23 Apr 2020

குடும்பஸ்தா! ஒம் முடிவச் சொல்லு!

செய்யு - 427        

            அன்னிக்கு ராத்திரியே சென்னைப் பட்டணத்துலேந்து போன் வந்துச்சு விகடுவுக்கு. கார்த்தேசு அத்தான கட்டிக்கிட்ட அத்தாச்சி நீலதாட்சி பேசுனுச்சு. கார்த்தேசு அத்தாம்தாம் வேலங்குடி சின்னவரோட மூத்த மவ்வேன். ஏம் நீலதாட்சி அத்தாச்சிப் போனைப் போட்டு பேச நெனைக்குதுங்றது இந்நேரத்துக்கு ஒங்களுக்குப் புரிஞ்சிருக்கும். ஆயித்தாம் செல்போன எடுத்தாந்துக் கொடுத்தா. கொடுக்குறப்பவே, "ஒரு மணி நேரமா மாமாகிட்டே இப்பத்தாம் பேசிட்டு அடுத்ததா ஒஞ்ஞளுக்கு அடிக்கிறாங்க. மாமா முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பாத்து பதனமா பேசுங்க. ரிங் நின்னுடப் போவுது!"ன்னு சொல்லிட்டுத்தாம் கொடுத்தா.
            செல்போனோட பச்சை பட்டன அழுத்திட்டுக் காதுல வெச்சாம் விகடு. "யம்பீ! நாம்ம நீலதாட்சிப் பேசுறேம்டா. சவுரியமா இருக்கீயா? பொண்டாட்டி புள்ளே செளக்கியமா? யம்மா, யப்பா, தங்காச்சி எல்லாம் எப்பிடி? எல்லாம் சொகந்தானே?"ன்னு மூச்சு வுடாம பேசி நிறுத்துனுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "ம்!"ன்னு மட்டும்தாம் சொன்னாம் விகடு.
            "அத்து வந்துடா யம்பீ! காலையில மாமாவும் யத்தையும் வூட்டுக்கு வந்துப் ‍பேசுனதா பொன் பண்ணிப் பேசுனாங்க. அதுக்காகத்தாம் பேசுறேம்!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி. ஒரு இடைவெளி விட்டுச்சு. அந்த எடம் விகடு பேசுறதுக்காக விட்ட எடம். அவ்வேம் பேசல. காத மட்டும் தொறந்து வெச்சிக்கிட்டு வாயை மூடிட்டே இருந்தாம்.
            "என்னடாம்பீ! ஒண்ணுமே பேச மாட்டேங்றே?"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "அங்க அத்தாம், புள்ளைங்க எல்லாம் செளக்கியமா?"ன்னாம் விகடு.
            "எதாச்சிம் பேசணும்ங்றதுக்காக பேசுறீயா?"ன்னு பட்டுன்னு அடிச்சிச்சு நீலதாட்சி அத்தாச்சி. விகடுவுக்கு என்ன பேசுறதுன்னு புரியாம தடுமாறி நின்னாம்.
