செய்யு - 459
சுப்பு வாத்தியாரு அரை நாளு பள்ளியோடத்துக்கு
லீவு போட்டுட்டு திருவாரூரு கெளம்பிட்டாரு. ஒண்ணரைக்கு வர்ற எட்டாம் நம்பரு பஸ்ஸப்
பிடிச்சி ரெண்டரைக்குல்லாம் திருவாரூர்ல எறங்கிட்டாரு. சின்னவரு சொன்னாப்புல திருவாரூருக்கு
நாலு மணிக்குப் போறதுக்கு திட்டையில பஸ்ஸே நாலு மணிக்குத்தாம் இருக்குங்றதால நம்மால
தாமசம் ஆயிடப் புடாதுன்னு முங்கூட்டியே அங்கப் போயி நின்னாரு. சீக்கிரமா போயி எறங்குனதுக்கு
இன்னொரு காரணமும் இருந்துச்சு. மச்சங்காரனோட மவ்வேன் மொத மொதலா சென்னைப் பட்டணத்துக்குப்
போறாம். சும்மாவா அனுப்ப முடியும். கொஞ்சம் சாமாஞ் செட்டுகள வாங்கி கையில கொஞ்சம்
பணத்தையும்ல்லா கொடுத்தாவணும். கொஞ்சம் சீக்கிரமா போனா சாமாஞ் செட்டுகள கொஞ்சம்
வாங்கிப்புடலாமேன்னு அப்பிடியும் ஒரு திட்டம் சுப்பு வாத்தியாருக்கு.
திருவாரூரு போயி எறங்குனவரு நேரா முரா
சன்ஸ் ஜவுளிக் கடையில நல்லதா ரெண்டு துண்டு, தொண்ணூத்து சைஸூக்கு ரெண்டு பனியன வாங்கிக்கிட்டாரு.
அப்பிடியே பக்கத்துல ஒரு நடை நடந்து பழனி விலாஸ் கடையில சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடின்னு
வாங்கிக்கிட்டு, அப்பிடியே சிவராமுராவ் இனிப்புக் கடைக்கு ஒரு நடை நடந்து இனிப்பு,
காரம் வகையறாவையும் கொஞ்சம் வாங்கிக்கிட்டாரு. இதையெல்லாம் ஒரு பையில போட்டுப் போறப்ப
ஐநூத்து ரூவாயக் கொடுத்துப்புடறதுன்னு முடிவு பண்ணிக்கிட்டு அவரு திரும்ப பஸ் ஸ்டாண்டு
பக்கமா வந்துப்புட்டாரு. சின்னவரு சொன்னபடியே திருத்துறைப்பூண்டி பஸ்க வந்து நிக்குற
எடமா பாத்து நின்னுகிட்டாரு. கடியாரத்துல மணியப் பாத்தாரு மூணரையே நெருங்கியிருந்துச்சு.
இன்னும் அரை மணி நேரந்தானே வந்துடுவாங்கன்னு நெனைச்சு நிக்க ஆரம்பிச்சாரு.
அரை மணி நேரம் ஒரு மணி நேரமா ஆயிடுச்சு.
ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரமாயிடுச்சு. அதுக்கு மேல முடியல. அவரு பாட்டுக்கு பயணிங்க
உக்கார்றதுக்காக பஸ் ஸ்டாண்டுல கட்டிப் போட்டுருக்குற கட்டையில உக்காந்துட்டாரு. ச்சும்மா
எம்மாம் நேரம் உக்காந்திருக்கிறது? சின்னவரு மவன ரயிலேத்தி வுடுறது சம்பந்தமா வூட்டுக்கு
வந்துப் பேசிட்டுப் போனதெல்லாம் அவருக்கு ஞாபவத்துல ஓடுது. அவரு நெனைக்காமலயே அவரோட
கட்டுப்பாடு இல்லாம நெனைப்பு மனசுல ஓட ஆரம்பிச்சிடுச்சு. சனங்க வேற அந்தாண்டயும் இந்தாண்டயும்
நடந்துப் போயிக்கிட்டும், பஸ்ஸ பிடிக்கிறதுக்கு ஓடிக்கிட்டும் இருக்கு. அங்க நெலையா
செல போல உக்காந்திருக்குற ஒரே ஆளு இவரு ஒருத்தருதாம். அவரு நெலையா உக்காந்திருந்தாலும்
அவரோட நெனைப்பும், மனசும் குறுகுறுன்னு உள்ளுக்குள்ள ஓடிட்டு இருக்கு.
