செய்யு - 423
யாருக்கும் எந்தச் செருமமும் இல்லாம ஞாயித்துக்
கெழமையாப் பாத்து பொண்ண பாக்க வரச் சொல்லிருந்தாரு சுப்பு வாத்தியாரு. எல்லாத்தையும்
ரொம்ப முன்னேற்பாடோடத்தாம் மனசுல கணக்குப் பண்ணி காயை நகர்த்திக்கிட்டு இருக்காருங்றது
அவரோட பேச்சு, நடையப் பாத்தா நல்லா தெரியுது. எப்படியும் இந்த எடத்தை முடிச்சிப்புடணுங்ற
முடிவுல அவரு நெலையா நிக்குறதும் தெரியுது.
பத்தரை மணி வாக்குல வெள்ளை நெறத்துல அம்பாசிடரு
காரு ஒண்ணு வந்து நிக்குது சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு முன்னால. அதுலேந்து எறங்கி
வர்றாங்க மங்கலகரமான மொகத்தோட ஒரு அம்மாவும், சிரிச்ச மொகத்தோட ஒரு அய்யாவும்.
அவுங்கத்தாம் மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும். வர்றவங்களுக்கு வாங்க வாங்கன்னு
சந்தனம், குங்குமம், கற்கண்டு, பூவுன்னு கொடுத்து வரவேற்ப பெரமாதாம பண்ணியாச்சி. காரு
டிரைவர்ர உள்ளார வந்து உக்காருங்கன்னு கூப்புட்டதுக்கு அவரு பரவாயில்லங்கன்னு சொல்லிட்டுக்
கார்லயே உக்காந்துக்கிட்டாரு. பக்கத்துப் பக்கத்து வூடுகளுக்கு இதெப் பத்தில்லாம் ஒண்ணும்
பெரிசா சொல்லல.மாப்புள்ள வூட்டுல வந்துப் பாத்துப்புட்டு முழுமனசோடு சம்மதம்ன்னு
சொன்னப் பெறவு சொல்லி பெறவு பாத்துக்கிடலாம்னு விட்டுப்புட்டாரு சுப்பு வாத்தியாரு.
வந்தவங்களுக்கு பாயை விரிச்சிப் போட்டு
அவுங்கள உக்கார வெச்சாச்சி. ஒரு சின்ன தட்டுல சுடச்சுட கேசரியும், சூடான பஜ்ஜியும்
வெச்சி தம்பளர்ல சூடான காப்பியும் கொடுத்து ஆவுது. அவுங்க நெறைவா அதெ சாப்புட்டு முடிச்சி
பிற்பாடுதாம் செய்யுவ அழைச்சிட்டு வந்து அவுங்க மின்னாடி பாய்ல உக்கார வெச்சாங்க. செய்யுவப்
பாத்ததும் அவுங்களுக்குப் பிடிச்சிப் போச்சு.
மாப்புள்ள வூட்டுலேந்து வழவழ கொழகொழன்னுல்லாம்
பேசல. நேரடியா விசயத்துக்கு வந்துப்புட்டாங்க. மாப்புள்ளையோட அம்மாத்தாம் மொதல்ல
பேசுனாங்க. "பொண்ண ரொம்ப பிடிச்சிப் போயிடுச்சி. நீஞ்ஞ போட்டோவுல காட்டுனதெ
வுட ந்நல்லா இருக்கா. பையனுக்கும் பொண்ணுக்கும் பொருத்தப்பாடு அம்சமா இருக்கும்.
எங்கப் பக்கத்துல சாதகத்தெ ந்நல்லாவே பாத்தாச்சி. அதுவும் நல்லாவே பொருந்திப் போவுது.
நீஞ்ஞளும் சாதகத்தெப் பாத்திருப்பீங்க. பொருத்தமாத்தாம் இருக்கும்." அப்பிடின்னாங்க.
மாப்பிள்ளையோட அப்பங்காரரு ஒண்ணும் பேசல.
