செய்யு - 409
தன்னோட மருமவ்வேப் பொண்ணு பெரியநாயகிதாம்
இவ்வளவு களவாணி வேலைக்கும் காரணங்றது தெரிஞ்ச பெற்பாடு ராணி அத்தைக்கு அதெ பிடிக்காமப்
போயிடுச்சு. ராணி அத்தைக்கு மருமக மேல இருந்த கோவத்தெ வுட லாலு மாமா மேல அதிக கோவம்
வந்துச்சு. திட்டம் போட்டுத் தன்னோட குடும்பத்தெ லாலு மாமா பழி வாங்கிட்டாத ஊரெல்லாம்
சொல்லித் திரிஞ்சிச்சு. "நமக்கு இப்பிடி ஒரு மருமவளா வந்து வாய்க்கணும்? வெசயம்லாம்
தெரிஞ்சே இப்பிடி ஒரு பொண்ண கொண்டாந்து எங் குடும்பத்துல கட்டி வெச்சி எங் குடும்பத்துயே
சீரழிச்சிப்புட்டாம் எங் கொழுந்தேம்!"ன்னு சொல்லி சொல்லி அழுதுச்சு ராணி அத்தை.
பெரியநாயகிக்குப் பஞ்சாயத்து வைக்க ராணி
அத்தைய கூப்புட்டப்போ அத்து வர மாட்டேன்னு சொல்லிடுச்சு. "எதுவா இருந்தாலும்
அங்ஙகனயே வெச்சு அங்ஙனயே பேசி முடிச்சிக்கோங்க! இனுமே அந்தச் சிறுக்கி இந்த வூட்டுப்
பக்கம் எட்டிப் பாக்கக் கூடாது! மீறி அவ்வே இந்தப் பக்கம் எட்டிப் பாத்தா நம்மள பொணமாத்தாம்
பாக்க வேண்டிருக்கும்!"ன்னு சொன்னதுல ராணி அத்தையைப் பஞ்சாயத்துக்குக் கூப்புடல.
முருகு மாமா, சங்கு, ஆனந்தன் இவுங்களோட
தஞ்சாரூர்லேந்து வந்த லாலு மாமா, பெரியநாயகிக் குடும்பத்துலேந்து கொஞ்ச பேரு இவுங்கள
வெச்சித்தாம் பஞ்சாயத்து நடந்துச்சு.
"பொண்ணு புகுந்த வூட்டுலேந்து கொண்டாந்த
காசிய வெச்சு வவுத்த வளத்துக்கிட்டு கெடந்திருக்கீய்யேய்யா! ஒமக்கெல்லா வெக்கமா யில்லே!
சோத்துல உப்பெ போட்டுத்தாம் திங்குதீய்யா? யில்லே வேற என்னத்தையாவது போட்டுத் திங்குதீய்யா?
ந்நல்லா வாயில்ல வந்துடும் பாரு! வந்தாத்தாம் ன்னா? அப்பிடி ஒடம்ப வளக்காட்டித்தாம்
ன்னா? அப்பிடி தின்னு ஒடம்ப வளக்குறதுக்கு நாயீ பீய்யத் தின்னு ஒடம்ப வளக்க வேண்டித்தானே?"
அப்பிடின்னு ஏகத்துக்கும் எகுறுனுச்சு முருகு மாமா.
"மொத பொண்ண கலியாணம் பண்ணிக் கொடுத்தது
நமக்குத் தெரியும்ண்ணே! அந்த நம்பிக்கையில ரண்டாவது பொண்ணையும் கலியாணம் கட்டிக் கொடுப்பார்ன்னு
நம்பி ஏமாந்ததுதாம்ண்ணே! இப்பிடிப் பொண்ண வுட்டு மருமவ்வேன் வூட்டுலயே களவாண்டாட்டு
வரச் சொல்லுவாம்ன்னு யாருக்குத் தெரியும்? இத்து கலிகாலம்! எவ்வேம் நல்லவேம், எவ்வேம்
திருட்டுப் பயன்னு ஒண்ணும் கண்டுபிடிக்கிறதுக்கில்லே! நம்ம வகையறாவுல எவ்வேம் எஞ்சினியரா
இருக்காம்? இவ்வேம் ஒருத்தெம் இருக்கானேன்னு நெனைச்சி, ந்நல்லா எடமா பாத்துக் கட்டணும்னு
நெனைச்சி வந்து கட்டுனதுக்கு இப்பிடி நமக்குத் தண்டனையாவுது? இந்தாரும்யா! நீயி செஞ்ச
நகை நெட்டு, சீர் சனத்தி எல்லாத்தையும் தூக்கி மூஞ்சுல வீசுறேம். மருவாதியா ஒம்மடப்
பொண்ண வூட்டோட வெச்சிக்கிட்டு, நடந்தக் கலியாணத்துக்கும் பொறந்தப் புள்ளைக்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லேன்னு காயிதத்துல எழுதிக் கொடுத்துப்புடு! இல்லேன்னா நடக்குறதே
வேற! பொண்ணு திருடின்னு போலீஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணி உள்ளார தூக்கி வெச்சிப்புடுவேம்
பாத்துக்கோ!" அப்பிடின்னு மெரட்டல் வுட்டுச்சு லாலு மாமா.
