22 Apr 2020

ஒம் பொண்ணாலயே கஷ்டப்படுவே!

செய்யு - 426        

            "ச்சும்மா எல்லாத்திலயும் நைய்ய நைய்ய நொய்ய நொய்யன்னு ஒரு பதிலச் சொல்லறாப்புல நிக்காதடாம்பீ! நீயி ஒம் பொண்ண சரியா வளத்துருக்கே. நாம்மத்தாம் எந் தம்பீயான ஒன்னய சரியா வளக்காம வுட்டுப்புட்டேம்! ஒம் பொண்ணு தெளிவா ஒரு பதிலெச் சொல்லிப்புட்டா! யப்பங்கார்ரேம் சொல்றதுதாம் பதிலுன்னு. அதால நீந்தாம் இப்ப ஒரு பதிலெச் சொல்லணும். நாம்ம ஒண்ணும் மொறையில்லாம கேக்கல. ஒம் பொண்ணு எம் பையனுக்கு கேக்குறதுக்கு உரிமெ இருக்கு. நீயிச் சம்மதிக்கலன்னாலும் தூக்கிட்டுப் போறதுக்கும் நமக்கு எல்லாமும் இருக்கு. இப்பிடித் தேங்கி தேங்கி நிக்குறதுல புண்ணியமில்லே. ஒம் பதில நறுக்குத் தெரிச்சாப்புல சொல்லு!" அப்பிடினிச்சு சுப்பு வாத்தியாரு மின்னாடி வந்து நின்ன ரசா அத்தை.
            "வெளிநாட்டு மாப்புள்ளைக்கிப் பொண்ண கொடுக்க முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு என்னவோ யாருக்கோ ஒரு பதிலச் சொல்றாப்புல சுவத்தைப் பாத்துக்கிட்டு.
            ரசா அத்தைக்கித் தூக்கி வாரிப் போட்டாப்புல ஆயிடுச்சு. "ஏம்டா யம்பீ! நாம்ம மொத மொதலா யத்தாம் மூலமா கேட்டப்ப வெளிநாட்டு மாப்புள்ளங்றது தெரியலீயா? அப்பவே ஒரு பதிலெ சொல்லி தாட்டி வுட்டுருக்கலாமே?"ன்னு கேட்டுச்சு ரசா அத்தை.
            "நாம்ம அப்ப ஒண்ணுத்தையும் பதிலா சொல்லலையே. பேசாமாத்தான நின்னேம்!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு இப்பவும் மொகம் கொடுக்காம.
            "பேசாம நின்னா... அதுக்குச் சம்மதமுன்னு அர்த்தமில்லையா?"ன்னுச்சு ரசா அத்தை.
            "மனசு நோகுறாப்புல எந்தப் பதிலையும் சொல்ல வாணாம்னும் அதுக்கு அர்த்தம். நாம்ம இம்மாம் தாமசம் பண்றப்பவே நீஞ்ஞ புரிஞ்சிருப்பீங்கன்னு நெனைச்சேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "மண்ணாங்கட்டி! புரியாத்தனமா பேசாதடா யம்பீ! வெளிநாட்டு மாப்புள்ளன்னா பயணத்துலேந்து திரும்புன பெற்பாடு நீயே வூட்டோட மாப்புள்ளையா வெச்சுக்கோ. நமக்கொண்ணும் அட்டியில்ல. எம் புள்ளைக்கி என்ன கொறைச்சலுன்னு நொட்டாந்தனமா ஒரு காரணத்தெ சொல்றே?"ன்னு ரசா அத்தை.
            "பாடுனவேம் வாயி ச்சும்மா இருக்காது. ஆடுனவேம் காலு ச்சும்மா இருக்காது. சொரியுறவேம் கையும் ச்சும்மா இருக்காது. அத்து போல வெளிநாடு பயணம் போயிட்டு வந்தவனோட இருப்பும் நெலையா ஒரு எடத்துல இருக்காது. ச்சும்மா ச்சும்மா முனுக்கு முனுக்குன்னு வெளிநாடு போயிட்டுத்தாம் இருப்பாம். அவனெ நிப்பாட்ட முடியாது. கொழந்த குட்டி பொண்டாட்டியல்லாம் அவ்வேம் கண்ணுக்குத் தெரியாது. பொண்ண கலியாணத்தப் பண்ணிக் கொடுக்குறது வூட்டுல ஒரு நெலையா இருந்து சந்தோஷமா பாத்துக்கத்தாம். இப்பிடி வுட்டுப்புட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டுக் கெடக்குறதுக்கில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "டேய் யம்பீ! வாணாம்ன்னா இந்தப் பயணத்தோட நிறுத்திக்கிடுவாம்டா! வேலங்குடியிலயே ஒரு பட்டறையப் போட்டுக்கிட்டு இருந்துப்பாம்டா! அதுக்காகவல்லாம் வாணாம்னு சொல்லதடா யம்பீ!"ன்னுச்சு ரசா அத்தை.
