15 Apr 2020

ஒண்ணாப்பைத் தாண்டாத வாத்தியாரு!

செய்யு - 419        

            ரெண்டாயிரத்து பன்னெண்டாவது வருஷம் சுப்பு வாத்தியாரு ரிட்டையர்டு ஆவுறாரு. ஒண்ணாப்பு வாத்தியாரா வேலைக்குப் போயி ஒண்ணாப்பு வாத்தியாராவே ரிட்டையர்டு ஆனவரு அநேகமா அவராத்தாம் இருக்கும். எந்த வித முன்னேத்தமும் இல்லாம ரிட்டையர்டு ஆனதுல அவருக்கு வருத்தமில்லே. ஆனா ரிட்டையர்டு ஆவுறது அவருக்கு வருத்தமா இருந்துச்சு. பள்ளியோடம், புள்ளைங்க, பாடஞ் சொல்லிக் கொடுக்குறது, புள்ளைங்க கையப் பிடிச்சி ஆன்னா ஆவன்னா எழுத வைக்கிறது, ஒண்ணு ரெண்டு மூணுன்னு அதை புள்ளைங்க வாயிலேந்து பொறப்பட்டு வர்ற வரைக்கும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்குறது, பள்ளியோடத்து ரிக்கார்டு வேலைகள ராத்திரிப் பகலா உக்காந்து எழுதுறதுன்னு பரபரப்பா இருந்த ஆளு ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு எப்பிடி இருக்கப் போறேம்ங்ற கவலையில இருந்தாரு.
            ரிட்டையார்டு ஆவுற வாத்தியாருமாருகளுக்கு ஒரு விழாவ ஏற்பாடு பண்ணி, விழாவுக்குன்னு பணத்தெ வசூலு பண்ணி மோதிரம், செயின்னுன்னு போட்டு வுட்டுக் கையில கொஞ்சம் காசியையும் கொடுத்து, பள்ளியோடத்துலேந்து மேள தாளம்லாம் ஏற்பாடு பண்ணி  வழியனுப்பி வூட்டுல கொண்டாந்து விடறது இங்க ஒரு வழக்கம். அந்த வழக்கப்படி விழாவ ஏற்பாடு பண்ணலாம்னு பள்ளியோடத்துலயும், வாத்தியாருமாருககிட்டேயும் பேச்சு அடிபட்டப்பவே சுப்பு வாத்தியாரு சொல்லிட்டாரு, "விழால்லாம் பண்ணாதீயே! பண்ணாலும் நாம்ம அன்னிக்கு வார மாட்டேம்! ரிட்டையர்டு ஆவறேம். அதால அன்னிக்கு வேணும்னா நமக்குள்ள நம்மட வாத்தியாருமாருககுள்ள ஒரு டீ பார்ட்டி மட்டும் வெச்சிக்கிடலாம். வேற பெருந்தோது எதாச்சிம் பண்ணீங்கன்னா அன்னிக்குப் பள்ளியோடம் வராம லீவுல்ல இருந்திடுவேம்!" அப்பிடின்னிட்டாரு.
            சுப்பு வாத்தியாரு இப்பிடிச் சொன்னதுக்குப் பெறவு அவரோட சேக்காளியான விநாயகம் வாத்தியார்ர வுட்டு பேசிச் சரி பண்ணறதுன்னு மித்த மித்த வாத்தியாருமாருக முடிவு பண்ணி அவர்ர அனுப்பி வெச்சிப் பேசிப் பாத்தாங்க. விநாயகம் வாத்தியாரும் பிடி கொடுக்காம சுப்பு வாத்தியார் வூட்டுக்கு வந்து பேச்சுக்குப் பேச்சு எதிர்பேச்சு பேசிப் பாத்தாரு.
