25 Apr 2020

வருஷத்துக்கு ரெண்டு டைரி

செய்யு - 429        

            சந்தானம் அத்தான போல பேசி மயக்குற ஆளெ நீங்க பாக்க முடியாது. அத்தோட வேலையிலயும் மயக்குற ஆளா அது இருந்ததால சந்தானம் அத்தான தேடி வேலைகள் குவிய ஆரம்பிச்சிது. தேடித் தேடி வேலைய பிடிச்சிட்டு இருந்த நெலம மாறி சந்தானம் அத்தான தேடி ஆளுக வர ஆரம்பிச்சாங்க. அப்போ அத்து போட்டதுதாம் 'ஸமார்ட் இன் ஸ்மார்ட்' இன்டீரியர் டெகரேட்டர்ஸ்ன்னு அரும்பாக்கத்துல போட்ட ஆபீஸ். அந்த ஆபீஸ் ஆரம்பிச்சதுலேந்து வருஷா வருஷம் ஆபீஸ்க்குன்னு டைரி போடும். டைரி போட்டதும் மொத டைரிய அத்து சுப்பு வாத்தியாருக்குத்தாம் சென்னைப் பட்டணத்துலேந்து அனுப்பி வைக்கும்.
            விகடுவுக்கு நல்லா ஞாபவம் இருக்கு, சந்தானம் அத்தாங்கிட்டேயிருந்து மொத டைரி வந்தப்போ அவன் நாலாப்பு படிச்சிட்டு இருந்தாம். அந்த டைரிய அப்பங்காரர வெச்சிக்க வுடாம அழுது அடம் பிடிச்சி வாங்கி வெச்சிக்கிட்டு அதுலத்தாம் கதை எழுதணும்ன்னு அழிச்சாட்டியும் பண்ணிக்கிட்டுக் கெடந்தாம். சுப்பு வாத்தியாருக்கு அந்த டைரிய மித்த வாத்தியாருமாருகிட்டேயெல்லாம், "எங் யக்கா மவ்வேம் போட்ட டைரி!"ன்னு காட்ட ஆசை. அதெ காட்ட முடியாதபடிக்குச் செஞ்சிட்டாம் விகடு. "ஏம்டா யம்பீ! ஒமக்குத்தாம் கதை எழுதணும்னு சொல்லி ஒரு நோட்டு வாங்கியாந்து கொடுத்திருக்கேம்டா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. "யில்லப்பா! இதுலயும் எழுதணும்!"ன்னு அந்த டைரிய வுடாம பிடிச்சிக்கிட்டாம். "ரண்டு வாத்தியாருமாருககிட்டே காட்டிட்டு கொண்டாந்திடுறேம்டா!"ன்னு சொல்லிப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. "நீஞ்ஞ அப்பிடிச் சொல்லி வாங்கிட்டுக் கொடுக்க மாட்டீங்க! கொடுக்க மாட்டேம்!"ன்னுட்டாம் விகடு. "யிப்பத்தாம் கொஞ்சம் எழுத கொள்ள வருது! அதுக்குள்ள இவ்வேம் எப்பிடி கதையில்லாம் எழுதுவாம்? புள்ள ஆர்வப்பட்டுக் கேக்குறப்போ அவ்வேம் வழியில வுட்டுட வேண்டியதுதாங்"ன்னு சுப்பு வாத்தியாரு வெங்குகிட்டெ சொல்லிச் சிரிச்சிக்கிட்டெ போயிட்டாரு. அப்போ விகடு அந்த டைரியிலயும், சுப்பு வாத்தியாரு வாங்கிக் கொடுத்த நோட்டுலயும் அங்கங்க எதையெதையோ எழுதி வெச்சாம்.