சுப்பு வாத்தியாரு சின்னவரு வந்து சொன்ன
சங்கதியையெல்லாம் கேட்டுக்கிட்டு திரும்பக் கேட்டாரு, "அதாங் யத்தான்! நம்ம பெரியவரோட
புள்ளீயோ அஞ்ஞத்தான இருக்கானுங்க. அப்பிடியே அவனுங்க கூட கோத்து வுட்டுப்புட்டா தொணைக்குத்
தொணையாவும் போயிடும். செளரியத்துக்குச் செளரியமாமாவும் போயிடும். ஒரு நல்லது கெட்டதுன்னாலு
பாத்து வுட்டுப்புடுவானுங்க பாருங்க!" அப்பின்னாரு சுப்பு வாத்தியாரு.
அதுக்குச் சின்னவரு சொன்னாரு, "யம்பீ!
நம்ம பையனுக்கு கம்பெனியில வேல கெடைச்சிருக்கு. அத்து தெரிஞ்சா வவுத்தெரிச்சப் படுவானுவோ.
கல்கத்தா காளிய நம்பலாம், பங்காளிய நம்பக் கூடாது யம்பீ! இவனுக்கு அஞ்ஞ சிநேகிதனுங்க
எக்கச்சக்கப் பேருங்க இருக்கானுவோ. எப்போ வருவே எப்போ வருவேன்னு நிக்குறானுவோ.
அத்தோட படிச்சப் பயலுவோ வேற. பழக்க வழக்க வேற வெதமா இருக்கும் பாருங்க. இந்தப் படிக்காத
பட்டிக்காட்டுப் பயலுவோகிட்டெ போயி நின்னுகிட்டு அவனோளோட பழக்கந்தாம் வரும். அதாங்
யம்பீ வேண்டாமுன்னு நெனைக்கிறேம்! படிச்சவனுக்கு எஞ்ஞப் போனாலும் ஆளு இருக்குங் யம்பீ!
நாளைக்கி நம்மப் பயெ அவனுகளுக்கு ஒதவுறாப்புல நெல இருக்கே, தவுர நாம்ம போயி அவ்வேங்கிட்டெ
ஒதவிக் கேக்குற நெல இல்லேங்றேம்! பெறவு ஏம் நாம்ம அவ்வேம்கிட்டெ போயி நின்னுகிட்டு.
அதுவும் பாரு யம்பீ! சொந்தக்கார பயலுவோளுக்குத்தாம் நம்ம மேல போறாமெ உண்டாவுறதுக்கு
வாய்ப்பு சாஸ்தி. கண்ட கண்ட சேட்ட மூட்ட செவ்வா கெழமயோட போயி நாம்ம ஏங் நிக்கணுங்றேம்?
கம்பெனிக்கார்ரேம் கூப்புடுறான்னா அதுக்கு ஏத்தாப்புல தோது பண்ணிட்டுத்தானே கூப்புடுவாம்!"ன்னாரு
சின்னவரு.
"அத்துச் செரித்தாம் யத்தாம்! எப்பிடியோ
பயெ நல்ல வெதமா இருந்தா செரித்தாம். இதெ பத்தி பெரியவர்கிட்டெ கலந்துக்கிட்டீங்களா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அவ்வேம் கூட சரியா பேச்சுக் கெடையாது
யம்பீ! பேச்சு நின்னுப் போயி நாளாவுது. அத்தோட மவனுங்க சென்னைப் பட்டணத்துல இருக்கானுவோங்ற
மண்டெ கணம் வேற அதிகமாயிடுச்சு அவனுக்கு. அவ்வேம் பையேன் அஞ்ஞ இருந்தா நமக்கென்ன? இத்தோ
நம்மப் பயலுந்தாம் போறாம். நாம்ம ன்னா கொழுப்பெடுத்தாப்புலயா பேசுறேம்? நாம்ம இதெப்
பத்தியெல்லாம் ஒண்ணும் கலந்துக்கிடல. தாய்மாமேன், மச்சாங்கார்ன்னு ஒம்மகிட்டத்தாம்
மொத மொதலா ஓடியாந்து கலந்துக்கிடுறேம். நாம்ம சொல்லாட்டியும் சேதி எப்பிடியும் போயிச்
சேந்துடும் அந்தப் பயலுக்கு. பயலுகளுக்குப் பங்காளியின்னு ஒறவு மொறையின்னு இருந்தாலும்
அவனவ்வேம் சொந்தக் கால்ல நின்னு மின்னேறுனாங்றதுதானெ பெருமெ!"ன்னாரு சின்னவரு.