            "ஒங்கிட்ட வார்த்தைய வுட்டு வார்த்தைய வாங்க முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் என்னத்தாம் சொல்றேன்னுப் பாத்தேம். நானே விசயத்துக்கு வர்றேம். நாம்ம ன்னா சொல்றேம்ன்னா ஒங் குடும்பத்துக்கு இனுமே நீதாம் முடிவு எடுக்கணும். யப்பா காலம்லாம் முடிஞ்சிப் போச்சு. இப்போ வேலங்குடி குடும்பத்த எடுத்துக்கோ மாமால்லாம் இருந்தாலும் நம்மள கலந்துக்கிடாம ஒரு முடிவு எடுத்துக்கிடல. ஒங்கிட்டெ பேசுனும்ணாலும் அவுங்க அத்தாம் பேசல பாரு. நம்மகிட்டெ கொடுத்து நீந்தாம் பதமா பேசுவேன்னு கொடுத்துப் பேசச் சொல்றாங்க. ஏன்னா ஒரு விசயத்தெ எப்பிடி அணுகணுங்றது படிச்ச நமக்குத்தாம் புரியும். அதுவும் இந்தக் காலத்து ஆளுகளான நமக்குத்தாம் புரியும். அதாங் ஒன்னய நம்பி ஒங்கிட்டெ பேசுறேம். யப்பா இன்னும் பழைய காலத்துலயே இருக்காங்க. காலம் மாறிப் போச்சு. நாம்ம ஒரு முடிவு எடுக்க வேண்டிய காலத்துல இருக்கோம். அவுங்க பழையக் காலத்து ஆளுங்க அப்பிடித்தாம் இருப்பாங்க. நம்மள மாதிரி ஆளுங்கத்தாம் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கணும். சரிதான்னே நாம்ம சொல்றது?"ன்னு ஒரு கேள்வியக் கேட்டு நிறுத்துனுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            விகடு பதிலு ஒண்ணும் சொல்லாம மெளனமாவே இருந்தாம். "ஒங்கிட்டெ இதாம்டாம்பீ பெரச்சனெ. எதெப் பேசுனாலும் பட்டு பட்டுன்னு பதில பேச மாட்டே. நாம்ம யாருடா? ஒந் அத்தாச்சி. நீயி தப்பா பேசுனாலும் தப்பா எடுத்துக்கிட மாட்டேம். நீயி மனசு தொறந்துப் பேசு. நாம்ம சொல்றது சரியா? தப்பா?"ன்னு மறுக்கா கேட்டுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "சரியா? தப்பா?ன்னுல்லாம் தெரியல யத்தாச்சி. இஞ்ஞ வூட்டப் பொருத்த வரைக்கும் யப்பத்தாம் முடிவு. அவுங்க எடுக்குறதுதாங் எல்லாம்!" அப்பிடின்னாம் விகடு.
            "நெனைச்சேம்டாம்பீ! நீயி இப்பிடித்தாம் பேசுவேன்னு. அப்பிடியேத்தாம் பேசுறே! ஒண்ணும் தப்பில்லே. விருத்தியூரு ஒஞ்ஞ வகையறாவோட வார்ப்பு அப்பிடித்தாம் இருக்கும்ன்னு நமக்கும் தெரியும். இஞ்ஞ வேலங்குடியிலயும் ஒஞ்ஞ மாமா முடிவுதாம். இருந்தாலும் நம்மள கலந்துக்கிடாம ஒரு முடிவெ எடுக்க மாட்டேங்க. அது மாதிரித்தாம் அஞ்ஞயும் இருக்கும்னு நெனைச்சேம். எலே யம்பீ! ஒமக்கும் கலியாணம் ஆயி கொழந்த குட்டியாயிடுச்சு. ஒம் முடிவையும் கேக்கணும்டாம்பீ! கேக்காட்டியும் ஒங் கருத்து என்னாங்றதெ சொல்லணும். அத்தெ ஏத்துக்கிடுறாங்க யில்ல அத்து வேற சங்கதி. நீயி ஒங் கருத்து என்னவோ அத்தெ சொல்லணும். நீயும் ஒரு குடும்பஸ்தன் ஆயிட்டியோ யில்லே! என்னடாம்பீ! நாம்ம சரியாத்தானே பேசுறேம்?"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "நமக்கு சரி தப்புங்றதுல்லாம் தெரியல அத்தாச்சி. நம்ம சங்கதி ஒஞ்ஞளுக்குத் தெரிஞ்சதுதாம். யப்பா யம்மா பாத்தப் பொண்ணுதாம். தாலியக் கட்டுனேம்."ன்னாம் விகடு.
            "பெறவு, இஞ்ஞ மட்டும் என்னவாம்? ஒஞ்ஞ மாமாவும் அத்தையும் வந்து நம்மள பாத்தாங்க! கட்டுறா தாலியன்னு ஒஞ்ஞ அத்தாங்கிட்டெ சொல்ல அவுங்க கட்டுனதுதாம். நம்மள ன்னா ஒஞ்ஞ அத்தாம் இழுத்துக்கிட்டா வந்தாரு? அதல்லாம் சரிதாம்டாம்பீ! அதெ சொல்ல வரல நாம்ம. ஒனக்கும் குடும்பத்துல முக்கியம் ஒண்டா இல்லீயா? அதெ கேக்குறேம் நாம்ம!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "அதையல்லாம் நாம்ம யோசிக்கிறது யில்ல அத்தாச்சி!"ன்னாம் விகடு.

