24 May 2020

படிச்சிக் கெட்டு பட்டணம் போ!

செய்யு - 458

            ஒட்டி வர்றதும், வெட்டிப் போறதும்தான் வேலங்குடி பெரியவரு மற்றும் சின்னவரு ஆகிய ரெண்டு பேத்து குடும்பங்களோட கதெ. ஒரு தலைமொறையில வெட்டிப் போறதும் வெலகிப் போறதும், அடுத்த தலைமுறையில தணியும்ன்னு பாத்தா ரெண்டாவது தலைமுறையில உக்கிரமாயிப் போனதுதாம் சோகம். அது ஏம் அப்பிடி ஆச்சுங்றதுக்கு பெரியவரு, சின்னவரோட ரெண்டாம் தலைமொறையக் கதையக் கொஞ்சம் பாத்தாத்தாம் புரியும்.
            சின்னவருக்கு தன்னோட புள்ளைகத்தாம் பெரிசா தலையெடுக்கணும்ன்னு ஒரு நெனைப்பு. சந்தானம் அத்தான் சென்னைப் பட்டணம் போற வரைக்கும் நெலமையும் அப்பிடித்தாம் இருந்துச்சு. பெரியவரோட ஆம்பள புள்ளைங்கள்ல ஒண்ணாச்சியும் தேறுமா? தேறாதா? இப்பிடித் தெருபொறுக்கிப் பயலுகளா கெடக்குறானுங்களேன்னுத்தாம் ஊருலயும் பேச்சாக் கெடந்துச்சு. அதுக்குத் தகுந்தாப்புல சின்னவரு தன்னோட புள்ளைகளெ படிக்க வெச்சிருந்தாரு. நாட்டுல படிச்சவேம் பொழைப்பானா? படிக்காம வெட்டிப் பயலுகளோட சுத்துறவேம் பொழைப்பானா?ன்னு சின்னவரும் எத்தாளம் பண்ணிக்கிட்டுத்தாம் கெடந்தாரு. சின்னவருக்குத் தெரிஞ்சி பத்தாப்பு படிக்க வெச்சு அத்தோட ஐ.டி.ஐ.யோ, பாலிடெக்னிக்கோ படிக்க வெச்சா அதுதாம் பெரிய படிப்பு. அதுப்படித்தாம் கார்த்தேசு அத்தானை பத்தாப்பு முடிச்சு ஐ.டி.ஐ. படிப்ப படிக்க வெச்சிருந்தாரு. அதுபடியே தாசு அத்தானையும் படிக்க வைக்கணும்னு மனசுக்குள்ள திட்டம் பண்ணி வெச்சிருந்தாரு.
            சென்னைப் பட்டணத்துல சந்தானம் அத்தான் தலையெடுத்ததுதாம் பெரியவரோட குடும்பத்துல நிகழ்ந்த மகத்தான திருப்புமுனைன்னு சொல்லணும். படிக்காம ஊரு சுத்திக்கிட்டுக் கெடந்த பயெ பெரிசா வந்ததுல சின்னவருக்கு மனசுக்குள்ள லேசான தாங்கலா இருந்துச்சு. ஐ.டி.ஐ. படிப்ப படிச்சிட்டு அப்பரண்டிஸ் டிரெய்னிங்க முடிச்சிட்டு வூட்டுல வேலை யில்லாம உக்காந்திருந்த தன்னோட மவன் கார்த்தேசை நெனைச்சப்போ அந்தத் தாங்கல் இன்னும் அதிகமாப் போயிடுச்சு. நாட்டுல படிக்காத பயலல்லாம் என்னமோ கொழாயிச் சட்டையும், பாலியெஸ்டர் சட்டையும் போட்டுட்டு அலையுறாம்! இடுப்புல அருணாக்கயித்து தங்காத பயலுவோ இடுப்புல இன்னிக்கு என்னவோ வெதவெதமான கொழாயிச் சட்டையில்லா பெல்ட்டோட கெடக்குது! காலுக்கு ஒண்ணுமில்லாம கல்லுலயும் முள்ளுலயும் சேத்துலயும் கெடந்து சேத்துப் புண்ணு வந்து கெடந்த பயலுவோ இன்னிக்கு பூட்டுல்லா பூட்டு போட்டுட்டு அலையுறானுவோ! எம் மவ்வேன் படிச்சிட்டு ஒண்ணும் வேல கெடைக்காம வூட்டுல கெடக்கானேன்னு சங்கடப்பட்டுகிட்டுக் கெடந்தாரு.
