13 Apr 2020

வெள்ளையும் சொள்ளையுமா வெளுத்து வாங்குறாப்புல!

செய்யு - 417        

            வக்கீலு தங்கப்பழம் உள்ள வந்தது வீயெம் மாமாவோட வாழ்க்கையில முக்கியமான திருப்பம். ஒரு தெம்பு கெடைச்சாப்புல இருந்தது வீயெம் மாமாவுக்கு. தங்கப்பழம் சொன்னாரு, "ன்னா தப்பு வாணும்ன்னா பண்ணுங்கோ! பண்ணிட்டு நம்மகிட்டெ வந்துப்புடுங்க!"ன்னு. பெறவு அந்தத் திருப்பத்துக்கு மின்னாடி ஒரு சறுக்கல்,பெறவு எழுச்சின்னு ஒரு சினிமா படத்தெ நேர்ல பாக்குறாப்புல இருந்துச்சு வீயெம் மாமாவோட வாழ்க்கைய பாக்குறப்போ.
            சினிமா படம்னு சொல்றப்பத்தாம் இன்னொரு விசயமும் ஞாபவத்துக்கு வருது. சினிமா படத்தைப் பாத்து அதிலேந்து கோர்ட்ட பத்தி வெத வெதமா கற்பனை பண்ணி வெச்சிருந்துச்சு வீயெம் மாமா. ஒரு ரெண்டு நாள்லயோ, மூணு நாள்லயோ வெசாரிச்சு முடியுற விசயமா கோர்ட்டு கேஸ்ஸப் பத்தி நெனைச்சிருந்துச்சு வீயெம் மாமா. அப்பிடி வெசாரணை நடக்குறதெ ஆளாளுக்குக் கெளம்பி வந்துல்லாம் கோர்ட்டு உக்காந்து பாப்பாங்கன்னு வேற நெனைச்சிருந்த வீயெம் மாமாவ மூணு நாலு மாசம் வரைக்கும் கூண்டுல ஏத்தவே இல்ல. அது பாட்டுக்குக் கோர்ட்டுக்குப் போயி ஜட்ஜூக்கு மின்னாடி கையக் கட்டிகிட்டு மொகத்தெ காட்டிட்டே வார வேண்டியதா இருந்துச்சு. ஒவ்வொரு தபா கோர்ட்டுக்குப் போறப்பவும் தங்கப்பழம் வக்கீலுக்கு ஐநூத்து ரூவாய எடுத்து வைக்க வேண்டிதா இருந்துச்சு.
            எப்பதாம் இந்த வெசாரணை முடியும், சீக்கிரமே வெசாரணை முடிஞ்ச தண்டனெ கொடுத்தாலும் பரவாயில்லங்ற நெலைமைக்கு வந்திருச்சு வீயெம் மாமா. அந்த அளவுக்கு வாய்தா மேல வாய்தாவா வாங்கி தங்கப்பழம் வக்கீலு வீயெம் மாமாவோட வழக்க ஜவ்வு போல இழுத்தடிச்சிட்டு இருந்தாரு. இதென்ன கோர்ட்டுன்னா அலைச்சலும் காசுமா செலவாயி அழியுதே தவுர ஒரு மொறைப்பாடு காணாம இருக்கேன்னு நெனைச்சது வீயெம் மாமா. கிராமப் பஞ்சாயத்துன்னா ஒரு நாளு ராத்திரி போதும். நல்லதோ, கெட்டதோ வெசாரிச்சு ஒரு தீர்ப்ப பண்ணி வுட்டுப்புடுவாங்க. இப்பிடில்லாம் அலைச்சலு இருக்காதுன்னு நெனைச்சுச்சு வீயெம் மாமா.
