செய்யு - 412
அம்மாக்காரியான ராணி அத்தை சாவுறதுக்குத்
தானும் ஒரு வகையில காரணங்ற குற்ற உணர்ச்சி சங்குவுக்கு இருந்திருக்கணும். அம்மாக்காரி
செத்த பிற்பாடும் வடவாதிக்கு வராமலே கொல்லுமாங்குடியில பேக்கடரியில கொடுத்த குவார்ட்டர்ஸ்லயே
இருந்துச்சு சங்கு. "இனுமேலாவது குடும்பத்தோட இஞ்ஞ கொண்டாந்து தம்பிகளப் பாத்துக்கோடா!"ன்னு
உறவுக்கார சனங்க சொன்னதுக்கு, "அம்மாவோட ஆசை கடெசி வரைக்கும் நம்மட பொண்டாட்டி
இஞ்ஞ வாரக் கூடாதுங்றதுதாம்! அந்த ஆசைய நம்மட உசுரு இருக்குற வரைக்கும் நிறைவேத்தணும்னு
நெனைக்கிறேம்!" அப்பிடினுச்சு அதுக்குப் பதிலா சங்கு. சங்கு அப்பிடிச் சொன்னப்ப,
"இவ்வேம் ன்னடா குடும்பப் பொறுப்ப இப்பிடித் தட்டிக் கழிக்கிறாம்!"ன்னுத்தாம்
கேட்டவங்க நெனைச்சாங்க. தான் பொறுப்பான அண்ணங்கார்ரேம்ங்றதெ கொஞ்ச நாள்லயே சங்கு
நிரூபிச்சுது.
தம்பிக்காரனுவோ ரெண்டு பேரும் வடவாதியில
சமைச்சிச் சாப்பிட்டுக்கிட்டும், சமைக்காதப்போ கடையில வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டும்
கெடந்தானுவோ. எத்தனை நாளைக்குத் தம்பிக்காரனுகளை அப்பிடியே வுடறதுன்னு ஆனந்தனுக்கு
மெனக்கெட்டு ஒரு பொண்ண பாத்து கட்டி வெச்சு, செந்தில அவ்வேம் போக்குல வுடாம வெளிநாட்டுக்கு
விசா, பாஸ்போர்ட்லாம் எடுத்து கொஞ்சம் பணத்தெ செலவு பண்ணி அனுப்பி வெச்சிதெல்லாம்
சங்குதாம். ரெண்டு தம்பிகளுக்கும் அப்பன் ஆயி இல்லன்னாலும், அப்பனும் ஆயியுமா இருந்து
நல்ல கதிய காட்டி வுட்டுப்புட்டாம்னு அதுல ஒரு நல்ல பேரு சங்குவுக்கு.
ஒரு மனுஷன்னா எல்லா வெதத்துலயுமா நல்ல
மனுஷனா இருக்க முடியுது? சில விசயங்கள்ல கெட்ட வெதமா பண்ணிப்புடறாப்புலயும் ஆயிடுது.
எல்லா விசயத்துலயும் நல்ல வெதமாவே இருக்கணும்ன்னா ஒரு சில விசயங்கள அதது போக்குல வுட்டுப்புடுற
மனப்பக்குவம் வந்துப்புடணும். அப்பிடி இல்லாம எல்லாத்தையும் தன்னோட போக்குல இழுத்துப்
பிடிக்க நெனைச்சு, அது நடக்காமப் போயி, அதுல கோவமாயி ஒண்ணு கெடக்க பண்ணிப்புட்டா,
பெறவு கெட்டவங்ற பேருதாம் ஊருலயும், ஒறவுலயும் மிஞ்சும்.
ராணி அத்தை வெரட்டி விட்டப் பெறவு சங்கு
பொண்டாட்டி புள்ளையோட கொல்லுமாங்குடியில இருந்த குவார்ட்டர்ஸ கதின்னு இருந்துச்சு.
