செய்யு - 447
சென்னைப் பட்டணம் போன பெரியவருக்கு மின்னாடி
இருந்த நெலமைய விட கொஞ்சம் கொணம் கண்டுச்சு. கொஞ்சம் இழுத்தாப்புல பேச ஆரம்பிச்சாரு.
யாராச்சிம் கைத்தாங்கலா பிடிச்சிக்கிட்டா நடமாடவும் செஞ்சாரு. ஆஸ்பத்திரியில கொணம்
கண்ட பிற்பாடு அவரு சந்தானம் அத்தான் வூட்டுக்குத்தாம் வர வேண்டியதாப் போச்சு. அதாச்சி,
தனம் அத்தாச்சியோட வூட்டுக்கு. தன்னோட உசுர இருக்குற வரைக்கும் எங்கப் போவக் கூடாதுன்னு
நெனைச்சிருந்தாரோ அங்க போறாப்புல ஆயிடுச்சு. அதுதாங் காலம். யார்ர எளக்காரமா நெனைக்கிறோமோ
அவுங்க உபயோகமா ஆவாங்க. யார்ர உபயோகமா நெனைக்கிறோமோ அவுங்க பைசா காசிக்குப் பிரியோஜனம்
இல்லாதவங்களா ஆவாங்க.
தனம் அத்தாச்சிக்கு பழசெல்லாம் ஞாபவமும்
இல்ல. அதெ ஞாபவம் வெச்சிக்கிற அளவுக்கு அத்தோட மனசும் கெடையாது. அத்து ஒரு மாதிரியான
வெள்ளந்தியான மனசுக்காரி. விட்டேத்தியா இருக்குற ஆளு. மாமனார்ர நல்ல வெதமா பாத்துக்கிடுச்சு.
சந்தானம் அத்தானுக்கு ஒரு பொண்ணு, ஒரு புள்ளே. ரெண்டு பேரும், தாத்தா தாத்தான்னு உசுரையே
வுட்டதுங்க. நேரா நேரத்துக்கு மாத்திரையக் கொடுக்குறது, பழங்களப் பிழிஞ்சிக் கொடுக்குறது,
ஆகாரத்தெ ஊட்டி வுடுறதுன்னு பாசத்தைக் கொட்டுனதுல பெரியவரு சந்தானம் அத்தான் வூட்டை
வுட்டு வேற யாரு வூட்டுக்கும் போவ மாட்டேன்னுட்டாரு. கொழறுற வாயோட பெரியவரு கொழந்தைகளுக்குக்
கதைகளையும் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. பேசிக்கிட்டெ கெடந்த ஆளில்லையா. அந்தப் பேச்சே
அவரை முக்காவாசிக்குக் கொணம் காண வெச்சிது.
ஆறு மாச காலம் வரைக்கும் பெரியவரோட பொழுது
இப்பிடியா கொணம் பண்ணுறதுல ஆஸ்பிட்டலுக்கும், சந்தானம் அத்தானோட வூட்டுக்குமா இருந்துச்சு.
ஒரு கட்டத்துக்குப் பெறவு இதுல இங்கிலீஷ் வைத்தியம் அவ்வளவா சொகப்படாதுன்னு, தெரிஞ்சவங்க
பழகுவனங்க சொன்னதெ வெச்சி ஆயுர்வேத வைத்தியத்தை சந்தானம் அத்தான் தன்னோட வூட்டுல
வெச்சப்படியே அப்பங்காரருக்குப் பண்ணுச்சு. அவரு ஆயுர்வேத டாக்கடரு வூட்டுக்கே வந்துப்புடுவாரு
தொணைக்கு ரெண்டு பேர்ர வெச்சிக்கிட்டு. அவரு வந்து வைத்தியம் பண்ணிட்டுப் போறதுக்கு
ஆயிரத்துக் கணக்குல சந்தானம் அத்தான் செலவு பண்ணிச்சு.
அந்த டாக்கடருக்குத் தோதா அவரு சொல்லிட்டுப்
போற கொடுத்துட்டுப் போற எண்ணெயை காய்ச்சி வெச்சிருக்கணும், வெந்நிய எடுத்துத் தயாரா
வெச்சிருக்கணும். இதெல்லாம் தனம் அத்தாச்சியோட வேல. அவரு வர்றதுக்கு மின்னாடியே இதையெல்லாம்
செஞ்சு வெச்சிடும் தனம் அத்தாச்சி. வெளியில இதுக்குன்னே பெரியவர்ர வெச்சிக் குளிப்பாட்டி
ஒடம்ப நீவி வுடுறாப்புல ஒரு மர பெஞ்சைப் பெரிசா செஞ்சி அந்தாண்ட இந்தாண்ட பெரண்டு விழுந்துடாதபடி
ரெண்டு பக்கத்துக்கும் தடுப்பெல்லாம் வெச்சிச் செஞ்சிக் கொண்டாந்து போட்டிருந்துச்சு
சந்தானம் அத்தான்.
