6 Apr 2020

அம்மா எங்கே? வா! வா!

செய்யு - 410        

            அன்னிக்குக் காலையில ராணி அத்தைச் சாப்புடல. ஒடம்பெல்லாம் வெலவெலத்து வர்றதாவும், மயக்கமா இருக்கிறதாவும் சொல்லிப் படுத்துக்கிடுச்சு. அதுக்குப் பெறவு ஆனந்தன்தாம் பரக்க பரக்க அடுப்புல ஒலையக் கொதிக்க வெச்சி கஞ்சியா வெச்சி, உளுத்தம் தொவையல வாய்க்கு ஒனக்கையா இருக்கட்டும்னு அரைச்சு வெச்சி அதுவுங் கொஞ்சம் குடிச்சிட்டு, அம்மாக்காரியையும் குடிச்சச் சொன்னுச்சு. ஆனா ராணி அத்தை பெறவு குடிக்குறதா சொல்லி படுத்ததுதாம்.
            ஆனந்தன் பக்கத்துல பெரிப்பாவான முருகு மாமா வூட்டுல கெடந்த செந்தில கூப்புட்டு சங்கதி இன்னதுன்னு சொல்லி, "கொஞ்சம் பாத்துக்கடா! பட்டறையில அருவா அடிக்க கொடுத்தவேம், மம்புட்டி அடிக்க கொடுத்தவம்லாம் வந்து நிப்பாம். பாத்துப்புட்டு மத்தியானத்துக்கு வந்துப்புடறேம்! எடையில யம்மா டீத்தண்ணி வாங்கிக் கேட்டா ஒலகநாதேம் கடையில வாங்கிக் கொடுத்துப்புட்டு நமக்கும் அப்பிடியே கொஞ்சம் கொண்டாந்து கொடு. வேல நெறைய கெடக்கு. நீயும் வந்து கொஞ்சம் ஒத்தாசையா துருத்தியை ஊதி வுட்டுக்கிட்டு, சுத்தியப் போட்டீன்னா காரியம் ஆவும்டா! வாராட்டியும் பரவாயில்ல. வூட்டுல கெடந்து யம்மாவயைாவது கொஞ்சம் பாத்துக்கோ. அதுக்கு எப்போ மயக்கம் வருது, எப்போ ந்நல்லா கெடக்குதுன்னு ஒண்ணுத்தையும் புரிஞ்சிக்க முடியல!" அப்பிடினுச்சு.
            "ஆமாண்ணே! ஒமக்கு வேற வேலயில்லே. இஞ்ஞ பெரிப்பா வூட்டுலய வேல நெறைய கெடக்குது. வெடிய எல்லாம் காய வெச்சு அடுக்கணும்னு சொல்லிட்டுக் கெடந்துச்சு பெரிப்பா. இன்னிக்கு நம்மால வேலைக்குல்லாம் வர முடியாது. அம்மாவ வேணும்ன்னா போயி அப்பைக்கப்போ பாத்துக்கிடறேம்!" அப்பிடின்னாம் செந்திலு.
            "என்னத்தையோ போ! ஒன்னயச் சொல்லி திருத்த முடியாது. ஒத்த ஆளா இருந்து வூட்டையும் பாத்துக்கிடணும்! பட்டறையையும் பாத்துக்கிடணும்னா நம்மால ஆவுதா? சித்தெ ஒத்தாசையா இருந்தா ன்னான்னா இவ்வேம் ஒரு சோலியச் சொல்றாம்! செரிடாம்பீ! நீயி டீத்தண்ணியும் வாங்கி வார வாணாம், ஒண்ணுத்தையும் வாங்கி வார வாணாம். அம்மாள மட்டும் போயி கொஞ்சம் பாத்துக்கிடுடா! வேல நெனைப்புல நமக்கு வூட்டு ஞாபவம் வாராது. வேல முடிஞ்சாத்தாம் வேற ஞாபவமே வரும். இன்னிக்குன்னு பாத்து வேல வேற நெறைய கெடக்கு. எத்தனெ பேரு பட்டறையில மின்னாடி வந்து திட்டிக்கிட்டு நிக்குறானுவோளோ தெரியல!"