14 Apr 2020

குழந்தைக்காரன் வண்டி!

செய்யு - 418        

            என்னத்ததாம் வெள்ளையும் சொள்ளையுமா வெளுத்துக் கட்டுனாலும், ஒரு மனக்கொறை மட்டும் இருந்துச்சு வீயெம் மாமாவுக்கு, ஒரு கொழந்தை இல்லன்னு. அதெ பத்தியும் ஒரு தபா தங்கப்பழம் வக்கீலு வடவாதிக்கு வந்தப்போ சொன்னிச்சு வீயெம் மாமா. அதுக்கு வக்கீலு சிரிச்சிக்கிட்டெ கேட்டுருக்காரு, "இன்னொரு கலியாணத்தெ பண்ணி வைக்கவா? யில்லே ஒரு கொழந்தைய வாங்கித் தர்றவா?"ன்னு.
            "இதென்ன சார்ரே! ஒரு சூப்பர் மார்க்கெட்டுல பூந்தா சகலத்தையும் வாங்கிப்புடலாங்ற மாதிரிக்கி, ஒஞ்ஞகிட்டெ சகலத்துக்கும் நெவாரணம் இருக்கும் போல!"ன்னு சொல்லிட்டு வீயெம் மாமா ஒரு நிமிஷம் யோசனையைப் பண்ணுச்சு. பண்ணிப்புட்டு, "இன்னொரு கலியாணத்தெ பண்ணி, அது பெறவு வழக்காயி, ஒங்ககிட்டெ திரும்பவும் வந்து நின்னு, ஒங்களுக்கு வருமானத்தைப் பண்ணி வுட வாணாம்னு நெனைக்கிறேம். அதால ஒரு கொழந்தைக்கு ஏற்பாடு பண்ணி வுடுங்க எந்த வெதமான பெரச்சனையும் யில்லாம!" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமா.
            "அதென்ன தலைவர்ரே! கொழந்தைய ஏற்பாடு பண்ணா அதுக்கு மட்டும் வருமானம் இல்லையா ன்னா? அம்பதாயிரத்தெ எடுத்தாந்து வையுங்க! என்னிக்குக் கொழந்தை வேணும்னு சொல்லுங்க. அன்னிக்குக் கொழந்தையோட வந்து நிக்குறேம்!"ன்னு சொல்லிருக்காரு தங்கப்பழம் வக்கீலு. அப்பிடி அம்பதாயிரம் பணத்தோட போயி ஒரு ஒன்றரை வயசு பொம்பள கொழந்தையோட வந்துச்சு வீயெம் மாமா. இப்பிடி அம்பதாயிரத்துக்குக் கொழந்தையோட வந்து, அந்த சங்கதி ஊருல பரவி, ஊருல கொழந்தை இல்லாம கெடந்த நாலு சனத்துக்குப் பெறவு வீயெம் மாமா ஏற்பாட்ட பண்ணி வுடுற அளவுக்கு அதோட நெலமெ வளந்துச்சு. அப்பத்தாம் அதுக்குத் தெரிஞ்சிச்சு கொழந்தையோட வெலை முப்பதாயிரம், அதுக்கு ஏற்பாடு பண்ணி வுடுறதுக்கு இருபதாயிரம்ன்னு. அதுலேந்து அதையும் ஒரு யாவாரமா தனி டிராக்குல பண்ண ஆரம்பிச்சிது வீயெம் மாமா. இப்பிடி பூந்த எடமெல்லாம் பணமா கொட்ட ஆரம்பிச்சிது வீயெம் மாமாவுக்கு.