            இப்படியே நாலஞ்சு மாசங்க போனுச்சு. இதுக்கு எடையில பஞ்சு மாமா பையன் சங்குவோட வழக்குல தீர்ப்பு வந்து பெரியநாயகி மேல எந்தத் தப்பு இல்லன்னும், சங்குவே தனக்குத் தானே சீமெண்ணய்ய ஊத்தி பத்த வெச்சிக்கிட்டதா தீர்ப்பாயிருந்துச்சு. அத்தோட சங்கு பெரியநாயகிக்கு சீவனாம்சம் கொடுக்கணும்னு சொல்லி தீர்ப்பாயி, அதெ எதுத்து சங்கு ‍மேலுக்கு மொறையீடு பண்ணிருந்துச்சு. இதெ கேள்விப்பட்டதும் வீயெம் மாமாவுக்கு அந்த எடத்துலயே ஒண்ணுக்குப் போயிடுறாப்புல ஒதறலா இருந்துச்சு. நமக்கும் இப்பிடி எதிர்மறையா தீர்ப்பான்னா என்னத்தெ பண்றதுன்னு உள்ளுக்குள்ள ஒரு தவிப்பா இருந்துச்சு. அந்தத் தவிப்புல சரியா சாப்புடாம, கொள்ளாமல, மொகத்த மழிக்காம, வேட்டி சட்டையெல்லாம் நல்ல வெதமா போடாம, நோயி கண்ட மனுஷன போலன்னு சொல்றதா, பரதேசி போலன்னு சொல்றதா அப்பிடி அலைஞ்சிச்சு. அப்பிடி அதெ ரோட்டுல தெருவுல பாக்குறப்ப சுப்பு வாத்தியாருக்கும், விகடுவுக்கும் பாவமா இருந்துச்சு. அப்படி ஒரு கோலத்துல அலங்கோலமா அலைஞ்சுச்சு வீயெம் மாமா.
            அதெ நேரத்துல இப்பிடி கோர்ட்டுக்குப் போயி ஆஜராயி வாரதுல கோர்ட்டப் பத்தின பயமும் அத்துப் போயி, கொஞ்சம் தெனாவெட்டும் வெச்சுப் போயிருச்சு வீயெம் மாமாவுக்கு. இந்த வாழ்க்கையில எதுவும் சில காலங்ற மாதிரி, வீயெம் மாமாவோட அந்தத் தோற்றமும் சறுக்கலும் சில காலம்தாங்ற மாதிரி ஆயி, நோயி கண்ட மனுஷனப் போல பரதேசி கணக்கா அலைஞ்சிட்டு இருந்த வீயெம் மாமா திடீர்ன்னு வெள்ளை வேட்டியோடயும், வெள்ளைச் சட்டையோடயும், மொகத்த மழிச்சுக்கிட்டு அரசியல்வாதிக் கணக்கா வெளுத்து வாங்க ஆரம்பிச்சு. அதுதாங் முக்கியமான டிவிஸ்ட்டு இங்க. அதெ சொல்லியாவணும்ல!
            கோர்ட்டுக்கு மொதோ அஞ்சாறு ஹியரிங்குக்கு போய்ட்டு வந்ததுல, சங்குவுக்கு வந்த தீர்ப்ப கேள்விப்பட்டதுல ஆளு துரும்பா எளைச்சி மொகத்துல தாடிய வெச்சிக்கிட்டு, மண்டையில மயித்த வளத்துக்கிட்டு பரதேசி போல திரிஞ்சிச்சதுல தங்கப்பழம் வக்கீலே கொஞ்சம் மெரண்டுத்தாம் போயிட்டாரு. இதுக்கெடையில எப்பிடி அப்படி ஒரு மாத்தம்ன்னா, தங்கப்பழம்தாம் அதுக்கும் காரணம்.
            "நம்மகிட்டெ வழக்க ஒப்படைச்சிப்புட்டு நீஞ்ஞ இப்பிடி இருக்குறது நமக்குப் பிடிக்கலே. வேணும்ன்னா இன்னொரு கலியாணத்தப் பண்ணி கொழந்தையப் பெத்துக்குங்க! எத்து நடந்தாலும் நாம்ம பாத்துக்கிடறேம்! இப்போ இருக்குற ஒஞ்ஞ மொத பொண்டாட்டி பெரச்சனை பண்ணாலும் அத்து மேல ஒரு கேஸ்ஸப் போட்டு வுட்டு என்ன பண்ணணுமோ பண்ணுறேம்!"ன்னு சொல்லிருக்காரு. இப்பிடி ஒரு வக்கீலு பேசுனா அதுல தெளியாம எவ்வேம் இருப்பாம்? அதுல தெளிஞ்சதுதாங் வீயெம் மாமா.