"என்னத்தெ இருந்தாலும் சென்னெப் பட்டணங்றது
பல ஊருக்கார பயலுவோ, பல மாகாணத்துக்காரப் பயலுவோ வந்து இருக்குற எடம். நம்ம பயலுவோ
மாதிரிக்கி இஞ்ஞயிருந்துப் போறவனுவோ ஒருத்தனுக்கொருத்தெம் துணையா இருக்குறதுதாங்
நல்லது யத்தாம். ஊருங்றது வேற. பட்டணங்றது வேற. இஞ்ஞ அடிச்சிப் புடிச்சிக்கிட்டுக்
கெடக்கலாம். ஒருத்தம் தொணையில்லன்னாலும் இன்னும் நாலு பேத்து தொணைக்கு நிப்பாம்.
பட்டணம் அப்பிடியா? யாரு என்னான்னு தெரியாத எடத்துலப் போயி யாராச்சிம் தொணைக்கு நிப்பாம்ன்னு
எதிர்பாக்க முடியுமா? அதுபோல எடத்துலயெல்லாம் ஒண்ணா கலந்து கெடந்தாத்தாம் நாளைக்கி
ஒரு சங்கடம்ன்னாலும் அதெ சமாளிக்க முடியும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதல்லாம் ஒண்ணுஞ் சங்கடம்லாம் கெடையாது
யம்பீ! இந்தப் பயலுவோ கலந்தாத்தாம் சங்கடம். படிச்சப் பயெ இல்லியா. நாலு வார்த்தெ
தஸ் புஸ்ஸூன்னு இங்கிலீஷ்ல அடிச்சி வுட்டான்னா போச்சு. எவ்வேம் சங்கடம் கொடுக்கப்
போறாம்? நம்மளயே எடுத்துக்கோங்க, இப்பிடி வேலங்குடியில குடியாவாம எங்காச்சியும் குடியானேன்னா
நம்ம நெலயே வேற. தலயெழுத்து இஞ்ஞ வேலங்குடியில வந்து அவ்வேங் குடும்பத்தயும் பாத்துக்கிட்டு,
நம்ம குடும்பத்தயும் பாத்துக்கிட்டுக் கெடக்கணும்ன்னு. எத்தனெ நாளு அவனெ அண்ணங்கார்ன்னு
அந்த ஒண்ணும் தெரியாத பயல வேலைக்கி அழைச்சிட்டுப் போயி தண்டச் சம்பளம் வாங்கிக் கொடுத்திருப்பேம்
தெரியுமா? போனா போயிட்டுப் போறாம் புள்ளக்குட்டிக்கார பயலுன்னு நெனைச்சா அந்த நன்றி
இம்மிக் கூடகெடையாதும்பீ அவனுக்கு. ஏத்தோ நல்லா இருந்துட்டுப் போறாம். நாம்ம அப்பிடி
இவ்வேம் பக்கத்துல இருந்துட்டு படுற செருமம் நம்ம பயலுக்கு வந்துடக் கூடாது பாரு. அவனுக
சங்கநாத்தமெ கூடாதும்பீ. அவனுங்க கங்காணாத எடத்துல இருக்கணும். அப்பத்தாம் வெளங்க முடியும்.
அவனுங்க கண்ணு பட்டால ஆவுறது ஆவாம போயிடும், வெளங்குறது வெளங்காமப் போயிடும்!"ன்னாரு
சின்னவரு. சின்னவரு இப்பிடிப் பேச பேச மேக்கொண்டு என்னத்தெ பேசுறதுன்னு ஆயிடுச்சு
சுப்பு வாத்தியாருக்கு.
சுப்பு வாத்தியாரு ஒண்ணும் பேசத் தோணாம
அப்பிடியே உக்காந்துட்டாரு. சின்னவருதாங் மேக்கொண்டு பேசுனாரு, "நாலு மணி வாக்குல
திருவாரூரு வந்துப்புட்டீங்கன்னா, நாம்ம திருத்துறைப்பூண்டி பஸ்ஸ ஒண்ணு பிடிச்சி ராயநல்லூர்லேந்து
அஞ்ஞ வந்து எறங்கிப்புடுவேம். சொல்ல முடியாது நீஞ்ஞ இஞ்ஞயிருந்து வர்ற பஸ்லய நாம்ம
ராயநல்லூர்ல நிறுத்தி ஏறி வந்தாலும் வந்ததுதாங். நேரந்தாம் முக்கியம் யம்பீ. நேரா நேரத்துல
பயல கெளப்பி வுட்டுப்புட்டு நாமளும் திரும்பிப்புடலாம் பாருங்கம்பீ!"ன்னாரு சின்னவரு.
