9 Apr 2020

நெருப்பை அள்ளி நெஞ்சுல வெச்சிக்கிட்டவன்!

செய்யு - 413        

            சிறுசா கட்டித்தாம் பெரிசா வாழணும்பாங்க கிராமத்துல. அளவோட இருக்குற வரைக்கும்தாம் எதுவும் நல்லதுன்னும், அளவுக்கு மிஞ்சிப் போன அமுதமும் விசமாத்தாம் போவுமுன்னும், அகலக்காலு வெச்சா கவுட்டிப் பிஞ்சிக் கெடக்க வேண்டியதுதாம்ன்னும், ஆத்துல போட்டாலும் அளந்துதாம் போடணும்ன்னும், அளவுக்கு மீறப் பெருத்துக்கிட்டுப் போன விழுந்தா எழுந்திரிக்க முடியாதுன்னும் கிராமத்துல வரைமொறையா அளவு மீறாம இருக்குறதப் பத்திப் பேசிக்கிட்டுத்தாம் இருப்பாங்க. எது இருக்கோ, இல்லையோ மனசு நெறைவா இருக்கணுங்றதெ சொல்லாத கிராமத்து அசாமிங்களப் பாக்க முடியாது. எவ்வளவுதாம் கோவ தாபம் இருந்தாலும் அதெ குடும்பத்துக்குள்ளக் காட்டிக்கக் கூடாதுன்னும் சொல்லுவாங்க. மெரட்டுறதப் போல மெரட்டணும் ஆனா நெசமாலுமே மெரட்டிடக் கூடாது, திட்டுறது போல திட்டணும் ஆனா நெசமாலுமே திட்டிப்புடக் கூடாது, அடிக்கிறது போல அடிக்கணும் ஆனா நெசமாலுமே அடிச்சிப்புடக் கூடாதுங்றதுல நெதானமான கிராமத்து ஆளுக ரொம்பத் தெளிவா இருப்பாங்க. ஏன்னா இதுகளத் தொடங்கிப்புட்டா நிறுத்த முடியாது. அத்தோட ஒரு தடவெ இதெ காட்டிப்புட்டா மறுதடவே இதுக்குல்லாம் ஒரு மருவாதியே இருக்காதுங்றதையும் படிச்சுப் படிச்சுச் சொல்லுவாங்க.
            கிராமங்கள்ல நெதானமா தலைமுறை தலைமுறையா வாழுற குடும்பத்துல அப்பிடித்தாம் ஒரு வழக்கம் இருக்கும். அத்து எப்பிடின்னா... எங்க அப்பங்கார்ரேம் அடிச்சிப்புடும்னு இங்க கிராமத்துல சொல்லுற ஒரு பயெ அவுங்க அப்பங்காரர்கிட்டே அடி வாங்கியே இருக்க மாட்டேம். எங்க அம்மாக்காரி திட்டிப்புடும்னு சொல்லுற பொண்ணு அவ்வே அம்மாக்காரிகிட்டே திட்டே வாங்கியிருக்க மாட்டா. எம்மட புருஷங்காரரு கோவிச்சார்ன்னா தாங்க முடியாதுன்னு சொல்ற பொண்டாட்டிக்காரி புருஷங்காரரோட கோவத்தையும் பாத்திருக்க மாட்டா. இதெல்லாம் பண்ணா வூட்டுக்காரி செருப்பால அடிப்பான்னு சொல்ற புருஷங்கார்ரேம் பொண்டாட்டிக்காரிகிட்டெ செல்லமா கூட அடி வாங்கியிருக்க மாட்டாம். எல்லாத்தையும் ஒரு பாசாங்குல வெச்சே சமாளிச்சிக்கிட்டு இருக்கணும். எதிர்மறையான விசயங்கள எடுத்தாள ஆரம்பிச்சா, அதோட விளைவும் எதிர்மறையாத்தாம் இருக்குங்றதால அதெல்லாம் ஒரு பாவ்லாவுக்குத்தாம் வெச்சிப்பாங்க வெவரம் தெரிஞ்ச கிராமத்து அசாமிங்க. இந்த மாதிரி விசயங்கள எல்லாம் வாயாலயே வடை சுட்டு முடிச்சிப்புடணும். நெசமாலுமே வடைய சுட ஆரம்பிச்சா விளைவுக ரொம்ப விபரீதமா போயிடும். 