            "இதெல்லாம் இப்போ கலியாணம் ஆவுறதுக்காக சொல்றது யக்கா! ஒம்மட ரண்டாவது பொண்ணோட நெலமெயேச் சொல்லு! அப்பிடித்தாம் ஆவும் எம்மட பொண்ணோட நெலமையும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "செரிடாம்பீ! அதுக்கென்னடா பண்றது? அவரு வெளிநாடு போயிச் சம்பாதிக்கிறதுல குறியா இருக்காரு. அதுக்காக ரெண்டாவது பொண்ண வுட்டா புட்டேம். நாமளும் யத்தானும் போயி பாத்துக்கிட்டுத்தானே கெடக்குறேம்!"ன்னிச்சு ரசா அத்தை.
            "அதாங் யக்கா! அப்பிடியொரு நெலமெ எம் பொண்ணுக்கு வாணாம்ன்னு நெனைக்கிறேம், நாம்ம ஓடியாந்து வந்து வந்து பாத்துக்கிடற மாதிரி!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யில்லடா யம்பீ! வேற எதையோ நீயி மனசுல வெச்சிக்கிட்டுப் பேசுறே. அண்ணனுக்கும் ஒனக்கும் பாகப் பிரிவினைன்னு வந்தப்போ யத்தாங் ஒம் பக்கம் நிக்கலேங்றதுக்காக பேசுறே. வந்து பேசுங்க யத்தாம்ன்னு அப்போ நீயி சொன்னப்போ இதெல்லாம் பேசிட்டு நம்மட வூட்டுப்பக்கம் வாராதேன்னு சொன்னாரே யத்தாம். அதெ நெனைப்புல வெச்சிக்கிட்டுப் பேசுறே. உண்மெ அதாங். எதையோ ஒம்மட மனசுல போட்டு உளப்பிக்கிட்டு அதுக்குத் தகுந்தாப்புல பேசுறே! நமக்குத் தெரியுதுடா யம்பீ!" அப்பிடினிச்சு ரசா அத்தை.
            "அதெல்லாம் ஒண்ணுமில்ல யக்கா! அத்து எப்பவோ நடந்தது. அதுக்குப் பெறவு ஒம் மவனோட கலியாணத்துக்கு வந்து நிக்கலையா? மவள்களோட கலியாணத்துக்குல்லாம் வந்து நிக்கலையா? நீயி ரொம்ப நெருக்கடிக் கொடுத்து கேக்குறதுல சொல்றேம்! ஒனக்குத் தெரியாதது யில்லே. பெரியவரோட பொண்ண நமக்குக் கேட்டப்பவே நாம்ம முடியாதுன்னுட்டேம். அதுல பெரிய அத்தானுக்கும் நமக்கும் கொஞ்ச நாளு மனவருத்தம்தாம். ஏன்னா நெருங்குன சொந்தத்துல கலியாணத்தெ வெச்சிக்கிறப்ப பொறக்குற புள்ளைங்க குறையோட பொறந்தா அதெ காலத்துக்கும் நாம்மத்தாம் சொமக்க வேண்டிக் கெடக்கும். அப்பிடித்தானே ஆனுச்சு பெரியவரோட பொண்ணு நாம்ம வாணாம்னு நெருங்குன சொந்தத்துல கட்டிக் கொடுத்து. நாம்ம கண்ணால பாத்த சம்பவம்தானே அத்து. அதெல்லாம் வாணாம்னு பாக்குறேம். அதாலத்தாம் நம்மட மவனுக்கே சொந்தத்துல பாத்து பண்ணல. ஒண்ணு, தாஸூம் வெளிநாட்டுல இருக்காம். ரெண்டு, ஒறவும் நெருங்குன ஒறவா போவுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யேய் யம்பீ! கொஞ்சம் மனசாட்சியோட பேசுடாம்பீ! அவ்வேம் வயசு ன்னா இப்போ? முப்பத்தாறு ஆவப் போவுது. இத்தனெ நாளும் ஒம்மட பொண்ணுக்காகவே காத்துட்டு இருந்துட்டாம். இப்போ போயி அந்தப் பொண்ணு ஒனக்கில்லே, இன்னொரு பொண்ண பாத்துக் கட்டி வைக்கிறேம்ன்னு சொன்னா அவ்வேம் மனசு ன்னாடா ஆவுறது? கொஞ்சம் கருணெ காட்டுடா யம்பீ! ஒரு தம்பிக்கார்ரேங்கிட்ட ஒரு யக்கா இந்த அளவுக்கு எறங்கிக் கேக்கக் கூடது. ஆனாலும் எறங்கிக் கேக்குறேம். நீயி நெனைக்கிறபடியெல்லாம் ஒண்ணும் ஆவாது. உஞ்சினி ஐயனாரு இருக்காரு. ஒரு கொறையும் வாராது. வேணும்ன்னா சொல்லு எல்லாரும் குடும்பத்தோட போயி உஞ்சினி ஐயனாருக்கு படையல போட்டுட்டு வந்த பிற்பாடு மிச்சத்தெ செய்வேம்!"ன்னுச்சு ரசா அத்தை.

