செய்யு - 435
உடுத்த கொள்ள துணிமணிகள எடுத்துட்டு ஒத்தையா
தனம் அத்தாச்சி வாரப்பவே வெங்குவுக்குப் புரிஞ்சிடுச்சு. ஏதோ ஒரு பெரச்சனையாயித்தாம்
தனம் அத்தாச்சிய அழைச்சிட்டு வாரத சுப்பு வாத்தியாரும் வெங்குகிட்டெ சொல்லல. வெங்குவும்
அதைக் கேட்டுக்க விரும்பல. அவரு வேற வெதமா சொன்னாரு. "சந்தானத்துக்கு அவசரமா
சென்னைப் பட்டணத்துல வேலயாம். அவசரமா கெளம்ப வேண்டியிருந்துச்சு. அதாங் கொண்டாந்து
வுட முடியல. அஞ்ஞ போன நம்மகிட்டெ சொல்லி இஞ்ஞ அனுப்பி வுட்டுச்சு. அதுக்கென்ன நம்ம
வூட்டப் பொண்ண கொண்டாந்துதாம் வுடணுமா? நாமளே அழைச்சிட்டுப் போறேம்ன்னு அழைச்சிட்டு
வந்துட்டேம். இஞ்ஞ கெராமத்துலயே வளந்தப் பொண்ணு. அதுக்கு அஞ்ஞ சென்னைப் பட்டணம் ஒத்து
வாரமா செருமப்படுது போலருக்கு. கொஞ்ச நாளு இஞ்ஞ அஞ்ஞன்னு இருந்தா கொஞ்சம் மனசு சரியாவும்
பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதுக்கென்ன? இப்போ யாரு என்ன சொன்னா?
தாராளமா மனசு சரியாவுற வரைக்கும் இருந்துட்டுப் போவட்டும்!"ன்னுச்சு வெங்கு.
இதுல மேக்கொண்டு வெவகாரம் இருக்குங்றது தெரிஞ்சாலும் வெங்கு அதைத் தாண்டி அப்போ வேற
எதையும் வெசாரிக்கல. அதுவா ஒரு நாளு வெவகாரம் தானா வெளியில வரும்ன்னு இருந்துடுச்சு.
திட்டையில சுப்பு வாத்தியாரு வூடு ஒரு
சொதந்திரமான வூடு. யாரு எத்தனெ மணி வரைக்கும் வேணும்னா தூங்கலாம். முடிஞ்சா வேலையப்
பாக்கலாம். வேலைப் பாக்க பிடிக்கலன்னா பிடிச்சதெப் பண்ணிக்கிட்டுக் கெடக்கலாம். இப்படி
ஒரு சூழ்நெலை தனம் அத்தாச்சிக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. இங்க சுப்பு வாத்தியாரு
வூட்டுலயே காலம் போனுச்சு தனம் அத்தாச்சிக்கு. வேலங்குடியிலேந்து யாரும் வருவாங்க,
வந்து சமாதானம் பேசுவாங்கன்னு பாத்தா ஒருத்தரும் வாரல.
அங்க வேலங்குடியில பெரியவரு, "நாம்ம
கொண்டுப் போயி வுடல. அழைச்சிட்டு வாரணும்னு எந்த அவசியமும் யில்ல. அழைச்சிட்டுப்
போனவங்கங்த்தாம் அழைச்சிக் கொண்டாந்து வுடணும். வுட்டா பாப்போம். யில்லன்னா அஞ்ஞயே
கெடக்கட்டும்!"ன்னு பேசுறதா திட்டையில சுப்பு வாத்தியாரு காதுக்கு சேதி வருது.
அவரு எதைப் பத்தியும் கவலைப்படாம எத்தனை நாளு வேணும்னாலும் இங்க இருக்கட்டும்ன்னுட்டாரு.
