24 Apr 2020

மனசு போடும் ஆயிரம் முடிச்சு!

செய்யு - 428        

            விகடுவுக்குக் கொஞ்சம் வருத்தமாத்தாம் போச்சு, இப்பிடி பட்டுன்னு நீலதாட்சி அத்தாச்சி போனைக் கட் பண்ணிடுச்சேன்னு. அவ்வேம் வருத்தப்பட்டு யோசிக்கிறதுக்கு மின்னாடியே மறுபடியும் செல்போன் ரிங் அடிச்சிது. நீலதாட்சி அத்தாச்சித்தாம். செல்போன்ல பச்சை பட்டன அழுத்திட்டு காதுக்குக் கொண்டு போறதுக்குள்ள அத்தாச்சிப் பேசுனுச்சு, "சந்தானம் யத்தாம் பேசுனுச்சா?"ன்னு.
            "யில்ல யத்தாச்சி!"ன்னு ஒரு இழுப்ப இதுத்துப்புட்டு, "ஆன்னா நமக்குத் தெரியல யத்தாச்சி!"ன்னாம் விகடு.
            "நமக்குத் தெரியும்டா யம்பீ! சந்தானம் யத்தாம் பேசியிருக்கணும். அதாங் கலைச்சி வுட்டுருக்கணும். பேசிட்டு இருந்தப்பவே கட் பண்ணதுக்கு எதுவும் நெனைச்சுக்காதடா யம்பீ! நமக்கு அம்மாம் ஆத்திரமா வருது. இத்து சந்தானம் யத்தாம் வேலத்தாம்டாம்பீ! நமக்குத் தெரியும். நீயும் உண்மைய மறைக்கப் பாக்குறே?"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            விகடுவுக்குத் தலைய சுத்த ஆரம்பிச்சிச்சு. கிட்டதட்ட அந்த முடிச்சு மொட்டத் தலைக்கும் மொழங்காலும் போடுறாப்புலயே இருந்துச்சு. ஒங்களுக்கும் அப்பிடித்தாம் இருக்கும்.
            இப்போ கொஞ்சம் வெளியில போயிட்டு உள்ள வந்தாத்தாம் ஒங்களுக்கும் வெவரம் புரியும்
*****
            வேலங்குடி பெரியவருக்கு மலரு அத்தாச்சிக்குப் பெறவு பொறந்தது சந்தானம் அத்தாம். மூணு பொம்பளைப் புள்ளைங்க, அஞ்சு ஆம்பளைப் புள்ளைங்க வேலங்குடி பெரியவருக்கு. பள்ளியோடத்துக்குப் போவாம ஆத்துலயும், கொளத்துலயும் குளிச்சிக்கிட்டு, சேக்காளிகளோட சேவண்டி அடிச்சிட்டு ரகளப் பண்ணிட்டுக் கெடந்த சந்தானம் அத்தான கோவில்பெருமாள்ல நாகு அத்தை வூட்டுல கொண்டு போயி வேலங்குடி பெரியவரு விட்டதும், அங்க நாது மாமாகிட்டேயிருந்து கொஞ்சம், மித்த மித்த ஆளுகளோட ஒட்டிக்கிட்டுக் கொஞ்சம்ன்னு சந்தானம் அத்தான் தச்சு வேலயக் கத்துக்கிட்டுதும் நீங்க அறிஞ்ச சேதித்தாம்.
