2 Apr 2020

பஞ்சு மகன் சங்குவோட கலியாணம்

செய்யு - 406        

            "வக்கீலு நோட்டீஸூ அடிச்சி நம்மள மெரட்ட நெனைக்குறாளா? ஒரு நோட்டீஸ அனுப்பிச்சிட்டா மெரண்டுடுவனா? யாருகிட்டே? ஒரு நாளு நேர்ல போனேன்னா வெச்சுக்க, வெளுத்து எடுத்துப்புடுவேம்! ச்சும்மா உறிச்சி அள்ளிப்புடுவேம்! தாலியக் கட்டிட்டேங்ற பாவத்துக்காகப் பாக்குறேம்!"ன்னு தண்ணியப் போட்டுக்கிட்டு உதாரு வுட்டுத் திரிஞ்சிச்சு வீயெம் மாமா. அந்த வக்கீலு நோட்டீஸ வுட்டது லட்சுமி மாமி. "அடி வாங்கி அசிங்கப்பட்டுகிட்டு போனவளுக்கு அம்மாம் தெகிரியம் வந்துப்புடுச்சா? நமக்கே வக்கீலு நோட்டீஸூ வுடுறா? அதெ வாங்கி இத்தோ சூத்துக்கு அடியில வெச்சிக்கிட்டேம்! என்னப் பண்ணப் போறே? உன்னால முடிஞ்சதெ பாருடி!"ன்னு பாக்குற ஆளுங்ககிட்டேயெல்லாம் என்னவோ லட்சுமி மாமி எதுத்தாப்புல நிக்குறாப்புல நெனைச்சு அந்த நோட்டீஸக் காட்டிக் காட்டி லந்து பண்ணிக்கிட்டு வேற திரிஞ்சிச்சு.
            ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தா அதுல ஏழு நாளோ, பதினைஞ்சி நாளோ அவகாசம் கொடுத்திருப்பாங்க. அதுக்குள்ள சம்பந்தப்பட்ட வக்கீல பாத்து சமாதானமோ அல்லது நமக்குன்னு ஒரு வக்கீல வெச்சோ பதில் நோட்டீஸ் விட்டோ எதாச்சிம் பண்ணியாவணும். வீயெம் மாமா இது எதையும் பண்ணல. அது என்னவோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பிச்சி மெரட்டப் பாக்குறதாவே மட்டும் நெனைச்சுச்சு. அந்த மெரட்டலுக்குல்லாம் அசர்ற ஆளு நாம இல்லேங்ற மாதிரிக்கு நடந்துக்கிடுச்சு. அது நெனைச்சது போலவே வக்கீல் நோட்டீஸ்ல கொடுத்திருந்த பதினைஞ்சி நாளு அவகாசம் முடிஞ்சி ரெண்டு மாசம் ஆன பிற்பாடும் ஒண்ணும் ஆவல. அதுல ரொம்ப குஷியா வேற ஊரெல்லாம், "யாருகிட்டே? யார்ர மெரட்டலாம்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறா? நாம்ம நெனைச்சா அவளுக்கு ஆயிரத்து நோட்டீஸ வுடுவேம்! ஏன்னா நாமளே வக்கீல தாண்டுன வக்கீலு தெரியும்ல"ன்னு சலம்பல் பண்ணிக்கிட்டு அலைஞ்சுச்சு.
            சரியா ரெண்டு மாசம் கழிச்சி வீயெம் மாமாவுக்குக் திருவாரூரு சீப் மாஜிஸ்ரேட் கோர்ட்லேந்து ஜீவனாம்ச வழக்குக்கும், ஆர்குடி கோர்ட்லேந்து வன்கொடுமை வழக்குக்கும் வந்து ஆஜராகணும்னு சம்மன் வந்தப்பத்தாம் வீயெம் மாமாவுக்கு விறுவிறுத்துப் போச்சு. ஒடம்பெல்லாம் ஒதறல் வுட ஆரம்பிச்சிது. ஒடனே வக்கீல் நோட்டீஸூ, சம்மன் எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு பஞ்சு மாமா மூத்த மவனான சங்குகிட்டே ஓடுனுச்சு வீயமெ் மாமா. அப்போ சங்குவுக்குக் குடும்ப வாழ்க்கையில ஒரு சம்பவம் நடந்து அவ்வேம் கோர்ட்டுக்கு அலைஞ்சிட்டுக் கெடந்தாம். அவ்வேம்கிட்ட கலந்துக்கிட்டா இதெ எப்பிடி சமாளிக்கணுங்றதெ தெரிஞ்சிக்கிடலாமுன்னு ஒரு நெனைப்பு வீயெம் மாமாவுக்கு. இதுல இன்னொரு சங்கதியச் சொல்லணும். சங்கு கோர்ட்டு, கேஸூன்னு அலையுறதுல முருகு மாமாவும், லாலு மாமாவுதாம் பெரிய சப்போர்ட்டு. சங்குவுக்கு வக்கீலு பாத்து விட்டதெல்லாம் லாலு மாமாதாம்.
