செய்யு - 456
சுப்பு வாத்தியாருக்கு மனசு வெறுத்துப்
போனது போல போயிடுச்சு. அண்ணங்கார்ரேம் சாவுக்கு வந்து தலையக் காட்டிட்டுப் போறதுக்கு
இவ்வளவு வியாக்கியானம் பேசுறாரேன்னு சின்னவரு மேல சுப்பு வாத்தியாருக்கு எரிச்சலாவும்
வந்துச்சு. "ன்னா மாதிரியான ஒரு மனுஷனா இருப்பான் அண்ணங்கார்ரேம் சாவுக்குக் கூட
வர்றாம இருக்காம்? கேட்டா நோரைநாட்டியம் பண்ணுறாம்!"ன்னு நெனைச்சிக்கிட்டாரு.
வேலங்குடி பெரியவரு இல்லாம, சின்னவரு வளந்திருக்க
முடியுமா? ஒரு மனுஷனா தலையெடுத்திருக்க முடியுமான்னு பழச நெனைக்க நெனைக்க சின்னவரு
மேல வந்து கோவமும், வேகமும் கூடிட்டுப் போயிடுட்டு இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு.
அந்த வேகத்தை டிவியெஸ்ஸூ வண்டிய ஸ்டார்ட் பண்ணுறதுல காட்டுனாரு சுப்பு வாத்தியாரு.
"மாமா! இப்பிடிக் கோவிச்சிக்கிட்டு
வேக வேகமா சடசடன்னு வெரசா கெளம்புனா எப்பூடி?"ன்னுச்சு வாசலத் தாண்டி வந்த கார்த்தேசு
அத்தான் சத்தமா.
சுப்பு வாத்தியாரு மொறைச்சுப் பாத்தாரு,
வேற என்னடா பண்ணச் சொல்றீங்கங்ற மாதிரிக்கி. காறித் துப்பிப்புடலாமான்னு கூட அவருக்குத்
தோணுச்சு. அது ஒரு ரகளையாப் போயி மனத்தாபத்துல போயி நிக்குறதுல அவருக்கு ஒடம்பாடு
இல்ல. வார்த்தைகள மொல்ல மொல்ல வுட்டாரு, "அடப் பாவியோளா! அஞ்ஞ பொணத்த நடு
வூட்டுல போட்டுட்டு இன்னும் எம்மாம் நேரத்துக்கு உக்காந்திருக்கிறது? ஒருத்தரா ரண்டு
பேரா? ஊருக்கார்ரேம், ஒறவுக்கார்ரேம் அத்தனெ பேரும் இதெ வெச்சாவது ஒண்ணுச் சேத்துப்புடணும்னு
நிக்குறாங். நீஞ்ஞ என்னான்னா ஒஞ்ஞ ஒருத்தெம் அவஸ்தையெ பெரிசு பண்ணிக்கிட்டு அஞ்ஞ அத்தனெ
பேரையும் அவஸ்தெ பண்ணிட்டு இருக்குறீங்க? இதெப் புரிஞ்சிக்கிடாம நாம்ம சட்டுபுட்டுன்னு
கெளம்புறதா சொல்றீங்களே! நாம்ம இன்னும் எம்மாம் நேரம் இருக்கணும்னு சொல்லுங்க. அஞ்ஞ
பொணம் நாறிட்டுக் கெடக்கட்டும். நாம்ம இருந்துட்டுப் போறம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யப்பாவுக்குப் போவக் கூடாது. ஒனக்கு
வந்துட்டுப் போவணும். இதாங் பெரச்சனை. நாஞ்ஞளும் சென்னைப் பட்டணத்துலேந்து கெளம்பி
வந்தாச்சு. இஞ்ஞ வந்துப் பாத்தா நெலமெ இப்பிடி இருக்கு. யாருக்கும் போவக் கூடாதுன்னு
நெனைப்புக் கெடையாது. நாஞ்ஞளும் எப்படியாவது யப்பாவைச் சமாதானம் பண்ணிப்புடலாம்னுத்தாம்
பாத்தோம். செரித்தாம் மாமா நீயி வந்துட்டேன்னு நெனைச்சா, நீயுந்தாம் பாத்தேல்ல? ஒம்மட
அனுபவத்துக்கு நீயே பண்ண முடியலன்னா, எஞ்ஞ நெலமெயச் சொல்லு!"ன்னுச்சு கார்த்தேசு
அத்தான்.