அப்பத்தாம் வேலங்குடிக்கு வந்துப்புட்டா
ஒண்ணா கெளம்புறதுல செருமமிருக்காதுங்றதெ சுப்பு வாத்தியாரு சொல்லிப் பாத்தாரு.
"அதாம்பீ வேணாம்! ஏம் சொல்றேன்னா
நீஞ்ஞ வேலங்குடி வந்தீங்கன்னா அவ்வேம் வூட்டுக்கு ஒரு எட்டுப் பேவாம இருக்க மாட்டீயே!
அப்பிடிப் போனீயேன்னா ஏம்? என்னதுக்குன்னு வெசாரணை நடக்கும். ஒஞ்ஞளால காரணத்தெ சொல்லாம
இருக்க முடியாது பாருங்க. தர்மெ சங்கடம். பயெ பத்திரமா சென்னைப் பட்டணம் போயிச் சேர்ற
வரைக்கும் விசயத்தெ வெளியில வுட வாணாம். நாம்ம நெனைக்குற மாதிரியே எல்லா பயலும் நெனைக்க
மாட்டாம். ஒரு கண்ணு மாதிரியே இன்னொரு கண்ணு இருக்காது. நீஞ்ஞ பாட்டுக்கு திருவாரூரு
பஸ் ஸ்டாண்டுல வந்து எறங்கிப்புடுங்க. திருத்துறைப்பூண்டி பஸ்ஸூக நிக்குற எடத்துல நின்னுப்புடுங்க.
நாம்ம வந்து கூப்புட்டுக்கிறேம்!"ன்னாரு சின்னவரு. இதுக்கு மேல அவருகிட்டெ என்னத்தெ
பேசுறதுன்னு சுப்பு வாத்தியாரு, "அப்பிடியே ஆவட்டும்!" அத்தாம்ன்னு சொன்னவருதாம்
இப்போ திருவாரூரு பஸ் ஸ்டாண்டு உக்காந்தபடியே உக்காந்து கெடக்கிறாரு. எம்மாம் நேரந்தாம்
நடந்ததையும் நெனைச்சிக்கிட்டு உக்காந்திருக்க முடியும்.
ரெண்டு மணி நேரமா உக்காந்தது இப்போ நாலு
மணி நேரமா ஆயிடுச்சு. மணி ஏழரைக்கு மேல. அவரு ஏறி வந்த எட்டாம் நம்பரு பஸ்ஸூ வடவாதிக்குப்
போயி அஞ்சே காலுக்கு ஒரு தவா வந்து, மறுக்கா வடவாதிக்குப் போயி ஏழே முக்காலுக்குத்
திரும்பவும் வந்துடுச்சு. இந்த பஸ்ஸூ எட்டு மணிக்கு திருவாரூர்லேந்து எடுத்தா வடவாதிக்குப்
போயி பத்து மணிக்குல்லாம் திரும்ப வந்து பத்தே காலு யில்லன்னா பத்தரைக்கு எடுத்தா
அதுதாங் திருவாரூர்லேந்து வடவாதிக்குப் போற கடெசீ பஸ்ஸூ. அதெ வுட்டுப்புட்டா திருவாரூரு
பஸ் ஸ்டாண்டுலேயே படுத்துக் கெடந்து காலங்காத்தால வடவாதியிலேர்ந்து மொத மொதலா கெளம்பி
வர்ற எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சித்தாம் ஊரு போயிச் சேரணும். இப்போ ஏழே முக்காலுக்கு
வர்ற இந்தப் பஸ்ஸூல வந்திருந்தா கூட பொழுது இப்பிடி தண்டமா போயிருக்காதேன்னு நெனைச்சாரு
சுப்பு வாத்தியாரு.
இப்போ சுப்பு வாத்தியாருக்கு ஒவ்வொண்ணா
நெனைச்சு நெனைச்சு அலுத்துப் போச்சுது. அவருக்கு எழும்பிப் போயி ஒரு வாயி டீத்தண்ணியயாவது
குடிச்சிட்டு வர்றணும்னு தோணல. நாம்ம குடிக்கப் போற நேரத்துல அவுங்க வந்து தேடிட்டு
நிக்கக் கூடாதுன்னு நெனைச்சாரு. அதுவும் இல்லாம அவுங்களும் வந்துப்புட்டா எல்லாரும்
சேந்தாப்புல டீத்தண்ணியக் குடிச்சிப்புடலாமேன்னு நெனைச்சாரு. வர்றதா சொன்னவங்க அரை
மணி நேரம், ஒரு மணி நேரம் தாமசமா வந்தா அதெ தாங்கிக்கிடலாம். நாலு மணி நேரம் வரைக்கும்
வரலன்னா? எரிச்சல்ன்னா எரிச்சல் தாங்க முடியாத எரிச்சலா வந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு.
