17 Apr 2020

அலையுறது அல்வா சாப்புடுறாப்புல!

செய்யு - 421        

            செய்யு ஆர்குடி கமலாம்பாள் தாயார் காலேஜூல எம்மெஸ்ஸி மேதமடிக்ஸ் முடிச்சி திருவாரூரு நேஷனல் காலேஜ் ஆப் எஜூகேஷன்ல பியெட்டு படிச்சிட்டு இருந்தா. எம்மெஸ்ஸி முடிச்சிட்டு எம்பில் மேதமடிக்ஸ் படிக்கணும்னு நின்னவளுக்கு எம்மெஸ்ஸி படிக்கணும்னு நின்னப்ப எப்படிப்பட்ட சூழ்நிலைய எதிர்கொண்டாளோ அப்பிடி ஒரு சூழ்நிலைய அதே மாதிரிக்கி மறுபடியும் எதிர்கொள்ளுற மாதிரி ஆயிடுச்சு. கிட்டத்தட்ட சம்பவங்களும் அதே மாதிரித்தாம் நடந்துச்சு என்னவோ டேப்பு ரிக்கார்டுல ரீவைண்டு ஆவுறாப்புல. அப்போ பியெட்டு படிக்காம தப்பிச்சது போல இந்த மொறை அவளால தப்பிக்க முடியல. அண்ணங்கார்ரேம் விகடு தொணைக்கு வரல. அவனெ கேட்டதுக்கு எம்மெஸ்ஸிய முடிச்சிட்டு பியெட்ட படிக்கிறேம்னு மின்னாடி சொல்லிப்புட்டு இப்போ பின்னாடி பெரண்டு போவக் கூடாதுன்னு சொல்லிட்டாம்.
            சுப்பு வாத்தியாரு பழைய பாட்டெ புதுப்பாட்டெ போல மறுபடியும் பாட ஆரம்பிச்சாரு. கிராமத்துல இதெ பழைய மொந்தையில புதிய கள்ளும்பாங்க. அப்பிடி இருந்துச்சு அவரோட பேச்சு. "இதுக்கு மேலல்லாம் படிக்க வைக்க நமக்குத் தெம்பு கெடையாது. பியெட்ட படிச்சு முடிச்சிட்டு ஆளெ வுடு. ரிட்டையார்டு ஆயி வூட்டுல கெடக்குறேம். ஒம் படிப்புக்கே வருஷத்துக்கு நாப்பதுனாயிரத்துக்கு மேல ஆவுது. இனுமே நமக்கு ன்னா வருமானம் இருக்கு. கலியாணத்த வேற பண்ணணும். பியெட்ட படிச்சு முடிச்சின்னா ஒரு தொழிலப் பாக்க உத்தரவாதம் ஆச்சு. எதாச்சிம் ஒரு பள்ளியோடத்துல வேலையப் பாத்து பொழைச்சிக்கிடலாம். ஒரு அப்பங்காரனா அதெத்தாம் மொதல்ல டிகிரிய முடிச்ச கையோட நாம்ம செஞ்சிருக்கணும். நீயி ஒஞ்ஞ அண்ணனோட பிடிவாதமா நின்னதுக்கு எம்மெஸ்ஸி முடிச்சாச்சி. அத்தோட நிறுத்திக்கோ. பொம்பளப் புள்ளைக்குப் படிப்பு இம்மாம் போதும். நீயி இதுக்கு மேல படிச்சீன்னாலும் அதுக்கு ஏத்தாப்புல மாப்புள்ளைப் பாத்து கட்டி வைக்க நம்மகிட்டெ தெம்பும் இல்லே,‍ பெலமும் இல்லே!"ன்னு அடிச்சிச் சொல்லிட்டாரு.