            அதுக்குப் பெறவு,
            மலரு அத்தாச்சிய சுப்பு வாத்தியாரு கட்டிக்கிடலன்னதும் வேலங்குடி பெரியவரு அவரோட நெருக்கமான ஒறவுமொறையில பாலு அத்தானுக்குக் கட்டிக் கொடுத்தாரு. பாலு அத்தான் ஐ.டி.ஐ. படிப்ப முடிச்சிட்டு சென்னைப் பட்டணத்துல கார்ப்பரேஷன்ல எலெக்ட்ரீஷியனா வேலையில இருந்தாரு. மலரு அத்தாச்சியக் கட்டிக்கிட்டு சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போயிட்டாரு பாலு அத்தான். சுப்பு வாத்தியாரு மலரு அத்தாச்சிய எதுக்காக நெனைச்சு கட்டிக்கப் பயந்தாரோ, அதுதாங் மலரு அத்தாச்சிக்கு கொழந்தைப் பொறந்துப்போ நடந்துச்சு. மொத பயெ காதுங் கேக்காம, வாயும் பேசாம கொறையா பொறந்தாம். அடுத்த வருஷமே ரெண்டாவது பயலும் அப்பிடியே பொறந்தாம். மலரு அத்தாச்சிக்கும் பாலு அத்தானுக்கும் பயம் வந்துடுச்சு. இப்பிடி ரெண்டு கொழந்தை பொறந்து, ரெண்டையும் பாத்துக்கிடறது செருமமா போனப்ப, வேலங்குடி பெரியவரு ஒதவிக்கு இருக்கட்டும்ன்னு கோவில்பெருமாள்ல வேலை கத்துக்கிட்டு இருந்த சந்தானம் அத்தான சென்னைப் பட்டணத்துல கொண்டு போயி விட்டுட்டு வந்தாரு. அப்பிடி மலரு அத்தாச்சியோட புள்ளைக ரெண்டையும் பாத்துக்கிடறதுக்காக சென்னைப் பட்டணம் போனதுதாங் சந்தானம் அத்தான்.
            இப்போ, மலரு அத்தாச்சியோட ரெண்டு புள்ளைகளையும் பாத்துக்கிறதுதாங் சந்தானம் அத்தானோட வேல. கார்ப்பரேஷன் வேலை போவ, மிச்ச நேரத்துல பாலு அத்தான் தனியா வேலைய எடுத்து சம்பாதிக்கும். அதுக்குக் கொஞ்சம் ஆளுகள வெச்சி அந்த வேலைய முடிக்கும். அப்பிடி முடிக்கிறப்போ பாலு அத்தான் சந்தானம் அத்தானையும் தொணைக்கு வெச்சிக்கும். வெளி வேலைக்குன்னு போறப்ப கூட மாட தொணைக்கு சந்தானம் அத்தானையும் அழைச்சிட்டு போவ ஆரம்பிச்சிது பாலு அத்தான். பாலு அத்தான் இருந்தது அரும்பாக்கத்துல. அரும்பாக்கம் நல்லா வளந்துக்கிட்டு இருந்த நேரம் அது. கார்பெண்டரு வேலைக்கும், எலக்ட்ரீஷியன் வேலைக்கு ஆளுங்க பத்தாக்கொறையா இருந்ததுல சந்தானம் அத்தானுக்கு எந்நேரமும் வேலை வந்து குவிய ஆரம்பிச்சிது. கொழந்தைங்க ரெண்டு பேரையும் பாத்துக்கிடற நேரம் போவ மித்த நேரங்கள்ல அங்க இங்கன்னு வேலைக்குப் போறது, நாலு பேத்துகிட்டெ பழக்கத்த உண்டு பண்ணிக்கிடுறதுன்னு வளத்துக்க ஆரம்பிச்சிது சந்தானம் அத்தான்.
            எத்தனை நாளுக்குத்தாம் பயலுகள வூட்டுலயே வெச்சிக்க முடியும். மூணு வயசக் கடந்தப்போ பள்ளியோடத்துல சேக்க வேண்டியதாப் போச்சு. கிராமம்ன்னா அஞ்சு வயசு வரைக்கும் புள்ளைக பள்ளியோடம் போறதெ தள்ளிப் போடலாம். சென்னைப் பட்டணத்துல அப்பிடித் தள்ளிப் போட முடியல. காது கேக்காத, வாயிப் பேச முடியாத இதுக்குன்னு இருக்குற பள்ளியோடத்துல சேக்க வேண்டியதாப் போச்சுது. அந்தப் புள்ளைகள பள்ளியோடத்துல கொண்டு போயி வுடறதுக்காகவே ஹீரோ பூச் வண்டிய ஒண்ணுத்தெ செகண்ட ஹேண்ட்ல சந்தானம் அத்தானுக்கு வாங்கிக் கொடுத்துச்சு பாலு அத்தான். காலையில புள்ளைக ரெண்டையும் பள்ளியோடத்துல வுடறதும், சாயுங்காலம் அழைச்சிட்டு வாரதும் அதோட முக்கியமான வேல. பள்ளியோடம் விட்டு வந்த பிற்பாடு அந்தப் பிள்ளைகள ராத்திரி தூங்குற வரைக்கும் சந்தானம் அத்தாம்தாம் பாத்துக்கிடணும்.

