செய்யு - 411
ஆறுதான் எல்லாம். ஆத்துல தொடங்கி ஆத்துல
முடியுற வாழ்க்கைதான் இங்க எல்லாத்துக்கும். ஆத்துல ஓடுற தண்ணித்தாம் தாயோட கருவறையில
பனிக்கொடமா நெறைஞ்சிருக்கு. அதுல ஓடுற தண்ணித்தாம் இங்க இருக்குற கொளம், கெணறு, கொழாய்கள்ல
ஊருணி அடிச்சி வருது. அந்தத் தண்ணியத்தாம் கொழந்தை பொறந்த ஒடனே சர்க்கரையில கரைச்சி
வாயில ஊத்துறது. அந்தத் தண்ணிய குடிச்ச தாயோட ரத்தம்தாம் பாலாகி கொழந்தைகளோட வாயில
போகுது. அந்தத் தண்ணியில வெளைஞ்ச புல்லைத் தின்ன மாட்டோட பாலத்தாம் கொழந்தைக் குட்டியிலேந்து
கெழட்டு மனுஷங்க வரைக்கும் குடிக்குறாங்க.
அம்மாக்காரி கொழந்தைக்கு வூட்டுற நெலாச்சோறும்
இந்த வெண்ணாத்துத் தண்ணியில வெளைஞ்சதுதாம். இந்த ஆறு இல்லன்னா, அத்து வெளைவிச்ச சோறு
இல்லன்னா அம்மாக்காரி கொழந்தைக்கு நெலாவைக் கூட காட்ட முடியாது. வெண்ணாறுதாம் பூமியிலேந்து
வானத்துல இருக்குற நெலா வரைக்கும் இங்க ஒரு தொடர்ப உண்டு பண்ணுது. இங்க இருக்குற சனங்க
மொத்தத்துக்கும் ஐம்பூதங்களும் அஞ்சு பூதங்களா கெடையாது. அஞ்சு பூதமும் ஒண்ணா வெண்ணாத்து
வடிவிலத்தாம் இருக்கு. வெண்ணாறு ஓடுறதாலத்தாம் நெலம்ங்ற பூதத்துக்கு இங்க மதிப்பு,
வெண்ணாத்து தண்ணியில கலந்து குளுந்து அடிக்கிறப்பத்தாம் இங்க வீசுற காத்துக்கு மதிப்பு,
வெண்ணாத்து வெளைச்சல்ல காசு பணம் உண்டாயி நெஞ்சு நிமுந்து ஆகாசத்தெ பாத்து நடக்குறப்பத்தாம்
இங்க பாக்குற ஆகாசத்துக்கு மதிப்பு, அதெ வெண்ணாத்துக் கரையில சுடலையாகி நெருப்பா மனுஷன்
எரியுறப்பத்தாம் இங்க எரியுற நெருப்புக்கு மதிப்பு. மொத்தத்துல அஞ்சு பூதமும் இங்க
வெண்ணாத்து வடிவிலத்தாம் இருக்கு இங்க இருக்குற மனுஷங்களுக்கு.
இங்க வெளைஞ்ச நெல்லு, கரும்பு, காய்கறிக,
உளுந்து, பயிறு, தேங்காய், நொங்குன்னு எல்லாத்துலயும் வெண்ணாத்து தண்ணி கலந்து இருக்கு.
இந்தத் தண்ணியில வெளைஞ்ச நெல்ல வித்து வாங்குன தங்கம்தாம் ஒவ்வொரு பொண்ணோட கழுத்துலயும்,
காதுலயும், மூக்குலயும் ஜொலிக்குது. இந்தத் தண்ணியில வெளைஞ்ச விளைபொருட்கள வித்துப்
பொரண்ட பணத்துல கட்டுனதுதாம் இங்க இருக்குற வூடுக, கட்டடங்க, கோயில்க எல்லாமும்.
ஒரு வகையில சொன்னாக்கா இங்க இருக்குற உசுரு உள்ளது, உசுரு இல்லாதது எல்லாத்திலயும்
வெண்ணாத்துத் தண்ணித்தாம் ரத்தத்தெ போல ஓடுது.
இடுகாடு, சுடுகாடு, கருமாதித் தொறை எல்லாமும்
வெண்ணாத்தாங்கரையிலத்தாம் இருக்கு. அதோட தண்ணியிலத்தாம் உசுரா உருவான சனங்களோட ஒடம்பு
சாம்பலாயி கரையுது. கோயில் குடமுழுக்குன்னு தண்ணி எடுத்தாலும், சாவுக்கு ஒறவுமொறறை
சேர்ந்து பொணத்தெ குளிப்பாட்ட தண்ணி எடுத்தாலும் எல்லாம் வெண்ணாத்து தண்ணித்தாம்.