            "இதென்னயா வாத்தியார்ரே! நீஞ்ஞ பாட்டுக்கு இதெல்லாம் வேணாம்னுட்டா பெறவு இது ஒரு வழக்கமாயி நாம்ம ரிட்டையர்டு ஆவுறப்போ ஒண்ணும் பண்ணாம போயிட்டா நம்ம நெலமெ என்னாவுறது? நாம்ம ரிட்டையர்டு ஆவுறப்போ தாரை தப்பட்டையெல்லாம் வெச்சி, கொறவன் கொறத்தி டான்ஸ்லாம் பண்ணித்தாம் நம்மள பள்ளியோடத்துலேந்து வூட்டுக்குக் கொண்டாந்து வுடணும்ன்னு சொல்லிட்டு இருக்குறேம்!"ன்னு சுப்பு வாத்தியாருகிட்டெ கிண்டி விட்டதெ போல ஆரம்பிச்சாரு விநாயகம் வாத்தியாரு.
            "கவர்மெண்ட காசிய வாங்கிக்கிட்டு வேலையப் பாத்துக்கிட்டு, என்னவோ காசியே வாங்காம வேல பாத்த தியாகியப் போல நமக்கு நாமளே ஒரு விழாவ வெச்சி இப்பிடி பண்ணிக்கிட்டா அத்து நல்லாவா இருக்கும்? அதாங் வேணாம்ன்னு மனசுல பட்டுச்சு! வேணாம்னுட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பெறவு வாத்தியாருகளா சேந்து வாத்தியார்ர இருக்குற நாமளே இப்பிடி ஒரு கெளரவம் பண்ணிக்கிடலன்னா வேற யாரு பண்ணுவா?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதெல்லாம் ஒங்களுக்குப் பண்ணிக்கிடலாம். நமக்கு வாணாம் வாத்தியார்ரே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னத்தெ சொல்றது போங்க. வேல வேலன்னு வேலய மட்டும் பாத்த ஒஞ்ஞளுக்கு ஒரு விருதும் கொடுக்கல. இப்போ நாங்களும் ஒரு விழாவ எடுக்கலன்னா நல்லவா இருக்கும்?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "திரும்ப திரும்ப அதையே சொல்றேம்னு நெனைச்சுக்காதீய! விசயம் ஒண்ணுதாம்! சம்பளத்துக்கு வேலையப் பாத்துப்புட்டு, மாசா மாசம் கை நெறைய காசியையும் வாங்கிப்புட்டு அதுக்கு விருது வேறயா? சம்பளம்லாம் வாங்காம சிரமபரிகாரமா பாக்குற சேவைக்குக் கொடுக்குறதுக்குப் பேருதாம் விருது. நாம்ம பாத்த வேலைக்குக் கொடுத்த சம்பளம் பெரிசு. அதுதாங் விருது, மாசா மாசம் கொடுத்தாங்களே! அந்தச் சம்பளம்தாம் விருது. அத்துப் போதும். விருதுல்லாம் சேவை மனப்பான்‍மையோட ஒழைக்கிறவங்களுக்குத்தாம் கொடுக்க வேண்டியது. சம்பளத்த வாங்கிப்புட்டு ஒழைக்கிறவங்களுக்குல்லாம் கொடுக்கக் படாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெ வுடுங்க! விருது கெடக்குது பெரிய விருது! விழாவப் பத்தி முடிவா ன்னா சொல்றீங்க?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "விழாவ வெச்சீங்கன்னா ஒரு வாரத்துக்கு மின்னாடியே லீவப் போட்டுட்டு வூட்டுல உக்காந்துப்புடுவேம். வார மாட்டேம். நாம்ம வேலையில இருக்குறதும் தெரியக் கூடாது. ரிட்டையர்டு ஆயி வெளியில வாரதும் தெரியக் கூடாது. இதெப் பத்தி தயவு பண்ணி யாரும் பேயாதீங்க. பசங்களுக்கு வெவரம் தெரிஞ்சாலும் அவனவனும் காசியப் போட்டு எதாச்சிம் வாங்கிக் கொடுத்துட்டு நிப்பாம்! வாணாம்! சொவடு தெரியாம வெளியில வந்துப்புடணும்னு பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "எப்பிடியா இருந்தாலும் பள்ளியோடம் வாராம இருக்குறதெ வெச்சி பசங்களக்குத் தெரியத்தானே செய்யும்?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "அப்பிடி தெரியுறப்ப தெரியட்டும்! நீஞ்ஞளா யாரும் சொல்லிட வாணாம்!"ன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "முடிவு இதாங்! அதுல மாத்தத்துக்கு யில்லே! அப்பிடித்தானே!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு அழுத்தமா.
