செய்யு - 449
சென்னைப் பட்டணம் போயி எறங்குனதும்,
"இஞ்ஞ வந்தோனத்தாம்பீ நிம்மதியா இருக்கு மனசுக்கு!"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
சுப்பு வாத்தியாரு ஒண்ணுத்தையும் சொல்லாம மனசுக்குள்ளயே சிரிச்சிக்கிட்டாரு.
"யப்பா! என்னவோ கடெசிக் காலத்துல
இஞ்ஞத்தாம் இருக்கணும்னு பிரியப்படுது. ஆன்னா மாமா நமக்கு இந்தப் பட்டணம் சுத்தமாவே
பிடிக்கல. நாம்ம கடெசிக் காலத்துலயாவது கெராமத்துல வந்து விழுந்துப்புடணும் மாமா! அதுக்கான
வேலய இப்பயிலேந்து பாக்க ஆரம்பிச்சிட்டேம்!" அப்பிடினிச்சு சந்தானம் அத்தான்.
அப்பங்காரனும் மவ்வேங்காரனும் இப்பிடிச் பேசுனதுல சுப்பு வாத்தியாருக்கு சிரிப்பு மேலேறி
வந்ததுல பொரையேறிப் போச்சுது. தலையத் தட்டி வுட்டு தண்ணியக் கொடுத்து சரி பண்ண வேண்டியதாப்
போச்சுது.
"ன்னா மாமா வேற ஏத்தோ மனசுல நெனைக்குறாப்புல
தெரியுது!" அப்பிடினிச்சு சந்தானம் அத்தான்.
"அததெ அந்தக் காலத்துல பாத்துக்கிடலாம்.
மனுஷனுக்கு மனசு எப்பிடி மாறுங்றதுக்குல்லாம் உத்திரவாதம் இல்லே!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு சிரிப்பெ ஒரு நெலைக்குக் கொண்டு வர முடியாம. ஒருவேள மறுக்கா இந்தச் சிரிப்பு
பொரையேறுதுல கொண்டு போயி விட்டுடோமோங்ற தெகைப்பு அவருகிட்டெ இருந்துச்சு.
"நாம்ம சொல்றதுல ஒண்ணும் மாத்தமில்ல
மாமா! ந்நல்லா யோஜனெ பண்ணிட்டேம்! கடெசீக் காலத்துல பொண்ணு புள்ளைய யல்லாம் கட்டிக்
கொடுத்துப்புட்டு கெராமத்துல வந்து வெவசாயத்தெப் பாத்தாத்தாம் சொகப்படும்! நீயி வேணும்ன்னா
பார்றேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
சுப்பு வாத்தியாரு மனசுக்குள்ள அப்பிடியே
சிந்தனையில விழ ஆரம்பிச்சிட்டாரு. அவரு ஒரு வெதமா சந்தானம் அத்தானுக்குப் பதிலெச் சொல்லிப்புட்டாலும்
சூட்சமமான வெசயம் என்னாங்ற மாதிரி யோசனெ ஓட ஆரம்பிச்சிது அவருக்குள்ள.
பெரியவருக்கு சென்னை வந்ததும்தாம் நிம்மதி
கெடைச்சதுங்றாரு. அவரோட மவ்வேன் கெராமத்துக்குப் போயித்தாம் நிம்மதி கெடைக்குதுங்றாம்.
யாருக்கு அப்பிடி நிம்மதி கொறையுறாப்புல, நிம்மதி நெறையுறாப்புல என்ன நடந்துச்சு?
