செய்யு - 425
இப்போ புதுப் பெரச்சனை ஒண்ணு கெளம்புது.
காத்துக்கு காது இருக்குங்றது ஒலகம் அறிஞ்ச விசயம். சுப்பு வாத்தியாரு மவளுக்கு மாப்புள்ள
பாத்த இந்த விசயம் எப்பிடித்தாம் வேலங்குடி வரைக்கும் போனதுன்னு தெரியல. வேலங்குடி
சின்னவரு ரசா அத்தையோட வூட்டுல வந்து நிக்குறாரு.
"என்னடாம்பீ! இப்பிடி ஒரு காரியத்தெ
பண்ணிட்டு நிக்குறே? எம் மவனெ பிடிக்கலன்னா அன்னிக்கே சொல்லிருக்கணும். அதெ வுட்டுப்புட்டு
இத்தனெ வருஷமா காக்க வெச்சிட்டு இப்போ கழுத்தறுக்குறாப்புல இப்பிடிப் பண்றீயேடா? ஒம்
பொண்ணையே நெனைச்சுக்கிட்டு எம் மவ்வேம் ஏங்கிகிட்டுக் கெடக்குறாம்டா!"ன்னு ரசா
அத்தை சொல்லிக்கிட்டு அழுகுது. அதெ பாக்குறப்ப பாவமா இருக்குது.
வேலங்குடி சின்னவரு விகடுவப் பாத்துக்
கேக்குறாரு, "ஏந் தம்பீ! நீஞ்ஞ படிச்சவங்க! வாத்தியார்ர இருக்குறவங்க! ஞாயத்தெ
ஒஞ்ஞகிட்டெத்தாம் கேக்கப் போறேம். ஒஞ்ஞ யப்பா நம்மட மச்சானா இருந்தாலும் இனுமே நம்ம
பேச்சு அஞ்ஞ கெடையாது. யப்பா யிப்பிடிப் பண்ணுதே இத்து ஞாயமா?"
யாருக்கு என்ன பதிலெச் சொல்றதுன்னு தெரியல.
இப்பிடி ஒரு விசயம் இருக்குறப்ப அதுக்கு ஒரு முடிவச் சொல்லிப்புட்டுல்ல இந்தக் காரியத்துல
அப்பங்காரரு எறங்கணும்னு விகடுவுக்குத் தோணுது. அதெ சொன்னா ஏற்கனவோ நொறுங்கிப்
போனாப்புல இருக்குற சுப்பு வாத்தியாரு இப்போ பொடிப் பொடியா போயிடுவாரு. அப்பங்காரரு
பண்ணதுல தப்பு இருக்குற மாதிரித்தாம் தெரியுது விகடுவுக்கு. ஆனா அதெ இப்போ சொல்றதுக்குன்னா
நேரம் அது இல்ல. உறவுகள்ல சில விசயங்கள தேவையில்லாம வளர விடுறப்போ அது இது மாதிரித்தாம்
வந்து நிக்குது அதுக்கு ஒரு பதிலச் சொல்ல முடியாம.
"என்னாம்பீ! பதில சொல்லக் காணும்.