சந்தானம் அத்தான் அப்போ மதுரவாயல்ல ஒரு
பெரிய எடத்த வாங்கி பங்களா போல வூட்டைக் கட்டி மாடி அத்தோட மேல ரெண்டு வூடுகளப் போட்டு
வாடகைக்கு வுட்டிருந்துச்சு. அந்த வூட்டோட வடவண்டை மூலையிலத்தாம் முருங்கெ, மாதுளம்,
சப்போர்ட்டா, மாமரம்ன்னு வெச்சி நல்லா வளத்து வெச்சிருந்துச்சு. அங்கத்தாம் கட்டில
போட்டு குளிப்பாட்ட கொள்ள, ஒடம்ப வசதியா நீவி வுட எடம் இருந்ததால அங்க மரபெஞ்ச போட்டுக்
குளிப்பாட்டி பண்ண வேண்டிய வைத்தியத்தைப் பண்ணதுல அங்க வெச்சிருந்த அத்தனெ மரமும் வெந்நித்
தண்ணிச் சூட்டுக்குச் செத்துச்சோ? கலந்துப் போயி வேர்ல சேர்ந்த மருந்து கலவையிலா
பட்டுச் செத்துச்சோ? தெரியல. எல்லாம் கருவி போயி, பட்ட மரமாயிட்டுங்க. சென்னைப் பட்டணம்
போறப்பல்லாம் தனம் அத்தாச்சி அதெ காட்டிக் காட்டி பெரியவருக்குப் பண்ண அத்தனை வைத்தியத்தைப்
பத்தியும் சொல்லும்.
சென்னைப் பட்டணம் போயி ஒம்போது மாசத்துக்குப்
பெறவு ஓரளவுக்கு ஒடம்பு தேறிட்டாரு பெரியவரு. அவரு இருந்த நெலமைக்கு இப்போ ரொம்ப
நல்ல கொணம் கண்டுட்டாரு. நல்லா கரவு செரவா இருந்தா ஆளு இப்போ பாக்குறதுக்கு உப்பிப்
போயி பழுத்தப் பழம் போல இருந்தாரு. தோலு கூட நல்லா மினுமினுன்னு இருந்துச்சு. பட்டணம்
பிடிக்காத ஆளாச்சே பெரியவரு. அதால குணம் காணுற வரைக்கும் வெச்சிருந்தது போதும், கெராமத்துல
பிடிச்சாப்புல கொண்டு போயி வுட்டுப்புடலாம்ன்னு ஒரு முடிவு. பிடிச்ச இடத்துல இருக்குறப்போ
கொணம் பண்ணுறத்துக்கு மருந்தே தேவையில்ல இல்லியா.
அப்போ சந்தானம் அத்தான் வேகன்ஆர் காரு
ஒண்ணுத்தெ புதுசா வாங்கியிருந்துச்சு. அந்தக் கார்ல உக்கார வெச்சி வேலங்குடிக்குக்
கொண்டாந்து வுட்டுச்சு. அத்தோட வேலங்குடிக்குப் பேசுறதுக்கு வசதியா லேண்ட்லைன் போனையும்
ஏற்பாடு பண்ணி வுட்டுச்சு. செயா அத்தை, சுப்பு வாத்தியாரு எல்லாத்துக்கும் சந்தோஷம்னா
சந்தோஷம் அப்பிடியொரு சந்தோஷம். சென்னைப் பட்டணம் போனவரு அப்பிடியே போயிச் சேந்துடுவாரோங்ற
பயம் எல்லாத்துக்கும் இருந்துச்சு. இப்போ கெழங்காட்டம்லா ஊரு வந்து சேந்திருக்காரு,
வூடு திரும்பியிருக்காரு. அவரு அப்பிடி ஊரு திரும்புனதுல காக்கா புள்ளையிலேந்து, எதுத்த
வூட்டுச் செட்டியாரு வரைக்கும் எல்லாத்துக்கும் மனசுல நெறைவு. சுப்பு வாத்தியாரு குடும்பத்தோட
போயிப் பாத்து குதூகலமா திரும்புனாருன்னுத்தாம் சொல்லணும்.
