16 Apr 2020

அத்தானைத் தேடி வந்த மச்சாங்காரன்!

செய்யு - 420        

            சுப்பு வாத்தியாரு ரிட்டையர்டு ஆன விசயத்தை யாருகிட்டெயும் பெரிசா சொல்லிக்கல. அவரு வூட்டுல இருக்குறதெ வெச்சி ஊருல இருக்குறவங்க அதெ புரிஞ்சிக்கிட்டாங்க. "வாத்தியாருக்கு வேல முடிஞ்சிப் போயிடுச்சுப் போல!"ன்னு அவங்கவங்களும் பேசப் போவ சேதி காதோட காதா காத்துல கலந்து வீயெம் மாமாவுக்கும் தெரிஞ்சிது. கிட்டத்தட்ட சுப்பு வாத்தியாரு வூட்டுக்கும், வீயெம் மாமா வூட்டுக்கும் தொடர்பு அந்துப் போயிருந்துச்சு. ஒருத்தருக்கொருத்தரு எதையும் கண்டுக்கிடறதில்லன்னு நெலமெ ஆகியிருந்துச்சு.
            ஆனா,
            சுப்பு வாத்தியாரு ரிட்டையர்டு ஆன சேதி கேள்விப்பட்டு வீயெம் மாமா அதிசயமா வூட்டுக்கு வந்துச்சு. ஒரு நாளும் இல்லாத திருநாளா வீயெம் மாமா வர்றதப் பாத்துப்புட்டு, மச்சங்காரன் மனசு திருந்தி வர்றதா நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. வீயெம் மாமா வர்றதப் பாத்துப்புட்டு வூட்டு சனங்க பூரா அதிசயத்தப் பாக்குறாப்புல ஒண்ணு கூடிப்புட்டுங்க. மனசு திருந்தித்தாம் வர்றாம் மவராசன்னு எல்லாமும் நெனைச்சதுங்க.
             அதாங் இல்லே.
            "யத்தாங்! ரிட்டையர்டு ஆனதா கேள்விப்பட்டேம்! அதாங் பாத்துட்டுப் போவலாம்னு வந்தேம்! ஊருல ஒருத்தருக்குச் சொல்லாம இப்பிடி பண்ணிப்புட்டீங்களே யத்தாம்! நாம்ம வெரலுக்கு ஒரு மொதிரம் போடணும்னு நெனைச்சிட்டிருந்தேம்! போட வுடாம பண்ணிப்புட்டீங்களே யத்தாம்!"ன்னு வீயெம் மாமா சொன்னப்ப சுப்பு வாத்தியாருக்குச் சந்தோஷம்.
            அதுக்குப் பெறவு,
            "பட்டறையில கணக்கு வழக்கப் பாத்துக்கிட்டு வரவு செலவ பண்ண ஆளில்லாம செருமப்படுறேம். ரொம்ப பெருந்தோதா போயிடுச்சு. சமாளிக்க முடியல யத்தாம். நமக்கு ‍அலையுறதுக்கே நேரம் பத்தல. பட்டறையோட கணக்கு வழக்கப் பாத்துக்கிட ஒரு பொம்பளப் புள்ளயப் போட்டிருக்கேம். இருந்தாலும் வரவு செலவையெல்லாம் அத்து கையில ஒப்படைக்க முடியுமா நெனைச்சிப் பாருங்க? கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணீங்கன்னா ஒதவியா இருக்கும். வேலையில்லாம் ஒண்ணுங் கெடையாது. சொழல்ற நாற்காலிய வாங்கிப் போட்டுடுறேம். மின்னாடி மேசையப் போட்டுடுறேம். மேல எந்நேரத்துக்கும் பேனு சுத்திக்கிட்டே இருக்கும். உக்காந்துக்கிட்டு வர்றவம் போறவம்கிட்டெ காசி பணத்தெ சரியா கொடுக்கல் வாங்கல் பண்ணிக்கிட்டு அதெ நோட்டுல குறிச்சிக்கிட்டா போதும். கணக்கு வழக்கோள ஒங்கள நம்பி வரவு செலவ ஒப்படைச்சா நாம்ம இன்னும் நாலு எடத்துக்கு அலைஞ்சி நாலு வேலைய கூடுதலா பிடிக்கலாம் பாருங்க. பணங் காசி பொழங்க வேண்டிருக்கதால வேத்தாள போட்டா என்னத்தெ வாணாலும் பண்ணுவாம். பணத்தோட ஓடுனாலும் ஓடுவாம். ச்சும்மால்லாம் வேல பாக்க வாணாம் யத்தாம்! மாசம் பொறந்தா அய்யாயிரத்தெ நம்மள கேக்க வாணாம். நீஞ்ஞளே கணக்க எழுதி வெச்சிட்டு எடுத்துகிடலாம் யத்தாம்!" அப்பிடினிச்சு வீயெம் மாமா.