            வேற வழியில்லாம திருவாரூரு நேஷனல் காலேஜ்ல பியெட்ட படிச்சிட்டு இருந்தா செய்யு. அவ்வ படிச்ச நேரத்துல பியெட்டுங்றது ஒரு வருஷத்துப் படிப்புத்தாம். காலேஜூக்குப் போயி படிக்கிறதெ வுட பள்ளியோடத்துல உத்துநோக்குற பயிற்சி, கற்பிக்குற பயிற்சி அனுபவம்ன்னு அதுல பெரும்பாலான நாளுங்க போயிடும். பெறவு வருஷ கடைசியில பரீட்சைய எழுதுனா பியெட்டு முடிஞ்சிப் போயிடும். பியெஸ்ஸி, எம்மெஸ்ஸின்னு கஷ்டப்பட்டு படிச்சவங்களுக்கு பியெட்டுல பாடத்தெ நடத்துறதப் பத்தி படிக்கிறதுல ஒரு கஷ்டமும் இருக்காது. ரொம்ப எளிமையா பியெட்ட முடிச்சிப் போட்டுட்டு அந்தாண்ட வந்துடுவாங்க. அதால அவளுக்குப் பியெட்டு படிக்குறதுல ரொம்ப நேரம் உபரியா கெடைச்சிட்டு இருந்துச்சு. அந்த நேரம் பூரா அவ்வே எம்பில் கனாவுல கெடந்தா. எப்பிடியும் பியெட்ட முடிச்சிப்புட்டு பிடிவாதமா நின்னு எம்பில்ல பண்ணிப்புடணும்னு ஒரு மனத்திட்டத்துல இருந்தா.
            எம்பில் படிக்கணும்ன்னா அதுக்கு ஒரு நுழைவுத்தேர்வு எழுதியாவணும். அதுல தேறுறவங்க மட்டும்தாம் எம்பில்ல படிக்க முடியும். எம்மெஸ்ஸி படிச்சி முடிச்சி ஒடனே அந்தப் பாடத்துல நல்ல டச்சுல இருக்குறவங்க அதெ எளிமையா முடிச்சி எம்பில்ல சேந்துப்புடலாம். இப்போ இவ்வே பியெட்ட முடிச்சிட்டுச் சேர்றாப்புல நெலமெ இருக்குறதால, அந்த ஒரு வருஷ கால இடைவெளியில  எம்மெஸ்ஸி பாடங்களோட டச்சு விட்டுப்புடக் கூடாதுன்னு அந்தப் புத்தகங்கள எடுத்து வெச்சி வேற படிச்சிட்டுக் கெடந்தா. பியெட்ட முடிச்சிப்புட்டா அண்ணங்கார்ரேம் தொணை இருக்கும்கிறது அவளோட மனக்கணக்கா இருந்துச்சு.
            பொம்பளப் புள்ளையா இருக்கு, கலியாண வயசு நெருங்கிடுச்சுன்னு யோசனப் பண்ணி தூரத்துலப் போயில்லாம் மவள பியெட்ட படிக்க வைக்க வாணாம்ன்னு நெனைச்சுக்கிட்டு காசு போனாலும் பரவாயில்லன்னு பக்கத்துல திருவாரூரு டவுன்லயே தெனமும் போயிட்டு வந்துட்டு படிக்கிற மாதிரி படிக்க வைக்கணும்னு முடிவெ பண்ணிக்கிட்டு திருவாரூரு டவுனுக்குப் பக்கத்துல காட்டூருல இருக்குற நேஷனல் இன்ஷ்டிட்யூட் ஆப் எஜூகேஷன்ஸ்ல வெசாரிச்சாரு சுப்பு வாத்தியாரு. அவுங்க ஒரு பியெட்டு அட்மிஷன் ஒண்ணேகால் லட்சம்ன்னாங்க. அவர்ரப் பொருத்த வரைக்கும் பொண்ணுக்கு பியெட்டு படிப்பு முக்கியம்னு நெனைச்சதால பணத்தெ பெரிசா நெனைக்கல. அதே நேரத்துல சுப்பு வாத்தியாரு ரிட்டையர்டு ஆனதுல பணிக்கொடையா வந்திருந்த பணம் கணிசமா ரெண்டே முக்கால் லட்சம் இருந்துச்சு. பணத்தெ மவனுக்கும், மவளுக்குமுன்னு பிரிச்சிக் கொடுக்க வெச்சிருந்தாரு. அந்தப் பணத்துலேந்து எடுத்து கொஞ்சம் கூட யோசிக்காம, தாமசம் பண்ணாம மவள பியெட்டு காலேஜ்ல பணத்தெ கட்டிச் சேத்து வுட்டாரு.