            "ன்னாடாம்பீ! வயசுக்கு ஏத்த பேச்சா பேசுறே? செரி வுடு! நாம்ம நேரடியாவே விசயத்துக்கு வர்றேம். தாஸூ அத்தான ஒனக்குப் பிடிச்சிருக்கா ன்னா? அதெ சொல்லு!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "கார்த்தேசு அத்தாம்லேந்து தாஸூ அத்தாம் வரைக்கும் எல்லாத்தையும் நமக்குப் பிடிக்கும் யத்தாச்சி!"ன்னாம் விகடு.
            "இதுலல்லாம் ந்நல்லா வெவரமாத்தாம் பேசுறே! அந்த ரத்தம்! விருத்தியூரு ரத்தம் அப்பிடித்தாம் பேசுவீயே. அதெ ஒண்ணும் பண்ண முடியாது. ஒமக்குத் தெரியாதது யில்லே. அத்து தாஸூ இருக்குல்ல அத்து  மாமா பொண்ணுன்னு ஒந் தங்காச்சி மேல உசுரையே வெச்சிருக்கு. இப்போ கொஞ்ச நேரத்துக்கு மின்னாடித்தாம் பாரீன்லேந்து போன்ல பேசுனுச்சு நமக்கு. ரொம்ப ஒடைஞ்சிப் போயிட்டுடா யம்பீ! ஒண்ணும் ஒன்னய ஒந் தங்காச்சிக்கு சாதிய மாறி, கொலம் கோத்திரத்த மாறில்லாம் கலியாணத்தெ பண்ணி வையுன்னு சொல்ல. ஒரே சாதித்தாம். ஒரே கோலம்தாம். ஒரே கோத்திரம்தாம். ஒறவு மொறைத்தாம். கட்டிக்கிறதுக்கு எல்லா உரிமையும் வருது. அதால கேக்கறதுல ஒண்ணும் தப்பில்லன்னு நெனைக்கிறேம்! யில்லே ஒம் மனசுல எதும் கொறைப்பாடு இருந்தா சொல்லிடுப்பா! மேக்கோண்டு நாம்ம பேசல!" அப்பிடினுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "கொறைபாடுல்லாம் ஒண்ணுமில்லே யத்தாச்சி! யப்பா வேணாங்றாங்க! அத்து ஒண்ணுத்தாம் விசயம்!"ன்னாம் விகடு.
            "அதெத்தாம்டாம்பீ! நாம்ம சொல்றேம். வேணாங்றதுக்கு ன்னா காரணம் இருக்கு? யப்பா சொல்றதெல்லாம் ஒரு காரணமே யில்லடாம்பீ! எந் தங்காச்சிக் கூட கலியாணம் ஆவாம ரொம்ப வருஷம் இருந்துச்சு. தாஸூக்குக் கட்டி வைக்கணும்னு ஒத்தக் கால்ல நின்னேம். ஆன்னா அத்து இந்திந்த மாதிரி விசயம், நாம்ம மாமாப் பொண்ண விரும்புறேம்ன்னு சொன்னதுக்குப் பெறவு விட்டுப்புட்டேம். இப்போ எந் தங்காச்சிக்கும் கலியாணம் ஆயிடுச்சுடா யம்பீ! கொஞ்சம் மின்னாடி தெரிஞ்சிருந்தாலும் எந் தங்காச்சியக் கட்டி இஞ்ஞ சென்னைப் பட்டணத்துலயே வெச்சிப்பேம், ஏங் கொழுந்தா நீயி மவராசனா போயி பாரீன்லேந்து சம்பாதிச்சி வாடான்னு. அதெயும் வுட்டுப்புடுறாப்புல ஆயிடுச்சு, அஞ்ஞ அப்பிடியிருந்த நெலமையாலே. இப்போ தும்பையும் வுட்டு, வாலையும் வுட்டு ரெண்டு கெட்டாங் நெலமையில இருக்கேம்டா யம்பீ! நீயி முடிவு பண்ணா சரியா இருக்கும். நாம்ம பேசுறதுல ஏதும் தப்பு இருக்கா ன்னா?"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி மறுக்கா மறுக்கா ஒரு சொழல்ல வெச்சு குத்துறாப்புல.