அவரு வேலங்குடிக்கு டிவியெஸ்ல போயி திரும்பி
நாலு நாளு ஆயிருக்காது. ஒரு நாளு காலங்காத்தால குமாரு அத்தான் வேலங்குடியிலேந்து சைக்கிள்ல
திட்டையில வந்து நிக்குது. கையில துண்டுல சுத்துன ஒரு பிஸ்கொத்துப் பாக்கெட்டு இருக்குது.
அதெ வெங்குகிட்டெ கொடுத்துப்புட்டு, "மாமா எஞ்ஞ?"ங்குது.
"மாமா வயக்காடு வரைக்கிம் போயிருக்காரும்பீ!
சித்தெ உக்காருங்க! டீத்தண்ணியப் போடுறேம். நீஞ்ஞ குடிச்சி முடிக்கிறதுக்குள்ள வந்துப்புடுவாரு!"ன்னு
வெங்கு சொல்லி முடிக்கிறதுக்கு மின்னாடி குமாரு அத்தான் சைக்கிள்ல பாய்ஞ்சு உக்காந்து,
வயக்காட்டுப் பக்கம் போயி, அங்கேயிருந்து கெளப்பிக்கிட்டு நேரா வேலங்குடிக்குப் போயிடுச்சு.
சுப்பு வாத்தியார்ர வூட்டுக்கு வந்து வேலங்குடிக்குப் போயிட்டு வர்ரேம்ன்னு சொல்லக்
கூட வுடல குமாரு அத்தாம்.
அங்கப் போயி வெசாரிச்சா, "என்னம்பீ!
பாத்துட்டுப் போயி இத்தனெ நாளு ஆவுது. வந்துப் பாக்கவே யில்லே!"ன்னு சின்னக்
கொழந்தையாட்டம் அழுவுறாரு பெரியவரு. பேசுறப்ப வாயிக் கொஞ்சம் கொழறத்தாம் செய்யுது.
இருந்தாலும் பேசுறாரு.
"வந்துப் போயி நாலு நாளு கூட ஆயிருக்காதே
யத்தாம்! நீஞ்ஞ அவசரமா கூட்டியாரச் சொன்னதால வூட்டுலயும் ஒரு வார்த்தெ சொல்லல. வாரப்பவும்
ஒண்ணும் வாங்கிட்டு வாரல. நாம்ம டிவியெஸ்ல மின்னாடி வந்தேம். அவ்வேம் குமாரு சைக்கிள்ல
பின்னாடி வர்றாம்! வெறுங்கையோட வந்து நிக்குறாப்புல ஆயிடுச்சு!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"நீயி ரோட்டுல போயி ஒரு பிடி மண்ணள்ளிக்
கொண்டாந்து கொடும்பீ! சந்தோஷமா திங்குறேம்! ஒங்கையால வாங்கி வாரணும்னு தேவயில்ல.
நாலு கல்ல கொண்டாந்து கொடுத்தாலும் நறநறன்னு திங்குறேம்பீ! ஆன்னா யம்பீ! இந்த வூட்டுல
ஒரு நிமிஷம் கூட நம்மாள இருக்க முடியா. அவ்வேம் மூத்தவங்கிட்டெ போன போட்டுச் சொல்லிட்டேம்.
இந்தா வர்றேம், அந்தா வர்றேம், இன்னைக்கி வர்றேம், நாளைக்கி வர்றேங்றாம். ஆன்னா வாரக்
காங்கல. அதாங் நமக்கு இருப்புக் கொள்ளல. குமாருட்டச் சொல்லி யிப்ப மாமா வாரச் சொல்றீயா?
யில்ல நாம்ம எழுந்துப் போவவான்னேம். பயெ கெளம்பி ஒன்னயக் கொண்டாந்துட்டாம்!"ன்னாரு
பெரியவரு தழுதகுத்துக்கிட்டெ, கொரலு கொளறிக்கிட்டெ.
