3 Apr 2020

பொண்டாட்டியைத் தொடாதவன்!

செய்யு - 407        

            முருகு மாமாவும், லாலு மாமாவும் மெச்சுறாப்புல வாழ்றதுதாம் வாழ்க்கைன்னு சங்கு நெனைக்கிறதெ யாராலும் மாத்த முடியல. அவுங்க மெச்சுறாப்புல வாழணும்னா பணத்துல பெரிசா இருக்கணும்னு அதெ நோக்கி மட்டுமே யோசிச்சுக்கிட்டுப் போனுச்சு சங்கு. அறுவது பவுனுக்கு இருபத்து நாலு பவுனுப் போட்டா அதுல இழப்பு எவ்ளோ? திருவாரூரு டவுன்ல ஒரு ப்ளாட் கெடைக்காம போனதுல இழப்பு எவ்ளோ?ன்னு ஒவ்வொரு ராத்திரியும் சங்கு கணக்குப் போட்டுட்டுக் கெடந்ததுல அதோட மொத ராத்திரி தள்ளிக்கிட்டே போனுச்சு.
            பெரியநாயகியோட அப்பங்காரருக்கு அதையும் சேர்த்து நாலு பொம்பளெப் புள்ளைக. பெரியநாயகி ரண்டாவது பொண்ணு. மூத்தப் பொண்ணுக்கு ஒரு கலியாணத்தெ கட்டி வுடுற வரைக்கும் ஆளு பெருங்கையாத்தாம் இருந்திருக்காரு. அந்தச் சோக்குலயே பெருந்தோதுல மொத பொண்ண கட்டிக் கொடுத்துட்டாரு. அதுல கொஞ்சம் நொடிச்சுப் போனவருதாம். ரெண்டாவது பொண்ணான பெரியநாயகியக் கட்டிக் கொடுக்குறப்ப நெலமை ஒண்ணும் அப்பிடி மோசமில்ல. இருக்குறதையெல்லாம் பெரியநாயகிக்கே போட்டுக் கட்டிக் கொடுத்துப்புட்டா, மித்த ரெண்டு பொண்ணுகளை எப்பிடி கரை சேக்குறதுங்ற யோசனையில கடன்படாம ஏதோ கலியாணத்தெ முடிச்சி வுட்டாரு பெரியநாயகியோட அப்பங்காரரு.
            இப்போ பொண்ணுக்கு மொத ராத்திரியே நடக்கலங்ற சேதி தெரிஞ்சு பத்து பவுனு நகையோட வடவாதிக்கு வந்து மாப்பிள்ளையான சங்குவோட கால்ல வுழுந்தாரு. ஒரு பெரிய மனுஷன் அதுவும் மாமனாரு கால்ல வுழுறார்ன்னு நெனைக்கல சங்கு. "இருவத்து நாலும் பத்தும் முப்பது நாலு, அறுவதுல முப்பது நாலு போவ மிச்சம் இருபத்து ஆறு எப்போ வரும்? அத்தோட ப்ளாட்டோட பத்திரம் எப்போ வரும்?"ன்னு கேட்டுச்சு சங்கு.
