18 Apr 2020

நாளைக்குப் பொண்ணு பாக்க வர்றாங்க!

செய்யு - 422        

            செய்யு பியெஸ்ஸிக்கும், எம்மெஸ்ஸிக்கும் ஆர்குடி பக்கமா மேற்கால போனாள்ன்னா, பியெட்டுக்கு திருவாரூரு பக்கமா கெழக்கால போனா. ஆர்குடி போனாப்புல காலேஜூ பஸ்ல போவல. திருவாரூரு போற எட்டாம் நம்பரு பஸ்லத்தாம் காலையில போயி, சாயுங்காலமா திரும்பிக்கிட்டுக் கெடந்தா. திட்டையில கேணிக்கரை ஸ்டாப்பிங்குன்னு மின்னாடி சொல்லி, இப்போ வாள்பட்டறை ஸ்டாப்பிங்ன்னு சொல்ற எடத்துலத்தாம் ஏறியும் எறங்கியும் போயிட்டு வாரது. பியெட்டுக்கான உத்துநோக்கலு பயிற்சிக்கும், கற்பித்தல் பயிற்சிக்கும் வடவாதியில இருந்த பள்ளியோடத்துல பண்றதுக்கு காலேஜ்ல சொல்லிக் கேட்டு வாங்கிகிட்டா. வடவாதி பள்ளியோடத்துக்குப் போறப்ப தன்னோட பச்சைக் கலரு சின்ன வண்டியில போயிட்டு வந்திடுவா. அவ்வே பாட்டுக்கு அசால்ட்டா போயிட்டு வந்துக்கிட்டு யாருக்கும் தெரியாம எம்பில்லுக்கு தயாரு ஆவுறாப்புல எம்மெஸ்ஸி பாடத்தையும் படிச்சிக்கிட்டும் கெடந்தா. பியெட்டு பரீட்சை நெருங்க நெருங்க அவளோட மனசுல சந்தோஷம் தாங்கல. இந்தக் கருமம் பிடிச்ச பரீட்சைய எழுதி முடிச்சிப்புட்டு காலா காலத்துல எம்பில்லுக்கு அப்ளிகேஷனப் போட்டுப்புட்டு என்ட்ரன்ஸ்ஸ எழுதிப் போடணும்னு நல்லா மனசுல திட்டமா கணக்கப் போட்டு வெச்சிக்கிட்டா.
            செய்யுவோட பியெட்ட பரீட்சை ஆரம்பிக்கிறதுக்கு மின்னாடி ஒரு வார காலம் இருக்கும். சுப்பு வாத்தியாரு பொண்டாட்டி, மவ்வேன், மருமவ, மவள எல்லாத்தையும் நடுக்கூடத்துல கூட்டி வெச்சிக்கிட்டுப் பேத்திய மடியில வெச்சிக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாரு. எதுக்கு இப்பிடி கூட்டி வெச்சிருக்கார்ன்னு மொதல்ல யாருக்கும் புரியல. எதுக்குக் கூப்பிட்டுருக்கார்ன்னும் அனுமானிக்க முடியல. சுப்பு வாத்தியாரு பேச ஆரம்பிச்சாரு.
            "அதாங் பொண்ணுக்கு பரீட்சை நடந்து முடிஞ்சிடும்லா. பெறவு எத்தனெ நாளு வூட்டுல வெச்சிக்கிடறது? அதாம் யோஜனெ பண்ணி ஒரு மாப்புள பையனெ பாத்திருக்கேம். நாகப்பட்டணத்து திருமருகலு இருக்குல்லா. அங்க ஒரு பையேம். சாதவம் ஆறு மாசத்துக்கு மின்னாடி வந்திச்சு. அப்போ படிச்சிட்டு இருந்துச்சா. சொன்னா கோளாறா போயிடும்ன்னு யாருகிட்டயும் சொல்லல. நாம்ம மட்டும் சாதவத்தெ நாட்டியத்தாங்குடிகாரர்ட்டயும், கொத்தூரார்ட்டயும் பாத்தேம். சாதவம் அபாராம பொருந்திப் போயிருக்கிறதா சொல்லிப்புட்டாங்க. கொஞ்சம் கலியாணத்தெ தள்ளி வெச்சா பரவாயில்லன்னங்க. அதாங் ஆறெழு மாசம் கடந்துப் போச்சுல்லா. இப்ப அவுங்க வந்து பாத்தாலும் நாம்ம அவுங்களப் போயிப் பாத்து, ஓலையெழுதி, மண்டபத்தெ பாத்து அப்பிடி இப்பிடின்னு ஆறெழு மாசம் ஆயிடாது?" அப்பிடின்னு சொல்லி நிப்பாட்டுன்னாரு பாருங்க. வெங்கு அந்த எடத்துல பிடிச்சிக்கிடுச்சு.