பேக்கடரியில இஞ்சினயர்ன்னா சொல்லவா வேணும்? நல்ல வசதி, நல்ல சம்பளம், ஒரு பொம்பளைப்
புள்ளைன்னு வாழ்க்கை அதுக்கு நல்லாத்தாம் போனுச்சு. இருந்தாலும் ஆம்பளப் பயலுகளுக்குன்னு
ஒரு கிறுக்கு இருக்குமில்லே, பொம்பளையக் கட்டுனா அத்து தன்னோட பேச்ச மட்டும் கேட்டுகிட்டு
வூட்டோ கெடக்கணும்னு, அப்பிடி ஒரு கிறுக்கு சங்குவுக்கு ரொம்ப அதிகமாவே இருந்திச்சு.
தன்னோட பேரு கெட்டுப் போன பிற்பாடு,
பெரும்படியான விசயங்கள்ல எவ்வளோ வுட்டுக் கொடுத்த சங்குவோட பொண்டாட்டி பெரியநாயகிக்கு
மாசத்துக்கு ஒரு தடவையாவது பொறந்த வூட்டுக்குப் போயிட்டு வர்ற ஆசை மட்டும் மனசுக்குள்ள
விடல. சமயத்துல மாசத்துல ரெண்டு மூணு தடவையும் புருஷங்காரன் வேலைக்குப் போற நேரமாப்
பாத்து, சங்குவுக்குத் தெரியாம, புள்ளைய அக்கம் பக்கத்து வூட்டுல விட்டுட்டு போயிப்
பாத்துட்டு வந்துடும். கொல்லுமாங்குடிக்கும், திருவாரூருக்கும் பஸ்ஸூக்குப் பஞ்சம்
கெடையாது. மாயவரம் போற எந்த பஸ்ஸூல ஏறுனாலும் கொல்லுமாங்குடிங்றது முக்கியமான ஸ்டாப்பிங்.
அதிகமாப் போனா முக்கா மணி நேரத்துல அங்கேயிருந்து இங்கே வந்துடலாம், இங்கேயிருந்து
அங்க போயிடலாம். வேகமா போற பஸ்ஸூன்னா அரை மணி நேரம் போதும்.
அரக்க பரக்க பறந்துக்கிட்டுப் போயி பாத்துட்டு,
யாருக்கும் தெரியாம கொடுக்க வேண்டியதெ கொடுத்துட்டு வர்ற பழக்கத்த பெரியநாயகியால
மாத்திக்கிட முடியல. அப்பிடிப் போயிப் பாத்துட்டு வாரப்ப பணங்காசியத் தவுர, வூட்டுல
வாங்கிப் போட்டுருக்குற அரிசி, பருப்பு, புளி, மெளகா, சீனின்னு சாமாஞ் செட்டுகள்ல
கணிசமானதெ எடுத்துட்டுக் கொண்டுப் போய் கொடுத்துட்டு வந்துப்புடும். பணங்காசிய மட்டும்
சங்கு பெரியநாயகியோட கண்ணுலயே காட்டுறதில்லே. வூட்டுச் செலவுக்குன்னு அம்பது, இருவதுன்னு
கொடுக்குறதுதாம். அந்தக் காசி பஸ்ஸூக்குப் போயிட்டு வாரதுக்கே பெரியநாயகிக்குச் சரியா
இருந்ததால காசிய மட்டும் கொடுக்க முடியாம போயிருந்துச்சு. காசியை அள்ளி பொறந்து
வூட்டுக்குக் கொடுக்க முடியலங்ற கொறையத் தவுர வேற ஒரு கொறையும் பெரியநாயகிக்குக்
கெடையாது. பெரியநாயகியோட வூட்டுலயும் கொஞ்ச நாளு இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிப்
பாத்தாங்க. பெரியநாயகி கேக்கல. அத்தோட ஒரு கட்டத்துக்கு மேல அவுங்களும் வேண்டாம்னு
சொல்ல முடியாத அளவுக்கு வறுமை தாண்டமாடுனதுல ஒண்ணும் சொல்ல முடியாம வுட்டுப்புட்டாங்க.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவாம்ன்னு
கிராமத்துல சொல்றது. எம்மாம் சாமர்த்தியமா திருட்டைப் பண்ணாலும், தப்பைப் பண்ணாலும்
ஒரு நாளு எப்பிடியோ அது வெளியில தெரியுறதெ தடுக்க முடியாம போயிடுது.