            அதுக்கு சுப்பு வாத்தியாரு எந்தப் பதிலையும் சொல்லல. அவருக்கு ஒரு கொணம், பேசாம உக்காந்திட்டார்ன்னா பேசிக்கிட்டு இருக்குற அந்த விசயம் பிடிக்கலன்னு அர்த்தம். விநாயகம் வாத்தியாரு புரிஞ்சிக்கிட்டாரு. அதுக்கு மேல பேச வாணாம்னு விட்டுட்டாரு. இதெப் பத்தி அவரோட மவ்வேன் விகடுகிட்டெ பேசலாம்னு பாத்தா, அவ்வேன் விழா, கூட்டம்னாவே விழுந்தடிச்சு ஓடுற ஆளு. அவ்வேம் கலியாணத்தப் பண்றப்பவே இந்தப் பக்கம் இருவது பேரு, அந்தப் பக்கம் இருவது பேருன்னு எளிமையா நாப்பது பேத்துக்குள்ள பண்ணி முடிச்சிப்புடலாம்னு சொல்லி எல்லாத்தோட வாயையும் பொளக்க வெச்சவேம்.
            "மனுஷன் காசிய சம்பாதிக்கிறது கலியாணத்தப் பண்ணி, சடங்கு சம்பிரதாயத்தப் பண்ணி அதுக்குச் செலவழிக்கிறதுக்குத்தானா? இந்த நாட்டுலத்தாம் இப்பிடி புள்ளையோளுக்குக் கலியாணங் கட்சியப் பண்ணி வைக்கிறதுக்குன்னு ஆயுசு பூரா வாயைக் கட்டி வயித்தெ கட்டி சம்பாதிக்கிறதும், வூட்டைக் கட்டுறதுக்கு அங்கன இங்கன கடன வாங்கி ஆயுசு முழுக்கவும் கடனெ கட்டுறதுன்னும் வாழ்க்கையே போவுது. ஆயுசு பூரா வாடகை வூட்டுல இருந்தாலும் வூடு கட்டுறதுக்கு ஆவுற செலவுல நூத்துல இருவது ரூவா கூட செலவாவது. வாடகை வூட்டுல இருந்தா வூட்டை மராமத்துப் பண்ண, பெயிண்ட வைக்கண்ணு வூட்டுக்காக தேவையில்லாம செலவும் பண்ண வேண்டியதில்லே. அதெ வூட்டுக்கார்ரேம் செலவப் பண்ணிப் பாத்துப்பாம். வாடகை வூட்டுல இருக்குறதுல அம்மாம் காசி மிச்சம் இருக்கு. காசி இருந்தா சேத்து வெச்சு புள்ளீயோ படிக்கிறதுக்குச் செலவ பண்ணுங்க. நாலு புத்தகத்தைச் செலவு பண்ணி வாங்கி வெச்சிப் படிங்க. முடியாத நாலு பேத்துக்கு யாருக்கும் தெரியாம உதவியப் பண்ணிட்டுக் கண்டும் காணாம இருந்துக்கோங்க. அதெ வுட்டுப்புட்டு, வூட்டைக் காட்டி நாம்ம எம்மாம் பெரிய ஆளுன்னு காட்டுறதுக்கும், கலியாணத்தைப் பண்றேங்ற பேர்ல ஊரைக் கூட்டி அவனவனும் வாயைப் பொளந்துக்கிட்டுப் பாராட்டணும்ங்றதுக்கும் செலவ பண்ணாதீங்க!"