செய்யு - 455
சுப்பு வாத்தியாரு டிவியெஸ்ஸ கெளப்பிக்கிட்டுச்
சின்னவரு இருக்குற ராயநல்லூரு சுவாதி அத்தாச்சி வூட்டுக்குப் போனாரு. போனா அங்க சென்னைப்
பட்டணத்துலேர்ந்து கார்த்தேசு அத்தான், நீலதாட்சி அத்தாச்சி, தாசு அத்தான், மணங்கலத்துலேந்து
தேவி அத்தாச்சி, தேவி அத்தாச்சியோட புருஷன் கண்ணாடிதாசு எல்லாம் ஒண்ணா உக்காந்திருக்காங்க.
சுப்பு வாத்தியாரு பெரியவரு துக்கத்துக்கு வர்றப்போ ராயநல்லூர்ல தலையக் காட்டுனப்போ
இவ்ளோ கூட்டம் இல்ல. சின்னவரு, ரசா அத்தை, சுவாதி அத்தாச்சின்னு மூணு பெரிசுங்கத்தாம்
இருந்துச்சுங்க. அதுக்குப் பெறவு இவுங்க எல்லாம் பெரியவரோட சாவு சேதி கேள்விப்புட்டுப்
பொறப்பட்டு வந்திருக்கணும். எல்லாரும் ஒண்ணா கெளம்பி துக்கத்துக்குப் போயித் தலையக்
காட்டிப்புட்டு வந்துபுடலாம்ன்னு சுவாதி அத்தாச்சி வூட்டுல உக்காந்திருக்கணும். அதெப்
பாத்ததும் சின்னவராலத்தாம் காரியம் தடைபடுதுங்றதெ புரிஞ்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
போனோமா, கெளப்புனோமான்னு காரியம் முடிஞ்சிடும்னு நெனைச்சிட்டு வந்த சுப்பு வாத்தியாருக்கு
ஒரு மாபெரும் உரையாடல நிகழ்த்த வேண்டியதாயிடுச்சு.
"காலங்காத்தால வூட்டுப்பக்கம் தலையக்
காட்டுனப்பவே சொல்லிட்டுத்தான வந்தேம் யத்தாம்! வந்துத் தலையக் காட்டிட்டுப் போயிடுங்கன்னு.
நடுவூட்டுல பிரேதத்தப் போட்டுட்டு எம்மாம் நேரம் நீஞ்ஞ வருவீங்களா மாட்டீங்களான்னு
உக்காந்திருக்கிறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யில்ல யம்பீ! அத்து நமக்குச் சுத்தப்பட்டு
வாராது. நமக்காக எந்தக் காரியமும் காத்திருக்க வாணாம். நம்மாள எதுவும் நின்னு போவவும்
வாணாம். ஆவ வேண்டிய காரியத்தெ பாருங்க யம்பீ!"ன்னாரு சின்னவரு.
"என்னத்தாம் பேசுதீயே? ஒஞ்ஞளுக்காக
அஞ்ஞ வேல மெனக்கெட்டு உக்காந்திருந்தா, இப்பிடி பொறுப்பத்தத் தனமால்ல வார்த்தையெ வுடுறீங்க!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ஒடைஞ்சது ஒடைஞ்சதுதாம். விரிசல்
வுழுந்தது வுழுந்ததுதாம். வெலகுனது வெலகுனதுதாம் யம்பீ!"ன்னாரு சின்னவரு.
"ஊர்ல வந்து வேற கூப்புட்டுருக்காங்க.
இப்ப நாம்ம வேற வந்து கூப்புடறேம். நம்ம ஒறவுக்கார சனங்களும் வந்து பேசாம இருந்திருக்க
மாட்டாங்க. இதுக்குப் பெறவும் நீஞ்ஞ வரலன்னா அத்து வீம்புக்கு இருக்குற மாதிரி ஆயிடும்
யத்தாம். வறட்டுக் கெளரவம்ன்னு கேட்டப் பேரு ஒஞ்ஞளுக்குத்தாம்!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"அவ்வேம் தம்பீயா அவனுக்கு நாம்ம
பொறந்த நாள்லேர்ந்து கெட்ட பேருதாங். இன்னிக்கு ன்னா புதுசா வந்துடப் போவுது? ஊர்ல
கேட்டுப் பாருங் மைக்கா ஆச்சாரின்னா எப்பிடின்னு? கிட்டான் ஆச்சாரின்னா எப்பிடின்னு?