            சின்னவருக்கு வேலைக்குப் போற எடத்திலல்லாம் படிச்சவங்க யாராச்சியும் பார்த்தா, மவனோட படிப்பெப் பத்திச் சொல்லி அதெ பத்தி விசாரிக்கிறதுதாம் வேல. ஒரு மாபெரும் வெசாரணையப் போட்டுப்புடுவாரு. "ஒஞ்ஞளுக்கு ன்னா ஆச்சாரி கையில தொழில வெச்சிக்கிட்டு பையனுக்கு வேல கெடைக்கலன்னு சஞ்சலப்பட்டுக்கிட்டு கெடக்குதீயே? தொழில்ல எறக்குங்க. ஒஞ்ஞளுக்கும் ஒத்தாசையா இருக்கும். ஒண்ணுக்கு ரண்டா காசியும் கெடைக்கும்!"ன்னு சொல்லிருக்காங்க விசாரிப்ப போட்ட ஆளுக எல்லாம். சின்னவரு மனசொடிஞ்சிப் போயிட்டாரு. "ஏனுங்க நம்மட மவனுக்கு கவர்மெண்ட் வேலைக்கு ஆவாதுங்களா?"ன்னு மனசு தாங்காம போயி கேட்டுருக்காரு சின்னவரு.
            "அதல்லாம் ஒரு காலத்துல நடந்துச்சுங்க ஆச்சாரி! அப்ப படிச்சவேம் கெடைக்கல. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிச்சவம்லாம் கவர்மெண்ட வேலையிலப் போனாம். இப்போ அப்பிடியா நெலமெ? கெராமத்துலத்தாம் ஆச்சாரி ஐ.டி.ஐ. படிச்சவனும், பாலிடெக்னிக் படிச்சவனும் அபூர்வமா அஞ்ஞ ஒண்ணும், இஞ்ஞ ஒண்ணும் கெடக்காம். அப்பிடிப் பாத்தாலும் கெராமத்துல ஒருத்தம் ரண்டு பேரு இருக்காம். நாட்டு முழுக்க எத்தனெ கெராமம் இருக்கும் சொல்லுங்க ஆச்சாரி? அப்போ எத்தனெ பேத்து இருப்பாம்? அத்தனெ பேத்துக்கும் கவர்மெண்டடெ வேல போட்டுட்டுக் கெடக்கணும்ன்னா நெனைச்சுப் பாருங்க! இப்போ நாம்ம சொன்னது கெராமத்தோட நெலமெ. டவுன்ல பாத்தீங்கன்னா நாலு வூட்டுக்காவது ஒரு பயெ அப்பிடிப் படிச்சவேம் கெடப்பாம். படிக்காம கெடக்குறனுவள வுட, படிச்சிட்டு வேல யில்லாம கெடக்குறவனுவோத்தாம் ஆச்சாரி நாட்டுல அதிகெம். படிக்காம கெடக்குறவேம் கெடைச்ச வேலையில தொத்திக்கிட்டு மேல வந்துப்புடுறாம். இந்தப் படிச்ச பயலுவோ படிச்ச படிப்புக்குத்தாம் வேலயப் பாப்பேம்ன்னு கெடந்துகிட்டு நாட்டையும் வூட்டையும் குட்டிச்சுவராக்கிக்கிட்டுக் கெடக்குறானுவோ!"ன்னு வெசாரிச்ச எடத்துல எல்லாம் ஒரே மாதிரியா பதிலு வந்தப்போ சின்னவரு அடைஞ்ச மனக்கலக்கத்து அளவேயில்ல.
