1 Apr 2020

பிடிவாதத்துக்கு மருந்தில்லே!

செய்யு - 405        

            புருஷன் பொண்டாட்டி சண்டை ஒண்ணும் பூமியில புதுசு இல்ல. புருஷன் பொண்டாட்டிங்ற பந்தம் இருக்குற வரைக்கும் பூமியில புருஷன் பொண்டாடடி சண்டை இருக்கத்தாம் செய்யும். புருஷன் மேல பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு பொறந்து வூட்டுக்குப் போறதும், சமாதானம் பண்ணி திரும்ப அழைச்சிட்டு வாரதும் நடக்குறதாம். புருஷன் பொண்டாட்டிச் சண்டையில அது சாத்தியம்தாம்னாலும், சக்களத்திச் சண்டையில அதெ எதிர்பார்க்க முடியாது. இந்தச் சண்டையெ கோகிலா மாமிக்கும், லட்சுமி மாமிக்கும் இடையிலத்தாம். அதெ வீயெம் மாமா கண்டுக்கக் கூட இல்ல, தம் பக்கம் ஒத்த வார்த்தையக் கூட பேசலங்றதுதாம் லட்சுமி மாமிக்கு மனக்கொறையா இருந்துச்சு.
            இந்தப் பிரச்சனையை எப்பிடியாவது தீத்து வெச்சுப்புடணும்னு சுப்பு வாத்தியாரும், சங்கரியும் ரொம்ப மெனக்கெட்டுப் பாத்தாங்க. அவங்களால முடியல. லட்சுமி மாமியோ வூட்டுக்கு வந்த சுப்பு வாத்தியார்கிட்டயும், சங்கரிகிட்டயும் மொகம் கொடுத்துப் பேசக் கூட யோசிச்சதுல, அதுக்கு மேல ஒண்ணுஞ் செய்ய முடியாம அவுங்க கெளம்புறாப்புல ஆயிடுச்சு. அவங்களால, தலைக்கு மேல தண்ணிப் போறப்போ சாண் போனான்னா? மொழம் போன ன்னா?ங்ற மாதிரி ரெண்டு பக்கத்துலயும் பேசுனதுல ஒண்ணுத்தையும் செய்ய முடியாமப் போச்சு. ஆனா ரெண்டு பேரும் ரெண்டு பக்கமும் மாறி மாறிப் பேசிப் பாக்கறதெ வுடாம அப்பப்ப செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு ஒரு பிரயோசனமும் இல்லாம போனதுதாம் துரதிர்ஷ்டம்.
            இந்த நெலமையில லட்சுமி மாமியோட அப்பங்காரரு கிட்டான் ஆச்சாரி ரொம்ப துடிச்சித்தாம் போயிட்டாரு. அவரு எவ்வளவோ மல்லுக்கட்டிப் பாத்தாரு. குடும்பத்துல அப்பிடி இப்பிடின்னு இதெல்லாம் சகஜம்னு வாதாடிப் பாத்தாரு. லட்சுமி மாமி எதையும் ஒத்துக்கிடல. அது சொன்னதையே திரும்ப சொன்னிச்சு, "தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி மிதிபட்டு, அடிபட்டு வூட்டுக்குள்ள போவ முடியாம வெளியில உக்காந்திருக்காளேங்ற மனசாட்சி யில்லாம நடந்துக்கிட்டவங்க வூட்டுக்கு இனுமே எப்பிடி நாம்ம போவ முடியும்? அவ்வே ஒருத்தி எம்மாம் அசிங்கம் பண்ணிப்புட்டா நம்மள தெரியுமா? அதுவும் அவரு வந்துக் கூப்புடாம போனா நமக்கு ன்னா மருவாதி இருக்கும்?"ன்னு எதிர்கேள்வி கேட்டுச்சு.
            "ஒரு புள்ளீயா அதுவும் ஆம்பள புள்ளீயா இருந்துச்சு. அதுக்கே நெஞ்சுல சொரேர்ன்னுத்தாம் இருந்துச்சு. இருந்தாலும் செரி பரவால்லன்னு காலத்தெ ஓட்டிப்புடலாம்னு பாத்தா இப்போ பொம்பள புள்ளீயா இன்னொண்ணுத்தெ வேற பெத்துட்டு வந்து நிக்குறீயே? ஆம்பளப் புள்ளீக்கு அப்பங்காரரு ஒருத்தம், பொம்பளப் புள்ளீக்கு அப்பங்காரரு வேறொருத்தம்ன்னா இதெ எப்பிடி சமாளிச்சி புள்ளீயோள கரை சேக்கப் போறீயோ? நாம்ம இன்னும் எத்தினிக் காலத்துக்கு ஒமக்குத் தொணையா இருக்கப் போறேம்ன்னு தெரியலீயே!"ன்னு கண்ணு கலங்குனாரு கிட்டான் ஆச்சாரி.