            புள்ளையோள பள்ளியோடத்துல விட்டது போவ, திரும்ப அழைச்சிட்டு வார்ற நேரத்துக்கு எடைபட்ட நேரத்தெ என்ன பண்றதுன்னு அங்க இங்கன்னு வேலைக்குப் போவ ஆரம்பிச்சிது சந்தானம் அத்தான். பாலு அத்தானோட கூட மாட போனதுல எலக்ட்ரீஷியன் வேலை அத்துப்படியாயிருந்துச்சு சந்தானம் அத்தானுக்கு. அத்தோட தச்சு வேலையும் கோவில்பெருமாள்ல இருந்த போது அத்துப்படியானதுல ரெண்டு வேல தெரிஞ்சதால வேல எந்நேரத்துக்கும் இருந்துச்சு சந்தானம் அத்தானுக்கு. அதாச்சி, ஒரு கையில தச்சு வேல, இன்னொரு கையில எலக்ட்ரீஷியன் வேல. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிறாப்புல இருந்துச்சு சந்தானம் அத்தானுக்கு.
            கிராமத்து தச்சு வேலைங்றது ஒரு மாதிரியாவும், பட்டணத்து தச்சு வேலைங்றது வேற மாதிரியாவும் இருக்கும். கிராமத்தெ வுட பட்டணத்துல வேல பாக்குறது ரொம்ப சுலுவு. அதுக்குக் காரணம் பட்டணத்துல மரச்சட்டம், மரப்பலவை கம்மியாத்தாம் பயன்பாட்டுல இருக்கும். ப்ளைவுட்டுத்துலத்தாம் பெரும்பாலான வேலை இருக்கும். மரச்சட்டத்துலயும், மரப்பலவையிலயும் இழைக்குறது, தொளை அடிக்கிறதுன்னு கொஞ்சம் மெனக்கெடுற‍ வேலை ப்ளைவுட்டுல இருக்காது. பலவைய ஒட்டி ஆணிய அடிச்சிட்டுப் போயிட்டே இருக்கலாம்.
            இழைக்குற வேலையே ப்ளைவுட்டுல கெடையாது. ப்ளைவுட்டே இழைச்சாப்புலத்தான இருக்கும். அத்தோட அதெ அறுக்குறதும், அளவா கணக்கெடுத்து இஷ்டத்துக்கு பெரிசாவோ, சின்னதாவோ எடுத்துக்கிடறதெல்லாம் ரொம்ப சுலுவா இருக்கும். இதே மரப்பலவைன்னா பெரிசாக்கணும்ன்னா பலவைய கோத்து ஆணிய  ரெண்டுக்கும் எடையில தச்சு தச்சு கோக்கணும். சிறிசாக்கணும்னா மெனக்கெட்டு அறுத்தா, ஒதுங்குற பலவை வீணாப் போயிடும். ப்ளைவுட்டுல அதெ சரியா கணக்குப் பண்ணி ரொம்ப சுலுவா முடிச்சிப்புடலாம். சைஸூக்குத் தகுந்தப்படியான ப்ளைவுட்டாவும் பாத்து அளவுக்கு ஏத்தாப்புல வாங்கிப்புடலாம். மரத்தெ அறுக்குறது, இழைக்குறதுன்னு எவ்வளவோ வேலை மிச்சம். ஆணிய போடுறதும் சுலுவு, அத்தோட பெவிக்கால்ல வெச்சி ஒட்டுற வேலதாம் அதிகங்றதால எல்லாமும் சுலுவு. மர தச்சுல வேல மொறைய தெரிஞ்சா ப்ளைவுட்டுல வேலையில பூந்து வெளையாடலாம். சந்தானம் அத்தாம் அப்பிடித்தாம் பூந்து வெளையாட ஆரம்பிச்சுது. அத்தோட ஒவ்வொரு வேலைக்கும் சரியா கணக்குப் பண்ணி ப்ளைவுட்டுக ரொம்ப ஒதுங்காம தெறமையா அதோட மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிது.