அந்தக் காலம்ன்னு பாத்தா சரியா சுப்பு
வாத்தியாரு டிவியெஸ்ஸூ பிப்டியை வாங்குன காலகட்டம். செரிதாம் புதுசா வாங்குன வண்டி
வாங்கி ரெண்டு மூணு மாசம் ஓடியிருக்கும். அதெ காட்டிப்புட்டு அப்பிடியே சென்னைப் பட்டணத்துலேந்து
வந்திருக்குற சந்தானம் அத்தானோட பேசிட்டு வருவோம்ன்னுத்தாம் சுப்பு வாத்தியாரு வேலங்குடி
கெளம்பிப் போனது. அப்பிடிக் கெளம்பிப் போறப்பத்தாம் இப்பிடி ஒரு சம்பவம் நடந்து,
காட்டலாம்ன்னு போன வண்டிய காட்ட முடியாம, அந்த வண்டியில தனம் அத்தாச்சிய ஏத்திட்டு
வர்றாப்புல ஆயிடுச்சு. நடந்த சண்டையிலயும், பெரச்சனையிலயும் இவரு டிவியெஸ்ல வந்ததையும்,
போனதையும் யாரும் கவனத்துல வெச்சிக்கிக்க முடியாம போயிடுச்சு. அப்போ விகடு மணமங்கலம்
பள்ளியோடத்துல பத்தாவதும், செய்யு திட்டையிலயும் ரெண்டாவதும் படிச்சிட்டு இருந்த கால
கட்டம் அது.
அது என்னவோ தனம் அத்தாச்சிக்குச் சுப்பு
வாத்தியாரு வூட்டுக்கு வந்ததும் பொறந்த வூட்டுக்கு வந்தது போல ஒரு உணர்வு உண்டாயிடுச்சு.
அது பாட்டுக்குக் காலாங் காத்தாலயே யாரும் எழுப்பி வுடாமலே எழும்புது. வூட்டு வேலைகள
அது பாட்டுக்கு இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யுது. வெங்குவுக்கு அப்பாடா நமக்குக்
கொஞ்ச நாளைக்கு எந்த வேலையும் இல்லன்னு ரொம்ப வசதியாப் போச்சுது.
தனம் அத்தாச்சியப் பத்திச் சொல்லணும்ன்னா
அசைவம் சமைக்குறதுல தனம் அத்தாச்சியோட கைப்பக்குவமே தனி. அதுவும் கோழிக்கொழம்பு
வெச்சா அசைவம் சாப்புடாதவங்க கூட ஒரு பிடி பிடிக்குற மாதிரி இருக்கும். ஆட்டுக்கறி
கொழம்ப கூட யாரு வெச்சாலும் சாப்புட்டுப் புடலாம். கோழிக்கறிக் கொழம்ப அதுக்குன்னு
பக்குவம் தெரிஞ்சவங்க வெச்சத்தாம் வாயில வைக்க முடியும். ஒருவேள வாயில வைக்க முடிஞ்சாலும்
மறுநாளு வவுத்து வலியிலயோ, வயித்தால போறதுலயோ கொண்டு போயி விட்டுடக் கூடாதுன்னா
அதெ மொறை தெரிஞ்சவங்க வெச்சத்தாம் நல்லது. அதுவும் அப்போ எல்லாம் நாட்டுக்கோழிங்க.
மொறையாவும், பக்குவமாவும் வெச்சிச் சாப்புட்டா ஒடம்புக்கு உண்டாவுற பெலமும், ஒடம்பு
இருக்குற நெலையும் தனிதாம். அதுல தனம் அத்தாச்சிய அடிச்சிக்க முடியாது.
பொதுவா ஞாயித்துக் கெழம வந்தா திட்டையில
சுப்பு வாத்தியாரு வூட்டுல மத்தியானச் சாப்பாடு அசைவச் சாப்பாடாத்தாம் இருக்கும். மாசத்துல
வர்ற நாலு ஞாயித்துக் கெழமையிலயும் ஒவ்வொரு ஞாயித்துக் கெழமைக்கும் வகை பிரிச்சிச்
சாப்பாடு நடக்கும். ஒரு ஞாயித்துக் கெழமெ ஆட்டுக்கறிக் கொழம்புன்னா, இன்னொரு ஞாயித்துக்
கெழமெ கோழிக்கறிக் கொழம்பா இருக்கும். வேற ஒரு ஞாயித்துக் கெழம மீனு கொழம்பு, மத்த
ஒரு ஞாயித்துக் கெழம கருவாட்டுக் கொழம்புன்னு மாசத்துல நாலு ஞாயித்துக் கெழமைக்கும்
ஒரு திட்டம் இருக்கும். வெங்குவுக்கு மீனு கொழம்பும், கருவாட்டுக் கொழம்பும் அத்துப்படி.