            "ஒத்தப் புள்ளையோட தாலியறுத்துட்டு வந்து நின்னப்போ அந்தப் பயம் இருந்துச்சுத்தாம்ப்பா! ஆனா இப்போ யில்ல. புள்ளீயும் யில்லாம, ஒண்ணும் யில்லாம ஒருத்தி அம்மாம் தெனாவெட்டா நிக்குறப்போ அவளுக்கு மின்னாடி தனியா வாழ்ந்து காட்டணும்ல. ஒரு புள்ளீயப் பெத்துக் கொடுக்க வக்கில்லாத பொட்டகிட்டயே ஆம்பளயா எதுத்துக் கேக்க வக்கிலன்னா, அவ்வேம்லாம் என்னத்தெ புருஷனா இருந்து என்னத்த நம்மள காப்பாத்தப் போறாம்? எதுத்துக் கூட கேக்க வாணாம்ப்பா! ஞாயத்தெ கேக்கணுமா இல்லியா? அதெ கேக்கக் கூட தெராணியில்லன்னா அவ்வேம் கூடல்லாம் போயி என்னத்தெ வாழ்றது? மானத்தோட பொழைக்கிறதுக்கு எவ்வளவோ வழியிருக்குப்பா! நாம்மத்தாம் ஆம்பள தொணை வேணும்னு அந்தத் தொணை வேணும்னு நெனைச்சி நெனைச்சி தெகிரியம் இல்லாமலே வாழ்ந்துக்கிட்டே இருக்கேம்!" அப்பிடின்னுச்சு லட்சுமி மாமி.
            "ஒங்கிட்டெ என்னத்தெ இனுமே பேசுறது? அவரு அத்தாங்காரரு சுப்பு வாத்தியாரு வேல மெனக்கெட்டு வந்து பேசிச் சேத்து வைக்கணும்னு பாக்கறாரு! நீயி மொகங் கொடுத்துக் கூட பேச மாட்டேங்றே! மனுஷம் அவரும் எம்மாம் நேரம்தாம் ஒம்மட மொகத்தப் பாத்துக்கிட்டு பதில்ல வாங்காம உக்காந்துப்பாரு. கெளம்பிட்டாரு. அந்தச் சங்கரிப் புள்ளையையும் வூட்டுப் பக்கம் வாரக் கூடாதுன்னு அடிக்கிறே. அத்து என்ன பண்ணும். ஒந் தலையெழுத்து அப்பிடின்னா நாம்ம ன்னத்தப் பண்றது? அப்பிடித்தாம் நடக்கும்ன்னா அப்பிடியே நடந்துட்டுப் போவட்டும்!"ன்ன கிட்டான் ஆச்சாரியும் அதுக்கு மேல ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம அலுத்துப் போயி உக்காந்துட்டாரு.
            கடைசியா ஒரு வாய்ப்பா, வடவாதியில வீயெம் மாமா வூட்டுக்கு நேர்ல போயி சுப்பு வாத்தியாரும், சங்கரியும் இந்தப் பக்கம் சமானதானத்தப் பண்ணப் பாத்தாங்க. அதுவும் ஒத்து வரல. "யம்பீ! நீயிப் போயி கூப்பிட்டீன்னா நிச்சயம் கெளம்பி வந்துடும்ப்பா அந்தப் பொண்ணு. கொழந்தை யில்லன்னுத்தான்ன அந்தப் பொண்ண போயி தேடிக் கட்டிட்டு வந்தே. நாம்ம கூட அதெல்லாம் வாணாம்ன்னு எம்மாம் சொல்லிப் பாத்தேம்! கேக்குறாப்புல யில்ல அப்போ. அதுவும் ஒரு பொம்பளப் புள்ள. வவுத்துல பொறந்ததும் பொம்பளப் புள்ளீயா இருக்கு. ரண்டு பொம்பளைங்களோட பாவத்தெ வாங்கிக் கட்டிக்கிறாப்புல இருக்கே யம்பீ! நாமல்லாம் போயிப் பேசிருக்கேம். நீயிச் சும்மா வந்து வாசல்கிட்டே மட்டும் நில்லு. மித்ததெ நாம்ம பாத்துக்கிடுறேம். எப்பிடியும் ஒம்மட கூட கெளப்பிட்டுக் கொண்டாந்துப்புடலாம் பாத்துக்க!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்து எப்பிடித்தாம்! வூட்ட வுட்டு நம்மள கேக்காம அவ்வே பாட்டுக்கு கெளம்பிப் போவா? நாம்ம வெக்கங்கெட்ட தனமா போயி அவ்வே வூட்டுக்கு மின்னாடி நின்னு வா வான்னு கெஞ்சிக்கிட்டுக் கெடக்கணுமில்லே!  வூட்ட வுட்டுப் போனச் சிறுக்கிக்குத் திரும்பி வாரத் தெரியும்த்தாம்! நீஞ்ஞ பேயாம இருங்க! நீஞ்ஞ ஏம் தலை அறுபட்ட கோழியப் போல துடிச்சிப் போறீங்க! அம்மாம் ன்னா நாம்ம மானங்கெட்டுப் போயிட்டேம்னு கேக்குறேம்?" அப்பிடின்னுச்சு வீயெம் மாமா.
