செய்யு - 461
வேலங்குடி சின்னவரு காலங்காத்தால மொத
வேலையா டீத்தண்ணியப் போட்டுக் கொடுக்கச் சொல்லி சைக்கிள்ல ராயநல்லூரு கொண்டாந்து
எட்டாம் நம்பரு பஸ்ல சுப்பு வாத்தியார்ர ஏத்தி வுட்டுப்புட்டுத்தாம் மறுவேல பாத்தாரு.
அதுல கொஞ்சம் தாமசம் பண்ணாலும் சுப்பு வாத்தியாரு பெரியவரு வூட்டுக்குப் போயி எதாச்சிம்
ஒளறிக் கொட்டிப்புடுவாருங்ற பயம் அவருக்கு இருந்துச்சு. சுப்பு வாத்தியாருக்கும் ராத்திரி
பூரா காங்கலன்னா வூட்டுல என்னா நெனைச்சுப்பாங்ற நெனைப்பு இருந்துகிட்டெ இருந்துச்சு.
பெரியவரோட பேச்சுல பிடிச்சா அது வேற ஒரு மாமாங்கம் ஆகும்ன்னு நெனைச்சுக்கிட்டு ஒண்ணும்
சொல்ல முடியாம கெளம்பிட்டாரு. அநேகமா வேலங்குடிப் போயி ரண்டு வூட்டுக்கும் போவாம,
ஒத்த வூட்டுலேந்து திரும்புறது இதுதாங் அவருக்கு மொத தடவெ. ரெண்டு வூட்டுக்கும் இடையில
என்ன சண்டையா இருந்தாலும், வேலங்குடிக்குப் போனா ரெண்டு வூட்டுக்கும் போவாம இருக்க
மாட்டாரு சுப்பு வாத்தியாரு.
எட்டாம் நம்பரு பஸ்ல காலங்காத்தால ஏழரை
மணி வாக்குல ஊர்ல வந்து எறங்குனாரு. எறங்கி வூட்டுக்கு வந்தா வெங்கு திட்டோ திட்டுன்னுத்
திட்டித் தள்ளுது. "என்னதாங் நெனைச்சிட்டு இருக்கீங்க மனசுல? கெளம்பிப் போறப்ப
சொல்லிட்டுப் போறது கெடையாதா? இஞ்ஞ ஒரு மனுஷி ரண்டு புள்ளைங்கள வெச்சிக்கிட்டு ராத்திரிப்
பூரா தூங்குறதா? விடிய விடிய வருவீங்களோ மாட்டீங்களோன்னு நெனைச்சுகிட்டுக் கெடக்குறதா?
அவ்வேம் பயெ அப்பா எப்ப வரும்ன்னு நம்மள போட்டுத் தொளைச்சி எடுக்குறாம். இவ்வே சின்னவெ
தூங்க மாட்டேங்றா. இப்பிடில்லாம் இருந்தா ன்னத்தப் பண்றது? இஞ்ஞ இருக்குற திருவாரூருக்குப்
போயி பஸ்ஸ ஏத்தி வுடுறதுக்கு அரைப் பகலும் ஒரு ராத்திரியுமா ஆவும்?"ன்னு சத்தம்
போட்டுச்சு வெங்கு.
சுப்பு வாத்தியாரு சின்னவர்ர மானாங்காணியா
திட்ட ஆரம்பிச்சாரு, "நமக்குன்னு வந்து வாய்க்குறானுவோளே, கிறுக்காணிப் பயலுவோ!
அறிவு இருக்கான்னு தெரியல, இல்லையான்னும் தெரியல. அவனவன் மனநெலையையும், வேல சோலியைத்தாம்
பாக்குறானுவோளே தவுர, மித்தவங்களுக்கும் அப்பிடித்தாம் இருக்கும்ன்னு நெனைக்க மாட்டேங்றானுவோ.
போட்டு சின்னாபின்னா படுத்துறானுவோ. செரியான மோடுமுட்டிப் பயலா இருப்பாம் போலருக்கு.