            பியெட்டு காலேஜ்ல சேத்து வுட்ட கையோடு வூட்டுல யாருக்கும் தெரியாம பொண்ணோட ஜாதகத்தெ எடுத்துக்கிட்டு மறுக்கா இன்னொரு தடவே நாட்டியத்தாங்குடி ஜோசியரு கிட்ணாமூர்த்தி தேசிகருகிட்டயும், கொத்தூரு ஜோசியரு சங்கு சுப்பிரமணியத்துக்கிட்டயும் போயி நின்னாரு. அவுங்க ரெண்டு பேரும் ஜாதகத்தெ அலசிப் பாத்துப்புட்டு, ஒரே மாதிரியா கலியாண வேலைய ரண்டு வருஷம் தள்ளிப் போட்டா பரவாயில்லன்னு சொன்னாங்க. இதோட சாதகம் படிப்புக்கானா சாதகமுன்னும், நெறையப் படிக்க வுட்டுப்புட்டு பெறவு கலியாணத்தப் பண்ணுங்க, எந்தக் கொறையும் இருக்காதுன்னு அடிச்சிச் சொன்னாங்க. தள்ளிப் போட வேண்டியத்துக்கான காரணத்தெ கொத்தூரு ஜோசியரு சொல்லல. அவரு அபசகுனமா எதையும் சொல்ல மாட்டாரு. ஆனா நாட்டியத்தாங்குடி ஜோசியரு ரெண்டு வருஷத்துக்கு மின்னாடி அமையுற கலியாண வாழ்க்கெ சொல்லிக்கிற மாதிரி இருக்காதுன்னு கொஞ்சம் இலைமறை காயா சொன்னாரு. மவ்வேன் கலியாணத்துக்கு மின்னாடி மவனோட ஜாதகத்தப் பாக்குறப்ப, மவளோட ஜாதகத்தப் பாத்தப்பவும் இப்படித்தாம் ஏறக்கொறைய சொன்னாங்க, இப்பவும் இப்படித்தாம் சொல்றேங்களேன்னு சுப்பு வாத்தியாருக்கு தலைசுத்துறாப்புல ஆயிடுச்சு.

            "ஆம்பளப் பயெ அவனெ படிக்க வெச்சி பெரிசா ஆளாக்கியிருக்கணும். அந்தப் பயலும் என்னவோ கண்ட கண்ட பொத்தகங்கள படிச்சானே தவுர பாடப் பொத்தகத்தையும் மட்டும் படிக்க மாட்டேனுட்டாம். எப்பிடியோ ஒரு செகண்டரி கிரேட் வாத்தியாரு டிரெய்னிங்க படிக்க வெச்சி வாத்தியார்ர அனுப்பியாச்சு. செரி ஆனது ஆயிட்டாம். இதுலேந்து படிச்சி மின்னேறி ஒசந்தவங்க எல்லாம் இருக்காம். இந்தப் பயெ ன்னான்னா தலவாணி கணக்குக்கு கண்ட கண்ட கருமத்தெ வாங்கி வெச்சிக்கிட்டுப் படிச்சிட்டுக் கெடக்குறானே தவுர பொறுப்பா அஞ்சல் வழிப் படிப்புல ஒரு டிகிரிய படிச்சோம், அப்பிடியே பியெட்ட பண்ணோம், ஒரு புரோமஷன வாங்குனோம்னு யில்லே. நம்மள மாதிரியே செகண்டரி கிரேடா சேந்து செகண்டரி கிரேடாவே காலத்தெ முடிச்சிடுவாம் போலருக்கு. அப்பங்காரனெ வுட ஒரு படி மேல போனத்தான நமக்குப் பெருமெ. கலியாணம் ஆயி கொழந்தையப் பெத்துட்ட பயலுகிட்டெ இனுமே சொல்லி எடுபடாது. அவ்வேங் கதெ அவ்வளவுதாங். அப்பிடியே கெடந்து தொலையட்டும். பொம்பள புள்ள இத்து. எம்மெஸ்ஸி, பியெட்டு வரைக்கும் படிக்க வெச்சாவுது. இதுக்கு மேலயும் படிக்க வையி படிக்க வையின்னா வயசு ஆயிட்டு இருக்குது, கையில காசு கரைஞ்சிட்டு இருக்குது. பொண்ணு படிக்கத்தாம் நிக்குது. ஆன்னா ஒசத்தியா படிக்க வெச்சு ஒசத்தியான மாப்பிள்ளைய நாம்ம எங்க தேடிப் பிடிக்கிறது? இது பாட்டுக்கு எம்பில், பிஎச்டின்னு படிச்சிட்டுப் போனா அந்த அளவுக்குப் படிச்சவேம் நம்ம வகையறாவுல எவ்வேம் இருக்காம்? குடும்பத்துல ஆம்பளப் பயெ அந்த அளவுக்கு படிச்சி மின்னேறணும். அவ்வேம் முடியாதுன்னு கண்டது கழியதெ படிச்சிட்டுக் கெடக்காம். பொட்ட புள்ளே இத்து. ஒரு அளவோட படிச்சிட்டுக் குடும்பத்தெ பாக்க வேண்டியது. இத்துப் பாட்டுக்குச் சொன்னத்தெ கேக்காம படிச்சிக்கிட்டுப் போவுது. எல்லாம் ஏறுக்கு மாறாத்தாம் இருக்கே தவுர, ஒண்ணும் சொன்னத்தெ கேக்குறாப்புல யில்லே!"  