            மொத வேலையா டர்ரு டர்ருன்னு ஓட்டிட்டு இருந்த பழைய டிவியெஸ்ஸூ சாம்பை வித்துப்புட்டு, புதுசா ஹோண்டா கம்பெனியியோட ஆக்டிவா ஸ்கூட்டரு வண்டிய ஒண்ணுத்த காப்பிக்கொட்டை நெறத்துல வாங்கி வெச்சிக்கிட்டு அலைய ஆரம்பிச்சுது. இந்த மாத்தத்துக்கும் பின்னாடியும், இன்னும் ரொம்ப தெளிவா தெளிஞ்சதுக்கும் பின்னாடியும் தங்கப்பழம் வக்கீலுதாம் இருந்தாரு. அதெ கொஞ்சம் பின்னாடி சொல்றேம். அந்த வண்டி வந்ததுக்குப் பெறவுதாம் வெள்ளை வெளேர்ன்னு வேட்டி சட்டையில ஊரெல்லாம் வண்டிய வெச்சுக்கிட்டு சுத்த ஆரம்பிச்சுது வீயெம் மாமா. அங்கங்க வேலைய பேசி வெச்சுக்கிட்டு ஒவ்வொரு வேலைக்கும் நாலஞ்சு ஆசாரிகள கணக்குப் பண்ணி வேலைய வாங்கிக்கிட்டு பணத்தெ கொடுக்கல் வாங்கல் மொறையில தன்னோட வேலை மொறைய மாத்தி அமைச்சுக்க ஆரம்பிச்சிது.

            தொடர்ந்து ஒரு ஆளுகிட்டெ போனா வேலை கெடைக்கும்ன்னு நெலை இருந்தா அந்த ஆள சுத்திக்கிட்டு நாலு பேரு எந்நேரத்துக்கும் நிப்பான். அப்பிடித்தாம் ஆனுச்சு வீயெம் மாமாவோட நெலமெ. எந்நேரத்துக்கு நாலு ஆளு சுத்தி இருக்க நடமாடுனுச்சு. தன்னை சுத்தி நிக்குற நாலு பேத்துக்கு எந்நாளும் வேலை இருக்குற மாதிரிக்கி அங்கங்க ஆக்டிவா வண்டியில ‍அலைஞ்சித் திரிஞ்சி வேலையப் பிடிக்க ஆரம்பிச்சிது வீயெம் மாமா. எந்த வேலைன்னாலும் அந்த வேலைய முடிக்க இத்தனை தச்சுதாங்றதெ கறார்ரா சொல்லிப்புடும். கூடவோ கொறைச்சலோ அந்தத் தச்சுக்குள்ள வேலைக்கு இருக்குற ஆளுங்க வேலைய செஞ்சி முடிச்சிப்புடணும். காலையில ஏழு மணிக்கெல்லாம் மத்தியானத்துக்கும் சேர்த்து சோத்து மூட்டையக் கட்டிக்கிட்டு வேலைக்கு வந்துப்புடணும் ஆளுங்க. சாயுங்காலம் ஆறு மணி வாக்குலத்தாம் வேலையிலேந்து போவ சம்மதிக்கும், அப்பிடிப் போறப்ப சும்மா அனுப்பாது வீயெம் மாமா. வேலைக்கு வந்த ஆளுகள உக்கார வெச்சி ஒரு மணி நேரத்துக்கு மேல ஒரு அரட்டை கச்சேரி பட்டறையில நடக்கும்.
            வேலை முடிஞ்ச களைப்புல வேலைக்கு வந்த ஆளுக வூட்டுக்குக் கெளம்ப நிப்பானா, யில்லே உக்காந்து அரட்டை கச்சேரி வெச்சிக்கிட்டு நிப்பானான்னுத்தான கேக்குறீங்க? ஒங்க சந்தேகம் ஞாயந்தாம்! அங்கத்தாம் வீயெம் மாமாவோட மூளை வேலை செஞ்சுச்சு அபாரமா. அந்த ஒரு மணி நேரம் முடிஞ்சா பட்டறை ஒரு டாஸ்மாக்கு பார்ர போல ஆயிடும். ஆளுக்கு ஒரு குவார்ட்டர்ர எடுத்து வுடும் வீயெம் மாமா. அதெ குடிச்சி முடிச்சி பிற்பாடு வேலையாளுகளுக்கு அத்து கொடுக்குறதுதாம் சம்பளம். ஆளுகளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியில செமத்திய கைய வைக்கும் வீயெம் மாமா.