            சந்தானம் அத்தான் சென்னைப் பட்டணத்துக்குப் போன பிற்பாடு வருஷத்துக்கு ரெண்டு தடவெ வேலங்குடி வரும். சபரிமலைக்கு மாலை போட்டுக்கிட்டு ஐயப்பங் கோயிலுக்குப் போயிட்டு பொங்கல் கழிச்சி வேலங்குடிக்கு ஒரு தடவெ வரும். எட்டுக்குடிக் கோயில்ல சித்ரா பெளர்ணமியப்போ காவடி எடுக்குறப்போ ரெண்டாவது தடவெ வரும். ஒவ்வொரு சித்ரா பவுணர்மிக்கும் அதுக்கு எட்டுக்குடிக்கு காவடி எடுத்தாவணும். இது தவித்து ஊருல சாவு, கலியாணங் காட்சின்னா வரதுதாம். வருஷத்துக்கு வர்ற ரெண்டு தடவையும் சந்தானம் அத்தான் திட்டைக்கு வாராம போவாது. சந்தானம் அத்தானுக்கு தாய்மாமாவான சுப்பு வாத்தியாரு மேல அம்புட்டுப் பிரியம். அதுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.
            வேலங்குடி பெரியவரு ஒறவு மொறைக மேல பிரியமானவருன்னாலும் புள்ளைங்கள கவனிச்சிக்கிட்ட வெதத்துல ரொம்ப மெனக்கெட்டது செயா அத்தையும், சுப்பு வாத்தியாரும்தாம். குறிப்பா வேலங்குடி பெரியவரு சாப்பாடு விசயத்துல புள்ளைகள கண்டுகிடவே மாட்டாரு. "ஒழைக்குறது நாம்ம! நாம்ம ந்நல்லா சாப்புட்டுப்புட்டு தெம்பா ஒழைச்சாத்தாம்பீ புள்ளியோளுக்கு கண்டதையும் கழியதையும் வாங்கிப் போடலாம். மொதல்ல நம்மள தெம்பு பண்ணிப்பேம். பெறவு புள்ளையோள தெம்பு பண்ணி வுடுவோம்." அப்பிடிம்பாரு. ஆன்னா சுப்பு வாத்தியாருக்கு புள்ளைங்கத்தாம் மொதல்ல சாப்புடணும். பெறவு மிஞ்சுனாத்தாம் பெரியவங்க சாப்புடணும். இந்த விசயத்துல பெரியவரு நேர்மாறுங்றதால ரெண்டு பேத்துக்கும் வாய்ச் சண்டை வந்துப்புடும். சுப்பு வாத்தியாரு பிடிவாதமா தன்னோட கருத்த வுட்டுக்கொடுக்க மாட்டாரு. பெரியவரும்தாம் தன்னோட கருத்தெ வுட்டுக்கொடுக்க மாட்டாரு. ரெண்டு பேருமே தன்னோட கருத்துகள வுட்டுக்கொடுக்காம எப்பிடியோ சமாதானம் ஆயிப்பாங்க.
            "இந்தாரும்பீ! சாப்பாட்ட போட்ட வெச்சா நீயி சாப்புடு. புள்ளைங்களுக்கு ஒஞ்ஞ யக்கா கூப்புட்டுச் சாப்புட பண்ணிடும்!"ம்பாரு வேலங்குடி பெரியவரு. சுப்பு வாத்தியாரு புள்ளைங்கள கூப்புட்டு வெச்சித்தாம் சாப்பிடுவாரு. அந்தப் புள்ளைங்களுக்கு ஒரு ரண்டு வாயாவது ஊட்டி வுட்டத்தாம் அவருக்கு உள்ளார சாப்பாடு எறங்கும். ஒண்ணு, ரெண்டு கெடந்து ஊட்டி விட்டா தட்டுல சாப்பாடு இருக்கும். வேலங்குடி பெரியவருக்கு எட்டுப் புள்ளைங்க. எட்டுல இவரு போற சமயத்துல நாலைஞ்சுப் புள்ளைங்களாவது குட்டிக் குட்டியா கெடக்குமுங்க. அத்தனைக்கும் ஊட்டி வுட்டு தட்டைப் பாத்தா தட்டுல சோறும் இருக்காது, ஒண்ணும் இருக்காது. வூட்டுலயும் சோறும் அம்புட்டுத்தாம் இருக்கும். அந்தச் சோத்தைத்தாம் விருந்தாளியா வந்திருக்கே மச்சாங்கார்ரேம்ன்னு பெரியவரு போடச் சொல்லிருப்பாரு.