நாம்ம எதாச்சிம் தப்பா கேக்குறமா? யில்லே, நக நெட்டு சீரு சனத்தின்னு அதச் செய்யணும்,
இதச் செய்யணும்ன்னு சொன்னோமா? இத்தனை நாளு வரைக்கும் யப்பாகிட்டெ கேட்டதுக்கு பொண்ணு
படிக்குது, படிக்குதுன்னு சொல்லிச்சு. அத்துச் சரி பொண்ணு படிச்சா நல்லதுதானே. பயத்தாம்
ஐ.டி.ஐ.ய தாண்டிப் படிக்கலே. பொண்ணு படிச்சா நாளைக்குப் பொறக்குற புள்ள குட்டிகளுக்குச்
சொல்லிக் கொடுக்குறதுக்கு வசதியா இருக்குமேன்னு நெனைச்சேம். இந்தக் காலத்துல படிச்சாத்தான
பெருமெ. கெணத்துத் தண்ணிய ஆத்துத் தண்ணியா வந்து அள்ளிட்டுப் போவப் போவதுன்னு நெனைச்சி
இருந்துட்டேம். போறப் போக்க பாத்தா கெணறே யில்லாம போயி கெணத்த காணும், கெணத்த காணும்ன்னு
நிக்குறாப்புல ஆயிடும் போலருக்கே. இந்தாரு யம்பீ! எதுவா இருந்தாலும் மனசுக்குச் சங்கடமோ,
மனசுக்கு நெறைவோ அதெ மொகத்துக்கு நேரா முடிவா சொல்லிப்புடணும். இனுமே இத்தன வயசுக்குப்
பின்னாடி ஒம்மட அத்தானுக்கு நாம்ம எஞ்ஞப் போயி பொண்ண பாப்பேம்? கலியாணத்தெ பண்ணி
வைப்பேம்? இஞ்ஞ ஒரு பொண்ணு இருக்குங்ற ஞாபவத்துலத்தாம் அவ்வேம் வெளிநாட்டுல போயிக்
கெடக்குறாம்! சம்பாதிச்சி வூடுல்லாம் வேலங்குடியில கட்டிட்டு இருக்காம். ஏம் மச்சாம்
பொண்ணு வந்து குடித்தனம் நடத்தணும்னுத்தான நாமளும் பாடுபட்டுட்டு இருக்கேம். ஒஞ்ஞ
யப்பா ஏம் மச்சாம் இப்பிடிப் பண்ணுதே? மனசுல ஏதோ இருக்கு! அதெ சொல்லிப்புட்டா தேவல!"
அப்பிடிங்கிறாரு வேலங்குடி சின்னவரு.
"யம்பீ! பேசாம மட்டும் இருக்காதடா!
மனசுல என்னத்தெ இருந்தாலும் சொல்லு! ஒரு முடிவு வந்தாத்தாம் விடி மோட்சம் பொறக்கும்."ங்குது
ரசா அத்தை.
இந்தச் சம்பவம்லாம் காலங்காத்தால பள்ளியோடம்
கெளம்புற நேரத்துல நடக்குது. சேதி தெரிஞ்சி அம்மாம் சீக்கிரமா எட்டாம் நம்பரு பஸ்ஸப்
பிடிச்சி காலம்பர ஏழே முக்காலுக்கு எல்லாம் வந்து எறங்கிட்டுங்க வேலங்குடி சின்ன மாமாவும்,
அத்தையும். அவுங்க வந்ததெப் பாத்துப்புட்டு காலை சமையல அப்பிடியே போட்டுப்புட்டு வெங்குவும்,
ஆயியும் டீத்தண்ணியப் போட்டு, ஒரு தட்டுல கொஞ்சம் பிஸ்கோத்துகள வெச்சி கொண்டாந்து
மின்னால வைக்குதுங்க.
"இந்தாரு தங்காச்சி! இன்னிக்கு ஒம்
வூட்டுல டீத்தண்ணியும் பிஸ்கோத்தும் திங்க வரல. நல்ல முடிவா தெரிஞ்சா இதெ திங்குறதா
உத்தேசம். இல்லன்னா கெளம்பிப் போயிட்டே இருக்கேம். நாம்ம இனுமே மவனுக்கு எஞ்ஞப் போயி
பொண்ணு தேடுவேம்? ஒம் மவன விட அவனுக்கு வயசு சாஸ்தி. இஞ்ஞ ஒரு பொண்ணு இருக்குங்ற
ஞாபவத்துல, மச்சங்கார்ரேம் உறவு அந்துப் போயிடக் கூடாதுங்ற நெனைப்புல, அவனுக்கும்
பொண்ணு மேல ஆசெ இருக்குங்ற எண்ணத்துல இருந்துட்டேம். இப்போ இப்பிடி நட்டாத்துல வுட்டா
நம்ம நெல என்னாவுறது?"ங்றாரு சின்னவரு இப்போ வெங்குவப் பாத்து.
