செய்யு - 414
சங்குவோட வாழ்க்கையில அது நிகழ்த்துன
நெருப்புச் சம்பவம் அதோட குடும்ப வாழ்க்கையைப் பொரட்டி போட்டாப்புல ஆயிடுச்சு. நெருப்ப
சாட்சியா வெச்சி அதெ வலம் வந்து கலியாணத்தெ கட்டிட்ட பந்தம், அந்த நெருப்பாலயே ஒடையுற
நெலமைக்கு வந்துச்சு. முருகு மாமாவும், லாலு மாமாவும் சங்குவைப் போயிப் பாத்தப்போ,
பொண்டாட்டிக்காரி தன்னை உசுரோட நெருப்பு வெச்சு கொளுத்தப் பாத்ததா அழுது புலம்புனுச்சு.
ஒண்ணும் இல்லாத காரியத்துக்கே பத்த வைக்குற பரட்டெ வகையறாவச் சேந்த முருகு மாமாவும்,
லாலு மாமாவும் நெசமாலுமே பத்த வெச்ச காரியத்தெ சும்மா வுடுவாங்களா. ரெண்டு பேரோட புத்தியும்
வேற மாதிரி வேலை செஞ்சுச்சு. பொண்டாட்டிக்காரி புருஷன நெருப்ப வெச்சு உசுரோட வெச்சுக்
கொளுத்த முயற்சி பண்ணதா சங்குவோட தம்பிக்கார்ரேம் ஆனந்தன வெச்சி போலீஸ்கிட்டெ புகாரு
கொடுக்க வெச்சிப்புட்டுங்க.
போலீஸ்காரவுங்களுக்கும் இந்தப் புகாரு
வித்தியாசமாத்தாம் இருந்துச்சு. அவுங்களப் பொருத்த வரைக்கும் ஒண்ணு தனக்குத் தானே
ஒரு புருஷங்கார்றேங்றவன் நெருப்ப வெச்சிக் கொளுத்திக்கணும், அப்பிடி இல்லன்னா பொண்டாட்டிய
நெருப்ப வெச்சிக் கொளுத்தணும். அப்பிடித்தாம் இது மாதிரியான விசயங்கள்ல குடும்பப்
பிரச்சனையோ, வரதட்சணை பிரச்சனையோ மோட்டிவ் ஆயி நடக்கும்ன்னு நெனைச்சாங்க. அவுங்க
அனுபவத்துல அப்பிடித்தாம் சம்பவங்களும் நடந்திருக்கு. இப்பிடிப் பொண்டாட்டி புருஷங்காரன
நெருப்பு வெச்சிக் கொளுத்துனதா எந்தச் சம்பவமும் நடக்கல. அப்படி நடக்குறதுக்கும் வாய்ப்பு
இல்லங்றது மாதிரிக்கி புகார்ரப் பாத்துட்டு அவுங்க பேசிருக்காங்க.
ஏன்னா புருஷங்காரங்றவன் பொண்டாட்டிய விட
ஒடம்பு ரீதியா வலிமையா இருக்குறவன். ஒரு பொண்டாட்டி நெருப்பு வைக்குறாப்புல சம்பவத்த
நடத்துறப்ப அதெ தடுக்குறதுக்கும், அதுலேந்து தப்பி ஓடுறதுக்கும் நெறைய வாய்ப்பு இருக்கு.
அவனுக்கு இருக்குற ஒடம்பு வலிமைக்கு பொண்டாட்டிக்காரிய நெருப்ப வெச்சு எதாச்சிம் பண்ணலாமே
தவுர, புகாருல்ல உள்ளது போல பொண்ட்டிக்காரி புருஷங்கார்ரேம் மேல நெருப்பு வெச்சு
சம்பவத்தெ நடத்துறது சாதாரண காரியம் இல்லே. அப்படி பொண்டாட்டிக்காரி சம்பவத்தெ நடத்த
அவளுக்குத் தொணையா ஒரு ஆளாவது வேணும். ஆனா புகார்ல இந்தச் சம்பவத்துல ரெண்டு பேரு
மட்டுமே சம்பந்தப்பட்டு இருக்குறதால இதுல வேற ஒரு விசயம் அடங்கியிருக்குங்றதெ அவுங்க
புரிஞ்சிக்கிட்டாங்க.
