23 May 2020

இடுகாட்டுல தூங்கிப் போனவனுங்க!

செய்யு - 457

            சாவு வூட்டுக்கு சுப்பு வாத்தியாரு வந்ததும், ஆவ வேண்டிய காரியம் ஆவட்டும்ன்னுட்டாரு. சனங்கப் புரிஞ்சிக்கிட்டாங்க. மல்லுக்கட்டி எழுப்புனாலும் தூங்குறனவத்தானெ எழுப்ப முடியும்? தூங்குற மாதிரிக்கி நடிக்குறவனெ பூமியைப் பொரட்டிப் போட்டாலும் போடலாம், அவனெ பொரட்டிப் போட முடியாது. சின்னவரு அப்பிடிப்பட்ட ஆளு. குதுரைய தண்ணிக்காட்டுக்கு அழைச்சிட்டுத்தாம் போவ முடியும். தண்ணி அதுவா குடிச்சாத்தாம்? மெனக்கெட்டு அது இதுன்னு சொல்லித்தாம் பாக்கலாம். அதுக்கு மேல அடிதடின்னு எறங்கி பிரித்விராசன் பொண்ண தூக்குறாப்புல ஆள வெச்சா தூக்கியார முடியும்? இதுக்குப் போயி இம்மாம் மெனக்கெட்டு இருக்க வேண்டிதியல்லையேன்னு சில பெரிசுங்க பேசுனுச்சுங்க.   மணி அப்பவே ராத்திரி பதினொண்ணு ஆயிடுச்சு. இப்போ பாத்தா சந்தானம் அத்தான், மாரி அத்தான், ராமு அத்தான், சுப்புணி அத்தான், குமாரு அத்தான்னு எல்லாத்துக்கும் மூக்குக்கு மேல கோவம். எவ்வேம் வந்தா ன்னா? வராட்டி ன்னா? ராமு அத்தான் வெளிப்படையாவே சுப்பு வாத்தியார்ர கேட்டுப்புடுச்சு, "ஏம் மாமா எங்கப்பனுக்குச் சென்னைப் பட்டணத்துல செத்து இஞ்ஞ வேலங்குடிக்கு வந்து நாறிட்டுக் கெடக்கணும்னு தலையெழுத்தா? ஏத்தோ நீயில்லாம் சொல்றப்போ ஒண்ணும் சொல்லக் கூடாதுன்னுத்தாம் இருக்கேம். எதுக்கும் ஒரு எல்லெ இருக்கு. வரம்பு மீறிப் போனா அத்து நல்லா இருக்காது மாமா. நாம்ம இத்தெ கோவப்பட்டுச் சொல்லல. ஊருக்காரவுங்களும் ஒறவு அந்துப்புடக் கூடாதுங்றீங்க? ஒறவுக்காரவுங்களும் ஒறவு அந்துப்புடக் கூடாதுறீங்க? யார்ரு இப்போ ஒறவெ அந்துப் போறாப்புல பண்ணுறா? அதெல்லாம் திருத்த முடியா சென்மங்க மாமா! நமக்குல்லாம் ஒம் மேலத்தாம் கோவம் வருது. பாவம் நீந்தாம் ன்னா பண்ணுவே? நீயி அப்பிடித்தாம் இருந்தாவணும். இன்னிக்கு எஞ்ஞ அப்பனுக்கு வந்தச் சாவு நாளைக்கு எஞ் சித்தப்பனுக்கு வராமலா போயிடும்? அப்போ வெச்சிக்கிறேம் சேத்து கொளுத்த  வேண்டிய பட்டாசு எல்லாத்தையும்!"ன்னுச்சு.
