11 Apr 2020

கொரோனா ராமன் கதைகள் / கதை - 1 / காளிதேவியின் அருள்!

 கொரோனா ராமன் கதைகள்
கதை - 1
காளிதேவியின் அருள்!

இந்த முறை ராமன் காளிதேவியை வேண்டி மந்திர உச்சாடனம் செய்த போது அவள் ஆயிரம் தலைகளோடு, இரண்டாயிரம் கைகளோடு தோன்றினாள்.
அச்சத்தோடு பீதியையும் பேதியையும் ஒரு சேர உண்டாக்கும்  அந்தத் தோற்றத்தைக் கண்டு ராமன் சிரித்தான்.
கால சுழற்சியில் பயம் மாறி சிரிப்புப் பிறப்பதன் காரணத்தை காளி தேவியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயிரம் தலைகளுக்குக் கீழிருந்த கழுத்திலும் தலா ஒரு மண்டையோடு வீதம் தொங்கிக் கொண்டிருந்தது. அத்தோடு இரண்டாயிரம் கைகளிலும் தலா ஒரு மண்டையோடு வீதம் இருந்தது. மனதில் களேபரத்தை உருவாக்க இந்தத் தோற்றம் போதாதா என்று முதன் முதலாக காளிதேவி கலவரமடைந்தாள்.
களேபர கலவரத்தின் உச்சத்தில் காளிதேவி ராமனைப் பார்த்துக் கேட்டாள், "ஏனடா சிரிக்கிறாய்?" என்று.
ராமன் சொன்னான், "தாயே! இந்தக் கோரோனா பீதியில் நாங்கள் இரண்டு கைகளை வைத்துக் கொண்டே அடிக்கடி சோப்புப் போட்டோ, சானிடைசர் போட்டோ சுத்தம் செய்து செய்து அலுத்தும் களைத்தும் போகிறோம். உனக்கோ இரண்டாயிரம் கைகள். அவ்வளவு கைகளுக்கும் சோப்புப்போடுவதோ அல்லது சானிடைசர் போடுவதோ... அதை நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது. அத்தோடு ஆயிரம் தலைகள் உனக்கு. ஒருவேளை உனக்கு கொரோனா வந்து விட்டால் ஒவ்வொரு தலையின் ஒவ்வொரு மூக்குக்கும் ஒரு வெண்டிலேட்டர் என்றால் உனக்கு மட்டுமே ஆயிரம் வெண்டிலேட்டர் ஆகும். திடீரென்னு ஆயிரம் வெண்டிலேட்டர் வாங்குவதென்றால்... நினைத்துப் பார்க்க பார்க்க சிரிப்புதான் தாயே!"
இதைக் கேட்டதும் காளிதேவி சிரித்து விட்டாள்.  அவள் பேசினாள், "உலகமே என்னில் உள்ளடக்கம். கொரோனாவும் என்னில் உள்ளடக்கம். உன் பேச்சு எனக்குப் பிடித்து விட்டது. அருகே வா! உன் தலையில் என் கை வைத்து ஆசிகள் செய்கிறேன்!"
ராமன் சொன்னான், "வேண்டாம் தாயே! கொரோனாவும் உன்னில் உள்ளடக்கம் என்றால் உன் கரம் என் சிரத்தில் பட்டால் நான் குவாரன்டைனில் இருபத்து எட்டு நாட்கள் இருக்க வேண்டியதாகி விடும். எந்த ஆசிகள் தருவதாக இருந்தாலும் மூன்றடி தூரத்தில் கைகளை நீட்டிய படியே செய்யுங்கள் தாயே!"
காளிதேவியிடம் பெருஞ்சிரிப்பு வெளிப்பட்டது. "நன்றாகவே பேசுகிறாய் ராமா! இன்றிலிருந்து நீ கொரோனா ராமன் என்று அழைக்கப்படுவாயாக! நாள்தோறும் அதைப் பற்றி எழுதி வருவாயாக! உனது எழுத்தை இந்த உலகம் முழுவதும் வாசிக்க கடவதாகட்டும்!" என்றாள் காளிதேவி.
"நன்றி தாயே!" என்று ராமன் தலை குனிந்து வணங்கிச் சொல்லி நிமிர்வதற்குள் எங்கோ மறைந்தாள் காளிதேவி.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...