            இதெ கேட்டுட்டு இருந்த வெங்குவுக்குக் கோவம் வந்துட்டு. "ஏம்டா ஒம்மட வயசு ன்னா? அத்தாங்காரரோட வயசு ன்னா? அவருகிட்டெ காசிய வாங்கிட்டு நின்ன பயெ! இன்னிக்கு அவருக்கு நீயி வேலய கொடுக்குறேங்றீயா? அவருகிட்டெ வாங்குன காசியில எத்தினிய நீயி திருப்பிக் கொடுத்திருக்குறே? அதெ சொல்லுடா மொதல்ல!" அப்பிடினிச்சு வெங்கு.
            "இந்தாரு யக்கா! யத்தாங்ற உரிமையில கேக்குறேம். அதுக்கு நமக்கு எல்லாமும் இருக்கு தெரிஞ்சிக்கோ. இந்தக் காலத்துல காசி இருந்தாத்தாம் மதிப்பு. பெத்தப் பயலா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் காசி இருந்தா மதிக்கும். இல்லன்னா தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயிட்டே இருக்கும். பணத்தெ சம்பாதிக்கத் தெரியணும். ச்சும்மா இருந்தால்லாம் நீயி கூட யத்தான மதிக்க மாட்டே. காசி வர்றப்ப அதெ கப்புன்னு பிடிச்சிக்கணும். வேல நமக்கு ரொம்ப பெரிய அளவுல போயிட்டு இருக்கு. கவர்மெண்டு கான்ட்ராக்ட்லாம் எடுக்கப் போறேம். இந்த நேரத்துல யத்தாம் மாதிரி ஒரு ஆளு நம்மட பக்கத்துல இருந்தா ஊர்ல ஒரு பய சம்பாதிக்க முடியா. இந்தாருக்கா! பட்டாமணியோட பட்டறைய ஒத்திக்கிப் பிடிக்கலாம்னு இருக்கேம். மாசத்துக்கு மாசம் இருவதாயிரம் கொடுத்துப்புட்டா பட்டறை நம்ம கையில. மர அறுவை, மரத்த வாங்கி விக்குறது, மரத்துல சாமாஞ் செட்டுகள செஞ்சி விக்குறதுன்னு தோது ரொம்ப பெருந்தோது எல்லாம். நமக்கு ஒத்தாசைக்கி ஆளு பத்தல. சொந்தத்தெ வுட்டுப்புட்டு வேறெங்க போவச் சொல்றே? யத்தாங் கையி சுத்தம். காசி பணத்தெ வரவு செலவ நம்பி ஒப்படைக்கலாம். கணக்கு வழக்கையும் சரியா பாத்துப்பாரு. யத்தானோட இந்த யித்துப் போன டிவியெஸ்ஸ கடாசிப்புட்டு அவருக்கு டிவியெஸ்லயே ஒரு ஸ்கூட்டி வண்டிய லோன்ல எடுத்துத் தர்றேம். ச்சும்மா போற எடத்துக்கு ஓட்ட வண்டிய வெச்சிக்கிட்டு டர்ரு டர்ருன்னு போவாம ச்சும்மா விர்ருன்னு ஸ்கூட்டிலயில புது வண்டியில போவலாம் பாரு. மாசா மாசம் லோன் காசிய வேணும்னாலும் நாமளே கட்டுறேம். யத்தாம் கவர்மெண்டு வேலையில சம்பாதிச்சதெ வுட அதிகமா சம்பாதிக்க வைப்பேம் நாம்ம நெனைச்சேம்ன்னா!" அப்பிடினுச்சு வீயெம் மாமா.

