செய்யு - 436
மூணு
மாசமா தனம் அத்தாச்சியப் பாக்க யாரும் வாரல. தெருவுல எல்லாததுக்கும் தனம் அத்தாச்சியப்
பிடிச்சுப் போச்சு. இருந்தாலும் தெருவுல ஒரு சங்கடம் என்னான்னா யார்ரா இருந்தாலும்
அவுங்களப் பத்தி ஆதியோட அந்தாம வெசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டு அவுங்களப் பேசி மென்னு
தின்னாத்தாம் திருப்திப்படும். அதுவும் மூணு மாசமா ஒரு பொண்ணு ஒரு வூட்டுல இருக்குதுன்னா
அதெ பத்தித்தாம் தெரு சனம் முழுக்கப் பேசிகிட்டு கெடந்துச்சு. சுப்பு வாத்தியாரு தனம்
அத்தாச்சியோட புருஷங்கார்ரேம் வெளிநாட்டுல இருக்குறதாவும், புருஷங்கார்ரேம் வர வரைக்கும்
இங்கத்தாம் அத்து இருக்கும்ன்னு அவரா ஒரு கதைய அளந்து வுட்டுக்கிட்டுக் கெடந்தாரு.
தெரு சனங்களும் அப்பிடித்தாம்ன்னு நெனைச்சிக்கிட்டுக் கெடந்ததுங்க. தனம்
அத்தாச்சிக்கும் தன்ன யாரும் வந்துப் பாக்கலன்னு எந்த ஒரு கவலையும் இல்ல. அது பாட்டுக்கு
தன்னோட வூட்டுல இருக்குறதப் போல நெனைச்சுக்கிட்டுச் சந்தோஷமா இருந்துச்சு. தன்ன
அழைச்சிட்டுப் போவாட்டியும் பரவாயில்ல, இப்பிடியே திட்டையில காலத்தை ஓட்டிப்புடலாங்ற
அளவுக்கு தனம் அத்தாச்சியோட மனசு மாறிப் போயிருந்துச்சு.
இதுக்கு இடையில ஒரு நாளு தனம் அத்தாச்சியோட
அண்ணங்காரரு ரவி அத்தான் சென்னைப் பட்டணத்துலேந்து அவரு மட்டும் திட்டைக்கு வந்தாரு.
அவரு வந்ததும் வாரதுதுமா, "ஒம் மேலத்தாம்
தப்பு. குடும்பம்ன்னா ஆயிரம் இருக்கும். பெரியவங்கள அனுசரிச்சித்தாம் போவணும். நீ
பாட்டுக்கு திடுதிப்புன்னு இப்பிடிக் கெளம்பி வந்ததெல்லாம் தப்பு. மொதல்ல கெளம்பிப்
போற வழியப் பாரு!"ன்னாரு. தனம் அத்தாச்சி எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து
கேட்டுச்சு. கேட்டு முடிச்சிட்டு ஒரே வார்த்தையில, "முடியாது"ன்னு சொல்லிப்புட்டு
அது பாட்டுக்கு எழும்பி அந்தாண்ட போயிட்டு. ரவி அத்தானுக்கு ஒரு மாதிரியா போயிடுச்சு.
