14 May 2020

ஒரு கண்ணுல சந்தோஷம்! ஒரு கண்ணுல கண்ணீரு!

செய்யு - 448        

            குமாரு அத்தான் போனைப் போட்டுக் கொடுக்க சுப்பு வாத்தியாரு சந்தானம் அத்தாங்கிட்டெ பேசுனாரு. "யம்பீ! நாம்ம மாமா பேசுறேம்டா! இஞ்ஞ வேலங்குடிக்கு வந்தேம். இங்க எல்லாம் சொகம். அஞ்ஞ எல்லாம் எப்பிடி இருக்கீங்க? தனம் செளக்கியமா? புள்ளெ குட்டிக சொகமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "எல்லாம் சொகமும் செளக்கியமும்தாம் மாமா. ன்னா இந்நேரத்துக்கு வேலங்குடியிலேந்து பேசுதீயளே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "யத்தாம் இஞ்ஞ இருக்கிறதெ வுட அஞ்ஞ இருக்கப் பிரியபடுது. கடெசீக் காலம் எஞ்ஞ இருக்க யத்தாம் நெனைக்குதோ அஞ்ஞ இருந்துட்டுப் போவட்டுமே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நமக்கு அத்தாம் மாமா நெனைப்பு. அஞ்ஞ யம்மா தனியா இருக்கே! எத்தனெ நாளுக்கு யம்மாவப் பாக்காம யப்பா கெடக்கும். அதாங் ஒரு மாசம் யில்ல ரண்டு மாசம் இருக்கட்டும். பெறவு அழைச்சிக்கிடலாம்னு பாத்தேம். அதுக்குள்ள யப்பா போன் மேல போன போட்டு அழைக்க வா அழைக்க வான்னு, ஒண்ணுஞ் சொல்ல முடியல. கொண்டாந்து வுட்டுப்புட்டு நாலே நாள்ல அழைச்சிட்டு வந்தா ந்நல்லாவா இருக்கும்ன்னு நெனைச்சேம். அதுவும் யம்மாவுக்கு ரொம்ப கஷ்டமால்லா இருக்கும். கிட்டதட்ட ஒரு வருஷத்தெ நெருங்கிடுச்சு யப்பா இஞ்ஞ, யம்மா அஞ்ஞன்னு. அதாங் கொஞ்சம் அஞ்ஞ கெடக்கட்டும்ன்னு பாத்தேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "நீயி நெனைக்குறது சரிதாம்டாம்பீ! யத்தானுக்கு என்னவோ வேலங்குடி பிடிக்கல. மின்னாடி என்னான்னா பட்டணம் பிடிக்கலன்னு கெடந்துச்சு. இப்போ என்னான்னா கெராமம் பிடிக்கலங்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பாவப் பொருத்த மட்டுல வேலங்குடியில இருக்குறதெ வுட, இஞ்ஞ இருக்குறதுதாங் நல்லது. திடீர்ன்னு ஒடம்புக்கு எதாச்சும் பண்ணுனா சட்டுன்னு பாக்க இஞ்ஞ ஆளுங்க இருக்கு, வசதியும் இருக்கு. இன்னும் கொஞ்சம் ஆயுர்வேதத்துல வைத்தியம் பண்ணா கொணம் அதிகமாத்தாம் ஆவும். இதுக்குன்னே இஞ்ஞ டாக்கடர்ரப் போட்டுல்லா வைத்தியமெல்லாம் நடந்துச்சு. இஞ்ஞ ஒண்ணு மாத்தி ஒண்ணு புள்ளைங்க பேசிக்கிட்டும் வெளையாடிக்கிட்டு யப்பாவோட கெடக்குமுங்க. யக்கா, யத்தான், தம்பியோ, தம்பிப் பொண்டாட்டியோன்னு ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து பாத்துட்டுப் போயிட்டு கெடக்குமுங்க. யப்பாவுக்கு அதால இஞ்ஞ நேரம் போறதெ தெரியாது. அப்பைக்கப்போ பீச்சு, தியேட்டரு, பார்க், கடைத்தெருன்னு வெளியிலயும் கார்ல வெச்சிக் கூப்புட்டுப் போறது. இஞ்ஞ நேரம் ஓடுறதுக்கோ, பொழுது போறதுக்கோ எந்தப் பெரச்சனையும் யில்ல. அத்தோட நேரா நேரத்துக்கு வெத வெதமான சாப்பாடு வேற. பாக்க வர்ற சனங்க வேற ‍வெத வெதமா செஞ்சிக் கொண்டாருதுங்க. யப்பா கொஞ்சமாத்தாம் சாப்புடும். இருந்தாலும் வெத வெதமா சாப்புடுறப்போ நாக்குக்கு ருசியா ஒனக்கையா இருக்கும் போலருக்கு! இஞ்ஞ நேரா நேரத்துக்கு மாத்திரெ மருந்துகளக் கொடுக்கறதுக்கும் ஆளுக இருக்கு. அஞ்ஞன்னா யம்மாவும், அவ்வேம் குமாரு பயலும் தடுமாறிக்கிட்டெத்தாம் கெடக்குமுங்க. மாட்டப் பாக்குறது, வயலப் பாக்குறதுன்னு அதுகளுக்கும் வேல நேரம் கொள்ளாம இருக்கும்! நீஞ்ஞ சொல்றதுதாங் செரி மாமா. யப்பா இஞ்ஞ இருந்தாத்தாம் செரிபட்டு வரும். இருந்தாலும் யம்மாகிட்டெயும் ஒரு வார்த்தெ கலந்துகிட்டு சொல்லு மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "எல்லாம் பேசியாச்சுடாப்பா! யக்காவும் அதெத்தாம் சொல்லுது! யத்தாம் ஒடம்பு வேற இப்போ கனத்த ஒடம்பா போயிடுச்சா. தூக்கிப் பாக்கறது கொள்றதுன்னாலும் அதுக்குச் செருமம்தாம். நீயி சொல்றாப்பு திடீர்ன்னு ஒடம்புக்கு ஒண்ணுன்னா இஞ்ஞ சிரிப்பா சிரிச்சிப் போயிடும். அந்த ஞாபவம்லாம் யத்தானுக்கு இருக்கும் போலருக்கு. திடீர்ன்னு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப் போச்சுன்னா உசுரு போயிடும்ங்ற பயம் இருக்கும் யத்தானுக்கு. மின்னாடி இதெப் பத்தியெல்லாம் அதாங் சாவ பத்தியெல்லாம் யத்தாம் பேசிக்கிட்டு இருந்துச்சு. மனக்கொறையா இஞ்ஞ போட்டு வைக்கிறதெ வுட அஞ்ஞ கொண்டாந்துக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்போ ஒண்ணு பண்ணுங்க. மாமா நீயும் கொமாருமா சேந்து இஞ்ஞ கொண்டாந்து வுட்டுப்புட்டீங்கன்னா தேவலாம். உக்கார வெச்சிட்டா அது பாட்டுக்கு உக்காந்துக்கும் யப்பா. ரதி மீனா டிராவல்ஸ்ல ஸ்லீப்பர் கோச் பஸ்ஸா பிடிச்சி ஏறுனீங்கன்னா ஆறு மணி நேரத்துல கொண்டாந்து வுட்டுடுவாம். இஞ்ஞ சென்னை வந்ததும் நாம்ம கார்ர வெச்சி வூட்டுக்குக் கொண்டாந்துப்புடலாம்!"ன்னுச்சு சந்தாம் அத்தான்.