பெரியவர்ர பொருத்த மட்டுல, வேலங்குடியில
அப்பிடி என்ன நிம்மதி கொறைஞ்சிருந்தது? சென்னைப் பட்டணத்துல அப்பிடி என்ன நிம்மதி
நெறைஞ்சு வழிஞ்சதுங்றது பெரியவருக்கே வெளிச்சம். மனுஷன் வாழ்றதுக்கு சாப்பாடு, வூடு,
உடுப்பு இதோட மனநிலையும் தேவையா இருக்கு. பிடிச்ச மனநிலை இருந்தாத்தாம் சொர்க்கமா
இருந்தாலும் வாழ முடியுது. மனசுக்குப் பிடிக்காம போயிட்டுன்னா அந்த எடம் சொர்க்கமா
இருந்தாலும் வாழ முடியுறதில்ல. மனசுக்குப் பிடிச்சுப் போயிடுச்சுன்னா நரகத்துல கூட
காலம் சொகமா ஓடும் போலருக்கு.
கிராமத்துல இல்லாத சுத்தமான காத்தா? சுத்தமான
தண்ணியா? சுத்தமான சுத்துவட்டமா? சுத்தமான ஆறா? சுத்தமான எடமா? இதுல எதையும் பட்டணத்துல
பாக்க முடியாது. ஆனா இப்பிடிப்பட்ட கெராமம் ஏதோ ஒரு காரணத்தால பிடிக்காம போயி, குப்பைக்கும்,
சாக்கடைக்கும், நாத்தத்துக்கு எடையில சந்தோஷமா சனங்க பட்டணத்துல வசிக்குதுன்னா அதுக்கு
மனநிலையும் ஒரு காரணம். வேற வழியில்லாம் அப்பிடி அங்கப் போயிக் கெடக்குற சனங்க ஒரு
பக்கம்ன்னா, கெராமத்துல இருக்க மனசு பிடிக்காம அங்கப் போயிக் கெடக்குற சனங்களும் கணிசமா
இருக்கத்தாம் செய்யுறாங்க.
பெரியவரோட வாழ்க்கைய ரெண்டு கட்டங்களா
பிரிச்சா அப்பிடித்தாம் ஆவும். அவருக்கு வந்த வாத நோய்க்கு மின்னாடி, வாத நோய்க்குப்
பின்னாடின்னு அவரோட வாழ்க்கை ரெண்டா பிரியும். வாத நோய் வர்ற வரைக்கும் அவரையும்
கெராமத்தையும் பிடிக்க முடியல. வாத நோய் வந்த பிற்பாடு அவரையும் பட்டணத்தையும் பிரிக்க
முடியல. மனுஷனோட மனசு எங்க இருந்தா நிம்மதியா இருக்க முடியும்ன்னு நெனைக்குதோ, அங்க
இருக்கத்தாம் பிரியப்படுது. மித்தபடி கெராமத்துலத்தாம் கட்டெ வேவணும், பட்டணத்துலத்தாம்
கட்டெ வேவணுங்றதுல்லாம் மனநெலைக்கு ஏத்தப்படி பேசுற பேச்சுத்தாம். அந்த மனநெலை எப்போ
வேணாம்னாலும் எப்பிடி வேணும்னாலும் மாறலாங்றதுக்கு பெரியவரே ஒரு சாட்சியாப் இருக்குறாரு.
அதெத்தாம் மனசுக்கான சொகுசுன்னு சொல்ல வேண்டியதா இருக்கு. அப்பிடி மனசுக்கான சொகுசு
எங்கக் கெடைக்குதோ அங்கத்தாம் இருக்க நெனைப்பாம் மனுஷன். ஒரு மனுஷன பிரிச்சி அவனெ
கெராமத்தான், பட்டணத்தான்ங்ற கோட்டெ கிழிக்கிறதே இந்த மன சொகுசுதாம். ஒவ்வொரு மனசுக்கும்
ஒவ்வொரு வெதமான சொகுசு. இப்பிடியெல்லாம் சுப்பு வாத்தியாரோட மனசு பல வெதமா ஓடுச்சு.
"ன்னா மாமா எத்து கேட்டாலும் யோஜனெ
பலமா ஓடுது?"ன்னுச்சு சுப்பு வாத்தியாரைக் கலைச்சு வுடுறாப்புல சந்தானம் அத்தான்.