கலியாணம், காதுகுத்து, வளைகாப்பு, திருவிழான்னு பண்ணுற எல்லாத்துக்குமான கோயில்களும்
வெண்ணாத்தாங்கரையிலயோ அல்லது கரைக்குக் கொஞ்சம் பக்கத்துலயோத்தாம் இருக்கு. அந்த
ஒவ்வொரு கோயில்ல எரியுற தீபம் நெய்யுல எரிஞ்சாலும் சரித்தாம், எண்ணெய்ல எரிஞ்சாலும்
சரித்தாம், அந்த நெய்யிங்றது வெண்ணாத்து தண்ணியில வெளைஞ்ச புல்லைத் தின்னு, வெண்ணாத்துத்
தண்ணிய குடிச்ச மாட்டோட பால்லேந்து கெடைச்சதுதாம், யில்லே கோயில்ல எரியுற தீபம் எண்ணெய்ல
எரிஞ்சாலும் அந்த எண்ணெய்ங்றது வெண்ணாத்து தண்ணியில வெளைஞ்ச எள்ளுலேந்து எடுத்ததுதாம்.
ஆக, கோயில்ல நெருப்பா எரிஞ்சி வெளக்கேத்தி வைக்கிறது தண்ணித்தாம், அத்து வெண்ணாத்து
தண்ணித்தாம். அந்தத் தண்ணியில்லாம இங்க சனங்க, ஆண்டவேம்னு எதுவும் கெடையாது.
கிராமங்கள்ல கூட வெண்ணாத்தாங்கரைய ஒட்டி
இருக்குற கிராமங்கள்ளத்தாம் கடைத்தெருவுகளும் பெரிசா இருக்கு. சனங்க நடமாட்டமும் இருக்கு.
இந்த ஆத்துலேந்துதாம் தொப்புள் கொடி போல வாய்க்கா, வாரின்னு எல்லாமும் பிரியுது.
வெண்ணாறு பாய்ச்சுன தண்ணி ஓடாத உசுரும், சடமும்னு இங்க எதுவும் கெடையாது. சுருக்கமா
சொல்லணும்னா வெண்ணாறுதாம் இங்க மனுஷங்களா நடமாடுது, ஆடு மாடுகளா ஓடுது, கோயில்லா
எழும்பி நிக்குது, வீடுகளா பெருகி நிக்குது. வானத்து நெலா, சூரியன் எல்லாமும் வெண்ணாறு
இங்க இருக்குறதாலத்தாம் அதுக்கு ஒரு மருவாதியே கெடைக்குது. வெண்ணாறு இல்லாம சூரியனெ
மட்டும் வெச்சிக்கிட்டு இங்க என்னத்த பண்ணுறது? அந்தச் சூரியனையே குளுந்துப் போவ பண்ணுறது,
ஆறா ஓடி கடலா பெருகி மேற்கால சூரியன் மறையுறப்ப தனக்குள்ள வாங்கிக்கிறது வெண்ணாறுதாம்.
காலையில இந்த வெண்ணாத்துத் தண்ணியில பெருகுன கடல்லேந்துத்தாம் சூரியன் கெழக்காலேந்து
எழும்பி வருது.
வெளியூரு போனாலும் சரி, வெளியூர்லேந்து
வந்தாலும் சரி இந்த ஆத்துக்குக் குறுக்க இருக்குற ஒரு பாலத்தையாவது கடக்காம அந்தாண்ட
இந்தாண்ட போயிட முடியாது. அந்தப் பாலத்துல நடக்குறப்போ, பயணிக்கிறப்போ தாயொருத்தி
தன்னோட கைகளால நம்மோட பாதங்கள தாங்குறாப்புலத்தாம் இருக்கு. மொத்தத்துல இங்க இருக்குற
மொத்த உசுருகளும் இந்த ஆத்தத் தாண்டி அந்தாண்ட இந்தாண்ட நடமாடிக்கிட்டு இந்த ஆத்துலத்தாம்
அடங்குதுங்க. இந்த வெண்ணாத்த இங்க இருக்குற சனங்க ஆறா நெனைச்சாலும் செரித்தாம், சாக்கடைக்
கால்வாய நெனைச்சாலும் சரித்தாம், அதுல தண்ணி வாரப்பத்தாம் இங்க சுத்துப்பட்டே செழிக்குது.
சந்தோஷம் கொழிக்குது.