பழக்க வழக்கத்திலயும் செரி, வேலையிலயும் செரி ச்சும்மா நூலெடுத்தாப்புல இருக்குற ஆளுன்னு
பாக்குறவங் சொல்வாம். அப்பேர்பட்ட ஆளு அண்ணங்கார்ரேம் அந்தக் கழிசடப் பயெ துக்கத்துக்குக்
கூட போவமா உக்காந்திருக்கார்ன்னா ன்னா காரணங்றதெ இதெ கேள்விப்படுறவங்கப் புரிஞ்சிப்பாங்க!"ன்னாரு
சின்னவரு.
"யத்தாம்! நாம்ம இந்த ஒண்ணுக்காக,
இதுக்காக மட்டும் சொல்லல. இன்னிக்கு இத்து
ஒரு சம்பவம். நடந்து முடிஞ்சிடும். நாளைக்கி நெலமைய நெனைச்சிப் பாருங்க! அஞ்ஞத்தாம்
எல்லாம் வந்து இடிக்கும். ரண்டு புள்ளைகள, மூணு பெண்ணுகளப் பெத்து வெச்சிருக்கீங்க.
அண்ணன் தம்பியோ எப்பிடி இருக்கணுங்றதெ நீஞ்ஞ நடந்துக்கிடறதெப் பாத்துதாங் அவுங்கப்
புரிஞ்சிக்கிடணும். நல்லதுல தொணை நிக்கலைன்னாலும், கெட்டதுல தொணை நின்னாவணும். தப்பான
ஒரு பாடத்தெ ஒஞ்ஞ புள்ளீயோளுக்கு காட்டிப்புடாதீங்க. அத்து நல்லதுக்கில்லே! தப்பான
முன்னுதாரணமாப் போயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நம்மப் புள்ளீயோல்லாம் அப்பிடிக்
கெடையாதும்பீ! வளர்ப்பு அப்பிடி. எப்பிடி இருக்கணுங்றதெ கதெ கதெயா சொல்லி வளத்துருக்கேம்.
ராமன் லட்சுமணம் மாதிரி. ராவணன் விபீசணன் மாதிரிக்கி கெடையாது. யாருகிட்டெ வந்து? பாத்தீங்களே
யில்லே. துக்கத்துக்குப் போவுறதா வாணாங்றதெ கேட்டுட்டு இந்நேரம் வரைக்கும் நாம்ம சொல்ற
வார்த்தைக்கிக் கட்டுப்பட்டு நிக்குது புள்ளீயோ. அதாங் புள்ளீயோங்றது. இந்தோ பாத்தீங்களே!
நாம்ம பேசிட்டு இருக்கேமே, ஒரு புள்ளீயோளாவது குறுக்கால பூந்துப் பேசுதா பாருங்கங்றேம்?
யப்பாவும் மாமாவும் பெரியவங்க. அவுங்க பேசுறப்போ ஊடால பூரக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டு
உக்காந்திருக்காதெ கண்ணால பாருங்கங்றேம். வளப்பு அப்பிடிம்பீ! நீஞ்ஞ நெனைக்குறாப்புல
போயிடாது!"ன்னாரு சின்னவரு.