போலீஸ்காரவுங்க சம்பவம் நடந்த எடத்தைப்
பாத்தா கிட்டத்தட்ட நடந்ததெ அனுமானிச்சிடுவாங்க. அத்தோட சுத்தி இருக்குறவங்கிட்ட ஒரு
விசாரணையப் போட்டாங்கன்னா சம்பவம் எப்பிடி நடந்துச்சுங்றதெ அப்பிடியே சினிமா படத்தைப்
போலவே ஓட்டிக் காட்டிடுவாங்க. சம்பவ எடத்தைப் பாத்து, சுத்திலும் விசாரிச்சு முடிச்ச
ஒடனே போலீஸ்காரவுங்களுக்கு என்ன நடந்துருக்கணுங்றது புரிஞ்சிப் போயிடுச்சு. புருஷன்
பொண்டாட்டி சண்டை அதிகமாயிப் போயி, பொண்டாட்டிக்காரிய பழி சுமத்தி புருஷங்கார்ரேம்
காலி பண்ண நெனைக்குறாம்ங்றதெ போலீஸ்காரவுங்க புரிஞ்சிக்கிட்டாங்க. இந்தப் புகார அப்பிடியே
வுட்டா அது கேஸாயி கோர்ட்டுலத்தாம் நிக்கும். பஞ்சாயத்தப் பண்ணி தீத்து வுட்டா ரெண்டு
பக்கமும் நல்லதுங்றதால ரெண்டு பக்கத்துலேந்து ஆளுகளை வர வெச்சிப் பேசிப் பாக்குறாங்க
போலீஸ்காரவுங்க.
பெரியநாயகிப் பேசுறப்ப நடந்ததெ எந்த ஒளிவு
மறைவும் இல்லாம அப்படியே சொன்னிச்சு. சங்குவும் கிட்டதட்ட நடந்ததை ஒளிவு மறைவு இல்லாமத்தாம்
சொன்னிச்சு. ஆனா பொண்டாட்டிக்காரித்தாம் சீமெண்ணெய்யை ஊத்தி நெருப்புப் பொட்டியக்
கொளுத்திப் பத்த வெச்சி வுட்டதா கடைசியில நடந்ததெ மட்டும் மாத்திச் சொன்னிச்சு. போலீஸ்காரவுங்க
இந்த எடத்துல குறுக்க பூந்து சங்குகிட்டெ ஒரு கேள்வியக் கேக்குறாங்க, சீமெண்ணெய்ய மேல
ஊத்தி, நெருப்புப் போட்டிய எடுத்து கொளுத்துற வரைக்கும் என்ன பண்ணேன்னு? சங்கு இப்பிடி
ஒரு கேள்விய எதிர்பார்க்கல. தடுமாறிப் போயி, "நாம்ம என்ன பண்றதுன்னு தெரியாம
தெகைச்சிப் போயிட்டேம்!"ன்னு பதிலச் சொன்னிச்சு.
சரிதாம்ன்னு போலீஸ்காரவுங்க ஒடனே வுடாம,
கேன்லேந்து எதுக்க இருக்குறவங்க மேல சீமெண்ணெய்ய குளிக்க தண்ணி எடுத்து ஊத்துறாப்புல
நெஞ்சு வயித்துல மட்டும் எப்பிடிச் சரியா மேலேந்து ஊத்துறாப்புல ஊத்த முடியும்? கேன்லேந்து
விசிறித்தாம் அடிக்க முடியும்? டாக்கடருங்ககிட்டெ கேட்டப்போ ரிப்போர்ட்ல தனக்குத்
தானே ஊத்திக்கிட்டு, கொளுத்திக்கிட்ட மாதிரித்தாம்ல இருக்குன்னுல்ல சொல்றாங்கன்னு
ஒரு போட போட்டாங்க பாருங்க. சங்கு அப்பயும் அதெ ஒத்துக்கிடல. "நம்மள அடிச்சிப்
போட்டு சீமெண்ணய்ய ஊத்திப் பத்த வெச்சா!" அப்பிடினிச்சு. போலீஸ்காரவங்களும்
மேலுக்கு மேல வுடாம, எரிஞ்சத வெச்சிப் பாக்குறப்போ அப்பிடில்லாம் தெரியலன்னும், ஒடம்புல
வேற அடிவாங்குனாப்புல எந்த விசயத்தையும் டாக்கடருங்க ரிப்போர்ட்டா கொடுக்கலன்னும்
அடிச்சிப் பேசுனாங்க.
அப்பத்தாம், "சம்பவத்துல சம்பந்தப்பட்டவேம்
சொல்றதெ வுட்டுப்புட்டு நீஞ்ஞளா ஒரு கதைய சோடிச்சா எப்பிடி?" அப்பிடினுச்சு
எடையில பூந்து முருகு மாமா.