            அப்படியும் வுடாம பாக்குற ஆளுககிட்டயெல்லாம், "நம்மள மாதிரிக்கி புள்ளையோ படிக்க வெச்சவனுக்கெல்லாம் பொழைக்குறதுக்கு வேற என்னத்தாம் வழி?"ன்னு சின்னவரும் வுடாம கேட்டிருக்காரு. அப்பத்தாம் யாரையெல்லாம் வெசாரிச்சாரோ, அவுங்கல்லாம் ஒத்தப்படி சொல்லிருக்காங்க, "வழியில்லாமலா இருக்கும் ஆச்சாரி! அடிச்சிப் புள்ளீயோள சென்னைப் பட்டணம், கோவைப் பட்டணம், பெங்களூரு, பம்பாய்ன்னு தொரத்துங்க. அஞ்ஞத்தாம் அதுக்கான வேலைக இருக்கு. டவுன்ல கூட அதுக்கான வேலைக கம்மித்தாம். கெராமமோ, பட்டணமோ எங்கேயோ படிக்காதவேம் எப்பிடியும் பொழைச்சுப்பாம். இந்தப் படிச்சப் பயலுவோ பட்டணம் போனாத்தாம் பொழைக்கலாம்! தெரியாமலா சொன்னாங்க அந்தக் காலத்துல கெட்டுப் பட்டணம் போன்னு. அப்போ அதுக்கு ன்னா அர்த்தம் படிச்சுப் பட்டணம் போன்னுத்தாம் அர்த்தம் ஆச்சாரி!"ன்னு சொன்னதெ கேட்டு சின்னவரு ஒரு வார காலத்துக்கு மேல யோசிச்சாரு, யோசிக்காரு, அப்பிடி யோசிச்சாரு.

            சின்னவரு புள்ளைக ஒவ்வொண்ணுத்தையும் பாசமா வளத்த ஆளு. பெரியவரோட புள்ளைக ஒவ்வொண்ணும் மட்டம், தன்னோட புள்ளைக ஒவ்வொண்ணும் உசத்திங்ற அளவுக்கு வளத்தவரு. அப்பிடி வளத்ததால தன்னோட புள்ளைக எதுலயும் பெரியவரோட புள்ளைகள விட ஒரு படி உசத்தியாத்தாம் இருக்கணுங்ற நெனைப்பு வேற இருந்துச்சு அவருக்கு. அதுல வேற புள்ளைகளப் பொத்திப் பொத்தி வளத்திருந்தாரு. தன்னோட புள்ளைக பெரியவரோட புள்ளைகள வுட ரொம்ப நாகரிகமா இருக்கணும்னு வேற நெனைச்சிக்கிட்டு படாடோபமா வேற அவரோட சக்திக்கு மிஞ்சி செலவெல்லாம் பண்ணி புள்ளீயோள வளத்தாரு. அதுலயும் கார்த்தேசு அத்தான் மேல அம்புட்டுப் பாசம் அவருக்கு. ஒரு நாளு கூட மவனெ பிரிஞ்சி இருக்காத ஆளு. வேலைக்குப் போயிட்டு வூட்டுக்கு வந்த ஒடனேயே, "கார்த்தேசு! கார்த்தேசு! மவனே கார்த்தேசு!"ன்னு கூப்புட்டுட்டுத்தாம் வருவாரு. இப்போ மவனெ சென்னைப் பட்டணமோ, கோவைப் பட்டணமோ அனுப்பணும்ன்னா அவருக்கு எப்பிடி இருக்கும்? மனசே சுக்குநூத்தா ஒடைஞ்சிப் போயிடும் போல இருந்தச்சு சின்னவருக்கு.
