20 Apr 2020

கவர்மெண்டு மாப்பிள்ளைத்தாம் வேணும்!

செய்யு - 424        

            ஏழெட்டு மாசமா மெனக்கெட்டுப் பொண்ணுக்கு ஒரு வரனப் பாத்து வந்தா, அதெ மெனக்கெடு இல்லாம வெங்கு தள்ளி வுட்டுப்புச்சேன்னு சுப்பு வாத்தியாரோட மனசுல தாங்க முடியாத வேகம். காலா காலத்துல முடிய வேண்டியதெ ஒண்ணு சாதகம் முடிய வுடாம தட்டுது, இல்லேன்னா மவ்வேங்கார்ரேம் படிக்கட்டும்ன்னு தாட்டி வுடுறாம். இப்போ எல்லாம் ஓரளவுக்குச் சரியாயி சரியான நேரத்துல கனியும்ன்னு பாத்தா இதெ பொண்டாட்டிக்காரித் தட்டி வுடுறான்னா, அதுல கடுகடுன்னு ஆயிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம் இப்பிடிப் பேசுனே? சமைக்கத் தெரிஞ்ச பொண்ணுக்குச் சமைக்கத் தெரியாதுன்னு ஆயிக்காரியெ பொய்யச் சொன்னா ன்னா அர்த்தம்? ஒம் பொண்ணுக்கு வேற எடத்துல வரனெ பாத்து வெச்சிருக்கீயா ன்னா? யில்லே பொண்ணே வேற எடத்துல பையன பாத்து வெச்சிருக்கா ன்னா?"ன்னு வந்த வேகத்துலயும், கோவத்துலயும் பொறிஞ்சித் தள்ளிட்டாரு சுப்பு வாத்தியாரு. அவரோட வார்த்தை ஒவ்வொண்ணும் அவரோட ஒதடு நடுங்க வெளியில வர்றதப் பாக்குறப்போ வெங்குவுக்குப் பயமா இருக்குது. இருந்தாலும் அந்தப் பயத்த வெளியில காட்டிக்கிடாம பேசுது.
            "அத்து ன்னா அந்த யம்மா அப்பிடிப் பேசுது? நீஞ்ஞளே வெளியில வெரட்டி அடிப்பீங்கன்னுப் பாத்தா, நாம்ம வெரட்டி வெளியில அனுப்புனதுக்கு இம்மாம் கோவப்படுறீங்களே?" அப்பிடின்னுச்சு வெங்கு.
            "பொண்ண பிடிச்சுப் போச்சு. ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆயிட்டேங்ற உரிமையில கேக்குறதுதாங். ஒம் மவ்வேன் கலியாணத்துக்கு ஆயி வூட்டுலேந்து வாங்கலையா? பேசுறே பாரு பெரிசா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருங்க பேசுறதெ சரியாப் பேசணும்! நாம்ம ன்னா கேட்டேமா? நாம்ம ன்னா வாங்குனோமா? நடக்காத ஒண்ணுத்தெ சொன்னா நமக்குக் கெட்ட கோவம் வந்துப்புடும் பாருங்க! அவுங்களா செஞ்சது. எம் மருமவ்வே என்னத்தெ போட்டு வந்தாங்றது இன்ன தேதி வரைக்கும் நமக்குத் தெரியுமா? என்னவோ அவ்வே போட்டு வந்தா, அவ்வே வெச்சிருக்கா? நாம்ம இன்ன வரைக்கும் எதாச்சியும் கேட்டிருப்போமா?"ன்னு கோவமா வெங்குவும் பேசுனுச்சு.