கொஞ்சம் வசதிப்பட்ட மக்காத்தாம் அஸ்திய
கரைக்க கோடியக்கரைன்னும், ராமேஸ்வரம்ன்னும் போகுமுங்க. அதெ பத்தி வெண்ணாறு கவலைப்பட்டுக்கிட்டது
இல்ல. ஏன்னா அங்க இருக்குற தண்ணியும் இங்க வெண்ணாத்துலேந்து போன தண்ணித்தாம். ஆனா,
பெரும்பாலான சனங்க செத்த பின்னாடி அவுங்களோட அஸ்தி கரையுறது இந்த ஆத்துலத்தாம். இந்த
ஆறு பாக்க ஒடம்பா பொறந்து, இந்த ஆறு பாக்க சாம்பலா கரைஞ்சவங்கத்தாம் இங்க இருக்கற
சனங்க அத்தனை பேருமே. இந்த ஆறு எத்தனையோ பேரு பொறந்ததை, பொறந்த புள்ளைங்க விழுந்து
நீச்சலடிச்சதை, நீச்சலடிச்சப் புள்ளைங்களுக்கு நடந்த கலியாணத்தை, நல்லதைக் கெட்டதை,
அவுங்களோட அஸ்தி கரைஞ்சதைன்னு எவ்வளவையோ பாத்திருக்கு. எப்பிடிப் பாத்தாலும் இங்க
பொறந்து, ஆத்தங்கரையில செத்து சாம்பலாயி ஆத்துலயே அஸ்தியா கரையுறது இங்க இருக்குற
சனங்களுக்கு பெருமெதாம். நடமாட்டமா இருக்குறப்பவே மண்டையெ போட்டு வெண்ணாத்துல சாம்பலா
கரைஞ்சிடணும்னு ஆசைப்படாத பெரிசுகள இங்க பாக்க முடியாது.
வெண்ணாத்துல அஸ்தியா கரைஞ்சிப் போறது
ஒரு பெருமைன்னா, வெண்ணாத்துலயே உசுரு பிரிஞ்சி வெண்ணாத்தோட போறதுக்கு அதிர்ஷ்டம்
வேணும்னுத்தாம் ராணி அத்தை செத்ததப் பத்தி ஊரு சனங்க பேசிக்கிட்டுங்க. "எல்லாத்துக்குமா
ஒரு மருமவளோட மொத்துப்பட்டு ஆத்தோட போற சாக்காடு கெடைக்குது. ராணி ரொம்ப அதிர்ஷ்ட்டகாரித்தாம்.
இன்னும் ரண்டு பேரு மருமவளா வந்து மொத்துப்படறதுக்கு ஆத்தோட போறது மேல்ன்னு போயிச்
சேந்துட்டா! யாருக்குக் கெடைக்கும் இந்தக் கொடுப்பினை?" அப்பிடின்னு பேசுனுச்சுங்க
சனங்க. ராணி அத்தை சாவுலயும் சனங்க இப்பிடிப் போறாமை பட மாதிரிக்கி வெச்சிடுச்சு வெண்ணாறு.
ராணி அத்தை காணாம போயி மறுநாளு சாயுங்காலம்
சேந்தங்குடி பெட்டேம் பக்கத்துல சவமா மெதந்துச்சு. அதெ கண்டுபிடிச்சுத் தூக்கியாந்தப்ப
ஊரே கண்ணு தண்ணி வுட்டு வெள்ளமா போவாத கொறைத்தாம். என்ன நடந்திருக்கும்னு குத்துமதிப்பா
சனங்க பேசிக்கிட்ட கதையைத்தாம் ஒங்ககிட்டெ சொல்ல வேண்டிருக்கு. ராணி அத்தைய மெதக்குற
சவமா மீட்குறப்பவும் கை ரெண்டுலயும் ரெண்டு மஞ்சப் பையி பிடி வுடாம இருந்துச்சு.
அந்த ரெண்டு பையில ஒரு பையி நெறைய நகத்துண்டுக.
நகத்துண்டுகன்ன அம்மாம் நகத்துண்டுக. கையி வெரல்லேந்து வெட்டுவோம்ல அந்த நகத் துண்டுகத்தாம்.
அது ஏது அவ்வளவு நகத்துண்டுகன்ன கேட்டாக்கா, ஒரு மனுஷி ஆயுசு பூரா வெட்டுன அத்தனை நகத்துண்டுகளையும்
வெளியில போடாம சேத்து வெச்சா அம்புட்டு நகத்துண்டுக சேரத்தாம் செய்யும்.
இன்னொரு பையி நெறைய தலைமசுருக. ஆயுசு
பூரா தலையச் சீவுறப்ப சீப்போட வர்ற அத்தனை மசுருகளையும் சேத்து வெச்சாத்தாம் அம்மாம்
தலைமசுருக சேரும். ராணி அத்தை கலியாணம் ஆயி வந்ததிலேந்து இப்போ முடி நரைக்கிற வரைக்குமான
அத்தனை தலைமசுரும் சுருட்டு சுருட்டா சுருட்டி அந்தப் பையி நெறைய இருந்துச்சு.
ராணி அத்தைக்கு ஒரு பழக்கம் இருந்துச்சு.