            "ன்னடா இத்தன நாளும் ஒறவுமில்லாம ஒட்டுமில்லாம இப்ப வந்து நின்னுகிட்டு காசி பணம்ன்னு ஆசையக் காட்டிட்டு நிக்குறே? ஒரு பொண்ணோட வாழ்க்கையக் கெடுத்து குட்டிச்சுவரா ஆக்குனப் பயலுக்கு இந்த வூட்டுல ன்னடா வேல? வேல கொடுக்குறானாம் வேல? இவ்வேம் பாக்கற வேல தெரியாதுல்ல நமக்கு? மரத்த வாங்குறதுல ஒரு கமிஷன், விக்குறதுல ஒரு கமிஷன், அதெ பலவையா அறுக்குறதுல ஒரு கமிஷன், அதுக்குச் சாமாஞ் செட்டுகள வாங்குற எடத்துல ஒரு கமிஷன், வேலைய செஞ்சுக்கு கொடுக்குறதுல ஒரு கமிஷன்ன்னு நமக்கென்ன நீயி பண்ற வேல தெரியாதுன்னு நெனைச்சியா? யாரு வூட்டுப் பாவத்தெ வாங்கிக் கொட்டிக்கிறதுக்கு எம் புருஷம்தானடா ஒமக்கு பங்குப் போட கெடைச்சாரு? பாவத்தப் பண்ணி பணத்தெ சம்பாதிச்சிக்கிட்டு நிக்குறேடா நீயி! நடுத்தெருவுல நிக்கணுங்றதுக்காகவே வேலயப் பண்ணிக்கிட்டு இருக்கே. அதுல ஏம்டா எம்மட புருஷன இழுக்குறே? பொண்ணோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டு நிக்குறப் பயலுக்கு இஞ்ஞ ன்னடா வேல?"ன்னுச்சு வெங்கு கோவமாவும், சத்தமாவும்.
            சுப்பு வாத்தியாரு ஒண்ணும் பேசல. மெளனமாத்தாம் நின்னாரு. வெங்கு இப்பிடி சத்தம் போட்டதெப் பாத்துட்டு சுத்தி வந்த நின்ன மவன் விகடு, மருமக ஆயி, பொண்ணு செய்யுன்னு யாரும் ஒண்ணும் பேசாம மெளனமா நிக்குறாங்க.
            "ஒன்னய ஒண்ணும் கேக்கல. நீயி ச்சும்மா வாயப் பொத்து. யத்தாங் ன்னா சொல்றீங்க? டேய் யம்பீ! ஒன்னயும்தாம் கேக்குறேம்? இந்த வூட்டோ மருமவப் பொண்ண ஆயி ஒன்னயும்தாம் கேக்குறேம்? வேலையெல்லாம் பெரிய வேல கெடையாது. மேம்பார்வை பாக்குற வேலத்தாம். உக்காந்துகிட்டு கணக்கு வழக்கப் பாத்து வரவு செலவு பண்றதுதாம். ஓனரு மாதிரிக்கி உக்காந்துக்கிட்டு ஓனரு மாதிரிக்கி எழுந்திரிச்சி வார வேண்டியதுதாங்!"ன்னிச்சு வீயெம் மாமா கடைசியா கடைசி அஸ்திரத்தையும் பிரயோகிக்கிறாப்புல வார்த்தைய விட்டு.
