12 May 2020

ஆட்டோங்றது ஆம்புலன்ஸோட ரூபம்!

செய்யு - 446        

            திருவாரூரு தியாகராசரு கோயிலச் சுத்திதாம் ஒரு காலத்துல திருவாரூரு. பிற எடங்க எல்லாமும் கெராமத்துத் தெருக்க மாதிரி இருந்த ஊரு. இப்போத்தாம் நெலமெ மாறியிருக்கு. அதுக்கு டவுனோட மொகம் வந்துகிட்டு இருக்கு. இருந்தாலும் அந்தக் கோயிலச் சுத்தி குடியிருக்குறதுல இப்பவும் ஒரு பெருமெதாம் சனங்களுக்கு. கோயிலச் சுத்தி தெக்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதின்னு நாலு வெதமான வீதிங்க. கோயிலோட மேலவீதிய ஒட்டுனாப்புல தெப்பக்குளம். கோயிலுக்கு எதுத்தாப்புலயே தெப்பக்கொளம் உள்ள அபூர்வமான ஊர்ல திருவாரூரும் ஒண்ணு. ஆர்குடியில இப்பிடி இருக்காது. கோயிலு ஒரு பக்கம் இருக்கும். தெப்பக்கோளம் அது ஒரு பக்கம் இருக்கும். ரெண்டுக்கும் இடையில ரெண்டு பர்லாங் தூரமாவது இருக்கும். திருவாரூரு கோயிலச் சுத்தின நாலு வீதியிலயும் டாக்கடருமாரு ஆஸ்பத்திரிகளாப் போயிடுச்சு. சாமியும் டாக்கடரும் ஒண்ணுங்றதாலயோ என்னவோ கோயிலும் கிளினிக்கும் இப்பிடி ஒண்ணா போயிக் கெடக்குதோ என்னவோ திருவாரூர்ல. இந்த நாலு வீதியிலயும் கோயிலுக்கு வர்ற கூட்டம்ன்னும், கிளினிக்கு வர்ற கூட்டம்ன்னும் எந்நேரத்துக்கும் எப்பவும் இப்போ கூட்டமாதாம் இருக்கு.
            கோயிலச் சுத்திப் பெருகுன கிளினிக்கும், ஆஸ்பிட்டலும் ‍அடுத்ததா தெப்பக்கொளத்தையும் சுத்த ஆரம்பிச்சிடுச்சு. இப்போ தெப்பக் கொளத்தைச் சுத்திலும் கூட்டமாத்தாம் இருக்கு. கோயிலுக்கோ தெப்பக் கொளத்துக்கோ போனா கிளினிக்க சுத்துற மாதிரியும், கிளினிக்குக்குப் போனா கோயிலையோ, தெப்பக்கோளத்தையோ சுத்துற மாதிரி ஆயிடுது. கிளினிக்லப் போயி டாக்கடர்ர பாத்துட்டு அப்பிடியே கோயில்ல போயி சாமிகிட்டெயும் கொணப்படுத்தி வுட்டுடுப்பான்னு வேண்டிக்கிட்டு வந்துப்புடலாம். அப்பிடியில்லன்னா சாமியப் போயி மொதல்ல கோயில்ல பாத்து  வேண்டிக்கிட்டு டாக்கடரய்யா கொணப்படுத்தி வுட்டுப்புடுங்கன்னு ஒடம்பக் காட்டிப்புட்டும் வந்துப்புடலாம். திருவாரூர்ல அது ஒரு வசதியா போச்சுது இப்போ. கோயில்லச் சுத்தியும், தெப்பக் கொளத்த சுத்தியும் கோயில் கோயிலா மொளைச்சுக்கிட்டு இருந்த நெலமெ மாறி இப்போ கிளினிக் கிளினிக்கா மொளைச்சுக்கிட்டு இருக்கு. தெப்பக்கொளத்தோட தென்னண்டைப் பக்கமா மேலண்டை மூலையில இருந்துச்சு ஏயெம்சி ஆஸ்பிட்டலு. தஞ்சாவூர்ல இருந்த பெரபலமான நாலு டாக்கடருமாருங்க இங்க திருவாரூர்ல வந்து ஆரம்பிச்ச ஆஸ்பிட்டல்ன்னு பேச்சு. திருவாரூருக்கு பெரிய ஆஸ்பிட்டலு அப்ப அதுதாங். யாருக்கு ஒடம்பு முடியலன்னு ஆட்டோவ்ல, கார்ல ஏத்தி விட்டாலும் அங்கத்தாம் போயி நிக்கும் வண்டி.