            இப்போ ஊர்ல எந்தப் பெரச்சனையா இருந்தாலும், ஒரு கஷ்ட நஷ்டம்ன்னாலும் கூப்புடுறா வீயெம்மங்ற அளவுக்கு அதுக்குப் பேரு ஆயிப் போச்சுது. அத்தோட கோர்ட்டுக்கு வேற போயி வருதா? அதெ பாத்து வேற ஊர்ல நாலு பேத்து ன்னா சொல்றான்னா, "யப்பா எந்தப் பெரச்சனைன்னாலும் கோர்ட்டு வரைக்கும் போயி அசராம சமாளிக்குற அசாமிப்பா அவ்வேம்! எங்கப் பூந்து எப்பிடி வெளியல வாரணுங்ற அத்தனையும் அத்துப்புடிப்பா! செரியான கொம்பேறி மூக்கம்ப்பா அவ்வேம்! அத்தோட ஒண்ணாம் நெம்பரு கிராதகம். அவ்வேங்கிட்ட எதையும் வெச்சிக்கக் கூடாது! ஒரு வெவகாரம்ன்னா அவ்வேம்தாம்ப்பா ஆளு! துணிஞ்சி அலைஞ்சித் திரிஞ்சி காரியத்தெ அடிப்பாப்புல! போலீஸூ, வக்கீலுன்னு எல்லா எடத்துலயும் தண்ணிப்பட்ட பாடா தொடர்ப‍ வெச்சிக்கிட்டு அலையுறாம்பா!" அப்பிடிங்கிறாம்.
            ஐம்பதாயிரம் பணத்தெ கொடுத்து ஒரு பொம்பளப் புள்ளைய வெலை கொடுத்து வாங்கினுச்சுல்ல வீயெம் மாமா, வெளியில எங்கப் போனாலும், வந்தாலும் சரித்தாம் அந்தக் கொழந்தைய தூக்கி வெச்சிக்கிட்டுப் போறதே அதுக்கு வேலையா போச்சுது. கோகிலா மாமியும் தம்மோட வவுத்துல தரிச்சி வளந்தக் கொழந்தையப் போல அதெ கீழே மேல வுடாம வளக்குறதப் பாத்தா கொழந்தையப் பெத்தவங்க கூட அந்த அளவுக்கு வளக்க மாட்டாங்க. பட்டறையில இருக்குற கொழந்தைக்கு பாலு பாட்டில தூக்கிக்கிட்டு அத்து பட்டறைக்கும், வூட்டுக்குமே ஒரு நாளைக்கு நாப்பது தடவே நடக்குது.
            வண்டியில அவனவனும் எங்கப் போனாலும் எலுமிச்சம் பழத்த கட்டி தொங்க வுட்டுட்டுப் போறது போல, வீயெம் மாமா கொழந்தையோட போவுது. எங்கப் போனாலும் வண்டிக்கு மின்னாடி கொழந்தை இருக்கு. அந்தக் கொழந்தைய மடியில தூக்கி வெச்சிக்கிட்டு பின்னால வண்டியில உக்காந்து வாரதுக்கும் ரெண்டு பேரு எந்நேரத்துக்கும் தயாரா இருக்காம். ஒண்ணு அந்தக் கொழந்தை வண்டியில இருக்குது. இல்லன்னா வண்டிக்குப் பின்னாடி உக்காந்துருக்குற பட்டறையில வேல பாக்குற ஆளுங்க தோள்ல இருக்குது. இதால வீயெம் மாமாவோட வண்டிக்குப் பேரே 'குழந்தைக்காரன் வண்டி'ன்னு ஆச்சு.