            "செரிடாப்பா! இன்னிக்கு ராத்திரி முடியாது. நாளைக்கி ராத்திரி நாமளும் வூட்டுல தகவல சொல்லிட்டு இஞ்ஞ வேலங்குடி வந்து ஒரு ஆட்டோவப் பிடிச்சி திருவாரூருக்குக் கொண்டாந்து அஞ்ஞயிரந்து பஸ்ஸப் பிடிச்சி சென்னைக் கொண்டாந்துப்புடுறேம்! செரி வூட்டுல எல்லாத்தையும் வெசாரிச்சதாவும், அஞ்ஞ மித்த எல்லாத்தையும் கேட்டதாவும் சொல்லு! ரொம்ப நேரமா போன்ல பேசிட்டு வேற இருக்கேம். வெச்சிப்புடுறேம்!"ன்னு சொல்லி போனை வெச்சிப்புட்டாரு சுப்பு வாத்தியாரு.
            இதெ கேட்ட பிற்பாடுதாம் பெரியவருக்கு மனசுக்குள்ள ஒரு நிம்மதி வந்துச்சு. மின்னாடி இருந்த பதற்றம் கொறைஞ்சு மொகம் தெளிவா இருக்கு.
            "செரி யத்தாம்! பேச வேண்டியத பேசியாச்சு. இன்னிக்கு ஒரு ராத்திரிக்கி பல்ல கடிச்சிக்கிட்டு இருங்க. நாளைக்கு ராத்திரிக்கிக் கெளம்பி சென்னைப் பட்டணத்துக்குப் போயிடலாம். இவ்வேம் குமாரு ரொம்ப அவசரம்ன்னு கூப்டாம்ன்னே போட்டது போட்டபடி போட்டுட்டு வந்துப்புட்டெம். நாம்ம கெளம்புறேம்! யக்கா கெளம்புறேம்! குமாரு கெளம்புறேம்டா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒரு வாயி டீத்தண்ணியக் குடிச்சிட்டாவது கெளம்புடாம்பீ! சித்தெ யிரு. இத்து படுத்துன பாட்டுல நமக்கு கையும் ஒடல, காலும் ஒடல, ஒரு மண்ணும் புரியல. இப்பத்தாம் மனசுக்குக் கொஞ்சம் புரியுறாப்புல இருக்கு. ரண்டு நிமிஷத்துல வந்துடுறேம்!"ன்னுச்சு செயா அத்தை.
            "இரும்பீ! இருந்து சாப்புட்டுப் போ! நாமளும் ஒங் கூட ஒண்ணா உக்காந்து சாப்புட்டு நாளாச்சு! ஒங் கூட யிப்போ சாப்புடணும்!"ன்னாரு பெரியவரும்.
            "யிரு மாமா! யம்மா இந்தோ இட்டிலியச் சுட்டுப் போட்டுடும். ரண்டச் சாப்புட்டுட்டுக் கெளம்பலாம் மாமா!"ன்னுச்சு குமாரு அத்தானும்.
            "ஒரு லோட்டா தண்ணி மட்டும் கொடு. நாளைக்கி ராத்திரி வர்றேம்ல அப்ப பாத்துக்கிடலாம் சாப்பாட்டையெல்லாம். போயி பள்ளியோடம் வேற கெளம்பியாவணும். வூட்டுல வேற நேரமாயிடுச்சு வரலேன்னு கொழம்பிப் போயிக் கெடக்குமுங்க. இந்த ஒரு ராத்திரிக்கி யத்தான மனசு கோணாம பாத்துக்கிடுங்க. மாடு கண்ணு, வூட்டு வேல கெடந்துட்டுப் போவுது. அது கூட கொஞ்சம் உக்காந்துப் பேசிக்கிட்டுக் கெடங்க. நாம்ம நாளைக்கு சாயுங்காலமே வந்துப்புடுறேம். மித்த பிரயாணத்துக்கு வேண்டியதைல்லாம் தயாரு பண்ணிப்புடுங்க!"ன்னு சொல்லிட்டு செயா அத்தை கொண்டாந்த ஒரு லோட்டா தண்ணிய ஒரே மடக்குல குடிச்சி முடிச்சிட்டுக் கெளம்பிட்டாரு.

