12 Apr 2020

வீடு தேடி வர்ற வக்கீலு!

செய்யு - 416        

            வீயெம் மாமாவுக்கு ஆத்திரமும், ஆத்தாமையும் தாங்க முடியல. வேக வேகமா முனிசிபாலிட்டி காம்பளக்ஸ்லேந்து கீழ எறங்கி வர்ர வீயெம் மாமாவ கீழ எதுத்தாப்புல டீக்கடையில இருந்து டீக்குடிச்சிக்கிட்டு இருக்குற ஒருத்தரு பாத்துக்கிட்டு இருக்காரு. எறங்கி வந்த வீயெம் மாமா டிவியெஸ் சாம்பை ஒரு ஒதை ஒதைச்சு ஸ்டார்ட் பண்ண பாக்குது. "ஒரு நிமிஷம் வந்துட்டுப் போறது!"ங்றாரு ஏதுத்தாப்புல இருந்த கடையிலேந்து சத்தமா டீக்குடிச்சிட்டு இருந்தவரு.
            "ஆரு நம்மளையா?"ங்குது வீயெம் மாமா.
            "ஒம்மத்தாம்யா! வந்துட்டுப் போம்யா!"ங்றாரு அவரு.
            டிவியெஸ்ஸூ சாம்பைத் தள்ளிக்கிட்டு எதுத்தாப்புல போவுது வீயெம் மாமா.
            "ன்னா ஊடால பூந்து கூப்புடுறேம்ன்னு நெனைச்சிக்க வாணாம். சில வெவரங்கள சொன்னா நாலு பேத்துக்கு ஒதவியா இருக்கும்லா. அதுல ன்னா கொறைஞ்சிப் போயிடப் போறேம். காசா பணமா? யாருக்கு ன்னா நட்டம்? அதாங் கூப்புட்டேம்!"ங்றாரு அவரு.
            "எதோ சொல்ல வாரீங்கன்னு புரியுது! ன்னான்னு புரிஞ்சிக்க முடியல!"ங்குது வீயெம் மாமா.
            "கவனிச்சிக்கிட்டுத்தாம் இருக்கேம். ரண்டு மூணு நாளாவே மேல பாக்குறேம். இன்னிக்கு சவுண்ட்டு வுட்டதையும் பாத்தேம். ஒன்ன மாதிரி நாலு பேத்து இப்பிடி பாட்டு வெச்சத்தாம் அவ்வேம்லாம் சரியா வருவாம். நமக்கு ஒண்ணும் அவ்வேம் அதாங் அந்த வக்கீலுப் பயெ எதிரிப்பயெ கெடையாது. நம்ம சாதிக்கார்ரேம்தாம். இருந்தாலும் ரொம்ப பிசாத்துப் பண்ணுவாம் பாரு. இன்னிக்கு நீயி நீக்குறே பாரு. அதெப் போல நாலு வருஷத்துக்கு மின்னாடி அவ்வேங்கிட்டெ வந்து நின்னேம். நம்ம சாதிக்காரன்னா இருக்கானே. பாத்து நல்ல வெதமா பண்ணி வுடுவாம்ன்னு நெனைச்சித்தாம் போயி நின்னேம். உண்மையச் சொல்லணும்ல. அதால சொல்றேம். நல்ல தெறமையான பயத்தாம். அதுலல்லாம் கொறைச் சொல்ல மாட்டேம். ரொம்ப மண்டெ கனம் சாஸ்தி. மனுஷன மனுஷனாவே மதிக்க மாட்டாம். என்னவோ அவ்வேங்கிட்ட வந்து நிக்குறவனுக்கெல்லாம் அவ்வேம்தாம் பெரிய கடவுளு மாதிரி நெனைச்சிப்பாம்! அதெ வுட அவ்வேம் கூட வெச்சிருக்காம் பாரு ஜூனியருங்க அவனுங்க அதெ தாண்டி கலக்டரு கணக்கா நடத்துப்பானுங்க!"ன்னாரு அவரு.
            "அப்பிடித்தாம்ங்க பண்ணுறாரு! நாம்ம வடவாதி. அஞ்ஞயிருந்து எம்மாம் தூரம்? வேலை சோலிகள போட்டது போட்டபடி அப்பிடியே போட்டுப்புட்டுத்தாம் வார்றேம். அஞ்சு நாளாச்சு. அலுத்துப் போவுதுங்க!"ன்னுச்சு வீயெம் மாமா.