தேவையில்லாம லீவப் போட்டிருக்க வாணாமோன்னு நெனைச்சாரு அவரு. போட்டது போட்டாச்சு
இனுமே நெனைச்சு என்னாவப் போவுதுன்னு அவரு நெனைச்ச நெனைப்புக்கு அவரே முட்டுக்கட்டையப்
போட்டுக்கிட்டாரு.
சுப்பு வாத்தியாருக்கு திடீர்ன்னு ஒரு
யோசனையும் தோணுச்சு. திருத்துறைப்பூண்டி பஸ்ஸ ஒண்ணு புடிச்சி ராயநல்லூர்ல எறங்கி
வேலங்குடியில போயிப் பாத்துப்புட்டு வந்துப்புடுவோமான்னு. அப்பிடிக் கெளம்பிப் போயி
அந்த நேரத்துல அவுங்க இங்க வந்து நின்னுப்புட்டா? நம்மள தேடுறதலயே நேரம் போயிடுமேன்னு
நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. நேரம் ஆனது ஆயிப் போயிடுச்சு இங்கயே ஒக்காந்துப் புடுவோம்ன்னு
நெனைச்சிக்கிட்டாரு. நேரம் அது பாட்டுக்கு
ஆயிக்கிட்டெ போனுச்சு. ஒம்போது மணி ஆனப்போ சுப்பு வாத்தியாருக்குத் தாங்க முடியாத
பசி. எட்டாம் நம்பரு பஸ்ஸூ வேற பத்து மணி வாக்குல வந்தா, பத்தே காலுக்குல்லாம் எடுத்துடுவாம்.
கோஞ்சம் தாமசமா வந்தாலும் பத்தரைக்கு வண்டியக் கெளப்பிடுவாம்ன்னு அவருக்கு யோசனெ
பலவெதமா ஓடுனுச்சு. இதுக்கு மேல பசியத் தாங்கிட்டு உக்கார முடியான்னு கையில வெச்சிருந்த
பையத் தூக்கிக்கிட்டு பஸ் ஸ்டாண்டு பக்கத்துல இருந்த கடையில டீ கேக்கு ஒண்ண வாங்கிக்கிட்டு,
அதெ டீத்தண்ணியில நனைச்சுச் சாப்புட்டுக்கிட்டாரு. இப்போ கொஞ்சம் ஒடம்பு தெளிவா
இருக்குறாப்புல இருந்துச்சு.
அப்போ ஒரு முடிவெ பண்ணிக்கிட்டாரு. எட்டாம்
நம்பரு வர்ற நேரம் வரைக்கும் பாக்குறது. அப்பிடியும் வரலன்னா பஸ்ஸூல ஏறி உக்காந்து
ஊருக்குத் திரும்பிடறதுன்னு. மித்தபடி எதுவா இருந்தாலும் மறுநாளு வேலங்குடிப் போயி
விசாரிச்சுப்புடுவோம்ன்னு தீர்மானம் பண்ணிக்கிட்டாரு. அதே நேரத்துல அவருக்கு இன்னொரு
பயமும் மனசுக்குள்ள ஓடிடுச்சு. வர்ற வழியில அத்தானுக்கோ, கார்த்தேசுக்கோ எதாச்சிம்
அடிப்பட்டுப் போச்சோ? யில்ல, வூட்டுல யாருக்காச்சிம் ஒடம்பு முடியாமப் போச்சோன்னு.
அப்பிடியும் ஆவ சூழ்நெல உண்டுத்தானே. அப்பிடி ஆனாக்கா யார்ர யாரு கோவிச்சிக்க முடியும்.
அப்பிடி எதுவும் ஆயிடக் கூடாதுன்னு உஞ்ஞினி அய்யனார்ர மனசுக்குள்ளயே வேண்டிக்கிட்டாரு.
இப்படி அவரு மனசுக்குள்ளயே சொழல சொழண்டுகிட்டு இருந்தப்போ பத்தே காலு வாக்குல எட்டாம்
நம்பரு பஸ்ஸூம் வந்துப்புடுச்சு. அதுக்கு மேல யோசிக்கல சுப்பு வாத்தியாரு. அதுல ஏறி
உக்காந்துட்டாரு.
*****
No comments:
Post a Comment