            மறுநாளு வடவாதியிலேந்து ஒரு ஆட்டோவப் பிடிச்சி திட்டையிலேந்தே ஆட்டோவுல கெளம்பிட்டாரு சுப்பு வாத்தியாரு. போறப்ப வெங்குவையும் கூட கூப்புட்டுகிட்டாரு. "சென்னைப் பட்டணத்துக்குப் போறதுக்கு மின்னாடி நீயும் ஒரு தவா வந்து பாத்தது போல இருக்கட்டும். வந்து வேலங்குடியில எறங்கி பாத்துட்டு அப்பிடியே யக்கா கூட பேசிட்டு இரு. ஆட்டோ நம்மள திருவாரூர்ல வுட்டுப்புட்டுத் திரும்பி அந்த வழியா வர்றப்போ கெளம்பி அதுலயே ஊருக்கு வந்துப்புடு!"ன்னு திடீர்ன்னு அப்பிடி ஒரு யோசனையைப் பண்ணிக் கெளப்பிக்கிட்டாரு.
            வேலங்குடிக்கு ஆட்டோவுல போயி எறங்குனதும் பாத்தா, பெரியவரு கெளம்பி ஜம்முன்னு உக்காந்திருக்காரு.
            "யிப்பத்தாம் பழைய யத்தானப் பாக்குறது போல இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யிருக்கும்டாம்பீ! ரவ்வ சோத்தப் போட்டு வெச்சா, மருந்து மாத்திரையக் கொடுக்கணும்ன்னா எழுப்பி கைத்தாங்கலா பிடிச்சி உக்கார வைக்க வேண்டியதா இருக்கு. அஞ்ஞ கெளம்பணும்ன ஒடனே யாரு தயவும் இல்லாம அதுவாவே கெளம்பி அலங்காரம் சிங்காரமெல்லாம் பண்ணி உக்காந்தாச்சி. உக்காந்ததோட யில்லாம யம்பீ வந்துடும்லன்னு மத்தியானத்துலேந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு தவா கேட்டாச்சி. அதுக்கு நாம்ம பதிலச் சொல்லியும் ஓஞ்சாச்சு. ஒறவுல, ஊர்ல, குடும்பத்துல எல்லாத்துக்கும் புத்திச் சொன்ன மனுஷம் இப்பிடிப் புத்திப் பேதலிச்சுப் போயி உக்காந்திருக்கிறதெப் பாக்கறப்போ வேதனையா இருக்குடாம்பீ! அதுக்குதாம்டாம்பீ ரொம்ப புத்தியெல்லாம் யாருக்கும் சொல்லிட்டு இருக்கக் கூடாது. அப்பிடிச் சொன்னா இப்பிடித்தாம் கடெசீக் காலத்துல ஆவும்!"ன்னு சொல்லிக்கிட்டு செயா அத்தை முந்தானையால கண்ணைத் தொடைச்சிக்கிட்டு.
            "அழாதீங்க யத்தாச்சி! எல்லாம் நல்லபடியா ஆயிடும்! இத்து ஒரு நேரம்! அதாங் எல்லாம் செரியாயிடும்!"ன்னுச்சு வெங்கு.
            "இதெல்லாம் தேவையாடீயம்மா! இப்பிடி ஒங்களையும் போட்டு அலைக்கழிச்சிட்டு, வந்து நாலைஞ்சு நாளு கூட ஆவாம கெளம்பி ஒடனேயே அஞ்ஞ போவணும்னு கெடந்துகிட்டு, குடும்பம் குடித்தனம்ன்னா இப்பிடிக் கெடந்து அல்லல்படணும்னு தலையில எழுதியிருக்கும் போலருக்கு. என்னவோ போ! யாரு யாரு சொல்லிக் கேக்குறா? எல்லாம் அதது போக்குக்குத்தாம் ஆட்டத்தெ போடுதுங்க!"ன்னுச்சு செயா அத்தை.