            "யல்லாம் யில்லாத கொறைதாம்பீ! இருந்தா நாம்ம ஏம் புள்ளைங்களுக்குப் போடச் சொல்ல மாட்டேமா? வெளியில வேலைக்கிப் போற நாம்ம மயங்கி வுழுந்துப்புடக் கூடாது பாரு. இத்து புள்ளைங்க வூட்டுல கெடக்குதுங்க. மயங்கி வுழுந்து கெடந்தாலும் வூட்டுக்குள்ளயே கெடக்குமுங்க. வெளியில பசியால மயங்கி வுழுந்தா யாருக்கும் அசிங்கம் சொல்லுங்க! ஒண்ணுமில்லாம கெடக்குறதா ஊருல நாலு பேரு பேசிப்புடுவாம் பாரு!" அப்பிடிம்பாரு பெரியவரு.
            அதுலயும் ராத்திரி சாமாஞ் செட்டுக எல்லாம் வாங்கியாந்து சமைக்கிறப்போ ராச்சாப்பாடு சாப்புட மணி பத்து பதினொண்ணு கூட ஆயிடும். புள்ளைக எல்லாம் பசியோடு காத்திருந்து காத்திருந்து ஒறங்கிப் போயிருக்கும். சாப்பாடு தயாரு ஆன்னா "முழிச்சிக்கிறது சாப்புடட்டும்! தூங்குன குட்டியோ காலையில பழையச் சோத்த சாப்புடட்டும்!"ம்பாரு பெரியவரு. சுப்பு வாத்தியாரு அப்போ வேலங்குடியில இருந்தார்ன்னா வுட மாட்டாரு. தூங்கிட்டுக் கெடக்குற புள்ளைங்கள எழுப்பி மடியில உக்கார வெச்சிக்கிட்டு ஊட்டி விடுவாரு. அந்தப் புள்ளைங்களும் தூக்கக் கலக்கத்துலயே சாப்புட்டுப்புட்டு அப்பிடியே தூங்கிப் போயிடுமுங்க. அப்பிடி சுப்பு வாத்தியாரு தூக்கி சோறூட்டி வளத்த புள்ளைங்கத்தாம் வேலங்குடியில இருக்குற அத்தனைப் புள்ளைங்களும். அதால அத்தனைப் புள்ளைங்களும் சுப்பு வாத்தியாரு மேல, மாமா மாமான்னு அம்புட்டுப் பாசமா இருக்குமுங்க.
            அதுல சந்தானம் அத்தானோட பாசம் ரொம்பவே அதிகம். அத்து அடிக்கடிச் சொல்லும், "எத்தினியோ நாளு மாமா இருக்குற சோத்தையெல்லாம் நமக்கு ஊட்டி வுட்டுப்புட்டு பட்டினியா கெடந்திருக்கு. யப்பா கூட மாமாவ திட்டும். அப்போ வெவரம் தெரியா வயசுல்ல. பசிக்கும். தாங்க முடியாது. மாமா வூட்டி வுடுறப்போ எல்லாத்தையும் வாங்கிச் சாப்பிடுடுவேம். மாமாவுக்கு இருக்காதேன்னு நெனைக்கத் தோணாது. மாமாவுக்கும் நமக்கு இருக்காதேன்னு நெனைக்கத் தோணாது. நமக்கு வவுறு முட்ட ஊட்டி வுட்டாத்தாம் அதுக்குத் திருப்திப்படும். அப்பிடி மாமா வளத்த புள்ளைங்க நாஞ்ஞ. அதால இஞ்ஞ வேலங்குடி வந்தா மாமாவ பாக்காம நம்மால போவ முடியாது!"ன்னு சொல்லும்.