            "இத்தினி நாளும் வெளியில சொல்ல முடியாம கெடந்தேம். பரவால்ல இப்பயாச்சிம் மனுஷனுக்குப் பொறுப்பு வந்திச்சே! எதாச்சிம் சொன்னா இந்தப் பயெ ஓரண்டை இழுப்பாம். படிக்கிற காலத்துல அதோட மனசெ கொழப்பாதேன்னு மனுஷா நீயும் எதாச்சிம் சொல்லுவேன்னு மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கெடந்தேம். இன்னிக்குத்தாம்யா மனுஷா நீஞ்ஞ ஒழுங்கா ஒரு வேல பாத்திருக்கீயே!" அப்பிடினிச்சு.
            "ம்ஹூக்கும்! இத்தனெ நாளு அஞ்ஞ இஞ்ஞன்னு அலைஞ்சிட்டுக் கெடந்தேம்ல! எதுக்கு அலைஞ்சிட்டுக் கெடந்தேம்? இதுக்குத்தாம். எத்தினி சாதகம் பாத்திருப்பேம்? எத்தினி எடத்துக்குப் போயிருப்பேம்?"ன்னாரு பாருங்க சுப்பு வாத்தியாரு, ஆயி பிடிச்சிக்கிட்டா அந்த எடத்துல. "யப்போ மாமா! நீஞ்ஞ பையனே போயி பாத்துட்டு வந்துப்புட்டீங்க இல்லே?" அப்பிடின்னு.
            "போயிப் பாத்திட்டேம் ஆயி! ரொம்ப நல்ல எடம். நம்ம குடும்பம் மாதிரியே ஒரு பையேம், ஒரு பொண்ணுத்தாம். பொண்ணுக்குக் கலியாணத்தெ மொதல்ல முடிச்சிட்டாங்க. பையேம்தாம் பாக்கி. பையனோட அப்பம் ஆயியும் நல்ல கொணம். தோதா அமைஞ்சிடும்னு நெனைக்கிறேம். போயிப் பாத்துப் பேசிட்டு வந்துட்டேம். பொண்ணோட போட்டோவப் பாத்ததுல அவுங்களுக்குப் பிடிச்சிப் போயிடுச்சு. இருந்தாலும் நேர்ல வந்துப் பாத்துட்டாங்கன்னா அவுங்களுக்கு ஒரு திருப்தியாப் போயிடும்ல!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
            அவரு அப்படிச் சொல்லிட்டுப் போவ போவ செய்யு அண்ணங்கார்ரேம் விகடுவெ ஒரு மாதிரியா பாத்து  நிமுண்டுறா. கண்ணாலயே அவனெப் பாத்து இப்போ கலியாணம் வேணாங்ற மாதிரிக்கி எதாச்சிம் பேசிப் பண்ணிவுடுன்னு சைகையப் பண்ணுறா. விகடுவும் ஒரு நிமிஷம் யோசிச்சாம். அப்பங்காரரு நல்லா திட்டத்தெ போட்டு எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிப்புட்டு விசயத்தெ அவுத்து வுடுறாரு. இப்போ போயி ஏறுக்கு மாறா சொன்னா வர்ற கோவத்துக்கு வெளுத்து வாங்கிப்புடுவாருன்னு புரிஞ்சிக்கிட்டு, கொஞ்சம் அமைதியா இருங்ற மாதிரிக்கி அவனும் தங்காச்சிக்காரிக்கு சைகையப் பண்ணுறாம். ஆனா செய்யுவுக்கு அண்ணங்கார்ரேம் அமைதியா இருன்னு சொல்றதுப் பிடிக்கல.

            ஆயி மட்டும் முந்திரிக்கொட்டையாட்டம் மேல மேல கேள்வியக் கேக்குறா. "ஏம் மாமா! மாப்புள்ள பையேம் என்னத்தெ பண்ணுறாராம்? எம்மாம் படிச்சிருக்கிறாராம்?"