"ஒண்ணுமில்லப்பா! செல வெசயங்கள நெனைக்குறப்ப
எதுவும் நம்ம கையில இல்லங்றது மாதிரி தொணுதுப்பா! ஏத்தோ ஒண்ணு நடக்குது. அதுக்குள்ள
நம்மள நொழைச்சிக்கிட வேண்டியதா இருக்கு. யத்தானுக்கு இஞ்ஞ வாரணும்ன்னு ஒரு மனசு. யக்காவுக்கு
அஞ்ஞ கெடக்கணும்னு ஒரு மனசு. மனசு எப்போ எப்பிடி இருக்கும்ன்னு யாரு கண்டது?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"செரி மாமா! நாம்ம ஒடனே கெளம்புன்னா
அஞ்ஞ யம்மாவுக்குத் தொணையா இருக்கும். ஒத்த ஆளா அஞ்ஞ கெடந்து அத்து கஷ்டப்பட்டுக்கிட்டுக்
கெடக்கும்! நீயும் ஊருக்குப் போயி ஆவ வேண்டிய காரியத்தெ பாக்கலாம் பாரு!"ன்னுச்சு
குமாரு அத்தான் ஊடால பூந்து.
"எப்பவாச்சித்தாம் வார்றீங்க! இருந்து
ரண்டு நாளு தங்கி நல்லா ரெஸ்ட்ட எடுத்துப்புட்டு, நல்லா சாப்புட்டுப்புட்டுப் போங்கப்பா!"
அப்பிடினுச்சு தனம் அத்தாச்சி.
"யம்பீ! சொல்ல மறந்துட்டேம் பாரு!"ன்னு
ஆரம்பிச்சாரு பெரியவரு. எல்லாத்தோட கவனமும் இப்போ அங்க திரும்புனுச்சு. பெரியவரு
மேக்கொண்டு பேச ஆரம்பிச்சாரு.
"இவ்வேம் குமாரு! கடெசிப் பயெ! இவனுக்குக்
கதெய கட்டி வுட்டுப்புட்டா தேவலாம். நாம்ம இனுமே எஞ்ஞ அஞ்ஞ இஞ்ஞன்னு அலைஞ்சிப் பொண்ண
பாக்குறது? நீயும் சந்தானமுமா சேந்து ஒரு பொண்ணப் பாத்து கதையெ முடிச்சி வுட்டுப்புடுங்க.
நாம்ம உசுரோட இருக்குறப்பவே அதெயுங் பாத்துப்புட்டா நிம்மதியா கண்ண மூடிப் புடுவேம்
பாத்துக்க!"ன்னாரு பெரியவரு.
"யத்தாம் சொல்றதும் சரித்தாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"செரித்தாம் மாமா! இவ்வேம் கெடக்குற
கெடப்புக்கு எவ்வேம் பொண்ண கொடுப்பாம் சொல்லு? ஒரு பயெ தர்ற மாட்டாம். நாமளும் பொண்ண
கேட்டுக்கிட்டு ஒருத்தம் வூட்டு வாசல்ல கால்ல வைக்க முடியாது!"ன்னுச்சு சந்தானம்
அத்தான்.
"அதுக்காக அப்பிடியே வுட்டுப்புட
முடியுமாடா யம்பீ இவனெ?" அப்பிடின்னாரு பெரியவரு.
