26 May 2020

சூதானமான பொறப்பாடு!

செய்யு - 460

            பத்தரை மணி வாக்குல எட்டாம் நம்பரு பஸ்ஸூ எடுக்குற நேரமா போத்து சன்னலோர சீட்டு ஓரமா ஒக்காந்திருந்த சுப்பு வாத்தியார்ர பஸ்ஸூக்குக் கீழே நின்னு கூப்புடுறாரு வேலங்குடி சின்னவரு. சின்னவரு மொகத்தப் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. ஆளு மொகம்ல்லாம் நல்லா தெளிவாத்தாம் இருக்கு. அதுல ஒரு சந்தோஷம் சுப்பு வாத்தியாருக்கு. வர்ற வழியில எதாச்சிம் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருக்குமோங்ற ஒரு சந்தேகம் வுட்டாச்சி. மெது மெதுவா கெளம்புன பஸ்லேந்து ஒடனே சத்தத்தப் போட்டு எறங்குனாரு சுப்பு வாத்தியாரு.
            "என்னத்தாம் மத்தியானத்துலேந்து காத்துகிட்டுக் கெடக்கேம். என்னாச்சோ ஏதாச்சோன்னு தவிப்பு வேற. இப்பிடிப் பண்ணிப்பூட்டிங்களே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதல்லாம் பேசுறதுக்கு நேரமில்லம்பீ! பயல ரயில்ல ஏத்தி உக்கார வெச்சிக்கிட்டு அரக்கப் பரக்க ஓடியாந்திருக்கேம். ரயில்ல எடுத்துப்புட்டான்னுவோன்னா சோலியாயிடும். சைக்கிள்ல ஏறி உக்காருங்க. போயி மொதல்ல பயலப் பாத்துட்டுப் பெறவு பேசுவோம்!"ன்னாரு சின்னவரு.
            சுப்பு வாத்தியாரு ஒண்ணும் பேசாம சின்னவரு சைக்கிள எடுக்க கேரியர்ல உக்காந்துக்கிட்டு பைய மடியில வெச்சிக்கிட்டாரு. சின்னவரு சைக்கிள பஸ் ஸ்டாண்டுலேந்து மிதிச்சி வலதுப் பக்கமா ஒடிச்சிப் போயி பெறவு எடது பக்கமா ஒடிச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு மின்னாடி சைக்கிள வுட்டாரு. சைக்கிள நிப்பாட்டி பூட்டைப் போட்டுட்டு வேக வேகமா ஸ்டேஷன்குள்ள ஓடுன்னா, அவரு பின்னாடியே அரக்க பரக்க சுப்பு வாத்தியாரும் ஓடுன்னா, க்கூன்னு சத்தத்தோடு ரயிலு நகர ஆரம்பிச்சிடுச்சு. 
            "இந்தோ இந்தப் பெட்டியிலத்தாம்பீ ஏத்தி உக்கார வெச்சிருந்தேம். பாத்துப்புடலாம் எப்பிடியும் பயல!"ன்னு சின்னவரு அங்கயும் இங்கயுமா ஒவ்வொரு பெட்டியா வெவரம் புரியாம ஓடுறாரு. சுப்பு வாத்தியாரும் சின்னவரோட சேந்துகிட்டு ஒண்ணும் புரியாம பையத் தூக்கிக்கிட்டு ஓடுறாரு. இவுங்க இப்பிடி தவிக்குறாங்களேன்னு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம ரயிலு பாட்டுக்குப் போயிட்டே இருக்கு. ஒரு வழியா ரயிலு போயி முடிச்சதும் ரெண்டு பேரும் மூச்சு வாங்கிட்டு நின்னாங்க.