            "எப்பிடியோ சரி பண்ணிப்புடலாம்ன்னுத்தாம் பாத்தோம்டாமபீ! சாவு காரியத்தெ வெச்சு சேத்துப்புடணுங்ற நெனைப்புத்தாம். ஒத்து வர்றாம போனதுக்கு யார்ற என்னத்தெ குத்தம் சொல்றதுன்னு நீந்தாம்டாம்பீ சொல்லணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அப்படிச் சொல்லிப்புட்டு சுப்பு வாத்தியாரு மனசு உருள ஆரம்பிச்சிது. "பெரியவர்ரு இல்லன்னா இந்த ஆளுல்லாம் தலையெடுத்திருக்க முடியுமா? யில்லே சந்தானம் இல்லன்னா அவரோட தலைமொறைத்தாம் தலையெடுத்து இருக்க முடியுமா? ஒரு தலைமொறை உதவியா? ரெண்டு தலைமொறை உதவில்லா நடந்திருக்கு. அதுக்குக் கூட விசுவாசமா இல்லன்னா என்னத்தெ சொல்றது? பெறத்தியானுக்குச் செஞ்சிருந்தா கூட விசுவாசமா இருந்திருப்பாம். பங்காளிக்குச் செஞ்சு பங்கமாப் போயிடுச்சு!"ன்னு நெனைச்சுக்கிட்டாரு.
            "ஆவ வேண்டிய காரியம் ஆவட்டும்! சித்தெ வெரசா அததும் வேலயில கவனத்தெ வையுங்க!"ன்னு நாட்டாமயோட குரலு கேட்டதும், அதுக்குப் பெறவு ஆரம்பிச்சு குளிப்பாட்டி, பண்ண வேண்டிய சடங்குகளப் பண்ணிப் பாடையில தூக்கி வைக்க எல்லாம் வேக வேகமா நடந்தேறுனுச்சு. நேரமாயிட்டே போனதால கொடத்துல தண்ணி கொண்டாந்து வெச்சதிலேர்ந்து, பாடையக் கட்டித் தயாரு நெலையில வெச்சது வரைக்கும் சுப்பு வாத்தியாரு சின்னவரு வூட்டுக்குக் கெளம்புறப்பவே முங்கூட்டியே நெலமெ எப்பியிருந்தாலும் அவரு வந்ததும் சட்டுபுட்டுன்னு முடிச்சிப்புடணும்ன்னு ஆயிருந்துச்சு. குளிப்பாட்டி முடிச்சு சட்டுப்புட்டுன்னு பாடையில தூக்கி வைக்குற நேரத்துல ஒரு விசித்திரம் நடக்குறாப்புல, சின்னவரு குடும்பத்துச் சனங்க ஒவ்வொண்ணா வேக வேகமா வந்துச்சுங்க.
            "யப்பாடி இப்பத்தாம் பெரியப்பன்ன வந்துப் பாக்கணும்னு தோணுச்சா? எம்மாம் நேரம்டா ஆவுது? ஒரு நிமிஷம் தாமதிச்சிருந்தீங்கன்னா பயணத்தெ ஆரம்பிச்சிருப்பாரு பெரியப்பங்காரரு!"ன்னாரு ஊருக்கார நாட்டாமெ.
            "இவுங்கள்லாம் வந்து இனுமே பாக்கக் கூடாது. மொதல்ல வெளியில போவச் சொல்லு! போ! போ! கெளம்பி வந்த வழியே போவச் சொல்லு! போயிக்கிட்ட இரு! என்ன மசுத்துக்கு இப்போ வந்துப் பாக்கணும்னு வர்றே?"ன்னு ஒரு ஆட்டத்தெ ஆட ஆரம்பிச்சிது குமாரு அத்தான்.
            சுப்பு வாத்தியாரு பேச வாயெடுத்தாரு, அதுக்குள்ள சந்தானம் அத்தான் வேக வேகமா வந்து குமாரு அத்தான் கன்னத்துல பளிச்சுன்னு ஒரு அறை வெச்சு, "போடா அந்தாண்ட!"ன்னுச்சுப் பாருங்க, குமாரு அத்தான் நாலு சுத்து சுத்தி அந்தாண்ட போயி விழுந்துச்சு. சுத்தி நின்ன ஆளுகத்தாம் தூக்கிப் பிடிச்சு எழுப்புறாப்புல ஆயிடுச்சு. எழுந்திரிச்சி நின்ன குமாரு அத்தான் கன்னத்துலயே கைய வெச்சிக்கிட்டுப் பாத்துக்கிட்டு இருந்துச்சு. 