"அதாம்ப்பா சொல்ல வந்தேம்! அதுக்குள்ள
அவசரப்பட்டு வார்த்தையெ வுடுறே? அஞ்ஞ வேலங்குடியில பழைய வூட்ட தாட்டி வுட்டுப்புட்டு,
புதுசா மனெய ஒண்ணுப் போட்டு மாடி வூடா கட்டிப் புட்டேம்ன்னு வெச்சுக்கோ, அதெ வெச்சு
ஒரு தோத பண்ணிவுடலாம். யப்பா காலத்துலயே புள்ளையோ தலையெடுத்து வூட்டெ கட்டிப்புட்டாச்சுன்னு
பேராவும் ஆயிடும். இவனுக்குப் பொண்ணு பாக்கக் கொள்ள வசதியாவும் போயிடும்! ஒரு ந்நல்லா
மாடி வூடா இருந்தா நாந் நீயின்னு போட்டியப் போட்டுக்கிட்டுப் பொண்ணக் கொடுப்பாம்!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"யே யப்பாடி! வூடுன்னா கையி வெச்சா
ஏழெட்டு லச்சம் ஆவுமப்பா! நாம்ம இப்போ கைய வெச்சிட்டு செருமப்படுறதெ வெளியில சொல்ல
முடியல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெல்லாம் நாம்ம பாத்து செஞ்சிப்புடுறேம்
மாமா! அத்தோட வேலங்குடியில புள்ளையாரு கோயிலு ஒண்ணுத்தையும் எடுத்துச் செய்யப் போறெம்.
ஊருல கோயிலக் கட்டிக் கொடுத்துப்புட்டு, தம்பிக்காரனுக்கு ஒண்ணுத்தையும் செய்யாம
வுட்டுப்புட்டதா பேச்சு வந்துப்புடக் கூடாது பாரு மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"அம்மாம் பெரிய தோது இருந்தா பண்ணி
வுடு! யாரு வேணாங்றா? அத்து ன்னா திடீர்ன்னு கோயில்ல கட்டுறேம், வூட்டே கட்டுறேம்ன்னு
நிக்குறீயேடாம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஒங்கிட்டெ எதெ மாமா நாம்ம மறைச்சிருக்கேம்!
பொய்யி சொல்லுற வாயிக்குப் போசனம் கெடைக்காதுன்னு சொல்லுவாங்க. இஞ்ஞ பட்டணத்துல
பொய்யி சொல்லாத வாயிக்குப் போசனம் கெடைக்காது. யேவாரம், கான்ட்ராக்ட் எல்லாம் பொய்யித்தாம்
மாமா. பொய்யில நனைச்ச பொய்யி. மெய்யா ஒழைச்செல்லாம் இஞ்ஞ சம்பாதிக்க முடியா மாமா!
ரண்டு ரூவா வேலைய இருவது ரூவா வேலைன்னு சொல்லித்தாம் கான்ட்ராக்டே எடுக்குறதே! அதுக்குத்
தகுந்தாப்புல கார்லயும் வண்டியிலயும் போயி எறங்குறது, பந்தாவ காட்டுறது. ஆபீஸ்ஸப்
பாத்தீன்னா ஏசி பண்ணி, அலங்காரம் பண்ணி நுனி நாக்குல இங்கிலீஷப் பேசுற பொண்ண பிடிச்சிப்
போட்டு எல்லா வேலையையும் பண்ணித்தாம் எல்லாமும் இஞ்ஞ நடக்குது. நாம்ம இத்தெ தப்புன்னு
நெனைச்சா இந்தத் தப்பெ இன்னொருத்தம் பண்ணிக்கிட்டுப் போயிட்டே இருப்பாம்! நீயி ஒண்ணும்
தப்பா நெனைச்சிக்காதே மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"அதாஞ் சொல்லிட்டீயே! எவனோ பொழைச்சிட்டுப்
போறதுக்கு, நம்ம யக்கா மவ்வேம் பொழைச்சிட்டுப் போறாம்ன்னு நாமளும் நெனைச்சிக்கிறேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு அதுக்கு.