            "யப்பா முடிவுதாங் யத்தாச்சி!"ன்னாம் விகடு.
            "செரி! இருந்துட்டுப் போவட்டும். யப்பா முடிவாவே இருந்துட்டுப் போவட்டும். நீயி ஒம் முடிவுல எதுவும் பண்ண வாணாம். அவுங்க முடிவாவே இருக்கட்டும். நீயிப் போயி ஒம்மட யத்தாச்சிக்காக பேசிப் பாரு. நம்மள கூட வுட்டுப்புடு. தாஸூ அத்தானுக்காகப் போயிப் பேசிப் பாருடா எங் கண்ணு. பாவம்டா தாஸூ யத்தாம்! நீயி யப்பாகிட்டெ பேசுனா நிச்சயம் மனசு மாறுவாருடாம்பீ!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "நாம்ம இதுல பேசுறதுக்கு ன்னா இருக்குன்னு புரியல அத்தாச்சி. ஒண்ணு எந் தங்காச்சி நமக்கு ஒருத்தரு பிடிக்குது, அத்து தாஸூ அத்தானுன்னு யில்ல, அத்து வேத்துச் சாதி பையனா இருந்தாலும், வேத்து மதத்துப் பையனா இருந்தாலும் நாம்ம பேசலாம். பேசுறதுக்கு அஞ்ஞ எடம் இருக்கு. தங்காச்சி விருப்பப்படி கலியாணத்தெ பண்ணி வையுங்க, யில்ல நாம்ம முன்ன யிருந்து நாம்ம பண்ணி வைப்பேம்ன்னு பேசுவேம் யத்தாச்சி. அவ்வே ன்னான்னா நம்மள மாதிரியே யப்பா முடிவுதான்னு நிக்குறா. நீஞ்ஞளா யார்ரப் பாத்து கழுத்தெ நீட்டச் சொல்றீங்களே அவுங்களுக்குக் கழுத்தெ நீட்டுவேம்ங்றா. இதுல நாம்ம தலையிட எஞ்ஞ எடம் இருக்கு? நாம்ம இந்த விசயத்துல ரண்டு எடத்துல நொ‍ழையலாம். ஒண்ணு தங்காச்சி விரும்புதுங்ற ஒரு எடம். இன்னொண்ணு யப்பா இந்தப் பையனத்தாம் கட்டிக்கிடணும்னு சொல்ற எடம். அந்த ரெண்டு எடமுமே நொழைய முடியாத எடமா இருக்குறப்ப நாம்ம எப்பிடி யத்தாச்சி இதுல உள்ளார நொழைஞ்சி பேசுறது?"ன்னாம் விகடு.
            "யே யப்பா! இம்மாம்லாம் பேசத் தெரியுமா எந் யம்பீக்கு? வேத்துச் சாதின்னாலும், வேத்து மதம்ன்னாலும் தங்காச்சி விரும்புனா பண்ணி வைப்பேங்றீயேடாம்பீ! ஆன்னா நீயி சொன்னபடிக்குச் சேய்வே. எதெ சொல்றீயோ அதத்தாம் செய்வே. செய்யுறதத்தாம் சொல்வே. அத்து நமக்குத் தெரியும். வேத்துச் சாதி பையேனுக்கு, வேத்து மதத்துப் பையனுக்கு வரிஞ்சிக் கட்டிட்டுப் பேசுவேம்னு சொன்னீல்லே, அத்தே ஏம்டாம்பீ ஒம்மட யத்தானுக்காகக் கொஞ்சம் பேசக் கூடாதுன்னு கேக்குறேம்? நாம்ம ன்னா தப்பாவா கேக்குறேம்? சொல்லுடாம்பீ!"ன்னுச்சு நீலதாட்சி யத்தாச்சி.
