4 Apr 2020

பட்டம் வாங்கலையோ! திருட்டுப் பட்டம் வாங்கலையோ!

செய்யு - 408        

            சங்கு வூட்டுல பணமும், பொருளும் அடிக்கடி காணாம போறதா ஊருக்குள்ள பேச ஆரம்பிச்சாங்க. யாரு அந்த வூட்டுக்குள்ள உள்ள போயி வெளியில வந்தாலும் எதாச்சிம் ஒண்ணும் காணாம போச்சு. சுப்பு வாத்தியாரு எதேச்சையா அந்தப் பக்கம் போனப்ப சங்குவோட வூட்டுக்குள்ள போயி டீத்தண்ணிய குடிச்சிட்டு வாராப்புல ஆயிடுச்சு. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போறப்ப மொகத்தப் பாத்துப்புட்டா பாக்குறவங்க சும்மா வுடுவாங்களா. அப்பிடித்தாம் வடவாதி கடைத்தெருவுக்குச் சாமாஞ் செட்டுகள வாங்கப் போனவரு சங்குவோட கண்ணுல அன்னிக்குன்னுப் பட்டுட்டாரு. பாத்து வேற ரொம்ப நாளாச்சு. கலியாணத்துல பாத்துப் பேசுனதுதாம். பெறவு சங்கு வூட்டுல நடக்குற சங்கதிகளக் கேள்விபட்டுக்கிட்டு, மனசுக்குள்ள அசிங்கப்பட்டுக்கிட்டு, அவ்வேம் வூட்டுக்குல்லாம் என்னத்தெ போறதுன்னு இருந்துட்டாரு. மனசுக்குள்ள பிடிக்காட்டியும் கண்ணுலப் பட்டுட்ட பின்னாடி, வாங்கன்னு ஒருத்தரு கூப்புடுறப்போ எப்பிடி போவாம இருக்குறதுன்னு யோசிச்சுக்கிட்டுப் போயிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            அங்கப் போயி ஒரு வாயி டீத்தண்ணியக் குடிச்சிட்டு, பேசிட்டு வந்தப் பிற்பாடு ஏம்டா அங்கப் போனோம்னு ஆயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கு. மனுஷன மனுஷனப் பாக்கறப்ப வூட்டுக்குப் போயி பேசி, ஒரு வாயி டீத்தண்ணிய கொடுக்குறப்ப குடிக்காம வந்துட முடியுமான்னு கேட்டாக்கா, இவரு போயி குடிச்சிட்டு வந்த பிற்பாடு வூட்டு அலமாரியில வெச்சிருந்த ஆயிரத்து ரூவாயப் பணத்தெ காணும்ன்னு ஊரெல்லாம் பேச்சா கெடக்குது. சுப்பு வாத்தியாரு வர்ற வரைக்கும் அலமாரியில இருந்த பணம், இவரு வந்துட்டுப் போன பிற்பாடு காணலன்னா சுப்பு வாத்தியாருதானே எடுத்ததா ஆவும்? இதென்னடா ஒருத்தேம் வூட்டுக்குப் போயி டீத்தண்ணியக் குடிச்சிட்டு வந்து திருட்டுப் பழிய சுமக்கிறதான்னு நொந்துப் போயிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            நாம்ம அந்தப் பணத்தெ எடுக்கல, அந்தப் பணத்தெ கண்ணால கூட பாக்கலன்னு திரும்ப சங்குவோட வூட்டுல போயிச் சொல்றதா? யில்லே, அப்பிடிச் சொல்லப் போயி மறுக்கா எதாச்சிம் ஒண்ணு அங்ஙன காணாமப் போயி அதுக்கும் சேர்த்து பழியச் சுமக்குறதா?ன்னு நொம்பலப்பட்டுப் போயிட்டாரு. ஆயிரம் ரூவாயப் பணத்தெ திருப்பிக் கொடுத்தா, நாம்மதானே பணத்தெ எடுத்தோம்ன்னு ஆவும்ன்னு அது வேற கலக்கமா இருக்கு அவருக்கு.