"ஒமக்கு மாமா மனசுல பிடிக்காதுங்றது
தெரியும்! நமக்கும் அப்பிடித்தாம் மனசுக்குள்ள ஒரு காலத்துலு உறுத்தல் இல்லன்னாலும்
ஒரு காலத்துல வந்துப் போவுது. அதுக்குத்தாம் அஞ்ஞ சபரிமலைக்கி மாலெ போடுறது, எட்டுக்குடிக்கிக்
காவடி தூக்குறதுன்னு பக்திப் பழமாயி எதாச்சிம் பண்ணிட்டுக் கெடக்குறது. ஒரு கோயிலு
ஒண்ணுத்தெ கட்டிப்புட்டா அத்து பெரும்புண்ணியம்ன்னு சோசியக்கார்ரேம் சொன்னாம். அதாங்
எஞ்ஞயோ போயி ஒரு கோயிலக் கட்டி வுடுறதுக்கு நம்ம ஊர்லயே கட்டி வுடலாம்ன்னு நெனைக்கிறேம்.
ஊருக்கார பயலுகளும் வந்துச் சொன்னானுவோ. அதாச்சி, ஊருல கொஞ்சம் வசூலப் பண்ணிப்புடுறேம்.
நாம்ம ரண்டு லட்சம் கொடுத்தா போதும்ன்னு சொன்னானுவோ. ஊருல ஒரு கோயிலக் கட்டுறப்போ
தம்பிக்குன்னு ஒரு வூட்டையும் கட்டிப் போட்டா
அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒரு பெருமதானே மாமா!"ன்னுச்சு சந்தானம்.
"அப்பிடின்னா செரிடாம்பீ! பண்ணு பாத்துக்கிடலாம்!
ஆக மொத்தம் ஒரு மனுஷன் ஒழைச்சில்லாம் சாமிக்குச் செய்யுறதுன்னா அம்பது பைசாக்கிக்
கற்பூரத்தெ வாங்கித்தாம் கொழுத்தலாம்! கோயில்லலாம் கட்டலாம்ன்னா ஒன்னய மாதிரி ஆளு
கட்டுன்னாத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"பாத்தியா மாமா! ஒம் மவ்வனெ வுட மோசமா
பேசுறே? அவ்வனோட பேசிப் பேசி நீயும் மாறிட்டு இருக்குற மாமா! அவ்வேம் இப்பிடித்தாம்
பேசுவாம்! அவ்வேம் மாரில்லா அப்பிடியே செராக்ஸ் எடுத்தாப்புல பேசுறே?" அப்பிடினிச்சு
சந்தானம்.
"அத்துச் செரிடாம்பீ! கையில காசி
இருந்தாலும் நல்ல காரியம் பண்றதுக்கு எத்தனெ பேத்துக்கு மனசு வருங்றே? ஒமக்கு இருக்குல்லடாம்பீ!
அதெ நெனைக்குறப்ப நம்மட யக்கா மவ்வேங்ற பெருமெதாம்டாம்பீ நமக்கு!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"அதாங் மாமா! ஒங்கிட்டெ பிடிச்சது.
மனசுல உள்ளதெ மறைக்காம சொல்லிப்புடுவே அத்து குத்தமா இருந்தாலும் செரித்தாம், செரியா
இருந்தாலும் செரித்தாம். உள்ள ஒண்ணுத்தெ வெச்சிக்கிட்டு வெளியில ஒண்ணுத்தெ பேச மாட்டே.
அதுக்குத்தாம் மாமா எத்துவா இருந்தாலும் ஒங்கிட்டெ ஒரு வார்த்தெ கலந்துக்கிடுறது!"
அப்பிடினிச்சு சந்தானம் அத்தான்.
"அதாங்டா சந்தானம்! நமக்குப் பெறவுன்னாலும்
நீயி எத்து செய்யுறதா இருந்தாலும் மாமாட்ட ஒரு வார்த்தெ கலந்துக்கிடணும். நாம்ம அப்போ
ஒம்மட மாமா எடத்துல இருக்குறதா அர்த்தெம்!"ன்னாரு பெரியவரு.