கூறுகெட்டப் பயெ. யோஜனெ பண்ணுறான்னே அதுல எதாச்சிம் பிரயோஜனம் இருக்க வேண்டாம்? மண்டெ
கெழண்ட பய மாதிரியே யோஜனையப் பண்றாம்? அவரு பெரியவரு அவரு பாட்டுக்கு சிவனேன்னு கெடக்குறாரு
அவரு வூட்டு வேல சோலிய பாக்க முடியாமா! என்னவோ அவருதாங் இவ்வேம் குடியக் கெடுக்குறாப்புல
இவனா குண்டக்க மண்டக்க நெனைச்சுக்கிட்டு தாட் பூட் தஞ்சாரூன்னு தாவிக் குதிக்குறாங்றேம்.
இந்தக் காவாளிப் பயெ சொன்னாம்ன்னு நம்பிப் போயி ஆவ வேண்டிய கதெயும் ஆவல. எதுக்குப்
போனேம்ன்னு ஆயிப் போச்சு. தண்ட அலைச்சலு. எஞ்ஞ யம்மா அப்பவே தலை தலையா அடிச்சிக்கிட்டு
ரசா யக்காவே இந்தப் போக்கத்தப் பயலுக்குக் கட்டிக் கொடுக்க கூடாதுன்னு. தலவிதி யார்ர
விட்டுச்சு? அவ்வேம் குடும்பத்தோடயே சகவாசம் வெச்சிக்கக் கூடாதுன்னு சொல்லும். தலையெழுத்த
யாரு மாத்த முடியும்? இனுமேலாவது அதெ சகவாசத்த ஒழிச்சிக் கட்டியாவணும். இந்தப் புத்திக்
கழண்ட பயலுக்கு கட்டி வெச்சி யக்காவும் வதியழிஞ்சி நாமளும் வதியழிஞ்சிட்டுக் கெடக்குறேம்!
ஒண்ணாம் நம்பரு புத்திப் பெசவுன்ன பயலா இருப்பாம் போலருக்கு. சொல்றது எதாச்சிம் ஒண்ணாவது
மண்டையில ஏறுதான்னா ஏற மாட்டேங்குது. அந்தப் பயெ சட்டையக் கிழிச்சிட்டு அலையுறாப்புல
நம்மளயும் சட்டையக் கிழிச்சிட்டு அலையணும்னு நெனைக்கிறாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
இப்பிடியா வெங்கு சுப்பு வாத்தயார்ர திட்டுன்னா, சுப்பு வாத்தியாரு சின்னவர்ர போட்டுத்
திட்டிக்கிட்டுக் கெடந்தாரு. இந்தச் திட்டுற சுழற்சி மாறி மாறி நடந்ததுல நேத்தி நடந்த
சங்கதி ஒண்ணு வுடாம சுப்பு வாத்தியாரு வாயால வெளியில வந்துச்சு. இது கடெசியா வேற மாதிரி
மாறி வெங்கு சின்னவர்ர திட்டுறதுல போயி நின்னுது.
"இனுமே இந்த வூட்டுப்பக்கம் எதாச்சிம்
சங்கதின்னு அந்த அண்ணே வரட்டும். நாக்கெப் புடுங்குறாப்புல நாலு கேள்வியக் கேட்டுப்புட்டாத்தாம்
சரிபட்டு வரும். ஒரு மனுஷன இப்பிடியா ரா பூரா பஸ் ஸ்டாண்டுல அநாதியா காக்க வைக்குறது?
அப்பிடி ஒம்மட வூட்டு வெசயம் முக்கியங்ற மாதிரிக்கித்தான அடுத்தவங்க வூட்ட வெசயமும்
முக்கியமா படும். செரித்தாம் கெடக்கு. பொண்ணு கொடுத்த எடமாச்சே, போயி நல்லதெ கெட்டதெ
பாத்துட்டு வாஞ்ஞன்னு நாமளும் வுட்டா, எப்பப் பாத்தாலும் ஏறுக்கு மாறாவே நடந்தா ன்னத்தா
பண்றது?"ன்னுச்சு வெங்குவும் காட்டமா.
வாழ்க்கை இருக்கே அதுல எங்க சொல்றபடி
நடந்துக்க முடியுது?
மூணு மாச காலம் ஓடியிருக்கும்.