இவனுங்களுக்கு மேக்கொண்டு எதெ வெச்சு
வெளக்கம் பண்ணுறதுன்னு சுப்பு வாத்தியாரு ரொம்பவே தடுமாறிப் போனாரு. சில விசயங்களல
மனசுப் புரிஞ்சிக்கலன்னா அதெ வெளக்குறதெ தண்டம்ன்னு அவருக்குப் பட்டுச்சு. வெளக்கம்
இனுமே வெட்டியாத்தாம் போவப் போகுது. இருந்தாலும் மொகத்த சட்டுன்னு முறிச்சிக்க முடியாதே.
சுப்பு வாத்தியாரு அதெ மனசுல நெனைச்சுகிட்டுத்தாம், கெளம்புனவரு இப்போ கெளம்ப முடியாம
நின்னுகிட்டுப் பேசுனாரு.
"இன்னிக்கு மனசுக்கு இத்துச் சரியாப்
படும். இன்னிக்கு இருக்குற மனசே நாளைக்கும் இருக்காது. மாறும். அப்போ தப்பா போயிடும்.
அதுக்காகத்தாம் மனசெ நம்பாம எத்து தர்மமோ அந்தத் தர்மத்துக்கு வாங்றேம். எத்து ஞாயமோ
அந்த ஞாயத்துக்கு வாங்றேம். அப்போ எதுவும் தப்பா போவாது. நாளைக்கு நின்னுகிட்டு இப்பிடிப்
பண்ணிருக்கலாமே, அப்பிடிப் பண்ணிருக்கலாமேன்னு நெனைப்பு வந்தாவே போச்சு. தப்புப் பண்ணிட்டதாத்தாம்
அர்த்தம். தெரியாம பண்ணுற தப்பு வேற. தப்புன்னு தெரிஞ்சும் அதெ நாலு பேத்து எடுத்துச்
சொல்றப்ப மீறிட்டு வம்புக்குப் பண்றது வேற. சிலது பின்னாடிக் காலத்துல சொல்லுக்கு
எடமாவும். வயசான காலத்துல யத்தாம் எடுத்துச் சொல்ல வேண்டியது இது. நாம்ம சொல்ல வேண்டியா
இருக்கு அவருக்கும் சேத்து. எடுத்துச் சொல்ல வேண்டிய ஆளுக்கே இத்து எடுபடலங்றப்போ
நம்மாள ஆவுறதுக்கு ஒண்ணுமில்லே. வயசான காலம் சிலதெ மாத்திக்க முடியாது. இளஞ்செட்டுக
ஒஞ்ஞளுக்கு ன்னா? நீஞ்ஞளாவது ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போயிட்டா ஒரு வழியா இந்த
இக்கட்ட சமாளிச்சிப்புடலாம் மாதிரிக்கித் தெரியுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நீயிச் சொல்றது புரியுது மாமா!
இருந்தாலும் யப்பாவ மீறி எப்பிடின்னுத்தாம் பாக்குறேம். யப்பாவக் கலந்துகிட்டு ஒரு
முடிவுக்கு வர்றேம் மாமா!" அப்பிடினுச்சு கார்த்தேசு அத்தான்.
இப்பிடிக் கொழப்பிக் கொழப்பிப் பேசுனா
சுப்பு வாத்தியாரு என்னத்தாம் பண்ணுவாரு? ஒண்ணு வரணும், இல்லன்னா சின்னவரு போல வார்ற
மாட்டேம்ன்னு வறட்டு வியாக்கியனமாவது பண்ணிட்டு இருந்துப்புடணும். இந்த ரெண்டுங்கெட்டாம்
நெல இருக்கே, நடுவுல நின்னு பேசி வுடுற ஆளுக்குத்தாம் மண்டெயப் பிய்ச்சிக்கிறத? சட்டையெ
கிழிச்சுக்கிறாதாங்ற மாதிரிக்கி இருக்கும். அவரு நெலமெ இப்ப அப்பிடித்தாம் இருந்துச்சு.