            "அதாஞ் சொல்றேனே! நாம நாலு வருஷத்துக்கு மின்னாடி வந்து நின்ன நெலையில இன்னிக்கு ஒம்மப் பாக்குறேம்யா! இவனெ வுட தெறமையான ஒரு பய இருக்காம். அவனெ புடிச்சிக்கோ. இவ்வேங்கிட்ட வந்து வெறுத்துப் போயி பெறவு வெசாரிச்சு நாம்ம அவ்வேங்கிட்டத்தாம் போனேம். அப்போ இந்த அளவுக்கு கையில போனு தொடர்புல்லாம் கெடையாது. திருத்துறைப்பூண்டிக்கு நேர்ல போயிப் பாத்தேம். மறுதடவெ நேர்ல வார வாணாம்னு அவனே நேர்லயே வூட்டுக்கு வந்துப்புட்டாம். ரொம்ப சரியா கேஸ்ஸ டீலு பண்ணுவாம். என்னிக்கு கோர்ட்டுக்கு வாரணும், என்னிக்கு வார வாணாம்னு சரியா சொல்லுவாம். அவ்வேம் வாரச் சொல்ற நாள்ல மட்டும் சரியா போயி நின்னா போதும். குறுக்கு விசாரணைன்னா மொத நாளு ஒம்மட வூட்டுக்கு வந்து நீயி எப்பிடி எப்பிடி கூண்டுல நிக்கணும், எப்பிடி எப்பிடி பேசணும்னு சொல்லிக் கொடுத்துப்புட்டு மறுநாளு அவனெ வந்து வண்டியில வெச்சி அழைச்சிட்டும் போயிடுவாம். அவ்வேங்கிட்டெ கேஸ்ஸ ஒப்படைச்சிட்டீன்னா கேஸ்ஸப் பத்தி நீயி நெனைக்கவே வேண்டியதில்லே. ரொம்ப சரியானப் பயெ. ன்னா காசிய கொஞ்சம் கூடத்தாம் கறந்துப் புடுவாம். ஆன்னா அந்த அளவுக்கு மெனக்கெடுவாம். பெறவு நீயி இருக்குற எடத்துக்கு பெட்ரோல்ல போட்டுக்கிட்டு வண்டியில வந்து பாக்குறாம்ன்னா கூட கொறைச்ச காசியக் கொடுக்குறதுல்ல தப்பில்லன்னு நெனைக்கிறேம்!"ன்னாரு அவரு.
            "நமக்கு வேலை மெனக்கெடு யில்லாம, நம்மள நேர்ல வந்து பாத்து காரியத்தெ பண்ணிக்கிறார்ன்னா தாராளமாக நூத்து ரூவாய்க்கி எரநூத்து ரூவாய்ய கொடுக்கலாமுங்க!"ன்னிச்சு வீயெம் மாமா.
            "வக்கீலு பேரு தங்கப்பழம். திருத்துறைப்பூண்டி தங்கப்பழம்ன்னா கோர்ட்டுல தெரியாத ஆளு கெடையாது. ஜூனியர்லாம் வெச்சிக்கிட மாட்டாம். சோலோவாத்தாம் பாப்பாம். பொழுதேனைக்கும் கட்ச்சிக்கார்ரேம் வூட்டுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சிட்டுத்தாம் கெடப்பாம். சமயத்துல கையில காசில்லன்னாலும் நம்மட வூட்டுக்குக் கெளம்பி வந்து உக்காந்துப்புடுவாம். அது ஒண்ணுதாங் அவ்வேங்கிட்ட கொறை. ஆன்னா வாங்குன காசுக்கு விசுவாசமா என்னத்தெ பண்ணணுமோ அத்தே பண்ணுவாம். காசுல கொஞ்சம் குறியான ஆளு. மித்தபடி கேஸ்ல எறங்கிட்டான்னா சிங்கம்னு சொல்றதா? புலின்னு சொல்றதான்னு தெகைச்சிப் போயிடணும். பிடிச்சிருந்தா சொல்லும்யா! போனைப் போட்டு சொல்லி வுடுறேம்!"ன்னாரு அவரு.