            "அதில்லாங் ஒண்ணும் செருமம் யில்ல யத்தாச்சி! குடும்பத்துல நடக்குறதுதாங் இதெல்லாம். பெறவு யாருக்காக இருக்கோம் நாம்ம. பிடிச்ச எடத்துல இருந்துட்டுப் போவட்டும் வுடுங்க! எஞ்ஞயோ சந்தோஷமா இருந்தா செரித்தாம்!"ன்னுச்சு வெங்கு.
            "அத்துச் செரித்தாம்! நாம்ம ஒரு நாலு நாளைக்காவது வெச்சு கண்ணாரப் பாத்து சந்தோஷமா சோறு தண்ணியப் பொங்கிப் போட்டுப் பாத்துக்கிடணும்ணு நமக்கு ஆசையிருக்காதா? அந்த ஆசையில மண்ணள்ளிப் போட்டுட்டு தாஞ் சொகந்தாம் முக்கியம்ன்னு கெளம்புனா எப்பிடி?"ன்னுச்சு செயா அத்தை.
            பெரியவருக்கு சுரீர்ன்னு கோவம் வந்துடுச்சு. "நம்ம ஒடம்பு இருக்குற நெல நமக்குத் தெரியும்! எல்லாம் அவுங்கவுங்க ஒடம்புக்கு வந்தாத்தாம் தெரியும்!"ன்னாரு பெரியவரு.
            "பாத்தியாடீயம்மா! நமக்கும் அந்தக் கெதி வாரணும்னு நெனைக்குறாரு. அதாங் புள்ளீயோ கொணம் பண்ணிக் கொண்டாந்து வுட்டுப்புட்டுங்க யில்லே. பெறவு ன்னா ஒடம்பு இருக்குற நெல, ஒடம்பு இல்லாத நெலன்னுகிட்டு?"ன்னுச்சு செயா அத்தை.
            "அதெ வுடு யக்கா! எல்லாம் ஒடம்பு முடியா கொறைத்தாம். ஒடம்பு பலவீனப் பட்டுட்டா மனசும் பலவீனப்பட்டுடும். பெறவு மனசு சொல்றதெ ஒடம்பும் கேக்காது. ஒடம்பு சொல்றதெ மனசும் கேக்காது. ரண்டும் ஒண்ணுக்கொண்ணு பெரண்டுகிட்டு இப்பிடித்தாம் ஆவுறாப்புல ஆயிடும். பிடிச்ச எடத்துல இருக்கட்டும். நீயும் இவ்வேம் குமாருக்குக் கலியாணம் ஆவட்டும். இஞ்ஞ குடும்பத்தெ வெச்சிப்புட்டு அஞ்ஞ யத்தானோட போயிக் கெடக்கலாம். கொஞ்சம் பொறு. எல்லாம் நல்ல வெதமா நடக்கும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெத்தாம்டாம்பீ நாமளும் நெனைச்சிக்கிட்டுக் கெடக்குறேம். வேற வழியில்ல. இவுகள அஞ்ஞ வுட்டுப்புட்டு இஞ்ஞ நமக்கு அதெ நெனைப்பாவே இருக்கு. தெனமும் கோழிக்கனாத்தாம். இப்போ இந்தப் போனை ஏற்பாடு பண்ணி வெச்சிருக்காம். இத்து ஒண்ணுத்தாம் கொஞ்சம் ஆறுதல்ன்னு வெச்சுக்கோயேம். நித்தமும் அதெ போட்டுப் பேசிக் கேட்டுக்க வேண்டியதுதாங்! செரி இப்பிடியே பேசிப் பேசியே நேரமாயிப் போடும். எலே குமாரு! கெளம்பித் தொலைடா! ஆட்டோ வேற ரொம்ப நேரமா காத்துக்கிட்டு நின்னுட்டு கெடக்கு. வெரசா கெளம்புன்னா ஒங்கள வுட்டுப்புட்டு இஞ்ஞ வேற வந்தாவணும். நீஞ்ஞளும் வெரசா அஞ்ஞப் போயி வுட்டுப்புட்டுத் திரும்பிப்புடலாம்!"ன்னுச்சு செயா அத்தை.