            தன்னோட தலைய அடமானம் வெச்சாது மிச்சத்தெ ஏற்பாடு பண்ணி வுடுறா சொல்லிக் கதறுனாரு பெரியநாயகியோட அப்பங்காரரு. இதெ பாத்துட்டு ராணி அத்தை ஓடியாந்து சங்குவோட மார்புல படார் படார்ன்னு அடிச்சுச்சு. அது என்னவோ அரிக்குற நெஞ்சுல சொரிஞ்சு வுட்டாப்புல நெனைச்சுக்கிட்டு அம்மாக்காரி அடிச்சிட்டு அந்தாண்ட போனதுக்கப்புறம் சிரிச்சிக்கிட்டுச்சு சங்கு. "ஒம் மனசு கல்லா போயிடுச்சா? வாலிப வயசுல கொழந்தையப் பெத்துக்கிடாம வயசாயியா கொழந்தையப் பெத்துக்கிடப் போறே? ஏம்டா நாளைக்கே ஒமக்கு ஒரு பொம்பளெ புள்ள பொறந்து அதுக்கு ஒன்னய மாதிரி ஒருத்தெம் ஒன்னால முடியாததெல்லாம் சீர் வரிசையா கேட்டாக்க ன்னடா பண்ணுவே? இன்னிக்கு நீயி செய்யுறதெ நாளைக்கு ஒமக்குச் செய்ய ஒருத்தேம் இனுமே பொறந்துல்லாம் வார மாட்டேம். இந்நேரத்துக்குப் பொறந்திருப்பாம்டா! ஏம்டா இப்பிடி பாவத்தெ வாங்கிக் கொட்டிக்கிறே?"ன்னு கதறுனுச்சு ராணி அத்தை. எதுவும் சங்குவோட காதுல ஏறல, செவுடன் காதுல ஊதுன சங்குப் போல இருந்துச்சு சங்கு. அதனாலத்தாம் என்னவோ பஞ்சு மாமா சங்குன்னு பேர்ர வெச்சுக்கோ என்னவோ!
            சங்கு பாட்டுக்கு வெளியில கெளம்பிப் போனுச்சு. செரி வெளியில போயி யோசிச்சு கொஞ்சம் மனசு மாறி உள்ளார வரும்னு எதிர்பார்த்தா, அத்து முருகு மாமாவ உள்ளார அழைச்சுட்டு வந்தது. முருகு மாமா வந்ததும் வாரதுமா, "வாய்யா! யோக்கியா! இப்பத்தாம் பொண்ணு ஞாபவம் வந்து பொண்ண பாக்க வந்தியாக்கும்? வேற ஒருத்தன்னா இந்நேரத்துக்கு ஒம்மட பொண்ண வூட்ட வுட்டு வெரட்டிக் கொண்டாந்து வுட்டுருப்பாம். நாம்மல்லாம் அப்பிடிப்பட்ட சாதியில பொறக்கலைய்யா! நாம்மத்தாம் பயல அப்பிடி இப்பிடின்னு சரி பண்ணிக்கிட்டு ஒம்மட பொண்ணு வாழாவெட்டியா ஆவாம காபந்து பண்ணிக்கிட்டு இருக்கேம்! இப்போ என்னவோ வந்து கால்ல வுழுவுறீயாமே? ன்னா சங்கதின்னு தெரியலையே மசுரானுக்கு?"ன்னுச்சு முருகு மாமா.
            "சம்பந்தி வூட்டுக்காரவோ அப்பிடில்லாம் பேயப் படாது. மொதப் பொண்ணுக்கு சொன்னபடிக்கில்லாம் அதெ வுட ஒரு படி தாண்டிச் செஞ்சவத்தாம். அப்பிடிச் செஞ்சதுல மித்த மூணு பொண்ணு இருக்குறதெ மறந்திட்டேம், ஒரே பொண்ணுங்ற மாதிரிக்கிச் செஞ்சிட்டேம். இப்பவும் அதெ மாதிரிக்கிச் செய்ய மனசுல ஆசைத்தாம். வரும்படித்தாம் யில்லே. நாளைக்கே வரும்படி வந்தாலும் சொன்னதெ வுட தாண்டித்தாம் செய்வேம். நேரமும் காலமும் ஒத்து வாரல. வாக்கு மாறிப் போனதுக்கு வாழ்க்கெ மாறிப் போனதுதாங் காரணம். மன்னிக்கணும் சம்பந்தி வூட்டுக்காரவுங்க!"ன்னாரு பெரியநாயகியோட அப்பங்காரரு.