            "யில்ல யக்கா! நீயி எத்தனெ மொறை கெட்டாலும் எம் முடிவுல மாத்தம் யில்லே. இப்போ ன்னா ஒனக்கு செருமம்? இப்பத்தாம் கவர்மெண்டு மாப்புள்ளன்னாலும், வெளிநாட்டு மாப்புளன்னாலும் பொண்ண கொடுக்குறதுக்கு ஆளா பறக்குறாம் அவனவனும்."ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ந்நல்லா பேசுதீயேடா யம்பீ! அந்தக் கதெல்லாம் நமக்குத் தெரியும். நீயிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லே. கடெசியா கேக்குறேம். ஒரு வயித்துலப் பொறந்து ஒரு தாயிகிட்டெ பாலக் குடிச்சோங்ற உரிமையில கேக்குறேம். ஒம் பொண்ண எம் மவனுக்குக் கொடுடா யம்பீ!"ன்னு முந்தானையா விரிச்சி பிச்சைக் கேக்குறாப்புல கேட்டுச்சுப் பாருங்க ரசா அத்தை. எல்லாத்துக்கும் கண்ணு கலங்கிடுச்சு.
            சுப்பு வாத்தியாருக்கும் கண்ணும் கலங்கித்தாம்‍ போச்சு. கண்ணுலத்தாம் கலக்கமே தவிர, அவரோட மனசுல எந்தக் கலக்கமும் இல்லேங்றதெ, "யில்லக்கா! முடியாதுக்கா!" அப்பிடின்னு சொன்னதெ வெச்சி தெரிஞ்சிக்க முடிஞ்சிது. சொல்லிட்டு அந்த எடத்துல அவரு நிக்கல. அவரு பாட்டுக்குக் கெளம்பிக் கொல்லைப் பக்கம் வேக வேகமா போனாரு. ரசா அத்தையும் அப்பிடியே கொல்லைப் பக்கம் அவருக்குப் பின்னால வேக வேகமா போனுச்சு. அதெ பாத்துப்புட்டு எல்லாரும் வேக வேகமா பின்னால போனா, கொல்லைப் படிக்கட்டுகிட்டெ நின்னு அதெ தாண்டி அந்தாண்ட போயிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு காதுல விழுறாப்புல பேசுனுச்சு ரசா அத்தை.
            "டேய் யம்பீ! ஒம் பொண்ண தர மாட்டேங்றதுக்காக அசந்து போயி ஒஞ்சிப் போயி நின்னுடுவேம்ன்னு மட்டும் நெனைக்காதே. அவ்வேம் பயணத்துல திரும்புறத்துக்குள்ள இஞ்ஞ ஒரு பொண்ண பாத்து ரெடியா வெச்சி, அவ்வேம் திரும்புன ஒடனே கலியாணத்தெ பண்ணி வெச்சி அந்தக் கலியாணத்துக்கு ஒனக்கும் அழைப்பு வைக்கலன்னா பாருடா யம்பீ யேய் யம்பீ! சினிமா பாட்டுல பாடுனாம்லடா அண்ணேம் என்னடா யம்பீ என்னடான்னு. நீயி நிரூபிச்சிப் புட்டேடா. இத்தனெ நாளும் நீயில்லாம் தம்பியா இருக்கேங்ற நம்பிக்கையிலத்தாம் இருந்தேம்டா. இன்னிக்கு அந்த நம்பிக்கையெல்லாம் உதுத்துப் போச்சு. ஒரு வவுத்துல பொறந்தா ன்னா? வாயும் வவுறும் வேறங்றதெ நிரூபணம் பண்ணிப்புட்டேல்லடா! மனசு வேகுதடா நமக்கு. வவுறு எரியுதுடா! என்ன கெதிக்கு நீயி நிக்கப் போறேங்றதெ காலம் ஒனக்குச் சொல்லும்டா! ஒம் பொண்ணாலயே நீயி என்ன கதிக்கு நிக்குறேன்னு நாம்ம பாக்குறேமா இல்லியா?"ன்னுச்சு ரசா அத்தை.