            இம்மாம் கூலி கொறையுதுன்னு ஆளுக கேட்டா, "நீயி நமக்கு ஒத்து வார மாட்டே! நாளையிலேந்து ஒமக்குத் தகுந்தாப்புல கூலி கொடுக்குற எடத்துல வேலைக்கிப் போயிடு! இந்தப் பக்கம் எட்டிப் பாத்தே நாயே செருப்பால அடிப்பேம்!ந்தா நாயே இன்னும் நூத்து ரூவாய கையோட வாங்கிகிட்டு நம்மட மொகத்துல முழிக்காதே! ஒழிஞ்சிப் போ அத்தோட!" அப்பிடின்னும் பாருங்க. அதெ கேக்குறவேம் மெரண்டு போயிடுவாம். அதுல ஒரு சில பேரு தெகிரியமா ஒம்மட பணமும் வாணாம், வவுத்த ‍எரிஞ்சிக்கிட்டுக் கூடுதலா கொடுக்குற நூறு ரூவாயும் வேணாம்னு சொல்லிட்டுப் போவாம். சொல்லிட்டுப் போறவேம் அப்பிடியே போயிட மாட்டாம், மறுநாளு காலையில மொத ஆளா வந்து வீயெம் மாமாவோட கால பிடிச்சிக்கிட்டு செருப்பால அடிச்சாவது வேலைக்கு வெச்சிக்கோ அப்பிடிம்பாம். இப்பிடி ஒரு நெலமை நடந்தா வீயெம் மாமாவுக்கு கொழுத்துதானே போவும். அப்பிடி கொழுக்க ஆரம்பிச்சதுல ஆரம்பிச்சத்ததுதாம் வீயெம் மாமாவோட தோற்ற மாற்றம்.
            அத்தோட பக்கத்துப் பக்கத்து ஊர்ல இருந்த பட்டறைகளோடயும் ஒரு தொடர்ப வெச்சிக்கிட்டு அங்க கொடுத்து வேலைய வாங்கிகிடுச்சு. அப்பிடித்தாம் திட்டையில வாளுபட்டறை வெச்சிருக்குற பட்டாமணியோட நல்ல நெருக்கமா ஆனுச்சு வீயெம் மாமாவுக்கு. ராத்திரி ஏழு மணி ஆனா போதும் பட்டாமணிய வீயெம் மாமாவோட பட்டறையில பாக்கலாம். அந்த அளவுக்கு ஏழு மணிக்கு பட்டறைக்கு வர்ற ஆளுங்க எல்லாத்துக்கும் ஓசிக் குடிய பழக்கம் பண்ணி வெச்சிருந்துச்சு வீயெம் மாமா. அதுல ஏகப்பட்ட வேலைக அதுக்கு பிடிபட்டுச்சு. சுத்துப்பட்டுல பட்டறை வெச்சிருக்குற ஆளுகளேந்து, தச்சு வேலை பாக்குற ஆளுக வரைக்கும் வடவாதியில வீயெம் மாமாவோட பட்டறையில குழும ஆரம்பிச்சதுங்க. அந்த அளவுல திட்டையில இருந்த பட்டாமணியோட பட்டறையைக் கூட ஒத்திக்குப் பிடிச்சு வீயெம் மாமா நடத்தப் போறதா ஒரு பேச்சு அடிபட்டுச்சு.
            ஓசிக் குடிக்கு எந்த அளவுக்கு கவர்ச்சி இருக்குங்றதெ நீங்க வீயெம் வாயால சொல்றதெ கேக்கணுமே, அத்துச் சொல்லும், "ஓசியில குவார்ட்டர்ர வாங்கி ஊத்துனா போதும்டா, அவனவனும் பொண்டாட்டிய கூட்டிக் கொடுன்னாலும் கொடுத்துட்டுக் குவார்ட்டர்ர வாங்கி ஊத்திக்கிட்டுப் போயிட்டே இருப்பாம்டா!"ன்னு தெனாவெட்டா சொல்லும். அதெ சுத்தி நின்னு கேக்குறவனுங்க கெக்கே பிக்கேன்னு சிரிப்பானுங்களே தவுர எதுத்து ஒரு வார்த்தையச் சொல்ல மாட்டானுவோ.