            வெங்கு வேற அவர்ரப் போட்டு சங்கதி தெரிஞ்சி திட்டுது. "ஏம்யா! இத்து ஒனக்குத் தேவையா? ஊரே அவ்வேம் வூட்டுக்கு யாரு போனாலும் எதாச்சிம் காணாமப் போவுதுன்னு பேசிட்டு இருக்குது. இந்த நேரத்துல அவ்வேம் வூட்டுக்குப் போவீய்யா? வாத்தியார்ன்னா இப்பிடியா புத்தி யில்லாம போவும்? ஒலக நடப்பும் ஒரு நடப்பும் தெரிய மாட்டேங்குதே! ஒங்களுக்கு எல்லாம் மட்டும் புத்தி எங்கேய்யா போவும்?"ன்னு. இதுல அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் என்னான்னா, யாரு அந்த வூட்டுக்குப் போனாலும் எதாச்சிம் ஒரு பொருளு காணாமப் போவுதுங்றதுதாம். இந்தச் சம்பவத்துக்குப் பெறவு சுப்பு வாத்தியாருக்கும் சங்குவப் பாக்குறது சங்கடமாப் போயிடுச்சு. சங்குவுக்கும் சுப்பு வாத்தியார்ரப் பாக்கறது சங்கடமாப் போயிடுச்சு. நமக்கு நேரம் சரியில்லன்னு சுப்பு வாத்தியாரு தலையில கைய வெச்சுட்டு உக்காந்துட்டாரு.
            ஊருல இல்லாத அதிசயமா இப்பிடி யாராச்சும் வூட்டுக்குப் போனா அந்த வூட்டுல எப்பிடிப் பொருளு காணாமா போவும்? இத்தனை நாளும் யாரும் போயி வாராத வூடா இது? அத்தனை நாளும் காணாம போவாத சாமாஞ் செட்டுகளும், பணமும் இப்போ மட்டும் எப்பிடிக் காணாமா போவும்?ன்னு அது வேற ஊருல பேச்சாயிப் போச்சுது. நெலமெ இப்பிடி ஆனதுல சங்கு வூட்டுக்குப் போறதுன்னாவே எல்லாருக்கும் உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆம்மா பாருங்க! எந்த நேரத்துல யாரு போயி எந்தப் பொருளாச்சிம் காணாமா போச்சின்னா அதுக்கு யாரு திருட்டுப் பட்டத்தெ கட்டிக்கிட்டு அலையுறது? இந்தப் பட்டம் ன்னா காலேஜூல படிச்சி வாங்குற பட்டமா? சந்தோஷமா வாங்கிக்கிட்டுப் போறதுக்கு?
            சங்குவோட வூட்டுக்குப் போற யாரும் பொருளெ எடுக்கலன்னாலும், காணாம போற பொருளு எப்பிடிக் காணாம போவுதுன்னுக் கண்டுபிடிச்சித்தானே ஆவணும்? வூட்டுக்கு வர்ற, போற ஆளுக யாரும் பொருளெ எடுக்குற ஆளு கெடையாதுன்னா, வூட்டுல இருக்குற யாராச்சிம்தான எடுத்தாவணும்? வூட்டுல இருக்குறது சங்கு, சங்குவோட அம்மா ராணி அத்தை, சங்குவோட பொண்டாட்டி பெரியநாயகி, சங்குவோட ரெண்டாவது தம்பி ஆனந்தன், மூணாவது தம்பி செந்திலு. இதுல சங்கு கொல்லுமாங்குடி பேக்கடரியில வேலை பாத்துட்டு அங்க இருக்குற குவார்ட்டர்ஸ்ல தங்கிக்கிட்டு லீவு நாள்ல மட்டும்தாம் வரும். தனியா அங்க ஒரு குவார்ட்டர்ஸூ அதுக்குக் கொடுத்திருந்தும் குடித்தனத்தெ சங்கு கொண்டு போவல. ஊருல இருக்குற அம்மா, தம்பிகளப் பாத்துக்கிடணும்னு குடித்தனத்தெ அத்து வடவாதியிலத்தாம் வெச்சிருந்துச்சு. அதுவுமில்லாம வடவாதியில முருகு மாமாவுக்கு மின்னாடி சிறப்பா வாழணும்னு ஒரு மனக்கிறுக்கு வேற இருந்ததால வடவாதியில குடும்பத்தெ வெச்சிக்கிடறதுதாம் சரின்னு பட்டுச்சு அதுக்கு.