"எத்தனெ நாளுக்கு இப்பிடியே வெச்சுப்பீங்க
சித்தப்பா? நீஞ்ஞ பண்ணது தப்பு. அஞ்ஞயே வெச்சு ஒரு சமாதானத்தப் பண்ணி வுடாம இப்பிடி
அழைச்சிட்டு வந்து பெரிய குடும்பப் பெரச்சனையா ஆக்கி வுட்டுப்புட்டீங்களே? இதெ எப்பிடிச்
சரி பண்ணுறதுன்னே நமக்குத் தெரியல. பெரிய ரப்சல்லா கெடக்கு. செரி அழைச்சி வந்ததுதாங்
அழைச்சி வந்தீங்க. கொஞ்ச நாளு வெச்சிருந்து நல்ல வெதமா புத்திமதிச் சொல்லி கொண்டு
போயி வுடணுமா இல்லியா. இப்பிடி இஞ்ஞயே வெச்சுக்கிட்டா ன்னா அர்த்தம்? இஞ்ஞ ஊருலத்தாம்
நாலு பேத்து என்ன வெதமா பேசுவாங்க? அவரு மச்சாங்காரர்ட்ட பேசுனா, யப்பா அழைச்சிட்டு
வரச் சொல்லாம அழைச்சிட்டு வார மாட்டேங்றாரு. சரின்னு மாமனாருட்ட பேசுனா, அத்து ன்னா
பொம்பளப் புள்ளைக்கு அம்மாம் கொழுப்பு? அது பாட்டுக்குக் கெளம்பிப் போவுது. அப்பிடிக்
கெளம்பிப் போறதெல்லாம் அப்பிடித்தாம் கெடந்து சின்னாபின்னா படணுங்றாரு! நமக்கு ஒண்ணுமே
புரியல. ஒரு சாதாரண வெசயத்தப் பெரிசு பண்ணிவுட்டு எந்த நெலமையில கொண்டாந்து நிறுத்தியிருக்கீங்க
தெரியுமா? இப்போ எந் தங்காச்சியும் இஞ்ஞ சந்தோஷமாவா இருக்கும்? தெனமும் அழுகாச்சிய
வெச்சிக்கிட்டுத்தான இருக்கும்? இதல்லாம் எத்தனெ பேருக்கு மன சங்கட்டம் தெரியுமா? நமக்கு
அஞ்ஞ சென்னைப் பட்டணத்துல நிம்மதியான தூக்கம் இல்ல. இஞ்ஞ ஒங்களுக்கும் அப்பிடித்தாம்
இருக்கும். வேலங்குடியில அதுக்கு மேல இருக்கும். இதையல்லாம் நாம்ம எஞ்ஞப் போயிச் சொல்லி
முட்டிக்கிறதுன்னே தெரியல!" அப்பிடினிச்சு ரவி அத்தான் சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
"ஒரு அண்ணங்காரனா ஒம் மேல குத்தம்
சொல்லல. இந்தப் பேச்ச நீயி எப்போ வந்துப் பேசிருக்கணும்? சம்பவத்தெ கேள்விப்பட்ட
அடுத்த நாளே வந்து பேசியிருந்தேன்னா சரிதான்னு சபாஷ்ன்னு ஒன்னயப் பாராட்டிருக்கலாம்.
சம்பவம் நடந்து ரெண்டு மூணு மாசத்துக்கு மேல ஆவப் போவுது. இப்பத்தாம் என்னவோ சங்கதி
தெரிஞ்சவேம் மாதிரி வந்துப் பேசுறே? ஏம் இத்தனெ நாளா ஒனக்கு நிம்மதியா தூக்கம் வந்துச்சாக்கும்,
இன்னிக்குத்தாம் தூக்கம் வாராம வந்தியாக்கும்? இத்து நம்மட வாழ்க்கெ. அதெ எப்பிடிப்
பாத்துக்கணும்னு தெரியும். நீயி ஒம்மட பொண்டாட்டியோட போயி ஒழுங்கா குடித்தனத்தெ
பண்ணு!" அப்பிடின்னு அந்தாண்ட நகர்ந்து போன தனம் அத்தாச்சியோட குரலு வெளியிலேந்து
உள்ள வருது. தனம் அத்தாச்சி பேசி முடிச்சுப்புட்டு அந்தாண்ட போயி என்ன பேச்சு நடக்குதுங்ற
உத்துக் கவனிச்சிக்கிட்டு இருந்திருக்கும் போலருக்கு.
"இதல்லாம் குடும்பத்துக்கு நல்லாவா
இருக்கு? எங்கிட்டேயே இப்பிடிப் பேசுறீயே? அஞ்ஞ எப்பிடிப் பேசியிருப்பே?"ன்னுச்சு
ரவி அத்தான் வெளியில கேக்குறாப்புல சத்தமா.