ன்னு அவ்வேம் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிட்டாம். பேச ஆரம்பிச்சவனெ நிப்பாட்டுறது கஷ்டமாப் போயி, பெறவு அவ்வேங்கிட்டெ இத்தெல்லாம் பெரியவங்களோட விசயம், ஒண்ணும் பேயாம நீயி பாட்டுக்குச் சொல்றதெ கேட்டுகிட்டு இருந்துக்கணும்னு பெரிசுகள வெச்சி உருட்டலாவும், மெரட்டலாவும், மலுப்பலாவும் அது இதுன்னு பேசி சமாதானத்தப் பண்ணி எல்லாத்தையும் பண்ண வேண்டியதாயிடுச்சு. அதெல்லாம் ஞாபவத்துக்கு வந்துப் போவ, அதால இதெப் பத்தி விகடுகிட்டெ பேசுறது மடத்தனம்னு நெனைச்சிக்கிட்டு அவ்வேங்கிட்டெ எதுவும்  பேசல விநாயகம் வாத்தியாரு. இத்து இந்த வழித்தாம் போவும்னு வுட்டுப்புட்டாரு.
            சுப்பு வாத்தியாரு சில விசயங்கள்ல முடிவு பண்ணா அதெ மாத்த முடியாதுன்னு மித்த மித்த வாத்தியாருமாருகளும் விட்டுப்புட்டாங்க. ஆனா, கடைசி நாள்ல ஒரு சால்வையைப் போத்தி, ஒரு சந்தன மாலையப் போட்டு, கையில ஒரு வெள்ளி குங்குமச் சிமிழ மட்டும் அவருக்குத் தெரியாம வாங்கி வெச்சிருந்து டீ பார்டியப்போ பண்ணி வுட்டு வூடு வரைக்கும் கொண்டாந்து விட்டுப்புட்டுப் போனாங்க. அதெ சுப்பு வாத்தியாரால மறுக்க முடியல.
            ரிட்டையர்டு ஆயி வூட்டுல வந்து உக்காந்தப் பின்ன அவரோட மனசுல பல பல சிந்தனைக ஓடுது.
            மகனுக்குக் கலியாணத்தெப் பண்ணி பேத்தியைப் பாத்துட்டாரு. மவளுக்கு இன்னும் கலியாணத்தெப் பண்ணி வைக்கலேங்ற கவலை வேற அவரோட மனச அரிச்சிக்கிட்டு இருக்குது. வேலையில இருக்குறப்பவே பொண்ணுக்கும் கலியாணத்தெ முடிச்சிருந்தா அவருக்குக் கொஞ்சம் நெறைவா இருந்திருக்கும். அவரோட கணக்குப்படி மவள பியெட்ட படிக்க வெச்சிருந்தா ஒரு வருஷத்துல அதெ முடிஞ்சி இந்நேரத்துக்கு எதாச்சிம் ஒரு கதையக் கட்டி விட்டிருப்பாரு. மவ படிக்கணுங்ற ஆசைய காரணமா வெச்சி மவன் அதெ குறுக்கால பூந்துக் கெடுத்துப்புட்டாங்ற லேசான கோவம் அவரோட மனசுல இருந்துச்சு. காலா காலத்துல வேலையில இருக்குறப்பவே அதது கதையக் கட்டி வுட்டாத்தாம் மனசுக்கு நிம்மதியா இருக்கும். இப்பிடி மவன் நிம்மதியில்லாம பண்ணி வுட்டுப்புட்டானேன்னு நெனைச்சிக்கிட்டாரு. அதெ வெளிப்படையா சொல்லல. வெளியிலயும் காட்டிக்கிடல. மனசுக்குள்ளயே நெனைச்சி நொந்துக்கிட்டாரு.