            அந்தக் கொழந்தைக்கு பூமின்னு ஒண்ணு இருக்கு, அதுல மண்ணுன்னு ஒண்ணு இருக்குங்ற சங்கதி தெரியுமாங்ற அளவுக்கு அந்தக் கொழந்தை வளருது. அந்தக் கொழந்தையோட மூக்குல வழியுற சளிய தொடச்சி வுடறதுக்கு நாந் நீயின்னு பட்டறையில நிக்குறவேம் போட்டிப் போட்டுட்டு வேட்டிய கையில தூக்கிக்கிட்டு நிக்குறாம். அவனவனுவோ அவ‍னவனுவோளோட சொந்தக் கொழந்தையத் தூக்கி அப்பிடிக் கொஞ்சிருப்பானுவோளோ என்னவோ தெரியல, அந்தக் கொழந்தைய அப்பிடித் தூக்கிக் கொஞ்சுறானுவோ. எல்லாம் காசியும், குவார்ட்டரும் பண்ணுற வேல. அதெ கொடுக்கறவேம் ஆண்டவேன் ரேஞ்சுக்கு உசந்துப் போயிடுறாம். அப்படிப் பண்ணுறவனுக்கு எதெ பிடிக்குமோ, அதெ செய்யுறதுக்கு ஊருல நாலு பேத்து வால பிடிச்சிக்கிட்டு நூல வுட்டுக்கிட்டு இருக்காம்.
            இப்பிடிச் சுத்தி நிக்குறவம்தான் பேசுறாம் கொஞ்சுறாம் தவுர, அந்தச் சுத்துக்கு வெளியில நிக்குறவேம், "இவ்வேம் ன்னாட அற்பப் பயலுக்கு வாழ்க்கெ வந்தா அர்த்த ராத்திரியில கொடையப் பிடிச்சிட்டு நிப்பாங்ற மாதிரிக்கி, கொழந்தை யில்லாம கெடந்தப் பயெ, எந்நேரத்துக்கும் எங்கயோ போயி வாங்கிட்டு வந்தக் கொழந்தைய வெச்சிக்கிட்டு அங்க இங்கன்னு திரியுறாம்!"ன்னு பேசுனானுங்க.
            சுப்பு வாத்தியாரு அவரோட டிவியெஸ்ல போறப்பவும் சரித்தாம், விகடு அவனோட சைக்கிள்ல போறப்பவும் சரித்தாம் வீயெம் மாமா கொழந்தையோட போறதெ ஆக்டிவாவ்ல பாக்குறாங்க. ஆனா மொகத்தச் சுளிச்சுக்கிட்டுத் திருப்பிக்கிறாங்க. மின்னாடி எளைச்சி நோயிக் கண்டாப்புல திரிஞ்சப்ப பரிதாபமா பாப்பாங்களே தவுர வெசாரிக்கிறது கெடையாது. ஆனா மொகத்த திருப்பிக்காம, சுளிச்சுக்காம நேரா பாத்துக்கிட்டே போவாங்க. வீயெம் மாமா பண்ணுறது, நடந்துக்கிறது அவங்களுக்குச் சுத்தமா பிடிக்கிறதில்ல. அதால பேச்சு வார்த்தை சுத்தமா அறுந்துப் போயிருந்துச்சு. ஒரு பெரிய விரிசல் விழுந்தாப்புல ஆயிடுச்சு. சுப்பு வாத்தியாருக்கு ஒரு வெதத்துல மச்சாங்காரனெ பிடிக்கல, விகடுவுக்கு மாமங்காரனெ பிடிக்கல. கேட்டாக்கா ரண்டு பேருமே ஒரே மாதிரியா பேசுறாங்க, "ஒரு வாழ்க்கை எழந்த பொண்ண கலியாணத்தப் பண்ணி, மறுக்கா வாழ்க்கைய எழக்க வெச்சு அதெ நடுத்தெருவுல கொழந்தையோட நிப்பாட்டிப்புட்டு, இப்போ ஒரு கொழந்தைய வீம்புக்கு வெலை கொடுத்து வாங்கியாந்து வளக்குறானே! இவனெல்லாம் ஒரு மனுஷனா?"ங்ற மாதிரிக்கி ஒத்த கொரல்ல சொல்றாங்க.