            சங்குவோட அம்மாவோ, ரெண்டாவது தம்பி ஆனந்தனோ, மூணாவது தம்பி செந்திலோ பொருளுகள எடுக்குற ஆளுக கெடையாது. அப்பிடி எடுக்குற ஆளுகளா இருந்தா இத்தனை நாளு எடுக்காம கொள்ளாம இப்ப மட்டும் எப்பிடி எடுக்குற புத்தி வரும்? இதுல ரெண்டாவது தம்பி ஆனந்தன் பட்டறையே கதின்னு கெடக்குற ஆளு. சாப்பாட்டு நேரத்துலத்தாம் வூட்டுக்கு வர்ற ஆளு. வந்தாலும் ரொம்ப பேச்சு வார்த்தையெல்லாம் கெடையாது. போட்டு வெச்சதெ சாப்புட்டுடோமா, பட்டறையில வேலைக்குப் போனோமான்னு இருக்குற ஆளு. ராத்திரி நேரம் வந்தா படுக்குறதுக்குத்தாம் வூட்டுக்கு வாரது. பொழுது விடிஞ்சா பல்ல வெலக்கிட்டு டீத்தண்ணிய வாயில ஊத்திக்கிட்டுப் பட்டறைக்குப் போனா பெறவு பட்டறையே கதின்னு கெடக்குற ஆளு.

            சங்குவோட மூணாவது தம்பி செந்திலு வூட்டுக்கே வாரது கெடையாது. பக்கத்துல இருக்குற முருகு மாமா வூடுதாம் அவனுக்கு வூடு. அங்கேயே சாப்புட்டுக்கிட்டு, அங்கயே வேலையப் பாத்துக்கிட்டு கெடக்குற ஆளு. என்னிக்காவது அதிசயமா வூட்டுப்பக்கம் வாரதுதாம். அதுவும் ராணி அத்தைச் சத்தம் போட்டு, "ஒமக்கென்ன வூடு இல்லியா? வூடு யில்லாத கம்முன்னாட்டிப் பய மாதிரிக்கி எங்கேயோ போயிக் கெடக்குறீயே? வெக்கங் கெட்ட பயலே! ஒம்மட அப்பன கொன்னப் பயலுவோ வூட்டுலப் போயி கெடக்குறீயே?"ன்னு சத்தத்தெ போட்டா அன்னிக்கு ஒரு நாளைக்கு வூட்டுக்கு வர்ற ஆளு. அதுவும் இப்படி வூட்டுல திருட்டு ஆவுறது கேள்விப்பட்ட பிற்பாடு ராணி அத்தை என்னத்தெ சத்தம் போட்டு கேவலமா பேசிக் கூப்புட்டாலும் அவ்வேம் வூட்டுப் பக்கமே வாரது கெடையாது.
            ஒரு வேளை ராணி அத்தை திருடுதோ என்னான்னு அத்து மேல சந்தேகப்பட்டாலும், அத்தோட மவனோட வூட்டுல அத்து ஏம் திருடணும்னு சந்தேகம் வந்துப் போவும். மவ்வேன் வூட்டுலயே திருடி அத்து என்னத்தெ அள்ளிக் கட்டிக்கிட்டுப் போவப் போவுது? கடைசியா பெரியநாயகி திருடியிருக்ககுமோன்னு ஒரு சந்தேகம் வந்தப்பத்தாம் எல்லாரோட கண்ணும் அது மேல பட்டுச்சு. திருட்டு ஆவுற மறுநாளு எதாச்சிம் சண்டையெப் போட்டுக்கிட்டு பெரியநாயகி அவுங்க அப்பங்கார்ரேம் வூட்டுக்குப் போறதெ ஒரு வழக்கமா வெச்சிருந்துச்சு. சண்டையப் போட்டுக்கிட்டுக் கொழந்தைய தூக்கிட்டு எட்டாம் நம்பரு பஸ்ஸூ ஏறி காலைக்கி அப்பங்கார்ரேம் வூட்டுக்குப் போற பெரியநாயகி, அன்னிக்கே சாயுந்திரமே சிரிச்ச மொகத்தோட வடவாதிக்கு எட்டாம் நம்பரு பஸ்ஸூல திரும்ப வந்து எறங்கிடும். அப்போ அத்தோட மொகத்தப் பாக்கறவங்களுக்கும், ‍அதோட பேச்சக் கேக்கறவங்களுக்கும் காலையில சண்டையப் போட்டுக்கிட்டு போன பொண்ணா இப்பிடி வாரதுன்னு சந்தேகமாத்தாம் இருக்கும். இருந்தாலும் அப்பங்கார்ரேம், அம்மாக்காரிய பாக்காத ஏக்கத்துல இப்பிடி சண்டையெ வெச்சுக்கிட்டு அதெ ஒரு சாக்கா பண்ணிக்கிட்டுப் போயிப் பாத்துக்கிட்டுக் கெடக்குறதா நெனைச்சிக்கிட்டுக் கெடந்துச்சுங்க சனங்க.