            "சொல்ல வந்த விசயத்தெ விட்டுப்புட்டேம் பாரு! அவுங்க அதாங் பையேம் வூட்டுலேந்து அப்பம் ஆயி ரண்டு பேரும் நாளைக்கி ஒம்மட நாத்தனார பொண்ணு பாக்க வார்றாங்க. அதாங் சங்கதி. அதெ சொல்லுறதுக்குத்தாம் எல்லாத்தையும் ஒண்ணா கூட்டி வெச்சேம். பெறவு ன்னா கேட்டே? பையனப் பத்தித்தானே! பையேம் நம்ம வகையறாவுல ஒரு படி மேல. ஸ்தபதி வூட்டுப் பையேம். நம்ம அஞ்சு வகைக்குள்ள ஒருத்தெருக்கொருத்தரு பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்கிடறதுன்னாலும் பொதுவா அவுங்க நம்ம தச்சு குடும்பத்துல வெச்சிக்கிடறதில்ல. ஆன்னா நம்ம பொண்ணோட படிப்பு, போட்டோவப் பாத்து புடிச்சிப் போயிடுச்சு போலருக்கு. பையேம் பேரு சிவக்கொழுந்து. ஸ்பதியா இருக்காம். மாசத்துக்கு இருபதினாயிரத்துலேந்து முப்பதினாயிரம் வரைக்கும் சம்பாதிப்பாம். போதும் அந்தச் சம்பாத்தியம். குடும்பத்தை ஓட்டிப்புடலாம். பையேம் ரொம்ப ஆச்சாரம். சுத்தச் சைவம். செல செய்யுற வேலைங்றதால வெரதம்லாம் ரொம்ப பலமா இருப்பாம் போலருக்கு. பாக்க ஐயரு வூட்டுப் பையனாட்டம் பூணுல்லாம் போட்டு ஒம் புருஷங்காரன மாதிரிக்கே ஓங்கு தாங்கலா செவப்பா இருக்காம். பொண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தப்பாடு ந்நல்லா இருக்கும். செம ஜோரா இருக்கும். அதுல ஒண்ணும் கொறைச்சலு கெடையாது. என்னா ஒரு கொறைன்னா பையேம் ஒரு டிகிரி மட்டுந்தாம் பிகாம் வரைக்கும் படிச்சிருக்காம். அதால ன்னா ந்நல்லா சம்பாத்தியத்துல இருக்காம். பெறவு ஒம்மட நாத்தனாரு பியெட்டு முடிச்சதுக்கு வேலைக்குப் போனா குடும்பத்தெ ஓட்டிப்புடலாம் பாத்துக்கோ. சொந்த வூடு இருக்கு. குடும்பப் பழக்க வழக்கமெல்லாம் நல்லாத்தாம் இருக்கு. இன்னும் சொல்லணும்ன்னா நம்ம குடும்பத்தெ விட ஒரு படி மேல நல்லாத்தாம் இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம்யா மனுஷா! நம்ம குடும்பத்துல பழக்க வழக்கத்துல என்னத்தெ கொறைய கண்டுபுட்டிங்களோ? அத்துச் செரி நாளைக்கிச் சம்பவத்தெ வெச்சிக்கிட்டு இன்னிக்கு சொன்னா ன்னா அர்த்தம்னு புரியல?" அப்பிடினிச்சு வெங்கு.
            "பெரிசா ஏற்பாடுல்லாம் பண்ண வாணாம். பொண்ண தயாரு பண்ணிப்புடுங்க அலங்காரத்தப் பண்ணி. ஸ்வீட்டு, காரம், காப்பி அவ்வளவுதாங். அவுங்க வந்து பாத்துட்டுப் போன பிற்பாடு நாம்ம ஒரு நாளு செய்யுவுக்குப் பரீட்சைல்லாம் முடியட்டும் போயிட்டு வந்துப்புடுவோம். இப்பிடி ஆரம்பிச்சாவே எல்லாமும் முடியுறதுக்கு ஆறெழு மாசம் ஆவாதா ன்னா?" அப்பின்னாரு சுப்பு வாத்தியாரு.
            கிட்டத்தட்ட கலியாணத்தையே நடத்தி முடிச்சாப்புல சுப்பு வாத்தியாரு பேசுனதுல செய்யு கொஞ்சம் அரண்டுத்தாம் போயிட்டா. அண்ணங்கார்ரேம் மருந்துக்குக் கூட ஒண்ணும் பேசாம உம்முன்னு ஆமாஞ் சாமியப் போல நிக்குறதுல அவ்வேம் மேல ஒரு கோவம்.
            "அதாஞ் சேதி! அவுங்கவுங்க போயி வேலையப் பாருங்க!"ன்னு சொல்லிட்டு மடியில வெச்சிருந்த பேத்திய தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு அவரு பாட்டுக்கு எழுந்திரிச்சிப் போயிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            அவரு போன பிற்பாடு அண்ணங்கார்ரேங்கிட்டெ இனுமே பேசி புண்ணியம் இல்லங்ற மாதிரிக்கி ஒரு கோவத்துல அண்ணிக்காரிக்கிட்டெ கேக்குறா செய்யு, "ஏம் அண்ணி! படிப்பே இன்னும் முடியல. பரீட்சை எழுத வேண்டிருக்கு. நாளைக்கே பண்ணணும்னு ன்னா தேவ வந்துக் கெடக்கு? கொஞ்சம் தள்ளிப் போட்டா ன்னா? நீஞ்ஞ கொஞ்சம் யப்பாக்கிட்டே பேசுங்களேம்!" அப்பிடின்னா.