            "செரித்தாம் ஒம் மருமவ்வே போட்டு வந்துச்சுல்ல. போட்டுட்டு வாரணும்ன்னு மனசுல ஒரு நெனைப்பாவது இருந்துச்சுல்லே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருய்யா மனுஷா! இப்போ எதுக்கு நீயி சப்பைக்கட்டு கட்டிட்டு நிக்குறேன்னு நமக்குத் தெரியல. எம் மவனுக்கு ன்னா கொறைச்சலு? எம் மவ்வேம் வாத்தியார்ரா இருந்தாம். நாம் நீயின்னு பொண்ணு கொடுக்க அத்தனெ பேரு நின்னாம். அவனுக்கே இருவத்தஞ்சு பவுனு தாண்டலையே. ஏம்யா மனுஷா நீயி பாத்துட்டு வந்தீயே வரன், அவ்வேம் ன்னா வேலையிலயா இருக்காம்? செல செஞ்சிட்டுக் கெடக்குறப் பயலுக்கு அம்மாம் யாரு போடுவா? அவனுக்கெல்லாம் வருமானம் வந்தாத்தாம் உண்டு. இல்லன்னா இல்லே. அவனுக்கு எப்பிடி நாப்பது பவுனு போடுவீயே?" அப்பிடினிச்சு வெங்கு.
            "செரி! இந்த வரனெ வுடு. வேற ஒரு வரன் வந்தா அவ்வேங்கிட்டெ எம் பொண்ணு படிச்சிருக்குல்லா, அதால நகெ நட்டுன்னு எதையும் செய்ய மாட்டேன்னு சொல்லுவீயா ன்னா? வரன் பிடிச்சிருந்தா கேட்டதெ செஞ்சித்தானே பண்ணி வுடுவே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்பிடிக் கேளுய்யா எம்மட மனுஷா! பிடிச்சிருந்தா நாப்பது பவுனு ன்னா? ஐம்பதெ பண்ணுறேம்!"ன்னிச்சு வெங்கு.
            "அப்பிடி என்னத்தெ பிடிக்காதத கண்டுகிட்டே இந்த வரன்ல?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "கவர்மெண்டு வேலையில இல்லேயே. கவர்மெண்டு வேலையில இல்லாதவனுக்குக் கட்டிக் கொடுத்துப்புட்டு எம் பொண்ணு அஞ்ஞ போயி செருமப் படணுமா? ஏம்யா நம்ம மவனெ கவர்மெண்டு வேலையில இல்லன்னா யாரு பொண்ணு கட்டிக் கொடுப்பா? இந்தக் காலத்துல பைய்யேம் அமைஞ்சிடுவாம். யாரு வாணாலும் கட்டி வைக்க நானு நீயின்னு நிப்பாங்க. பொண்ணு அமையுறதுதாங் கஷ்டம். ஏன்னா பொண்ணு கொடுக்குறவங்க ஆயிரத்தெட்டு விசயத்தெ பாப்பாங்க. எல்லா விசயத்திலயும் மனசு திருப்திப்பட்டாத்தாம் பொண்ண கொடுக்க முடியும். பயல்ன்னா கலியாணத்தக் கட்டிக்கிட்டு எந்தக் கதியோ போன்னு விட்டுப்புடலாம். பொண்ணுய்யா பொண்ணு. காலம் முழுமைக்கு ஒரு கண்ணு வெச்சி நாம்மத்தாம் பாத்துக்கிடுற மாதிரி இருக்கும். அதாங் அதெ கொடுக்குறப்ப கவர்மெண்டு வேலையில இருக்குற ஒரு பையனுக்குக் கொடுத்தா நாமளும் நிம்மதியா இருக்கலாம். அதுவும் நிம்மதியா இருக்கும்! என்னவோ யோஜனெ பண்றேம், யோஜனெ பண்றோம்ங்றீயேய்யா மனுஷா! படிச்ச ஆளுதானே! வாத்தியார்ரா இருந்த ஆளுதானே. இதெல்லாம் யோஜனையப் பண்ணியாய்யா?"ன்னுச்சு வெங்கு.