            "ன்னா நடக்குதுன்னே புரிய மாட்டேங்குதே?"ன்னு அங்க இருந்த சிமெண்டுப் பெஞ்சுல அப்பிடியே உக்காந்துட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "பயலப் பாத்து ஒஞ்ஞ ஆசிர்வாதத்தோட அனுப்பணும்னு நெனைச்சா இப்பிடி ஆயிடுச்சே! ச்சேய்!"ன்னாரு சின்னவரு. சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள தாங்க முடியா கோவமாக வந்துச்சு. பையத் தொறந்து பெஞ்சு மேல துண்டு, பனியன், சோப்பு, சீப்பு, பவுடர் டப்பா, கண்ணாடி, இனிப்புக் கார பொட்டணம்ன்னு எல்லாத்தையும் ஒவ்வொண்ணா வரிசையா அடுக்கி வெச்சாரு. அதெ வெச்ச கண்ணு வாங்காம பாத்தாரு சின்னவரு.
            "தெரியும்பீ! இப்பிடித்தாம் நீஞ்ஞ இருப்பீங்கன்னு. நெலமெ என்னாச்சுன்னா..." அப்பிடின்னாரு சின்னவரு. சுப்பு வாத்தியாரு ஒண்ணும் சொல்லாம சின்னவரு மொகத்தையேப் பாத்தாரு.
            "இன்னிக்கு வயல்ல கொஞ்சம் வேலையாப் போச்சுது. வைக்கப்போரு ரொம்ப நாளு கட்டாம களத்துமேட்டுலயே கெடந்து வர்ற போற ஆடு மாடுங்க தின்ன, மனுஷ மக்க அள்ளிட்டுப் போவ வதையழிஞ்சிட்டுக் கெடந்துச்சு. இன்னிக்குன்னு பாத்து ரெண்டு பேத்து வந்து நின்னு வேலைய முடிச்சிப்புடுறேம்ன்னு சொன்னானுவோ. செரி ஒரு வேலை ஆவுதேன்னு நெனைச்சி நாமளும் செய்யுங்கடான்னு சொல்லிப்புட்டேம். வேல ஆன பாடில்ல. அதுவும் இல்லாம ரயில்லு பத்து மணிக்கு மேல பத்தரை மணி வாக்குலத்தாம் கெளம்பும்ன்னு கார்த்தேசு சொன்னாம். அதாங் பாத்தேம். கொஞ்சம் இருட்டுனாப்புல கெளம்புலாம்ன்னு பாத்து இப்பிடி ஆயிடுச்சு!"ன்னாரு சின்னவரு.
            "செரித்தாம் வேல ஆனது ஆச்சுது. சந்தோஷந்தாம். ஆறு மணி வாக்குலயோ, ஏழு மணி வாக்குலயோ கெளம்பியிருந்தா கூட எட்டு மணி வாக்குல வந்திருக்கலாமே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதுல பாருங்க யம்பீ! ஊர்லேந்து வேலைக்குப் போனவேம், ராயநல்லூருக்குக் கடைக்குச் சாமானுங்க வாங்கப் போறவேம், வர்றவேம்ன்னு எந்நேரத்துக்கும் ரோட்டுல சன நடமாட்டம் இருந்துகிட்டெ இருக்கும். நாம்ம இவனெ அழைச்சுக்கிட்டு பொட்டி, வாளி, பையின்னு கெளம்புன்னா ஊருல நாலு பேத்து கேப்பாம் பாரு. எதுக்கு அவ்வேம் கண்ணுல அடிபட்டுக்கிட்டு, அவ்வேம் சொல்லுக்கு பதிலெச் சொல்லிக்கிட்டுன்னு பாத்தேம். அதாங் ஊரு அசமடங்கட்டும்ன்னு நெனைச்சி ஒம்போது மணிக்கு மேல கெளம்புனேம்!"ன்னாரு சின்னவரு.
