செய்யு - 445
இடையில சில வருஷங்க வேலங்குடி பெரியவரு
சென்னைப் பட்டணத்துக்குப் போறதில்லங்றதுல குறியா இருந்தாரு. அப்பிடியே போனாலும் ராமு
அத்தானோட எடத்துலயோ, மாரி அத்தானோட எடத்துலயோ தங்கிட்டு வந்துடுறது. சந்தானம் அத்தானோட
வூட்டுப்பக்கம் எட்டிப் பாக்குறது இல்ல. அத்து ஒரு பெரு வருத்தமா சந்தானம் அத்தானோட
மனசுல இருந்துச்சு. ஆன்னா அத்து மட்டும் தீவாளி, பொங்கல், சித்ரா பெளர்ணமின்னா குடும்பத்தோட
வேலங்குடிக்கு வந்துட்டு அப்பிடியே திட்டைக்கு வந்துட்டும் போயிட்டுத்தாம் இருந்துச்சு.
சந்தானம் அத்தான் அப்பங்காரர்ர வூட்டுப் பக்கம் வரச் சொல்லிச் கெஞ்சிப் பாத்துச்சு.
"நல்ல வெதமா குடும்பத்தெ நடத்து. ஆன்னா நாம்ம ஒம்மட வூட்டுப்பக்கம் வர மாட்டேம்!
சொன்னது சொன்னதுதாம்!"ன்னு அடிச்சிச் சொல்லிட்டாரு பெரியவரு. இதெப் பத்தி சுப்பு
வாத்தியார்கிட்டெயும் வழக்கு நடந்துச்சு. நின்னா நின்னதுதாங்ன்னு பிடிவாத்துல பெரியவர்ர
மனசு மாத்த முடியல. அதெ மாத்த முடியாதுங்றதெத்தாம் அன்னிக்கு உளுந்து பொடைக்குறப்போ
சாவைப் பத்தி தெசை மாறுன பேச்சுல பெரியவரு சொன்னாரு.
"நம்மள அந்தக் காலத்து ஆளு அந்தக்
காலத்து ஆளுங்றாங்ளே! அப்பிடி இருந்தவாசித்தாம் குடும்பத்தெ குடித்தனமா கொண்டு வார
முடிஞ்சிச்சு. வூட்டுல காலங்காத்தால சனங்க எழும்புலன்னா எந்த வேல ஆவும் சொல்லுங்க?
விடியறதுக்கு மின்னாடி சில வேலைகளப் பாத்தாத்தாம்பீ விடிஞ்ச பிற்பாடு வேலைக்குப் போயி
மித்த வேலைகளப் பாக்க முடியும். நாம்ம ன்னா ஜமீன்தாரு வூட்டுக் குடும்பமா? ஒவ்வொண்ணுத்துக்கும்
ஆளுகள வெச்சிக்கிடறதுக்கு? ஒவ்வொரு வேலையையும் நாம்மத்தான பாத்துக்க வேண்டியதா இருக்கு.