இப்படியெல்லாம் அவரு மனசுக்குள்ள யோசனெப் பண்ணிக் கொழம்புறாரு. ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு இப்பிடி பலவெதமா யோசனெ பண்ணி கொழம்புறது சுப்பு வாத்தியாருக்கு அதிகமாயிடுச்சு. ஒரு மனுஷன் அரசாங்க வேலையில இருக்குறப்போ மனசுல இருக்குற பலம், ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு கிட்டதட்ட பாதியா கொறைஞ்சிடும். அதுலயும் பொண்ணு புள்ளைங்க பெரும்பாலும் சொன்னதெ கேக்காம அதது போக்குலத்தாம் போவுமா, அதுல இருக்குற பாதி பலத்துல இன்னும் பாதி பலம் கொறைஞ்சா இருக்குற கால்வாசிப் பலத்துலத்தாம் மனசு தள்ளாட்டமா இருக்கும். மனசுல பலவீனமான மனுஷன் முடிவு எடுக்க முடியாம கொழம்பத்தாம் செய்வாம். சுப்பு வாத்தியாரோட நெலமெ அப்பிடித்தாம் இருந்துச்சு.
            அதே நேரத்துல இப்படியும் யோசனையப் பண்றாரு. "சாதகம் சாதகம்ன்னு எவ்வளவுதாங் யோசிச்சுக்கிட்டு கெடக்குறது? ஒரு மனதிருப்திக்கு பாக்குறதுதாங் சாதகம். சாகத்துல சொல்றதெல்லாம் அப்பிடியேவா நடக்குது? சாதகத்தெ பாக்காமலும் கலியாண ஏற்பாடுகள பண்ண முடியாது, சாதகத்தெ மட்டும் பாத்துக்கிட்டும் கலியாண ஏற்பாடுகள தள்ளிப் போட்டுக்கிட்டுக் கெடக்க முடியாது. அதது காலா காலத்துல நடந்தாத்தாம் நல்லா இருக்கும். பொண்ண போற போக்குல வுட்டா அது பாட்டுக்குப் படிச்சி முடிச்சிப்புட்டு முப்பது வயசுலத்தாம் கலியாணத்தெ பண்ணி வைக்கலாம். இதெப் பத்தி நமக்குன்னு பொறந்திருக்கானே மவ்வேங்கிட்டெ கேட்டா அதுக்கென்னப்பா படிக்கட்டும் தங்காச்சின்னு அவ்வேம் பாட்டுக்குச் சொல்லிட்டுப் போவாம். கொஞ்சம் கூட பொதுஅறிவும் கெடையாது. ஒலக அறிவும் கெடையாது. ஏம்டா அறிவுகெட்ட பயலே ஒங் கணக்குக்கு ஒந் தங்காச்சிக்கு முப்பது வயசுல கலியாணத்தப் பண்ணி வெச்சி, பெறவு கொழந்தைய எப்ப பெத்துக்கிட்டு அதெ எப்பிடி வளக்குமுன்னு கேட்டா, அதெல்லாம் ஒஞ்ஞக் காலம்பாம். இப்போல்லாம் அப்பிடித்தாம்ப்பா கோட்டிப் பிடிச்ச பயெ. ரண்டு வருஷம் கழிச்சிப் பண்ணா கலியாணம் ந்நல்லா இருக்குங்குது சாதகம். இப்ப பாக்க ஆரம்பிச்சாவே சமயத்துல நாம்ம நெனைக்குற மாதிரிக்கி மாப்புள்ள அமைய ரண்டு வருஷம் ஆனாலும் ஆவும். இவ்வே பியெட்ட முடிக்கிறதுக்கு ஒரு வருஷம் ஆவும். அப்பிடியே கலியாண ஏற்பாடு அது இதுன்னு தள்ளிக்கிட்டு ரண்டு வருஷத்துல வந்துதாம் நிக்கும்!"ன்னு அப்பிடியும் இப்பிடியுமா யோசிச்சு பொண்ணுக்கு மாப்புள்ளையப் பாக்குற வேலையில எறங்ககுறதுன்னு எப்பிடியோ துணிஞ்சிட்டாரு.