"பொண்ணு கிரிமினல்ங்க! இனுமே அத்து
கூட சேர்ந்து வாழ்றதுங்றது எப்பிடின்னா, புருஷங்கார்ரேம் உசுருக்கு உத்திரவாதம் யில்ல!
அதெ புடிச்சிச் செயில்ல போடணும்!" அப்பிடினுச்சு லாலு மாமா.
"யய்யோ! அப்பிடில்லாம் கெடையாதுங்க!
எம் பொண்ணு அப்பிடில்லாம் செய்யுறவா யில்லே! மாப்புள்ளகாரவங்கத்தாம் சீமெண்ணய ஊத்தி
நெருப்ப வெச்சிக்கிட்டதா சொல்றா எம் பொண்ணு! அதாங் நெசம்! நம்புங்க!"ன்னு போலீஸ்காரவுங்க
கால்ல போயி வுழுந்தாரு பெரியநாயகியோட அப்பங்காரரு.
ரெண்டுப் பக்கமும் பதற்றப்படாதீங்கன்னும்,
நடந்ததெ கிட்டதட்ட நாஞ்ஞ சொல்லிட்டேம்ன்னும், இதுக்கு மேல நீங்களா மனசு வெச்சத்தாம்
முடியும்ன்னும், வாழ முடியாதுங்றவங்கள நாஞ்ஞ சேத்து வைக்கவும் முடியாதுன்னும், பிரிஞ்சிப்
போறேங்றவங்கள நாஞ்ஞ பிரிச்சி வைக்கவும் முடியாதுன்னும், அத்து கோர்ட்டுல முடிவாவ
வேண்டியதுன்னும் சொல்லுறாங்க போலீஸ்காரவுங்க.
அந்த எடத்துல, "நீஞ்ஞ பணத்தெ அந்தப்
பக்கம் வாங்கிட்டுப் பேசுறாப்புல தெரியுது. வேணும்ன்னா சொல்லுங்க நாங்களும் தர்றோம்!"ன்னு
சங்கு சொன்னதும் போலீஸ்காரவங்களுக்குக் கோவம் வந்திடுச்சு.
ஒடனே போலீஸ்காரவுங்க, தங்களோட அளவுக்கு
என்னத்தெ பண்ண முடியுமோ அதெத்தாம் பண்ண முடியும்ன்னும், புருஷன் பொண்டாட்டிச் சண்டை
மாதிரித்தாம் தெரியுதுன்னும், ஒத்துப் போறதுன்னா சொல்லுங்க, கேஸ வாபஸ் பண்ணிக்கிட்டு
இத்தோட முடிச்சிக்கிடலாம்ன்னும், இதுக்கு மேலன்னா கோர்ட்டுலத்தாம் கேஸூ நடந்து கோர்ட்ல முடிவாவுறதுதாம்ன்னும், புருஷன் பொண்டாட்டிய
சேத்து வைக்கிற மாதிரிக்கின்னா எதாச்சிம் பண்ணி வுடறேம்ன்னும், பிரிச்சி வைக்குற மாதிரிக்கின்னா
அத்து கோர்ட்லத்தாம் முடிவாவணும்ன்னும், மேக்கொண்டு யோஜிச்சிச் சொல்லுங்கன்னும் தீர்மானமா சொல்றாங்க.
"இத்து சரிபட்டு வாரதுடா! இப்பிடியே
வுட்டா ரொம்ப துளிரு வுட்டாப்புல ஆவும். கோர்ட்டுக்குப் போயி ஒரு முடிவெ கட்டுனாத்தாம்
சரிபட்டு வரும்!"ன்னுருக்கு அதுக்கு முருகு மாமா.
"கோர்ட்டுல இழுத்து மானத்தெ வாங்குனாத்தாம்
இத்து ஒரு முடிவுக்கு வரும். இந்தாருங்கய்யா நீஞ்ஞ கேஸப் போட்டு அனுப்பி வுடுங்க.
நாஞ்ஞ கோர்ட்ல பாத்துக்கிடறேம்!"ன்னுச்சு அதுக்கு அழுத்தம் கொடுத்தாப்புல லாலு
மாமாவும்.
பெரியவங்கள வெச்சு குடும்பப் பஞ்சாயத்தா
பேசி முடிச்சிட்டு வாரதுன்னாலும் வாங்கன்னும் அதுவரைக்கும் கம்ப்ளெய்ண்ட்ட நிறுத்தி
வைக்குறதாவும் போலீஸ்காரவுங்க சொல்லிப் பாத்தாங்க. எதுக்கும் முருகு மாமாவும், லாலு
மாமாவும் அசைஞ்சிக் கொடுக்குறாப்பு தெரியல.