            அத்துச் செரி! இத்தினி நாளு இல்லாம இப்பிடி ஒரு மாத்தம் எப்பிடின்னா? அதெ கடைசியில சொல்றேம்ன்னு சோன்னோம்லே. அதுக்கும் காரணம் வக்கீலு தங்கப்பழம்னு ஒங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லே. அதெதாம் நாம்ம மின்னாடியே சொல்லிட்டேம்ல. வீயெம் மாமாவ கூப்புட்டு வெச்சி, அவருதாம் சொல்லிருக்காரு, "இந்தப் பாருங்க தலைவரே! இந்த மாதிரில்லாம் இருந்தா சுத்தப்பட்டு வாராது. நம்மளப் பாருங்க. நம்மள மாதிரி இருங்க. உக்காந்து ஒரு எடத்துல வேலையப் பாக்காதீங்க. நாலு எடத்துக்கு அலைஞ்சித் திரிஞ்சி வேலையப் பிடிச்சிட்டு நாலு பேத்த வெச்சி பாத்துட்டு மெலுக்கா போயிட்டே இருக்கணும். ஒரு எடத்துல அடைஞ்சி கெடந்தாலே மனசு நெலைகொலைஞ்சிப் போயிடும் தலைவர்ரே! அதாலத்தாம் தலைவர்ரே நாம்ம அடங்கி ஒடுங்கி ஒரிடத்துல உக்கார்றது கெடையாது. ஊரு ஒலகத்துல எந்த வக்கீலும் இப்பிடிக் கெடையாது பாத்துக்குங்க. எல்லா வக்கீலும் ஆபீஸூ, கோர்ட்டு, வூடுன்னு இந்த மூணு எடத்துலத்தாம் இருப்பாம். இந்தத் தங்கப்பழம் வக்கீலு ஒரு ஆளுத்தாம் எந்த எடத்துலயும் எந்த நேரத்துலயும் இருப்பாம். அதாங் தலைவர்ரே நாம்ம சொல்ல வர்ற சேதி! அடுத்தது ன்னா அடுத்தது ன்னான்னு போயிட்டே இருக்கணும். வண்டி ஒண்ணுத்தெ நல்லதா வாங்கி வெச்சுக்குங்க. பாஸ்போர்ட்டு சைஸ் போட்டோ ஒரு நாலு, ஓட்டர் ஐ.டி., குடும்ப அட்டைய எடுத்துட்டு அத்தோட ஒரு ரூவாயி காசோட போனீங்கன்னா அவனவனும் டூ வீலர்ர சீரோ பெர்சண்ட் இன்ட்ரெஸ்ட்ல லோன்ல கொடுக்க நானு நீயின்னு போட்டிப் போட்டு நிக்குறாம். ஒரு வண்டிய வாங்கிப் போட்டுக்கிட்டு ச்சும்மா கெத்தா போயி வேலையப் பிடிங்க. அவனவனும் போட்டியப் போட்டுக்கிட்டு நானு நீயின்னு வேலையக் கொடுப்பாம். யாரு வேலைய கொடுக்குறாங்களோ அவுங்கள அலையவே வுடக் கூடாது. அதாங் சூட்சமம். அவுங்க அலையுற அலைச்சல அவுங்களுக்காக நாம்ம அலைஞ்சேம்ன்னா வெச்சுக்குங்க, நாம்ம கேக்குற காசியத் தூக்கி கையில வைப்பாங்க. நமக்கும் அங்கயிங்கன்னு அலைஞ்சி பொழுது போக்குன மாதிரியும் இருக்கும், காசும் கையில வந்த மாதிரியும் இருக்கும் பாருங்க தலைவர்ரே! நாம்ம சொல்றதெ பாலோ பண்ணிட்டு பெறவு வந்துச் சொல்லுங்க! நாம்ம வெறுமனே கேஸ்ஸ எடுத்து மட்டும் நடத்துற வக்கீல்ன்னு நெனைச்சுப்புடாதீங்க தலைவர்ரே! யாருக்கு கேஸ்ஸ எடுத்து நடத்துறேனோ அந்தக் குடும்பத்துக்கு பெஸ்ட் பேமிலி பிரெண்டு தலைவர்ரே!" அப்பிடின்னாரு தங்கப்பழம் வக்கீலு.
            அவரோட அந்த வார்த்தைய பிடிச்சிக்கிட்டதுதாம் வீயெம் மாமா. அதோட முன்னேற்றம் அதுக்குப் பெறவு ஏறுமுகத்துல அதுவே எதிர்பார்க்காத லெவல்ல போக ஆரம்பிச்சது. ஒரு மனுஷனுக்குக் கையில காசு பணம் பொழங்கி, சுத்திலும் நாலு ஆளு நின்னா போதும் மனசுக்குள்ள இருக்குற அத்தனை பயமும் போயிடும்ல. அப்படித்தாம் எல்லா பயமும் போனுச்சு வீயெம் மாமாவுக்கு. இப்போ ஒங்களுக்குப் புரிஞ்சிருக்கும் வெள்ளையும் சொள்ளையுமா வெளுத்து வாங்குறதுன்னா அத்து எப்பிடின்னு?
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...