            சுப்பு வாத்தியாருக்கு மவ்வேன் கலியாணத்துலேந்து தஞ்சாவூரு நேரியப்ப பத்தருல்லா ஆஸ்தான கலியாண அமைப்பாளரா இருக்காரு. அவருகிட்டெ வூட்டு சனங்க யாருக்கும் தெரியாம ஆர்குடி டிரசரி வரைக்கும் பென்சன் சம்பந்தமா விசாரிக்கப் போறதா ஒரு கதையச் சொல்லிப்புட்டு, ஜாதகத்தோட அங்க போயி நின்னாரு. நேரியப்ப பத்தரு பாட்டுக்கு ஜாதகத்தெ ஏரியா வாரியா பிரிச்சி அள்ளிப் போடுறாரு. அத்தோட நேரியப்ப பத்தரு சொல்றாரு, "அலைஞ்சிட்டுக் கெடக்க வாணாம் வாத்தியார்ரே! மவளோட சாதகம்தாம் நம்மகிட்டெ இருக்குல்லா. அதுக்கு ஏத்தப்படி ந்நல்லா சாதகமா வர்றப்பல்லாம் அதெ ஒரு செராக்ஸ் பண்ணி வெலாசத்துக்கு அனுப்பிப் புடுறேம். வர்ற ஒவ்வொரு சாதகத்துக்கும் நூத்து ரூவாய கணக்குப் பண்ணி மணியார்டர்ர நம்ம வெலாசத்துக்கு பண்ணி வுட்டுப்புடுங்க. ஒங்களுக்கும் வந்துட்டுப் போற அலைச்சலும் மிச்சம், காசியும் மிச்சம். நமக்கும் ஒங்களுக்காக சாதகத்தெ தேடிக்கிட்டு இருக்குற வேலையும் மிச்சம். அப்பப்ப காரியம் ஆயிடும். வேற ஒரு பயெ நம்மகிட்டெ வந்து அவ்வேம் அந்த சாதகத்த முடிக்கிறதுக்கு மின்னாடி நீஞ்ஞ நமக்கு ரொம்ப வேண்டுனவரு முடிச்சிப்புடலாம் பாருங்க. நம்மகிட்டெ புதுசு புதுசா சாதகம் வர வர அதெ பாத்துட்டு அத்து ஒஞ்ஞ மவளுக்குக்குப் பொருத்தமா இருந்தா அனுப்புவேம். இல்லன்னா விட்டுடுவேம். வேல சுளுவா முடிஞ்சிடும் இல்லே!" அப்பிடின்னு.
            சுப்பு வாத்தியாருக்கும் இந்த யோசனைப் பிடிச்சிப் போயி, இப்போ வாங்குன சாகத்துக்குப் பணத்தைக் கொடுத்துப்புட்டு, வெலாசத்தை ஒரு தாள்ல எழுதிக் கொடுத்துப்புட்டு வூடு வந்து சேர்ந்தாரு. வூடு வந்து சேர்ந்ததும் மொத வேலையா வாங்கிட்டு வந்த சாதகத்துல உள்ள ஒவ்வொரு எடமா போயி மாப்புள்ள பையன் எப்பிடி இருக்காங்றதெ கண்ணும் கண்ணும், காதும் காதும் வெச்சாப்புல விசாரிக்க ஆரம்பிச்சாரு. தெனமும் டிவியெஸ்ஸ எடுத்துக்கிட்டு அவரு அலையுறது எதுக்குன்னு அவருக்கு மட்டுமே தெரிஞ்சிச்சு.