            அந்த எடத்துலத்தாம் ராணி அத்தை சந்தேகப்பட்டு, அப்படி ஒரு நாளு கோவிச்சிக்கிட்டு பெரியநாயகி போறப்ப, அதுக்குத் தெரியாம ஆனந்தனெ வண்டிய எடுத்துக்கிட்டுப் போயி உளவு வேலை பாத்துட்டு வார்ற சொன்னுச்சு. இப்போ அப்பங்கார்ரேம் வூட்டுக்குப் போன மொத நாளு வூட்டுல சாமி மாடத்துக்கு உள்ளார வெச்சிருந்த எழுநூத்து ரூவாயக் காணால. நல்லவேளையா அன்னிக்குன்னுப் பாத்து யாரும் வூட்டுக்கு வேற வாரல. ராணி அத்தையோட சந்தேகம் உறுதிப்பட்டுப் போச்சுது. பெரியநாயகித்தாம் பணத்தெ எடுத்திருக்கணும்ங்ற சந்தேகம் வலுபட்டுப் போயி ஆனந்தனெ யாருக்கும் தெரியாம அனுப்பி விட்டுச்சு.
            ஆனந்தன் அண்ணங்கார்ரேம் சங்குவுக்காக சீரு சனத்தியா வூட்டுல வாங்கிப் போட்டிருந்த ஸ்ப்ளெண்டர் வண்டிய எடுத்துக்கிட்டு எட்டாம் நம்பரு பஸ்ஸூ பின்னாடியே போனாக்கா, பெரியநாயகி திருவாரூரு பஸ் ஸ்டாண்டுல கொழந்தையோட எறங்கி அங்க இருக்குற ஸ்வீட் கடையிலயும், பழக்கடையிலயும் ஏகப்பட்டதெ வாங்கிக்கிட்டு, அத்தோட ஹோட்டல்ல ஒண்ணுல பூந்து ஏகத்துக்கும் பரோட்டாவ பார்சலா கட்டிக்கிட்டு அப்பங்கார்ரேம் வூட்டுக்கு ஆட்டோவப் பிடிச்சிட்டுப் போவுது. எல்லாத்தையும் பெரியநாயகிக்குத் தெரியாம பின்னாலே போயிப் பாத்துக்கிட்டு, பெரியநாயகி அப்பங்கார்ரேம் வூட்டுல நொழைஞ்சு நல்லா பேசிட்டு இருக்குற நேரத்துல திடீர்ன்னு நொழைஞ்சு, அண்ணிக்காரின்னு கூட பாக்காம ஆனந்தன், "இம்புட்டுக் காசியச் செலவு பண்றதுக்கு ஏதுடி ஒமக்குக் காசி?"ன்னு செவுட்டு இழுப்பா இழுத்துச்சுப் பாருங்க, பெரியநாயகிக்கு வெலவெலத்துப் போச்சுது. "ஒஞ்ஞ அண்ணந்தாம் கொடுத்துச்சு!"ன்னு பெரியநாயகி மலுப்புனுச்சு. "யார்ரு எஞ்ஞ அண்ணேம்! அந்தக் கஞ்சப் பயலா ஒமக்கு இம்மாம் செலவு பண்ண காசியக் கொடுத்தாம்? பெட்ரோல்ல போட்டுக்கிட்டு வண்டியில போனாக்கா காசி செலவு ஆயிப்புடும்னு நெனைச்சிக்கிட்டு, வாங்கிக் கொடுத்த ஸ்ப்ளெண்டரு வண்டிய வூட்டுலப் போட்டுக்கிட்டு, பஸ்ல போயிட்டு பஸ்ல வார்றப் பய அவ்வேம்! அவ்வேம் காசிய கொடுத்தாம் யில்லே? வூட்டுல யாரும் பணத்தெ எடுக்க மாட்டாங்க, நம்ம வூடுதானேன்னு நெனைச்சு அலமாரியிலயும், சாமி மாடத்துலயும் பணத்தெ வெச்சா அதெ எடுத்துக்கிட்டு நீயி இஞ்ஞ வந்து ஆட்டத்தெ போடுவே! வூட்டுக்கு வந்துட்டுப் போறவங்க திருட்டுப் பட்டத்தெ சொமக்குறதா?"ன்னு சொல்லி மறுக்கா அண்ணிக்காரிய இன்னொரு செவுட்டு இழுப்பா இழுத்துச்சுப் பாருங்க, பெரியநாயகிக்கு ஒதறல் எடுத்துப்புடுச்சு.