"அதெல்லாம் சரிபெட்டு வாராது. பொண்ணக்
கூப்புடு. அதோட மனசுல என்னத்தெ இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சிகிட்டு நாஞ்ஞ கெளம்புறேம்!"
அப்பிடிங்குது ரசா அத்தை.
"அவ்வே சின்ன பொண்ணு. அவ்வேகிட்டெ
என்னத்தெ கேட்டுக்கிட்டு? நீஞ்ஞ ஒங்க யம்பீகிட்டத்தாம் கேக்கணும். நாஞ்ஞ இதுல என்னத்தெ
பண்ணு முடியும்? அவருதாம் குடும்பத்துல முடிவுன்னு ஒஞ்ஞளுக்குத் தெரியாததில்ல!"
ங்குது வெங்கு.
"ந்நல்லா பேசுறீங்கடியம்மா! ந்நல்லா
பேசுறீங்க! வந்து வாழப் போறவ அவதானே. அவளுக்கு விருப்பம் இல்லன்னா கெளம்பிப் போயிடுறேம்.
நீயி கூப்புடு பொண்ண. அதாங் இதுக்கு முடிவு!"ங்குது ரசா அத்தை.
இந்த எடத்துல பதிலச் சொல்ல வேண்டியது
சுப்பு வாத்தியாருதாம். அவரு பாட்டுக்கு மெளனமா உக்காந்து இருக்காரு. ஒண்ணுத்தையும்
சொல்லாம அப்பங்காரரு ஏம் இப்பிடி உக்காந்திருக்கார்ன்னு விகடுவுக்குப் புரியல. இப்போ
சின்னவரு கெளம்புறாரு, "அண்ணங்கார்ரேம் நீயிச் சொல்லு! தங்காச்சியக் கட்டித்
தர முடியாதுன்னு நாம்ம கெளம்பிட்டே இருக்குறேம்!"ன்னு. இப்பிடி சின்ன மாமா, ரசா
அத்தை ரெண்டு பேருமே சுப்பு வாத்தியார்ர விட்டுப்புட்டு விகடுவையும், வெங்குவையும்
பிடிச்சுத் தொங்குனா அவுங்களுக்கு என்ன பதிலச் சொல்றதுன்னு தெரியல. சுப்பு வாத்தியாரு
தன்னோட நிலைப்பாடு இன்னதுன்னு தெளிவு பண்ணிப் பேசியிருந்தா இந்த எடத்துல அவுங்களா
ஒரு பதிலச் சொல்ல முடியும். அவரு என்ன நெனைப்புல இருக்காங்றது தெரியாம எதாச்சிம் ஒரு
பதிலச் சொல்லி ஏடா கூடாம ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துப் போச்சுன்னா பெறவு சுப்பு வாத்தியாரு
கேக்குற கேள்விக்கு என்ன பதிலச் சொல்றது? வாழ்க்கையில அதுதாங் பெருஞ்சிரமம் அதாச்சி
கேள்விக்குப் பதிலச் சொல்றது. எதாச்சிம் ஒரு பதிலச் சொல்லணும்ன்னா எப்பிடி வேணாலும்
பதிலச் சொல்லலாம். ஆனா ஒறவு முறியாம மனச சங்கடம் பண்ணாம ஒரு பதிலச் சொல்றதுன்னா அதுக்கு
ரொம்ப சாமர்த்தியமும் பக்குவமும் ரொம்ப பொறுமையும் வேணும். யாரு யாரு மனசுல என்னா
இருக்குங்றதெப் பத்தின தெளிவு வேணும்.
நெலமை தர்மசங்கடமா போறப்ப மெளனம்தாம்
அதுக்கான பதிலா இருக்குது. எதாச்சிம் சொல்றதெ வுட ஒண்ணும் சொல்லாம இருக்குறது ரொம்ப
பெரிய பாதுகாப்பு அந்த எடத்துல.