"பொண்ணுக்கு செய்யுற மாதிரிக்கி
செஞ்சு பொண்ணை வெச்சே செஞ்சதையெல்லாம் ஆட்டையப் போட பாத்திருக்காம் களவாணிப் பயெ!
இப்பிடி ஒண்ணுத்தெ வெச்சு என்னத்தெப் பண்ணே? வெட்டி வுட்டுப்புட்டா தேவலாம்! நீயி சொல்றதுதாங்
சரிடாம்பீ!"ன்னுச்சு முருகு மாமா.
இதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து பெரியநாயகியும்,
அதோட அப்பங்காரரும் என்னத்தெ சொல்லப் போறாங்கன்னு எல்லாரும் பாத்துக்கிட்டு நின்னாங்க.
தன்னோட பொண்ணு தப்புப் பண்ணிட்டதா சொல்லி
எல்லாருக்கும் முன்னாடி கால்ல வுழுந்துட்டாரு பெரியநாயகியோட அப்பங்காரரு. அதுக்கு
மேல மேக்கொண்டு அவர்ர என்ன செய்யு முடியும்? பெரியநாயகி தலைய குனிஞ்சு ஊமைக் கோட்டானாட்டும்
நின்னுச்சே தவுர ஒரு வார்த்தைப் பேசல.
காணாம போன சங்கதி நடந்த நாள்லேர்ந்து
காணாமப் போன பணத்தெ கணக்குப் பண்ணி பாத்ததுல அத்து ஒரு பத்தாயிரம் சொச்சம் வந்துச்சு.
அந்தப் பணம் முழுக்க அப்பங்கார்ரேம் வூட்டுக்குத்தாம் பெரியநாயகி செலவு பண்ணிருக்கதால
அதெ ரொக்கமா பெரியநாயகி வூட்டுலேந்து கொடுத்துப்புடணும்னு பஞ்சாயத்துப் பேசி முடிவு
பண்ணாங்க. அந்தப் பத்தாயிரத்தையும் ஒடனடியா கொடுக்குற நெலையில வட்டிக்கு கடனா வாங்கித்தாம்
பெரியநாயகியோட அப்பங்காரரு கொடுத்தாரு. இனுமே பெரியநாயகி அப்பங்காரரு வூட்டுப்பக்கம்
வாரக் கூடாதுன்னும், அப்பங்காரரு வூட்டுக்குன்னு எதுவும் செய்யக் கூடாதுன்னு பேசி ஒரு
முடிவுக்கு வந்தாங்க. அந்த முடிவுக்கு எல்லாத்துக்கும் பெரியநாயகி ஒத்து வந்ததால பஞ்சாயத்தும்
அத்தோட ஒரு முடிவுக்கு வந்துச்சு. ஆனா ராணி அத்தை மருமவள வூட்டுப்பக்கமே வாரக்கூடாதுன்னு
சொல்லிட்டதால, நேரா அதெ அழைச்சுக்கிட்டு கொல்லுமாங்குடி பேக்கடரி குவார்ட்டஸூக்குப்
போயிடுச்சு சங்கு. மருமவள சாமாஞ் செட்டுகளக் கூட வந்து எடுக்க அனுமதிக்கலே ராணி அத்தை.
ஒரு டாட்டா ஏஸ்ஸப் பிடிச்சி ஆனந்தனையும் செந்திலையும் வெச்சிக் கொண்டு போட வெச்சுச்சு.
அத்தோட விடல ராணி அத்தை. வூட்டுக்கு தனியா
வந்த சங்குவைப் பாத்து, "ஏம்ப்பா நாம்ம நல்ல பொண்ணா பாத்து வைக்கிறேம்னதுக்குக்
கேக்க மாட்டேன்னே! இப்போ ன்னான்னா பொண்ணு இப்பிடி வந்துக் கெடக்கு. இவ்வே வந்தெ நேரம்
சொந்தப் பந்தத்துல ஒருத்தரு, அக்கம் பக்கத்துல ஒருத்தரு வூட்டுப்பக்கம் வர யோஜனையப்
பண்ணிக்கிட்டு யாரும் வாரதில்லே. குடும்பம்ன்னா இப்பிடியா சனம் அண்டாத அளவுக்கு நடத்துறது?