            செயா அத்தையோட சத்தங் கேட்டு ஓடியாந்த சனங்க பெரியவர்ர கைத்தாங்கலா தூக்கியாந்து மாட்டுக் கொட்டாய்ய ஒட்டிக் கெடந்த கயித்துக் கட்டில்ல போட்டு நாலு கால்லயும் நாலு பேரு தூக்குனாங்க. கிராமத்துல அதுதாங் ஒரு வசதி. கிராமத்து ரோடுகள்ல ஆம்புலன்ஸ் வர முடியாட்டியும், கிராமத்துச் சனங்களே கயித்துக் கட்டில்ல தூக்கிப் போட்டுக்கிட்டு ஆம்புலன்ஸா மாறிப்புடுவாங்க. கிட்டதட்ட பாடையில போறதுக்கு மின்னாடியே பாடையில போறப்புல போட்டு தூக்கிப் போட்டுகிட்டு ராயநல்லூரு வரைக்கும் வாய்க்கால்லயும், வரப்புலயும் வுழுந்து ஓட்டமும் நடையுமா கொண்டு போனாங்க. பின்னாலயே செயா அத்தையும், குமாரு அத்தானும் பதறியடிச்சிக்கிட்டு ஓடுனுச்சுங்க. மொறையா ஊருக்குன்னு இருக்குற ரோட்டுல போனாக்கா அது நாப்பது சுத்து சுத்தி நாலு மணி நேரம் கழிச்சுத்தாம் மெயின்ரோட்டுல கொண்டு போயி வுடும். அத்தோட கப்பி பெரண்ட ரோடுக வேறய்யா. தூக்கிட்டுப் போற ஆளுங்கல ரண்டு பேரு தடுமாறி வுழுந்தாலும் பெறவு அவுங்கள தூக்க இன்னும் ரெண்டு கயித்துக் கட்டிலும் அதுக்கு ஒரு எட்டும் பேரும் தேவையாப் போயிடும்.
            கிராமத்து ஆளுங்களுக்குக் காலு சக்கரம் மாதிரி. அப்போ வரைக்கும் வண்டிச் சக்கரம் வரணும்ன்னா செருமப்பட்டுத்தாம் வரணும் வேலங்குடிக்கு. அப்பிடியான ஊர்ல இருக்குற சனங்களுக்கு காலு சக்கரமாத்தாம் மாறிப் போயிடும். அவுங்க எல்லாம் நடக்குறது ஓடுறது போல இருக்கும். ஓடுறது பறக்குறது போல இருக்கும். தூரம் அவுங்களுக்கு எப்பவும் ஒரு பெரிய விசயமில்ல. அப்பிடியே திருவாரூருக்கே தூக்கிட்டுப் போன்னு சொன்னாலும் நலுங்காம கொள்ளாம தேர்ல வெச்சிக் கொண்டு போறாப்புல கொண்டு போயிடுவாங்க. குறுக்கால வயக்காட்டுல பூந்து போன்னு சொன்னாக்கா அவுங்களுக்கு ஏரோ பிளான்ல பறக்க மாதிரிக்கி. அன்ன வேகத்துல வயக்காட்டு ஒத்தையடிப் பாதையில சிட்டா பறக்கும் சனங்க. அப்பிடிச் சிட்டா பறந்து போயி மெயின்ரோட்ட பிடிச்சாக்கா, மெயின்ரோட்டுல எதேச்சையா வந்த ஆட்டோவுல தூக்கிப் போட்டு ஏயெம்சியில கொண்டு போயி எறக்கியாச்சு.