அதுக்கு அப்பிடி காலாங்காத்தால எழுந்திரிச்சிப் பாத்தாம்பீ ஆவும். பால நாம்மத்தாம்
கறந்தாவணும். அத்தே நாம்மத்தாம் டீத்தண்ணியா அடுப்பெ எரிச்சு ஆக்கியாவணும். அடுப்ப
எரிக்கணும்ன்னா அதுக்கு வெறவ நாம்மத்தாம் சேகரம் பண்ணி வெச்சிருந்தாவணும். நாம்ம ன்ன
பட்டணத்துலயா இருக்கேம்? பால நெனைச்ச நேரத்துலப் போயி கடையில வாங்கிட்டு வர? வாங்கியாந்து
கேஸடுப்புல போட்டுக் குடிக்க? செரி பால வாங்கி டீத்தண்ணிப் போட பிடிக்கலன்னா கெளப்புக்
கடையில போயி டீத்தண்ணியா ஆத்தி வாங்கிட்டு வர்ற பட்டணத்துலயா இருக்கேம்? நெல்ல வெளைவிச்சி
வாரதுலேந்து அத்தெ ஆவாட்டி அரைச்சி அரிசியா ஆக்குற வரைக்கும் ஒவ்வொண்ணும் வேல மெனக்கெட்ட
வேலம்பீ! அத்தெ பாத்தாம்பீ அடுத்த வேள சோத்துல கைய வைக்க முடியும்! கடையில போயி அரிசிய
வாங்கித் திங்குறதுகளுக்கும், அதெ ஆக்கித் திங்குறுதுக்கும் அலுப்ப பட்டுக்கிட்டுக்
கெளப்புக் கடையில சோத்தக் கட்டிக்கிட்டுத் திங்குறதுகளுக்கும் ஒழைப்பப் பத்தி என்னத்தெ
தெரியும் சொல்லுங்க?"ன்னாரு பெரியவரு.
"இப்போ எல்லாம் மாத்தம்த்தாம் யத்தாம்!
காசிய கொடுத்துப்புட்டா வாயில கொண்டாந்து ஊட்டி வுடவும் டவுன்ல ஆளு இருக்காம்! மென்னு
தின்ன தாடைய அசைச்சி வுடவும் ஆளு வந்துடுவாம் போலருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அட போம்பீ! தின்னத்தெ பீயா பிதுக்கி
வுடவும் ஆளு வருவாம்ன்ன சொல்லு! சொறுன்னா நாம்ம வெளைவிச்சி அத்தெ அரிசியாக்கித் தின்னுறது
எப்பிடி? எவனோ ஒருத்தெம் கடையில விப்பானாம், அவ்வேங்கிட்ட வாங்கித் திம்பானாம்! அத்து
எப்பிடி? அதாம்பீ மனுஷனோட கொணங் குறிகள்ளலாம் மாறுதும்பீ! நாம்ம அந்த பட்டணத்துப்
பக்கம்ல்லாம் இனுமே போறதா யில்லே! போனாலும் அந்த வூட்டுப்பக்கம் அதாங் தனத்து வூட்டுப்பக்கம்லாம்
எட்டி வைக்குறாப்புல யில்லம்பீ!"ன்னாரு பெரியவரு.
"அப்பிடில்லாம் இருக்க முடியாது யத்தாம்!"ன்னாரு
சுப்பு வத்தியாரு.
"அதெ வுடும்பீ! நீயே நெனைச்சப் பாரு!
நாம்ம பட்டணத்துக்குப் போற நாள்லேந்து திரும்பி வார்ற நாளு வரைக்கும் வெளிக்கியே போறதில்ல.
ஊருக்கு வந்த பிற்பாடு காட்டுல போறதுதாங். அடக்கி வெச்சிக்கிட்டேத்தாம் போறேம் வர்றேம்.
என்னத்தெ அந்த கருமாந்திர கக்குஸ்ல போறதுன்னு அசிங்கப்பட்டுகிட்டெ வந்துப்புடறது.
மனுஷம் நிம்மதியா வெளிக்கிப் போவ முடியுமா அஞ்ஞ? அஞ்ஞப் போயி என்னத்தெ கெடந்துக்கிட்டு?
நமக்குல்லாம் கடெசீ வரைக்கும் கெராமம்தாம்பீ! இதுல்லாம் சொகம்பீ! இந்தச் சொகத்தையில்லாம்
வுட்டுப்புட்டு அஞ்ஞப் போயிக் கெடக்கச் சொல்லுதீயா?"ன்னாரு பெரியவரு.