            சுப்பு வாத்தியாரு இப்பிடி ஒரு பதி‍லெ வெங்குகிட்டேயிருந்து எதிர்பாக்கல. அதெப் பத்தியும் அவரு ஒரு யோசனையைப் பண்ணித்தாம் வெச்சிருந்தாரு. அவரு சொன்னாரு, "நம்ம வகையறாவுல படிச்சி வேலையில இருக்கிறவேம் கம்மி. மாசா மாசம் கை நெறைய சம்பாதிக்கிறானான்னு பாத்துத்தாம் கொடுக்கலாம். அவ்வேம் சம்பாத்தியத்துல கெட்டிக்கார்ரேம். அதெ ந்நல்லா வெசாரிச்சிப் புட்டேம். செலை செய்யுறதுல கைராசிக்கார்ரேம். நல்ல ஓட்டமா ஓடுது தொழிலு அவனுக்கு. அத்தோட சொத்து பத்துன்னு ரெண்டு குடும்பமும் சமானத்துல இருக்கு. அதத்தாம் நாம்ம பாக்கணும். பொண்ணு ந்நல்லா இருக்கணும்னு பெரிய எடத்துல கொடுத்துப்புட்டு பின்னாடி எதாச்சிம் ஒண்ணு நடக்குறப்போ, ஒரு கேள்வியக் கூட கேக்க முடியாத நெலையில இருக்கக் கூடாது பாரு! இவ்வே நம்ம பொண்ணு கொஞ்சம் மெனக்கெட்டு ரெக்ருட்மெண்டு எதாச்சிம் எழுதுனா வேலைக்கிப் போயிடுவா. குடும்பத்தெ ஒட்டிப்புடலாம். அதெத்தாம் நாம்ம பாக்கலாம். பெறவு இப்படி இருக்குற வரனெ நாப்பது பவுனுன்னு நின்னா கவர்மெண்டு வேலையில இருக்குறவேம் அம்பது, அறுவதுன்னுல்ல நிப்பாம். அதெ எப்பிடிச் செய்வே? நாம்ம கவர்மெண்டு வேலையில இருக்குறவனெ எஞ்ஞத் தேடி கண்டுபிடிக்கிறது? தஞ்சாவூரு நேரியப்ப பத்தருகிட்டெ நேர்ல அன்னிக்குப் போயி சாதகத்தத் தேடிப் பாக்குறேம். அப்பிடி ஒண்ணுத்தையும் காங்கல. செரின்னு கொஞ்சம் நெதானமா யோஜனையப் பண்ணி இப்பிடி ஒரு முடிவுக்கு வந்தேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்பப் போயி பாத்தப்ப இல்லாம இருக்கலாம். இனுமே போயிப் பாத்தா இருக்கும். அதென்ன எம் பொண்ணுக்கு அம்பது பவுனு கூட போட்டு ஒரு வேலையில இருக்குற பையனுக்குக் கட்டிக் கொடுக்க வக்கில்லன்னா அதெ நாம்ம என்னத்தெ சொல்றது? நம்ம பொண்ணு ந்நல்லா இருக்கணும்ன்னா நாம்மத்தாம் செஞ்சாவணும். எங்கிட்டெ இருக்குல்லா அதையும் சேத்துப் பொண்ணுக்குப் போடுறேம். நீஞ்ஞ வாத்தியார்ரா இருந்தாச்சி. அண்ணங்கார்ரேம் வாத்தியார்ரா இருக்காம். போட்டுத்தாம் செஞ்சாவணும். ஒரே பொண்ணு! கண்ணே கண்ணுன்னு வெச்சிக்கிட்டு கூட கொறைச்சலுக்குப் பவுனு செஞ்சிப் போடறதுக்கு யோஜனையெ பண்ணிட்டுக்கிட்டு இப்பிடி ஒரு வரனெ தேடிக் கொண்டாந்தா நாம்ம ன்னத்தா பண்றது? இனுமெ இந்தக் கதிக்கு கவர்மெண்டு வேலையில யில்லாத மாப்புள்ளையா கொண்டு வந்தா வூட்டுக்குள்ளார வுட மாட்டேம். வூட்டுக்கு வெளியில வெச்செ தொரத்தி வுடுவேம்!"ன்னிச்சு வெங்கு.