"அதல்லாம் அண்ணேம் மாமாக கலந்துக்கிடாம
எதையும் செய்யாது யப்பா!"ன்னுச்சு குமாரு அத்தானும். இந்தப் பேச்சோட சுப்பு வாத்தியாரும்,
குமரு அத்தானும் ஊரு வந்து சேர்ந்தாங்க.
சொன்னது சொன்னபடியே சந்தானம் அத்தான்
வேலங்குடி புள்ளையாரு கோயில்ல எடுத்துக் கட்ட ரண்டு லட்சம் கொடுத்ததோட, வூட்டையும்
ஆறு மாசத்துக்குள்ள சென்னைப் பட்டணத்துலேந்து ஆளுகள கொண்டாந்து வெச்சி சட சடன்னு ஆயிரத்து
ஐநூத்து சதுர அடியில கட்டி முடிச்சிது. புள்ளையாரு கோயிலை கட்டி முடிச்சி அதுக்குக்
கும்பாபிஷேகத்தெ பண்ணி முடிச்சதுல சந்தானம் அத்தானுக்கு வேலங்குடியில ரொம்ப நல்ல பேரு.
அந்தக் கோயிலு கும்பாபிஷேகத்துக்கு வேலங்குடியில இருந்தும், சுத்துப்பட்டுல இருந்தம்
ஏகப்பட்ட சனங்க வந்திருந்தாலும் சின்னவரு உட்பட அவரோட குடும்பத்துல மட்டும் யாரும்
வரல. அதுக்கான காரணத்தெ நாம்ம கொஞ்சம் பின்னாடித்தாம் பாத்தாவணும். இந்தச் சம்பவத்துக்குப்
பெறவு வேலங்குடியில சந்தானம் அத்தானோட செல்வாக்கு அதிகமாவ தொடங்கிடுச்சு. அதுல சின்னவருக்கு
மனத்தாங்கல்தாம். இருந்தாலும் அவரால ஒண்ணும் செய்ய முடியல. எல்லாத்தையும் வுட ஒரு சாதாரண
பஞ்சாயத்துன்னாலும் சந்தானம் அத்தான் சென்னைப் பட்டணத்துலேந்து இஞ்ஞ வந்து தீக்குற
அளவுக்கு அதோட செல்வாக்கு வளந்துப் போச்சுது. இந்தச் செல்வாக்கையும், வேலங்குடியில
கட்டியிருந்த வூட்டையும் வெச்சி குமாரு அத்தானுக்கு ஒரு பொண்ணையும் பாத்து முடிச்சுச்சு.
இப்பிடித்தாம் சந்தானம் அத்தான் வேலங்குடியிலயும்
சரி, ஒறவுமொறையிலயும் செரி பெருங்கைய்யா ஆவ ஆரம்பிச்சிது. சந்தானம் அத்தான் சென்னைப்
பட்டணத்துல இருந்தாலும் வேலங்குடியில எது நடக்குறதா இருந்தாலும் அங்கேயிருந்து இங்க
தகவல் வந்து இதுகிட்டேயிருந்து ஒரு வார்த்தைக் கேட்டுப்புட்டுத்தாம் எதுவா இருந்தாலும்
நடக்குங்ற அளவுக்கு எல்லாமும் ஆனுச்சு. சுப்பு வாத்தியாருக்கு இதுல ஏகப்பட்ட புளங்காகிதம்
அக்கா மவனெ நெனைச்சி. ஒறவுலயும், குடும்பத்துலயும் நல்லா வந்தப் பெறவு எதையும் மறக்கல,
எல்லாத்துக்கு மின்னாடி நின்னு காரியத்தெச் செய்யுறாம், காசியையும் கணக்குப் பாக்கமா
தண்ணியா செலவழிக்கிறாம்ன்னு இதெ பாக்குற எடத்துல எல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ஞ்சாரு
சுப்பு வாத்தியாரு.
*****
No comments:
Post a Comment