            அதுலயும் ஆத்திரம் இருக்குப் பாருங்க! அத்து வந்துட்டா வூட்ட வுட்டு வெளியில போயி அதெ ஆத்திக்கிட்டுத்தாம் வூட்டுக்குள்ளார வாரணும். ஆத்திரத்துல மனுஷனுக்குப் புத்திக் கெட்டுப் போவுது. புத்திக் கெட்டுப் போறப்ப என்ன செய்யுறோம்னே தெரியாம ஒண்ணுக் கெடக்க பேசி, ஒண்ணு கெடக்க நடந்துப் போயிடுது. ஆத்திரத்துல ஒரு அடி லேசா அடிச்சா, அடுத்த அடிய இன்னும் வேகமா அடிக்கத் தோணும். அதுக்கு அடுத்த அடிய இன்னும் இன்னும் வேகமா அடிக்கத் தோணும். அடிக்க அடிக்க ஒரு வெறி வரும் பாருங்க! அது அதிகமா போவுமே தவுர கொறையாது. அப்பிடி அடிக்க ஆரம்பிச்சு ஆளு செத்துப் போன பின்னும் வெறி தணியாம அடிச்ச ஆளுக எல்லாம் இருக்காங்க. அதே போலத்தாம் ஆத்திரத்துல ஒரு கெட்ட வார்த்தை பேசிட்டா போதும் அது நூறு கெட்ட வார்த்தைய வரிசையா கொண்டாந்து கொட்டிக்கிட்டே இருக்கும். அதுலயும் ஆத்திரத்துல நடக்குற புருஷன் பொண்டாட்டி சண்டை அளவோட இருக்கணும். அப்பிடியில்லாம அந்த சண்டெ அளவு மீறிப் போயிட்டுன்னா, அதோட முடிவு எப்பிடி இருக்கும்ன்னே யாராலயும் கணிக்க முடியாது.
            புருஷங்கார்ரேம் வேலைக்குப் போயிட்டாங்ற நெனைப்புல பெரியநாயகி திருவாரூரு அப்பங்காரரு வூட்டுக்குப் போன நேரமா பாத்து சங்கு குவார்ட்டர்ஸூக்கு வந்துப்புடுச்சு. அன்னிக்குன்னுப் பாத்து ஒடம்பு சரியில்லாம வேலைக்குப் போன சங்கு, தலைவலி அதிகமாயிப் போனதுல திரும்ப வந்தது, குவார்ட்டர்ஸூ பூட்டியிருக்கிறதப் பாத்து அக்கம் பக்கத்துல இருக்குறவங்க வூட்டுல விசாரிச்சா கொழந்தைத்தாம் இருக்கு. பெரியநாயகி இல்லே. சங்குவுக்குச் சந்தேகம் வந்துப் போச்சு. பொண்டாட்டிக்காரி பெரியநாயகிக்குச் செல்போனுக்கு அடிச்சா அது குவார்ட்டர்ஸ்ல இருக்குறதா சொல்லுது.
            "நாம்ம பூட்டிருக்குற குவார்ட்டர்ஸூக்கு வெளியிலத்தாம் கொழந்தையோட இருக்கேம்! நீயி எப்பிடி குவார்ட்டர்ஸ வெளியில பூட்டிக்கிட்டு உள்ளார போனே?"ங்குது சங்கு. பெரியநாயகிக்கு அதெ கேட்டதும் விறுவிறுத்துப் போச்சு.
            "யில்லங்க குவார்ட்டர்ஸலத்தாம் இருந்தேம். கறிகாயி வாங்கிட்டு வரலாம்னு சித்தெ வெளியில வந்தேம்! இத்தோ வந்திடுறேம்!"ன்னு சொன்னுச்சுப் பாருங்க, சங்குவுக்குக் கோவம் வந்திடுச்சு.
            "வாடி மவளே! நீயி எங்கே போனே? எங்கிட்டு இருக்கேங்ற? எல்லாம் நமக்குத் தெரியும். வாடி வாடி! வூட்டுக்கு வா! வெச்சிக்கிறேம்!"ன்னு பல்ல நறநறன்னு கடிச்சுச்சுப் பாருங்க, அப்பவே பெரியநாயகிக்குப் புரிஞ்சிடுச்சு வூட்டுல இன்னிக்கு ஒரு பிரளயமே இருக்குன்னு. பஸ்ஸ விட்டு எறங்கி பஸ் ஸ்டாப்புலேந்து கொஞ்சம் கறிகாய்கள பேருக்கு ஒரு பையில வாங்கிப் போட்டுக்கிட்டு ஓடியாந்துச்சு பெரியநாயகி. குவார்ட்டர்ஸக்கு மின்னாடி நிக்குற சங்குவையும், கொழந்தையையும் பாத்ததும், "கறிகாயில்லாம் ஒரே பூச்சிங்க. பாத்து வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. இப்பல்லாம் நல்ல கறிகாயிங்க எஞ்ஞ வருது? எல்லாம் இப்பிடித்தாம் வருது. அதுலேந்து பொறுக்கி எடுக்குறதுக்குள்ளே..."ன்னு ஆரம்பிச்சு பெரியநாயகி.