            இப்போ அவர்ர சுத்தி பல வெதமான கவலைக சூழ்ந்துச்சு. ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு வர்ற பென்ஷன் காசிய வெச்சி மக கலியாணத்தை எப்பிடி முடிக்கிறதுங்றதுதாம் அவரோட கவலையில முக்கியமானது. சுப்பு வாத்தியாருக்கு படிச்சி முடிச்ச ஒடனே வேலை கெடைக்கல. அவருக்கு வேலை கெடைச்சப்போ வயசு ரொம்ப ஆயிருந்துச்சு. அதால வேலை பாத்த காலத்துக்கான சர்வீஸூம் கம்மி. வர்றப் போற பென்ஷனும் கம்மின்னு நெறைய விசயங்கள் அவரோட மனசெ போட்டு ஆட்டிக்கிட்டு இருந்துச்சு. எல்லாத்தையும் விட பொழுது எப்பிடிப் போகப் போவுதுன்னு நெனைச்சு ரொம்ப கவலைப்பட்டாரு.
            அவரோட சோக்காளி வாத்தியாருமாருகளும் ஒவ்வொருத்தரா ரிட்டையர்டாயிட்டே இருந்தாங்க. ரிட்டையர்டு ஆன ஒவ்வொருத்தரும் வெவசாயத்தெ பாக்குறது, கடையில கணக்கு எழுதுறது, நாட்டு வைத்தியம் பண்ணுறது, இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டா வேலை பாக்குறது, வட்டிக்கு விட்டு வருமானம் பாக்குறதுன்னு பம்பரமா சொழண்டுகிட்டு இருந்தாங்க.
            சுப்பு வாத்தியாருக்கு விவசாயம் பண்றதுக்குன்னு அவரு வாங்கிப் போட்டுருந்த ஏழரை மா வயலுங்க ஓகையூர்லயும், திட்டையுலயும் இருக்கிறதெ மனசுக்குள்ள நெனைச்சிக்கிறாரு. அத்தோட மவ்வே கலியாணத்தப்ப வித்துப்புட்டுச் செஞ்சிப்புடணும்னு வூட்டுக்கு எதுத்தாப்புல ரெண்டு தள்ளி வூடு வாங்கிப் போட்டிருந்த எண்பது குழி வூட்டு மனை இருந்துச்சுல்ல அதையும் மனசுக்குள்ள கொண்டு வந்துக்குறாரு. இனுமே வயல்ல வெவசாயத்தையும், எதுத்த மனையில இருக்குற தென்னை மரங்களப் பாத்துக்கிட்டு, எஞ்சி இருக்குற எடத்துல கறிகாய்களப் போட்டுக்கிட்டு காலத்தெ ஓட்டிப்புடணும்னு மனசுக்குள்ள கணக்கைப் போட ஆரம்பிக்கிறாரு.
            ஏழரை மா வயல்லயும் வெண்ணாத்துலயும், வெள்ளையாத்துலயும் மொறையா தண்ணி வந்தா ஒரு வெளைச்சலுக்கு செலவெல்லாம் போவ மாவுக்கு ரண்டாயிரம் வரைக்கும் லாவத்தப் பாக்கலாம். அந்த வகையில பாஞ்சாயிரம் பாத்துப்புடலாம். வெளைச்சல் கம்மின்னாலும் செலவெல்லாம் போவ மாவுக்கு ஆயிரத்து ஐநூத்துக்கு கொறைவு இருக்காது. மூட்டைக் கணக்குல பாத்தா‍ செலவெல்லாம் போவ ரண்டுலேந்து நாலு மூட்டை வரைக்கும் லாவமா நிக்கும். அவ்வளவுதாம் இந்தப் பகுதியில வெளைச்சலு. அது அந்தந்த வருஷம் வெளையுறதுப் பொருத்தது.