            இப்போ அந்தச் சங்குவாலும், இந்த வீயெம் மாமாவாலும் ரொம்ப கெட்டப் பெயரா ஆயிருந்துச்சு வடவாதி வகையறாவுக்கே. பொண்ண கட்டுறதும், கட்டிக்கிட்டு அதெ கெழட்டி வுடுறதுமே இந்தச் சாதிக்கார பயலுவோளுக்கு வேலையா போயிடுச்சுன்னு ஊரெல்லாம் பேச்சா கெடந்துச்சு. கிட்டதட்ட சங்குவோட கதையும் வீயெம் மாமாவோட கதையைப் போலத்தாம் இருந்துச்சு. ஆனா சங்குவுக்குக் கோர்ட்டுல கேஸூ நடந்துகிட்டு இருந்தது மொத பொண்டாட்டியோட, வீயெம் மாமாவுக்கு நடக்கப் போறது ரெண்டாவது பொண்டாட்டியோட.  கிட்டதட்ட சங்குவோட கேஸூ எல்லாமும் நடந்து முடிஞ்சிப் போயிருந்துச்சு. தீர்ப்பு வார வேண்டியதுதாம் பாக்கி. அது ஒரு பெரிய கதெ. ரொம்ப பெரிசா சொல்ல முடியாது. எம்மாம் சுருக்கிச் சொல்ல முடியுமோ அம்மாம் சுருக்கித்தாம் சொல்லணும்.
            பாலிடெக்னிக்ல சங்கு பெயிலான கதை பஞ்சு மாமா தூக்க மாட்டிக்கிட்டுச் செத்த அன்னிக்குத்தாம் வெளியில தெரிஞ்சிச்சுங்றது ஒங்களுக்குத் தெரிஞ்ச கதைத்தாம். அதெ சொல்லி சொல்லி அழுகாச்சிய வெச்சிக்கிட்டுக் கெடந்த சங்கு, பின்னாடி அரியர்ஸ்ஸ எழுதி எப்பிடியோ பாஸாயி, பஞ்சு மாமாவோட கடைசிக் கனவை நிறைவேத்துனுச்சு. அதாச்சி, அதோட நேரம் அப்போ வடவாதியிலேந்து கொல்லுமாங்குடிக்கு மாத்துன சர்க்கரை ஆலையில வேலை கெடைச்சி அங்க வேலை பாத்து வந்துச்சு. வேலைன்னா எஞ்சினியரு வேல. இங்க அப்பிடி யாரும் அம்மாம் கோதாவுல அம்புட்டு தோதுல வேலை பாக்கறதுக்கு குவார்ட்டர்ஸ்லாம் கெடைச்சி பேக்கடரியில வேலைப் பாத்தது இல்ல. அது அப்போ பெரிய பேச்சா கெடந்துச்சு இந்த வகையறாவுக்குள்ள, "பஞ்சு மவ்வேம் சங்குப் பயெ எஞ்சினியரு ஆயிட்டாம்ல"ன்னு. அதுவரைக்கும் கொஞ்சம் வெட்டுனாப்புல இருந்து, பஞ்சு மாமா குடும்பத்துக்குக் கொடைச்சல் கொடுத்துட்டு இருந்த முருகு மாமாவும், லாலு மாமாவும் சங்குவோட குடும்பத்தோட நெருங்குனது அப்பத்தாம். பெரிய வேலைக்குப் போயிட்டாம், கையில பணங்காசி பொரளுற நெலமைக்கு வந்துட்டாங்றதுல காட்டுன நெருக்கம் அது.