            "இத்தெ இத்தோட வுட்டா இப்பிடித்தாம் நடந்துக்கிட்டு இருக்கும். கொல்லுமாங்குடி இஞ்ஞருந்து எம்மாம் தூரம்? அண்ணனெ அழைச்சாந்து வெச்சு பஞ்சாயத்து வெச்சாத்தாம் சரிபட்டு வரும்?"ன்னு ஆனந்தன் கெளம்புனுச்சுப் பாருங்க, பெரியநாயகி கொழுந்தங்கார்ரேன்னு கூட பாக்காம பட்டுன்னு கால்ல வுழுந்துப்புடுச்சு. "யம்பீ! மன்னிச்சுப்புடுங்க யம்பீ! நமக்குத் திருட்டுப் புத்தில்லாம் கெடையாது யம்பீ! இஞ்ஞ பொறந்த வூட்டுல ஒஞ்ஞ அண்ணேம் அடிச்சக் கூத்துல கடனவுடன பட்டு மேலுக்கு மேல சக்திய மீறிச் செஞ்சிப்புட்டாங்க யம்பீ! அதுக்குப் பெறவு கடனுக்கு வட்டிய கட்ட முடியாம, சம்பாத்தியமும் பண்ண முடியாம குடும்பத்துல எல்லாமும் கொல பட்டினியா கெடக்குதுங்க யம்பீ! ஒஞ்ஞ அண்ணங்கிட்டெ சொல்லிப் பாத்தேம் யம்பீ! பைசா காசியத் தர முடியான்னுட்டாரு யம்பீ! கால்ல கூட வுழுந்துப் பாத்தேம் யம்பீ! ஒஞ்ஞ அண்ணேம் கேக்கல யம்பீ! நமக்கு வேற வழி ஒண்ணும் தெர்யல யம்பீ! அதாங்க அஞ்ஞ இஞ்ஞ நீஞ்ஞ வைக்குற பணத்தெ யாராச்சிம் வர்ற நேரமா பாத்து எடுத்துட்டு மறுநாளு கொவிச்சிக்கிட்டு இஞ்ஞ வார்றாப்புல வந்துடுவேம் யம்பீ! கொஞ்ச நாளா வூட்டுப்பக்கமும் யாரும் வாரலையா. பணத்தெ எடுக்க முடியல. இஞ்ஞ வந்துப் பாத்தும் நாளாச்சா. இஞ்ஞ ரொம்ப பட்டின யம்பீ! அதாம் யம்பீ! நேத்திக்கு எடுத்துட்டு இன்னிக்கு வந்துப்புட்டேம்! அப்பிடி எடுத்துட்டு வர்ற காசியில திங்குறதுக்கு வாங்கிக் கொடுத்துப்புட்டு, மிச்சத்தெ சாப்பாடு தண்ணிய வாங்கித் தின்னுங்கன்னு கொடுத்துப்புட்டு வந்துப்புடுவேம் யம்பீ! நமக்குச் செஞ்சிச் செஞ்சி அதால பட்டினியா கெடக்குறாளுவோ யம்பீ! நாம்ம இதெ பாத்துக்கிட்டு அஞ்ஞ எப்பிடி யம்பீ நிம்மதியா ஒரு வாயிச் சோத்தெ தின்ன முடியும் யம்பீ?"ன்னு அழுகாச்சிய வெச்சிது பெரியநாயகி.
            "யய்யோ என்ன காரியத்தெ பண்ணிப்புட்டே மவளே! நாம்ம கூட புருஷங்கார்ரேம் எரக்கப்பட்டுக் கொடுக்குற காசியத்தாம் வாங்கிட்டு வார்றேன்னு தப்புக் கணக்கா போட்டுட்டமே! நகைநட்டு வாரலன்னு சாந்தி முகூர்த்தத்தையே பண்ணாத ஆளு, பணத்தெ கொடுக்க எப்பிடி மனசு வந்திருக்கும்னு நாமளும் யோஜிக்கலயே! தப்பா ஆயிடுச்சே!"ன்னு தலையில அடிச்சிக்கிட்டு அழுதாரு பெரியநாயகியோட அப்பங்காரரு.
            "ஒங்களையெல்லாம் இப்பிடியே வுட்டா சரிபெட்டு வாராது!"ன்னு நவுந்த ஆனந்தனோட காலப் பிடிச்சிக்கிட்டு வுடல பெரியநாயகி. ஆனந்தனோட காலு நவுற நவுற பெரியநாயகியும் தரதரன்ன தரையில இழுத்துக்கிட்டே நவுருதே தவுர கால மட்டும் வுட மாட்டேங்குது.
*****


2 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வாசிப்புக்கும் நேசிப்புக்கும் நன்றிகள் ஐயா!

      Delete

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...