"யிப்பிடி ஆளாளுக்கு ஒண்ணும் பேயாம
இருந்தா நமக்கும் ஒண்ணும் புரியல. ஏதோ ஒரு முடிவச் சொல்லுங்க. ஆசையோட வந்த நம்மள
ஏமாத்தி மட்டும் புடாதீங்க! இந்த வயசுல அதையெல்லாம் தாங்குற மனசுல நாம்ம யில்லே!"ங்றாரு
சின்ன மாமா.
"இதுக்கு மேல இவுங்ககிட்டெ என்னத்தெ
கேக்குறது? நாம்ம பொண்ணுகிட்டயே கேக்குறேம். எஞ்ஞ பொண்ணு? அந்த ரூமுக்குள்ளத்தான
இருக்கறா? நாமளே போயிக் கேக்குறேம்!"ன்னு ரசா அத்தை பின்னாடி இருக்குற ரூமுகுள்ள
போவுது. அங்கத்தாம் காலேஜூ போறதுக்குக் கெளம்பிட்டு இருக்குறா செய்யு.
"யத்தெ மாமா வந்திருக்கேம்ன்னு வந்து
ஒரு வார்த்தெ கூட வாங்கன்னு வந்து கூப்புடுல பாரு. நீயி பாட்டுக்கு ரூமுக்குள்ளயே உக்காந்திருக்கே.
நீயி ன்னா பண்ணுவே? ஒந் நெலமெ அப்பிடி இருக்கு! நாம்ம எதுக்கு வந்திருக்கேம்ன்னு தெரியும்.
என்ன பதிலச் சொல்றதுன்னு தெகைச்சிப் போயிருப்பே. அஞ்ஞ அப்பிடித்தாம் ஓயாளும், ஒண்ணணும்
ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம தொவண்டுப் போயிக் கெடக்காங்க. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு
ஏந் தாயீ? இந்தாரு செய்யு! நாம்ம யம்பீ பேச்சையெல்லாம் கேக்க நெனைக்கல. ஒனக்கு மனசுல
ன்னா இருக்கு. அதெ சொல்லு. எம் மவன பிடிச்சிருக்கா என்னான்னு சொல்லு. பிடிச்சிருக்குன்னா
இன்னிக்கே ஒன்னய வூட்டுக்குக் கொண்டு போயிடுவேம். பெறவு யம்பீன்னு அவ்வேம் சொல்றதெல்லாம்
கேட்டுக்கிட்டு நிக்க மாட்டேம். ஒம்மட யண்ணங்கார்ரேம் தடுத்தாலும் பாக்க மாட்டேம்.
ஒன்னய தூக்கிக்கிட்டுப் போயிட்டே இருப்பேம். இப்போ நமக்கு ஒம் பதிலு மட்டுந்தாம்
முக்கியம். எதுக்கும் பயப்படாம சொல்லு. நாம்ம இருக்குறேம்." அப்பிடினுச்சு ரசா
அத்தை.
வெங்கு, விகடுவுக்குப் பெறவு இப்போ செய்யுவுக்கு
தர்மசங்கடமா போவுது. இப்பிடி ஒரு தர்மசங்கடமாவோ, யில்ல சண்டையாவோ ஆவும்ன்னுத்தாம்
ரூமை வுட்டு வெளிய வராம உள்ளுக்குள்ள இருந்தவளுக்கு அந்தத் தர்ம சங்கடம் ரூமையும் தேடி
வந்தா என்னத்தெ பண்ணுவா? அப்பங்காரரு, அம்மாக்காரி பாசத்துக்குக் கொஞ்சம் கொறைஞ்சது
கெடையாது ரசா அத்தையோட பாசம். ரசா அத்தையோட பாசம் ரொம்ப உண்மையானது, எதார்த்தமானது.