அமைதியா சிரிச்சாப்புல உக்காந்திருந்தாரு. சுப்பு வாத்தியாருதாம் கேட்டாரு, "நீஞ்ஞ
வூட்டுக்காரவுங்க ஒண்ணும் சொல்லலயே. ஒஞ்ஞளோட கருத்துப்பாட்டையும் தெரிஞ்சிக்கிட்டா
மனசுக்கு இன்னும் நெறைவா இருக்கும்!"ன்னாரு.
"நமக்கென்ன கருத்துப்பாடு? மாமியாரும்
மருமவளும் ஒத்துப் போயிட்டா செரித்தாம். நமக்கென்ன இதுல வேல இருக்குது? நமக்கு எதெ
சமைச்சிப் போட்டாலும் சரித்தாம். உப்பு, புளி, காரம் இருந்தாலும் சாப்பிடுவேம், இல்லாட்டியும்
சாப்பிடுவேம், கொறைஞ்சாலும் சாப்புடுவேம், நெறைஞ்சி தெகட்டுனாலும் சாப்பிடுவேம். பொம்முன்னாட்டிங்க
ஒத்துப் போயிட்டா ஆம்பளைங்களுக்கு ன்னா? குடும்பம்ன்னா அதுங்கத்தானெ ஒத்துப் போவணும்.
ஆம்பிளைங்க கொஞ்சம் மின்ன பின்ன பாத்துக்கிடுவாங்க. ஒண்ணு இருந்து ஒண்ணு இல்லாட்டியும்
கண்டுக்கிட மாட்டாங்க. பொம்முன்னாட்டிங்க அப்பிடியா? ஒண்ணு ஒண்ணுத்துலயும் ரொம்ப
நுணுக்கமால்ல பாக்குமுங்க. அதால நமக்கு சம்சாரத்தோட திருப்தித்தாம் முக்கியம். அதுவே
திருப்திப்பட்டுப் போச்சுன்னா நமக்கென்ன? அத்துச் சொல்றதுதாம். நம்ம குடும்பத்துல
ஆம்பளைங்க யாரும் குடும்ப வெவகாரத்துல மூக்கெ நொழைக்கிறது கெடையாது. அதுங்க வைக்கிறதுதாங்
சட்டம். அதுங்க போக்குலயே வுட்டுப்புடுறது!"ன்னாரு மாப்பிள்ளையோட அப்பங்காரரு
பெரிசா சிரிச்சிக்கிட்டு.
"ஆம்மாம் இவரு எப்பவும் இப்பிடித்தாம்.
அவரு வேலையில நாம்ம தலையிட கூடாது. நம்ம வேலையில அவரு தலையிட மாட்டாரு. அப்பிடித்தாம்
நம்ம குடும்பம். அதால குடும்பத்தப் பொருத்த மட்டில வூட்டுக்கு வர்ற மருமவ்வேத்தாம்
ராசாத்தி. நமக்கும் ன்னா? வயசாயிப் போயிடுச்சு. மருமவ்வே வந்தா அவ்வே தலையில எல்லாத்தையும்
கட்டிப்புட்டு ஒதுங்கிக்கிட வேண்டியதுதாங்!"ன்னாங்க மாப்புள்ளையோட அம்மாகாரவுங்க.
"அதெல்லாம் பொண்ணு குடும்பத்தெ நல்ல
வெதமாவே பாத்துக்கும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ந்நல்லா படிக்க வெச்சிருக்கீங்க!