            அத்தோட சுப்பு வாத்தியாரு வேலங்குடி போறப்பல்லாம் வெறுங்கையி, வீசுன கையா போவ மாட்டாரு. மிட்டாயி, பிஸ்கோத்து, இனிப்பு, காரம்ன்னு இருக்குற காசிக்கு கையி நெறைய வாங்கிட்டுத்தாம் போவாரு. வேலங்குடிக்குச் சுப்பு வாத்தியாரு வரார்ன்னா கொண்டாட்டமா போயிடும். பெரியவரே சொல்வாரு, "என்னாம்பீ! நீயி மாசத்துக்கு ஒரு தடவெ இப்பிடி வந்து ஒரு பழக்கத்தெ பண்ணி வுட்டுப்புடுறே. நாம்ம இருக்குற நெலமைக்கு தெனமும் இப்பிடி வாங்கியாந்து போட முடியுமா? நீயி போன பெறவு புள்ளைங்க முட்டாயி, பிஸ்கோத்துன்னு கேட்டு அடம் பண்ணுதுங்க. தாங்க முடியல. நீயி இந்தப் பழக்கத்தெ மொதல்ல வுட்டுப்புடணும்!" அப்பிடிம்பாரு.
            அந்த விசயத்தையும் சந்தானம் அத்தான் ஞாபவத்துல வெச்சுக்கிட்டு அடிக்கடி சொல்லும். "நாஞ்ஞ கெடந்தது பொட்ட கிராமம். எஞ்ஞளுக்கு ன்னா பிஸ்கோத்தப் பத்தித் தெரியும்? மாமாத்தாம் திருவாரூரு வந்து வர்றப்போ அஞ்ஞயிருந்து வாங்கியாரும். பிஸ்கோத்துன்னு ஒண்ணு இருக்குறதே அப்போ எஞ்ஞளுக்கு மாமா மூலமாத்தாம் தெரியும். ஒவ்வொரு தடவே வாரப்பவும் வெவ்வேறு பிஸ்கோத்தா வாங்கியாரும். புள்ளைங்க மேல அம்புட்டுப் பிரியமா இருக்கும். யம்மா, யப்பாவுக்கு எந்நேரமும் வேலையாத்தாம் இருக்கும். எஞ்ஞள அதிகம் தூக்கி வெச்சி வளத்ததே மாமாத்தாம். அத்து அப்பிடி தூக்கி வெச்சி வளர்த்ததப் பாத்துத்தாம் நாம்ம யக்கா பையனுங்கள சென்னைப் பட்டணத்துக்குப் போனப்ப அதே மாதிரிக்கித் தூக்கி வளத்தேம். அப்பிடி பாசத்தெ பக்குவத்தெ சொல்லாம சொல்லிக் கொடுத்தது மாமாத்தாம். யப்பா நம்மள சென்னைப் பட்டணத்துக்கு யக்கா புள்ளைகளப் பாத்துக்கிடணும்டான்னு சொல்லி அழைச்சிட்டுப் போனப்ப, என்ன நம்ம யப்பா இப்பிடிப் பண்ணுதேன்னு, நம்மள போயி கொழந்தைகளப் பாத்துக்கிட அனுப்புதேன்னு நெனைக்கல. நாம்ம மாமாவத்தாம் நெனைச்சிக்கிட்டேம்."ன்னு அத்து சொல்றப்ப அதோட கண்ணுங்க கலங்கிப் போவும்.
            சந்தானம் அத்தானுக்கு சுப்பு வாத்தியார்ங்றது ஆதர்சம். மாமங்காரனான சுப்பு வாத்தியார்ரப் பத்திப் பேசச் சொன்னா அது பாட்டுக்கு பேசிட்டே இருக்கும். "நீயி பாத்தின்னா நம்ம வூட்டுல எட்டுப் புள்ளைங்க, சின்னவரு வூட்டுல அஞ்சு புள்ளைங்க, கோவில் பெருமாள்ல மூணு புள்ளைங்க, பெறவு விருத்தியூர்ல ஆறு புள்ளைங்கன்னு கணக்குப் பாத்தா இருவத்து ரெண்டு புள்ளைங்க ஆவுதுல்ல. அத்தனைப் புள்ளைகளுக்கும் மாமங்காரனா, சித்தப்பாவா இருந்து மாமா அத்தனை தேவ திங்களையும் செஞ்சிருக்கு. எந்தப் புள்ளைகளையும் வுட்டுக் கொடுத்தது கெடையாது. இப்பிடிச் செலவாவுதேன்னு நெனைச்சது கெடையாது. கடன ஒடன வாங்கியாச்சியும் செஞ்சிருக்கு. ஒரு குடும்பமா பாக்குறப்போ அத்தனெ குடும்பத்தோடயும் சண்டை வழக்குன்னாலும் இன்னும் போயிட்டு வந்துக்கிட்டத்தாம் இருக்கு. ஆன்னா பாரு வேலங்குடியில நமக்கும் சித்தப்பா வூட்டுக்குமே பேச்சு அந்துப் போயிக் கெடக்குது. மாமா ரண்டு வூட்டுக்கும் போயிட்டும் வந்துட்டும் இருக்கும். அதாங் மாமா! அத்து எப்பிடி மாமா நீயி மட்டும் எல்லாத்துக்கிட்டேயும் போயிட்டும் வந்துட்டும் இருக்கே?"ன்னு சொல்லிக்கிட்டுச் சுப்பு வாத்தியாரைக் கட்டிப் பிடிச்சுக்கும். "அட வுட்றாம்பீ! இன்னும் சின்ன புள்ளையாட்டம்!"ன்னு நெளிவாரு சுப்பு வாத்தியாரு.