            "யய்யோ யம்மாடி! ஆளெ வுடுங்க நாத்தனாரே! நம்ம பொழப்பு நாறிப் போயிடும்! வாய வெச்சிக்கிட்டு ச்சும்மா இருக்க முடியாதான்னு ஒங்க அண்ணங்கார்ரேம் இருக்காரே நம்மளப் போட்டு பொளந்து புடுவாரு! அவரே பேயாமா இருக்குறப்ப நாம்ம பேசுனா சுத்தப்பட்டு வாராது. ஒஞ்ஞ அண்ணேம் மாதிரிக்கிக் கொழப்பி வுட்டுப் பேச ஒஞ்ஞ அண்ணனாலத்தாம் முடியும். நம்மால முடியாது. ஆளெ வுடுங்க. இப்போ ன்னா பொண்ண பாக்கத்தான வர்றாங்க. வந்துப் பாத்துட்டுப் போவட்டும். நாமளும் கேசரி பஜ்ஜி தின்னு நாளாச்சு. நாளைக்காவது திம்பேம்!" அப்பிடிங்கிறா ஆயி.
            "ஒஞ்ஞளுக்கு கேசரி திங்குறதுக்கும், பஜ்ஜி திங்குறதுக்கும் நம்மள பொண்ணு பாக்குற சம்பவம்தாம் கேக்குதா? யம்மா நீயாச்சும் சொல்லேங்!" அப்பிடிங்கிறா செய்யு.
            "இப்போ எது சொன்னாலும் ஒம்மட அப்பங்காரருக்கு மூளையில ஏறாது, அத்தோட மூக்கு மேல கோவம் வந்துப்புடும். சொன்ன வெதத்தப் பாத்தேல்லே. ஒம்மட அண்ணங்காரனே எகனைக்கு மொகனையா பேசுற பயெ. வாயெ மூடிட்டு நிக்குறாம் பாரு. எதா இருந்தாலும் நாளைக்கிப் பாத்துக்கிடலாம். பேயாம யிரு. அத்து ன்னா நீயி எம்மெஸ்ஸி, பியெட்டு படிச்சிருக்கிறே. ஒமக்குப் போயி பிக்காம் படிச்ச பயல கட்டுனா ந்நல்லவா இருக்கும்?" அப்பிடிங்குது வெங்கு.
            இப்பத்தாம் விகடு பேசுறாம். "யம்மா ச்சும்மா இருக்க மாட்டே? படிப்பெ பாக்காதே. தங்காச்சிய ந்நல்ல வெச்சுப்பாங்களான்னு பாரு. நல்ல எடமா இருந்தா படிப்பு கொஞ்சம்னாலும் கட்டிக் கொடுத்துப்புடணும்!" அப்பிடின்னு.
            "ஏம்டா நீயி டிகிரியல்லாம் படிக்காம கெடக்குறேன்னு ஒன்னய மாதிரியே ஒருத்தனெ பிடிச்சி தங்காச்சிக்கு இழுத்து வுட்டுப்புடலாமுன்னு பாக்குறீயா?"ங்குது வெங்கு.
            "இதுக்குத்தாம் யம்மா ஒங்கிட்டெ பேசுறதே யில்லே! ஒங்கிட்டெ பேசில்லாம் புரிய வைக்க முடியா போ!"ன்னு சொல்லிட்டு விகடுவும் கோவமா எடத்தை காலி பண்ணுறாம்.
            "பாத்தியாடி ஆயி! ஒம்மட புருஷங்கார்ரேம் பேசிட்டுப் போறதே?" அப்பிடிங்குது வெங்கு.
            "அத்து ஒஞ்ஞ புள்ளையாச்சி! நீங்களாச்சி! பாத்துக்கோங்க. அத்தெ ஏம் எங்கிட்டெ கொண்டு வருதீயே? அவுங்க சொன்னா சரியாத்தாம் இருக்கும்!"ங்றா ஆயி.
            "பாத்தீயாடி! புருஷனெ வுட்டுக்க மாட்டேங்றா! எல்லாம் சாடிக்கேத்த மூடியாத்தாம் இருக்கு!"ன்னு செய்யுகிட்டெ சொல்லிட்டு வெங்குவும் கெளம்பி எழுந்துப் போவுது.
            அதெ பாத்துப்புட்டு ஆயியும் கெளம்பிப் போறா.
            செய்யு அந்த எடத்துலயே நின்னுகிட்டு யோசனைய ஓட வுட்டுக்கிட்டு நிக்குறா.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...