ்சி விழுவாரு பெரியவரு. அவரு போயிட்டு வந்தாத்தாம் விசயம் புரியும். மனசு செயா அத்தைக்கு படபடன்னு இருந்துச்சு. அவ்வளவு படபடப்பா இருந்தாலும் ஏத்தோ நல்லது நடந்தா சரித்தாம்னு நெனைச்சு அது ஒரு பக்கத்துல மனசுக்கு கொஞ்சம் ஆறுதால இருந்துச்சு.
            பெரியவரு மேற்கால கெளம்பி வயப்பக்கமா குறுக்கால வுழுந்து நடக்க ஆரம்பிச்சாரு. திருவாரூரு போறதுன்னா அப்பிடித்தாம் குறுக்கால வுழுந்து நடந்துப் போவாரு. ஒருவேள அப்படி நடந்துப் போயி மெயின்ரோட்ட பிடிச்சி கெழக்கால திரும்பி தெற்கால திட்டைக்குப் போனாலும் போனதுதாம். எங்கப் போறார்ங்றது அவருக்குத்தான தெரியும்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...