சங்கு எப்பிடிப்பட்ட ஆளுன்னா வேலை முடிஞ்சி
சாயுங்காலம் வந்தான்னா வாங்கிப் போட்ட சாமானுங்க எல்லாம் சரியா இருக்கான்னு சமையல்கட்டுல
பூந்து சந்தேகப்பட்டு சரிபாக்குற ஆளு. வாங்கி
வெச்ச அரிசியையெல்லாம் இதுக்காகவே படியால அளந்து வெச்சிட்டுப் போற ஆளு. அப்படி அளந்து
வெச்சதுல குண்டுமணி கொறைஞ்சாலும் கோவம் வந்துப்புடும். பெரியநாயகி புருஷனுக்குத்
தெரியாம திருவாரூருக்குப் போயிட்ட வர்ற நாள்ல சாமாஞ் செட்டுல கொறைஞ்சு இருக்குமா?
சங்கு அதெ எப்பிடியோ ஊகம் பண்ணிக் கண்டுபிடிச்சிடும். "திருவாரூக்குப் போனீயா?"ங்கும்
சங்கு. "இல்ல!"ன்னு தலையில அடிச்சிச் சத்தியம் பண்ணும் பெரியநாயகி. சங்குவுக்குக்
கோவம் வந்துப்புடும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள அதனாலயே சண்டை வந்துப்புடும்.
சண்டைன்னா வந்துப்புட்டா சங்கு பொண்டாட்டியப்
போட்டு வெளுத்து எடுத்துப்புடும். புள்ளை பக்கத்துல நிக்குதேன்னு பாக்காது. அந்தப்
புள்ளை சங்குவோட கால்ல வுழுந்து, "யம்மாவ அடிக்காதேப்பா!"ன்னு கால பிடிச்சிக்
கெஞ்சினாலும் வுடாது. அடி பாட்டுக்குச் செமத்தியா வுழுந்துக்கிட்டே இருக்கும். அது
அடிக்கிற அடிக்கு ரெண்டு நாளுக்கு எழும்பி வேலயப் பாக்க முடியாது. காட்டுமிராண்டிப்
போல அடிச்சிக் கீழே தள்ளி ஒதை ஒதைன்னு ஒதைச்சுத் தள்ளும். என்னத்தாம் அடிச்சாலும்,
ஒதைச்சாலும் பெரியநாயகிக்கு அடி வாங்குனது பத்து நாள்ல மறந்துப் போயி பழையக் குருடி
கதவெ தொறடிங்ற மாதிரிக்கி ஆயிடும்.
அடிக்கடி திட்டுனாலே, அடிச்சாலோ அதுக்கு
ஒரு மருவாதி இல்லாம போயிடும். இப்பிடி திட்டு வாங்குறது ன்னா புதுசா? அடி வாங்குறதுதாம்
புதுசா?ன்னு மனசு திட்டுக்கும், அடிக்கும் பழகிப் போயிடும். திட்டுறீயா திட்டிக்கோ,
அடிக்கிறீயோ அடிச்சிக்கோன்னு மனசு பாட்டுக்கு சர்பத்தெ வாங்கி சந்தோஷமா குடிக்குறாப்புல
அதுக்குத் தயாரா ஆயிடும். பெறவு ஒரு நாளு திட்டு வாங்காமலே, அடி வாங்காமலோ இருந்தா
போதும், ன்னா இது திட்டு வாங்காம, அடி வாங்காம இருக்கோமோன்னு மனசுக்குள்ளயே நம நமன்னு
வந்துப் போவுற அளவுக்கு நெலமை ஆயிடும். திட்டுறதா இருந்தாலும் செரித்தாம், அடிக்கிறதா
இருந்தாலும் செரித்தாம் அதெ கடைசி ஆயுதமா வெச்சிக்கிட்டாத்தாம் அதுக்கு ஒரு மருவாதி
இருக்கும். அதெ மொத ஆயுதமா கையில எடுத்தா அதுக்கு இருக்குற மருவாதி போயிடும். திட்டுறதுக்கு
மேல திட்டுறதோ, அடிக்கிறதுக்கு மேல அடிக்கிறதோ கடைசியில அது எதுக்கும் பிரயோஜனம்
இல்லாம போயிடும்.