அதுல வெங்குவ யாரும் அடிச்சிக்க முடியாது. அதுக்காக ஆட்டுக்கறிக் கொழம்பும், கோழிக்கறிக்
கொழம்பும் வைக்கத் தெரியாதுன்னு அர்த்தம் கெடையாது. அததுக்குன்னு இருக்குற கைப்பக்குவம்ன்னு
ஒண்ணு இருக்குல்ல. அத்து அவ்வளவா ஆட்டுக்கறிக் கொழம்புக்கும், கோழிக்கறிக் கொழம்புக்கும்
வெங்குவுக்கு வாராது. ஒவ்வொரு கைக்கும் ஒவ்வொரு கைப்பக்குவம் வரும். அப்பிடி தனம்
அத்தாச்சிக்குக் கோழிக்கறிக் கொழம்புல அசாத்தியமான கைப்பக்குவம்.
கோழிக்கறிக் கொழம்பு வைக்குற ஞாயித்துக்
கெழமையில தனம் அத்தாச்சி அடுப்படி பக்கத்துல வெங்குவ ஒரு சின்ன வேலைக்குக் கூட அண்ட
வுடாது. முழுசும் வேலைய அத்தனையையும் தனம் அத்தாச்சித்தாம் பாக்கும். அப்பிடிப் பாத்தாத்தாம்
கோழிக் கொழம்பு விசயத்துல அதுக்குத் திருப்திப்படும். அதெ வுட இதுல முக்கியமானது, தனம் அத்தாச்சிக் கோழிக் கொழம்பு வைக்குதுன்னா அதெ
பாக்க தெரு சனமே சுப்பு வாத்தியாரு கொல்லையில கூடிடும்ங்றதுதாம். இதென்னடா ஊருல ஒலகத்துல
யில்லாத அதிசயமா கோழிக்கொழம்பு வைக்குறதப் பாக்குறதப் பாக்க சனங்க எப்பிடிடா கூடும்ன்னா
அங்கத்தாம் இருக்கு விசயமே.
பொதுவா கோழியக் கொல்லுறதுக்கு அதோட
தலைய அரிஞ்சித்தாம் பெரும்பாலான சனங்க கொல்லுவாங்க. தனம் அத்தாச்சிப் போல செல பேருதாம்
கோழியோட தலையத் திருகி தலைய அந்தாண்டையும், ஒடம்பு இந்தாண்டையும் போடுவாங்க. அப்பிடித்
தலையத் திருவிக் கோழியக் கொன்னு கறியெடுக்குறது திட்டையில யாரும் அறியாதது. அதால
தனம் அத்தாச்சிக் கோழிக் கொழம்பு வைக்கப் போற சேதி தெரிஞ்சதுன்னா தனம் அத்தாச்சி
எப்பிடிக் கோழிய தலைய முறிச்சி போடுதுன்னு பாக்குறதுக்குக் கூட்டம் கூடிடும். அது
பாட்டுக்கு அசால்ட்டா கோழியோட தலையத் திருகிப் போடும். தலையும் ஒடம்பும் ரெண்டு
பக்கம் கெடக்கும்.