            அவுங்க அப்பிடிச் சொல்றது வீயெம் மாமாவோட காதுக்குப் போறப்ப, அத்து சொல்லுது, "அப்பேம் மவ்வேம் ரண்டு பேருமே பொழைக்கத் தெரியாத பயலுவோ! நாம்ம மட்டும் அவனுக நெலமையில இருந்தேம்ன்னா வெச்சுக்க காசிய இந்நேரத்துக்குக் கட்டுக்கட்டா பெருக்கியிருப்பேம். பணத்தெ அப்பிடியே மரத்துல காய்ச்சித் தொங்குறாப்புல பண்ணியிருப்பேம். ஒலகம் தெரியாத பயலுவோ. அப்பனும் மவனும் வாத்தியாரு வேலையப் பாத்துக்கிட்டு ஒண்ணுக்கு ரெண்டா சம்பாதிச்சுக்கிட்டு, அப்பங்கார்ரேம் ஒரு ஒடைஞ்ச டிவியெஸ்ல போறாம்! மவ்வேம்கார்ரேம் இத்துப் போன ஒரு சைக்கிள்ல போயிட்டுக் கெடக்காம்! த்துப்பூ! பிசாத்துப் பயலுவோ! சம்பாத்தியம் இருந்தாப் போச்சா? அத்தெ வெச்சி எப்பிடி பெருக்கணும்? அத்தெ வெச்சி எப்பிடி நாலு ஆளுகள நம்மட காலடியில வெச்சிக்கிடணும்னு தெரியணுமா யில்லியா? அந்தச் சோதாப் பயலுகளப் பத்தி நம்மகிட்டெ பேயாதீயே!" அப்பிடின்னு.
            வீயெம் மாமா ஊர்ல வாயி கொண்ட மட்டும் அப்பிடி இப்பிடிப் பேசுதுன்னா இப்போ அது ஊர்ல பெருங்கையி. ஊர்ல ஏகப்பட்ட வயலுகள ப்ளாட்டுக்குப் பிடிச்சிப் போட்டு வெச்சிருக்கிறத கேள்வி. பல பஞ்சாயத்துக்கு அதுதாம் போயி நின்னு பேசுறதா பேச்சு அடிபடுது. அந்தப் பஞ்சாயத்துல அத்து சொல்றதுதாம் எடுபடுதாம். ஆனா அத்தோட பஞ்சாயத்து கோர்ட்டுல நடக்குது, நடந்துகிட்டே இருக்குது. அத்து இப்போ பல பேருக்கு தெரியாத சங்கதியுமா, படிக்கிற ஒங்களுக்கும் எழுதுற நமக்கு மட்டும்தாம் தெரிஞ்ச சங்கதியுமா மாறிகிட்டு இருக்குது.
            கோர்ட்டுல நடக்குற கேஸ்ஸப் பத்தி வீயெம் மாமா மனசுல கொஞ்ச நஞ்சம் இருந்த பயத்தையும் தங்கப்பழம் வக்கீலு தொடைச்சி எறிஞ்சிட்டாரு. "ன்னாங்க சார்ரே! இப்பிடி கோர்ட்டுக்கு மாசத்துக்கு ஒரு தபா வேடிக்கைப் பாக்க வர்ற மாதிரி இருக்கே! மின்னாடில்லாம் ஒரு நாளு பொழைப்புப் போவுதுன்னு இருந்துச்சு. இப்போ வேலையப் பாக்க ஆளுக போட்ட பிற்பாடு அப்பிடித் தெரியில. கோர்ட்டுக்கு வந்துட்டப் போறப்போ நாலு வெதமான சங்கதிகள தெரிஞ்சிக்கிறாப்புல இருக்கு. இருந்தாலும் எத்தினி நாளுக்கு இந்த அலைச்சலு, உளைச்சலுன்னு தெரியலீயே?" அப்பின்னிருக்கு வீயெம் மாமா ஒரு தபா வக்கீலுகிட்டெ.