            "இப்போ சாந்தி முகூர்த்தம் நடக்கலங்ற சங்கதி தெரிஞ்சி பத்துப் பவுனோட ஓடி வாரல்ல. சாந்தி முகூர்த்தம் அன்னிக்கே நடந்திருந்தா இப்ப வார்ற பத்துப் பவுனை ஆட்டையப் போட்டிருப்பேல்ல! ஆடிக் கறக்குற மாட்டிட்ட ஆடியும், பாடிக் கறக்கு மாட்டிட்ட பாடியும், அடிச்சிக் கறக்குற மாட்டிட்ட அடிச்சும்தாம் கறந்தாவணும். மயிலே மயிலே எறகு போடுன்னா எந்த மயிலு எறகைப் போடும்? அடி ஒதவுறாப்புல அண்ணம் தம்பியும் ஒதவ மாட்டாம்ல. அததுக்கு செய்யுறதெ செஞ்சாத்தாம் வழிக்கு வார்றது வரும். இல்லன்னா பட்டை நாமத்தைத்தாம் சாத்தும். செரித்தாம்யா!பத்துப் பவுனோட வந்து நிக்குறீயே? மிச்சத்தெ ஆரு பண்ணிப் போடுவா? என்னவோ ப்ளாட்டு வாங்கித் தர்றதா பட்டா போட்டீயே? அதோட பட்டா என்னாச்சு? எல்லாத்தியும் சரிபாத்துப்புட்டுக் கலியாணத்தெ பண்ணிருக்கணும். செரித்தாம் வாக்குக் கொடுத்துப்புட்டாம்லே, சரியாத்தாம் செஞ்சிருப்பாம்னு நெனைச்சா சாத்துனே பாரு பட்டெ நாமத்தே?" அப்பிடின்னுச்சு முருகு மாமா.

            எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு, கடைசியிலே பெரியநாயகியோட அப்பங்காரரு முடிவா ஒண்ணச் சொன்னாரு, "மாப்புள்ள! சம்பந்தி! ரண்டு பொண்ணுகள இன்னும் கரையேத்தணும். ஏதோ அதுக்குக் கொஞ்சம் நகை நெட்ட வெச்சிருக்கேம். எல்லாம் ஒரு முப்பது தேறும். அதையும் கொடுத்துப்புட்டா ரண்டையும் கரை சேக்க தம்புடி தேறாது. வூடு ஒண்ணுத்தாம் மிச்சம். அதெ காட்டித்தாம் ரண்டு பொண்ணுக்கும் மாப்புள்ளைய தேடியாவணும். வூட்ட மாப்புளே! ஒங்க பேர்ல எழுதித் தந்திடறேம். ஆன்னா ரண்டு பொண்ணுக்கும் கலியாணம் ஆவுற வரைக்கும் விசயம் வெளியில தெரிய வாண்டாம். ரண்டு பொண்ணுக்கும் சேத்து வெச்சிருக்குற முப்பது பவுன்ல இன்னொரு பத்து பவுனெ தந்திடுறேம். அதுக்கு மேல நம்மால முடியா. பாத்து நீஞ்ஞத்தாம் தயவு பண்ணியாவணும். பொண்ண கட்டி வெச்சு இன்னும் சாந்தி முகூர்த்தம் நடக்கலன்னா வெளியில அவனவனும் காறித் துப்புவாம்! வாயசான காலத்துல இதுக்கு மேல கால்ல வுழ வெச்சிடாதீங்க மாப்புளே!"ன்னுட்டு மறுக்காவும் சங்குவோட கால்ல வுழுந்தாரு. அப்பிடியே முருகு மாமாவோட கால்லயும் வுழுந்தாரு.
            சங்கு ஒரு நிமிஷம் நெத்தியச் சுருக்கி யோசிச்சு. "வார்த்தெ மாறக் கூடாது! பொண்ணு கலியாணத்துல பண்றதாச் சொல்லி கழுத்தறுத்த மாதிரிக்கி பண்ணக் கூடாது. இருந்தாலும் செரித்தாம்! நீஞ்ஞ சொன்னபடிக்கி பத்து பவுனோடயும், வூட்டுப் பத்திரத்தோடயும் வாங்கப் பாக்கலாம். வாரதுக்கு மின்னாடி ஒரு போனைப் போட்டுச் சொல்லிப்புடுங்க. இஞ்ஞ நாம்ம மொதலிரவுக்கு ஆவ வேண்டியதெ தயாரு நெலையில வெச்சுப்புடறேம்!" அப்பிடினிச்சு சங்கு.