            டைரி அனுப்ப ஆரம்பிச்ச அந்த வருஷத்து சித்ரா பவுர்ணமிக்கு வந்தப்போ சந்தானம் அத்தான் சுப்பு வாத்தியார்கிட்டெ கேட்டிச்சி, "ன்னா மாமா! ஆபீஸூ ஆரம்பிச்சி டைரி போட்டு ஒமக்கு அனுப்பிச்சிருந்தேனே! எப்பிடி இருக்கு? ஒரு வார்த்தெ கூட சொல்ல மாட்டேங்றீயே அதெ பத்தி?"ன்னு.
            "அதெ ஏம்டாம்பீ கேக்குறே? ஒம் மாப்புள என்னவோ கதெ எழுதப் போறேம்ன்னு அதெ கொடுக்க மாட்டேன்னு எடுத்துக்கிட்டாம். நாம்ம அத்தெ சரியா கூட பாக்கலே. பாக்க வுட மாட்டேனுட்டாம்!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
            ஒடனே சந்தானம் அத்தான் விகடுவப் பாத்து, "ஏம்டா மாப்புள! இஞ்ஞ வா! கதெ எழுதுறீயாம்ல. கொஞ்சம் காட்டுப் பாப்பேம்!"ன்னுச்சு.
            "அதல்லாம் காட்ட முடியாது போ!"ன்னு ஓடப் பாத்தவனெப் பாத்து சந்தானம் அத்தான் இழுத்துப் புடிச்சி, "டைரி ஏம் டைரிதானே. அதெ எங்கிட்டெ காட்டணுமா இல்லியா? காட்டப் போறீயா இல்லியா?"ன்னுச்சு.
            "டைரிய எஞ்ஞளுக்கு அனுப்பிச்ச பெற்பாடு அத்து எஞ்ஞ டைரி. எஞ்ஞ டைரியா நாஞ்ஞ எதுக்குக் காட்டணும்?"ன்னாம் விகடு.
            சந்தானம் அத்தானுக்குச் சிரிப்பு வந்துடுச்சு.
            அதுக்கு அடுத்த வருஷத்துலேந்து சந்தானம் அத்தான் ரெண்டு டைரியா அனுப்ப ஆரம்பிச்சிது. ஒண்ணு சுப்பு வாத்தியாருக்கு, இன்னொன்னு விகடுவுக்குன்னு. ஆனா, விகடு ரெண்டு டைரியையும் தனக்குன்னு அத்து அனுப்பிச்சி ஒடனேயே எடுத்து வெச்சிப்பாம். சந்தானம் அத்தான் ஊருக்கு வர்றப்போ கேட்டா, "அதெ ஏங் கேக்குறேடாம்பீ! ரண்டையும் அவனெ எடுத்துக்கிடுறாம். கண்ணுல காட்ட மாட்டேங்றாம்!"ம்பாரு சுப்பு வாத்தியாரு.
            "அட போங்க மாமா! இன்னும் நாலு அனுப்புனாலும் ஒஞ்ஞ கைக்கு வாராது போலருக்கு. எல்லாத்தையும் அவனே எடுத்துப்பாம் போலருக்கு!"ன்னு அலுத்துக்கும் சந்தானம் அத்தான்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...