            சமாதானம் பண்றதுக்காக வந்த சங்கரிக்கு இதெ கேட்டதும் கோவம் பொத்துக்கிட்டு வந்திச்சு. "இந்தாரு மாமா! நம்மள வுட வயசுல அனுபவத்துல கூட உள்ள ஆளு நீயி! ஒன்னயப் பாத்து பட்டுன்னு ஒரு கேள்வியல்லாம் நாம்ம கேட்டுப்புடக் கூடாது பாத்துக்க. ஆனா நம்மள அப்பிடி ஒரு கேள்வியக் கேட்டுப்புடுற மாதிரிக்கி வெச்சுக்காத. அத்து ஒமக்குத்தாம் அசிங்கம் பாத்துக்க. இந்தக் கலியாணத்தெ பாத்துப் பேசி முடிச்சி வெச்சது நாம்ம. இன்னிக்கு நம்மாள அந்த வூட்டுப்பக்கம் தலையக் காட்ட முடியல. அசிங்கமா இருக்கு, நீயி பண்ணி வெச்சிருக்கிற காரியம். நடந்தது நடந்துப் போச்சிது. அதெ நாம்ம கெளறி கெளறி ஆவுற காரியத்தெ ஆவாம பண்ண நெனைக்கல. வா மாம்மா! நாம்ம வாத்தியாரு சித்தப்பா எல்லாம் பேசி வுடுறேம். ரண்டு மாமிகளையும் ஒண்ணா வெச்சிக்கிட முடியலன்னாலும் பரவாயில்ல. தனித்தனியா வூடு பாத்து வெச்சிக்க. நாம்ம ஒண்ணும் குத்தம் சொல்லல." அப்பிடினிச்சு சங்கரி.
            "ஏம்டி ஒம் புருஷன இத்தெ போல இன்னொருத்திக் கட்டி வெச்சி அவள அழைச்சாந்து வெச்சு குடித்தனம் பண்ணுன்னு சொல்லிட்டு நிப்பீயா எடுபட்ட நாயே! யாரு வூட்டுக்கு வந்து என்னத்தெ பேச்சப் பேசுறே?"ன்னுச்சு அதெ கேட்டுப்புட்டு கோகிலா மாமி.
            "ச்சும்மா வாய மூடு மாமியோய்! நாமளா வந்து ஒம்மட புருஷனுக்கு பொண்ணு ஒண்ணுத்தெ பாத்து வெச்சிக்கிருக்கிறேம், வந்து கட்டிக்கோன்னு அலைஞ்சேம்? நீயும் மாமாவும் வாழ்க்கப்பட்டு எங்கம்மா வூட்டுக்கு எத்தனெ தடவ நாயி மாதிரிக்கி அலைஞ்சீங்கங்ற கணக்கு நமக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறீயா? ஏம் நீயும் மாமாவும் லட்சமி மாமி வூட்டுக்குப் பொழுது விடியறதுக்கு மின்னாடி வந்து நின்னதெல்லாம் மறந்துப் போச்சின்னு நெனைச்சீயா? என்னவோ பொண்ணு மொகம் கண்ணுல நிக்குதேன்னு வந்து நின்னீயே? அதெல்லாம் யார்ர ஏமாத்தப் பண்ண வேல?"ன்னுச்சு சங்கரி.
            "இந்தாருய்யா மனுஷா! ஒம்மட யக்கா மவளா மருவாதியாப் பேசச் சோல்லு! யில்ல வெளக்கமாத்துப் பிஞ்சிடும் பாத்துக்கோ. ஏம் இந்தக் கதையல்லாம் பேசிட்டு இஞ்ஞ நிக்குறானுவோன்னு தெரியலயே. மொதல்ல வூட்ட வுட்டு வெளியில போவச் சொல்லு! மானம் போயிடும் பாத்துக்கோ!"ன்னு கோகிலா மாமி கத்துனதும் சுப்பு வாத்தியாரு ஓட்டமும் நடையுமா எழுந்திரிச்சி வெளியில ஓடியாந்துட்டாரு.