            "கதவத் தொறடி!"ன்னுச்சு சங்கு.
            பெரியநாயகி அவசர அவரமா கதவெ தொறந்துச்சு. கொழந்தைய வெளியில நிப்பாட்டிப்புட்டு பெரியநாயகியோட சடையப் பிடிச்சி கையில ஒரு சுத்து சுத்தி அப்பிடியே பொடணியில கைய வெச்சி நெட்டித் தள்ளி சடைய வுட்டு, அப்படியே உள்ளார தள்ளி கதவெ தாழ்ப்பாள் போட்டுச்சு சங்கு. உள்ள தள்ளுன தள்ளுல பெரியநாயகி குவார்ட்டர்ஸ்க்குள்ள போயி தொபுக்கடின்னு விழுந்துச்சு. பேண்ட்டு சட்டையில போட்டிருந்த இருப்பு வார்ர உருவி பெரியநாயகியப் போட்டு வெளுத்து வாங்குனுச்சு. அவ்வளவு அடிக்கும் பெரியநாயகிட்டேயிருந்து சின்ன சத்தம் கூட இல்ல. வார்ரு காத்துல சொழலுறு சத்தம்தாம் கேக்குது. வார்ர சங்கு சொழட்டிச் சொழட்டி அடிக்க அத்து சுருண்டுக்கிட்டுப் படுத்துக்கிட்டு பல்ல கடிச்சிக்கிடுச்சு. அடிச்சி அடிச்சி ஓஞ்சிப் போயி சங்கு வார்ர தூக்க அந்தாண்ட போட்டுட்டு, "ச்சீ நாயே! இன்னியோட ஒமக்கும் நமக்கும் இருக்குற தொடர்பு அந்துப் போச்சு. இனுமே ஒன்னய வெச்சிக்கிட்டு நம்மாள குடும்பத்தெ நடத்த முடியாது! மருவாதியா நீட்டுற காயிதத்துல கையெழுத்தப் போட்டுட்டு, கொழந்தையத் தூக்கிட்டுப் போயிகிட்டே யிரு!" அப்பினுச்சு சங்கு மூச்சு இறைக்க.

            "ன்னா வாணா அடிங்க! தூக்கிப் போட்டு மிதிங்க! வாணாம்னு சொல்லல. அதுக்காக நீஞ்ஞ கேக்கற மாரில்லாம் கையெழுத்துல்லாம் போட்டுத் தர்ற முடியாது. இப்போ ன்னா நடந்துப் போச்சுன்னு இப்பிடி மிருகம் மாதிரி நடந்துக்குறீங்கோ?" அப்பிடின்னுச்சு பெரியநாயகி.
            "ந்நல்லா வாயி வெச்சுப் போயிடுச்சுடி ஒமக்கு! இன்னும் ன்னா நடக்கணும்? எத்தினி பஞ்சாயத்து வெச்சாச்சு. இன்னும் நீயி அடங்குறாப்புல தெரியல. ஒன்னையெல்லாம் பொம்பளன்னு வெச்சு குடித்தனம் பண்றேம் பாரு! நம்மளச் சொல்லணும்! ஒண்ணுத்தெ பண்ணாதேன்னு பண்ணாம இருக்கணும். அவ்வத்தாம் பொம்பள. சொல்ல சொல்ல மீறிக்கிட்டும் திமிறிக்கிட்டுப் பண்ணா அவ்வே பொம்பள இல்லே. பஜ்ஜாரி. தேவிடியா முண்டெ. அப்பிடியில்லாம் ஒன்னயக் கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ணணுங்ற அவசியம் நமக்கில்லே. ஒமக்கும் நமக்கும் ஒண்ணுமில்லன்னு கையெழுத்தப் போட்டுட்டு நீயி பாட்டுக்கு ஒம்மட வழியப் பாத்துட்டுப் போயிட்டே யிரு. நாம்ம பாட்டுக்கு நம்மட வழியப் பாத்துட்டுப் போயிட்டே இருக்கேம். யாருக்கும் எந்தப் பெரச்சனையும் யில்ல பாரு. எதுக்கு தெனமும் சண்டைய வெச்சிக்கிட்டு, ஒன்னயப் போட்டு அடிச்சித் தொவைச்சுகிட்டு? அக்கம் பக்கத்துல வேற அசிங்கமாவுது பாரு! இன்னியோட கணக்கெ முடிச்சிக்கிடலாம்! ன்னா சொல்றே?" அப்பிடினுச்சு சங்கு.