ஆனது ஆயிப் போச்சு. ஒரு குடும்பத்தெ பிரிச்சிப்புட்டா ஆயிங்ற கெட்டப் பேரு நமக்கு
வாணாம். இந்தப் பக்கம் மட்டும் ஒம்மட குடும்பத்தோட வந்துப்புடாதே. ஒரு பொண்ணு பொறந்து
ஒமக்கும்ன்னு குடும்பம் ஆச்சுல்லா. பேக்கடரிக்கார்ரேம் ஒமக்குன்னு ஒரு வூட்டையும் கொடுத்திருக்காம்ல.
அங்ஙனயே கெடந்துக்கோ. ஒரு நல்லது கெட்டதுன்னா மட்டும் வந்து பாக்குறதோட நிறுத்திக்கோ.
குலாவுறதுல்லாம் வாணாம். அநாவசியமா வூட்டுப்பக்கம் வர்ற வேல வெச்சுக்காத. எல்லாம் நாம்ம
இருக்குற வரைக்கும்தாம். அதுக்குப் பெறவு நீயி எத்தனெ மொறை வாணாலும் வந்துக்கோ, போயிக்கோ,
அத்து நாம்ம போயிச் சேந்ததுக்குப் பின்னாடி. ஏத்தோ பொண்டாட்டியோட புத்தியா இருந்துப்
பொழைச்சுக்கோ. நீயா தேடிக்கிட்டதுதாங். நீதாங் அதுக்கான வெலயக் கொடுக்கணும். நாம்ம
இன்னும் ரண்டு புள்ளைங்களுக்கு கலியாணத்தெ வேற பண்ணி வெச்சாவணும். மூத்த மருமவ்வே இப்பிடின்னா
ஒரு பயெ பொண்ண கொடுக்க மாட்டாம். அத்துச் செரி மித்த ரண்டு பயலுகளும் ஒன்னய மாதிரியா
படிச்சு வேலையில இருக்காம். ஒருத்தெம் பட்டறையில ஒலையையும் துருத்தியையும் போட்டுக்கிட்டுப்
பாடா பட்டுக்கிட்டுக் கெடக்காம். இன்னொருத்தெம் அப்பங்காரனெ கொன்னவேம் வூட்டுக்கு
அடிமெசாசனம் எழுதி வுட்டாப்புல கெடக்குறாங். எந் தலயெழுத்து இப்பிடி ஆவணும்னு ஆண்டவேம்
எழுதிருக்காம். அதுக்கு நீயி ன்னா பண்ணுவே? இதுல ஒம் பெரியப்பேம், சித்தப்பேம் வேற
ஊடால பூந்து பாடாப் படுத்துறானுவோ! இத்து வரைக்கும் எல்லாத்தையும் சமாளிச்சு வந்தாச்சு!
இனுமே எப்பிடி சமாளிக்கப் போறேன்னோ? அந்த ஆண்டவனுக்குத்தாம் வெளிச்சம். எங் கதி எப்பிடியே
போயிட்டுப் போவுது! நீயி ஒங் கதியப் பாரு! ஆன்னா சொல்றேம் பாரு! மறந்தும் கூட வூட்டுப்பக்கம்
எட்டிப் பாத்துடாதே! பாத்தேன்னா நாம்ம உசுரோட இருக்க மாட்டேம்! நம்ம உசுருப் போனதுக்குப்
பின்னாடி நீயி எப்ப வாணாம்னாலும் வா!" அப்பிடின்னுச்சு செம காட்டாம.
அதெ கேட்டுப்புட்டு, "ஏம்மா இப்பிடில்லாம்
பேசுறே?"ன்னு தலையில அடிச்சிக்கிட்டுக் அழுதுச்சு சங்கு. "இஞ்ஞ தலையில அடிச்சிக்கிட்டுல்லாம்
அழாதடா யப்பா! ஏற்கனவே குடும்பம் ந்நல்லா வெளங்கிக்கிட்டுக் கெடக்கு. இதுல நீயி வேற!
பெறவு நெசமாவே ஆயிப் போயிட்டான்னு தலையில மாருலயும் அடிச்சிக்கிட்டு அழுவுறாப்புல
ஆயிடும்!"ன்னு ராணி அத்தை சொன்னதும் மூச்சு நின்னுப்புடறாப்புல ஆயிடுச்சு சங்குவுக்கு.