ன்னு சாம்பல் நெறமான வேட்டிய அவித்து ஒரு மொறைக் கட்டிக்கிட்டு, மேலுக்குப் போட்டிருந்த நீல நெறத்து பனியன ஒரு இழுப்பு இழுத்துகிட்டு, கழுத்துல கருத்துப் போயிக் கெடந்த துண்டெ ஒரு தபா ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு, ஓட்டமா ஓடுனுச்சு. வூட்டுலேந்து நூறு தப்படி இருக்காது பட்டறை. இருந்தாலும் அதுக்கே அம்மாம் ஓட்டமா ஓடுனுச்சு. பூட்டியிருக்குற பட்டறைக்கு வெளியில ஆளுக அங்கங்க நாலைஞ்சு பேரு நிக்குறது நல்லாவே தெரிஞ்சுச்சு. அவுங்களப் பாத்ததும் உள்ளுக்குள்ள ஒரு படபடப்பு உண்டாயிடுச்சு ஆனந்தனுக்கு. அதால ஓட்டமும் நடையுமா காலுக ரெண்டும் வேகம் காட்டுனது ஆனந்தனுக்கு.
            பட்டறையில இருந்த வேலை அலமலப்புல ஆனந்தனுக்கு வூட்டைப் பத்தியோ, வூட்டுல சாப்புடாம கெடக்குற அம்மாவப் பத்தியோ எந்த நெனைப்பும் வாரல. பட்டறைக்கு மின்னாடி நின்ன ஒவ்வொருத்தனும் இன்னிக்கு வேலைய முடிச்சி வாங்கிட்டுத்தாம் போவேம்னு நின்னதுல அதுக்குன்னு குனிஞ்ச தல கூட நிமுர முடியல ஆனந்தனுக்கு. வந்த நின்ன ஆளுவோ ஒவ்வொருத்தனும் துருத்திய ஊதணுமா ஊதறேங்றாம், சுத்திய ஓங்கிப் போடணுமா போடுறேங்றாம். ஒவ்வொருத்தனுக்கும் வேல இன்னிக்காவது ஆவணுங்ற அலமலப்பு. இதுல வேல வேக வேகமா ஆவுது. என்னத்தத்தாம் வேல வேக வேகமா ஆனாலும் பட்டறையில ஓரளவுக்கு வேலை ஓஞ்சி, "யப்பா தெய்வங்களா? இனுமே வவுத்துக்கு ரண்டை அள்ளிப் போட்டாத்தாம் தெம்பு வாரும்!"ன்னு ஆனந்தன் தலைய நிமுந்தப்போ மணி மூணுக்கு மேல இருக்கும். அந்த நேரத்துக்கும் வேலை முடியாம ரெண்டு பேரு நின்னுக்கிட்டுத்தாம் இருக்காம். வேற வழியில்லன்னு அவங்களப் போயி சாப்பிட்டு வாரச் சொல்லிட்டு, பட்டறையக் கூட பூட்டாம ச்சும்மா பேருக்கு மட்டும் கதவெ அணைச்சாப்புல சாத்தி வெச்சிட்டு வேக வேகமா வூட்டுக்கு ஓடியாந்துச்சு ஆனந்தன்.
            அம்மக்காரி சமைச்சு வெச்சிருந்தா பாக்கறது, இல்லன்னா ஓடிப் போயி கடையில பரோட்டவக் கட்டிட்டு வந்து சாப்புட்டுட்டுக் கெளம்புறதுன்னு ஒரு யோசனையையும் பண்ணிக்கிட்டு இப்போ பட்டறையிலேந்து வூட்டுக்கு ஓட்டமும் நடையுமா ஓடுனுச்சு ஆனந்தன். வூட்டுக்கு வந்தா தெருக்கதவு அணைச்சாப்புல சாத்தியிருக்கு. கொல்லைக் கதவும் அப்பிடித்தாம் சாத்திருக்கு. கஞ்சி வெச்ச பானை அப்பிடியே இருக்கு. தொவையல அரைச்சி வெச்ச கிண்ணமும் அப்படியேத்தாம் இருக்கு. எதுலேந்து எடுத்துப் போட்டு சாப்புட்ட மாதிரிக்கித் தெரியல. காலையில ஆனந்தன் சாப்புட்டுட்டுப் போனா கும்பா மட்டும் அப்பிடியே கெடக்குது. அதையும் வெலக்கல. அப்பிடியே கெடக்குறதால அம்மாக்காரி ஒண்ணும் செய்யலங்றது தெரியுது ஆனந்தனுக்கு.