            "கையெழுத்துல்லாம் போட்டுத் தார்ற முடியாது. ஒங்களால ஆனதெப் பாத்துக்கிடுங்க!"ன்னுச்சு பெரியநாயகி தெகிரியமா.
            "ஒம்மட உசுர போற அளவுக்கு அடிச்சும் இன்னும் நம்மளோட குடித்தனம் பண்ண முடியும்னு ஒமக்கு இருக்குப் பாரு நம்பிக்கெ? அதெ சொல்லணும். இனுமே ஒன்னய அடிச்சில்லாம் திருத்த முடியாது. ஒனக்கு உதுத்துப் போச்சுடி.  சொரணை அத்துப் போச்சுடி. எதுவுமே மண்டையில இனுமே ஏறாது ஒனக்கு. ஒத்து வாராது இனுமே. இன்னிக்கு ரண்டுல ஒண்ணு முடிவாவணும். ச்சும்மா ச்சும்மா ஊருலயும், ஒறவுலயும் அசிங்கப்பட்டுக்கிட்டு நிக்க முடியாது. நாம்ம ஒருத்தேம் கட்டுனவேம்ன்னு இருக்குறதாலத்தான இஞ்ஞயிருந்து சாமாஞ் செட்டுகள எடுத்துப் போட்டுக்கிட்டு ஒப்பங்கார்ரேம் வூட்டுல கொண்டு போயிக் கொட்டிட்டு இருக்கே. இந்த ஒறவே அந்துப் போச்சுன்னா எஞ்ஞயிருந்து கொண்டு போயிக் கொட்டுவே? நமக்கு ஏம்டி ஒம்மட ஒப்பங்கார்ரேம் வூட்டுக்கு எடுத்துட்டுப் போவாத, சொல்றதெ கேளுன்னு ஒங் கால்ல வுழுந்து கெஞ்சிக்கிட்டு? நீயி ஒம்மட இஷ்டப்படிக்குப் போ. நாம்ம நம்மட தெசையப் பாத்துட்டுப் போயிட்டே இருக்கேம்!"ன்னு அலமாரியில இருந்த வெத்துக் காயிதத்தெ ஒண்ண எடுத்து, பையில இருந்த பால்பாயிண்ட் பேனாவைச் சேத்துக் கொடுத்து, "இதுக்கு அடியில கையெழுத்தப் போட்டுக் கோடு. நாம்ம எப்பிடி எழுதிக்கணுமோ அப்பிடி எழுதிக்கிறேம்!"ன்னுச்சு சங்கு.
            அதே பாத்ததும் சுருட்டிக்கிட்டுப் படுத்துக் கெடந்த பெரியநாயகிக்கு ஒடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சு. அதெ வாங்க மாட்டேங்ற மாதிரிக்கி கையி ரெண்டையும் வவுத்துப் பக்கமா கொண்டு போயி இன்னும் நல்லா மரவட்டையப் போல சுருட்டிக்கிடுச்சு. சங்கு சுருட்டிக்கிட்டுக் கெடந்த பெரியநாயகிய போட்டு ஒதைச்சுத் தள்ளினுச்சு. வயித்துலயே கால்ல போட்டு மிதிச்சுச்சு. தலைமுடிய கையால பிடிச்சி நிமுத்தி உக்கார வெச்சி மடியில வெரல மடக்கிக்கிட்டு இருந்த கைகளப் பிடிச்சி அதுக்குள்ள காயிதத்தெ திணிச்சுச்சு சங்கு. பெரியநாயகி காயிதத்தெ வாங்க மறுக்க மறுக்க சங்குவுக்குக் கோவம் வந்து, பெரியநாயகிய கையில பிடிச்சிருந்த மசுரோட பிடிச்சி இழுத்துக் கொண்டு போயி சுவத்துல வெச்சு தலைய மோதுனுச்சு.  சுவத்துல மொதி மாருலயே எட்டி ஒதைச்சுச்சு. எல்லாத்துக்கும் பெரியநாயகி பல்ல கடிச்சிக்கிட்டு வுழுந்தது வுழுந்தபடி கெடந்துச்சு.