வெரல்லேந்து வெட்டுற நகத்தெ வெளியில போடக் கூடாது, சீவுறப்ப வர்ற தலைமசுரை வெளியில
வுட்டுடக் கூடாதுன்னு. அப்பிடிப் போட்டாலோ, வெளியில விட்டாலோ வூட்டோட லெட்சுமி
வெளியில போயிடும்ங்ற நம்பிக்கை அதுக்கு. அதுக்குப் பயந்துகிட்டே அது இத்தனை நாளுமா
வெட்டுன நகத்துண்டுகளையும், சீவுறப்ப சீப்போட வந்த தலைமுடியையும் யாருக்கும் தெரியாம
நகத்துண்டுக்கு ஒரு மஞ்சப் பையின்னும், தலைமசுருக்கு ஒரு மஞ்சப் பையின்னும் போட்டு
வெச்சிருந்துருக்கு. யாரு கண்ணுலயும் படாத அந்த மஞ்சப் பைக ரெண்டையும் அன்னிக்கு எடுத்து
யாருக்கும் தெரியாம ஆத்தோட ஆறா தண்ணிப் பெருகிப் போற இந்த நாள்ல விட்டுப்புடணும்னு
அத்து நெனைச்சிருக்கணும்.
அதெ ஏம் முன்னபின்ன, இன்னும் கொஞ்சம்
நாளு கழிச்சி செய்யாம நேத்திக்குச் செய்யணும்னு ஒரு கேள்வி வந்தப்போ, சனங்க அதுக்கும்
குத்துமதிப்பா ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு சொன்னுச்சுங்க. அதாச்சி, ராணி அத்தைக்கு
அதோட அந்திம காலம் தெரிஞ்சிட்டதாவும், அப்பிடிச் சாவுறப்ப வூட்டுல இருந்து சாவக் கூடாதுன்னும்
ஆத்துல வுழுந்து, அத்தோட இத்தனை நாளும் யாரு கண்ணுக்கும் தெரியாம சேத்து வெச்சிருந்த
நகத்துண்டுகளையும், தலைமசுருகளையும் எடுத்துக்கிட்டு யாருக்கும் தெரியாம ஆத்தோட ஆறா
போயி கடல்ல கலந்துப்புடணும்னு நெனைச்சிருக்கு. வெண்ணாத்துல எந்த எடத்துலயும் பெட்டேம்ங்க
மட்டும் இல்லைன்னா ராணி அத்தையோட கடைசி ஆசை பலிச்சிருக்கும்ன்னும், பெட்டேம் இருந்ததால
அதுல மாட்டிக்கிட்டு மெதந்துட்டதாவும் பேசிக்கிட்டுச்சுங்க சனங்க.
மூணு புள்ளைகளையும் பெத்தும் மூணு புள்ளைகளும்
பாத்துக்க முடியாம கண்காணாம போயி ரோஷக்காரியப் போயிச் சேந்துட்டதாவும் சனங்க பேசிக்கிட்டுங்க.
செத்துப் போன ராணி அத்தை பொணத்து மேல மூணு பயலுகளும் வாயிலயும், வயித்துலயும், தலையிலயும்
அடிச்சிக்கிட்டு விழுந்து பொரண்டு அழுதுப் பாத்தானுங்க. ஆன்னா செத்துப் போன ராணி
அத்தை அம்மாம் அழுகாச்சியப் பாத்தும் உசுரோட எழுந்து வாரல.
"அஸ்தியா கரைஞ்சுப் போறதுக்கு மின்னாலே
ஆத்தோட போவ நெனைச்சாளோ!
ராமரு லட்சுமணுருன்னு ராசாக்களப் போல
ராணியா இவளும் போவ நெனைச்சாளோ!
நட்ட வெச்ச தென்ன மரம் மூணும்
நட்டாத்துல வுட்டதுவோ!
கடைசிக் காலத்துல ஒண்ணுக்கு மூணாயிருந்தும்
கைகொடுத்து உதவலயே!
புள்ளயப் பெத்து பொண்ணப் பொத்து
பூலோகத்துல என்னாச்சு?
ஒண்ணுக்கும் ஒதவாம ஒருபயனும் இல்லாம
மண்ணோட மண்ணாச்சு!"ன்னு ஒத்தக் குடிசைக்
கெழவிப் பாடியும் ராணி அத்தை உசுரோட எழுந்து வார மாட்டேனுட்டு. ராணி அத்தை செத்தது
செத்ததுதாம். எவனோட அழுகாச்சிக்கும், யாரோட ஒப்பாரிக்கும் அத்து எழும்பி வார மாட்டேன்னுட்டு.
அதோட அத்து சேத்து வெச்சிருந்த நகத்துண்டுகளையும், தலைமசுரையும் அந்த மஞ்சப் பையி
ரெண்டோட சேத்து வெச்சுப் பொதைச்சு சமாதி வெச்சாச்சு.
*****
No comments:
Post a Comment