"ஒண்ணுமே புரியலைய யத்தாம்! கெராமம்தாம்
பிடிக்கும்பீங்க! கெராமத்துலத்தாம் நம்ம கட்டெ வேகணும்பீங்க! இஞ்ஞ இருக்கப் பிடிக்கலங்ற
மாரில்லா பேசுதீயே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
பெரியவரு கண்ணுலேந்து தண்ணித் தண்ணியா
தெரளுது. "ந்நல்லா கேளுடா யம்பீ! அவ்வேம் சந்தானம் கொண்டாந்து வுட்டுப்புட்டு,
நீஞ்ஞல்லாம் வந்துப் பாத்துட்டுப் போனதிலேந்து இத்தே பேச்சுத்தாம்டா யம்பீ! இந்த மனுஷம்
யில்லாம எத்தனெ நாளு நொந்துப் போயிருப்பேம். கட்டுன நாள்லேர்ந்து இவர்ர பிரிஞ்சி
இவ்ளோ நாளு இருந்தது கெடையாது. இருந்தேம்.
ஏம்? இவரு பாத்து வளத்த மாடுக கண்ணுக, வாங்கிப் போட்ட நெலபுலம்ங்கலாம் இவரு போனதுக்குப்
பிற்பாடு போயிடுச்சுன்னு ஒரு வார்த்தெ வந்துப்புடக் கூடாதுன்னு உசுர்ரக் கொடுத்து
மெனக்கெட்டேம். இப்போத்தாம் மவராசன் வந்துப்புட்டாரேன்னு மனசு பூரிச்சிக் கெடந்தா,
இஞ்ஞ இருக்க முடியாதாங். வெளிக்கிப் போவக் கொள்ள கக்குஸ் பக்கத்துல யில்லாம செருமமா
இருக்காம். தொணைக்குப் பேச கொள்ள வெளையாட புள்ளியோ இல்லையாம். பொழுது போவ மாட்டேங்குதாம்.
மாடு கண்ணுகப் பக்கம் உக்காந்துகன்னா வாடையா அடிக்குதாங். இந்தக் கூத்த நாம்ம எஞ்ஞப்
போயிச் சொல்ல? இப்பிடிப் பண்ணுறார்டாம்பீ! நம்மளப் போட்டு படுத்துறார்டாம்பீ! அந்தாண்ட
இந்தாண்ட நம்மள நவுற வுட மாட்டேங்றார்டாம்பீ! இப்பிடியிருந்தா நாம்ம எப்பிடி வூட்டுல
மித்த மித்த வேலைகளப் பாக்குறது? மாடுக அத்தனெ, மனுஷம் ஒருத்தரு இப்பிடின்னா நாம்ம
என்னடாம்பீப் பண்றது? ஒண்ணும் வெளங்க மாட்டேங்குது. பித்துப் பிடிச்சாப்புல ஆவுது!"ன்னுச்சு
செயா அத்தை.
"பட்டணம் பழகிப் பிடிச்சிப் போச்சு.
கெராமம் வெலகி வெறுத்துப் போச்சு. அந்தாண்ட இந்தாண்ட கெராமத்த வுட்டு நகர மாட்டேம்னு
அடம் பிடிச்ச ஆளு. இன்னிக்குக் கெராமம் வேணாமின்னு அடத்தெ பண்றாரு!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"அத்து கூட பரவால்லடாம்பீ! அந்த தனத்துப்
பொண்ண ன்னா பேச்சுப் பேசுவாரு. அத்து வூட்டுப்பக்கம் தலயெடுத்துப் படுக்க மாட்டேம்பாரு.
இன்னிக்கு ன்னான்னா மருமவ்வே அவ்வே தனம் பாத்துக்கிடறது மாதிரிக்கி நாம்ம பாத்துக்கிடலியாம்.
காலங்காத்தாலயே நம்மளப் போட்டு திட்ட ஆரம்பிச்சிடுறார்டாம்பீ! ஒரு நாளு ரண்டு நாளு
தாங்குனுச்சுடாம்பீ அந்த திட்டுகள மனசு. இப்போ அப்பிடியே வெறுத்துப் போவுதுடாம்பீ
மனசு. நொறுங்கிப் போவுதுடாம்பீ நெஞ்சு. இந்த ஆளு ஏம் இஞ்ஞ வந்தாருன்னு நெனைக்கத்
தோணுதுடாம்பீ!"ன்னுச்சு செயா அத்தை.