"என்னவோ பக்கத்துல இருந்து பாத்தாப்புலல்ல
பேசியாவுது? நாம்ம ஒண்ணுத்தையும் பேயல. பேசுனது செஞ்சதெல்லாம் அவுங்கத்தாம். எதுக்குப்
பெரச்சனைன்னா நாம்ம பாட்டுக்குப் பேயாம வந்துட்டேம். அதாங் நாம்ம பண்ண தப்பு. பேசியிருந்திருக்கணும்.
அப்ப தெரிஞ்சிருக்கும்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி அங்கன இருந்துக்கிட்டே.
இதெ கேட்டுக்கிட்டு இருந்த சுப்பு வாத்தியாருக்குச்
சிரிப்பு வந்துடுச்சு. சிரிச்சிட்டாரு. "ன்னா சித்தப்பா நீஞ்ஞ வெவரம் தெரியாம
சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க? கேக்குறதுக்கும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்றீங்க. எந் நெலமெ
புரிய மாட்டேங்குது ஒஞ்ஞளுக்கு. இப்போ தங்காச்சியக் கெளம்பச் சொல்லுங்க. நாம்ம அழைச்சிக்
கொண்டு போயி அஞ்ஞ வேலங்குடியில பேசி வுட்டுப்புட்டுப் போறேம்!" அப்பிடினிச்சு
ரவி அத்தான்.
"செரி அப்பிடின்னா ஏ பொண்ணு தனம்
அண்ணங்காரனோட கெளம்பு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"செரிங்கப்பா! கெளம்புறேம். அழைச்சிட்டுப்
போயி என்னத்தெ பேசி வுடும்ன்னு எஞ்ஞ அண்ணங்கிட்டெ கேட்டுச் சொல்லுங்க. கெளம்புறேம்!"ன்னுச்சு
தனம் அத்தாச்சி அங்க இருந்துகிட்டெ.
"இதல்லாம் ன்னா பேச்சு? பெரியவங்க,
வயசுல மூத்தவங்க. கெளம்புன்னு சொன்னா கெளம்ப வேண்டித்தானே. என்னத்தெ பேசுவே? ஏதெ பேசுவேன்னா?"ன்னுச்சு
ரவி அத்தான்.
"அப்பிடின்னப்பா நாம்ம கெளம்ப முடியாது!"ன்னுச்சு
தனம் அத்தாச்சி.
"எத்தா இருந்தாலும் நம்ம கண்ணு முன்னால
வந்து நின்னு நேருக்கு நேரு பாத்துச் சொல்லணும். ஒளிஞ்சிக்கிட்டு நின்னுக்கிட்டு சொல்லக்
கூடாது!"ன்னு சொன்னுச்சுப் பாருங்க ரவி அத்தான், தனம் அத்தாச்சி மின்னாடி வந்து
அண்ணங்கார்ரேம் கண்ணப் பாத்துச் சொன்னிச்சு, "ஒங்கூட வர முடியாதுடா போடா! ஒன்னால
ஆனதெ பாத்துக்கோ!" இதெ கேட்டதும் ரவி
அத்தானுக்கு மொகம் தொங்கிப் போயிடுச்சு.
"ன்னா சித்தப்பா! இத்து இப்பிடிப்
பேசுது? கலியாணத்தப் பண்ணி வுடுறது எதுக்கு? நல்ல வெதமா குடித்தனம் பண்ணத்தானே? இதுக்குக்
கலியாணம் ஆயித்தாம் நாம்ம கலியாணம் பண்ணுவேம்ன்னு எத்தனெ வரனெ நாம்ம தாட்டி வுட்டுருக்கேம்
தெரியுமா சித்தப்பா? இன்னிக்கு ன்னா பேச்சுப் பேசுது? இப்பிடி வந்து இஞ்ஞ உக்காந்திருந்தா
ஒறவுல, சொந்தப் பந்தத்துல நம்மளப் பத்தி நாலு பேத்து ன்னா நெனைப்பாம்? அப்பிடில்லாம்
ஒரு நெனைப்புக்கு நாம்ம எடம் கொடுக்கலாமா? நீஞ்ஞத்தாம் சித்தப்பா எடுத்துச் சொல்லணும்.