இவுனுங்கள இவுனுகப் போக்குலயே வுட்டுப்புட்டு ஆவ வேண்டியக் காரியத்தெ பாத்திருந்தா
இந்நேரம் சாவு காரியம் ஆயிருக்கும். இவ்வளவு பேத்துக்கும் மெனக்கெடு இல்ல. ஒறவுமொறையில
கொஞ்சம் அப்பிடியிப்படி இருக்குறது சகஜம்தாம், பேசிச் சரி பண்ணிப்புடலாம்ன்னு பாத்தா
என்னவோ ராச பரம்பரைக்காரனுவோ போலல்லா சமாதானம் வைக்குறானுவோன்னு நெனைச்சாரு சுப்பு
வாத்தியாரு. அவருக்கு வந்தக் கடுப்புக்கு பேச ஆரம்பிச்சாரு.
"அதுக்கு ஏம்டா நம்மள நிறுத்துனீங்க?
வாயித் தவிச்சாப்புல இருக்குறப்ப கொடுக்குறதுக்குப் பேருதாம் தண்ணி. தண்ணியக் கொடுக்குறதா
வாணாமான்ன யோஜிச்சிக்கிட்டு விக்கிச் செத்ததுக்குப் பெறவு கொடுக்குறதுக்குப் பேரு
தண்ணியில்ல, வெஷம். பசிச்சாப்புல இருக்குறப்ப போடுறதுக்குப் பேருதாங் சோறு. அதையும்
போடலாமா வாணாமான்னு யோஜனையிலயே பசியால செத்ததுக்குப் பெறவு போட்டுப்புட்டு ஏஞ் சாப்புட
மாட்டேங்றீங்கன்னுக் கேக்குறதுக்குப் பேரு எமகாதகம். அவ்வளவுதாஞ் நாம்ம சொல்வேம்.
இதுக்கு மேல கிளிப்புள்ளைக்கிச் சொல்ற மாதிரிக்கி வேற எப்பிடிடா நாம்ம சொல்லணும்னு
எதிர்பாக்குறீங்க? ந்தா நாம்ம பொறப்படப் போறேம். ஒண்ணும் ஆவாதக் காரியத்துக்கு ஆத்தெ
கட்டிக்கிட்டு எறைச்சுக்கிட்டு ஏம் இம்மாம் நேரமுன்னுத்தாம் அஞ்ஞ சாவு வூட்டுல ஆளாளுக்குக்
கேக்கப் போறாம். கேக்குறவேம் கேட்டுப்புட்டுப் போவட்டும். நாம்ம இதுக்காக கடெசீ வரைக்கும்
எல்லா வெதத்துலயும் நின்னுப் பேசிப்புட்டேங்றேம் திருப்தி ஒண்ணுத்தாம் இதுல. காரியம்
ஆவலங்றது வேற. காரியம் ஆவுறதுக்கான எல்லாத்தையும் செஞ்சாச்சுங்ற ஒண்ணு போதும். அண்ணன்
தம்பியோ, பங்காளியோ பக்கத்துப் பக்கத்துல வூட்டக் கட்டுன்னா பகையாளியாத்தாம் ஆவாணுவோ
போலருக்கு. இதுக்குத்தாம் சொந்தம்ன்னா கண்ணுக்கு எட்டாத தூரத்துல இருக்கணும். அதுலயும
ரத்த ஒறவுன்னா ஒரு ஆத்திரம் அவசரம்ன்னாலும் வந்துப் பாக்க முடியாத தூரத்துல இருக்கணும்.