            "கையெழுத்து வைக்காட்டி ன்னா கைநாட்ட வெச்சிக்கிடுறேம்!"ன்னு பெரியநாயகியோட கையப் பிடிச்சி சங்கு இழுத்துச்சுப் பாருங்க, பெரியநாயகிக்கு அப்பத்தாம் கொஞ்சம் கோவம் வந்து, காயிதத்தப் பிடுங்கி சுக்கு நூறா கிழிச்சிப் போட்டுச்சு.
            "பயித்தியமா பிடிச்சிடுச்சு? கேக்குறேம்! பயித்தியமா பிடிச்சிடுச்சு? ஒரு பொண்ணுன்னு பாக்காம இந்த அடி அடிக்கிறீயே? செத்துப் போயிட்டா ஜெயில்ல போயிக் கெடப்பீயா? கையெழுத்து வையிங்றீயே? வெச்சிப்புட்டு பொறந்த வூட்டுலப் போயிக் கெடக்க ன்னா இருக்கு? கஞ்சி வெச்சிக் குடிக்க நொய்யிக் கூட யில்லே! வயித்துக்கு ரண்டெ எடுத்துக் கொண்டு போயிக் கொடுத்தா இம்மாம் வவுத்தெரிச்சலா இருக்கே? நாம்ம எஞ்ஞப் போயி சொல்றது இதெ? நீயுந்தாம் ஒந் தம்பிகளுக்குக் காசிய செலவு பண்ணி கலியாணத்தப் பண்ணி வெச்சே! வெளிநாடுல்லாம் அனுப்பி வெச்சே! நாம்ம ஒரு வார்த்தெ கேட்டிருப்பமா? ஒன்னய அப்பிடி ன்னா நம்மட தங்காச்சிக்குக் கலியாணத்துப் பண்ணி வுடுன்னா நிக்குறேம்? வயித்துக்குன்னு அரைக்காசிலயும், காக்காசிலயும் வாங்கிட்டு வர்றதெ ரண்டு கொண்டு போயி போட்டா அத்து பொறுக்க மாட்டேங்குது. சரித்தாம்யா! இன்னிலேந்து எந் தலையில சத்தியம் அடிச்சிச் சொல்றேம் ஒண்ணுத்தெ கொண்டு போயிப் போட மாட்டேம். எல்லாம் பட்டினி கெடந்தே சாவட்டும்!"ன்னுச்சு பெரியநாயகி.
            "இத்தோட ஆயிரம் சத்தியம் ஆயிடுச்சு. பேச்சு வார்த்தையில்லாம் இனுமே யில்லே. ஒண்ணு காயிதத்துல கையெழுத்தப் போடு. இல்லன்னா, நீயி கெளம்பு. பொறந்த வூட்டுக்குக் கெளம்பு. நம்மள எதுத்துப் பேச ஆரம்பிச்சிட்டே. அடிச்சுப் புடுவே போலருக்கு. ஒமக்கும் நமக்கும் சுத்தப்பட்டு வாராது. கெளம்புறீயா இல்லியா? நீயி கெளம்பு. வக்கீலோட வர்றேம்! வக்கீல வெச்சு என்னத்தெ எழுதி வாங்கணுமோ அதெ எழுதி வாங்கிக்கிறேம்!"ன்னுச்சு பெரியநாயகி.
            பெரியநாயகி அம்முகுளியாட்டம் அப்படியே உக்காந்திருச்சு. என்னத்தெ சொன்னாலும் அந்த எடத்தெ வுட்டு எழுந்துப் போவ மாட்டேங்ற மாதிரிக்கி இருந்தது அதோட உக்காந்திருந்த நெலமெ. சங்குவுக்குக் கோவம்ன்னா கோவம். இன்னும் அடி பெலமா வுழப் போவுதுன்னு பெரியநாயகி நெனைச்சுகிடுச்சு. "இப்போ நீயா வெளியில கெளம்பலன்னா நம்மள கொல்லப் பாக்குறதா கதையெ கட்டி விட்டுப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னுச்சு சங்கு.