            அதெ கேக்க கேக்க வெங்கு வேக வேகமா ஓடியாந்து, "அப்பிடில்லாம் சொல்லாதீங்க அத்தாச்சி!"ன்னு சொல்லி ரசா அத்தையோட வாயைப் பொத்துனுச்சு. பொத்திப்புட்டு,  "வாஞ்ஞ வந்து உக்காருங்க. ஒரு வாயித் தண்ணியக் குடிங்க! ஏட்டி ஆயி லோட்டாவுல தண்ணிய கொண்டாயேம்டி!"ன்னு சத்தத்தெ கொடுத்துச்சு.
            ரசா அத்தை அதுக்கு மேல எதுவும் பேசல. வெங்கு பிடிச்சிட்டு இருந்த பிடிய விட்டு உருவிக்கிட்டு கெளம்புனுச்சு. கூடத்துல உக்காந்திருந்த புருஷங்காரரப் பாத்து, "பேசிப் புண்ணியமில்லே. எந் யம்பீ நம்மள வுட பெரிய மனுஷனா போயிட்டாம். காசி, பணம், அந்தஸ்து எல்லாத்துலயும் பெரிய ஆளால்லா போயிட்டாம். நாம்ம அந்த அளவுக்கு யில்லேல்ல. பொண்ண தர மாட்டாம். வாஞ்ஞ இனுமே நிமிஷ நேரம் இந்த வூட்டுல உக்காரக் கூடாது. இந்த வூட்டுக்கு மறுமொறை வாரதுன்னா பையனோட கலியாணப் பத்திரிகையோடத்தாம் வாரணும்! ஆம்மாம் கலியாணப் பத்திரிகையோடத்தாம் வாரணும். எட்டாம் நம்பரு பஸ்ஸூ திரும்பிடுச்சான்னு பாப்பேம். இல்லன்னா பஸ் ஸ்டாப்புலயே உக்காந்து திரும்பி வாரப்ப போவேம். இனி இந்த வூட்டுல உக்காரக் கூடாது. கெளம்புங்க."ன்னுச்சு ரசா அத்தை.
            வேலங்குடி சின்ன மாமா தோள்ல போட்டுருந்த வெள்ளைத் துண்டெ வலது கையால எடுத்து வாயிலப் பொத்திக்கிட்டுப் பொங்கி வர்ற அழுகைய வெளியில காட்டிக்காம அப்பிடியே அந்தத் துண்டால கண்ணுக்கு மேல நகர்த்தி ஒரு தொடைப்பு தொடைச்சிக்கிட்டுக் கொண்டாந்த துணிப் பைய எடது கையால எடுத்துக்கிட்டுக் கெளம்புனாரு.
            மாமாவுக்கும், அத்தைக்கும் கொண்டாந்து வெச்ச டீத்தண்ணி அவங்கு குடிக்காம அப்படியே வெச்சது வெச்சப்படி ஆறிப் போயிருந்துச்சு. பிஸ்கொத்துல ஒரு சில்லு கூட எடுத்துக்காம அப்படியே தட்டுல வெச்சது வெச்சப்படி இருந்துச்சு. வேக வேகமா ரெண்டு பேரும் வெளியில கெளம்புறாங்க.
            "டேய் யம்பீ! மாமாவையும் அத்தையையும் போயி பஸ்ஸூ எத்தி வுட்டுப்புட்டு வாடா!"ங்குது வெங்கு.
            "ஒருத்தரும் வார வாணாம். எஞ்ஞளுக்கு ன்னா பஸ் ஸ்டாப்பு தெரியாதா ன்னா? வந்தவங்களுக்குப் போவத் தெரியும். யாரும் வழியக் காட்ட வாணாம். அதாங் ந்நல்ல வழிய காட்டிப்புட்டீங்களே! இப்பிடியே இருந்துக்குங்க எல்லாமும்!"ன்னு கோவமா சொல்லிட்டு வாசப்படியே விட்டு வெளியில கெளம்புனுச்சு ரசா அத்தை. அத்தையப் பின்தொடர்ந்தாப்புல மாமா போனாரு.