ச்சும்மாவா சொல்லுவாங்க எட்ட நின்னாத்தாம் ஒறவு, கிட்ட நின்னா பிரிவுன்னு. அந்தக்
கதையா இருக்குடா ஒஞ்ஞ கதெ! ஊருல ஒலகத்துல யில்லாத கதெ! ஆளெ வுடுங்கடா சாமி! ஒஞ்ஞ நடுவூட்டுல
இப்பிடி ஒரு பொணம் கெடந்து நாறுனாத்தாம்டா ஒஞ்ஞ மனசுல திருத்தம் வரும். அது வரைக்கும்
எஞ் சூத்துலேந்து நாத்தம் வரலன்னுத்தாம் சொல்லிட்டுக் கெடப்பீங்க. போங்க அப்பிடியெ
சொல்லிட்டுக் கெடங்க! என்னவோ ஒஞ்ஞப் பக்கந்தாம் ஞாயம் இருக்குங்ற மாதிரிக்கும், பேசுறவேம்
பக்கம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாங்றாப்புல மாதிரிக்கும்லா வழுக்குனாப்புல பேசிட்டு
நிக்குறீங்க! நில்லுங்க அந்தக் கெதிக்கெ நில்லுங்க!"ன்னு சொல்லிட்டு எந்த வெதமான
பதிலையும் எதிர்பார்க்காம டிவியெஸ்ஸோட பெடலைச் சுத்துனாரு சுப்பு வாத்தியாரு. டர்டர்ன்னு
சத்தம் வந்ததும் வண்டிய கெளம்பிட்டாரு சுப்பு வாத்தியாரு.
இப்போ எல்லாத்துக்குள்ளயும் ஒரு மனச்சுழல்
சுத்த ஆரம்பிச்சிட்டது. தப்பு நடக்குறாப்புலயும் தெரியுது, நடக்காத மாதிரியும் தெரியுது.
வெளியில மாமாங்காரன் சொல்றதெ கேக்குறதுக்கு வெளியில வந்த கூட்டம், அப்பங்காரரு சொல்றதெ
கேக்க உள்ள ஓடினுச்சு.
"ன்னப்பா மாமா இப்பிடிச் சொல்லிட்டுப்
போவுது? நீயி அப்பிடியே உக்காந்திருக்குறே? நாஞ்ஞளும் சென்னைப் பட்டணத்துலேந்து வந்தது
வந்துட்டோம். வந்ததுக்கு ஒரு வேல முடிஞ்சாப்புல ஆவுது. இவ்வளவு மாமா பேசிட்டுப் போன
பெற்பாடு போவலன்னா மாமாவுக்கு கோவந்தாம் வரும். அதுக்கு இப்பவே ன்னா கோவம் வருது?
வருது ன்னா வருது, கோவம் வந்துட்டு! வாயிக்கு வந்தப்படி பேசிட்டுப் போவுது. போயி
ஒரு எட்டுத் தலையக் காட்டிப்புட்டு வந்துப்புடுறோம்ப்பா!"ன்னுச்சு கார்த்தேசு
அத்தான்.
"ஆமாம்ப்பா! பெரிப்பாவுக்காக போவல.
மாமாவுக்காக போயித்தாம் ஆவணும்!"ன்னுச்சு தாசு அத்தான்.
"அவரு வாத்தியாரு! பெரியவங்கன்னா
பெரியவங்க போல இருங்கன்னு வேற சொல்லிப்புட்டாரு. இப்போ குடும்பத்துலேந்து யாரும்
போவலன்னா ஊருல ஒரு மாரில்லா பல மாரியாத்தாம் பேசுவாம். அந்தளவுக்கு ஒவ்வொருத்தனும்
வந்து கூப்புட்டுப் பாத்துட்டாம். நாளைக்கு நல்லது கெட்டதுன்னா ஒரு பயெ எட்டிப் பாக்க
மாட்டாம். ஒரு பய தவயும் தேவையில்லன்னு எத்தனெ நாளுக்கு இருக்க முடியும்? நாஞ்ஞளும்
மணமங்கலத்துலேந்து வந்தது வந்தாச்சு. போயிட்டு வந்துப்புட்டா நாளைக்குத் தேவையில்லாம
ஒரு கேள்வி எழும்பாமப் போயிடும்!"ன்னாரு கண்ணாடிதாசு அத்தானும்.