ஒடம்பு துண்டா போயிக் கெடக்குற கோழியக்
கையால எடுத்துச்சுன்னா என்னவோ மருதாணிச் செடியிலேந்து மருதாணிய உருவி ஆய்ஞ்சு எடுக்குறாப்புல றெக்கையை அப்பிடியே உருவி அந்தாண்ட தூக்கிப் போட்டுட்டு,
ஒடம்பைத் துண்டு துண்டா அருவாமனையில கறியாக்கிப் போடும் பாருங்க. எல்லாம் நிமிஷ நேரத்துல
சட்டுபுட்டுன்னு முடியும். கோழியக் கறியாக்கிப் போடுறதுதாங் கோழிக் கொழம்பு வைக்குறதுல
ரொம்ப பெரிய விசயம். ஆட்டுக்கறிக் கொழம்புன்னா ஆட்டுக்கறிய வெட்டிக் கொடுக்குற கறிக்கடை
பாயி எல்லா வேலையையும் செஞ்சிக் கொடுத்துப்புடுவாரு. கறிய வாங்கியாந்தா கொழம்பு வைக்குற
வேலை ஒண்ணுத்தாம். ஆனா கோழிக்கறிக் கொழம்புக்கு மின்னாடி கோழிக்கறிய பக்குவம் பண்ணி
எடுத்தாவணுமே. அதெ தனம் அத்தாச்சிப் போல நிமிஷ நேரத்துல செய்யுறதுக்குல்லாம் ரொம்ப
தெறமெ வேணும்.
கோழிக்கறி தயாராச்சுன்னா பெறவு அதுக்கான
மசாலாவ அம்மிக்கல்லுல உக்காந்து தனம் அத்தாச்சியே அரைக்கும். அதுக்கு அரைக்கிற அந்த
மசலாவுலத்தாம் கோழிக்கறி கொழம்பு மணக்கும். அதெ போட்டு கோழிக்கறிக் கொழம்ப கொதிக்க
வெச்சதுன்னா தெருவே மணக்க ஆரம்பிச்சிடும். இதெ பக்கத்துல இருந்து பாக்கற தம்மேந்தி
ஆத்தா, "ஏட்டி வெங்கு! ஒங்க வூட்டுப் பொண்ணு வெச்ச கொழம்புல கொஞ்சம் கிண்ணியில
கொடேம்!"ன்னு எச்சிலு ஒழுகக் கேக்கும். இப்பிடி கிண்ணியில தெருவுல நாலு சனமாவது
கோழிக்கறிக் கொழம்ப வாங்கிட்டுப் போவும்.
யாரு வூட்டுலயாவது கோழிக்கறிக் கொழம்ப
வைக்கணும்ன்னா அந்த வூட்டுச் சனங்க தனம் அத்தாச்சிய வந்துக் கூப்புட்டுட்டுப் போயிடும்ங்க.
அங்க தனம் அத்தாச்சிக் கோழியோட கழுத்தெ திருகிப் போடுறதப் பாக்க ஒரு கூட்டம் கூடிப்புடும்.
திட்டையில யாரு வூட்டு கொல்லையிலயாவது கூட்டம் கூடுனுச்சுன்னா அடிச்சிச் சொல்லலாம்
அன்னிக்கு அங்க கோழிக்கறிக் கொழம்புன்னு. அந்த அளவுக்கு தனம் அத்தாச்சிக் கோழிக்கறிக்
கொழம்புல திட்டையில பிரபலமான ஆளா ஆயிடுச்சு. அப்பிடிப் போயிக் கோழிக்கறிக் கொழம்ப
வெச்சிக் கொடுத்துட்டு, ஒரு கிண்ணியில கொஞ்சம் கொழிக்கறிக் கொழம்பையும் வாரப்ப
வாங்கியாந்திடும் தனம் அத்தாச்சி. ஞாயித்துக் கெழம ஒரு நாளு அசைவச் சாப்பாடா இருந்த
சுப்பு வாத்தியாரு வூட்டுல இதால தெனம் தெனம் கோழிக்கறிக் கொழம்பா அசைவ சாப்பாடா ஆவ
ஆரம்பிச்சிது.