            "அப்பிடிச் சொல்லுடா எம் யம்பீ பெத்த மவனே! சொன்னபடிக்கி நகைநெட்டும், பத்திரமும் வாரப்ப சொல்லு. நாமளும் வர்றேம். வந்து நகை கவரிங்கா, எடை சரியா இருக்கான்னு பாக்கணும். பத்திரம் ஒரிஜினலான்னும் பாக்குணும்டோய்! மறுக்கா ஏமாந்துப்புட்டு நிக்கக் கூடாது பாரு! இப்போ கலியாணத்தெ பண்ணி வுடுற ஒவ்வொருத்தனும் மாப்பிள்ளைக்கி வண்டிய வாங்கித்தாம் வுடுறாம். நீந்தாம்யா ஒண்ணுத்தையும் பண்ணாம வுட்டப்புட்டே. அப்பிடியே ஒரு பெரிய வண்டியையும் வாங்கிக் கொடுத்துப்புட்டு மறுவேல பாருய்யா! அவனவனும் மாப்புள்ளைக்குன்னு என்னென்னவோ செய்யுறாம்? அது செரி! யாருக்குச் செய்யுறே? ஒம் பொண்ணுக்குத்தானே! வண்டி வாங்கிக் கொடுத்தா ஒம்மட பொண்ணைத்தாம் அலுங்காம குலுங்காம அழைச்சிட்டுப் போவப் போறாம் ஒன்ற மருமவ்வேன்!" அப்பிடின்னுச்சு முருகு மாமா.
            "எந் நெஞ்சுர பால வாத்தீங்க மாப்புள! நீஞ்ஞல்லாம் சொல்றாப்புலயே பண்ணிப்புடுறேம்!"ன்னு கண்ணுல வழிஞ்ச கண்ணுத் தண்ணிய தொடைச்சிக்கிட்டு ஒடனே கெளம்புனவருதாம் பெரியநாயகியோட அப்பங்காரரு. சரியா மூணாவது நாளு சொன்னபடிக்கி நகையோடயும், வூட்டுப் பத்திரத்தோடயும், ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டரு வண்டியோடயும் வந்து நின்னாரு.
            அதெ வாங்கிப் பாத்துப்புட்டு, முருகு மாமாவையும் கூப்புட்டுக்கிட்டு, அவரு வாங்கியாந்த ஸ்ப்ளெண்டரு வண்டியிலயே, நகைய எல்லாத்தையும் அடகுக் கடைக்குக் கொண்டு போயி, பவுனு நகைதான்னா சோதிச்சிக்கிட்டு, அப்படியே எடைய வெச்சுப் பாத்துப்புட்டு, பத்திரத்தெ பத்திரம் எழுதுற சேந்தங்குடி ராசமாணிக்கத்தெ பாத்து உண்மைதானான்னு சோதிச்சுப்புட்டு வந்துச்சு சங்கு.
            "மாமனார்ர நம்பலன்னு நெனைக்க வாணாம். ஏன்னா கலியாணத்துல அப்பிடி ஆயிப் போச்சே! ஒரு வேள மின்னாடி நாம்ம நகைய வாங்கி சோதனெ போடாம போயிருந்தா நமக்கே இப்ப வரைக்கும் உண்மெ தெரிஞ்சிருக்காது பாருங்க. இப்பவும் கணக்குல பதினாறு பவுனு எழப்புத்தாம். என்ன பண்ணுறது? எந் தலையெழுத்து அப்பிடித்தாம்னு நெனைச்சிக்கிடணும்! எவ்வளவோ பொண்ணுவோள வெச்சிக்கிட்டு நூறு பவுனு, எரநூறு பவுனுன்கு நம்மள எஞ்சினியர்ன்னு கட்டிக்க வரிசையிலத்தாம் நின்னதுங்க. யாரு கழுத்துல தாலிய கட்டணும்னு எழுதில்லா வெச்சிருக்கு. ‍அதெ நாம்ம மீற முடியுமா? இந்த சென்மத்துல நமக்கும் ஒம்மட பொண்ணுக்கும்னு எழுதிருக்கு!"ன்னு ஒரு வியாக்கியானத்தெ பண்ணி முடிச்சுச்சு சங்கு.