            ஒத்தெ ஆட்டோவுல பெரியவர்ரப் போட்டு தலைமாட்டுல செயா அத்தையும், கால் மாட்டுல குமாரு அத்தானும், டிரைவருக்குப் பக்கத்தால இந்தப் பக்கம் ஒருத்தரும், அந்தப் பக்கம் ஒருத்தருமா ஆறு பேரு ஆட்டோவுல போறாங்க.  அத்தனை பேரும் ஒரு ஆட்டோவுக்குள்ளன்னா அதாங் ஆட்டோக்காரரோட மனுசுங்றது. அந்த மனசு எத்தனெ பேருக்கு வேணும்னாலும் எடம் கொடுக்கும். நாட்டுல அரசாங்க பஸ்ஸூக்குப் பெறவு அதிகப்படியா கூட்டமா மக்கள அடைச்சிக்கிட்டு புள்ளதாச்சி மாதிரிக்கி ஏத்திட்டுப் போறது ஆட்டோக்கத்தான். ரோட்டுல ஓடுற நாலு ஆட்டோக்களப் பிடிச்சி நிறுத்தி அதுல உள்ள ஆட்கள எண்ணுணீங்கன்னா அதுல ஒரு பஸ்ல ஏத்த வேண்டிய அளவுக்கும் கூட்டம் இருக்கும். அப்பிடி மட்டும் இல்லன்னா, இந்த நாட்டுல ஓடுற பஸ்ஸூக்கு கூட்டத்தெ சமாளிக்க முடியாது. ஒரு வெதத்துல ஆட்டோங்றது மூணு சக்கர பஸ்ஸூன்னும் சொல்லலாம், மூணு சக்கரத்துல ஓடுற ஆம்புலன்ஸ்ன்னும் சொல்லலாம். வேகத்துலயும் செரித்தாம், ஆட்களச் சொமந்துக்கிட்டுப் போறதுலயும் சரித்தாம் ஆட்டோவுக்கு நிகரு ஆட்டோதாம்.

            பெரியவருக்கு வாதம் நல்லாவே இழுத்துடுச்சு. இந்தச் சேதி தெரிஞ்ச பிற்பாடு சென்னைப் பட்டணத்துலேந்து வரிசையா பெரியவரோட பட்டாளம் ஒவ்வொண்ணா வந்து ஏயெம்ஸி ஆஸ்பிட்டல்ல இறங்குனுச்சு. கையும் காலும் வாயும் இழுத்தது இழுத்ததுதான்னுட்டாங்க டாக்கடருமாருங்க. இன்னும் கொஞ்சம் மிந்நேரத்துல கொண்டாந்திருந்தா எதாச்சிம் பண்ணிருக்கலாம்ன்னு உச் கொட்டுனாங்க. டாக்கடருமாருகளுக்கு வேலங்குடி எங்க இருக்குன்னு தெரியுமா ன்னா? அவுங்க மட்டும் வேலங்குடி வந்து பாத்தாங்கன்னா உசுரோட கொண்டு வந்துச் சேத்தது ஒலக மகா அதிசயம்ன்னு புரிஞ்சிப்பாங்க. ஆன்னா அவுங்க அப்பிடிச் சொல்றதெ குத்தம் சொல்லவும் முடியாது. வைத்தியத்துல அப்பிடித்தாம். ஒரு நிமிஷம் கொண்டு போறதுல தாமசம் ஆனதால உசுரு போன கதெ நெறைய இருக்கு. அஞ்சு நிமிஷம் மின்னாடிக் கொண்டு போவ முடியாததால கொணம் பண்ண முடியாத கதைக ஆயிரம் இருக்கு.
            பெரியவருக்கு மட்டும் கொஞ்சம் நடக்குற தெராணி இருந்திருதா நடந்தே ஆட்டோவுல கொண்டாந்த வேகத்தெ வுட வேகமா வந்திருப்பாரு. அவரோட நடை அப்பிடி. அதெ வுட அப்பிடி ஓர் ஊர்ல இருந்தா நடை தானாவே வேகமாயிடும். வேகமா நடந்தாத்தான்னே ஊரு போயி, வூடு போயிச் சேர முடியும்.