நீஞ்ஞ ன்னான்னா அத்து பேசுறதெ கேட்டுக்கிட்டுச் சின்ன புள்ளயாட்டம் வெளையாட்டுப் பண்ணிக்கிட்டுச்
சிரிச்சிக்கிட்டுக் கெடக்கீங்க. நாம்ம என்னத்தெ சொல்றது? எல்லாம் இப்பிடி யிருந்தா
ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல. இந்தாரு தனம்! முடிவா ன்னா சொல்றே?"ன்னுச்சு ரவி அத்தான்.
"அதாங் சொல்லிட்டேம்லே. கெளம்பு.
கெளம்பு. மொதல்ல கெளம்புற வழியப் பாரு. யப்பா இஞ்ஞ நம்மள நல்ல வெதமாத்தாம் வெச்சிருக்காங்க.
இஞ்ஞ நமக்கு ஒண்ணும் எந்தக் கொறையுமில்ல. நீயிக் கட்டிக் கொடுத்தீல்ல ஒரு மம்முதனுக்கு,
அஞ்ஞ இருந்ததெ வுட இஞ்ஞ ரொம்ப சந்தோஷமாத்தாம் இருக்கேம். அஞ்ஞ இருந்தப்பத்தாம் நிம்மதியில்ல.
இஞ்ஞ இருக்குறப்ப நிம்மதியா இருக்கு. போதுமுல்ல. அதால தங்காச்சி அழுகாச்சிய வெச்சிக்கிட்டு
நொம்பலப்பட்டுக்கிட்டுக் கெடக்குதுன்னுல்லாம் நெனைக்காதே. யாரு அழுகாச்சிய வெச்சிட்டுக்
கெடக்கணுமோ அவுங்கத்தாம் அழுகாச்சிய வெச்சிட்டுக் கெடக்கணும். நாம்ம ன்னா தப்பு பண்ணேம்?
தப்பு பண்ணது அவுங்க? தப்பு பண்ணவங்களுக்குத்தாம் தண்டனெ, நமக்கில்லே. நீயாவது ஒம்
பொண்டாட்டிய நல்ல வெதமா வெச்சுக்கோ? அப்பிடி வெச்சிக்கிட்டாத்தாம் ஒரு பொண்ண எப்பிடி
வெச்சிக்கணும்ன்னு அவுங்களுக்குத் தெரியும்? நம்மள இப்பிடி வெரட்டி அடிச்சிப்புட்டாங்கன்னு
நீயும் அண்ணிய வெரட்டி அஞ்ஞ அடிச்சிப்புடாதே!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
"ன்னா சித்தப்பா இத்து? பாத்துச்
சொல்லி வுடுங்கன்னா ஒண்ணுத்தையும் பேயாம உக்காந்திருக்கீங்க? இத்து எதுல போயி முடியும்ன்னு
நமக்குப் பயமா இருக்கு?"ன்னுச்சு ரவி அத்தான் சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
சுப்பு வாத்தியாரு தனம் அத்தாச்சிய ஒரு
பார்வெ பாத்தாரு. தனம் அத்தாச்சியும் பார்வையாலயே தன்னைப் போவச் சொல்லிப்புடாதீங்ற
மாதிரிக்கி ஒரு பார்வையப் பாத்துச்சு. இருந்தாலும் சுப்பு வாத்தியாரு கேட்டாரு,
"இப்போ ன்னா பண்றது பொண்ணே?" அப்பிடின்னு.