"மான ரோஷம் மட்டு மருவாதி தெரிஞ்சவங்களுக்குத்தாம்
அதெல்லாம் பண்ணலாம். எல்லாத்தையும் உத்துத் தள்ளி வுட்ட சனத்துக்கு அதெல்லாம் சுத்தப்படாது.
கோர்ட்டு வெச்சு மானபங்கம் பண்ணாத்தாம் செரிபட்டு வரும்!"ன்னுச்சு முருகு மாமா.
"கோர்ட்டு படியேறுனாத்தாம் செரிபட்டு
வரும். அது வரைக்கும் செரிபட்டு வாராது!"ன்னு லாலு மாமாவும் சொன்னுச்சு.
"இஞ்ஞயே நமக்கு ஞாயம் கெடைக்குறாப்புல
தெரியல. பெறவு யார்ர வெச்சு பஞ்சாயத்தெ பண்ணுறது? நமக்கு இவுங்க ரண்டு பேரும்தாம் பெரியவங்க.
எவ்வளவோ பேசி வுட்டுப்புட்டாங்க. எதுவும் சரி வாரல. சரியும் வாராது. கோர்ட்டுத்தாம்
சரிபெட்டு வரும். எதையும் நிறுத்தி வைக்க வாணாம். ரொம்ப அவகாசம்ல்லாம் திருந்துறதுக்குக்
கொடுத்தாச்சி. இனுமே கொடுக்க முடியாது. நாஞ்ஞ கோர்ட்டுலயே பாத்துக்கிடறேம்!"
அப்பிடினுச்சு சங்கு. அதுக்கு மேல போலீஸ்காரவுங்க இதுக்கு மேல ஆண்டவேம் வுட்டு வழின்னு
மேக்கொண்டு புகாருக்கு ஆவ வேண்டியதெ பண்ணதுல, புகாரு கோர்ட்டு வரை போனுச்சு. இப்பிடித்தாம்
அந்தச் சம்பவம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி கோர்ட்டுக்கும் போனுச்சு. அது ஒரு கிரிமினல்
கேஸா கோர்ட்டுல நடந்துச்சு. இந்தக் கிரிமினல் கேஸ வெச்சி சங்கு பெரியநாயகிக்கு வக்கீல்
மூலமா விவாகரத்து நோட்டீஸையும் அனுப்புனுச்சு. இப்படி கோர்ட்டு, வக்கீல்ன்னு வடவாதியில
இருந்த இந்த வகையறாவுல மொத மொதலா போயி நின்ன ஆளு சங்குதாம். சங்குவுக்கு இந்தக்
கோர்ட்டு அலைச்சலோட, வக்கீல பாத்து வுட்டதுன்னு அதுல பெரிய ஒத்தாசை பண்ணது லாலு மாமாதாம்.
"எதுவா இருந்தாலும் நம்ம சொந்தப்
பந்தத்துல, நம்ம வகையறாவுல நாலு பெரிய மனுஷங்கள வெச்சி பேசி முடிச்சிக்கிட்டு, கோர்ட்டுல
ஒரு வெவாகரத்து கேஸைப் போட்டு முடிச்சிக்கிடறதெ வுட்டுப்புட்டு ஏம்ய்யா இப்பிடி எடுத்த
எடுப்புல போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி, கோர்ட்டுல போயி நிக்குதீங்களே?"ன்னு
சம்பவத்தெ கேள்விப்பட்ட நாலு சனங்க கேட்டுத்தாம் பாத்தாங்க. போலீஸ்காரவுங்ககிட்டேயே
அந்த அளவுக்குப் பதிலெச் சொன்னவங்க, அவுங்களுக்கு எப்பிடிப் பதிலெச் சொல்லிருப்பாங்க!
அதையும் நீங்களே கேளுங்க!
"அதெல்லாம் நாஞ்ஞ பண்ணாத பஞ்சாயத்தா?
எதுக்கும் அடங்காத அடங்காப்பிடாரியாக்கும் அந்தப் பொண்ணு. அதுக்கு நாலு பேத்த வெச்சு
பஞ்சாயத்த வைக்கணும்ன்னா வர்ற நாலு பேத்துக்கு நம்மால பாதுகாப்புல்லாம் கொடுக்க முடியா.