வாத்திச்சியா வர்றப் போற பொண்ணுக்கு அதையெல்லாம் சொல்லித்தாம் தெரியணுமா? கூட்டுக்குடும்பமா
வேற இருக்கீங்க! பழக்க வழக்கத்துக்குக் கொறைச்சலு இருக்காது. அனுசரிச்சிப் போற பொண்ணாத்தாம்
இருக்கும்ங்றது சொல்லித் தெரிய வேண்டியதில்லே! நகை நெட்டுல்லாம் ஒங்க விருப்பம். நீஞ்ஞ
செய்யுறதுதாம். நாஞ்ஞ அதையெல்லாம் சொல்ல மாட்டோம். எப்பிடியும் நாப்பது பவுனுக்குக்
கொறைச்சலாவா செஞ்சிடப் போறீங்க? பையனுக்கு ஒரு வண்டிய வாங்கிக் கொடுக்காம இருக்க
மாட்டீங்க? கலியாணத்தெ பண்ணி வுடாமலா போயிடுவீங்க? கட்டிலு, பீரோல்லாம் செஞ்சு கொடுக்காமலா
போயிடப் போறீங்க? பாத்திரம் பண்டமெல்லாம் மட்டும் வாணாம். நாஞ்ஞ எஞ்ஞ மவளுக்குச்
செஞ்சதெ பாத்தீங்கன்னா எல்லாம் சாக்குல கட்டி அப்பிடியே அவ்வே புகுந்து வூட்டு லாப்டுலத்தாம்
கெடக்குது மேல ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாம. அந்தக் காசிய அப்பிடியே பொண்ணு மாப்புள
கையில கொடுத்துப்புடறது உத்தமம்ன்னு நெனைக்கிறேம்! பெறவு ஒஞ்ஞ விருப்பம்தாம் பொண்ணு
பேர்ல பேங்குல டிபாசிட்டு பண்ணி வுடுறதெல்லாம்!" அப்பிடின்னாங்க மாப்புள்ளையோட
அம்மாகாரவுங்க.
மாப்புள்ளையோட அப்பங்காரரு வெச்சிருந்த
ரெண்டு பஜ்ஜியில ஒண்ணுத்த மட்டுந்தாம் சாப்பிட்டிருந்தாரு. இப்போ இன்னொண்ண வாழ்க்கையில
பஜ்ஜியே சாப்புடாதவர்ர போல கிள்ளி கிள்ளி சாப்புட ஆரம்பிச்சாரு. அவரு நமக்கும் இந்தப்
பேச்சுக்கும் சம்பந்தம் இல்லங்ற மாதிரிக்கி உக்காந்திருந்தாரு.
மாப்பிள்ளையோட அம்மாக்காரவுங்க இப்பிடிப்
பேசப் பேச வெங்வோட மொகத்துல மட்டும் சின்ன மாத்தம். அது பேசலாம்னு நெனைக்குறதுக்குள்ள
சுப்பு வாத்தியாரு வாயைத் தொறக்க ஆரம்பிக்கிறது தெரிஞ்சதால வெங்கு வாயை மூடிக்கிட்டு.
இத்து மெய்யாலுமே சுப்பு வாத்தியாரு பேச
வேண்டிய எடம். அதால அவரு பேசுனாரு. "பொண்ணு பொறந்தப்பவே கொஞ்சம் கொஞ்சமா நகெ
நட்டுன்னு சேக்க ஆரம்பிச்சாச்சுங்க. அவளுக்குன்னு நெலம், மனைக்கட்டுன்னு எல்லாமும்
நம்மட வூட்டுக்காரி பேர்ல வாங்கி இருக்குங்க. அதெ வித்துப்புட்டு செஞ்சிப்புடுறதுல
செருமம் ஏதுமில்லீங்க. ஒங்க எதிர்பார்ப்புக்கு ஏத்தப்படி செய்யுறதுல நமக்கு எந்த அட்டியும்
இல்லீங்க! இன்னும் ஒரு நூலு கூடவே செஞ்சிப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நீஞ்ஞளும் வாத்தியார்ரா இருந்திருக்கீங்க!
மவனும் வாத்தியார்ரா ஆக்கி வெச்சிருக்கீங்க! கட்டிட்டுப் போற மருமவளும் கூடிய சீக்கிரமே
வாத்திச்சியா ஆயிடும்! அதால செய்மொறை, செய்வினையில எந்தக் கொறையும் இருக்காதுங்றது
தெரியும். இருந்தாலும் கலந்துக்கிறதுதானுங்களே! ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆவப் போறோம்.