"காலம் இப்பிடியே போயிடும்ன்னு நெனைச்சிடக்
கூடாது யத்தாம்.காலம் எப்பிடி வாணாலும் மாறிடலாம். அப்பிடி மாறுறப்போ நம்ம பத்தின
ஒரு எண்ணம் மறுக்கா உண்டாவத்தாம் செய்யும். அந்த எண்ணம் உண்டாவுறப்போ நம்மளப் பத்தி
யாரும் தப்பா நெனைச்சிப்புடக் கூடாது. நாம்ம நடந்துப் போயிருக்கிற பாதெ தப்பா தெரியக்
கூடாது. புள்ளீயோ ஒவ்வொண்ணும் ஒஞ்ஞப் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நிக்குதுன்னா நம்ம
யப்பா தப்பா சொல்லாது, செய்யாதுங்றதெ நம்பிக்கையிலத்தாம். அந்த நம்பிக்கையெ நாம்ம
காப்பாத்திக்கணும். இன்னிய தேதிக்கு இத்து வேணா தப்பா தெரியாம இருக்கலாம். நாளையத்
தேதிக்கும் அப்பிடியே தெரியணுமாக்கும். அஞ்ஞத்தாம் பெரச்சன உண்டாவும். புள்ளீயோ ஒஞ்ஞ
மேல உள்ள நம்பிக்கையெ காப்பத்தணும்ன்னா செரியா நடந்துக்கிடறதுதாம் நல்லது. ஒரு விசயத்தெ
தெரிஞ்சிக்குங்க இன்னிக்குக் கடந்துப் போற காலத்தெ நாளைக்கி எம்மாம் மெனக்கெட்டாலும்
திரும்பக் கொண்டார முடியாது. போனது போனதுதாங். நடந்தது நடந்ததுதாங். அதெ மாத்த முடியாது.
மாத்தி எழுத முடியாது. காலங் கொடுக்குற கடெசீ வாய்ப்பு. இப்போ வர்லன்னா எப்பயும்
வர்லறத்தாம். நாளை பின்னே மாத்த முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"வாஸ்தவம்ந்தாம் யம்பீ! ஒஞ்ஞ நெலையில
நின்னு ஒஞ்ஞளுக்கான மனோதர்மத்தெ பேசுதீயே. தப்புன்னு சொல்ல மாட்டேம். நாளைக்கி நம்மட
மச்சாங்கார்ரேம் செரியாத்தாம் சொன்னாருங்றதெ யாராலயும் மாத்த முடியாது. அதெ ஒத்துக்கிடறேம்.
வார்ற முடியாதுன்னு சொல்றதுக்குப் பின்னாடி மானம் மருவாதின்னு ஆயிரத்தெட்டு விசயம்
இருக்கு. ஒஞ்ஞ வயசுக்கு அத்துப் புரியாது. வெளக்கவும் முடியாது. ஒஞ்ஞள வுட வயசுல மூத்தவேம்.
பேரம் பேத்தி வரைக்கும் பாத்தவேம். அம்புட்டுத்தாங் சொல்லுவேம்! புரிஞ்சிக்கிடணும்!"ன்னாரு
சின்னவரு.
"வர்றதும் வராமா இருக்குறதும் ஒஞ்ஞ
தனிப்பட்ட விசயந்தாம். ஒஞ்ஞ தனிப்பட்ட விசயத்துல குறுக்கிடறதா நெனைச்சிப்புடக் கூடாது.
அதெ நேரத்துல சாவு காரியத்துக்கு வந்துப்புட்டுப் போறதால மான, மருவாதிக் கெட்ட கதையெ
ஒஞ்ஞள வுட வயசுல சின்னவனா இருந்தாலும் நாம்ம அறிஞ்சுக் கேட்டதில்ல. வர்றதால மான மருவாதிங்றது
இன்னும் கூடுமே தவுர கொறையப் போறதில்ல. வர்றதால யாரும் ஒஞ்ஞ தலைய வாங்கிடப் போறதில்லே.
கையி, கால வாங்கிடப் போறதில்லே. கண்ண புடுங்கிடப் போறதில்ல. காதெ பிய்ச்சி எடுத்துடப்
போறதில்லெ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"செரித்தாம் யம்பீ! ஒஞ்ஞ கருத்துப்படி
வர்றேம்ன்னே வெச்சுக்குங்க! அவ்வேம் சந்தானம் எதாச்சும் கேக்க மாட்டாங்றதுக்கு ன்னா
நிச்சயம்? அத்தெ வுடுங்க யம்பீ! ஆத்துரத்துல ஒண்ணு ரண்டு வார்த்தைய கேட்டுப்புட்டாம்ன்னு
வுட்டுப்புடலாம். அந்தக் கொமாரு பயெ இருக்கானே. அவ்வேம் ஓடியாந்து அடிச்சிட மாட்டாம்ங்றதுக்கு
ன்னா நிச்சயம்? அப்பிடி ஒரு பொடிப்பயெ நம்மள அடிச்சிப்புட்டா இத்தனெ நாளு வேலங்குடியில
சேர்த்து வெச்ச மான மருவாதி என்னாவதுங்றேம்? புரியாம பேசப்படாது யம்பீ!"ன்னாரு
சின்னவரு.