            வெங்கு பேச வாயெடுத்ததுப் பாருங்க, ஒண்ணும் பேசாதங்ற மாதிரிக்கி ஒரு பார்வையப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. தொண்டையிலேந்து நாக்கு நுனி வரைக்கும் வந்த வார்த்தையே அப்பிடியே திரும்ப போட்டு முழுங்கிக்கிடுச்சு வெங்கு. சுப்பு வாத்தியாரு மொகம் போன போக்கப் பாத்துப்புட்டு அத்து ஒண்ணும் பேசக் கூடாதுங்றதுக்கான அறிகுறின்னு அததவும் பேசாம நின்னுச்சுங்க. இந்நேரம் வரைக்கும் வூட்டுக்கு வந்த விருந்தாளிக்கு சுப்பு வாத்தியாரு டீத்தண்ணியப் போட்டுக் கொடுன்னு சொல்லாம இருக்குறப்பவே அவரு மனசுக்குள்ள எம்மாம் கடுப்புல இருக்கிறாங்றதெ ஒவ்வொண்ணும் மனசுக்குள்ள யூகிச்சிக்கிட்டுங்க.
            யாருமே பதிலு ஒண்ணும் பேசாதப் பாத்து ஒரு நிமிஷம் அப்படியே நின்னுச்சு வீயெம் மாமா.
            "நெனைச்சேம்! நம்மள அவமானப்படுத்தித்தாம் அனுப்புவீங்கன்னு. கெளம்புறப்பவே கோகிலா சொன்னா. போவாதீங்க கேக்காதீங்கன்னு. மீறிட்டு வந்ததுக்கு ந்நல்லா வெச்சி செய்யுறீங்க யில்லே? இப்பிடியே காலம் போயிடும்னு நெனைக்காதீங்க? நாளைக்கு நம்ம கால்ல வந்து வுழுவுற நெலமெ வரும்! காசி பணம்ன்னா லேசுல நெனைக்குறீங்க யில்லே? ஊருல ஒங்களுக்கு ன்னா செல்வாக்கு இருக்கு? நாளைக்கி ஒரு பெரச்சனைன்னா நாம்மத்தாம் வந்து நிக்கணும். நாலு பேரு ஒதைச்சுப் போட்டாலும் கேக்குறதுக்கு நாதியில்லே. அப்பே எம்மட வூடு தேடி வருவே யில்லே யக்கா! ஒன்னத்தாம் வருவே யில்லே! வருவே! நிச்சயம் வருவே! அப்பப் பாத்துக்கிடறேம். எம்மாம் மருவாதியா யக்கா வூடாச்சேன்னு நெனைச்சு வந்தேம்! என்னத்தத்தாம் இருந்தாலும் நம்மட யத்தானேச்சுன்னு வந்தா, நீஞ்ஞ பண்ணுற மருவாதி ந்நல்லா இருக்கு? இருங்க இப்பிடியே இருங்க! எத்தினி நாளுக்கு இப்பிடியே இருக்குறீங்கன்னு பாக்குறேம்? நம்மோட நெலமெ தெரியாம நடந்துக்குறீங்க! நடந்துக்குங்க. எல்லாம் நல்லதுக்குத்தாம்! அப்போ எல்லாத்துக்கும் வரட்டா!"ன்னு விருட்டுன்னு கெளம்பி வெளியில போனுச்சு வீயெம் மாமா.