            சின்னவருக்கு பட்டணத்துலயோ, பம்பாய்லயோ யாரைத் தெரியும்? அனுப்பி வுடுறதுக்கு? அது வேற அவருக்கு யோசனையா இருந்துச்சு. சென்னைப் பட்டணத்துலத்தாம் பெரியவரோட புள்ளீயோ இருக்குதுங்க. பெரியவரோட புள்ளீயோள வுட ஒரு நூலு மேல தன்னோட புள்ளீயோ இருக்கணும்னு நெனைக்குற ஆளு எப்பிடி பெரியவரோட புள்ளீயோளட கொண்டுப் போயி விடுவாரு. மவ்வேன்கிட்டயே இதெப் பத்தி கலந்துப்போம்ன்னு சின்னவரு அவரு அளவுக்கு வெசாரிச்ச சங்கதிகளையெல்லாம் கார்த்தேசு அத்தாங்கிட்டெ சொல்லிக் கலந்துக்கிட்டாரு. அதையெல்லாம் பொறுமையா கேட்டுப்புட்டு கார்த்தேசு அத்தான் சொல்லிச்சு, "யப்பா! நாமளே இதெப் பத்தி ஒஞ்ஞகிட்டெ கேக்கணும்னுத்தாம் நெனைச்சிட்டு இருந்தேம். நீஞ்ஞ ன்னா நெனைப்பீங்கன்னுத்தாம் யோஜனெ. நம்ம கூட படிச்ச கூட்டாளிப் பயலுவோ எல்லாம் சென்னைப் பட்டணத்துல இருக்கானுவோ. அவனுவோ கூட போயி ஜாய்ண்ட் அடிச்சிக்கிட்டேன்னா அவனுவோ வேல பாக்குற எதாச்சிம் ஒரு கம்பெனியில சேத்து வுட்டுப்புடுவானுவோ. அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா அஞ்ஞ கெடந்து மின்னுக்கு வந்துப்புடுவேம்ப்பா!"ன்னு.
            அதெ கேட்டதும் சின்னவருக்குச் சந்தோஷம் தாங்கல. நம்மப் பயெ வெவரமாத்தாம் இருந்திருக்காம், பொழைச்சுப்பாம்னு நெனைச்சு, மவனெ பிரிஞ்சாலும் பரவாயில்ல அதெ தாங்கிக்கிட்டு எப்பிடியோ பெரியவரோட புள்ளீயோ தொணையில்லாம் போயி மின்னுக்கு வந்தா சரித்தாம்ன்னு நெனைச்சுக்கிட்டு அது படியே பண்ணுடாப்பான்னுட்டாரு. கார்த்தேசு அத்தான் கூட படிச்ச கூட்டாளிக வூடுகளுக்குப் போயி அங்க வெசாரிச்சு அதுகளோட கூட்டாளிக வேலை பாக்குற கம்பெனியோட போன் நம்பர்ர வாங்கி, திருவாரூர்லேந்து போனைப் போட்டு கூட்டாளிக இருக்குற எடத்தெ பத்தி, அந்த எடத்துக்கு எப்பிடி வரணுங்ற வெவரத்தையெல்லாம் வெசாரிச்சிக்கிட்டு வந்து சின்னவருகிட்டெ சொன்னுச்சு. செரித்தாம் மவனெ தனியா அனுப்பக் கூடாது தொணைக்குக் கூட‍ கொண்டு போயி விட்டுப்புட்டு வந்துப்புடணும்னு முடிவெடுத்தாரு சின்னவரு.
            பொதுவா இப்பிடி பட்டணம் போற பயலுகளோ அடிச்சித் தொரத்துறதுதாம் கெராமத்து வழக்கம்.  பயலுகப் பாட்டுக்கு ஊரச் சுத்திக்கிட்டு வூட்டுல அலம்பல் பண்ணிட்டுக் கெடப்பானுவோ. பொறுத்துப் பொறுத்து அப்பங்கார்ரேம் ஒரு நாளு ரகளெ பண்ணி இனுமே சொத்தப் போடாதேன்னு அம்மாக்காரிக்கிட்டெ சண்டெ வெச்சிப்புடுவாரு. மவ்வேங்கிட்டெயும் நாக்கெப் பிடுங்கிட்டுச் சாவாலாங்ற மாதிரிக்கி மான, ரோஷம் இருக்காடா? சோத்துல உப்பப் போட்டுத்தாம் சாப்புடுதீயா? சோத்துக்குப் பதிலா வேற எதாச்சிம் தின்னுதீயான்னு கேள்விக் கேட்டா எந்த மவ்வேம் அதுக்குப் பெறவு ஊருல இருப்பாம். கண்ணுல படுற பஸ்ல ஏறி டிக்கெட் கூட எடுக்காமா, டவுன்ல எறங்கி, அங்கயிருந்து திருட்டு ரயிலேறி பட்டணத்துக்குப் போயி, தொரத்தி வுட்ட அப்பங்காரனே வாடா மவனேன்னு வாயி நெறையக் கூப்புடுற அளவுக்குப் புத்தியாயிப் பொழைச்சு வருவானுவோ.