            "கும்புடு போடப் போன தெய்வம் குறுக்கால வந்தது போல வந்து வாக்குச் சொல்லுதீயே! புடிக்காமலா போயிடும்! சொல்லி வுடுங்க எந் தெய்வமே! நம்மட வூட்டு கொல சாமியே!"ன்னுச்சு வீயெம் மாமா.
            அவரு சட்டைப் பையில போட்டிருந்த செல்போன எடுத்து போனைப் போட்டு வக்கீலு தங்கப்பழத்துக்குகிட்டெ பேசுறாரு. அப்பிடிப் பேசுறவரு ஸ்பீக்கர்ல போட்டுகிட்டு பேசுறாரு. "நமக்கு ஸ்பீக்கர்ல போட்டு பேசித்தாம் பழக்கம். அப்பிடி பேசுனாத்தாம் பேசுனது போலவே இருக்கும்!"ன்னு சொல்லிக்கிட்டெ, "ஆரு தங்கபழம் சாருங்களா! நாம்ம ஆர்குடி விசுவாசம் பேசுறேம்!"ங்றாரு அவரு.
            "ன்னா தலைவரே! ரொம்ப நாளாயிடுத்து. நம்மள மறந்துட்டீங்க பாத்தீங்களா? நாமளே அந்தப் பக்கம் வூட்டுக்கு வாரலாம்னு நெனைச்சேம். நெனைச்ச ஒடனேயே அடிச்சிப்புட்டீங்களே!"ங்றாரு வக்கீலு தங்கப்பழம்.
            "யய்யோ சார்‍ரே! வூட்டுப்பக்கம் மட்டும் வந்துப்புடாதீங்க! கொடுக்க கையில காசின்னு ஐநூத்து, ஆயிரம்ன்னு இப்போ ஒண்ணுமில்லே! நமக்குத் தெரிஞ்ச பையேம் ஒருத்தெம். கேஸ்ஸூ விசயமா ஒஞ்ஞ ஒதவி தேவைப்படுது. அதுக்காகத்தாம் அடிச்சேம்!"ங்றாரு அவரு.
            "நேர்லயே போயி பாத்து பண்ணுறதெ பண்ணிப்புடுவோம். அட்ரஸ்ஸ மட்டும் சொல்லுங்க. எழுதிக்கிறேம்."ங்றாரு தங்கப்பழம்.

            "இந்தாங்க சித்தெ பொறுங்க சார்ரே! ஆளு நம்ம ஆளு! பாத்து நெதானமா காசிய வாங்கணும். அவருகிட்டேயே போனைக் கொடுக்குறேம். அட்ரஸ்ஸ அவரே சொல்லுவாரு!"ங்றாரு தங்கப்பழம்.
            "நம்ம ஆளுன்னு சொல்லிப்புட்டீங்க! காசியே வாணாம். சும்மாவே முடிச்சித் தந்தாப் போச்சு!"ன்னு சொல்லிட்டுச் சிரிக்கிறாரு தங்கப்பழம். அவரோட சிரிப்புச் சத்தம் வெடிச் சத்தத்தெ போல கேக்குது.
            அவரு போனை வீயெம் மாமாகிட்டே கொடுக்க வீயெம் மாமா பேசுது, "நாம்ம வடவாதிங்கய்யா! பேரு மணி! அல்லாரும் வீயெம்ன்னுதாம் கூப்புடுவாங்க!"ங்குது வீயெம் மாமா.
            "வடவாதின்னா... அத்து வந்து..."ன்னு இழுக்குறாரு தங்கப்பழம்.
            "சர்க்கரை ஆலை இருந்துச்சுங்களே வடவாதி அதுதாங். மாவூர்லேந்து மேற்கால வந்தீங்கன்னா ஒம்போது கிலோ மீட்டரு!"ங்குது வீயெம் மாமா.
            "ஓ அந்த வடவாதியா! வந்துட்டாப் போச்சு!"ங்றாரு தங்கப்பழம்.
            "அஞ்ஞ கடைத்தெருவுக்கு மின்னாடி போன்னியம்மம் கோயிலு. அதுக்குக் கொஞ்சம் பக்கமா எதுத்தாப்புல நாலு கடை அந்தாண்ட பட்டறை வெச்சிருக்கிறேம். மாடக்கண்ணு மளிகைக் கடைக்குப் பக்கத்துல. அது கூட வாணாம். வடவாதி பொன்னியம்மன் கோயிலுகிட்டெ வந்து வீயெம்ன்னு வெசாரிச்சா போதும், யார்ரா இருந்தாலும் கொண்டாந்து வுட்டுப்புடுவாங்க."ங்குது வீயெம் மாமா.