"கெளம்ப முடியாது. இஞ்ஞத்தாம் இருப்பேம்!"ன்னிச்சு
தனம் அத்தாச்சி.
"செரி அப்பிடின்னா இரு!"ன்னு
சிரிச்சிக்கிட்டே சொன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யய்யோ! யய்யோ! மெண்டல்! மெண்டல்!
ஒனக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்படிப் பண்ணுறீயே?"ன்னு தலையில அடிச்சிக்கிட்டு
ரவி அத்தான்.
சுப்பு வாத்தியாரு ரவி அத்தானப் போயி
பிடிச்சிக்கிட்டாரு. "இப்போ ஒண்ணும் மனசப் போட்டுக் கொழப்பிக்க வாணாம். அதா
ஒரு முடிவு வரும். நீஞ்ஞ மனசுல சங்கடப்படாம கெளம்புங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நீஞ்ஞ சாதாரணமா சொல்லுதீயே! நமக்குப்
பக்கு பக்குன்னு இருக்கு! மத்தளத்துக்கு ஒரு பக்கத்துல அடி. மோளத்துக்கு ரண்டு பக்கத்துல
அடி. நமக்கு எல்லா பக்கத்துலயும் அடி. அடி கூட யில்ல இடி. இப்பிடி எல்லாமும் பிடிவாதமா
இருந்தா நாம்ம ஒண்ணும் பண்ண முடியாது!"ன்னுச்சு ரவி அத்தான் கண்ணு கலங்கிப் போயி.
"சின்னப் புள்ளைங்கத்தானே யம்பீ!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"யாரு சின்னப் புள்ளே இத்துவா? செல்லம்
சித்தப்பா! அளவுக்கு மீறுன செல்லம். அதாங் கெட்டுப் போயிக் கெடக்குது. இழுத்து வெச்சி
நாலு சாத்து சாத்துன்னா செரியாயிடும்!"ன்னு சொன்னிச்சுப் பாருங்க ரவி அத்தான்,
சுப்பு வாத்தியாரு ஒடனே சொன்னாரு, "செரி! செரி! நீஞ்ஞ கெளம்புங்க யம்பீ! இதெ
நாம்ம பாத்து முடிச்சி வைக்கிறேம்! ஒடனேயெல்லாம் முடிக்க முடியாது. மெதுவாத்தாம் முடியும்!"
"ன்னா சித்தப்பா! அத்தெ கெளப்பி வுடாம,
நம்மள கெளம்பச் சொல்லுதீங்களே?"ன்னுச்சு ரவி அத்தான்.
"பொம்பளெ புள்ளீயோ அப்பிடித்தாம்பா
இருக்கும் கொஞ்சம் பிடிவாதமா. அது அதுகளோட உரிமெ. அப்பிடி இருக்குறதாம் பாத்தீன்னா
பாசத்துல உருகிப் போயி உசுரையும் கொடுக்கும். இதெல்லாம் இப்போ ஒங்களால புரிஞ்சிக்க
முடியாது. ஒங்களுக்கு ஒரு விசயத்தெச் சொல்லவா! வேலங்குடியில இருக்காரே எஞ்ஞ பெரிய
அத்தாம் அவரு ஒரு சின்ன மோடுமுட்டி! அஞ்ஞ பக்கத்துலயே இருக்காரே எஞ்ஞ சின்ன அத்தாம்
அவரு பெரிய மோடுமுட்டி! இந்த ரண்டு மோடுமுட்டிகள்ட்டயும் எஞ்ஞ ரண்டு யக்காவும் போயிப்
படுற பாடு இருக்கே? ஒண்ணும் சொல்றதுக்கில்லே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஒங்கள நம்பித்தாம் கெளம்புறேம் சித்தப்பா!"ன்னு
சுப்பு வாத்தியாரோட கையப் பிடிச்சி கண்ணு தண்ணிய வுட்டுக்கிட்டே கெளம்புனுச்சு ரவி
அத்தான்.
*****
No comments:
Post a Comment