            நெல்லு வெளைச்சலுக்குப் பெறவு உளுந்து பயிறு வெளைச்சல்ல பெரிசா செலவு கெடையாது. அறுப்ப முடிச்சிப்புட்டு உளுந்தோ பயிறோ தெளிச்சி வுடுறதுதாம். பெறவு வெளைஞ்சி உளுந்தும் பயிறும் காய்ஞ்சி சொடிஞ்சி வந்து எடுத்தா அம்புட்டும் அப்பிடியே லாவம்தாம். வெளைச்சல் சக்கப் போடு போட்டா மாவுக்குக் ரெண்டு கலம்ன்னா முக்கா குவிண்டால் கூட காணும். கொறை வெளைச்சல்ன்னாலும் அப்படிக் முக்கா குவிண்டால் காணாட்டாலும் ஒரு கலத்தேந்து ஒன்றரைக் கலம் வரைக்கும் கண்டுச்சுன்னா அரைக் குவிண்டாலுக்குப் பத்துக் கிலோ கம்மியாவோ கூடுதலாவோ காணும். எப்படிப் பாத்தாலும் நெல்லு வெவசாயத்தெ வுட இந்த உளுந்து பயிறுல லாவம்தாம். நல்ல வெளைச்சல்ன்னா ஏழரை மாவுல வெளைஞ்சதைப் அப்பிடியோ போட்டாக்கா அந்த வருஷ வெலையப் பொருத்து இருவதுலேந்து இருபத்தாஞ்சாயிரம் வரைக்கும் தேறும். கொறை வெளைச்சல்ன்னா பாஞ்சாயிரம் தேறுனா அதிர்ஷ்டம். ஆனா எப்பிடி இருந்தாலும் உளுந்து பயிறுல எப்பிடி வெளைஞ்சாலும் எப்பவும் லாவம்தாம். அவர்ர பல நேரத்துல தூக்கி விட்டது உளுந்து பயிறுல கெடைச்ச லாவம்தான். அவரு வூட்டு ஆனைக்கா குவளை, கிரைண்டரு, வூட்டுல இருக்குற நகை நெட்டுல்லாம் பெரும்பாலும் அதுல வந்த காசியில வாங்குனதுதாம்.
            எப்படியோ கூடுதலோ, கொறைச்சலோ கணக்குப் போட்டா நெல்லு, உளுந்து, பயிறுன்னு வருஷத்துக்கு முப்பதுலேந்து நாப்பாதினாயிரத்தெ பாடுபட்டா வெவசாயத்துல எடுத்துப்புடலாம். பெறவென்ன பென்ஷன் காசி வருது. அதெ வெச்சிப் பாத்துக்கிடலாம். நேரம்தான் ரொம்ப மிச்சப்படும். அந்த நேரத்த என்னத்த பண்றது? சும்மா உக்காந்திக்க முடியாது? எதுத்தாப்புல இருக்குற கொல்லையில கறிகாய்களப் போட்டுகிட்டு அதெ பாத்துக்கிட்டா வூட்டுக்கு ஆவுற கறிகாயி செலவு மிச்சம். எப்படியோ காலத்தெ ஓட்டிப்புடலாம்ன்னு கணக்கெல்லாம் போட்டு கொஞ்சம் மனசு நிம்மதிக்கு வரார்ரு சுப்பு வாத்தியாரு. அத்துச் செரி, நாம்ம இப்பிடி கவர்மெண்டு வேலையில ரிட்டையர்டு ஆவுறதால பென்ஷனாவது கெடைக்குது? அப்பிடியில்லாம காலம் பூரா ஒழைச்சிச் சாப்புடுறவேம் நெலமையை நெனைச்சிப் பாத்தான்னு அதையும் மனசுக்குள்ள நெனைச்சிப் பாக்குறாரு. அவரோட மனசுக்குள்ள முழு நிம்மதியும் இப்போ வந்துப் போச்சுது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...