பாத்தாரு வேலங்குடி சின்னவரு. "நாம்ம
வந்தா அத்துச் செரிபட்டு வாராது. பெறவு அவ்வேம் நல்லவம்ன்னு ஆயிடும். வர்றாம இருந்தாத்தாம்
கெட்டப் பயலுக, கண்ட கண்ட பயலுக சாவுக்கல்லாம் வர்ற மாட்டாம் கிட்டான் ஆச்சாரின்னு
பேரு இருக்கும். கருமத்தெ செத்துத் தொலைஞ்சிட்டாம் நாயீப் பயெ. அவ்வேம் செத்து நம்மள
நாறடிக்கிறாம் நாதாரிப் பயெ. தொலைஞ்சது தொலைஞ்சாம். அவனெ அஞ்ஞயே சென்னைப் பட்டணத்துலயே
வெச்சி எங்காச்சிம் பொதைச்சுத் தொலைய வேண்டித்தானே. வேல மெனக்கெட்டு வேலங்குடிக்குக்
கொண்டாறானுவோ வேலையத்தப் பயலுவோ. அம்மாம் பவுசு கேக்குதுடா யம்பீ! இஞ்ஞ வந்து பொதைச்சாத்தாம்
கெளரவம்ன்னு நெனைக்குறானுவோ! அப்பத்தானே நாம்ம வரலன்னு ஊருல கதையக் கட்டி வுட்டு நம்மள
நாறடிக்கலாம்! அவ்னுவோ சதிகார வேலைக ஒஞ்ஞளுக்குப் புரியாதுடாம்பீ ஆம்மா பாத்துக்கோ!
அவனெ சின்ன வயசுலேந்து பாத்து வளந்தவேம் நாம்ம. நம்மகிட்டயே செத்தும் ன்னா பூச்சாண்டி
வேலையக் காட்டறாம் பாரு. அத்து கெடக்கட்டும். கருமத்தெ தலைய முழுவுத் தொலைக்குறதுக்காவது
யாராச்சிம் போயித்தாம் தீரணும். நாம்ம வூட்டுல இருக்கேம் வூட்டப் பாத்துக்கிட்டு.
கெளம்புறவங்க கெளம்பிப் போயிப் பாத்துட்டு போனது வந்ததுமா வந்துப்புடுங்க. வந்தச்
சோவடோ, போன சோவடோ தெரியப்படாது பாத்துக்கோ. நீஞ்ஞப் போயிட்டு வாரதுல எதாச்சிம்
ஒண்ணுகெடக்க ஒண்ணு நடந்துச்சுன்னா ஒஞ்ஞளயும் ச்சும்மா வுட மாட்டேம்! ஒம்மட மாமாங்காரளையும்
ச்சும்மா வுட மாட்டேம்!"ன்னு சின்னவரு சொன்னதும், என்னவோ போயிட்டு வர்றதுக்கு
கேட் பாஸ்ஸ போட்டுக் கொடுத்ததா நெனைச்சுக்கிட்டு ரசா அத்தை உட்பட எல்லாமும் கெளம்பிடுச்சுங்க.
இதெ சின்னவரு எதிர்பார்க்கல.
"ஓகோ கதெ அப்பிடிப் போவுதா?"ன்னு
சொல்லிட்டு நாற்காலியில உக்காந்தபடியே ஆவ்ன்னு ஒரு ஏப்பத்தெ வுட்டாரு. ஒவ்வொருத்தரும்
கெளம்பிப் போறதெ வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்தாரு சின்னவரு. யாராச்சிம் தனக்குத்
தொணையா இருப்பாங்கன்னு பாத்தாரு. ஒருத்தரும் இல்ல. பொடிசு பொட்டு உட்பட எல்லாமும்
கெளம்பிடுச்சுங்க. "செரி! எல்லாம் போயி அசிங்கப்பட்டு வாரட்டும்! எல்லாத்துக்கும்
போவணும்னுத்தாம் ஒரு நெனைப்பு இருக்கும் போலருக்கு. அதெ கணக்குப் பண்ணாம வுட்டுப்புட்டேனே?
இப்பிடிப் பேசுனா செரித்தாம் நீஞ்ஞ வெசனப்படுறப்போ ஏம் போயிட்டுன்னு ஒரு வார்த்தெ
வந்து அடங்கிப்புடும்னு பாத்தா எல்லாம் கதவெ எப்போ தெறப்பாம்? வூட்டெ எப்போ காலி
பண்ணுவோம்ன்னுல்ல இருந்திருக்கு. இத்து தெரியாம போச்சே? ச்சேய்!"ன்னு மனசுக்குள்ளயே
கருவிக்கிட்டாரு சின்னவரு.
*****
No comments:
Post a Comment