            சங்குவுக்கு பெரிப்பாவும், சித்தப்பாவும் நம்மள மதிக்கலேங்ற மனக்கொறை அதிகமாவே இருந்திருக்கும் போலருக்கு. அதால அவுங்க நெருங்கி வந்தப்போ, என்னவோ தலையில கிரீடத்தெ தூக்கி வைக்குறாப்புல நெனைச்சுக்கிட்டு கூடிக் குலாவ ஆரம்பிச்சிடுச்சு. இத்து சங்குவோட அம்மா ராணி அத்தைக்கு அறவே பிடிக்கல. அத்து சங்குகிட்டெ எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சு. சங்கு கேக்குறாப்புல யில்லே. என்னவோ லாலு மாமாவும், முருகு மாமாவும் தன்னை மதிக்கிறதுதாங் ஒலகத்துலயே பெரிசு போல அதுக்கு தோணிச்சு. ஏற்கனவே ராணி அத்தையோட மூணாவது மவ்வேன் செந்திலு முருகு மாமா வூட்டோட போயி ஒட்டிக்கிட்டதுல அதுக்கு பெரிய மனக்கொறை. "அப்பங்காரன சாவடிச்சவங் குடும்பத்தோட ஒட்டிக்கிட்டு அந்தப் பயலுவோளுக்குக் கூலிக்கார்ரேம் மாதிரிக்கி வேலைய செஞ்சிட்டுக் கெடக்கானே!"ன்னு சொல்லி சொல்லி அது மாய்ஞ்சுப் போவும். இப்போ மூத்த மவ்வேன் சங்குவும் அவுங்கப் பக்கம் சாய்சதுல ‍அதோட மனக்கொறை அதிகமா போயிடுச்சு. அதோட நடுமவ்வேன் ஆனந்தன் மட்டுந்தாம் அங்க இங்கன்னு போகாம அதோட சொல்பேச்சக் கேட்டுக்கிட்டு பஞ்சு மாமாவோட கொல்லுபட்டறையப் பாத்துக்கிட்டுக் கெடந்தாம். அத்து ஒண்ணுத்தாம் அதுக்கு ஆறுதலா இருந்துச்சு.

            சங்குவுக்கு வேலை கெடைச்சி பேக்கடரியில எஞ்சினியரு ஆனப்போ அதுக்கு வயசு முப்பத்துக்கு மேல ஆயிருந்துச்சு. வூட்டுக்கு அடக்கமா ஒரு பொண்ணைப் பாத்து கலியாணத்தெ கட்டி வெச்சிடணும்னு ராணி அத்தை ரொம்ப மெனக்கெட்டுச்சு. ஆனா சங்குவோட ஜாதகம் தோஷமுள்ள ஜாதகமா இருக்கறதா பேச்சு அடிபட்டுச்சு. அதால இஞ்சினியராயி வேலைக்குப் போன பிற்பாடும் அதுக்குப் பொண்ணப் பாக்குறது செரமமா இருந்துச்சு. தோஷமுள்ள ஜாதகத்துக்கு அதுக்குப் பொருந்துறாப்புல ஜாதகத்தெ பாத்துக் கட்டி வைக்கணும்னு ஒரு கணக்கெ வெச்சிக்கிட்டு ஜோடிய சேக்குறது ஒரு வழக்கம். அதுப்படி சரியா ஜோடிய சேக்கலன்னா மாப்புள்ளையோட அப்பங்காரனோ, அம்மாக்காரியோ உசுரோட இருக்க மாட்டாங்கன்ன ஜாதகம் பேசுறதா பேச்சு அடிபட்டுச்சு. பஞ்சு மாமா செத்துப் போயி நாளாயிடுச்சு. சங்குவுக்கு இருக்கறதுன்னா அம்மாக்காரி ராணி அத்தைதாம். அதையும் தோஷம் பாக்காம கலியாணத்த பண்ணி வெச்சு சாகடிச்சிட முடியாதுன்னு, அதுக்கு தகுந்தாப்புல பொண்ணப் பாத்துக்கிட்டு கெடந்தப்பத்தாம், லாலு மாமா திருவாரூர்ல ஒரு பொண்ணு இருக்குறதா ஒரு ஜாதகத்தெ கொண்டு வந்துச்சு.