            "கடெசீயா பாக்குறவங்களப் பாக்கச் சொல்லிப்புடுங்க!"ன்னு யாருக்கோ சொல்றாப்புல சொல்லிட்டு வெலகி நின்னுச்சு சந்தானம் அத்தான்.
            சின்னவரு குடும்பம் ஒட்டுமொத்தமா சுப்பு வாத்தியார்ரப் பாத்துச்சு. அவரு தலையக் குனிஞ்சிக்கிட்டாரு. "ஒண்ணு சொல்றதுக்கு மின்னா‍டியே சரியா நடந்திருக்கணும். யில்ல சொல்றப்பயாவது கேட்டு சரியா நடந்திருக்கணும். இப்பிடி ரண்டுங்கெட்டான்னா வந்து நிக்குறானுவோளே? கூப்புட்டப்பயே கையோட வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்!"ன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாரு.
            வரிசையா கார்த்தேசு அத்தான், நீலதாட்சி அத்தாச்சி, தாசு அத்தான், கண்ணாடி தாசு அத்தான், தேவி அத்தாச்சி, சுவாதி அத்தாச்சி, ரசா அத்தை, பொட்டுப் பொடிசுங்க எல்லாம் பெரியவரோட மொகத்தப் பாத்துச்சுங்க. பொம்பளைங்க ஒவ்வொண்ணுத்துக்கும் அழுகைப் பொத்துக்கிட்டு வந்துடுச்சு. அதுக அப்பிடியே செயா அத்தைய கட்டிக்கிட்டு அழுவ ஆரம்பிச்சிதுங்க. ஒரு வழியா எல்லாரும் பாத்து முடிச்ச பிற்பாடு பெரியவரைத் தூக்கி பாடையில வெச்சப்போ பன்னெண்டு மணி இருக்கும். பெரியவரோட பாடை மேற்கால போயி தெற்கால திரும்புனுச்சு. சின்னவரோட குடும்பத்துச் சனங்க கெழக்கால போயி வடக்கால நடந்துச்சுங்க. இடுகாட்டுத் தொறைக்குச் சின்னவரோட குடும்பத்துலேந்து யாரும் வரல.
            பெரியவரோட பாடைய வீட்டுலேந்துத் தூக்கி மூணு சுத்து சுத்தி கெளப்பிக்கிட்டு, இடுகாட்டுல போயி அவர்ர சமாதி வெச்சி முடிச்சப்போ மணி ரண்டைத் தாண்டிடுச்சு. குழியெல்லாம் வெட்டி தயாராத்தாம் இருந்துச்சு. சாதாரணமா மூணரைக்கு மூணரை அடி சதுரத்துல அஞ்சடியோ ஆறடியோ ஆழம் இருந்தா போதும் சமாதி வைக்குறதுக்கு. உக்காந்த வாக்குலத்தாம் சமாதிய ‍வைக்கிறது. ஆனா குழிய அஞ்சுக்கு அஞ்சு சதுரத்துக்கு வெட்டி ஆழம் எட்டடியாவது இருக்கும். வெட்டியிருந்த குழிக்கு மேல மண்ணு மலை போல குமிஞ்சு கெடந்துச்சு. பெரியவர்ர குழிக்குள்ள எறக்கி சமாதி பண்ணி மண்ண அள்ளிப் போட்டா அள்ளிப் போடுற ஆளுகளுக்கு அலமந்துப் போவுது. ஒரு நாளு பூரா நாலு ஆளுங்க மெனக்கெட்டு வெட்டுன குழி. கொட்டி நெரப்புறதுன்னா ஒரு மணி நேரத்துக்கு மேலத்தாம் ஆவும்.