            "யத்தாச்சி தயவுபண்ணி ஒண்ணுத்தெ புரிஞ்சிக்கிடணும். நீஞ்ஞ கேக்குறதுல எந்தத் தப்புமில்லே. ஒஞ்ஞ நெலையில நீஞ்ஞ சரியா நடந்துக்குறீங்க. சரியா நின்னு பேசுறீங்க. ஆன்னா பேசுறதுக்கு நமக்கு எடம் வேணுங்றதெ ரொம்ப கவனமா தாட்டி வுட்டுப்புட்டுப் பேசுதீயளே!"ன்னாம் விகடு.
            "நீயி பேச மாட்டே. பேசுனீன்னா ரிவிட்ட வெச்சு அடிச்சாப்புலத்தாம் பேசுவேம்ன்னு ஒங்கிட்டெ பேசுறதுக்கு மின்னாடியே சொன்னாரு யத்தாம். அதாங் அவரு பேயாம நம்மளப் பேசச் சொன்னாரு. இந்தாருடாம்பீ ஒம்மட மாதிரியெல்லாம் புரட்சித்தனமா வேற சாதிக்காக, வேற மதத்துக்காக பேசுறதுல்லாம் நமக்குத் தெரியாதுடாம்பீ. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் நம்ம குடும்பம், நம்ம சனங்க, நம்ம ஒறவுக்காரவுங்க மட்டும்தாம்டாம்பீ! பாத்து எதாச்சிம் பண்ண முடியும்ன்னா பண்ணி வுடுடாம்பீ! ஒமக்குக் கோடி புண்ணியமா போவும்!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            விகடு அதுக்குப் பதிலெச் சொல்லாம மவுனமா இருந்தாம்.
            "இன்னும் ஒரு மணி நேரத்துக்கு வேணும்னாலும் பேசலாம். நீயும் எடைஎடையில இப்பிடிப் பேயாம மெளனமா இருக்கலாம். யில்ல பெரிசா தத்துவத்தெ பேசலாம். அத்து யில்ல விசயம். முடிவா சொல்றதே சொல்லு!"ன்னுச்சு
            "தப்பா நெனைச்சுக்காதீங்க யத்தாச்சி! யப்பாவோட முடிவுதாங்!"ன்னாம் விகடு.
            "அதாங் ஏம்ன்னு கேக்குறேம்? யப்பா சொல்றாங்க நாம்ம பேசுனப்போ, ஒறவு மொறையில கலியாணத்த பண்ணா கொழந்தை கொறையா பொறக்கலாம்னு. எந்தக் காலத்துல யிருக்காங்கடாம்பீ யப்பா? அதுக்குல்லாம் சோதனெ பண்ணி ஊசிய போடுற அளவுக்கு விஞ்ஞானம் வளந்தாச்சுடாம்பீ! அதுதாங் கொறைன்னா அத்தெ செரி பண்ணலாம். அத்து ஒண்ணாச்சா! ரெண்டு வெளிநாடு போறது பெரச்சனைன்னா இஞ்ஞ நம்ம பக்கத்துல வூட்டோட மாப்புள்ளையா அனுப்பி வுடுறதுக்கும் இஞ்ஞ யத்தாம் ரெடியா இருக்காரு. வேறென்ன கொறைன்னு சொன்னா அதையும் சரி பண்ணி வுட நாஞ்ஞ தயார்ர நானும் யத்தானும் இருக்கேம். யத்தையப் பத்திச் சொல்ல வேண்டியதில்லே. அத்து ஒம் மேலயும் செய்யு மேலயும் உசுரையே வுடும். நாம்ம ஒண்ணும் அதெ பத்தி புதுசா சொல்றதுக்கில்லே. இப்போ சொல்லு ஒம்மட முடிவெ? யாம்மாம்! ஒம்மட முடிவெ சொல்லு!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            "யப்பா முடிவுதாங் யத்தாச்சி!"ன்னு விகடு சொன்னாம் பாருங்க, சட்டுன்னு ஒடனே, பட்டுன்னு போனை கட் பண்ணிடுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...