            லாலு மாமா பாத்துட்டு வந்த ஜாதகம் தோஷத்தெ நிவர்த்திப் பண்றாப்புல இல்ல. அதால அந்த ஜாதகத்தெ வேணாமுன்னு சொல்லி ஒத்தக் கால்ல நின்னுச்சு ராணி அத்தை. ஆனா லாலு மாமா சங்குகிட்டெ வந்து, நகை மட்டும் அறுவது பவுனு போடுறதாவும், திருவாரூர்ல ஒரு ப்ளாட்ட எழுதி வைக்குறதாவும் பொண்ணு வூட்டுல சொல்றதாச் சொல்லி ஆசையக் காட்டி அந்தப் பொண்ண கலியாணம் பண்ண சம்மதிக்க வெச்சுச்சு. முருகு மாமாவும் அந்தப் பொண்ணைத்தாம் சங்கு கட்டணும்னு பிடிவாதம் பண்ணுச்சு. ஒலகத்துலயே தன்னை லாலு மாமாவும், முருகு மாமாவும் மதிச்சாப் போதும்னு இருந்த சங்கு அவுங்க சொன்னதைத்தாம் கேட்டுச்சே தவுர, அம்மாக்காரியான ராணி அத்தைச் சொல்றதெ கேக்கவே இல்ல.
            "இப்பிடி எம் மவ்வேனுக்கு நம்மட விருப்பம் யில்லாமலே ஊடால பூந்துக் கலியாணத்தெ பண்ணி வைக்கிறானுவோளே படுபாவியோ!"ன்னு அழுதுச்சு ராணி அத்தை. ‍அதோட அழுகைக்கு ரெண்டாவது பையன் ஆனந்தன் மட்டுந்தாம் ஆறுதலா பேசுனாம்.
            "நீயி சல்லடைப் போட்டு சலிச்சுச் சலிச்சுப் பாத்துக்கிட்டே இருந்தேன்னா, அம்பது வயசுல கூட உம் மவனுக்குக் கலியாணம் நடக்காது பாத்துக்க! என்னவோ நல்ல சாதகத்துல உள்ள பயலா பெத்து வெச்சிக்கிறதா நெனைச்சுக்கிட்டுப் பேசுறீயே? தோஷ சாதகத்துக்குப் பொண்ணு கெடைக்குறதுல்லாம் எம்மாம் கஷ்டமா கெடக்கு? ஒங் கொழுந்தேம் லாலு பய அஞ்ஞ இஞ்ஞன்னு அலைஞ்சி, பாக்காத எடமெல்லாம் பாத்து, போவாத ஊருல்லாம் போயில்லா பொண்ணப் பாத்துட்டு வந்து நிக்குறாம். நீயி என்னன்னா நாம்ம செத்துப் போயிடுவேம், வேற எடமா பாருன்னா எப்பூடி? இந்த வயசுக்கு மேல நீயி இருந்தா ன்னா? செத்தா ன்னா? புள்ளீயோளுக்கு ஒரு நல்ல கதி ஆவுதேன்னு நெனைக்குறீயா? இந்தப் பயலுக்குக் கலியாணம் ஆனத்தாம் மித்த ரண்டு பயலுக்கும் கதையே கட்டி வுடலாம்! இல்லன்னா அவனுகளும் இவனோட சேந்துக்கிட்டு ஆயுசுக்கும் கலியாணம் ஆவாதக் கட்டையா கெடக்க வேண்டியத்தாம்! இந்தக் காலத்துல பொண்ணு கெடைக்குறது எம்மாம் கஷ்டமா இருக்குத் தெர்யுமா?"ன்னு வேற முருகு மாமா பயத்தைக் கெளப்பி விட்டுச்சு. 
            ராணி அத்தையால ஒண்ணும் சொல்ல முடியல. இன்னும் மூத்தவனுக்குக் கலியாணம் பண்ணாம எத்தனை வருஷம் வெச்சிருப்பேன்னு ஊருலயும் உறவுலயும் கேக்க ஆரம்பிக்க அது அரைகொறை மனசோட கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டியதாப் போச்சுது. அப்படித்தாம் சங்குவுக்கும் திருவாரூலேந்து பாத்த பெரியநாயகி பொண்ணுக்கும் கலியாணம் ஆனுச்சு.