            கொல்லுற அளவுக்கு அடிச்சிப்புட்டு, இப்போ நாம்ம கொல்லப் பாக்குறதா சொல்றதெ கேட்டு பெரியநாயகிக்கு அந்த நேரத்துலயும் களுக்குன்னு ஒரு சிரிப்பு வந்துப்புடுச்சு. அதுல அதிகரிச்ச சங்குவோட கோவம்தாம். என்ன செய்யுறோம்ன்னு தெரியாம, சமையக்கட்டுல சீமெண்ணெய்யை ஊத்தி அடிச்சி பத்த வைக்கிற அடுப்புக்கு வாங்கி வெச்சிருந்த சீமெண்ணெய் கேனை எடுத்து அதுல இருந்த சீமெணெண்ணெயை எடுத்து தம்மோட நெஞ்சு மேலயும், வயித்துலயு ஊத்திக்கிடுச்சு. பெரியநாயகி ஒண்ணும் புரியாம விழிச்சுச்சு. பொதுவா ஆம்பளைங்க பொண்டாட்டி மேல சீமெண்ணெயை ஊத்தித்தாம் கொழுத்தி விடுவாங்க. இவ்வேம் என்னான்னா தம்மேல ஊத்திக்கிறானேன்னு அது ஆச்சரியமா பாத்தப்போ, நெருப்புப் பொட்டிய எடுத்து கொளுத்திக்கிடுச்சு சங்கு. பெரியநாயகிக்கு ஒண்ணும் புரியல.
            தனக்குத் தானே பத்த வெச்சிக்கிட்ட நெருப்புல நெஞ்சுலயும், வயித்துலயும் எரிஞ்ச சங்கு அங்க இங்கன்னு ரூமுக்குள்ள ஓடினுச்சு. இதையெல்லாம் பாத்து பித்துப்புடிச்சாப்புல உக்காந்திருந்த பெரியநாயகி டக்குன்னு படுத்து சங்குவோட காலுக்கிடையே கால கொடுத்து அதெ தடுமாறி விழ வெச்சு, கீழே வுழுந்த சங்குவ தரையில உருட்டி வுட்டுச்சு. அப்பிடி உருட்டி விடுறப்பவும் சங்குவோட நெஞ்சும், வயிறும் எரியுதுன்னா எரியுது. நெஞ்சுலயும் வயித்துலயும் ஊத்துன சீமெண்ணெய் கொஞ்சம் வயித்துக்குக் கீழேயும் போவாமலா இருக்கும். அதால கீழேயும் தீப்பிடிச்சு எரிஞ்சுச்சு. எல்லாம் நிமிஷ நேரத்துக்குள்ள நடந்து முடிஞ்சிருக்கும்.
            சங்குவோட சத்தமும், பெரியநாயகியோட சத்தமும் வெளியில பயங்கரமா கேட்டுச்சு. "நெருப்பு வெச்சு கொல்லப் பாக்குறா! எமகாதகி! நெருப்பு வெச்சுக் கொல்லப் பாக்குறா! காப்பாத்துங்களேம்! காப்பாத்துங்களேம்!"ன்னு சங்குவோட கொரலு வெளியில கேக்குது.
            "எம்மட புருஷங்காரன காப்பாத்துங்க! யாராச்சிம் வந்து காப்பாத்துங்க! சீமெண்ணய ஊத்திப் பத்த வெச்சிக்கிட்டாரு! யாராச்சிம் வந்து காப்பாத்துங்கோ"ன்னு பெரிநாயகியோட சத்தமும் வெளியில கேக்குது. அப்பிடி சத்தத்தெ போட்டுக்கிட்டு சங்குவ அப்பிடி இப்பிடின்னு தரையில போட்டு பெரட்டி வுடுது பெரியநாயகி. குவார்ட்டர்ஸூக்கு வெளியில புகைச்சலா வருது. வெளியில நின்னுகிட்டு இருந்த சங்குவோட மூணு வயசுக் கொழந்தை அழுதுகிட்டே நிக்குது. சத்தத்தையும், புகைச்சலையும், கொழந்தையோட அழுகைகையும் பாத்துட்டு அக்கம் பக்கத்துல இருந்தவங்க கதவெ ஒடைச்சித் தள்ளிக்கிட்டு உள்ளார வந்து பாத்தா நெஞ்சுலயும், வயித்துலயும், அதுக்குக் கீழே கொஞ்சம் எரிஞ்சிப் போயிக் கெடக்குது சங்கு. ஒடனடியா ஒரு வண்டியப் பிடிச்சி மாயவரத்துல இருக்குற ஒரு ஆஸ்பிட்டல்ல போட்டா சங்கு உசுர பொழைச்சது பெரும் பொழைப்பா போயிடுச்சு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...