தனம் அத்தாச்சிக் கோழியோட கழுத்தெ திருகிப்
போடுறதப் பாத்தா பாக்குறவங்களுக்கு பயமாத்தாம் இருக்கும். இதெ ஒரு தடவெ தெரியாத்தனமா
பாத்துத் தொலைச்சுப்புட்டாம் விகடு. அவனுக்கு கோழியோட ஒடம்பு துடிச்சது மனசுல ரெண்டு
நாளைக்கு கண்ணுலயே நின்னு பயமுறுத்துனுச்சு. அவ்வேம் பெரும்பாலும் தனம் அத்தாச்சியோட
பேச மாட்டாம். தனம் அத்தாச்சிய இந்தப் பாக்கம் பாத்தான்னா, அவ்வேம் அந்தப் பக்கம் போயிடுவாம்.
செய்யுத்தாம் சின்னக் கொழந்தையாட்டம் தனம் அத்தாச்சியோட மடியில உருண்டு பெரண்டு வெளையாடிட்டுக்
கெடப்பா. வூட்டுல ஒரு சின்னக் கொழந்தை இருந்தா போதும். நாளு பொழுது எதுவும் போறது
தெரியாது. அப்பிடித்தாம் தனம் அத்தாச்சிக்கு செய்யு பள்ளியோடம் விட்டு வந்தா போதும்
அதுக்குன்னு தெனம் தெனம் சாயுங்காலத்துல பலகாரத்தெ செய்யுறது, அது வந்தா அதெ தூக்கி
வெச்சிக்கிட்டுக் கொஞ்சுறது, ராத்திரி நேரம் போறது தெரியாம அதோட கள்ளு புள்ளுன்னு
பேசிக்கிட்டும் சிரிச்சிக்கிட்டும் கெடக்குறதுன்னு அதுக்குப் பொழுது போவுறது தெரியாம
போயிட்டு இருந்துச்சு. விகடு ஒரு ஆளுத்தாம் தனிச்சி வுட்ட ஆளு போல இருந்தாம். அத்தோட
இவ்வேம் தனம் அத்தாச்சி கோழியோட தலையத் திருவுனதெ பாத்ததுலேந்து பிரமைப் பிடிச்சிப்
போயிக் கெடந்தத ஒரு நாளு தனம் அத்தாச்சிக் கவனிச்சிடுச்சு. அன்னிக்குத்தாம் தனம் அத்தாச்சி
விகடுகிட்டெ பேசுனுச்சு.
"என்னடா யம்பீ! ஒரு மாதிரியா இருக்கே?
நாம்ம இஞ்ஞ இருக்குறது பிடிக்கலையா?"ன்னுச்சுப் பாருங்க. விகடுவுக்கு ஒடம்பு ஒதறல்
வுட்டுப் போச்சு. அப்படியே தெகைச்சிப் போயி நின்னாம்.
"ன்னா சொல்லு! இப்பவே கெளம்புறேம்!"ன்னுச்சுப்
பாருங்க தனம் அத்தாச்சி, விகடு அன்னிக்குத்தாம் மொத மொதலா வாயைத் தொறந்துச் சொன்னாம்,
"இல்லீங் அத்தாச்சி! கோழியோட தலையத் திருவி வீசுனீயேளே, அதெ பாத்துப்புட்டேம்.
அதோட ஒடம்புத் துடிக்கிறதுன்னு அதெ நெனைப்பா மனசுக்குள்ள இருக்குதுங்!"ன்னாம்
விகடு.
"அதாங் அன்னிக்குக் கோழிக் கொழம்பையே
செரியா சாப்புடுலையா? சரியான புள்ளடா நீயி! கொன்னா பாவம் தின்னாப் போச்சு! அவ்ளோதாங்!"ன்னு
சொல்லிச் சிரிச்சிதுப் பாருங்க தனம் அத்தாச்சி. அந்தப் பாசமான சிரிப்பும், அசட்டையான
பதிலும் விகடுவோட மனசுல அது வரைக்கும் இருந்த ஒதறலை எடுத்து விட்டுச்சு. அதுக்குப்
பெறவுதாம் விகடுவுக்குப் கனாவுல முண்டமாயித் துடிக்கிற கோழி வராம இருந்துச்சு.
*****
No comments:
Post a Comment