            ஒரு கட்டத்துல, காலையிலயும் சாயுங்காலத்துலயும் புள்ளைகள அழைச்சாந்து வுட்டு, ராத்திரி வரைக்கும் பாத்துக்கிட்டு வேலையையும் ஒத்த ஆளா அதால சரியா கவனிக்க முடியல. அந்த எடத்துலத்தாம் சந்தானம் அத்தாம் யோசிக்க ஆரம்பிச்சிது. வேற ஒரு ஆளுன்னா அக்கா குடும்பத்தெ நட்டாத்துல வுட்டு ஓடிப் போயிருக்கும். சந்தானம் அத்தான் வேற மாதிரி யோசிச்சிது. ஒத்த ஆளா இருக்குறவாசித்தான வேலைய சமாளிக்க முடியல, ரெண்டு மூணு ஆளுகளா இருந்தா சமாளிக்க முடியும்ன்னு. அந்த நேரத்துல அதுக்கு வயசு இருவதோ, இருபத்து ரெண்டோத்தாம் இருக்கணும். அந்த வயசுலயே துணிஞ்சி ரெண்டு பேர்ர வேலைக்கு வெச்சிக்கிட்டு. வேலைக்கு வெச்ச அவுங்க ரெண்டு பேத்துக்கும் எப்படியும் நாப்பது வயசுக்கு மேல இருக்கும். வாரத்துல சனிக்கெழம பொறந்தா சம்பளத்த கொடுத்துப்புடறதாவும், ஞாயித்துக் கெழமெ லீவுன்னும், தெனசரி பேட்டாவா அஞ்சு ரூவா காசியும் கொடுக்குறதா ரொம்ப தெகிரியமா ஆளெ வெச்சிக்கிடுச்சு. அதுவரைக்கும் வேலை செஞ்சு சேத்து வெச்சிருந்த காசிய வெச்சி தைரியமா இந்த வேலையத் தொடங்குனுச்சு சந்தானம் அத்தான். அங்கங்க வேலையப் பிடிக்கிறது, வேலைக்குன்னு முன்பணமா ஒரு தொகைய வாங்குறது, அதெ வெச்சி சாமாஞ் செட்டுகள வாங்குறது, ஆளுகளுக்குச் சம்பளத்தெ வாரக்கூலியா கொடுக்குறதுன்னு இந்த ரெண்டு ஆளுகள வெச்சி செமத்தியா வேலையச் சமாளிச்சிது சந்தானம் அத்தான். மலரு அத்தாச்சிப் புள்ளைகள கொண்டு போயி விட்டது போக இடைப்பட்ட நேரத்துல இதுவும் போயி வேலையப் பாக்கறதுன்னு ஆரம்பிச்சதுல எடுத்த ஒவ்வொரு ‍வேலையும் ரொம்ப வெரசா முடிய ஆரம்பிச்சிது.
            சந்தானம் அத்தான் ஆளுகள வெச்சிப் பாத்த வேலையில ஒரு விசயத்தெ சரியா புரிஞ்சிக்கிடுச்சு. ஒத்த ஆளா ஒழைச்சி ஒழைச்சி இந்த சென்மத்துல முன்னேற முடியாது, ஆனா, ஆளுகள வெச்சி சரியா வேலைய வாங்குனா செமையா முன்னேறலாங்ற சூட்சம் புரிஞ்ச பிற்பாடு அத்து வேலைய செஞ்சிக்கிறதெ கொறைச்சி அங்கங்க வேலைகளப் பிடிக்கி அதுக்கு ஏத்தாப்புல ரெண்டு பேத்த வெச்சி பாத்த வேலைய நெறைய பேரை வெச்சி பாக்க ஆரம்பிச்சிது. ஊர்ர வுட்டு ஓடி வந்தவேம், வேலை கெடைக்காம நின்னவேம்லாம் சந்தானம் அத்தானோட இலக்கானதுல அந்த மாதிரி ஆளுகள கொறைஞ்ச கூலிக்கு வெச்சி வேலையப் பாக்க முடிஞ்சிது.