            "இந்தாரு வெங்கு! நீயிப் பேசுறதெல்லாம் மொறையில்லே. பெறவு கவர்மெண்டு வேலையில யில்லாதவனெல்லாம் கலியாணமே பண்ண வாண்டாங்றீயா?"ன்னு காட்டமா கேட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம யாரு அவுங்கள கலியாணத்தெ பண்ணிக்க வாண்டாங்றது. ந்நல்லா பண்ணிக்கிடட்டும். நாம்ம நம்மட‍ பொண்ண கட்டிக் கொடுக்க மாட்டேம். அம்புட்டுத்தாம். நம்மட பொண்ண யாருக்குக் கட்டிக் கொடுக்கணும், யாருக்குக் கொடுக்கக் கூடாதுங்றது நமக்குத் தெரியும்! ஒம்மால முடியாட்டியும் சொல்லிப்புடணும். நாம்ம பாத்து நம்மடப் பொண்ணுக்குப் பண்ணிக்கிடுறேம்!" அப்பிடினிச்சு அதுக்கு மேல காட்டமா வெங்கு.
            இவுங்க ரெண்டு பேரும் இப்பிடி பேசிக்கிறதெ பாத்து ஊடால என்னத்தெ பேசுறதுன்னு விகடுவுக்குக் கொழப்பமா இருந்துச்சு. அவனெப் பொருத்த மட்டுல மாப்புள்ள பையன் நல்லவனா, நல்ல வெதமா வெச்சிப் பாத்துக்கிடறவனா இருந்தா போதும்ன்னு நெனைச்சாம். அதெ சொல்லப் போயி அம்மாக்காரி அவ்வே பாட்டுக்கு, ஏம்டா தங்காச்சிக்கு காசியச் செலவு பண்ணி கலியாணத்தெ பண்ணி வைக்கணும்னு யோசனையைப் பண்ணிட்டு இப்பிடிப் பேசுறீயான்னா கேட்டாலும் கேட்டதுதாம். அப்பிடிக் கேக்க கூடிய ஆளுதாம் வெங்கு. அதால என்ன பேசுறதுன்னு இந்த நெலையில ரொம்பவே தயங்கி நின்னாம் விகடு. புருஷங்கார்ரேம் தயங்கி நின்னாலும், பொண்டாட்டிக்காரி ஆயி இந்த எடத்துல தயங்காம பேசுனா பாருங்க, "அத்தெ சொல்றதுல ன்னா தப்பு மாமா? அத்தெ சொல்றதுதாங் செரி! நம்மள இஞ்ஞ கட்டிக் கொடுத்தாங்கன்னா, அவுங்க வேலையில இருந்ததாலத்தாம். இல்லன்னா சத்தியமா கட்டிக் கொடுத்திருக்க மாட்டாங்க. அதால அத்தெ சொல்றதுல எந்தத் தப்பும் இல்லன்னுத்தாம் நமக்கும் தோணுது. அத்தெ சொல்றபடியே ஒரு எடத்தெ பாருங்க மாமா!" அப்பிடின்னு ஆயி சொன்னதும் சுப்பு வாத்தியாரு வாயடைச்சுப் போயிட்டாரு.