"ஏம்டி சாவடி வாங்குனாலும் எப்பிடிடி
அவ்வளவையும் வாங்கிக்கிட்டு ஒங்க அப்பம் ஆயிக்குன்னு சாமாஞ் செட்டுகள கொண்டு போயி
கொடுத்துட்டு இருக்கீயே? நமக்குன்னு ஒரு பொம்பளப் புள்ள ஆச்சில்லே. அதுக்கு நக நெட்டு
காசிப் பணம் சேத்து வைக்க வாணாமா?"ன்னு கொஞ்சம் சமாதானம் ஆவுறப்ப கேக்கும் சங்கு.
"ஆம்மா நீஞ்ஞ என்னவோ முழுக்காசியையும்
போட்டு சாமாஞ் செட்டு வாங்குற மாதிரில்லா பேசுதீங்க? பேக்கடரி ஸ்டோர்ல காக்காசிக்கும்,
அரைக்காசிக்கும்தான வாங்குதீயே! அதெ கொண்டு போயிக் கொடுக்குறதுல என்னத்தெ கொறைஞ்சிப்
போவப் போறீயே? நாம்ம என்ன சம்பாதிக்குற காசிய எடுத்துட்டுப் போயா கொடுத்துப்புட்டு
வார்றேம்? இஞ்ஞ கூடுதலா கெடக்குறதுல, திங்குறதுக்கு ரண்டு சாமாஞ் செட்டுகள கொண்டுப்
போயித்தான போட்டுட்டு வார்றேம்! ஒங்களுக்காக எம்மாம் செஞ்சிருக்காவோ எஞ்ஞ வூட்டுலேந்து?
இன்னிக்கு நெலமெ சரியில்ல. கொலபட்டினியா கெடக்குறாவோ தெரியுமா? வெளியில சொல்லிக்க
முடியாம அவுங்க படுறா பாடு இருக்கே! இஞ்ஞ சாமாஞ்செட்டுல்லாம் ஒண்ணுக்கு நாலா கெடந்து
புழுபுழுத்துத்தானே கெடக்கு. அப்பிடிப் புழுத்ததுல ரவையக் கொண்டு போயிக் கொடுக்குறதுலாம்
கொறைஞ்சிப் போயிடுதாக்கும்? கெடக்குறதெ புழுவும் பூச்சியும் திங்கலாம்! பட்டினியா
கெடக்குற மனுஷங்க திங்குறதுதாங் இஞ்ஞ கொறையாப் போயிடுது!"ன்னு பெரியநாயகி புருஷங்கார்ரேம்
நெசமாவே சமாதானம் ஆயிட்டதா நெனைச்சு அதுக்கு பதிலுக்குச் சொல்லும்.
அதெ கேட்டுப்புட்டு சமாதானம் ஆன சங்குவோட
மனசுல இன்னும் கோவம் அதிகமாயி பெரியநாயகியே இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்தும்.
அடி வாங்கி வாங்கி பெரியநாயகிக்கு அது ஒரு பழக்கமாவே போயிடுச்சு. எம்மாம் சங்கு அடிச்சாலும்
ப்பூன்னு ஊதி வுட்டுப்புட்டு எல்லாம் மரத்துப் போனது போல ஆயிடுச்சு பெரியநாயகிக்கு.
சங்குவுக்கு அடிக்கிறதும், பெரியநாயகிக்கு அடி வாங்குறதும் ஒரு வெளையாட்டுப் போல ஆயிடுச்சு.