            அதுக்கு மேல வெங்குவால வாயை அடக்கிக்க முடியல. சுப்பு வாத்தியாரு பார்வையையும் மீறிப் பேசுனுச்சுப் பாருங்க,
            "எலே போடா போடா! அப்பிடில்லாம் ஒரு நெலமெ எங் குடும்பத்துக்கு வாராது. நீயி யில்லாமலே எம் பொண்ணு கலியாணத்தெ எப்பிடி நடத்துறேம் பாருடா போக்கத்தப் பயலே! நாலு காசி கையில வந்துட்டா நீயில்லாம் பெரிய ஆளாடா? நீயும் ஒம்மட யண்ணனும் இந்த நெலையில இருக்குறதுக்கு யத்தாம்தாம்டா காரணம். ஒங்கள கையி தூக்கி வுட்டவரே அவருதாம்டா. இன்னிக்கு நீஞ்ஞ அவர்ர கையித் தூக்கி விடுறீங்களா? போங்கடா போங்கடா! ஒங்க தயவும் தேவையில்லே. நீஞ்ஞளும் தேவையில்ல! நீயி மொதல்ல நல்ல மனுஷனா இருடா! அப்பிடியிருந்தா யத்தாம் ஒத்த காசிய வாங்காம ஒனக்கு ஒங் காலடியில கெடந்து வேலையப் பாப்பாருடா நம்மட எச்சிப்பாலு குடிச்சி வளந்த பயலே!"ன்னு வீயெம் மாமா போவப் போவ பேசிக்கிட்டே இருந்துச்சு வெங்கு.
            "யம்மா! நீயி சித்தெ ச்சும்மா இருக்க மாட்டே வாய வெச்சிக்கிட்டு?" அப்பின்னாம் விகடு.
            "ஏட்டி ஆயி! ஒம்மட புருஷன அழைச்சிட்டுப் போயி சோத்தப் போட்டு கொஞ்சம் அதுல கொஞ்சம் உப்பப் போடு!" அப்பிடினிச்சு வெங்கு மருமவகிட்ட.
            "ஏஞ்ஞ நீஞ்ஞ சித்தெ ச்சும்மா இருக்க மாட்டீங்களா வாய வெச்சிக்கிட்டு? காலங் காத்தாலயே யத்தை வாயால திட்டு வாங்க வெச்சிக்கிட்டு?"ன்னு மூஞ்ச திருப்பிக்கிட்டுப் போனா ஆயி.
            "ந்தா நிக்குறாளே ஒருத்தி! இவளுக்கு காலா காலத்துல ஆவ வேண்டியது ஆயி ஒருத்தம் கையில ஒப்படைச்சிருந்தா இப்பிடி இந்தப் பயெ வந்து கேட்டுக்கிட்டு நிப்பானா?"ன்னு மவ செய்யுவப் பாத்து அவ்வே தலையில நங்கு நங்குன்னு நாலு குட்டைப் போட்டு கண்ணுலேந்து தண்ணிய வுட ஆரம்பிச்சிடுச்சு வெங்கு.
            "யம்மாடி! நமக்குக் காலேஜூக்கு நேரமாச்சு ஆளெ வுடு! இன்னிக்கு நாம்மதான கெடைச்சேம் ஒம்மட வாயில பூந்துப் பொறப்பட!"ன்னு கெளம்பி ஓட ஆரம்பிச்சிட்டா செய்யு.
            அப்போ,
            "போங்க! அவுங்கவங்களும் அவுங்கவுங்க வேலையப் பாருங்க!"ன்னு கழுத்தச் சுத்திக் கெடந்த துண்டை ஒரு ஒதறு ஒதறி தோள்ல போட்டுக்கிட்டுக் கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாம்னே பாத்தேம்! ன்னா இன்னும் அவுங்கவுங்க வேலையப் பாக்கப் போங்கங்ற வார்த்தெ யப்பா வாயிலேந்து வரலேன்னு பாத்தேம்? போங்க யப்பா! ஒஞ்ஞப் பேத்தி இன்னும் தூங்கிகிட்டுக் கெடக்குது. அதெ தூக்கித் தோள்லயும் தலையிலயும் வெச்சிக்கிட்டு ஒங்க வேலையப் பாக்கப் போங்க!"ன்னு வெடுக்குன்னு துடுக்கா சொல்லிட்டு மொகத்தெ சுளிச்சுகிட்டெ  கொஞ்சம் நெதானிச்சி நின்னு சொல்லிப்புட்டுப் போறா செய்யு.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...