            அத்துச் செரி, வூட்டை இப்பிடிப் போட்டுப்புட்டு எங்க போயிருக்கும் அம்மான்னு கொல்லைப் பக்கம் வந்து தேடுது ஆனந்தன். எங்கேயும் காங்கல ராணி அத்தைய. கொல்லைப் பக்கமா அப்பிடியும் இப்பிடியுமா ஒரு சுத்து சுத்திப் பாக்குது. வூட்டுக்குள்ளயும் வந்து ரூமையெல்லாம் வந்து ஒரு சுத்து சுத்தித் தொறந்துப் பாத்து மூடுது. ஆளெ காங்கல. ஆனந்தனுக்கு லேசா பயம் எடுக்குது. சரி அக்கம் பக்கத்து வூட்டுல எங்கினாச்சும் பேசிட்டு இருக்குதோன்னு ஒரு நெனைப்பு வர, என்னிக்கு மருமவளே வூட்டுப் பக்கம் வாரக் கூடாதுன்னு சொன்னிச்சு, அன்னிலேந்து அத்து யாரு வூட்டுப்பக்கமும் அடியெடுத்து வைக்கிறதில்லங்றதும், யாருகிட்டேயும் பேசுறதில்லங்றதும் ஞாபவத்துக்கு வருது ஆனந்தனுக்கு. இருந்தாலும் பக்கத்துல இருக்குற நாலு வூட்டுல தேடிப் பாப்பேம்ன்னு பாத்தா எங்கயும் காங்கல ராணி அத்தையே.
            ஆனந்தனுக்கு இன்னும் விறுவிறுத்துப் போவுது. பக்கத்தால இருக்குற பெரிப்பாவான முருகு மாமா வூட்டுக்கு மின்னாடி நின்னு, "ஏ செந்திலு! ஏ செந்திலு! யம்மாவப் பாத்தீயா?"ன்னு சத்தங் கொடுக்குது ஆனந்தன்.
            "ஒனக்கு இத்தாம் வேல! யம்மா வூட்டுல கெடக்கும் பாரு!"ன்னு பதிலுக்குச் சத்தத்தெ கொடுக்குறாம் செந்திலு.
            "எலே வூடு பூரா, கொல்லப் பூரா தேடிப் பாத்திட்டேம்டா! அக்கம் பக்கத்துலயும் பாத்திட்டேம்டா! யம்மாவ எடையில வந்து பாத்துக்கிட சொன்னேம்லடா! பாத்துக்கிட்டீயா?"ன்னு பதில் கொரல கொடுக்குது ஆனந்தன்.
            "ந்நல்லா பாருண்ணே!"ங்றாம் இப்போ செந்திலு கொரலு அடங்குனாப்புல.
            "இப்போ வந்தோம்னா பாரு! ஒதெ கெடைக்கும். வாடா மொதல்ல வெளியில. யம்மாவக் காணுங்றேம்? ந்நல்லா பாத்தியா ந்நொல்லா பாத்தியானுகிட்டு?"ன்னு ஆனந்தன் கொரல ஒசத்திக் கொடுக்க, செந்திலு வேகமா ஓடி வார்றாம்.
            ஆனந்தனும், செந்திலும் சேந்துகிட்டு ஏற்கனவே பாத்த எடத்துல மறுக்கா ஒரு தபா பாக்குறாங்க. ராணி அத்தைய காங்கல.
            "ஆத்துப் பக்கம் எங்கனாச்சும் போயிருக்குமாடா?" அப்பிடின்னு கேக்குது ஆனந்தன்.
            "நாம்ம பாக்கலீயே!"ங்றாம் செந்திலு.
            "நாம்மத்தாம் சொன்னேமடா! எடையில ஒரு தபா வந்து சாப்புட்டாச்சான்னு பாத்துக்கிடுன்னு. வந்து பாத்தீயா இல்லியாடா?"ங்குது ஆனந்தன்.
            "அத்து இல்லண்ணே! வேல ரொம்ப அதிகமாப் போச்சுன்னே. வெடிய எல்லாம் கொஞ்சம் பாத்துப் பாத்துப் பதனமா எடுத்து வெச்சி பின்னாடி உள்ளார வைக்க வைக்க வேண்டியதா போயிடுச்சண்ணே!" அப்பிடின்னாம் செந்திலு.
            ஆனந்தனுக்குக் கோவமா வந்துச்சு. "யம்மாவ வுட வெடி முக்கியமா போயிடுச்சாடா ஒமக்கு? யம்மா காலையிலேந்து இந்நேரம் வரைக்கும் சாப்புடலடா! அதுக்கு லோ பீப்பி வேற. டாக்கடருகிட்டெ அழைச்சிட்டுப் போயிக் காட்டணும்னு நெனைச்சிட்டு இருந்தேம். எங்கனாச்சும் வெளியில போயி எங்கனாச்சும் மயக்கம் அடிச்சி வுழுந்து கெடந்தா ன்னடா பண்ணுவே?" அப்பிடினுச்சு ஆனந்தன். அதுக்கு செந்திலு ஒண்ணும் பேசல. செந்திலோட மொகத்துல பயம் தெரிஞ்சிச்சு அம்மாக்காரிக்கு எதாச்சிம் ஆயிருக்கோமோன்னு.