            பெரியநாயகிப் பொண்ணு கொணமான பொண்ணா வந்து அமைஞ்சிச்சு. சங்குவோட கொணந்தாம் மாறிப் போச்சுது. அதுக்குக் காரணம் பொண்ணு வூட்டுல அறுவது பவுனு நகையைப் போடல, சொன்னபடிக்கி திருவாரூர்ல ஒரு ப்ளாட்ட வாங்கிக் கொடுக்கல. இருவத்து நாலு பவுனுத்தாம் பெரியநாயகிப் பொண்ணுக்குப் போட்டு வுட்டு அனுப்புனாங்க. அந்தப் பவுனு நகையையெல்லாம் முதலிரவுக்கு மின்னாடி கழட்டி வாங்கி எடைப் போட்டுப் பாத்து ஏமாந்துப் போனதுல, சங்கு முதலிரவுக்குப் போவ மாட்டேன்னு அடம் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அத்து அன்னிக்குப் பெரிய ரகளையாப் போயிடுச்சு. கலியாணத்தையும் பெரியநாயகிக் பொண்ணு வூட்டுல நல்ல வெதமா செஞ்சி வுட முடியாமப் போயிடுச்ச. கலியாணத்துக்குப் போன பாதிப் பேத்துக்குச் சாப்பாடு இல்லாமப் போயி அது வேற கலியாண மண்டபத்துல பெரிய ரகளையாப் போச்சுது. "ஒழுங்கா நாலு பேத்துக்குச் சோத்தக் கூட போடாதவனுல்லாம் எதுக்குப் பொண்ணுக்குக் கலியாணத்தெ பண்ணணும்னு நெனைக்குறாம்!"ன்ன முருகு மாமா சண்டைக்கி நின்னுச்சு. அதெ சமாதானம் பண்ணி அழைச்சாந்து வாரதுக்குள்ள பெரும் பாடா போச்சுது அன்னிக்கு.
            ஒரு மாசம் காலம் வரைக்கும் சங்கு கட்டுன பொண்டாட்டிய தொடல. சொன்னபடிக்கு நகையையும், ப்ளாட்டுக்கான பத்திரத்தையும் கையில கொண்டாந்து வெச்சத்தாம் கலியாணம் நடந்ததா அர்த்தம்ன்னும், இல்லன்னா அப்பிடியே இருக்க வேண்டியதான்னும் மெரட்டிக்கிட்டுக் கெடந்துச்சு. லாலு மாமாவும், முருகு மாமாவும் ஏதோ திட்டம் போட்டு பண்ணி வுட்டது போல இருந்துச்சு, நடந்த ஏறுக்கு மாறான சம்பவங்களப் பாத்தப்ப. அத்தோட முருகு மாமா வேற சொன்னபடிக்கு பொண்ணு வூட்டுலேந்து செய்யலன்னா பொண்ண வாழ வெட்டியா அனுப்பிச்சிப்புடுவேம்னு அபசகுனமா வேற பேசுனுச்சு.
            "இந்தப் பயலுவோ கலியாணம் பண்ணி வுடறேம்ன்னு நின்னப்பவே நெனைச்சேம். உள்குத்து ஆவும்ன்னு. நல்லதப் பண்றதாச் சொல்லி கெட்டதப் பண்றப் பயலுவோன்னு தெரியாமப் போயி எம் மவ்வேன் வுழுந்துப்புட்டான்னே. இவனுவோ கைய வெச்சி எத்து வெளங்கியிருக்கு? இவனுவோ ஒரு கலியாணத்தையாவது மங்கலமா பண்ணிருக்கானுவோளா? தன்னோட பொண்ணுவோளுக்கே அடியாள வெச்சிக் கலியாணத்தெ பண்ண பயலுவோ ஆச்சே. இவனோளோட சங்கநாத்தமே வாணாம்ன்னா, எம் மவ்வேன் அவனுவோ சூத்தல்ல போயி நோண்டிக்கிட்டு நிக்குறாம். எல்லாம் எந் தலையெழுத்து!"ன்னு தலையில அடிச்சிக்கிட்டு அழுதுச்சு ராணி அத்தை.
            சங்கு பண்றதுக்கு எல்லாம் லாலு மாமாவும், முருகு மாமாவும் ஒத்து ஊதுனதோட, சொன்னபடி பொண்ணு வூட்டுலேந்து செய்யுற வரைக்கும் கட்டுனவ பக்கம் கூட நெருங்காதேன்னு சொல்லி வெச்சதுல சங்கு ஆடாத ஆட்டமெல்லாம் ருத்ர தாண்டவமா ஆடுனுச்சு. அத்தோட வுடாம லாலு மாமாவும், முருகு மாமாவும் பொண்ணு வூட்டுக்குப் போயி, பொண்ணோட அப்பங்காரங்கிட்டே, "ஒம்மட பொண்ணு பொண்ணே இல்லன்னு, அதாச்சி பொம்பளையே இல்லன்னு கோர்ட்டுல கேஸைப் போட்டு திருப்பி ஒம்மட வூட்டுக்கே அனுப்பப் போறோமா இல்லையான்னு பாரு?"ன்னு மெரட்டல் வேற வுட்டுட்டு வந்துச்சுங்க.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...