            "இன்னும் மிச்சமிருக்குற பவுனையும் கூட செஞ்சி வுட்டுப்புடலாம். கொறையில்லாம போயிடும் பாருங்கய்யா! பொண்ணும் மாப்புள்ளையும் சந்தோஷமா இருக்கணும்னா கொஞ்சம் கடன வுடனப் பட்டுச் செஞ்சித்தாம் ஆவணும்! ஒடனே செஞ்சிப்புடணும்னு அவசியமில்லே! கொஞ்சம் கொஞ்சமா செஞ்சாலும் சரித்தாம்! ஏன்னா மனுஷம்ன்னா வாக்கு முக்கியம் பாரும்யா! ஒரு நாக்கு ஒரு வாக்கு! அவ்வேம்தான் மனுஷம். ஒமக்கும் சொன்ன வாக்கெ காப்பாத்துனாப்புல ஆயிடும் பாரும்யா!" அப்பிடினுச்சு முருகு மாமா தன்னோட பங்குக்கு.
            அதுக்குப் பெற்பாடு அன்னிக்கு ராத்திரித்தாம் சங்குவுக்கும், பெரியநாயகிக்கும் மொத ராத்திரி நடந்துச்சு. அன்னிலேந்து சரியா ஒம்போதாவது மாசத்துல பொம்பள புள்ள ஒண்ணும் பொறந்துச்சு. ராணி அத்தைக்கு மூணும் ஆம்பளெப் புள்ளயாப் போனதால பொம்பள புள்ளையத் தூக்கிக் கொஞ்சுற பாக்கியம் இல்லாம போச்சுது. பஞ்சு மாமாவுக்குப் பொம்பளப் புள்ளன்னா அம்புட்டு இஷ்டம். தனக்குப் பொம்பள புள்ள ஒண்ணு பொறக்காட்டியும், வைத்தி தாத்தாவுக்கும் அக்காக்காரியான சாமியாத்தாவுக்கும் பொறந்த அத்தனைப் பொம்பளைப் புள்ளீயோ மேலயும் பஞ்சு மாமா அம்புட்டு பாசம் வெச்சிருந்ததற்கு அதுதாங் காரணம். அதோட பட்டறைக்கு எந்தப் பொம்பளைப் புள்ளீயோ வந்தாலும் சரித்தாம், கையில இருக்குற காலணா, அரையணா, ஓரணான்னு இருக்குற காசிய எடுத்து நீட்டிப்புடும் அது. பெறவு அணா காசி மாறுன பிற்பாடு, வடவாதி தேர்திருவிழான்னா கையில இருக்கற அஞ்சு காசி,பத்துக் காசி, இருவது காசி, காலு ரூவான்னு எடுத்து அது பாட்டுக்குப் பட்டறைக்கு வர்ற பொம்பளைப் புள்ளைக கை நெறைய அள்ளி நீட்டிப்புடும்.
            புருஷங்கார்ரேம் ஆசைப்பட்ட பொம்பளப் புள்ளைப் பேத்தியா வந்து பொறந்ததுல ராணி அத்தை ரொம்ப பூரிச்சுப் போச்சுது. அதே பாக்க புருஷங்கார்ரேம் இல்லன்னு நெனைச்சப்போ அதுதாங் அதோட மனசுக்குச் சங்கடமா இருந்துச்சு. ஆனா சங்குவுக்கு வேற மாதிரி மனசு எரிச்சலா இருந்துச்சு. அதோட கணக்கு ஒரு ஆம்பளெ புள்ள. ஆனா பொறந்திருக்கிறது பொம்பளப் புள்ளெ. இப்பிடி பொட்டப் புள்ளையா வந்து பொறந்துச்சேன்னு அது பாக்கறவங்ககிட்டல்லாம் பொலம்பிக்கிட்டுக் கெடந்துச்சு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...