ஒரு நாளு சின்னவரு காலங்காத்தாலயே, சுப்பு
வாத்தியாரு அன்னிக்கு எப்படி ராயநல்லூர்லேந்து மொத பஸ்ஸப் பிடிச்சி ஏழரைக்கு வந்தாரு
பாருங்க, அதெ மாதிரிக்கி கையில ஒரு துணிப்பைய மாட்டிக்கிட்டு ஓடியாந்தாரு. என்னடா பரக்காவெட்டி
திரும்ப ஏரோப்ளான்ல ஏறி வருதேன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. வெங்குவுக்குப் பழைய
கோவம் இருந்தாலும் அதெ வெளிக்காட்டிக்காம, "வாங்கண்ணேம் வாங்க! இப்போ ன்னா ரண்டாவது
புள்ளே பட்டணம் போவுதாக்கும். மாமங்கார்ரேம் வந்து பஸ்ஸூ ஏத்தி வுடுணுமாக்கும்!"ன்னுச்சு.
சின்னவரு கண்ணுலேந்து தண்ணி ஊத்த ஆரம்பிச்சிடுச்சு.
அதெப் பாத்ததும் எல்லாரும் பதறிப் போயிட்டாங்க.
"என்னண்ணேம்? ஏம் என்னாச்சி? ஆளு
படபடன்னு இருக்கீயேளே?"ன்னுச்சு வெங்கு.
"என்னத்தாம் ஏம் கலங்குதீயே? யக்காவுக்கு
எதாச்சிம் ஒடம்பு முடியலயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யக்காவுக்குல்லாம் ஒண்ணுமில்லே.
ஒம் மாப்புள்ளத்தாம்பீ முடியாம கெடக்குறாம். தப்பு நடந்துப் போச்சு!"ன்னாரு சின்னவரு.
"என்னத்தாம் பேசுதீயே தலையும் இல்லாம,
காலும் இல்லாம. ஒண்ணும் புரிய மாட்டேங்குதே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"பயெ சென்னைப் பட்டணம் போனாம்ல.
இப்போ வந்துப் பாரு. ஒடம்பு அப்பிடியே எலும்பும் தோலுமா வந்துக் கெடக்குறாம். பயெ
பொழைப்பான்னா மாட்டானான்னு இருக்குறாம். நமக்கு ஒண்ணும் புரியல. அதாங் யக்கா ஒடனடியா
ஒன்னயப் பாத்து ஒடனே அழைச்சிட்டு வாரச் சொன்னுச்சு!"ன்னாரு சின்னவரு.
சுப்பு வாத்தியாரு கொஞ்சம் நெதானிச்சாரு.
சின்னவரு ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்ற ஆளாச்சேன்னு. "பயெ நல்லா கம்பெனியாத்தாம்
வேலைக்குப் போனதா சொன்னீயே. என்னாச்சு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"கம்பெனியில எல்லாம் வேல கெடைக்கல
யம்பீ! வேல தேடித்தாம் அவ்வேம் சென்னைப் பட்டணம் போனாம். நாம்ம ச்சும்மா டூப்பு வுட்டேம்.
ஆன்னா அவனோட சிநேகிதனுங்க அஞ்ஞ இருந்தானுங்க. எப்பிடியும் வேலய வாங்கிக் கொடுத்துப்புடுறதா
சொல்லிருக்கானுவோ. நல்ல சம்பளத்துல வேலக் கெடைச்சிடும்ன்னுத்தாம் நாமளும் நெனைச்சுக்கிட்டு
நாளைக்கிக் கெடைக்குற வேலைய இன்னிக்குக் கெடைக்குறதா சொல்றதுல ன்னா தப்பு இருக்குன்னு
நெனைச்சிச் சொல்லிப்புட்டேம். நம்ம பயெ அஞ்ஞப் போயி பத்து பாஞ்சு நாளு வேலையில்லாம
கெடந்திருக்காம். பெறவு ஒரு கம்பெனியில திரும்பவும் அப்பரண்டிஸா வேலப் பாத்தா ரண்டு
வருஷம் கழிச்சி வேலய நெரந்தரம் பண்ணித் தர்றதா அவனோட சிநேகிதனுங்க சொல்லிருக்கானுவோ.