            அதுக்கு மேல அவரு ஒண்ணும் சொல்லல. அந்த எடத்தெ வுட்டு மெளமா நகர்ந்துப் போவுறாரு. அதுக்கு அர்த்தம் அவருக்கு இங்க நடந்துக்கிட்டு இருக்குற பேச்சுல அவருக்கு உடன்பாடு இல்லங்றதுதாம். அத்தோட யாருமே நம்மள புரிஞ்சிக்கிடலேயேங்ற கோவமும்தாம். எல்லாரும் சேர்ந்து பேசி வெச்சுக்கிட்டு சம்பவத்தெ நிகழ்த்துறது போலல்லா இருக்குன்னு அவரு மனசுக்குள்ள நெனைச்சிருக்கணும். இனுமே இன்னொரு எடத்தெ பாத்து, அதுக்கு ஆறெழு மாசம் ஆராய்ச்சியெல்லாம் பண்ணி, தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பல பேத்த ரகசியமா வெசாரிச்சிக் கண்டுபிடிக்கிறதுன்னா அதொட மெனக்கெடுல்லாம் மனசுக்குள்ள அலைஅலையா அவரோட மனசுக்குள்ள வந்துப் போயிட்டு இருக்குது. அதாங் எல்லாம் நல்ல வெதமா முடிஞ்சிடும்ன்னு நெனைச்ச சம்பந்தம் முடியாம போனதுல அவருக்கு மனசுக்குள்ள ரொம்பவே தாங்கலா இருக்குது. ரெண்டு கால்ல ஒரு காலு ஒடைஞ்சா மனுஷனோட நடை எப்பிடி இருக்குமோ, அப்பிடி இருக்குது அவரோட மனசோட நெலை. அவரு வாசப்படிய நோக்கிப் போயிட்டு இருக்காரு. இங்க கூடத்துல வெங்கு மருமவ்வேகிட்டெ பேசுறது அவரோட காதுக்குச் சன்னமா கேக்குது.
            "ந்நல்லா சொன்னேடி நமக்குன்னு வந்தவளே! நாம்ம சொன்ன வரைக்கும் ன்னா பேச்சு பேசுனாரு. மருமவ்வே சொன்னதும் எப்பிடி அப்பிடியே ஆடிப் போயி போறாரு பாரு. அப்பிடித்தாம் போவணும். அத்துச் செரி! ஒம்மட வூட்டுக்கார்ரேம் ன்னா இப்பிடி கல்லுபுள்ளையாரு கணக்கா உக்காந்திருக்காம்? என்னவோ பெரிசா கருத்துல்லாம் சொல்லுவாம்? ஒண்ணுத்தையும் சொல்லக் காணும். என்னவோடியம்மா! வந்து பேசுனாளே அவ்வே என்னவோ பெரிசா பட்டா போட்டு பேசிட்டே போறா? கார்ல வந்து எறங்குனா பெரிய இவளாட்டம் நெனைப்பா? அப்பவே பல்ல ஒடைச்சி கையில கொடுக்கலாம்னுத்தாம் பாத்தேம்! ஒண்ணும் சொல்லவும் முடியல, பண்ணவும் முடியல!"
            செய்யுவுக்குத்தாம் இதுல சந்தோஷம், நாம்ம பிடிக்கலன்னு சொல்லி இந்த ஏற்பாடு நிக்காம, அதுவாவே இப்பிடி நின்னுச்சேன்னு. ஒரு விசயத்த நடத்தி முடிக்கிறதுதாம் கஷ்டம், நின்னுடணும்னு நெனைக்குற விசயத்துல நாம்ம ஒண்ணும் செய்யாம அப்பிடியே நின்னுட்டா அதுவாவே நின்னுடும் போலருக்குன்னு நெனைச்ச்கிட்டா அவ்வே.
            இப்போ வாசப்படி வரைக்கும் போயிட்ட சுப்பு வாத்தியாரு உள்ளுக்குள்ள கூடத்தெ ஒரு எட்டு எட்டிப் பாத்தாரு. அதுக்கு அர்த்தம் மவ்வேங்கார்ரேம் வெளியில வருவானா, அவ்வேங்கிட்டெ மனசு வுட்டு ரண்டு வார்த்தை பேசலாமான்னு அதுக்கு அர்த்தம். ஆனா விகடு பயெ கூடத்துல கல்லூளிமங்கன் கணக்கா உக்காந்தது உக்காந்ததுதாம். வேரு வுட்ட மரம் போல அப்பிடியே உக்காந்திருந்தாம்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...