            "ஏம் இப்பிடி மாமா அஞ்ஞயும் இஞ்ஞயும் வயசான காலத்துல அலைஞ்சிட்டுக் கெடக்குறாங்க?"ன்னு ஆயி மாமியாக்காரி வெங்குகிட்டே கேக்குது.
            "ரிட்டையர்டு ஆனதுல ன்னா பண்றதுன்னு தெரியல போலருக்கு. அதாங் மண்டெ கொழம்பி அங்ஙனயும் இங்ஙனயும் அலைஞ்சிட்டுக் கெடக்குறாரு. ஒம்மட மாமனாருக்குத்தாம் அலையுறதுன்னா அல்வா சாப்புடுறாப்புல. வூட்டுல ஒரு காலும், வெளியில ஒரு காலும் வெச்சிட்டுத்தாம்தான்ன நிப்பாரு. வண்டி ஒரு கேடு. கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு அலைஞ்சாத்தாம் திருப்திப்படும். வெளியில போவலன்னா மண்டெல்லா வெடிச்சிப் போயிடும். ரிட்டையர்டு வேற ஆயிருக்காருல்லா. மனசு ஒரு மாரியா இருக்கும். ஒண்ணுத்தையும் சொல்லக் கூடாது. கொஞ்ச நாளு இப்பிடி அலைஞ்சிட்டுக் கெடந்து அலுத்துப் போயி வுட்டுப்புடுவாரு. நீயி போயி வேலயப் பாரு ஆயி! ஒம்மட மாமனாரு கலியாணம் ஆன காலத்துலேந்து எங்கப் போறேம்? எங்க வர்றேம்?ன்னு ஒரு வார்த்தெ சொல்றது கெடையாது. மவனுக்கும் கலியாணம் ஆயிடுச்சு. மவளுக்குக் கலியாணத்தெ பண்ணணும். இன்னும் இப்பிடியே இருந்தா என்னத்தெ பண்றது? அத்து செரி! ஏம்டி ஆயி எல்லாத்துக்குமா ஒம்மட புருஷன் மாதிரி ஆம்பளெ வாய்ப்பாம்? அடை வெச்ச கோழி மாதிரிக்கி வூட்டுக்குள்ள புத்தகத்தோட அடைஞ்சிக் கெடப்பாம். அவ்வேம் உள்ளார உக்காந்திருந்தான்னா அடிச்சி மொதல்ல வெளியில தொரத்து. காத்தாட சித்தெ வெளியில போயிட்டு வாரட்டும்!"ன்னு அது பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிடுச்சு.
            சுப்பு வாத்தியாரு அப்பிடித்தாம். ஒரு வேலைய முடிச்சிட்டுத்தாம் விசயத்த வெளியில சொல்லுவாருங்றதும், அதுவரைக்கும் ரொம்ப கமுக்கமாத்தாம் நடந்துப்பாருங்றதும், காரியம் நடக்குறப்பத்தாம் எதுக்காக அலைஞ்சிட்டுக் கெடந்தாரு, ஏம் அலைஞ்சிட்டுக் கெடந்தாருங்ற விசயமே வெளியில தெரியும்ங்றதும் இதெ படிச்சிட்டு வர்ற ஒங்களுக்கும் நல்லாவே தெரியும். அதெ திரும்ப திரும்ப சொல்றதுக்கு ஒண்ணுமில்லே. சொல்லாம இருக்கவும் முடியல.
            பொண்ணு பியெட்ட முடிக்கணும், முடிச்ச கையோட கலியாணத்தையும் முடிக்கணுங்ற சங்கல்பம் சுப்பு வாத்தியாரோட மனசுல உண்டாயிடுச்சு. பொதுவா இந்த சாதகங்ற ஒண்ண கையில வெச்சிக்கிட்டு அப்பங்காரவுங்க வரன் தேடி அலையுற அலைச்சல குத்துமதிப்பா கணக்குப் பண்ணா பூமிக்கும் சூரியனுக்கும் ஆயிரம் தடவெ பயணம் போய்ட்டு வந்துப்புடலாம். சாதகம் சாதகமா அமையுற வரைக்கும் அவுங்க அலையுற அலைச்சல் இருக்கே பூமி கூட சூரியனெ அந்த அளவுக்குச் சுத்தியிருக்காது, நிலவும் கூட பூமிய அந்த அளவுக்கு சுத்திருக்காது. அம்மாம் அலைச்சலும் சுத்தலும் பிடிச்ச வேல அது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...