எந்த நேரத்துல வாணாலும் பொண்ணு சீமெண்ணெய்யைத் தூக்கி மேல ஊத்தி பத்த வெச்சிப்புட்டு
அது பாட்டுக்குப் போயிட்டே இருக்கும். சொல்ல முடியாதுவே! பெட்ரோலு குண்டெ மேல வீசுனாலும்
ஆச்சரியப்படுறதுக்கில்லே. நம்மப் பய சங்கு பொழச்சது மறுபொழப்பு. அவனா இருந்தவாசி
சாமர்த்தியமா தப்பியிருக்குறாம்! வேற ஒரு பயலுன்னா சாம்பலாத்தாம் வந்திருப்பாம்!"ன்னுச்சு
அதுக்கெல்லாம் ஒரு பதிலச் சொல்றத போல முருகு மாமா.
லாலு மாமாவும் அந்தப் பேச்சுகளுக்கு வுட்டுக்
கொடுக்காம தம்மோட பங்குக்குச் சொன்னுச்சு, "தெகிரியம் இருந்த ஆளா வாட்டி சங்கு
தப்பிச்சாம்! அவ்வே சீமெண்ணய்ய ஊத்த, ஏதோ ஒரு கோவத்துல வெளையாட்டுக்கு மெரட்டுறதா
நெனைச்சிக்கிட்டு இருந்திருக்காம். நெருப்புப் பொட்டிய ஒரசனப்பத்தாம் பயலுக்கு ஒரைச்சிப்
போயி கதவெ தொறந்துக்கிட்டு வெளியில ஓடியாந்திருக்காம். வேற யாரும்ன்னா யோஜனெ இல்லாம
நடுவூட்டுலயே எரிஞ்சி கரிக்கட்டையா ஆயிருப்பாம். அவ்வேம் உசுரு பொழைச்ச வாட்டி இப்போ
சம்பவம் இதுன்னு வெளியில தெரியுது. இல்லன்னா அந்தப் பொண்ணுச் சொல்றதுதாங் உண்மென்னு
ஆயிருக்கும். அத்துச் சொல்லுது, பண்ணதல்லாம் பண்ணிப்புட்டு, நம்ம பயதாம் சீமெண்ணய
ஊத்திக் கொளுத்திக்கிட்டதாவும், அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லன்னும். நாங் கேட்குறேம்,
நம்ம பய ன்னா பைத்தியக்கார பயலா, தனக்குத் தானே சீமெண்ணய்ய ஊத்திக் கொளுத்திக்க? இந்தக்
காலத்துப் பொம்பளைக எப்பிடில்லாம் இருக்குதுன்னு பாத்துக்கோங்க! அந்தச் சிறுக்கிக்குன்னு
ஒரு அப்பங்கார்ரேம் வந்து வாய்ச்சிருக்காம் பாருங்க! ஆன்னா ஊன்னா பொத்துப் பொத்துன்னு
கால்ல வுழுந்து எதா இருந்தாலும் உண்மென்னு சாதிக்கப் பாக்குறாம். அப்பிடித்தாம் ஸ்டேஷன்ல
பஞ்சாயத்து ஆவுறப்போ போலீஸ்கார்ரேம் கால்ல வுழுந்து காரியம் சாதிக்கப் பாத்தாம்!
கொல்லப் பாத்துப்புட்டு மொல்ல தப்பிச்சிப்புடலாம்னு நெனைச்சிப்புட்டாம்! செரித்தாம்
கழுதே! தொலைஞ்சிப் போவுது, அத்து வுடலாம்ன்னு பாத்தா... அப்பிடியே அத்த வுட்டா அந்த
அவ்சாரி நாயீ இன்னும் நாலு பேத்த கட்டிக்கிட்டு இதைத்தாம் பண்ணும். அதாங் வுடக் கூடாது
கோர்ட்டுல இழுத்து வுட்டு வெசயத்தெ நாலு பேத்துக்குத் தெரியுறாப்புல பண்ணி, அத்து
பேப்பர்லல்லாம் வந்து நாறணும்னு இப்பிடிப் பண்றேம்! இதுல நமக்கும் கொஞ்சம் அசிங்கம்தாம்.
அசிங்கத்தெப் பாத்தா ஊருல இருக்குற ஒரு ஆம்பளைய வுட மாட்டாய்யா அந்தச் சிறுக்கி? சரியான
பாடத்தெ கத்துக் கொடுக்கணும்னுத்தாம் வேல மெனக்கெட்டு இதெ செய்யுறாப்புல ஆவுது!"
அப்பிடின்னு.
அப்பிடி கோர்ட்டு, வழக்குன்னு ஒன்றரை
வருஷத்துக்கு மேல ரெண்டு தரப்புலயும் அலைஞ்சாங்க. இனுமே அதுக்குத் தீர்ப்பு வந்தாவணும்.
*****
No comments:
Post a Comment