இதெல்லாம் பேசிக்கிட வேண்டியதுதானே!" அப்பிடினிச்சு மாப்புள்ளையோட அம்மாக்காரவுங்க.
"மனசு வுட்டுப் பேசுன வரைக்கும் சந்தோஷம்தாங்க!"
அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
"பெறவு முக்கியமான விசயம் ன்னான்னா,
பையனுக்குப் பொண்ண பொருத்த மட்டுல எந்த எதிர்பார்ப்பும் கெடையாது. ஒரு விசயத்துல
மட்டுந்தாம் பிடிவாதமா இருப்பாம். அத்து வேற ஒண்ணும் யில்லே. சாப்பாட்டு விசயத்துல
கொஞ்சம் கறார்ரா இருப்பாம். அவரு நம்மட வூட்டுக்காரரு அதையெல்லாம் கண்டுக்கிட மாட்டாரு.
எதெ சமைச்சிப் போட்டாலும் தட்டெ பாக்காம சட்டுப்புட்டுன்னு சாப்புட்டோமா, கெளம்புனோமான்னு
இருப்பாரு. அவ்வேம் பயெ அப்பிடியே நேர்மாறு. ருசியா இருக்கணும். இல்லன்னா சாப்புட மாட்டாம்.
தட்டுல அப்பிடியே கைய அலம்பிட்டு எழுந்துப்புடுவாம். கலியாணத்துக்குப் பெறவு பொண்ணு
வேலைக்குப் போவாட்டியும் பரவாயில்ல. நாக்குக்கு ருசியா புருஷங்காரனுக்கு நல்லா சமைச்சிப்
போடணும்! அத்து ஒண்ணு முக்கியமான எதிர்பார்ப்பு. பொண்ணப் பாத்தா ந்நல்லா சமைக்கும்னுத்தாம்
தெரியுது! அதால அதுலயும் எந்தக் கெறையும் யில்லே! மேக்கொண்டு நாம்ம ஆவ வேண்டியதெ பாக்கலாம்!"
அப்பிடின்னாங்க அம்மாக்காரவுங்க.
"அதெல்லாம் ந்நல்லா சமைக்குமுங்க
நம்ம மவ்வே!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
அதுவரைக்கும் எதுவும் பேச வந்து பேசாம
மொகத்தெ திருப்பி வெச்சிக்கிட்டு இருந்த வெங்கு இப்பத்தாம் பேச ஆரம்பிச்சுச்சு.
"அதெல்லாம் நம்மட பொண்ணுக்கு செரியா சமைக்கத் தெர்யாது. படிப்பு படிப்புன்னு
இருந்தப் பொண்ணு. நாமளும் அதெ சமைக்க வுடல. அடுப்புப் பக்கமே நம்ம பொண்ண வுட்டதில்லே.
சமையல்லாம் நீஞ்ஞத்தாம் பாத்து செஞ்சி வுடற மாதிரி இருக்கும்!"ன்னு வெங்கு சொன்னது
பாருங்க மூஞ்சுல அடிச்சாப்புல.
மாப்புள்ளையோட அம்மாக்காரவுங்க மொகம்
போன போக்கெ பாக்கணுமே. அவுங்களுக்கு ஒரு மாதிரியா போயிடுச்சு. ஏம் இப்பிடி திடீர்ன்னு
வெங்கு பேசுதுன்னு சுப்பு வாத்தியாருக்கும் கொழப்பமா போயிடுச்சு. நேத்தி எல்லாத்தையும்
கூட்டி வெச்சித்தானே பேசுனேம். அப்பவே எதாச்சிம் சொல்லிருக்குலாமேன்னு அவரோட நெனைப்பு
ஓட ஆரம்பிச்சிட்டது.
"நாம்ம ஒண்ணும் கேக்கக் கூடாத கேள்விய
கேக்கலீங்களே? வழக்கமா பொண்ணு பாக்க வர்றப்ப கேக்குறதுதானே?" அப்பிடின்னாங்க
மாப்புள்ளையோட அம்மாக்காரவுங்க.