            இவ்வளவு சொன்ன பிற்பாடும், டாக்கடருமாருங்க என்னத்ததாம் முடிவா சொல்றாங்கன்னு மறுக்கா கேட்டாக்கா, அப்பிடியே படுத்த படுக்கையா இருக்குறதுல உள்ள நடமாட்டத்தெ வெச்சிக்கிட்டு ஓட்டிக்க வேண்டியதுதாங்ன்னு படிமானமாச் சொல்லிப்புட்டாங்க. மரம் வளைஞ்சு வளர்றப்பவே நிமுத்துனாத்தாம் உண்டு, வளைஞ்சு வளந்த பெறவு நிமுத்த முடியாதுல்லா. பெரியவருக்கு அதுக்கான கொணம் பண்ற காலம் கடந்துப் போச்சு. பெரியவரு இருக்குற நெலையப் பாத்தா அவரப் பாத்துக்கவே ஒரு ஆளெ போட்டாவணும். வூட்டுல இருக்குற மாடுகளப் பாத்துக்கிடறதுன்னா அதுக்கு ரெண்டு ஆளப் போட்டாவணும். செயா அத்தைக்கும் வயசாயித்தாம் கெடக்குது. குமாரு அத்தானெப் பத்திச் சொல்றதுக்கு யில்ல. செயா அத்தையே வயசான காலம்னாலும் ஓடியாடி எதாச்சிம் செஞ்சிப்புடும். அதுல கால்வாசிய செய்யுறதுக்குக் குமாரு அத்தானால முடியாது. ஏதாச்சிம் செய்யலன்னு சொன்னாக்கா கோவம் பொத்துக்கிட்டு வந்துப்புடும்.
            சந்தானம் அத்தான், மாரி அத்தான், ராமு அத்தான், சுப்புணி அத்தான், பாலு அத்தான், ரவி அத்தான் இவுங்களோட மலரு அத்தாச்சி, கலா அத்தாச்சி, பாக்கியம் அத்தாச்சி அத்தோட சுப்பு வாத்தியாரையும், செயா அத்தையையும், குமாரு அத்தனையும் கூட சேத்து வெச்சிக்கிட்டு எல்லாம் ஒண்ணு கலந்துக்கிட்டதுங்க. எட்டுப் புள்ளைக இருந்தும் வேலங்குடியாரு நடுத்தெருவுல நிக்குறாப்புல ஆயிடுச்சுன்னு யாரும் நாக்குல நரம்பில்லாம பேசிப்புடக் கூடாது பாருங்க. எதாச்சிம் செஞ்சி ஆவணும்ன்னா திருவாரூர்ர வுட்டு நவுந்தாத்தாம் முடியும். இங்க இருக்குற வசதிக்கு செய்யுறதெ செஞ்சாச்சு. இனுமே அடுத்தக் கட்டத்துக்குப் போயாவணுமே. அதுக்கான யோசனைய எல்லாரும் சேந்துத்தானெ கலந்தாவணும்.
            ஒரு முடிவா மாடுகள வித்துப்புடறதுன்னு யோஜனெ பண்ணா பெரியவரு முடியாம கெடக்குற நெலையிலயும், அதாச்சி வாயிக் கோணிப் போயி பேச முடியாத நெலையிலயும் ஒடம்பப் போட்டு அப்பிடியிப்படின்னு அலமலந்துகிடுறாரு. செயா அத்தையும், "ஒடம்பு முடியாம கெடக்குறாருப்பா நம்ம மனுஷம்! அவரு ஒடம்புத்தாம் கோணிக்கிடுச்சு. மனசும் கோணிக்கிடறாப்புல ஒண்ணுத்தையும் பண்ணிப்புடாதீங்க!" அப்பிடினுச்சு. அதுக்கு மேல அந்த யோசனைய என்ன பண்ணுறது? அப்பிடியே குழியத் தோண்டி பொதைக்குறாப்புல ஆயிடுச்சு.
