11 Apr 2020

அஞ்சு நாளு அலைஞ்சாலும் காரியம் ஆவுறதில்லே!

செய்யு - 415        

            வீயெம் மாமா வந்து கேட்டப்போ, சங்குவுக்கு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம். இந்த மாதிரி விசயங்கள்ல மனுஷனுக்கு ஒரு கொணம் என்னான்னா, தனக்கு துன்பம் வர்றது போல மத்தவங்களுக்கும் வாரணும்னு மனசுக்குள்ள எதிர்பாத்துக்கிட்டுக் கெடக்குறதுதாம். அதாச்சி யாம் பெற்ற துன்பம் பெறுக வையகம்ன்னு மனசுக்குள்ளயே கருவிக்கிட்டு இருப்பாங்க. அந்த வகையில சங்குவுக்கு, நம்ம வகையறாவுல நாம்ம ஒருத்தேம் மட்டுந்தாம் கோர்ட்டு, கேஸ்ஸூன்னு அலையுறாப்புல அதுக்கு ஒரு மனசுல நெனைப்பு இருந்திருக்கும் போலருக்கு. "எலே மணி! நாம்மத்தாம் கோர்ட்டுன்னு அலைஞ்சிட்டு இருக்கேம்ன்னு பாத்தா, நீயும் தொணைக்கு வர்ற போலருக்கே?"ன்னுத்தாம் வீயெம் மாமா சம்பவத்தப் பத்திச் சொன்னதும் சங்கு சொன்னிச்சு. சொல்லிப்புட்டு, "இந்தாருடா மணி! இந்த மாதிரி விசயத்துலல்லாம் பொட்டச்சிகள முந்திக்க வுடக் கூடாது. நாம்ம முந்திக்கணும். பொட்டச்சிய முந்திக்க வுட்டுப்புட்டீயே? அந்த நோட்டீசு வந்தப்பவே நம்மள வந்துப் பாத்திருந்தீன்னா, நாம்ம மொத வழக்கப் பதிவு பண்ணிருக்கலாம். வுட்டுப்புட்டீயேடா மணியா!"ன்னுச்சு.
            "நம்மள மெரட்டிப் பாக்குறதா அசால்ட்டா இருந்துப்புட்டேம்!"ன்னுச்சு வீயெம் மாமா.
            "இந்தக் காலத்துப் பொட்டச்சிகள சாதாரணமா நெனைச்சிப்புடக் கூடாதுடா மணியா! நம்மள எடுத்துக்கோ, நாம்ம முந்திக்கிட்டதாலத்தாம் கேஸூ நமக்குச் சாதவமா நடந்து முடிஞ்சிருக்கு. தீர்ப்பு இன்னிக்கோ நாளைக்கோ வந்துப்புடும். வந்துச்சுன்னா வெச்சுக்கோ அந்தச் சிறுக்கி கம்பிய எண்ணிட்டுக் கெடக்க வேண்டியதுதாம்! செரி பரவாயில்லே! ந்நல்ல வக்கீலா பாத்துப் புடிச்சிப் போட்டுட்டா நம்ம பக்கம்தாம் நிக்கும். ஒமக்கு வந்தக் காயிதத்தெ கொடு!"ன்னு வீயெம் மாமா கையில இருந்த காயிதத்த வாங்கிப் படிச்சுப் பாத்துச்சு.
            "ந்நல்லா மொறையால்லா கேசு பதிவாயிருக்கு. டொமஸ்டிக் வயலன்ஸ், சீட்டிங்ன்னு. மவனே மாட்டுன்னேன்னு வெச்சுக்க களி சோறுதாம் பெறவு. நீயி ன்னா பண்றேன்னா ஆர்குடியில சுதாங்கம்ன்னு ஒரு பெரிய வக்கீலு இருக்காரு. ஆஸ்பத்திரி ஸ்டாப்பிங்கல எறங்கி, தூங்குமூஞ்சி மரம் இருக்குல்லே, அதுக்கு எதுத்தாப்புல பாத்தேன்னா ஒரு முனிசிபாலிட்டி காம்ப்ளக்ஸ் இருக்கு. அதுல மேல மாடியில பாத்தீன்னா போர்ட்டு தொங்கிட்டு இருக்கும், சுதாங்கம் பியெஸ்ஸி, பியெல்லுன்னு. கீழேந்து பாக்குறப்பவே மேல கூட்டமாத்தாம் இருக்கும். வெசாரிக்கக் கூட வாணாம். அங்ஙனப் போயி அவர்ர புடி. அவருதாம் இதுலேந்து ஒன்ன