அப்பரண்டிஸ்ன்னா சம்பளமும் கொறைச்சலு. வேலயும் நெடுநட்டி வாங்கிப் புடுவானுவோ. அஞ்ஞ
சிநேகிதனுங்களோட அவனுகளோட ரூம்லயே தங்கிக் கெடந்திருக்காம். ரண்டு மாசமா அப்பரண்டிஸாப்
போயும் சம்பளம்ன்னு கையிலக் காசி ஒண்ணும் கொடுக்கல. பயலும் கொண்டு போன காசிய வெச்சிக்கிட்டு,
சிநேகிதனுங்ககிட்டெ கடன ஒடன வாங்கிக்கிட்டு எப்பிடியோ ஓட்டியிருக்காம். இதுக்கு எடையில
அவனுக்கு அங்கங்க சாப்பாட்டுக் கடையில, ரோட்டுக் கடையில சாப்புட்ட சாப்பாடு ஒத்துக்கலையோ
என்னவோ ஒடம்புக்கு முடியாம போயிடுச்சு. கையிலயும் காசி இல்லியா. இவனும் டாக்கடருங்கள
பாக்காம மருந்துக் கடையில இன்னயின்ன மாதிரி பண்ணுதுன்னு சொல்லி இருந்த காசிக்கு இவனா
மருந்து வாங்கிச் சாப்புட்டுருக்காம். நாளாவ நாளாவ பசி யில்லாமப் போயி சாப்புட முடியாம
ஒடம்புக் காய்ச்சல் அதிகமாயிடுச்சு. இதெப் பாத்த சிநேகிதனுங்க ஆளுக்குக் கொஞ்சம் காசியப்
போட்டு, ஊருக்குப் போயி ஒடம்ப சரிபண்ணிட்டு வான்னு ரயிலேத்தி வுட்டுப்புட்டுண்ணுவோ.
பயெ அப்பிடியே ஒடிஞ்சி சொடிஞ்சிப் போயி வூட்டுக்கு வர்றாம். நம்மாள பாக்க முடியல
யம்பீ! ஒடம்புல கைய வெச்சா நெருப்பா கொதிக்குது. பெறவு கொஞ்சம் நேரம் கழிச்சுப் பாத்தா
ஒடம்பு அப்பிடியே குளுந்துப் போவுது. திடீர் திடீர்ன்னு ஒடம்பு காய்ச்சலு எடுக்குது.
திடீர் திடீர்ன்னு குளுந்துப் போவுது. அவனெ வந்துப் பாரும்பீ! ஒம்மட மாப்புள்ளய வந்துப்
பாரும்பீ! ஒடம்புல எலும்பும் தோலுந்தாம் இருக்குது! பேருக்குக் கூட இத்துனூண்டு கறி
ஒடம்புல யில்ல!"ன்னாரு சின்னவரு அழுதுகிட்டெ.
"நாந்தாம் சொன்னேம்ல யத்தாம்! சென்னப்
பட்டணம் போறாம். வெவரம் புரியாத எடம். நமக்குத் தெரிஞ்ச ஆளுங்க தொணை இருக்கணும்னு.
கேக்கவே மாட்டேன்னீங்க! இப்போ வந்து இப்பிடிச் சொல்லுதீயேளே? மவனோட ஒடம்பையும் உசுரையும்
வுட ஒஞ்ஞளுக்கு ஒஞ்ஞளோட வறட்டுக் கெளரவம் முக்கியமாயிப் போயிடுச்சு?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு. அதெ கேட்டதும் சின்னவரு தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சிட்டாரு.
"இந்தாருங்க! இதல்லாம் பேசாதீயே!
இன்னிக்குப் பள்ளியோடத்துக்கு லீவப் போட்டுட்டு அண்ணனெ அழைச்சிக்கிட்டு ஒடனே கெளம்பிப்
போயிப் பாருங்க. புள்ள ஒடம்பும் உசுரும் முக்கியம் நமக்கு. பேசுறதுக்கு நேரமில்ல இத்து.