அதெ கேட்டுப்புட்டு அதுக்கு மேல ஒண்ணுஞ் சொல்லாம அதுலேந்து சங்குவுக்கு வடவாதி வந்து
போறது நின்னுப் போச்சு.
அதுக்குப் பெறவு ஊருலயும், சொந்தப் பந்தத்துலயும்,
"ராணியோட மருமவ்வே திருடியாம்ல!"ன்னு பேச்சு உண்டானதுல ராணி அத்தை மனசளவுல
நொறுங்கிப் போச்சுது. ஏற்கனவெ ராணி அத்தைக்கு ரத்த அழுத்தம் கம்மியா இருக்குற பெரச்சனை
இருந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பெறவு அடிக்கடி ராணி அத்தை மயக்கம் போட்டு விழுவ
ஆரம்பிச்சுச்சு. என்னத்தாம் இப்போ வூட்டுல ரெண்டு ஆம்பளப் புள்ளைங்க இருந்தாலும்,
இத்து மாதிரி நேரத்துல ஒரு பொம்பளைப் புள்ளை பாத்துக்கிடற மாதிரி வருமா? மருமவ்வே
பக்கத்துல இருந்தா இந்த நேரத்துல கொஞ்சம் வசதித்தாம். அதத்தாம் கண்ணு மின்னாடி வாரக்
கூடாதுன்னு சொல்லிட்டே ராணி அத்தை. அதோட ஒடம்பு நெலைய கணக்குல வெச்சி, ஒடம்பு சரியாவுற
வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு பெரியநாயகியக் கொண்டாந்து வெச்சிக்கிடலாம்ன்னு சில பேரு
சொல்லித்தாம் பாத்தாங்க.
ராணி அத்தைக்கு அதெ கேட்டதும் கோவம் வந்துப்புடுச்சு.
"நம்மட ஒடம்பு இப்பிடி ஆனதுக்குக் காரணமே அவ்வேத்தாம். அவளெ கொண்டாந்து வெச்சி
நம்மள சாவடிக்கலாம்னு பாக்கீங்களா? இதெல்லாம் பாத்து உசுருப் போயிடக் கூடாதுன்னுத்தாம்
எம்மட புருஷம் அன்னிக்கே தூக்குல தொங்கிப்புட்டாரு. ஆன்னா நாம்ம உசுரோட இருந்து பாக்கணும்னு
விதியிருக்கே? விதிய யாரு மாத்த முடியும்? நம்ம விதிய எழுதணும்னேத்தாம் அவரோட கூடப்
பொறந்த ரெண்டு பொறப்பு கெடக்குதே! அதுக இருக்குற வரைக்கும் நம்மட குடும்பம் எங்ஙன
வெளங்குறது? இம்மாம் ஆன பெறவும் நம்மட வவுத்துல பொறந்தது எஞ்ஞ நம்ம சொல்றதெ கேக்குது?
எல்லாம் அந்தப் படுபாவிய சொல்லுக்குத்தான மயங்குது மகுடிக்கு மயங்குற பாம்பாட்டாம்.
நம்மட உசுரே பாத்துக்கிட ஆளில்லாம போனாலும் சரித்தாம், மருமவ்வேன்னு ஒண்ணு கொண்டாந்து
வெச்சானுங்களே! அவ்வேம் மட்டும் வூட்டுப்பக்கம் வாரக் கூடாது!"ன்னு மறுக்கா மறுக்கா
கண்டிஷனா சொல்லிடுச்சு ராணி அத்தை.
"பாவந்தாம் ராணி! பேரு கெட்டுப் போனதுல
ஒடம்புக் கெட்டுப் போயிக் கெடக்கா! ஆளு ரொம்பவே ஒடைஞ்சிப் போயிட்டா! இப்பிடியா ஒரு
மருமவ்வே வாந்து வாய்க்கணும் அவளுக்கு? அத்துச்செரி அவளுக்கென்ன ஒத்த புள்ளையா ன்னா?
இன்னும் ரண்டு இருக்குல்ல. அதுக்காவது நல்ல வெதமா அமைஞ்சி மருமவ்வே வூடு தங்குற மாதிரிக்கி
அமையுதான்னு பாப்பேம்! ரண்டாவது பயத்தாம் கெடக்கறானே கலியாண வயசுக்கு. இன்னொரு பொண்ணப்
பாத்து கட்டி வெச்சி இன்னொரு மருமவளே சரியா பிடிச்சிக் கொண்டாந்து வெச்சிக்க வேண்டித்தாம்.