"நீஞ்ஞ ஒண்ணும் தப்பால்லாம் கேக்கல.
நாஞ்ஞ உண்மைய மறைக்காம சொல்லிப்புடணும்ல. பெறவு கலியாணத்துக்குப் பெறவு உண்மைய மறைச்சி
பண்ணி வுட்டுப்புட்டதா கொறை வந்துப்புடக் கூடாது பாருங்க!" அப்பிடினிச்சு வெங்கு.
"நீஞ்ஞ சொல்றபடியே இருந்தாலும்,
பொண்ணுக்குச் சமைக்கவே தெரியாட்டியும், கலியாணத்துக்குள்ள அதெ கத்துக் கொடுத்து அனுப்பாமலயா
போயிடுவீங்க? அதெ கணக்குல வெச்சி சமைக்கத் தெரியாத பொண்ணாவே இருந்தாலும் நல்லா சமைக்கும்னு
சொல்ற குடும்பத்தெத்தாம் நாம்ம கேள்விப்பட்டிருக்கேம்!" அப்பிடின்னாங்க மாப்புள்ளையோட
அம்மாக்காரவுங்க.
"ம்ஹூம்! கலியாணத்துக்குப் பெறவுல்லாம்
எம் பொண்ணு சமைக்கும்ன்னு எதிர்பாக்காதீங்க! கொஞ்சம் நீஞ்கத்தாம் முன்ன பின்ன இருந்துப்
பாத்துக்கிடணும். பொய்யா ஒண்ணுத்தெ சொல்லி பெறவு கொறை வந்துப்புடக் கூடாது பாருங்க!"
அப்பிடினிச்சு வெங்கு.
நிமிஷ நேரத்துல மாப்புள்ளையோட அம்மாக்காரவுங்க
மொகத்துல யோசனை பல வெதமா ஓடுனுச்சு. "நாஞ்ஞ கெளம்புறோம். காரு வேற காத்துக்கிட்டுக்
கெடக்கு. ஊருக்குப் போயி கலந்துக்கிட்டு மிச்சத்தெ சொல்லி வுடறோம்!" அப்பிடின்னு
எழுந்துப்புட்டாங்க மாப்புள்ளையோட அம்மாக்காரவுங்க. ஒடனே மாப்புள்ளையோட அப்பங்காரரும்
ரிமோட் கன்ட்ரோல் கொடுத்தாப்புல எழுந்துப்புட்டாரு. ரெண்டு பேரும் விடுவிடுன்னு
கெளம்பி, "நாஞ்ஞ வர்றோம்!"ன்னு போற போக்குல சொல்லிட்டுப் போயி காரு
கதவெ தொறந்துக்கிட்டு ஏறுறாங்க. சுப்பு வாத்தியாரு பின்னாடியே ஓடுறாரு. அவரு வாசப்படிகட்டெ
தாண்டுறதுக்குள்ள காரு பாட்டுக்குக் கெளம்பிப் போவுது. காரு டிரைவரு வண்டிக்குள்ளயேல்ல
உக்காந்திருக்காரு காருக்குள்ள சினிமா பாட்டைப் போட்டு வுட்டு அதெ கேட்டுக்கிட்டு.
அவுங்க வந்து உக்காந்து காரைக் கெளப்புன்னு சொன்னதும் பாட்டை நிப்பாட்டிப்புட்டு,
காரைக் கெளப்பிக்கிட்டுப் போயிட்டாரு. லேசா புழுதியைக் கெளப்பிக்கிட்டுப் போற காரைப்
பாத்தபடியே மொகம் வெளிறிப் போயி நிக்குறாரு சுப்பு வாத்தியாரு.
பின்னாடியே வந்த விகடு, "யப்பா!"ங்றாம்.
அவனோட குரலு அவரோட காதுக்கு ஏறல. பித்துப்
பிடிச்சாப்புல அப்பிடியே நிக்குறாரு, காரு போன சொவட்டையே வெறிச்சி வெறிச்சிப் பாக்குறாரு.
*****
No comments:
Post a Comment