            "மாடு கண்ணுக, வூட்டு வேலைகளப் பாத்துட்டுக் கெளம்புறதுன்னா சுலுவா? இந்தா கெளம்பிக்கிட்டே இருக்கிறேம்மா!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "இவ்வேம் ஒருத்தெம்! இஞ்ஞ வூட்டுல பாக்குற வேலை அத்தனையும் நாம்ம. இவ்வேம் கெடந்து அலட்டிப்பாம். அத்து மாமா அஞ்ஞயிருந்து ஆட்டோவக் கெளப்பிக்கிட்டு வந்து நிக்குதுன்னா இவ்வேம் ன்னவ்வோ கலெக்கடரு வேலப் பாக்குறாப்புல அலமலந்துப்பாம்! கெளம்புடா வெரசா!"ன்னு சத்தத்தெ போட்டுச்சு செயா அத்தை.
            "இந்தா! ந்தா!"ன்னு குமாரு அத்தான் பட்டனைப் போட்டுக்கிட்டு கெளம்பி வந்துச்சு.
            "மாமா! சாப்பாட்ட முடிச்சிப்புடலாம்!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "அதல்லாம் வேணாம்பீ! நீயி நமக்கு திருவாரூர்ல ந்நல்ல ஓட்டல்லப் பாத்து வாங்கிக் கொடு! இஞ்ஞ வாணாம்! அஞ்ஞயே நாம்ம சாப்புடுவேம்!"ன்னாரு பெரியவரு.
            "பாத்தீயடாம்பீ! இஞ்ஞ பொங்கி வெச்சிருக்குற சோத்த என்னத்தெ பண்ணுறது? இப்பிடி பண்ணுறாரேடாம்பீ!"ன்னுச்சு செயா அத்தை.
            "அதெ வுடுங்க யத்தாச்சி! நாம்ம இருக்கேம்ல. நாம்ம ரண்டு பேரும் சாப்புடலாம். இப்போ அவுங்க யண்ணேம் மனசுப்படி ஆவட்டும்! ஒண்ணும் கொறைப்பட்டுக்காதீங்க!"ன்னுச்சு வெங்கு.
            "இனுமே கொறைபட்டுக்க என்னத்தெ இருக்கு! கெளம்பச் சொல்லு!"ன்னுச்சு பாருங்க செயா அத்தை. பெரியவரு அவராவே யாரோட கைத்தாங்கலும் இல்லாம நடந்துப் போயி ஆட்டோவுல உக்காந்துட்டாரு.
            "பாத்தீயா நடைய? இதுவே நாம்ம எழுந்திரிச்சி உக்காருன்னு சொன்னாலும் உக்காராது!"ன்னுச்சு அதெ பாத்துப்புட்டு செயா அத்தை.
            பெரியவர்ர மையமா உக்கார வெச்சிக்கிட்டு ரெண்டுப் பக்கமும் தாங்கலா சுப்பு வாத்தியாரும், குமாரு அத்தானும் உக்காந்தப் பிற்பாடு ஆட்டோ கெளம்புனுச்சு. ஆட்டோ கெளம்புறப்போ பெரியவரு, போயிட்டு வர்றேம்ன்னு கூட ஒரு வார்த்தெ சொல்லல.மித்த எல்லாரும் போயிட்டு வர்றேம், பத்திரமா இருங்கன்னு சொல்றாங்க. பெரியவரோட மனசு சென்னைப் பட்டணத்த நோக்கி போவ ஆரம்பிச்சிடுச்சு. அவரோட மொகத்துல சந்தோஷம் தாங்கல. செயா அத்தை கண்ணுல கண்ணுத் தண்ணி தாங்கல.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...