கைதூக்கி வுட்டுக் காப்பாத்த முடியும். ஒண்ணும் கவலைப்படாத. தரமான ஒரு வக்கீலெ வெச்சிப்புட்டா கொலைய பண்ணிப்புட்டே இல்லன்னு சொல்லிப்புட்டு தப்பிச்சிப்புடலாம். எல்லாம் வக்கீலு கையிலத்தாம் இருக்கு. பெறவு இன்னொன்னு சொல்றேம். கோர்ட்டுல வெசாரணைன்னு வந்தா இல்ல, ஆமான்னு நமக்குச் சாதகமா வர்ற மாதிரிக்கி ஒத்த வார்த்தையிலத்தாம் எதாந்திருந்தாலும் பதிலாச் சொல்லணும். வெளக்கமெல்லாம் சொல்லப் படாது. ஏன்னா நாம்ம சொல்ற வெளக்கத்தெ வெச்சி எதிரு வக்கீலு பாய்ண்ட பிடிச்சிப் போட்டு நமக்கு எதிரா மாத்தி சிக்க வெச்சிப்புடுவாம் பாத்துக்கோ. சூதானமா இருந்து பொழைச்சி வாரணும். அதெல்லாம் வக்கீலு ஒமக்குச் சொல்லுவாரு. நீயி மொதல்ல இன்னிக்கு சாயுங்காலமே அவர்ர போயி பாரு. ஆறு மணிக்கு மேலத்தாம் ஆபீஸூக்கு வருவாரு! கூட்டம் செமையாத்தாம் இருக்கும். ஆன்னா அவர்ர விட்டுப்புடாதே. அவருதாம் செரி. ஒரே ஆர்கிமெண்ட்டுல எல்லாத்தையும் ஒடைச்சிப்புடுவாரு. இவரு கேஸ்ல எறங்கிட்டாருன்னு தெரிஞ்சாவே எதிரு வக்கீலு மெரளுவாம். அத்து ஒண்ணு போதும் இதுலேந்து நீயி வெளியில வர்றதுக்கு. நீயி இதுல வசமால்லா சிக்கிருக்கே. வக்கீலு அப்பிடில்லா வளைச்சு வளைச்சு எழுதிருக்காம்!"ன்னு சங்கு வீயெம் மாமாவுக்கு சொல்லி அனுப்பி விட்டுச்சு.
            அதெ கேட்டதும் வீயெம் மாமாவுக்கு கொஞ்சம் பதற்றமாத்தாம் இருந்துச்சு. ஒருவேளை ஜெயில்ல போயிக் கெடக்க வேண்டியது ஆயிடுமோன்னு நடுக்கம் உண்டாயிடுச்சு. இப்பிடி அசால்ட்டா இருந்துட்டோமேன்னு பயமாவும் இருந்துச்சு. சாயுங்காலமா நாலு மணிக்கெல்லாம் டிவியெஸ் சாம்புல எடுத்துக்கிட வேண்டியதையெல்லாம் எடுத்துக்கிட்டு வேக வேகமா போயி நாலே முக்காலுக்கெல்லாம் மாடியில இருக்குற ஆபீஸூக்கு மின்னாடி கைப்பிடிச் சுவர்ர பிடிச்சி நின்னா, சுதாங்கம் ஏழு மணி வாக்குலத்தாம் வர்றாரு ஆபீஸூக்கு. அவரு பின்னாடியே அவருகிட்டே பிராக்டிஸ் பண்ற ஜூனியருங்க நாலு பேரு, பெரிய ஆளுக்கெல்லாம் செக்கியூரிட்டிக சுத்தி வருவாங்களே அது மாதிரிக்கி அவர்ர சுத்தி வர்றாங்க. அது வரைக்கும் ஆபீஸ தொறந்து வெச்சு ஒரு பொம்பளைப் புள்ளைத்தாம் உக்காந்திருக்கு. அவர்ர பாக்குறதுக்குன்னு உள்ளார வெளியிலன்னு கூட்டமும் ஜெக ஜோதியா உக்காந்திருக்கு. அதெ பாக்க பாக்க வீயெம் மாமாவுக்கு மனசுக்குள்ள ஒரு தெம்பு வருது. சங்கு சரியான வக்கீலா பாத்துதாம் அனுப்பி வெச்சிருக்காமுன்னு.
            வக்கீலு வந்துட்டாரேன்னு அவர்ர பாக்க முண்டியடிச்சு உள்ளார நொழைஞ்ச வீயெம் மாமாவ ஜூனியருங்க தடுத்து நிப்பாட்டுனாங்க. அவுங்ககிட்டெ, "நாம வக்கீல பாக்கணும்!" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமா.