இப்பிடித்தாம் நெலமெ ஒண்ணுக்கு மண்ணடியா
போயிடுது எதிர்காலத்துல. சுப்பு வாத்தியாருக்கு என்னத்தெ பேசுறதுன்னே தெரியல. மனுஷனாப்
போறந்தவன் எதிர்காலத்த பத்தி மட்டும் எதையும் பேசக் கூடாது போலருக்கு, அப்பிடிப்
பேசுனா அதுக்கு நேர்மாறத்தாம் எதிர்காலம் போவும் போலருக்குன்னு நெனைச்சிக்கிட்டாரு
சுப்பு வாத்தியாரு. அவரு ஒண்ணும் பேயாம உக்காந்திருக்கதெப் பாத்து வேலங்குடி பெரியவரு
அப்பிடியே உக்காந்த வாக்குலயே நவுந்து வந்து சுப்பு வாத்தியாரோட கையிங்க ரெண்டையும்
இறுக்கமா பிடிச்சிக்கிட்டாரு. பிடிச்சவரோட கண்ணுலேந்து கண்ணுத் தண்ணி பொங்கிட்டு
வருது. அதுக்கான அர்த்தம் வேலங்குடிய வுட்டு சென்னைப் பட்டணத்துக்கு எப்பிடியாவது நம்மள
அனுப்பி வுட்டுப்புடுங்றதுதாம். கைய பிடிச்சவரு அப்பிடியே இப்போ சுப்பு வாத்தியார்ர
இறுக கட்டி அணைச்சிக்கிட்டாரு. கையும் காலும் இப்போ அவருக்குக் கொஞ்சம் ஓட்டம் நல்லாத்தாம்
இருக்குதுங்றது சுப்பு வாத்தியாருக்கு வெளங்குது. கட்டிப் பிடிச்சிட்டு வெலகுனவரு கண்ணுப்
பார்வையே அங்க வெச்சிருக்கிற லேண்ட்லைன் போனை நோக்கிக் கொண்டு போறாரு. அதுக்கான
அர்த்தம் போனைப் போட்டு சென்னைப் பட்டணத்துக்குப் பேசுங்றதுதாம். நாம்ம பேசித்தாம்
நம்ம மவ்வேன் கேக்க யோசிக்கிறாம், மச்சாங்காரனான நீயி பேசுனாலாவது மாமா பேசுதுன்னே
அதுக்குக் காது கொடுக்குறான்னான்னு பாக்கலாங்ற ஏக்கத்தோட வெளிப்பாடு அத்து.
இத்து நல்லா புரியுது செயா அத்தைக்கி.
"பாத்தியாடாம்பீ! வந்ததும் வாரதுதமா ஒங் குடும்பத்தெ பத்திச் வெசாரிக்கில. மாடு
கண்ணு நெல புலங்க எப்பிடி இருக்குன்னு கேக்கல? அஞ்ஞப் போவணும். அது மட்டுந்தாம் மனசுல
நிக்குது. ஒரே பிடிவாதம்தாம். ரா முச்சூடும் தூங்றதில்ல. இதெயே கொழறிகிட்டும், ஒளறிக்கிட்டும்,
நமக்கு அப்பிடியே பைத்தியம் பிடிச்சிடும் போலருக்குடாம்பீ! நீயே பேசி வுட்டு அஞ்ஞ
கெளப்பி வுட்டுடா! நாம்ம இப்பிடியே இஞ்ஞயே கெடந்து இதெ பாத்துக்கிட்டுக் கெடந்துக்கிறேம்!"ன்னுச்சு
செயா அத்தை.
செயா அத்தை அப்பிடிப் பேசுனதுதாம் பெரியவரோட
மொகத்துல லேசான சிரிப்பு வந்துப் போவுது. "பாருடாம்பீ! மொகத்த பூரிச்சிப் போவுறதெ?
இஷ்டப்பட்ட எடத்துல கஷ்டப்படாம கெடந்துட்டுப் போவட்டும் போ! நாம்ம இனுமே என்னத்தத்தாம்
ஒம்மட யத்தானப் பாத்துக்கிட்டாலும் அதுல குத்தங் கொறைதாம் படும். வேண்டாத மருமவ்வே
கை பட்டா குத்தம், காலு பட்டா குத்தங்ற மாதிரிக்கி, மாமியா ஒடைச்சா மண்ணு சட்டி, மருமவ்வே
ஒடைச்சா பொன்னு சட்டிங்ற மாதிரிக்கித்தாம் இனுமே ஆவும். மொகம் முறிஞ்சிக் கொண்டு
போயி வுடறதுக்குள்ள நாமளே முந்திக்கிடறதுதாம் நல்லதுடாம்பீ!"ன்னுச்சு செயா அத்தை.
பெரியவரோட மனசு நெலை கொள்ளாம தவிச்சிருக்கும்
போலருக்கு. திரும்ப திரும்ப போனையேப் பாத்துட்டு இருந்தாரு. "இருங்களேம்! நமக்கென்ன
அத்துல பேசவா தெரியும்? அவ்வேம் குமாரு வரட்டும். அவனுக்குத்தாம் அதுல போட தெரியும்.