பெரியவரு செத்த துக்கத்துலயும், சின்னவரோட
வீம்ப நெனைச்சு வெறுப்புலயும் இருந்த சுப்பு வாத்தியாரு சிரிச்சிட்டாரு. "அதாங்
ஒஞ்ஞ பயமாத்தாம் யத்தாம்! அப்பிடில்லாம் ஒண்ணும் நடக்காது. எல்லா பயலுகளும் நாம்ம தூக்கி
வளத்தப் பயலுவோ. ஏங் ஒஞ்ஞ கையாளயும் தூக்கி வளந்தப் பயலுவோதாங். அப்பிடில்லாம் பண்ணக்
கூடிய தெகிரியம் கெடையாது. அதாங் பெரச்சனைன்னா யோஜிக்காதீங்க யத்தாம் கெளம்புங்க!
ஒரு எட்டு வந்துட்டு மறு எட்டுல திரும்பிடுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"என்னாம்பீ! நாம்ம எம்மாம் பெரிய
வெசயத்தச் சொல்றேம்? நீஞ்ஞ ன்னான்னா சிரிச்சிக்கிட்டு அசால்ட்டா அத்தெல்லாம் ஒண்ணும்
நடக்காதுங்றீங்க. அந்தப் பயலுகள நீஞ்ஞ தூக்கி வளத்திருக்கலாம். நாம்ம வ்வே... தொட்டுக்
கூட பாத்தது கெடையாது. அம்புட்டும் வெஷம்ங்க. ஒஞ்ஞளுக்குப் புரியாது. நீஞ்ஞ வெளுத்ததெல்லாம்
பாலுன்னு நெனைக்குற ஆளு. புளிச்சதெல்லாம் தயிருன்னு நெனைக்குற ஆளு. ஒஞ்ஞ வழியிலயே வர்றேம்.
நீஞ்ஞ சொல்றாப்புல நடக்கலன்னா நல்லதுதாங். நடந்துட்டுன்னா நீஞ்ஞ சொல்றாப்புல அதெ
கதைதாங். காலத்தெ மாத்தி எழுத முடியாதுங்ற மாதிரிக்கி இதையும் மாத்தி எழுத முடியாது.
காலத்துக்கு மின்னாடி பின்னாடி போயி நடந்துப் போனதெ திருத்தி வைக்க முடியாது. இதென்ன
நீஞ்ஞ புள்ளீயோளுக்கு வைக்குற பரீட்சைன்னு நெனைச்சுக்கிட்டீங்களா அடிச்சித் திருத்தி
எழுத? வாழ்க்கைப் பரீட்சைங்கம்பீ! எழுதுனா எழுதுனதுதாங். இந்தாருங் யம்பீ! அப்பங்காரனான
நாம்ம அடிபட்டா புள்ளீயோ ச்சும்மா இருக்க மாட்டாங்க ஆம்மா! பெரிய ரகளையா போயிடும்!
கலவரமா ஆச்சுன்னா ஊருக்காரு பயலுவோ அதெ வேடிக்கைத்தாம் பாப்பானுங்களே தவுர தணிச்சி
வுட மாட்டானுவோ. இத்து நம்ம அனுபவத்துல கண்டது. அநாவசியமா வெளையாட நெனைக்காதீங்க!"ன்னாரு
சின்னவரு.
"ச்சும்மா கற்பனையில பீதியக் கெளப்பாதீஞ்ஞ
யத்தாம்! அப்பிடி ஆவுறதுக்கு நம்ம வுட்டுப்புடுவோமா? ஊருக்காரவோத்தாம் வுட்டுப்புடுவாங்களா?