            பெறவு மாடுகள யாரு பாத்துக்கிடறதுன்னு கேள்வி எழுந்தப்போ, சுப்பு வாத்தியார்கிட்டெயும் அதெ தள்ளி வுட முடியாத நெல. அவரு வூட்டுல அப்பத்தாம் வெங்குவுக்கு சிறுநீரகத்துல கல்லு வந்து செருமப்பட்டாச்சுன்னு, விகடுப் பயெ அடிச்ச கூத்துல ஒத்த மாடு யில்லாம  மொத்த மாடுகளையும் வித்தாச்சு. பாக்க முடியாம மாடுகள வித்தவங்கிட்டெ போயி மாடுகளப் பாருங்கன்னா எப்பிடி முடியும்? அதுவும் ஒரு மாடு, ரெண்டு மாடுன்னா பரவாயில்ல. கெடை போல மாடுக. அத்தனையையும் வெச்சுப் பாத்துக்கிறதுக்கு நாலு கையி, நாலு காலு உள்ள நாலு மனுஷங்க இருந்தாத்தாம் முடியும். அத்தனையையும் பெரியவரும், செயா அத்தையும் ரெண்டு பேரா நின்னுப் பாத்தாங்கன்னா ரெண்டு பேரும் ரெண்டு ஆளு வேலைகள நாலு ஆளு வேகத்துல இழுத்துப் போட்டுச் செய்யுற கட்டைங்க. மாட்டப் பாக்காம கட்டைய போடாத ஆளுக.
            இன்னொரு முடிவா வேலங்குடியில இருக்குற அத்தனையையும், அதாச்சி நெல புலம், மாடுக, வூடுன்னு அத்தனையையும் வித்துப்புட்டு எல்லாத்தையும் சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போறதுன்னு. மாடுகளெ விக்குறதுக்கே சம்மதிக்காத பெரியவரு ஒட்டுமொத்தமா விக்குறதுன்னா கொஞ்ச நாளு கழிச்சுப் போற உசுரெ இப்பையே விட்டுப்புடுவார்ன்னு அதுக்கும் செயா அத்தை ஒத்துக்கிட மாட்டேனுச்சு. அத்தோட செயா அத்தை அதுக்கு இன்னொரு காரணத்தையும் சொன்னிச்சு, "ஒஞ்ஞ ஒவ்வொருத்தனும் ஆளாயிட்டீங்க. பெரச்சனையில்ல. குமாரு ன்னா பண்ணுவாம்? ஒங்கள மாதிரித்தாம் அவனையும் பெத்துப் போட்டேம். ஒங்கள மாதிரியே அவனும் இருந்திருந்தா செருமம் வந்து சேந்திருக்காது. அவ்வேம் இப்பிடி தொவாண்டாப்புல ஆவான்னு யாருக்குத் தெரியும்? அவனுக்குக் கெராமம்தாம் சுத்தப்பட்டு வாரும். பட்டணம் சுத்தப்பட்டு வாராது. அவனெ ஒரு ஆளாக்கிக் கலியாணத்தப் பண்ணி வுடணும்னா கெராமமும், வூடும், வயலும், மாடுகளும் இருந்தாத்தாம் முடியும்! அதாலயும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. எவனாச்சிம் ஒருத்தம் கெராமத்துல வமிசத்துக்கு இருந்துத்தாம் ஆவணும். அவனும் ஒடம்பு நல்லா இருந்தா பட்டணம்ன்னுத்தாம் நிப்பாம். அதாங் ஆண்டவேம் ஒம் கொலத்துக்கு ஒருத்தேம் கிராமத்துல வேணும்ன்னு அதாங் நம்மட ஐயனாரு இப்பிடிப் பண்ணிருக்கு!"ன்னு சொல்றதச் சொல்லிப்புட்டு ஒத்தக் கால்ல பிடிவாதமா நின்னுடுச்சு செயா அத்தை.
            சுப்பு வாத்தியாரு அப்போ ஒரு யோசனையைச் சொன்னாரு, "யத்தானுக்குப் பட்டணம் ஒத்து வாராது. பட்டணத்துக்குப் போவாம இதுல கொணம் காணவும் முடியாது. கொஞ்ச நாளுக்கு அஞ்ஞ கொண்டு போயி வெச்சிப் பாத்து, கொஞ்சம் கொணம் பண்ணிக் கொண்டாந்து, கொஞ்சம் நடமாட கொள்ள தனக்கு தானே ஒத்தாசெ பண்ணிக்கிடுறாப்புல விட்டீங்கன்னா யக்காவும் பயலும் சமாளிச்சிப்புடுமுங்க!" அப்பிடின்னு. அந்த யோசனைத்தாம் எல்லாத்துக்கும் சரியா பட்டுச்சு.