சுப்பு வாத்தியாருக்குச் சிரிப்பு வந்துடுச்சு
அதெ கேட்டதும். "அதுல்லாம் ஒரு பழக்கம்தாம் யத்தாம். பழகுனா செரியா போயிடும்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"என்னத்தெ பழக்கமோ! வூட்டுக்குள்ளயே
கக்குசக் கட்டிக்கிட்டு? அதுக்குப் பக்கத்துலயே சாப்புட்டுக்கிட்டு? நாம்ம சாப்புடுறப்போ
எத்தோ ஒண்ணு கக்குசுப் போறப்ப வவுத்த பெறட்டிகிட்டு வருதும்பீ! தண்ணி வேற சொர்சொர்ருன்னு
பீய்ச்சி அடிக்குதா? அத்து மூத்தரமா? கொழாயித் தண்ணியா? கொடலே வெளியில வந்து வுழுந்துப்புடும்
போ! நல்லதுதாம் அந்த தனம் பொண்ணு வந்து இந்த மாதிரிக்கிப் பிரச்சனெ பண்ணிட்டுப் போனதும்!
செருமம் வுட்டுச்சுப் பாரு!"ன்னாரு பெரியவரு.
"தங்கலன்னாலும் போயிப் பாத்துட்டு
திரும்பிக்கிட்டாவது இருந்தாவணும் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஒன்னயத்தாம் அனுப்பப் போறேம்பீ!
அதாஞ் சொல்லிட்டேம்ல. நமக்குப் பெறவு நீந்தாம்ன்னு. இன்னியிலேந்தே நீந்தாம்னு வெச்சுக்கோ.
போ! வா! பாரு! பேசு! அதாங் ஒன்னயத்தாம் தனத்துப் பொண்ணு ந்நல்லா பாத்துக்கும்லா.
செல்லப்புள்ளே மாரில்லா அழைச்சாந்து வெச்சிக்கிட்டெ நீயி! பொம்பளெ காலம்பர எழும்பிக்
கோலத்தப் போடுறதுக்கு ன்னாங்றேம்? ராத்திரியே போட்டு வெச்சுப்புட்டுத் தூங்துன்னு
கேள்விப்பட்டேம்பீ! இதெல்லாம் சொல்றதுக்கில்லே! ஒனக்குத்தாம் இதல்லாம் சரிபட்டு வரும்.
நீந்தாம் சசிக்கிக்கிட்டு இருக்க முடியும். நம்மால ஆவாதுப்பா!"ன்னாரு பெரியவரு.
"எல்லாம் மாறும் பாருங்க. மாறத்தாம்
போவுது யத்தாம்! நீஞ்ஞ ராப்பொழுதுல கோலத்தப் போட்டு வெச்சிருக்கிறதெ பேசுதீயே!
கோலத்த மட்டும் போட்டுச் வெச்சிட்டுப் போவ ஒரு ஆளு, கறி காய்கள அரிஞ்சி வெச்சிட்டுப்
போவ ஒரு ஆளு, துணி மணிகளத் தொவைச்சி வெச்சிட்டுப் போவ ஒரு ஆளு, அரிஞ்சி வெச்சுட்டுப்
போன கறிகாய்கள சமைச்சித் தந்துட்டுப் போறதுக்கு ஒரு ஆளுன்னு அஞ்ஞ பட்டணத்துக்குப்
பக்கம் வந்துப் பாத்தான்னே யத்தாம் தெரியும்! போன பண்ணிச் சொன்னா போதும் டிப்பன்
கேரியல்ல சோத்தக் கொண்டாந்து தர்றாம் யத்தாம்! ஒண்ணுஞ் சொல்றதுக்கில்லே. எல்லாம்
மாறிப் போயிடுச்சு யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெல்லாம் ஒண்ணும் மாறாது. எதுவும்
மாறலேம்பீ! நாம்மல்லாம் அந்தக் காலத்து அசாமிங்க யம்பீ! நீந்தாம் ரெண்டு கெட்டானா போயிட்டே.
நீயி வேணும்னா மாறலாம்! எப்பிடியோ மாறிப் போ! நமக்கும் அஞ்ஞ தொடர்ப வெச்சுக்க ஒரு
ஆளு வேண்டியதால்ல இருக்கு. நீயி அப்பிடி இருந்துட்டுப் போ! என்னத்தெ கெட்டுப் போச்சு?"