            "வக்கீலுக்கே வெசாரிக்கச் சொல்லிக் கொடுக்குறீங்களே பாத்தீங்களா! செரி பாத்துக்கிடலாம்! நாளைக்கு எத்தனை மணிக்கு ப்ரீயா இருப்பீங்கன்னு சொன்னீங்கன்னா அந்த நேரத்துக்கு டாண்ணு வந்து நிப்பேம்!"ங்றாரு தங்கப்பழம்.
            "நீஞ்ஞ எந்த நேரத்துக்கு வந்தாலும் அந்த நேரத்துக்கு தயாரா இருப்பேம்!"ங்குது வீயெம் மாமா.
            "சில விசயங்கள ஆர அமர உக்காந்து பேசித் தெரிஞ்சிக்க நமக்கு ராத்திரி நேரந்தாம் தோதுப்படும். சாயுங்காலம் அஞ்சு மணி வாக்குல வாரட்டா? அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சா பெறவு பத்து மணி வரை ஆவும் பேசி முடிக்க!"ங்றாரு தங்கப்பழம்.
            "தாராளமா! ரொம்ப நன்றிங்கய்யா! நல்லதுங்கய்யா!"ங்குது வீயெம் மாமா.
            "செரி! போனைத் தலைவர்கிட்ட கொடுங்க!"ன்னு சொல்லி தங்கப்பழம் அவருகிட்டெ கொஞ்ச நேரம் பேசிட்டு வைக்கிறாரு. அவரு பேசி முடிச்சதும் அவரோட கையி ரெண்டையும் பிடிச்சிக்கிட்டு வீயெம் மாமா கண்ணு கலங்குது. "எப்பிடி நெலமையச் சமாளிக்கப் போறேம்ன்னு தெகைச்சிப் போயி தவிச்சிப் போயி நின்னேம். சாமியப் போல வந்தீங்க!"ன்னு சொல்லிப்புட்டு, பக்கத்துப் பொட்டிக் கடையில தொங்கிட்டு இருந்த ரெண்டு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி அவரு கையில கொடுக்குது. "கேஸப் பத்தி கவலே வாணாம். தங்கப்பழத்துக்கிட்டெ போனா பழந்தாம்!"ன்னு சொல்லி அவரு அனுப்பி வுடுறாரு வீயெம் மாமாவ.
            சொன்னது சொன்னபடி அஞ்சு மணிக்கு மறுநாளு டாண்ணு வந்து வீயெம் மாமாவோட ஒட்டிக்கிட்டவருதாம் தங்கப்பழம் வக்கீலு. நடந்தச் சம்பவம் ஒவ்வொண்ணுத்தையும் ஆதியோட அந்தமா அணுஅணுவா அக்குவேறு ஆணிவேரா பேசி வெசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டாரு. அவுங்க சொல்ல எடையிடையே வீயெம் மாமா கொடுத்த காயிதத்தையும் படிச்சிக்கிட்டாரு. அப்பிடி பேசுறப்பவே வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் எந்த மனநிலையில இருக்கறாங்கங்றதையும் நாடிப் பிடிச்சிப் புரிஞ்சிக்கிட்டாரு.
            எடையில எட்டு மணி வாக்குல ராத்திரி சாப்பாட்டுக்கு மட்டுந்தாம் கொஞ்சம் பேச்சிலேந்து இடைவெளி வுட்டாரு தங்கப்பழம் வக்கீலு. மித்தபடி அவரு பாட்டுக்கு கேக்க, வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் சொல்ல இதுக்குள்ள இம்மாம் வெவரமும், வெவகாரமும் இருக்கான்னு அவுங்களே தெகைச்சிப் போறாங்க.
            எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டுக் கெளம்புறப்ப சொல்றாரு தங்கப்பழம், "பொதுவா எந்த வக்கீலும் இப்பிடி வீடு தேடி வந்து அஞ்சாறு மணி நேரம்ல்லாம் உக்காந்து பேச மாட்டாம். ஆன்னா நாம்ம அப்பிடித்தாம். நமக்கு ஆபீஸ்ல உக்காந்து கேஸூ பிடிச்சி ஒரே எடத்துல உக்காந்து வேல பாக்க முடியாது. அத்து நமக்குப் பிடிக்காது. இப்பிடி நாலு எடத்துக்கு அலையோ அலைன்னு அலைஞ்சி கேஸூ பிடிச்சித்தாம் நடத்துவேம். ஒரு எடத்துல உக்கார்றது சின்ன புள்ளையிலேந்து தங்கப்பழத்துக்குப் பிடிக்காது. மொதல்லத்தாம் இப்பிடி அஞ்சாறு மணி நேரம் வெசாரிப்பேம். ஒங்க மனநிலை ன்னா? ன்னா முடிவுல இருக்கீங்க?ன்னு நாம்ம தெரிஞ்சிகிட்டாத்தாம் கேஸ்ஸ எப்பிடிக் கொண்டு போலாங்றதெ நாம்ம முடிவு பண்ணலாம். அதுக்குத்தாம் இப்பிடி ஆரம்பிச்சு நோண்டி நொங்கு எடுத்துடுவேம். இனுமேல்லாம் ஒங்கள இம்மாம் நேரம் உக்கார வெச்சில்லாம் பேச மாட்டேம். வந்தேன்னா பாத்தேன்னா போயிட்டே இருப்பேம். இனுமே குறுக்கு வெசாரணை வர்ற வரைக்கும் ரொம்ப பேச்செல்லாம் கெடையாது. குறுக்கு விசாரணை வர்றப்ப மட்டும் இதே போல எப்பிடியும் அஞ்சாறு மணி நேரம் உக்கார வெச்சி பெண்ட கழட்டிப்புடுவேம். இப்போ கையில ஐயாயிரத்த காசிய்ய கொடுத்தீங்கன்னா கெளம்புவோம்! கெளம்பி வூட்டுப் பக்கம் போயி ஆவ வேண்டிய காரியத்தெ அடுத்து பாத்துக்கிட்டே இருப்பேம்!" இப்பிடிச் சொல்லிப்புட்டு அவரு கெளம்புறப்ப மணி ராத்திரி பதினொண்ணு ஆச்சு.
            வீயெம் மாமா ரெண்டாயிரத்த எடுத்து, "இப்போ இம்மாம்தாம் இருக்குங்க சார்ரே!"ன்னு அவரு கையில கொடுத்துச்சு. "பரவால்ல எடையில ஒரு தபா வந்து மிச்சத்தெ வாங்க்கிடறேம்! இப்போ கெளம்புறேம்!"ன்னாரு தங்கப்பழம்.
            "நேரம் ரொம்ப ஆயிடுச்சுங்களே! நம்ம வூட்டுலயே படுத்துக்கிட்டு விடியக்காலையில கெளம்புலாமுங்களே சார்ரே!"ன்னு வீயெம் மாமா.
            "நாம்ம யாரு? வக்கீலு! எந்த நேரத்துல போனாலும் யாரும் ஒண்ணும் பண்ண முடியாது! இத்து ன்னா நேரம்? இங்க கீழகாவாகுடின்னு ஒரு ஊரு. அங்கப் போயி பேசிட்டு கெளம்புறப்ப நேரம் ன்னா தெரியுமா? ராத்திரி மூணு மணி. அந்த நேரத்துலயும் அங்ஙன தங்கலேயே! வண்டியிலயே உர்ரும் உர்ரும்தாம்! இப்பிடித்தாம் நாலு எடத்துக்குப் போயி நாலு பேத்தப் பாத்து வேல பாத்தாத்தாம் நமக்கு வேல பாத்த மாதிரியே இருக்கும். ஒண்ணும் பயப்பட வாணாம். நடுராத்திரியில போறதெல்லாம் நமக்கு ஊட்டிக் கொடைக்கானலு டூர்ரு போற மாதிரிக்கி. எதுவா இருந்தாலும் பாத்துக்கிடலாம். நாம்ம காயிதத்தெ தயாரு பண்ணிட்டு அநேகமா நாளைக்கு அப்பியில்லன்னா நாளா நாளைக்கி வூட்டப் பாக்க கையெழுத்து வாங்க வந்துப்புடுவேம். மிச்ச காசிய மட்டும் தயார் நெலையில வெச்சிக்கிடுங்க! காசி முக்கியம் தலைவர்ரே!"ன்னு சொல்லிட்டு அவரு கெளப்பிக்கிட்டு வந்த பல்சர் வண்டியில கெளம்புறாரு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...