            செயா அத்தையும் அதுக்கு ஒத்துகிடுச்சு. "யம்பீ சொல்றதுதாம்டா செரி! அதுப்படி பண்ணுங்கடா! கொஞ்சம் செருமப்பட்டாவது ஒத்த ஆளா நின்னு மாடு கண்ணுகள, நெல புலத்தப் பாத்துக்கிடறேம். அவுகள சரி பண்ணியாந்து வுட்டீங்கன்னா போதும். காலா காலத்துக்கும் ராசா கணக்கா உக்கார வெச்சிப் பாத்துக்கிடுவேம். அப்பிடியே இவ்வேம் பயலுக்கும் ஒரு கதையெ கட்டி வுட்டுப்புட்டீங்கன்னா அத்து ஒரு மருமவ்வே பொண்ணு வந்துப்புடும். நமக்கும் ஒரு தொணையா ஆனாப்புல ஆயிடும். மாடொ கண்ணோ வயலோ வூடோ பாத்துக்கிட பெறவு செருமம் ஒண்ணும் இருக்காது. இப்போ மொத வேலையா யம்பீ சொன்னபடி ஆவட்டும்!"ன்னுச்சு செயா அத்தை.
            ஒடம்பு தெடமா இருந்தா பஸ்ஸூலயோ, ரயில்லயோ போட்டு சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போயிடலாம். படுத்தப் படுக்கையா கையும், காலும் கோணிப் போயிக் கெடக்குற ஆள எப்பிடி சென்னைப் பட்டணம் வரைக்கும் கொண்டு போறதுன்னு அடுத்த யோசனை வந்துடுச்சு. சந்தானம் அத்தாம்தாம் அதுக்கு ஒரு யோசனையப் பண்ணிடுச்சு. அப்போ திடுதிப்புன்னு அப்பங்காரருக்கு இப்பிடி ஆயிடுச்சேன்னு சந்தானம் அத்தானோட கார்லயும், வாடகைக்குப் பிடிச்ச ஒரு ஆம்னி வேன்லயுமா எல்லா சனங்களும் வந்திருந்துச்சுங்க. வாடகைக்குக் கொண்டாந்த ஆம்னி வேனும் போறப்ப போயிடலாங்ற யோசனையில ஆஸ்பிட்டலு வாசல்லத்தாம் கெடந்துச்சு.
            எதெ செய்யுறதா இருந்தாலும் கொஞ்சம் வெரசா செய்யுறது சரின்னு தோணுனதால, சந்தானம் அத்தானோட யோசனைப்படி ஆம்னி‍ வேன்ல இருந்த அத்தனை சீட்டுகளையும் கழட்டி அதெ வேன் மேல வெச்சு கட்டிக்கிட்டு, உள்ளார ஒரு மெத்தையைப் போட்டு அதுல பெரியவர்ர படுக்கப் போட்டு பக்கத்துல அந்தாண்டயும், இந்தாண்டயும் ரெண்டு பேர்ர உக்காந்திட வெச்சி சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போறதுன்னு முடிவாச்சுது. ஆம்னி வேன்ல வந்த மித்த மித்த சனங்கள கெடைக்குற பஸ்லயும், ரயில்லயும் ஏறி வந்துப்புடுங்கன்னு சொல்லிட்டு பெரியவரோட ஒரு பக்கம் சந்தானம் அத்தானும், இன்னொரு பக்கம் பாலு அத்தானும் உக்காந்துக்கிட, எந்தப் பட்டணத்துப் பக்கம் தலைவெச்சே படுக்கக் கூடாதுன்னு மனசுக்குள்ள நெனைச்சிருந்தாரோ, அந்தச் சென்னைப் பட்டணம் போனாரு பெரியவரு.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...