            "பொட்டிப் படுக்கையோட கெளம்புனா ஊருல நாலு பேத்துக் கேக்கத்தாம் செய்வாம். இந்த மாதிரிக்கி இந்த மாதிரிக்கி விசயம்ன்னு சொல்லிட்டுக் கெளம்ப வேண்டித்தானே. இல்லன்னா அவசரமா போயிட்டு இருக்கேம். பெறவு வந்து வெசயத்தச் சொல்றேம்ன்னு வந்துச் சேர வேண்டித்தானே! ன்னத்தாம் இதல்லாம் ஒரு வெசயம்ன்னு சொல்லிக்கிட்டு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அஞ்ஞத்தாம் யம்பீ வெசயமிருக்கு. ஊருல ஒருத்தெம் காதுக்குச் சேதி தெரிஞ்சா போதும், பக்கத்துல கெடக்கான்னே எஞ்ஞ அண்ணங்கார்ரேன்னு ஒருத்‍தெம், எமகாதகப் பயெ, ஒம்மட பெரிய அத்தாங் காதுக்குச் சேதிப் போயிடும். வேலங்குடியில கெடக்குற பூரா பயலுவோளும் அவனுக்கு விசுவாசமா ‍இருக்குற பயலுவோம்பீ! நம்மப் பயெ தொலைதூரத்துக்கு வேற போறாம்ல்லியா? நல்ல வெதமா போயிச் சேரணுமா ன்னா? அவ்வேம் காதுக்குச் சேதிப் போன போதும்பீ கருவிக்கிட்டெ கெடப்பாம். மந்திரம் பண்ணுவாம். எதாச்சிம் கேடு கெட்ட வேலையப் பண்ணுவாம்பீ. பெறவு நம்ம பயெ ஒழுங்கா பட்டணம் போயிச் சேர மாட்டாம். அவனெப் பத்தி அந்தக் கிராதகப் பயலப் பத்தி ஒஞ்ஞளுக்குத் தெரியா. நமக்குத்தாம் தெரியும்!"ன்னாரு சின்னவரு.
            சுப்பு வாத்தியாருக்கு தலையில அடிச்சிக்கணும்னு போல தோணுச்சு. "செரித்தாம் யத்தாம்! எப்பிடியா இருந்தாலும் வெசயம் தெரியாம்லயா போயிடும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்து வந்தும்பீ! அவ்வேம் நல்லபடியா சென்னைப் பட்டணம் போயிச் சேந்தப் பெறவு தெரிஞ்சா தெரிஞ்சிட்டுப் போவுது. ஆனா மின்னாடி தெரியக் கூடாதும்பீ. அதாங் மவனும் நானுமா ஊரு நடமாட்டம் நின்ன பிற்பாடு வண்டியில வாளி, பைய எல்லாத்தையும் ஹேண்டில்பார்ல மாட்டிக்கிட்டு, அவனெ பின்னாடி உக்கார வெச்சிக்கிட்டு மடியில சூட்கேஸ கொடுத்து ரொம்ப சூதானமா வந்துச் சேந்திருக்கேம்பீ. அந்தக் கப்பி பேந்த ரோட்டுலேந்து ராயநல்லூரு வர்ற வரைக்கும் யோ யப்பா நம்ம பாடு பெரும்பாடா போயிடுச்சு. மவனெ கூட மிதிக்க வுடல. நாம்மத்தாம் மிதிச்சேம். இருட்டுல எடம் புரியாம எஞ்ஞயாச்சும் சைக்கிள வுட்டுப்புடக் கூடாது பாரு. நமக்குன்னா எடமெல்லாம் அத்துப்படி. கண்ணக் கட்டி வுட்டாலும் வந்துப்புடுவேம் பாரு. செரின்னு ராயநல்லூர்ல அஞ்ஞயிருந்து பஸ்ஸப் பிடிச்சிப்புடலாமுன்னு நின்னா நம்ம நேரம் பாருங்க, ஒரு பஸ்ஸூ கூட வர்ற மாட்டேங்குது. காத்தும் அந்தாண்ட இந்தாண்ட அசைய மாட்டேங்குது. அந்த இக்கட்டான நேரத்துலயும் பட்டுன்னு ஒரு முடிவு எடுத்தேம் பாருங்க. உக்கார்டாம்பீன்னு அப்பிடியே சைக்கிள்ல வெச்சி மிதிச்சே ரயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டாந்துட்டேம். நல்ல வேளையா ரயிலு கெடந்துச்சு. ஒடனே டிக்கெட்ட போட்டுப்புட்டு அவனெ ஒரு எடத்தெ பிடிச்சி உக்கார ‍வெச்சேம். ரயில வுட்டுப்புடக் கூடாது பாருங்கம்பீ. பெறவு ஒஞ்ஞளப் பிடிச்சிக் கொண்டாந்துப்புடலாம்னு பஸ் ஸ்டாண்டுல தேடுறேம் தேடுறேம். ஆளக் காங்கல. அப்பத்தாம் எட்டாம் நம்பரு பஸ்ஸப் பாக்குறேம். செரி நேரமாயிடுச்சுன்னு பஸ்ஸூ ஏறியிருப்பீயோன்னு ஒரு நெனைப்பு. அதாங் பஸ்ஸச் சுத்திப் பாத்துட்டு வர்றேம். நீஞ்ஞ உக்காந்துருக்கீங்க. செரித்தாம்னு பிடிச்சிக் கொண்டாந்துட்டேம். ஒரு நிமிஷம்பீ! ஒரே ஒரு நிமிஷம். மிந்தி வந்திருந்தா பயலப் பாத்திருக்கலாம்பீ!"ன்னாரு சின்னவரு.