            அப்பிடியே அப்பங்கார்ரேம் மனசு வந்து பட்டணத்துக்கு அனுப்பி வெச்சாலும் டவுனு வரைக்கும் வந்து பையில கொஞ்சம் காசிய திணிச்சி வுட்டு, போயிச் சூதானமா போழைச்சி மின்னுக்கு வான்னு சொல்லிட்டு டவுன்லேந்து பட்டணத்துக்கு மவனெ பஸ்லயோ, டிரெய்ன்லோயோ ஏத்தி வுட்டுப்புட்டு, அப்பங்காரனும் மாமங்காரனும் பஸ்ஸப் புடிச்சி ஊருக்கு வந்திடுவாங்க.
            சின்னவரு கதெய வேறல்லா. பாசமா வளத்தப் புள்ளைய அப்பிடில்லாம் அனுப்ப முடியுமா? கார்த்தேசு அத்தானைச் சென்னைப் பட்டணத்துக்கு அனுப்புறதுக்கு மின்னாடி ரசா அத்தை, நாலைஞ்சு வாளியில ஒரு வாளியில முறுக்கு, இன்னொரு வாளியில அதிரசம், மற்றொரு வாளியில சீனி உருண்டை, வேறொரு வாளியில சீடைன்னு அது பாட்டுக்கு செஞ்சி வெச்சிடுச்சு. படிச்சப் பையனெ பட்டணத்துக்கு அனுப்புறங்றதால சின்னவரு திருவாரூ டவுன்லேந்து நல்லதா ஒரு சூட்கேஸா வாங்கியாந்தாரு. பொதுவா தகரப்பொட்டித்தாம் வாங்குறது. தன்னோட மவனெ ரொம்ப நாகரிகமா வளக்குறதா காட்டுற ஆளாச்சே சின்னவரு. அதால சூட்கேஸூ சகிதமா வந்தாரு. அந்த சூட்கேஸ்ல துணிமணியெல்லாம் எடுத்து வெச்சு, பலகார வாளிகளையெல்லாம் தயாரு பண்ணியாச்சு.
            அடுத்த வேலையா சின்னவரு சைக்கிள கெளப்பிக்கிட்டுத் திட்டைக்கு வந்தாரு. வந்தவரு என்னா சொன்னாருங்றீங்க! மவனுக்குச் சென்னைப் பட்டணத்துல வேலை கெடைச்சிட்டதாவும், தாய்மாமேங்ற மொறையில வந்து திருவாரூ டவுன்ல ரயிலேத்தி வுடணும்ன்னு சொல்லிட்டாரு. அதுக்கு ஏத்தாப்புல சாயுங்காலம் நாலு மணி வாக்குல நேரா டவுனு பஸ்ஸ்டாண்டு வந்து நின்னுப்புடு, மவனெ அழைச்சிட்டு நாமளும் வந்துப்புடுறேம்ன்னு சொல்லிட்டாரு.
            சுப்ப வாத்தியாருக்குக் கூட ஒரு யோசனைத்தாம், "ஏம் யத்தாம்! நாம்ம வேலங்குடிக்கே வந்துப்புடுறேம்! அஞ்ஞயிருந்து சேந்து ஒண்ணா கெளம்பிப் போயிப்புடுவேம்!"ன்னு சொன்னாரு. சின்னவரு அதெ கேக்கலா. "அத்துச் சுத்தப்படாது யம்பீ! நீஞ்ஞ ராயநல்லூர்ல எறங்கி, வேலங்குடிக்கு நடந்து, பெறவு வேலங்குடியிலேந்து நாமல்லாம் சேர்ந்து ராயநல்லூரு நடந்து பஸ்ஸூ ஏறி ஒஞ்ஞளுக்கு ரண்டு அலைச்சலா போயிப்புடும்! வேல சட்டுப்புட்டுன்னு ஆவணும்! அதுக்குத்தாம் சொல்றேம்! நமக்கு நேரமில்லா பாருங்க. ஊருக்குப் போயி மவனெ கெளப்பித் தயாரு பண்ணி வுடற வேலையப் பாக்கணும்!"ன்னாரு சின்னவரு. அப்பிடின்னா செரித்தாம் அத்தானோட யோசனைக்கே போயிப்புடுவோம்னு முடிவு பண்ணிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...