            "எல்லாரும் அதுக்குத்தாம் வந்திருக்காங்க. சித்தெ இருங்க. ஒங்க வெவகாரத்தெ சொல்லுங்க!"ன்னு ஜூனியருங்கள்ல ஒருத்தரு கேக்குறாரு. வீயெம் மாமா வெவகாரம் இன்னதுன்னு சொல்ல சொல்ல கேட்டுக்கிட்டெ ஜூனியரு, வீயெம் மாமாகிட்டே இருந்த காயிதங்கள வாங்கிக்கிட்டாரு. காத்திருக்கச் சொல்லி, கூப்புடுறப்போ வாங்கன்னு சொல்லிட்டு உள்ளார ஆபீஸ்க்குள்ளப் போயிட்டாரு. உள்ளார போனவரு வக்கீல்கிட்டெ வெளக்கிச் சொல்லி நம்மள கூப்புடட்டும்ன்னு வீயெம் மாமா வெளியில போட்டு இருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில உக்காந்திருக்கு உக்காந்திருக்கு ராத்திரி மணி பத்தரை ஆவுற வரைக்கும். அதுக்கு மேல வக்கீலு கெளம்பி வெளியில போறாரு. நாலு ஜூனியருங்களும் அவரோட போயி பின்னாடி கார்ல ஏத்தி வுட்டுப்புட்டு, திரும்பி வார்றாங்க. வந்த ஒடனே வீயெம் மாமா கேக்குது, "அய்யாக்கிட்டெ சொல்லிப்புட்டீங்களா? அய்யா கேஸ எடுத்து நடத்த சம்மதிச்சுப்புட்டாங்களா? கேஸூ எடுத்து நடத்த எம்மாம் செலவு ஆவும்? இப்போ எதுனாச்சும் பணத்தெ கொடுக்கணுமா?" அப்பிடின்னு.
            "நாளைக்கி அய்யாவுக்கு நெறைய கேஸூ வருது. அதெப் பத்திச் பேசி முடிக்கிறதுக்குள்ளயே நேரம் சரியா ஆயிட்டு. ஒண்ணும் கவலப்பட வாணாம். கேஸூ டீட்டெய்ல்ஸ்லாம் நாம்ம படிச்சுப் பாத்து மனசுக்குள்ள நம்மகிட்டெ பக்காவா இருக்கு. நாளைக்கு ஆறு மணிக்கு மின்னாடி வந்துப்புடுங்க. நாளைக்கு மொத வேலையா வெச்சி பேசிப்புடுறேம். பீஸூ ஸ்ட்ரக்சர்லாம் அய்யாத்தாம் சொல்லணும். இன்னிக்கு இப்போ கெளம்புங்க. நாளைக்கு எல்லாம் ஜெயமாயிடும்!" அப்பிடிங்கிறாரு காயிதத்தெ வாங்கிக்கிட்டெ ஜூனியரு.
            ரொம்ப பெரிய வக்கீல்ன்னா அப்பிடித்தாம் கிராக்கி இருக்கும். எப்பிடியோ நம்ம காயிதம் அவரோட ஜூனியருகிட்டெ போயிடுச்சு. அதுவே இன்னிக்குப் போதும். நாளைக்கி எப்பிடியும் காரியம் முடிஞ்சதுன்னா எதெப் பத்தியும் கவலப்பட வேண்டியதில்லன்னு மனசுக்குக் கொஞ்சம் திருப்திப்பட்டு வீயெம் மாமா அந்த ராத்திரியில ஒத்தையில டிவியெஸ்ஸூ சாம்புல டர்டர்ன்னு உருட்டிக்கிட்டெ வடவாதிக்குத் திரும்புனுச்சு.
            மறுநாளும் மொத நாளு மாதிரிக்கே நாலு மணிக்கெல்லாம் கெளம்பி நாலே முக்காலுக்கே வேக வேமகா போயி நின்னுச்சு, ஒரு வேளை வக்கீலு கொஞ்சம் மின்னாடி வந்தா பாத்துப்புட்டு மின்னாடியே கெளம்பிப்புடலாமுன்னு. நேத்திக்காவது ஏழு மணிக்கு வந்த வக்கீலு இன்னிக்கு ஏழரை மணி வாக்குலத்தாம் வந்தாரு. எப்படியும் இன்னிக்கு மொத ஆளா நம்மள கூப்புடுவாங்கன்னு நெனைச்ச வீயெம் மாமாவ கடைசி ஆளா கூட கூப்புடல. ராத்திரி பத்து மணி வாக்குல வக்கீலு கெளம்பி அவரு பாட்டுக்குப் போனாரு. அவர்ர போவ வுட்டுப்புட்டு, காயிதத்தெ வாங்குன ஜூனியரு ஓடியாந்து, "கோவிச்சிக்காதீங்க ஜி! நாளைக்கு கட்டாயம் மீட் பண்ண வெச்சிப்புடுறேம்! நாளைக்கு ஒங்க கேஸ்தாம் பர்ஸ்ட். மிச்சதெல்லாம நெக்ஸ்ட்!"ன்னு சொல்லி கன்னத்தெ தடவிட்டுப் போனதுல வீயெம் மாமா கொஞ்சம் மனசு குளுந்து வூட்டுக்கு வந்துச்சு.