            "செரி வா! ஏற்கனவே அண்ணன் மேல, சரியில்லன்னு கோவம். இதுல நீயி வேற இப்பிடி இருந்தா யம்மாவல தாங்க முடியலடா. வா யம்மா எங்க இருக்கோ? எங்க கெடக்கோ? தெரியலையே! தேடிப் பாப்பேம்!"ன்னு ஆனந்தன் சொல்ல ரெண்டு பேருமா சுத்திலும் சல்லடையப் போட்டு தேடுறாப்புல தேடுனாலும் ராணி அத்தை கெடைக்கல. ஒருத்தரு பாக்கியில்லாம எல்லார்கிட்டேயும் விசாரிச்சா, வெண்ணாத்தாங்கரைப் பக்கமா ஒத்த குடிசையப் போட்டுக்கிட்டு இருக்குற ஒரு கெழவி சொல்லுது, "ஆயாளத்தானடா தேடுறீங்க? ஒரு பதினொண்ணு பன்னெண்டு மணி வாக்குல இந்தப் பக்கமாத்தாம்டா ரண்டு மஞ்சப் பைய்ய தூக்கிட்டு ரெண்டு கையிலயும் வெச்சிக்கிட்டு போனுச்சு. என்னாடியம்மான்னே? பதிலு ஒண்ணுத்தையும் சொல்லல. கொஞ்ச நாளாத்தாம் ஒம்மட ஆயா யாருகிட்டேயும் மொகங் கொடுத்து பேச மாட்டேங்குதே! செரி வூட்டுல வேணாத சாமாஞ் செட்டு எதுனாச்சும் பையில அள்ளிக் போட்டுக்கிட்டு ஆத்துல கொண்டு போயி வுடப் போவுதுன்னு நெனைச்சிக்கிட்டு இருந்துட்டேம். ஆத்துப் பக்கமா போனது திரும்புனுச்சா இல்லையாங்றதெ நாம்ம காங்கலையடா யம்பீகளா!" அப்பிடினுச்சு.
            இந்தச் சேதியக் கேட்டதும் ஆனந்தனுக்கும், செந்திலுக்கும் பகீர்ங்குது. ஆத்தை ஓடிப் பார்த்தா தண்ணி நெறையாத்தாம் போவுது. கொஞ்சம் சறுக்கிக்கிட்டு மயக்கம் அடிச்சி வுழுந்தாலும் இழுத்துக்கிட்டுக் கொண்டு போயி கடல்ல போட்டுப்புடுற அளவுக்கு தண்ணி ஓடுது. ஆத்தங்கரை முழுக்க தேடிட்டு ஓடுறானுவோ ஆனந்தனும் செந்திலும். ராணி அத்தைய காண முடியல.
            இந்தச் சேதி தெரிஞ்சி இப்போ முருகு மாமாவும், நீலு அத்தையுங் கூட அங்கங்க விசாரிச்சி தேட ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா சேதி அங்கங்க தெரிஞ்சி அக்கம் பக்கத்துல ‍ஒட்டு மொத்த சனமும் சாயுங்காலம் தொடங்கி ராத்திரி வரைக்கும் ராணி அத்தையத் தேடித் திரிஞ்சா ஒண்ணும் கதைக்காகல. ராணி அத்தை எங்க இருக்கு? எங்கப் போயிருக்கு? எங்க கெடக்கு?ன்னு ஒண்ணும் வெளங்காம சனங்க அலைபாயுதுங்க. ஆனந்தனும், செந்திலும், "யம்மா எங்கே இருக்குறே? எங்க இருந்தாலும் வந்துப்புடு! யம்மா வந்துப்புடு!"ன்னு கதறி அழுவுறானுங்கோ. ராத்திரி வரைக்கும் ராணி அத்தையத் தேடிக் கெடைக்காம போனதுல முருகு மாமா இந்தச் சங்கதிய சங்குவுக்குப் போனடிச்சிச் சொன்னா, அடுத்த ஒரு மணி நேரத்துல எப்படி வந்துச்சோ, என்னா வேகத்துல வந்துச்சோ ஸ்ப்ளண்டர்ல அரக்கப் பரக்க வந்து நிக்குது சங்கு.
*****


2 comments:

  1. அருமையான பதிவு

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete
  2. நேசகமான வாசிப்புக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...