            சங்கரி மட்டும், "இத்து நம்மட மாமேம் வூடு! நாம்ம அப்பிடித்தாம் பேசுவேம். ஒண்ட வந்த சிறுக்கி ஒனக்கென்னடி வேல? ஒங் கையில மட்டும்தாம் வெளக்குமாத்து அடிக்குமா? நாம்ம எடுத்தாலும் பிஞ்சிடும் பாத்துக்கோ! மயிராயி! ஒன்னய வெரட்டி அடிச்சி இன்னொருத்திய எம்மட மாமனுக்கு கட்டி வைக்க எம்மாம் நேரமாவுன்னு நெனைக்கிறே?"ன்னுச்சு மல்லுகட்டிக்கிட்டு.
            "பண்ணி வைப்பேடி! பண்ணி வைப்பேடி! மொதப் பொண்டாட்டி நாம்ம இருக்குறப்ப நம்மட சம்மதம் யில்லாம ரண்டாவது கலியாணம் பண்ணி வெச்சீயேடின்னு, அதுக்கே ஒன்னயத் தூக்கி உள்ள போடலாம் தெரியும்ல! கம்ப்ளெய்ண்ட் பண்ணி உள்ளார தூக்கிப் போட போலீஸ் ஸ்டேசன் ரொம்ப தூரமில்ல தெரியும்ல, கிட்டக்க வடவாதியிலத்தாம் இருக்கு! ஒம்மட மாமன் சிண்டு நம்மட கையில இருக்குங்றது தெரியாம பேசாதே!" ன்னு சொன்னிச்சுப் பாருங்க கோகிலா மாமி. ஒடனே சங்கரிக்குக் கோவம் அதிகமாயி வீயெம் மாமாவப் பாத்துக் கேட்டிச்சி, "ஏம் மாமா! இந்தப் பேச்சுப் பேசுதே? ஏம் இப்பிடி பேசுறேன்னு ஒரு வார்த்தெ கேக்குறீயா? இப்பிடி நீயி இருந்தா ஒம்ம கூட எப்பிடி ஒரு பொண்ணு குடித்தனம் நடத்துவா? அதாங் லட்சுமி மாமி கெளம்பி வந்திருக்கு. ஒனக்கெல்லாம் ஒரு பொண்ணப் பாத்து கட்டி வெச்சேம் பாரு!" அப்பிடினிச்சு சங்கரி. ஒடனே கையெடுத்து தலையில வெச்சு கும்புடு போட்டு வெளியில போயிடுங்ற மாதிரிக்கி வீயெம் மாமா என்னவோ வார்த்தை பேச வாராத ஆளு போல கெஞ்சுனுச்சு. இனுமே இங்க என்னத்தெ பேசுறதுன்னு சங்கரி கெளம்பி சுப்பு வாத்தியாரு வூட்டுக்குக் கூட வாராம எட்டாம் நம்பரு பஸ்ஸப் புடிச்சி ஊருக்குப் போயிடுச்சு. அதுக்குப் பிற்பாடு ரெண்டு பேத்தையும் சமாதானம் பண்ணுற முயற்சியில யாரும் எறங்கல.
            எதாவது ஒரு பக்கம் கொஞ்சம் எளப்பம் காட்டுனாலும் ஊடால பூந்து எதாச்சிம் ஒரு சமாதானத்தப் பண்ணி விடலாம். ரெண்டு பக்கமும் பிடிவாதமா இருக்குறப்போ என்னத்தெ பண்றது? நடந்தச் சம்பவத்தால வீயெம் மாமாவுக்கு ரொம்ப கெட்டப்பேரு வந்துச் சேந்துச்சு. எல்லாரும் வீயெம் மாமாவ கண்டபடிக்குத் திட்டுனாங்க. என்னத்தெ இருந்தாலும் ஒரு பொண்ண கட்டிட்டு வந்து, கையில கொழந்தையையும் கொடுத்துப்புட்டு இப்பிடி நிர்கதியா நிக்க வுடக் கூடாதுன்னு பேசிக்கிட்டாங்க. சில சம்பவங்கள புரட்டிப் போட்டு மனச மாத்த காலத்தாலத்தாம் முடியும்னு அதுக்குப் பெறவு எல்லாரும் அமைதியாயிட்டாங்க. இந்தச் சம்பவத்துக்குப் பெறவு சுப்பு வாத்தியாருக்கு வீயெம் மாமாவெ அறவே பிடிக்காமப் போயிடுச்சு வீயெம் மாமாவ ஒரு மனுஷனா மதிக்கிறது கூட இல்லேன்னு மனசுக்குள்ள ஒரு கருத்து உண்டாயிடச்சு.
            இப்பிடியே ஒரு ஆறு மாச காலம் ஓடியிருக்கும். இனுமே எதாச்சிம் அதிசயம் நடந்துத்தாம் ரண்டு பேரும் சேரணும்னு நெனைச்சப்போ, வீயெம் மாமாவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்துச்சு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...