ஆண்டவேம் ஒரு விசயத்துல கெடுத்தா இன்னொரு விசயத்துல கொடுக்கத்தாம் செய்வாம். பாப்போம்
அவ்வே தலையில எப்பிடி மருமவ்வே வாரணும்னு எழுதிருக்குன்னு!" சனங்க அதுக்கும் காதோட
காதா ஒருத்தருக்கொருத்தரு பேசி வெச்சதுங்க.
சங்கு மட்டும் ராவோட ராவா என்னிக்காவது
வரும். வந்து அம்மாக்காரியோடயும், தம்பிக்காரனுகளோடயும் பேசியிருந்துட்டு ராவோட
ராவா கெளம்பிடும். அப்பிடி வாரப்பல்லாம், "ஒன்னய நல்ல வெதமா பாத்துக்கிடணும்னுத்தாம்
ஒரு பொண்ண கட்டுன்னா இப்பிடி ஆயிப் போச்சேம்மா! ந்நல்லா தலைநிமுந்து வாழணும்னு நெனைச்சா
இப்படி ஆச்சேம்மா!"ன்னு சங்கு அழுது புலம்பும். அது என்னத்தாம் அழுது பொலம்புனாலும்
ராணி அத்தை சொன்னதைத்தாம் திரும்பிச் சொல்லும், "நாம்ம செத்தாத்தாம் ஒமக்கு
இஞ்ஞ வேல. மொதல்ல கெளம்புற வழியப் பாருடா!"ன்னு மொகத்துல அடிச்சாப்புல.
சட்டை கிழிஞ்சா தைச்சுக்க முடியுது? பாத்திரம்
நசுங்குனா நிமுத்திக்க முடியுது? வண்டி பழுதுபட்டா சரி பண்ணிக்க முடியுது? வூட்டுல
விரிசல் வுழுந்தா அங்ஙன இங்ஙன முட்டைக் கொடுத்து, பூச்சப் பூசி பாத்துக்க முடியுது?
பெஞ்சு, நாற்காலி ஒடைஞ்சா மரச்சட்டத்தை வெச்சு தச்சு ஒக்கப் பண்ணிக்க முடியுது? ஆனா
இந்த பேரு கெட்டா மட்டும் அதெ சரிபண்ணிக்கிறது சாமானியமுல்ல. சனங்க ரண்டு பேரு கூடுனா
மொத பேச்சா அதெ பேசிட்டுத்தாம் பேச வந்த விசயத்தையே பேசுமுங்க. இல்லாட்டி எல்லாத்தையும்
பேசி முடிச்சி கடைசியில அந்தப் பேச்சுலத்தாம் வந்து நிக்குமுங்க. இதுபோல இன்னொரு
மனுஷரோட பேரு கெட்டுப் போன சம்பவம் கெடைக்குற வரைக்கும் இந்தச் சம்பவத்தைத்தாம் அரைச்ச
மாவையே அரைக்குறாப்புல ரொம்ப சுவாரசியமா பேகிக்கிட்டுக் கெடக்குமுங்க.
கலியாண வூட்டுலயும் இந்தப் பேச்சாத்தாம்
கேட்கும், சாவு வூட்டுலயும் இந்தப் பேச்சாத்தாம் கேக்கும். இந்தப் பேச்சைச் சம்பந்தப்பட்டவங்க
கேட்டு, கடந்து உசுரை வெச்சிக்கிறதுன்னா சாமானியமுல்ல. அத்தோட நிக்காம ஊருல ஒப்புக்குச்
சப்பாணியா கெடக்கறவல்லாம் இதெப் பத்தி கருத்து வேற சொல்லுவாம் பாருங்க. அதெ காதால
கேக்க முடியாது, நாக்கப் புடுங்கிட்டு நாண்டுகிட்டாலும் மனசுக்குள்ள ஆத்தாமை தீராது.
சும்மா கெடந்த வாய்க்கு அவலை மெல்ல கொடுக்குறாப்புலத்தாம் மனுஷங்க தன்னோட பேரைக்
கெடுத்துக்கிறதுங்றது. அப்படித்தாம் ஊரெல்லாம் ராணி அத்தையோட மருமவள திருடியானதப்
பத்தின பேச்சும், அதுக்காக ராணி அத்தை மவனையும், மருமவளையும் வெலக்கி வெச்சதப் பத்தின
பேச்சும் காத்துல கலந்து காத்தோட கெடக்குற புகையப் போல கெடந்துச்சு.
*****
நேசித்து வாசிக்கும் தங்கள் அன்புக்கு நன்றிகள் ஐயா!
ReplyDelete