            ஆனா இப்பிடியே நாலு நாளைக்கு மேல கன்னத்தெ தடவி மனசு குளிர வெச்சப்பத்தாம் வீயெம் மாமா அஞ்சாவது நாளு, வக்கீலு சுதாங்கம் ஆபீஸ்க்குள்ள உள்ளார போன ஒடனே, சத்தம் போட்டு, "நம்மட காயிதத்தெ கொடுங்கடா! முடியும்ன்னா முடியும்ன்னு சொல்லுங்க. யில்லாட்டி முடியலன்னு சொல்லுங்க. அதெ வுட்டுப்புட்டு இப்பிடி தெனமும் வார்ர வெச்சி காத்திருக்க வெச்சா நாம்ம ன்னாடா பண்ணுவேம்? நம்மட பொழைப்பப் போட்டுட்டு இப்பிடி வந்து உக்காந்தா யாருடா நமக்குச் சோத்தெ போடுவா? வக்கீலப் பாக்கறதுக்கே அஞ்சு நாளு ஆவும்ன்னா நமக்கு ஒண்ணும் புரியலே! பெறவு நாம்ம சங்கதியச் சொல்றதுக்குப் பத்து நாளு ஆவும்ன்னு ஒண்ணொத்துக்கும் கணக்குப் பண்ணா அதுக்குள்ள கேஸூ முடிஞ்சி நாம்ம ஜெயிலுக்குள்ளத்தாம் கெடக்கணும்டா!"ன்னு கத்தப் போவ, உள்ளார போன சுதாங்கம் வெளியில வந்து, என்னா ஏதுன்னு விசாரிக்கிறாரு.
            "உள்ளார வாங்க! பேசுவோம்!"ன்னு சுதாங்கம் சொல்லப் போவ, "ஏம்ய்யா இப்பிடி ஒன்னயப் பாக்கவே ஒவ்வொரு தபாவும், நாம்ம நாலு பேத்துக்கிட்டெ வாலு பிடிச்சி நின்னுகிட்டு இருந்தா எங் கதெ என்னாவுறது? போய்யா நீயும் ஒந் தொழிலும். நம்மளோட காயிதத்தெ மொதல்ல கொடுக்கச் சொல்லுய்யா! நாம்ம நமக்கு ஏத்த மாதிரிக்கி யாராச்சியும் பாத்துக்கிடறேம்!"ன்னுச்சு வீயெம் மாமா.
            "யாரு மிஸ்டர் இவரோட பேப்பர்ஸ்ஸ வாங்கி வெச்சு இழுத்து அடிக்கிறது?"ன்னு சுதாங்கம் கேக்குறதுக்கு மின்னாடியே, "ச்சும்மா நடிக்காதய்யா! ஒங் கதையல்லாம் நமக்குத் தெரியும்! இப்பிடி காக்க வெச்சு கூப்புட்டுப் பேசுனாத்தாம் கேக்குற காசியக் கொடுப்பேம்ன்னு கிராக்கிப் பண்ணுறீங்க? ஒம்மட சகவாசமே வாணாம். நம்மட காயிதத்தெ கொடுக்கச் சொல்லும்யா! இல்லன்ன மருவாதிக் கெட்டப் போயிடும்!"ன்னு ரகளை வெச்சிருக்கு வீயெம் மாமா.
            "மொதல்லா இந்த ஆளோட பேப்பர்ஸ்ஸ மூஞ்சுல தூக்கி எறிஞ்சி கீழே அனுப்புங்க. இன்டீசன்ட் பெல்லோ. யாரு இந்த ஆளோட கேஸ்ஸ எடுத்து ஜெயிக்குறாங்கன்னு பாக்குறேம்?" அப்பிடின்னிருக்காரு வக்கீலு சுதாங்கம்.
            "ஆமாய்யா! பெரிய பப்பு நீயி? கேஸையே எடுத்து நடத்தாம தோத்துப் போறதெ வுட, கேஸ்ஸ யாருகிட்டாயவது கொடுத்து எடுத்து நடாத்தித் தோத்துப் போவுலாம்யா! போய்யா மொதல்ல! மனுஷன மனுஷம் மதிக்கக் கத்துக்கய்யா மொதல்ல! என்னவோ ஐ கோர்ட்டு வக்கீலு மாரில்லா பெரிய பீலா வுட்டுக்கிட்டு வர்றே போறே?"அப்பிடின்னுச்சு வீயெம் மாமாவும் வுடாம.
            வீயெம் மாமாவோட காயிதமெல்லாம் இப்போ அதோட கையில வந்துச்சு. கோபாவேசமா வீயெம் மாமா அந்தக் காம்பளக்ஸ் மாடிய விட்டு கீழே எறங்கி வருது.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...