1 May 2020

சமூக விலகலைச் சாத்தியமாக்கும் குடை!

சமூக விலகலைச் சாத்தியமாக்கும் குடை!

            நமது பெரும்பான்மையான பழக்கவழக்கங்களுக்கும் நோய்களுக்கும் இடையே முக்கியத் தொடர்பு இருக்கிறது. உதாரணத்துக்கு அம்மைப் போட்டு விட்டால் வீட்டின் முன் வேப்பிலையைச் செருகி விடுவார்கள். மற்ற வீடுகளோடு அன்னம், தண்ணீர் புழங்க மாட்டார்கள். மற்ற வீடுகளும் அப்பிடியே அம்மை கண்ட வீட்டோடு ஒரு தனித்திருத்தலைப் பராமரிப்பார்கள்.
            அம்மன் தந்த நோயாக நினைத்து அந்த நோய்க்கே அம்மை நோய் என்று பெரிட்டவர்கள் நம் மக்கள். அம்மனுக்குக் காப்பு கட்டி விட்டால் ஊரிலிருந்து யாரும் வெளியூர் போக மாட்டார்கள். வெளியூரிலிருந்து யாரையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள். இதெல்லாம் அம்மை நோயின் விளைவாக மக்கள் ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்கள். 
            தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கும் பழக்கம் கூட காலரா நோயின் தாக்கத்தால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஏற்பட்ட பழக்கம்தான்.
            மழைக்காலமோ, குளிர்காலமோ ஆரம்பித்து விட்டால் அதற்கு முன்பே தூதுவளை ரசத்தையும், கல்யாண முருங்கை அடையும் செய்து சாப்பிடும் பழக்கம் சளிப் பிரச்சனையால் உண்டான பழக்கம்.
            கோடை ஆரம்பித்து விட்டால் உடல்சூட்டைத் தணிக்கும் வகையில் உண்டானதுதான் மாரியம்மனுக்குக் கஞ்சி வார்க்கும் நிகழ்வு.
            எப்போதும் சாப்பிட்டு சீரண உறுப்புகளுக்கு ஓய்வில்லாமல் செய்து விடக் கூடாது என்பதற்காக உண்டான பழக்கம்தான் நோன்பிருக்கும் பழக்கம்.
            வயிறு எதையாவது உபாதையை உருவாக்கி விடும் முன்பே, அந்த உபாதையை வயிற்றிலிருந்து வெளியேற்றும் முயற்சிதான் பேதிக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கம்.
            உடல் சூடு கண்டு கண்ணெரிச்சல் ஏற்பட்டு விடும் முன்பே உடலைக் குளுமைபடுத்தி விடும் முயற்சிதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம்.
            இப்போது புதிதாகப் புகுந்திருக்கும் கொரோனா நோய்க்கு மருத்துவர்கள் அது குறித்து கூறுவதற்கு முன்பாக நம் மக்கள் மஞ்சள் நீரைத் தெளித்து, சாணியைக் கரைத்துத் தெளித்து, வேப்பிலையைச் செருகி, வேப்பிலையை அரைத்துக் குடித்து கொரோனாவைச் சீனம்மை என்று சொல்லத்தக்க வகையில்  மாற்றி விட்டார்கள் என்பதற்குக் காரணம் அவர்களின் முன்னைய பழக்கவழக்கத்தின் தாக்கம்தான்.
            வெளியில் எங்குச் சென்றாலும் முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு செல்கிறார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் புரட்டாசி மாதத்துக்கு எங்கள் வீட்டு அம்மைகள் அப்பிடிதான் ஏழுமலையானுக்குப் படையலிட சமைப்பதுதான் ஞாபகத்து வருகிறது.
            ஐப்பானைப் பற்றிய செய்தியொன்றைப் படித்த போது அசந்து போகும் வகையில் இருந்தது, அந்நாட்டில் சாதாரண காய்ச்சல் சளிக்கே முகக்கவசம் அணிவார்களாம். மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்யும் பழக்கம் அவர்களுக்கு உண்டாம். இதெல்லாம் கொ‍ரோனா வருவதற்கு முன்பே அங்கே அவர்களின் பழக்கம்வழக்கம்.
            மக்கள்தொகை மிகுந்த நமது நாட்டில்  சமூக விலகலைக் கடைபிடிப்பதே ஒரு சவாலாக இருக்கும் நிலையில் அதற்கும் நமது பழக்கவழக்கம் உதவுகிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கோடைக்காலத்தில் பெரியவர்கள் பலரும் கையில் குடை இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார்கள் என்பதைக் கவனித்தால் தெரியும், குடை பிடித்துச் செல்லும் ஒரு மனிதரை நெருங்க வேண்டுமானால் அவர் குடையை மடக்கினால்தான் உண்டு. அப்படி ஆளாளுக்குக் குடை பிடித்துச் சென்றால் ஆங்காங்கே கோடுகள் போடாமலே சமூக விலகலை எளிதில் கடைபிடித்தது போலவும் ஆயிடும், கோடை வெயிலுக்கு குடை பிடித்தாற் போலவும் ஆகி விடும், அத்தோடு அவ்வபோது பெய்யும் வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியால் உண்டாகும் வெப்பச்சலன மழைக்கு குடை எடுத்துப் போனாற் போலும் ஆகி விடும்.
            இனி முகத்தில் கட்டிக் கொள்வதற்கு ஒரு துணியும், சமூக விலகலைக் கடைபிடிப்பதற்கு ஒரு குடையில் எடுத்துச் சென்றால் சுகாதாரத்திற்கு சுகாதாரமாகவும், கொரோனோவைத் தடுப்பதற்கு ஓர் உபாயமாகவும் ஆகி விடும். அப்படியே பழகினால் காலப்போக்கில் இதுவும் ஒரு பழக்கவழக்கமாகி விடும். ஏனென்றால் நம்முடையப் பழக்கவழக்கங்கள் பலவற்றிற்கும் நோய்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
*****


No comments:

Post a Comment

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...