            மண்ணள்ளிப் போடுற ஆளுங்க அசந்தா, ஒறவுக்கார சனமும், "கொடுப்பா இப்பிடி மம்புட்டிய!"ன்னு ஆளாளுக்கு வாங்கித்தாம் வெட்டிக் குவிச்சிருக்கிற மண்ண வெட்டி குழியில சாய்க்குதுங்க. மலைய வெட்டி மட்டம் தட்டுறாப்புல இருக்கு வேல. இருட்டு நேரம் வேறய்யா. ஆளாளுக்கு டார்ச் லைட்ட வெச்ச அடிச்சிக்கிட்டு வேல பெரும் வேலயா போயிடுச்சு. மம்புட்டு கை மாறி கை மாறி வேல நடக்குது. ஆன்னா வேல என்னவோ அனுமாரு வாலு போல நீண்டுகிட்டெ போவுது.
            "எவம்டா இத்து வெவரங்கெட்ட தனமா இம்மாம் பெரிய குழிய வெட்டித் தள்ளுனது? இப்போ எவம்டா அள்ளி நிமுக்குறது மூளெ கெட்டப் பயலுவோளா? கொஞ்சம் கூட அறிவு வாணாமா?"ன்னு ஒறவுக்கார சனத்துல செல பேரு சத்தம் போட, குழிய வெட்டுன ஆளுகளும் சளைக்கமா பேசுனுச்சுங்க, "அத்து ன்னாங் நாம்ம இஞ்ஞ குழிய உசுர வுட்டுட்டு வெட்டிட்டுக் கெடக்குறேம். ஒருத்தராவது வந்து என்னா ஏதுன்னு பாக்கறதில்லயா? என்னவோ குடும்பத்துல ஏத்தோ பெரச்சனையா கெடக்குன்னு நீஞ்ஞ பாட்டுக்கு அஞ்ஞ கெடந்துட்டு இருந்தா? நமக்கென்னங் தெரியும்? நாயோ நரியோ வந்து பொதைச்ச சாமிய இழுத்துட்டுப் போயிடப் படாது பாருங். நாளைக்கி நம்ம பேரு கெட்டப் பேராயிடக் கூடாது பாருங். பெரிசா வெட்டுன்னா ஒண்ணுங் கொறைஞ்சிப் போயிடாதுங் சாமி. கொஞ்சம் மெனக்கெட்டா அள்ளிப் போட்டுப்புடலாம். முடியாத நீஞ்ஞ மம்புட்டிய வெச்சிப்பிட்டு ஓரங் கட்டுங். நாஞ்ஞ வெட்டுன குழி நாஞ்ஞளே மூடுறேங். அநாவசியமா யாரும் பேசாதீங் சாமி! வெதைச்சனுக்குத் தெரியுங் தண்ணி ஊத்த, வெட்டுனவனுக்குத் தெரியுங் பொதைக்க!"ன்னு.
            இப்பிடி நேரமானதுல அதுக்குள்ள இடுகாட்டுக்கு வந்த சனங்கள்ல பத்து பாஞ்சு ‍பேராவது இடுகாடுன்னு கூட பாக்காம, கெடைச்ச எடத்துல மல்லாந்துப் படுத்தவனுவோ அப்பிடியே ஒறங்கிப்புட்டானுங்க. ரெண்டு மூணு நாளு ஒறங்காம கெடந்தப் பயலுவோ நடந்த அமளிதுளியில பாவம் என்னத்தெ பண்ணுவானுவோ. அத்தோட செல பேரு சாவுக்குடின்னு சரக்கெ வேற குடிச்சிட்டு ஆடிட்டு வேற வந்திருந்தானுவோ. ஒடம்பும் அசந்துப் போயிருந்திருக்கும். அவனுங்கத்தாம் இந்த இடுகாட்டு ஒறக்க அசாமிங்க. என்னவோ மாமியாரு வூட்டுல மெத்தையப் போட்டு ஒறங்க வெச்சாப்புல அவுனுங்க கொறட்டைச் சத்தம் இடுகாட்டக் கிழிக்கிது. அவனுங்கள வேற எழுப்பிக் கெளப்பிட்டு வாரதுக்குள் போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. அவனுகள எழுப்பி வெறுத்துப் போயி, "ஏம்டா வெட்டுனதுதாங் வெட்டுனீங்க! இன்னும் பத்துப் பாஞ்சு குழிய சேத்து வெட்டியிருந்தா இந்தக் கருமம் புடிச்சவனவளோயும் தூக்கிப் போட்டு பொதைச்சிட்டுப் போயிடலாம்ல. எஞ்ஞ எடம் கெடைச்சாலும் தூங்கிடுவானுவோ போலருக்கு. குழிய வெட்டி அதுல படுன்னாலும் படுத்துடுவானுவோ போலருக்கு. இவனுகளெ கெளப்பிட்டுப் போறதுக்கு இன்னும் நூறு பொணத்துக்குப் பாடையக் கட்டியாந்து பொதைச்சிடலாம்டா! இவுனுக சாவுற நேரம் தெரிஞ்சா நேரா போயிக் குழியில போயிப் படுத்துக்கிடுங்டான்னு சொல்லிப் போடணும்! ந்நல்லா வந்து வாய்ச்சானுவோடா!"ன்னு வேற ஒருத்தரு சத்தத்தெ வுடுறாரு.