சங்கு அதெ செய்ய வேண்டாம்ன்னு சொல்றதும், சங்குவோட பொண்டாட்டி அதெ மீறிக்கிட்டுப்
போயிக் கொடுத்துட்டு வாரதும்ன்னு, ரெண்டு பேத்துக்கும் இடையில இதனாலயே சண்டை நடக்குறதும்ன்னு,
அதெ அப்பப்ப போயி லாலு மாமாவும், முருகு மாமாவும் சமாதானம் பண்ணி வைக்கிறதும்ன்னு
அது வேற ஒரு வழக்கமாவே போயிடுச்சு. சில சமயம் சண்டெ ரொம்பப் பெரிசாகி ரெண்டு குடும்பத்துக்கும்
இடையில பெரிய பஞ்சாயத்து அளவுக்குப் போயிடும். சங்குவோட மாமானாரு வூட்டுலயும் ஒவ்வொரு
பஞ்சாயத்தப்பவும் பெரியநாயகிகிட்டெ இனுமே எதையும் கொண்டு வந்து கொடுத்து சண்டெயப்
போட்டுக்கிட்டு, பஞ்சாயத்த இழுத்துட்டு வாராதேன்னு சொல்லித்தாம் பாப்பாங்க. அத்து என்னவோ பெரியநாயகிக்கு அத்து ஒரு பெரிய விசயமாவே
தெரியல. மறுபஞ்சாயத்து அடுத்த மாசத்துலயே நடக்கும்.
"ஆம்மா! அத்து ஒரு பெரிய விசயமா?
நாலு அடியப் போடும்! நாலு நாளைக்கி சண்டையப் போடும்! பெறவு அவுக வூட்டுலேந்து யாராச்சிம்
சமாதானத்துக்கு வருவாக! வேற வேல இல்ல பாரு! இத்து என்னவோ புதுசா இன்னிக்கு நேத்திக்கு
நடக்குற மாதிரில்லா பேசுதீயே? அத்து அப்பிடித்தாம் பண்ணும். நாமளும் இப்பிடித்தாம்
பண்ணுவேம். என்னவோ அத்து வூட்டுக் காசிய எடுத்துக் கொடுக்குறாப்புல ஒரு கோவம்! கருமத்தெ!
பேக்கடரிக்கார்ரேம் அரைக் காசிக்கும், காக்காசிக்கும் கொடுக்குற பண்டந்தானே! அத்து
நாலு பேத்துக்குப் பயன்படணும்னு நெனைக்கணும். அந்தப் புத்தியே கெடையாது. ஒரு ரண்டு
இட்டிலியக் கூட கூடுதலா சுட்டு வைக்க முடியாது. ஆசைக்கி ஒரு தோசைய கூட ஊத்தித் தின்ன
முடியாது. ஒடனே ஓடியாந்து என்னத்தெ குடும்பத்தெ நடத்துறேன்னு போட்டு ஒதைக்க வேண்டியது!
இப்பிடில்லாம் சிக்கனத்தெ பண்ணி என்ன பண்ணப் போறதா நெனைப்போ? எல்லாத்துக்கும் கணக்கு.
இட்டிலின்னா இம்மாம் சுடணும், தோசைன்னா இம்மாம் சுடணும், சோறுன்னா இம்மாம் வடிக்கணும்,
கறிகாய்ன்னா இம்மாம்தான் வாங்கணும்னு அதெ கூட நம்மள அங்க இங்கப் போயி வாங்க வுடாம
கணக்குப் பண்ணி அவுகளே வாங்கியாறது! பெறவு வூட்டுல நாம எதுக்கு ஒரு பொண்டாட்டின்னு
இருக்கணும்? சமயத்துல வெறுத்துப் போவுது? எங்காச்சியும் ஓடிப் போயிடலாமுன்னு? ஒரு
பொண்ணப் பெத்துட்டதால, அதோட மொகம் நெனைப்புல வந்து போவ வுட மாட்டேங்குது!"ன்னு
பெரியநாயகியும் சமயத்துல வெறி கொண்டாப்புல அது பாட்டுக்குப் பேசும்.
*****
No comments:
Post a Comment