ரசா அத்தை மட்டும் அன்னிக்கு அழுது அடம் பிடிச்சிக்கிட்டு பள்ளியோடம் போவ முடியாதுன்னு
நின்ன சுப்பு வாத்தியார்ர அப்பிடியே விட்டுருந்தா இன்னிக்கு அவரு ஒரு அரசாங்க வேலையிலிருந்து
ரிட்டையார்டு ஆயிருக்க முடியாது. அன்னிக்கு சின்ன வயசுல முடிய பிடிச்சி இழுத்து, யக்காக்காரிய
போட்டு அடிச்சி பள்ளியோடம் போவ முடியாதுன்னு அடம் பண்ணவருதாம் சுப்பு வாத்தியாரு.
அதெ தெனம் தெனம் பொறுத்துக்கிட்டு, சமாதானத்த பண்ணி வெச்சி பள்ளியோடம் கொண்டு போயி
விட்டு படிக்க வெச்சது ரசா அத்தைதாம். ரசா அத்தையோட பாசத்துக்கு மின்னாடி வேலங்குடி
சின்ன மாமாவோட எந்த ஒண்ணுத்தையும் ஒப்பிட முடியாது. அவரு ரசா அத்தைக்கு மின்னாடி தூசு.
அந்த வெதத்துல சின்னவருக்குப் பதிலச் சொல்லலாம், சொல்லாமலும் போவலாம். ஆன்னா ரசா
அத்தை அப்பிடியா? அத்து கேக்குறது நெசமான பாசத்தாலயும், நேசத்தாலயும். அதுக்கு ஒரு
பதிலச் சொல்லித்தாம் ஆவணும்.
ஒண்ணும் பதிலச் சொல்லாம செய்யு நிக்குறதெப்
பாத்து அழுவுது ரசா அத்தை. "இப்பிடியே குடும்பத்துல ஒருத்தரும் ஒரு பதிலையும்
சொல்லலன்னா உண்டுன்னு நெனைச்சிக்கிறதா? இல்லன்னு நெனைச்சிக்கிறதா? பேசாம ஆளாளுக்கு
கொன்னீங்கன்னா நாம்ம எம் மவனுக்கு ஒரு கலியாணத்தெ பண்ணி வைக்காமலயே போயிச் சேர்றதா?
ஒண்ணும் வெளங்க மாட்டேங்குதே! ஏந் உஞ்சினி அய்யனாரே! இப்பிடி ஒரு தவியாத் தவிக்குறதுக்குத்தாம்
நம்மள படைச்சீயா?"ங்குது ரசா அத்தை.
ரசா அத்தை அழுவுறதைப் பாத்துக்கிட்டு மனசு
தாங்க முடியாம செய்யு சொல்றா, "யப்பா சொல்றதுதாங் அத்தெ! யப்பா என்னத்தெ சொன்னாலும்
அதெ கேட்டுக்கிடுறேம்!"ங்றா செய்யு.
"இதாம்டி ராசாத்தி ஒன்னயக் கட்டிக்கிட்டுப்
போவணும்னு நிக்குறேம். குடும்பத்துல ஒரு முடிவுன்னு வாரப்ப பெரியவங்ககிட்டெ முடிவெ
வுடுற பாரு. இதுக்குத்தாம் வந்து நிக்குறேம். ஏம் யம்பீ காலடியில வுழுந்து பொண்ணக்
கொடுடான்னு கேக்குறேம். சந்தோஷம் ஆயி. ஒம்மட நெலையில நீயி சரியா பதிலச் சொல்லிட்டே.
இனுமே நாம்ம அவ்வேங்கிட்டெ கேட்டுக்கிடறேம்!"ன்னு ரசா அத்தை ரூமை வுட்ட வெளியில
வந்துச்சு. நேரா தம்பீக்காரனான சுப்பு வாத்தியாரு மின்னாடிப் போயி நின்னுச்சு.
*****
No comments:
Post a Comment