அப்பிடின்னாரு பெரியவரு.
இதாங் அன்னிக்குப் பேசி முடிஞ்ச பேச்சு.
அந்தப் பேச்சுப்படி நாலு வருஷமா மாத்தமில்லாமத்தாம் இருந்தாரு பெரியவரு. நாலு வருஷத்துல
அவரு போக்குலயே எவ்வித மாத்தமும் இல்லாம, எவ்வளவோ விசயங்களையும் பண்ணி முடிச்சிருந்தாரு
பெரியவரு. வரிசையா ஒண்ணு மாத்தி ஒண்ணு மாரி அத்தான், ராமு அத்தான், சுப்புணி அத்தான்,
பாக்கியம் அத்தாச்சின்னு கலியாணங்கள முடிச்சிருந்தாரு. எல்லா கலியாணமும் புலிவலம் பெருமாள்
கோயில்லத்தாம் நடந்துச்சு சொல்லி வெச்ச மாதிரி ஒரே மாதிரியா, எப்பிடி சந்தானம் அத்தானுக்கும்,
கலா அத்தாச்சிக்கும் கலியாணம் நடந்துச்சோ அதே மாதிரிக்கி. கோயிலுக்குப் பக்கத்துலயே
சத்திரத்தையோ, மண்டபத்தையோ பிடிச்சி மொத நாளே ஒறவுக்காரங்கள, ஊருக்காரவுங்கள எல்லாம்
வரவெச்சி, கலியாணத்துக்குக் காலங்காத்தாலயே எல்லாத்தையும் எழுப்பி விட்டு, எல்லாத்துக்குக்
காப்பித் தண்ணிய கொடுத்து உசுப்பி வுட்டு பம்பரமா சொழண்டுத்தாம் பெரியவரு கலியாணத்தெ
முடிச்சி வெச்சாரு. அங்க கோயில்ல கலியாணச் சடங்க பாக்குறதா இருக்கட்டும், அது முடிஞ்சி
இங்க சத்திரத்துல பந்தியப் பாக்குறதா இருக்கட்டும் எல்லாம் எப்பிடியெப்படி இருக்கணுமோ
அப்படியப்படி மொறையா பாத்து பண்ணி முடிச்சாரு.
கடெசீயில குமாரு அத்தான் மட்டுந்தாம் பாக்கி.
அதுக்கும் பொண்ண பாத்துக்கிட்டுக் கெடந்தாரு. சாதகத்த வெச்சிக்கிட்டு பெரியவரு எப்பிடி
அலைவாருங்றதெ சொல்ல வாணாம். அப்பிடி அலைஞ்சாரு நாயலைச்சலு, பேயலைச்சலா. ஆளும் நோஞ்சானா
சவளப்புள்ள கணக்கா இருந்துச்சா குமாரு அத்தான். அதால பொண்ணு சீக்கிரமா அமையல. சாதகம்
சரியா அமைஞ்சாலும் வந்துப் பாத்தவங்களுக்கு மாப்புள திருப்தியா இல்லன்னு அதோட கலியாணம்
தடைபட்டுக்கிட்டே இருந்துச்சு. அத்தோட வேலையும் கெடையாது, வெவசாயம்தான்னதும் பொண்ண
கொடுக்க ஆளுங்க ரொம்பவே யோசிச்சாங்க.