            சுப்பு வாத்தியாருக்கு ஒண்ணும் புரியல. சின்னவரு இப்பிடி கொண்டாந்து நம்மள நிப்பாட்டிப்புட்டாரேன்னு நெனைச்சாரு. வூட்டுல வேற கடெசீ பஸ்ல வர்றதா நெனைச்சிட்டு இருக்குமுங்க. எட்டாம் நம்பரு பஸ்ஸோட ஹாரன் சத்தம் கேட்டா தெரு வாசலையேப் பாத்துட்டு கெடக்குமுங்க. இப்பிடி ஆவும், காலையில வர்றேம்னு கூட சொல்லிட்டு வரலேன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு.
            "என்னாம்பீ! ஒரே யோஜனையா இருக்கே? பயலப் பாக்க முடியலன்னு நெனைக்குதீயளோ? அப்பிடில்லாம் நெனைக்க வாணாம். ஒஞ்ஞளோட ஆசிர்வாதம் அவனுக்கு எப்பவும் இருக்கும். நீஞ்ஞ பாக்காட்டியும் அவ்வேம் நல்லா இருக்கணும்னு மனசுக்குள்ள நெனைச்சிட்டுத்தாம் இருப்பீயே. செரி சாப்புட்டு இருக்க மாட்டீயே! கெளம்புவோம் சைக்கிள்ல. அஞ்ஞ வேலங்குடியில சாப்பாடுல்லாம் செஞ்சிக் கெடக்கு. போனோம்ன்னா சாப்புட்டுப்புட்டு படுத்துக் கெடந்துட்டு மொத பஸ்ஸப் பிடிச்சி ஊரு போயிச் சேந்துக்கிடலாம்!"ன்னாரு சின்னவரு.
            சுப்பு வாத்தியாருக்கு பசி தாங்க முடியல. பசி வயித்த கிள்ள ஆரம்பிச்சிடுச்சு. "ஏம் யத்தாம்! இஞ்ஞயே எதாச்சிம் கடையெ பாத்துச் சாப்புட்டுப்புட்டுக் கெளம்பிட்டா ன்னா?"ன்னாரு.
            "ந்நல்ல கதையெ கெடுத்தீங்க யம்பீ! அஞ்ஞ வூட்டுல செஞ்சி வெச்ச சாப்பாடு என்னத்தெ ஆவுறது? வீணால்லா போயிடும்! நாலு மிதி மிதிச்சா ஊருல போயி வுழுந்துட முடியாதா? இந்தச் சாமாஞ் செட்டையெல்லாம் எடுத்துப் பையில போடுங்கம்பீ! நாம்ம சென்னைப் பட்டணம் போவாமால இருப்பேம்? அப்போ போயி மாமா வாங்கியாந்ததுன்னு கொடுத்துப்புடுறேம். இதெ பத்தி ஒண்ணும் நெனைக்க வாணாம். வெரசா வண்டிய எடுத்து நாலு மிதியப் போடுங்க. நாம்ம பின்னால உக்காந்திருக்கேம்!"ன்னு சின்னவரு சைக்கிளு சாவியைத் தூக்கி சுப்பு வாத்தியாரு கையில கொடுத்தாரு.