ஒரு நாளுக்கு நாலு நாளு லீவப் போட்டாலும் பரவாயில்ல. போயி கூட மாட நின்னு பாத்து
ஒடம்புச் சரி பண்ணி வுட்டுப்புட்டு வாங்க!"ன்னுச்சு வெங்கு.
சுப்பு வாத்தியாரு ஒரு நோட்டை எடுத்து
பேப்பர கிழிச்சி லீவு லெட்டர்ர எழுதுனாரு. எழுதி முடிச்சிட்டு மவனெ கூப்புட்டாரு. விகடு
பக்கத்துலப் போனாம். "இந்தாருடாம்பீ இந்தக் காயித்தத்தெ பள்ளியோடம் போறப்ப
வேற்குடியில விநாயகம் வாத்தியாரு வூடு வரைக்கும் போயிக் கொடுத்துப்புட்டு, யப்பா
அவசர சோலியா வெளியில கெளம்புறாப்புல ஆயிடுச்சுன்னு சொல்லிக் கொடுத்துப்புட்டு போ.
வாத்தியாரு எதாச்சிம் கேட்டா நாம்ம வந்துச் சொல்றதா மட்டும் சொல்லிப்புடு. வேறொண்ணும்
நீயா எதாச்சிம் சொல்லிப்புடாதே. பதறி அடிச்சிட்டு ஓடியாந்திடுவாரு!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு. விகடு தலைய ஆட்டுனபடியே சுப்பு வத்தியாரு நாலா மடிச்சித் தந்தக் காயிதத்தெ
வாங்கி தன்னோட பள்ளியோட பையில வெச்சிக்கிட்டாம். அப்போ விகடு மணமங்கலம் பள்ளியோடத்துலப்
படிச்சிட்டு இருந்தாம். மணமங்கலம் போற வழியில வேற்குடிக்குப் போயி கொடுத்துட்டுப்
போவட்டும்ன்னு சுப்பு வாத்தியாரு முடிவு பண்ணிருந்தாரு.
சுப்பு வாத்தியாரு சட்டைய எடுத்து மாட்டுனாரு.
இன்னும் அவரு குளிக்கக் கூட யில்ல. அதுக்குள்ள வெங்கு ஓடிப் போயி பீரோல்லேர்ந்து
பணத்தெ எடுத்தாந்துச்சு. அதெ வாங்கி சட்டைப் பைக்குள்ள வெச்சரு, "வாங்கத்தாம்!
எட்டாம் நம்பரு பஸ்ஸூ உள்ள போயிருக்காம். அவ்வேம் வர்றதுக்குள்ளப் போயிக் கெளம்புவோம்!"ன்னாரு.
"வந்துட்டு ஒண்ணுஞ் சாப்புடாம போறதா?
ஒரு நிமிஷம் இருங்களேம். டீத்தண்ணியப் போட்டுத் தர்றேம்!"ன்னுச்சு வெங்கு.
"அதுக்குள்ள பஸ்ஸூ திருவாரூருக்குப்
போயிடுவாம். கெளம்புங்கத்தாம்!"ன்னு பரபரத்தாரு சுப்பு வாத்தியாரு.
"ஒரு வாயி தண்ணி மட்டும் கொடு தங்காச்சி!
ஒம் மனசு சங்கடப்படக் கூடாதுல்ல!"ன்னாரு சின்னவரு. வெங்கு ஓடிப் போயி ஒரு லோட்டா
நெறையத் தண்ணிக் கொண்டாந்துச்சு. அதெ வாங்கிக் குடிச்சவரு, "இப்பத்தாம் தங்காச்சி
மனசுக்கு ஒரு தெம்பு வருது. யம்பீ காரியத்துல எறங்கிட்டுல்ல. இனுமே நமக்கு எந்தப் பயமும்
இல்ல!"ன்னாரு சின்னவரு.
"பேசிட்டு இருக்க நேரமில்ல யத்தாம்!
கெளம்புங்க!"ன்னு சத்தம் போட்டாரு சுப்பு வாத்தியாரு.
சுப்பு வாத்தியாரு வாசல்ல எறங்கி நடக்க,
அவரு பின்னாடி ஒரு நாயிக் குட்டியப் போல நடந்தாரு சின்னவரு.
*****
No comments:
Post a Comment