            "இந்தக் கேஸ்லாம் இப்பிடித்தாம். போட்டு ஜவ்வு மாதிரிக்கி இழுக்கணும் தலைவர்ரே! இப்போ ன்னாச்சிப் பாருங்க தலைவர்ரே! தண்டனெ ஆவுற நெலையில இருக்குற ஒங்களுக்கே அலுத்துப் போச்சுல்ல. ஒங்களுக்குத் தண்டனைய வாங்கிக் கொடுக்க நெனைக்குற அவுங்க அத்து இம்மாம் காலமா முடியாம எம்மாம் அலுத்துப் போயிருப்பாங்க? ஒரு நாளைக்கி ஆப்போசிட் பார்ட்டியோ, ஆப்போசிட் வக்கீலோ சமாதானத்துக்கு வருவாங்க. அன்னிக்குப் பாருங்க தங்கப்பழத்தோட ருத்ர தாண்டவத்தே. நீங்களே அன்னிக்கு நம்மட காலப் பிடிச்சிக் கெஞ்சுனாலும் ஆடுற ருத்ர தாண்டவத்தெ ஆடித்தாம் நிப்பாட்டுவாம் இந்தத் தங்கப்பழம்! வழக்குப் பாட்டுக்கு வழக்கு. வாழ்க்கெ பாட்டுக்கு வாழ்க்கெ. போட்டுக் கொழப்பிக்கப் படாது. இஞ்ஞ பாருங்க. கொலையையே பண்ணிட்டு அவனவனும் எப்பிடிப் போறானுங்கோ? நீஞ்ஞ ன்னா கொலையா பண்ணிப்புட்டீங்க தலைவர்ரே? எக்ஸ்ட்ரா ஒரு கலியாணத்தெ பண்ணிப்புட்டீங்க! அத்துவும் மொத பொண்டாட்டியே பாத்து வெச்சி! யாருக்குக் கெடைக்கும் தலைவர்ரே இப்பிடில்லாம் ஒரு யோகம் இந்த லோகத்துல? ஒஞ்ஞளுக்குக் கெடைச்சிருக்குப் பாருங்க! எஞ்சாய் தலைவர்ரே! பெரிய மனுஷன்னா கோர்ட்டுல நாலு கேஸூங்க இருக்கணும். அத்துவும் இந்த மாதிரி கேஸ்லாம் இருந்தாத்தாம் பெரிய மனுஷன். இதெ சட்டுப்புட்டுன்னு முடிச்சிப்புட்டா பெறவு நீஞ்ஞ பெரிய ஆளுன்னு இல்லங்ற மாதிரில்லா ஆயிடும்! நமக்குக் கொடுக்குற காசியப் பத்தில்லாம் நெனைக்காதீங்க தலைவர்ரே! நம்மளோட டச்ல இருக்குற வரைக்கும் எப்பிடியெப்பிடில்லாம் சம்பாதிக்கலாங்றதுக்கு வழியக் காட்டி விட்டுப்புட்டே இருப்பேம். இன்னும் லட்சம் லட்சமா சம்பாதிக்குறதுக்குல்லாம் வழியச் சோல்றேம் கவலயேப் படாதீங்க!" அப்பிடின்னாரு தங்கப்பழம் வக்கீலு. பெறவு எப்பிடி வீயெம் மாமாவுக்கு கோர்ட்ட பத்தியோ, வழக்கப் பத்தியோ கவலையோ, பயமோ, ஞாபவமோ வரும்? இப்போ முன்ன மாதிரி இல்லே வீயெம் மாமா! வெள்ளையும் சொள்ளையுமா கோர்ட்டுக்குப் போயிட்டு வர்றதெ ஒரு பெருமையா நெனைக்குதுன்னா பாத்துக்கோங்க!
*****


2 comments:


  1. சிறப்பாக இருக்கு
    தொடருங்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    ReplyDelete
  2. தங்களுக்கும் வாழ்த்துகள் ஐயா.
    அன்பின் நன்றிகள் ஐயா என்றென்றும்.

    ReplyDelete

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...