            சுப்பு வாத்தியாரு எடுத்து வெச்ச சாமாஞ் செட்டுகள பைக்குள்ளப் போட்டுக்கிட்டு ரயில்வே ஸ்டேஷன் வெளியில வந்து சைக்கிளுப் பூட்டைத் தொறந்தாரு. பைய மின்னாடி மாட்டுனாரு. ஏறி உக்காந்து மிதிக்க ஆரம்பிச்சாரு. சின்னவரு ஓடியாந்து கேரியர்ல ஏறி உக்காந்தாரு.
            "அத்துப் பாருங்கம்பீ! இந்த ராத்திரியில நிசப்தமா சைக்கிள்ல போறது எப்பிடி இருக்குங்றீங்க? இதல்லாம் அனுபவிக்கணும்பீ! சொகம் சொகந்தாம்பீ!"ன்னாரு சின்னவரு. சுப்பு வாத்தியாருக்கு வந்தக் கோவத்துக்கு சைக்கிளோட பிடிச்சிக் கீழே தள்ளி வுட்டுப்புடுவோமான்னு தொணுச்சு. ஒண்ணும் பண்ண முடியாம மாங்கு மாங்குன்னு சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. மிதிக்க மிதிக்க அவருக்கு சின்னவரையே தூக்கிப் போட்டு மிதிக்குறாப்புல ஒரு எண்ணம். பசியோட வேகம் வேற. சைக்கிளு பாட்டுக்கு அந்த அத்துவான ரோட்டுல அது பாட்டுக்கு சிட்டா பறந்துகிட்டு இருந்துச்சு.
            சின்னவரு அந்த ராத்திரிய ரசிக்கிறது போல சுப்பு வாத்தியாரால ரசிக்க முடியல. இனுமே வேலங்குடிப் போவணும். சாப்புட்டு ஆவணும். சாப்புட்ட பெற்பாடு சின்னவரு சும்மா இருக்க மாட்டாரு. இது வரைக்கும் நடந்த கதைய எல்லாம் என்னவோ புதுசா கேக்குறாப்புல நெனைச்சிக்கிட்டு அவரு பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிடுவாரு. அந்தப் ‍பேச்சு எப்ப முடியுங்றது அவரு மட்டுமே அறிஞ்ச ரகசியம். எப்பிடியும் பேசி முடியுறப்போ விடியக்காலம்பார ஆயிடும். ஒடனே மொத பஸ்ஸப் பிடிச்சி வூட்டுக்கு ஓடி வந்தாவணும். வூட்டுல வேற என்னத்தெ நெனைச்சிக்கிட்டு ரா முழுக்க இருக்குதுங்களோங்ற நெனைப்பு அவரு மனசெ கொடைய ஆரம்பிச்சிடுச்சு. இதெல்லாம் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்து அஞ்சு வருஷ வாக்குல நடந்த சம்பவங்க. அந்த நேரத்துலயும் சுப்பு வாத்தியாருக்கு இன்னொரு நெனைப்பு வந்துச்சு, இந்தக் கூறு கெட்ட மனுஷனெ மச்சங்காரனா வெச்சிக்கிட்டு நம்மாலயே சமாளிக்க முடியலீயே! பாவம் நம்மட யக்கா புருஷங்கார்ரனா வெச்சிக்கிட்டு இத்தனெ வருஷமா எப்பிடிச் சமாளிச்சுச்சோன்னு நெனைச்சாரு பாருங்க, அவருக்குள்ள எழுந்த ஆத்தாமைய அவரால அடக்கிக்க முடியல. பாவந்தாம் ரசா யக்கான்னு மனசுக்குள்ள பாவப்பட்டுக்கிட்டாரு. வேற என்னத்தெ பண்ண முடியும் அவரால!
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...