            அவுங்க பின்னாடி போவுறதா வேணாமாங்ற கொழப்பத்துல அப்படியே கூடத்து நாற்காலியில உக்காந்தவம்தான் விகடு. பித்துப் பிடிச்சாப்புல உக்காந்துட்டாம் கொழம்பிப் போயி. அவனெ சரிபண்ணி எழுப்புறதுக்குள்ள ஆயிக்கு பெரும்பாடா போயிடுச்சு.
            "இவ்வேம் ன்னா எதுக்கெடுத்தாலும் இப்பிடி மயங்கி மயங்கி உக்காந்துப்புடுறானே! ஒறவுன்னா அப்பிடி இப்பிடித்தாம்டா இருக்கும். இன்னிக்கு கப்புசிப்புன்னு போறாரே ஒஞ்ஞ மாமேம் அவ்வேம் ஒரு காலத்துல ஒம்மட அப்பாவையும், நம்மளையும் பேசாத பேச்சா. இந்தப் பேச்செல்லாம் பேசிட்டு வூட்டுப்பக்கம் வாராதேன்னு பேசுன ஆளுதாம்டாம்பீ! அதுக்காக பெறவு நாஞ்ஞ போவவாமலா இருந்துட்டேம்? அவுங்கத்தாம் அப்பிடிச் சொல்லிப்புட்டு நம்ம வூட்டுக்கு வாராம இருந்துப்புட்டாங்களா? எல்லாம் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ அப்பிடித்தாம்டா இருக்கும். நீரடிச்சி நீரா வெலகும்? தானாடாட்டாலும் சதெ ஆடும்டா யம்பீ! எந் ராசா இப்பிடில்லாம் கலங்கி உக்காரதடா! போயிப் பள்ளியோடம் கெளம்புற வழியப் பாரு. பாருடாம்பீ! அவ்வே வூட்டுக்காரி ரொம்ப சங்கடப்படுறா? எழும்புடா யம்பீ!" அப்பிடினிச்சு வெங்கு.
            "இருக்கட்டும் யத்தே! அவுங்க உக்காந்து கெடக்கற வரைக்கும் நல்லது. எஞ்ஞ அவுங்க பாட்டுக்கு பஸ் ஸ்டாப்பு வரைக்கும் போயிடுவாங்களோன்னு பயமா போயிடுச்சு!"ன்னா ஆயி.
            "இவ்வேம் மொகத்தப் பாத்தா அத்தாச்சியோ, யண்ணனோ ஒண்ணுஞ் சொல்லாது. இவ்வேம் ஒரு வார்த்தெ பேசலன்னுத்தாம் கோவமா இருக்குமே தவுர இவன்னா ரண்டு பேருக்குமே உசுருடி ஆயி!"ன்னுச்சு வெங்கு.
            "அதுக்கில்லே யத்தே! வூட்டுக்குள்ள நடந்துச்சு. வெவகாரம் வெளியில தெரியாம போச்சு. தெருவுல ஒருத்தருக்கொருத்தரு வார்த்தைய வுட்டுப்புட்டாங்கன்னா வெளியில தெரிஞ்சா ஒரு மாரியால்லா போவும் யத்தே!" அப்பிடினிச்சு ஆயி.
            "இப்போ இத்து மட்டும் வெளியில தெரியதாக்கும். ஞாயித்துக் கெழம இஞ்ஞ நடந்த விசயம் எப்பிடியோ அஞ்ஞ வேலங்குடி வரைக்கும் போனுச்சா! இந்த விசயத்தெ இதுங்க அஞ்ஞப் போயி வேலங்குடியிலத்தாம் பேசுமுங்க. அஞ்ஞயிருந்து இஞ்ஞ நாளைக்கே இந்த விசயம் வாருதா இல்லியான்னு பாரு. அதுக்குல்லாம் அஞ்ஞஞ்ஞ ஆளு கெடக்குடி ஆயி! அதெல்லாம் நம்மால ஒண்ணும் பண்ண முடியாது! என்னவோ என்ன நடக்கணும்னு இருக்கோ அதாங் நடக்கும்!"ங்குது வெங்கு.
            "நீஞ்ஞ கூட வேலங்குடிய நெனைப்புல வெச்சிக்கிட்டுத்தாம் ஞாயித்துக் கெழமெ அந்த வரனெ நிப்பாட்டுனீங்களோன்னு நெனைச்சேம் யத்தே!" அப்பிடினிச்சு ஆயி.
            அதைக் கேட்டதும் வெங்குவோட மொகத்துல ஒரு கலவரம் தோன்றி மறைஞ்சுச்சு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...