பேசத் தெரியும். அதையே பாத்துக்கிட்டுக் கெடந்தா? அவ்வேம் வந்து போட்டுத் தரட்டும்.
யம்பீ பேசுவாம். பேசி இன்னிக்கு ராத்திரியே கெளப்பி வுட்டாலும் சரித்தாம்! இல்லன்னா
நாளைக்கி ஒரு நாளைக்கு பொறு சாமீ! நம்மட உசுரெ வாங்காதீயே!"ன்னுச்சு செயா அத்தை.
அதுக்குள்ள குமாரு அத்தானும் சைக்கிள மிதிச்சிக்கிட்டு
வந்து சேந்துச்சு. சடடைக் காலரச் சுத்திப் போட்டிருந்த துண்டெ எடுத்துக்கிட்டு பெருமூச்சு
வுட்டபடி சைக்கிள ஸ்டாண்டு போட்டு நிறுத்திப்புட்டு உள்ளார வந்துச்சு.
"அதெ யாங் கேக்குறே மாமா? அண்ணேங்
கொண்டாந்து வுட்டுப்புட்டுக் கெளம்புன மறுநாளு ராத்திரி ஆரம்பிச்ச அழிச்சாட்டியந்தாம்
மாமா! இன்னிய வரைக்கும் ஓஞ்சிருக்காதே. மிடியல மாமா. அதாங் என்ன வேலைய கெடந்தாலும்
பரவாயில்லன்ன ஒன்னய கெளப்பிக் கொண்டாந்துச்சு மாமா!"ன்னிச்சு குமாரு அத்தான்.
"யத்தானுக்கு ஒரே ஏக்கமா இருக்கும்
போலருக்குடாம்பீ! கொழந்தயா பொறக்குற மனுஷன் கடெசிக் காலம் நெருங்குறதுக்கு மின்னாடி
கொழந்தையா போயிடுவாம்ன்னு சொல்லுவாங்கடாம்பீ! கொழந்தையா பொறக்குறவேம் கொழந்தையாத்தாம்
போயிச் சேருறாம். கொழந்தைங்களோட கொணமே பிடிவாதந்தாம். அதெ சமாளிக்க முடியா. அதுக
போக்குலத்தாம் விட்டாவணும். யத்தான் இப்போ பிடிவாதமா நிக்குறாரு. நாளைக்கிப் பின்னாடி
அவரோட ஆசைப்படி வுடாம போயிட்டேம்ன்னு நமக்கும் ஒரு மனக்கொறை வந்துப்புடபடாது பாரு.
அதால அஞ்ஞ சந்தானத்துக்கிட்டெ பேசி கொண்டு போயி வுட்டுப்புடுறதுதாங் நல்லதா நமக்குப்
படுது. யக்காவும் கிட்டதட்ட அதெ நெருங்குறாப்புலத்தாம் இந்நேரம் வரைக்கும் பேசுனுச்சு.
ஒங் கருத்தையும் சொல்லிப்புட்டீன்னா ஒரு முடிவாயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ன்னா மாமா நீயி நம்மளக் கேட்டுகிட்டு?
அதுக்காகத்தான வேல மெனக்கெட்டு கருக்கலங்காட்டியும் சைக்கிள மிதிச்சிக்கிட்டு ஒன்னயக்
கூப்டாந்திருக்கேம். ஒம் முடிவுதாங் மாமா. நமக்கு இதுல ன்னத்தெ தெரியும்? இதுல்லாம்
அனுபவப்பட்ட நீந்தாம் மாமா ஒரு முடிவெ எடுத்தாவணும். யப்பா அப்போ நல்லா இருந்தப்பவே
சொல்லும், காலங் கடந்துகிட்டு இருக்குடா, மாமா சொல்றபடி கேட்டுக்கிட்டு கட்டுச்செட்டா
நடந்துக்கிடணும்னு! நீயா என்னத்தெ செய்யணுமோ பாத்து அதெ செய்யு மாமா!"ன்னுச்சு
குமாரு அத்தான்.
சுப்பு வாத்தியாரு ஒரு ரெண்டு நிமிஷம்
மனசெ அங்க இங்க அலைபாய வுடாம நெதானிச்சாரு. பெறவு குமாரு அத்தானப் பாத்து, "சந்தானத்துக்குப்
போனைப் போடுறாம்பீ! பேசுவேம்!"ன்னாரு.
*****
No comments:
Post a Comment