இந்த நாலு வருஷ காலத்துல சாவப் பத்தி அவரு
பேசுனதுக்குப் பிற்பாடு அவருக்குச் சாவப் பத்தி நெனைக்க நேரமில்லாம பல விசயங்கள்ல சொழல
வேண்டியதா இருந்துச்சு. நெறைய விசயங்க நல்லது கெட்டது, மூணு கலியாணங்கன்னு மாறி மாறி
நடந்துச்சு. மனசுக்குள்ள சாவப் பத்தின பயமெல்லாம் போயி கடைக்குட்டிப் பயலுக்குக் கலியாணத்தெ
முடிச்சாவணுங்ற ஒரு எண்ணம் மட்டுந்தாம் பெரியவரோட மனசுல இருந்துச்சு. அவரு எப்போ
சாவுப் பத்தின நெனைப்ப மறந்து இருந்தாரோ, அப்பத்தாம் அதெ பத்தி நெனைப்ப வூட்டுறாப்புல
அவரோட ஒடம்புக்கு ஒரு சம்பவம் நடந்துச்சு.
எப்பிடியும் வாரத்துல ரெண்டு நாளு, மூணு
நாளு சாதகத்தெ எடுத்துட்டுக் கெளம்பிடுவாரு பெரியவரு. அப்பிடித்தாம் அன்னிக்குக் கெளம்புனாரு,
"ஏய் செயா! சாமி படத்துக்குப் பின்னாடி சாதகம் வெச்சிருக்கேம் பாரு மஞ்சப் பையில!
எடுத்து வா! அப்பிடியே வாரப்பா லோட்டாவுல தண்ணியக் கொண்டா!"ன்னு கொரலு கொடுத்துருக்காரு.
செயா அத்தை சாதகத்த மஞ்சப் பையோட எடுத்துக்கிட்டு,
லோட்டாவுல தண்ணியக் கொண்டாந்து திண்ணைப் பக்கமா வந்துப் பாக்குது. உசந்து நிக்குற
உருவமில்ல பெரியவரு. வெள்ள வேட்டியுமா, வானத்து நீலத்துச் சட்டையுமா, தோள்ல துண்டுமா,
கையில கடியாரமுமா, கக்கத்துல தெனசரித் தாளுமா நிக்குற உருவத்தெ எங்கன்னுப் பாத்தா?
காணல. நெலைகுத்திப் பாக்குற உருவத்தெ யாரு கீழே குனிஞ்சிப் பாப்பா. காணலயேன்னு லோட்டாவ
கீழே வைக்கப் பார்வைய தணிச்சிதுப் பாருங்க செயா அத்தை, லோட்டா கையி நழுவி தண்ணி ஊத்துது,
சாதகத்தெ கொண்டாந்த மஞ்சப் பையி கீழே வுழுவுது.
"என்னாச்சுங்க மனுஷா ஒங்களுக்கு?"ன்னு
ஒரு கொரலுதாம், வேலங்குடி முழுக்க கேட்டு எதிரொலிச்சிருக்கும்.
கையும் காலும் ஒரு பக்கமா இழுத்துக்கிட்டு
வாயிக் கொழறிப் போயிக் கெடக்குறாரு மண்ணு தரையில பெரியவரு.
"யய்யோ எங் தஞ்சாரூ கோவுரமே! திருவாரூ
தேரே! சாஞ்சதென்ன?"ன்னு அவரே பிடிச்சித் தூக்கப் பாக்குது செயா அத்தை.
குதிரைப் படுத்தா எழுந்திரிக்காதும்பாங்க.
யானை படுத்தா எழுப்ப முடியாதும்பாங்க. எழுந்து நடந்தா ஓடுனா குதிரையில்ல பெரியவரு.
அவரு என்னிக்கு நின்னு கால மடக்கியிருக்காரு? உசந்து நடக்குறதுல வர்றதுல போறதுல யானையில
போறாப்புல நாலு பேத்த கவனிக்க வைக்குறவர்ல பெரியவரு. அவரு என்னிக்கு சிறுத்துப் போயி
எளைச்சுப் போன நாயப் போல போயிருக்காரு? எளைச்சாலும், தொவண்டாலும் சிங்கம் சிங்கந்தானே.
அப்பிடித்தாம் இழுத்துக்கிட்டுக் கெடந்தாலும் அந்தக் கம்பீரம் கொறையல பெரியவருக்கு.
*****
No comments:
Post a Comment