துக்க வூட்டுக்குப் பகையாளியோ வந்தாலும் செரித்தாம், சென்ம விரோதியோ வந்தாலும் செரித்தாம்
வந்துப் பாத்துட்டுப் போறதெ யாராலும் தடுக்க முடியாது. செத்தவங்க மொகத்தப் பாக்க
யாரும் எதுவும் சொல்லப் போறதில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"வெவகாரம் புரியாம வெனைய வெலைக்கு
வாங்க நெனைக்குறீங்க யம்பீ! ஒஞ்ஞ வெளையாட்டுல சிக்கி சின்னாபின்னபட நாம்ம தயாரா யில்லே!
நம்மட வூட்டுப் புள்ளீயோளுக்கு நீஞ்ஞ தாய்மாமனா இருக்கலாம். ஒஞ்ஞ வூட்டுப் புள்ளைக்கி
நாம்ம மாமனா இருக்கேங்றதெ மறந்துப்புடக் கூடாது. ஒஞ்ஞளுக்கு யத்தான், ஒஞ்ஞ யக்காவுக்குப்
புருசங்றதெ மறந்துப்புடப் படாது. முடிவுன்னு வாரப்போ மூத்தவங்றெ மொறையில நாம்ம எடுக்குறதுதாங்.
அதுக்கு நீஞ்ஞளும் கட்டுப்பட்டுத்தாம் ஆவணும்!"ன்னாரு சின்னவரு.
"நல்ல முடிவுன்னா கட்டுப்படலாம்.
காலச் சுத்திக்கிட்டுக் கெடக்கலாம். தப்பான முடிவுன்னா வயசுல மூத்தவங்கன்னாலும் தப்புன்னு
சொல்லித்தாம் ஆவணும். எத்துச் சரியோ அதெத்தாம் நாம்ம சொல்ல முடியும். நீஞ்ஞ வயசுல
எம்மாம் பெரிசா இருந்தாலும் இருந்துட்டுப் போங்க. நம்மள வுட பத்து பாஞ்சு வருஷம் ஒலகத்தெ
மின்னாடிப் பாத்ததால நீஞ்ஞ பெரியவங்களாயிட முடியா. யாரு சரியான மனோதர்மத்துக்குக்
கட்டுப்படுவாங்களோ அவுங்கத்தாம் பெரியவங்க. நாம்ம சொல்றது காலத்துக்குமான குடும்ப
தர்மம். நெலையான சமூக தர்மம். காலம் குத்த சொல்ல முடியாத மனோ தர்மம். இத்தெ ஏத்துக்கிறதும்
ஏத்துக்கிடாம இருக்குறதும் நீஞ்ஞளா வகுத்துக்குற தப்பான தர்மம். இதெத் தாண்டி நாம்ம
வெறொண்ணும் சொல்றதுக்கில்ல. நேரம் ஆயிட்டு இருக்குது. இப்பவே நாம்ம வந்து முக்கா
மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். அஞ்ஞ நம்மள எதிர்பாத்துட்டு இருப்பாங்க. இனுமே ஒஞ்ஞள
வாங்கன்னு சொல்ல மாட்டேம். வர்றதா, வராம இருக்குறதாங்றது நீஞ்ஞ எடுக்குற முடிவுத்தாம்.
அத்து நீஞ்ஞ எடுக்குற முடிவு. அதுக்கு நீஞ்ஞத்தாம் பொறுப்பு. பின்னாடி நேர்ற வெளைவுக்கும்
சங்கதிக்கும் நீஞ்ஞத்தாம் நேரடியா பொறுப்பேத்துக்கணும். ஒஞ்ஞ காலம் முடிஞ்சுப் போச்சு.
நாளைக்குப் பங்காளியாளோ கூட மாட கெடந்து ஒருத்தருக்கொருத்தரு ஒத்தாசையா இருக்கப்
போறது இளஞ்செட்டுக்கத்தாம்! அவுங்க மனசுல வெசத்தெ அள்ளித் தெளிச்சிப்புடாதீங்க. சொல்ல
வேண்டியதெ சொல்ல வேண்டியதுக்கு அதியமாவே சொல்லிட்டேம்! இதுக்கு மேல நாம்ம சொல்றதுக்கில்ல,
அத்தோட அதெ நீஞ்ஞ கேக்குறதுக்கில்லன்னா சத்தியமா யத்தாம் நம்மாள ஒண்ணும் சொல்றதுக்கில்ல!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
சின்னவருகிட்டேயிருந்து எந்த அசைவும் இல்ல.