            என்ன நேரத்துல இந்த எழவுக்குக் கெளம்பி வந்தோமோன்னு குசுகுசுத்துக்கிட்டு, பெறவுத்தாம் சனங்க ஒவ்வொண்ணா கலைய ஆரம்பிச்சதுங்க. ஊருக்கார சனங்க காட்டுத்துறை வரைக்கும் வந்ததுங்க வூடு திரும்புனுச்சுங்க. ஒறவுக்கார சனங்க இந்த நேரத்துக்கு மேல எங்கக் கெளம்பி எங்கப் போறதுன்னு அந்நேரத்துக்குப் பெறவு குளிச்சி முடிச்சிட்டு எல்லாம் பெரியவரோட வூட்டுலயே தங்கிடுச்சுங்க. இப்பிடியா பெரியவரு செத்து அடக்கமாவ ரெண்டு நாளுக்கு மேல ஆயிடுச்சு.
            "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னுச் சொல்றது உண்டு. இப்பிடித் தம்பிக்கார்ரேம் அமைஞ்சா நிம்மதியா கூட சாவ முடியாது. நல்ல வேளையா தம்பிக்கார்ரேன் குடும்பத்துல ஒருத்தனும் வாராம போயித் தொலையாம கடெசீ நேரத்துலயாவது வந்து தலையக் காட்டிட்டுப் போயிட்டானுவோளே! இல்லன்னா அத்து வேற பெரிய கரைச்சலா போயிக் கெடக்கும். இவனுவோ ஆளாளுக்குக் பெலாக்கணத்தெ பாடிக்கிட்டு உசுர எடுத்துப்புடுவானுவோ!"ன்னு சாவுக்கு வந்த சனங்க ஒவ்வொண்ணும் பேசிக்கிட்டுப் போனுச்சுங்க.
            அதெத் தொடர்ந்து நெறைய விசயங்கள பேச வேண்டியதாச் போயிடுச்சு. நெறைய விசயங்கள பரிசீலனைப் பண்ணுறாப்புலயம் ஆயிடுச்சு. வேலங்குடி பெரியவரு வீட்டுக்கும், சின்னவரு வீட்டுக்கும் இருந்த விரிசலு ரெண்டு பக்கமும் ஒரு பள்ளத்தாக்கு அளவுக்கு பெரிசாவ ஆரம்பிச்சிது. இப்போ சுத்தமாவே பெரியவரு குடும்பத்தப் பத்தி சின்னவரு குடும்பத்துல பேசுனா பிடிக்கிறதில்ல. சின்னவரு குடும்பத்தப் பத்தி பெரியவரு குடும்பத்துல பேசுனா பிடிக்கிறதில்ல. அதுக்கு மின்னாடி வரைக்கும் ஒருத்தரு குடும்பத்தெப் பத்தி பேசிட்டுக் கெடந்தவனுவோ இப்போ சுத்தமா ஒருத்தரைப் பத்தி ஒருத்தரு நெனைக்கிறதெ கூட பாவமா நெனைக்க ஆரம்பிச்சிட்டாவ்வோ.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...