            கிட்டத்தட்ட கான்ட்ராக்ட் வேலையப் போல வேலைய ஒரு எடத்துல பிடிச்சா, அதெ முடிச்சிக் கொடுக்குறதுக்குன்னு காசியக் கணக்குப் பண்ணி வாங்கிக்கிறது, வெரசா அந்த வேலையச் செஞ்சிக் கொடுக்குறதுங்ற அதோட திட்டம்  அதோட கையிக்குக் பணத்தைக் கொட்டோ கொட்டோன்னு கோட்ட வெச்சுது. அதுல ரொம்ப காசு பணம் மிச்சப்பட ஆரம்பிச்சிது சந்தானம் அத்தானுக்கு. ப்ளைவுட்டு, பெவிக்காலு, ஆணி, எலக்ட்ரிக் சாமான்னு வேலைக்கு தேவைப்படுற அத்தனை பொருட்களையும் மொத்தமா வாங்குறப்போ வெலை ரொம்ப கொறைய ஆரம்பிச்சிது. நெறைய வாங்க வாங்க அதுக்குன்னு ஒரு கமிஷன் கொடுக்க அதுல வேற காசு பொரள ஆரம்பிச்சிது. தொடர்ந்து வேலையக் கொடுக்குறப்போ சந்தானம் அத்தான் கொடுக்குறதுதாம் வாரக்கூலின்னு ஆச்சுது.
            வேலைய வெரசா முடிச்சிக் கொடுக்குறப்போ கேக்குற காசிய கொடுக்க ஆளுங்க தயாரா இருக்குறதைப் புரிஞ்சிக்கிட்ட சந்தானம் அத்தான் ராப்பகலா ஆளுகள வெச்சி வேலைய வாங்க ஆரம்பிச்சிது. சாயுங்காலம் ஆறு மணியில ஆரம்பிச்சி பதினோரு மணி வரைக்கும் வேலை பாத்தா முழுச்சம்பளம் தர்றதா சொல்லி ஒரு நாள்லயே காலையில போயி பதினோரு மணிக்கு வந்தா ரெண்டு சம்பளம்ன்னு சொல்ல ஆளுக போட்டிப் போட்டுக்கிட்டு வேலையப் பாக்க ஆரம்பிச்சாங்க. அத்தோட ஞாயித்துக் கெழமையில வேல பாத்தா ரெட்டைச் சம்பளமா தர்றதா சொல்லி வேலை வாங்குற அளவுக்கு காசுப் பணம் பொரள ஆரம்பிச்சிது சந்தானம் அத்தான் கையில.
            மலரு அத்தாச்சிக்கு மூணாவது ஆம்பளெ புள்ள பொறந்தப்போ அந்தப் புள்ளத்தாம் கொறையில்லாம இருந்துச்சு. அதுக்குள்ள மித்த ரெண்டு புள்ளைகளும் அஞ்சு வயசுக்கு மேல வளந்து கொஞ்சம் வெவரம் புரிஞ்சி நடக்க ஆரம்பிச்ச பிற்பாடு சந்தானம் அத்தானோட கவனிக்குற வேலையும் கொறைஞ்சிது. சந்தானம் அத்தான் பிடிச்சி பாக்குற வேலையக் கவனிக்க வேண்டியது அதிகமா போவ ஆரம்பிச்சிது. கார்பெண்டர்ரு வேலையைம், எலக்ட்ரீஷயின் வேலையையும் ஒண்ணா முடிச்சிக் கொடுக்குறவங்களுக்கு சென்னைப் பட்டணத்துல கிராக்கியே தனித்தாம். அந்தக் கிராக்கி அமையுறாப்புல சந்தானம் அத்தானோட வாழ்க்கையோட கட்டம் அமைஞ்சது அதோட அதிர்ஷ்ட்ம்ன்னு சொல்றதா? ஊர்ர வுட்டு பட்டணத்துக்குப் போறவேம் எப்படியும் பெரிசா வருவாம்ன்னு சொல்றதா?
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...