வாயை மூடிக்கிட்டாரு. சுப்பு வாத்தியாரு ஒடனே அக்காக்காரியான ரசா அத்தையப் பாத்து பேச
ஆரம்பிச்சாரு.
"இந்தாரு யக்கா! எல்லாத்துக்கும்
சேத்துத்தாம் பேசிருக்கேம். நீஞ்ஞ வாயை மூடிட்டு உக்காந்திருக்கிறதால ஒஞ்ஞளுக்குச்
சொல்லாம வுட்டதா ஆவாது. மேக்கொண்டு யத்தானுக்கு எடுத்துச் சொல்றதும், எடுத்துச்
சொல்லாம இருக்குறதும் நீஞ்ஞ முடிவு பண்ண வேண்டியது. அவர்ர காரணமா வெச்சிக்கிட்டு நீஞ்ஞ
வராம இருக்குறதும், யில்ல வந்துட்டுப் போறதும் பத்தி நாம்ம சொல்றதுக்கு ஒண்ணுமில்லே.
ஒருவேள இந்த வெசயத்து நீஞ்ஞ யத்தாம் மேல பழியப் போட்டு நாளைக்கி வர்றப் போற சொல்லுக்கு
எடமில்லாம பண்ணிடலாம். ஆன்னா நீஞ்ஞ யத்தானுக்கு யாரும் எடுத்துச் சொல்லலையாங்ற சொல்லுலேந்து
யாரும் தப்பிச்சிட முடியாது. யத்தாம் வர்றாரு வரலே. யிப்போ அத்து ஒரு பெரச்சனையா நமக்குத்
தெரியல. குடும்பத்துலேந்து யாராச்சிம் ஒருத்தராச்சிம் வரலன்னா அதனால உண்டாவுற பெரச்சனைக்கு,
பிரிவினைக்கு நாளைக்கு யாரையும் எந்தக் கொறையும் சொல்லிடக் கூடாது. நாம்மதாம் வாரல,
நம்மள தூக்கிக் கொண்டு போயி ஏங் காட்டலன்னுல்லாம் பேச்சு வாரப்படாது. அடம்புடிக்கிறது
கொழந்தைய மல்லுகட்டி திருவிசாவுக்குக் கூப்புட்டுப் போற சங்கதியல்ல இத்து. திருவிசா
வருஷா வருஷம் நடக்கும். இந்த வருஷம் தூக்கிட்டுப் போவலன்னா, போவாம இருந்தான்னா மறுக்கா
மறு வருஷம் போவலாம். சாவுங்றது ஒரு மொறை. நீஞ்ஞ பண்ற பிடிவாதத்துக்கு, வறட்டுத் தனத்துக்குல்லாம்
வருஷ வருஷம் மனுஷன் செத்துக்கிட்டு இருக்க மாட்டாம்! அவ்வளவுதாங் சொல்ல வேண்டியதெ
சொல்லிட்டேம். இதுக்கு மேல சொல்ல இனுமே நேரமும் யில்ல. நம்மகிட்ட தெராணியும் யில்ல!"
அவ்வளவுதாங் சொன்னாரு சுப்பு வாத்தியாரு. வெட வெடன்னு கெளம்பி வெளியில வந்தாரு.
கார்த்தேசு அத்தான், தாசு அத்தான், கண்ணாடிதாசு
அத்தான் எல்லாம் பதறியடிச்சுக்கிட்டு சுப்பு வாத்தியாரோடு வெளியில ஓடியாந்துச்சுங்க.
"மாமா! மாமா! நில்லுங் மாமா!"ன்னு
சத்தம் போட்டுச்சுங்க.
டிவியெஸ்ஸ கால மிதிச்சி ஸ்டார்ட் பண்ணுற
நெலையில போயி நின்னாரு சுப்பு வாத்தியாரு.
*****
No comments:
Post a Comment