9 Mar 2020

மழைப்பேறும் மகப்பேறும்

செய்யு - 382        

            தஞ்சாவூரு அவர்லேடி ஆஸ்பிட்டலு.
            அங்க ஆயியச் சேத்து நாலு மணி நேரம் ஆயிடுச்சி.
            மொதல்ல கொஞ்ச நேரம் அப்பிடியும் இப்பிடியுமா உலாத்தச் சொன்னாங்க ஆயிய. அவளும் இப்பிடியும், அப்பிடியுமா நடந்துப் பாக்குறா. வலிக்குற வலியில இனுமே நடக்க முடியாதுன்னு அப்பிடியே படுத்துக்கிட்டா. நேரம் ஆவ ஆவ வலி அதிகமாயிட்டே போவுதே தவிர கொழந்தை பொறக்குறாப்புல தெரியல.
            ஆபரேஷன தவுர வேற வழியில்லன்னு சொல்லுறாங்க ஆஸ்பிட்டல்ல. பனிக்குட நீரு வேற கம்மியா இருக்கு. ரொம்ப நேரத்துக்குக் காத்திருக்க முடியான்னும், அப்பிடிக் காத்திருப்பு பண்றது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்துன்னு வேற சொல்லுறாங்க.
            வளைகாப்பு முடிஞ்ச கையோட ஆயிய பொறந்த வூட்டுக்குப் பிரசவத்துக்காக கொல்லம்பட்டிக்கு அழைச்சிட்டுப் போனாங்க. விகடு சனி, ஞாயித்து லீவு நாள்ல போயி பாத்துட்டு வருவாம். அப்பிடிப் போயி பாத்த ஒரு ஞாயித்துக் கெழமெ அவ்வேம் ஊரு கெளம்புற நேரத்துல வலி உண்டாயிடுச்சி ஆயிக்கு. பெரசவம் ஆவுற நேரத்துல புருஷன் பக்கத்துல இருக்குறது ஆயிரம் பலத்துக்குச் சமம்ன்னு சனங்க சொல்லிகிட்டே பெரசவத்தெ வூட்டுலயே பாத்து முடிச்சிடுவோம்ன்னு அதுக்கான வேலயப் பாக்குறாங்க. பிரசவம் ஆவுறதுக்குன்னே என்னென்னவோ கைமருந்துகள அரைச்சிக் கொடுக்குறாங்க. சுக்குத்தண்ணிய காய்ச்சிக் கொடுத்துப் பாக்குறாங்க. ராத்திரி முழுக்க அவங்களால ஆன முயற்சிய எவ்வளவோ பண்ணிப் பாக்குறாங்க. ஒண்ணும் கதை ஆவுறாப்புல தெரியல.
            "அடிச்சேம்ன்னா பாரு ஒன்னய! கொழந்தைப் பொறக்குறதுல ஒரு கணக்கு இருக்குல்லா. தாய்க்காரி முக்குறப்ப கொழந்தை அதெ சரியா புரிஞ்சிகிட்டு பனிக்கொடத்துலேந்து தவ்வு தவ்வி வெளியில வந்துப்புடணும். தாய்க்காரி முக்குறப்ப கொழந்தை தவ்வு தவ்வாம போனாலோ, கொழந்தை தவ்வுறப்ப தாய்க்காரி முக்காம போனாலா சுகப்பெரசவமா கொழந்தைய பொறக்க வைக்குறது செரமம்தாம். இவ்வா என்னா முக்கு முக்குன்னு சொன்னாக்கா வலிக்கி வலிக்கின்னு அழுவுறா. வலிக்காமா எந்த ஊருல எவ்வே கொழந்தைய பெத்துக்கிட்டா? சுக்குத் தண்ணிய வாயில ஊத்துனா வேண்டாங்றா. மருந்து தண்ணிய ஊத்துனாலும் வேணாங்றா. பெறவு எப்பிடித்தாம் கொழந்தய பொறக்க வைக்குறதாங்க. இந்தக் காலத்துப் பொம்பளைவோளுக்கு நோவாம கொள்ளாம கொழந்தைய பெத்துக்கிடணும்னு நெனைக்கிறாளுவோ. அதுக்குத் தகுந்தாப்புல டாக்கடருமாருங்களும் கத்தியோடல்லா அலையுறாங்!"ன்னு உள்ளார சத்தத்தெ கொடுக்குற கெழவியோட கொரலு வெளியில நிக்குற விகடுவோட காதுல வுழுவுது.
            நடுராத்திரியில இதுக்கு மேல நம்மாள பண்ணுறதுக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லி, ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு போயிடுங்க அப்பிடின்னு ஒட்டுமொத்தமா இப்போ எல்லா பொண்டுகளும் சொல்லிப்புட்டாங்க. ஆனா ஆயியோ ஆஸ்பிட்டலு போனாக்கா கத்திய வெச்சி ஆபரேஷன பண்ணிப்புடுவாங்கன்னு சொல்லி அழுவுறா. "இன்னும் கொஞ்சம் நேரத்துல கொழந்தெ போறந்துப்புடும்!"ன்னு சொல்லிக் கெஞ்சுறா. அவளுக்கு ஆஸ்பிட்டலு ஆபரேஷன்னா பயமா இருக்கு. மனசோடு கெஞ்சலப் பாக்குறதா? மனுஷரோட உசுரப் பாக்குறதா?ன்னு யோசிச்சி, கடைசியில வேற வழியில்லாம ஒரு காரைப் பிடிச்சி தஞ்சாவூரு அவர்லேடி ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு வாராப்புல ஆயிடுச்சி.
            கொழந்தைப் பொறக்குறதுல பாத்தீங்கன்னா, பொறக்குற கொழந்தை சித்திரை மாசமோ, ஆடி மாசமோ பொறக்கக் கூடாதும்பாங்க. சித்திரை மாசத்துல கொழந்தை பொறந்தா வேக்காலத்துல கெடந்து செரமப்படும், ஆடி மாசத்துல பொறந்தா காத்தடிக் காலமா இருக்குறதால செரமப்படுங்றது அதுக்கு ஒரு காரணமா இருக்கலாம். எந்த ரெண்டு மாசத்துல கொழந்தை பொறக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்களோ அந்த ரெண்டு மாசத்துலத்தாம் கொழந்தைப் பொறக்குறாப்புல முருகுவுக்கும், விகடுவுக்கும் சூழ்நிலை ஆயிடுச்சி.
            முருகுவுக்கு சித்திரை மாசத்துல கொழந்தை பொறக்குறாப்புலத்தாம் நாளு வந்திச்சு. அதெ முருகுவோட அம்மா விரும்பாததால சித்திரை பொறக்குறதுக்கு ஒரு நாளுக்கு மின்னாடியே கத்திய வெச்சி ஆபரேஷன பண்ணிக் கொழந்தைய வெளியில எடுத்துட்டாங்க டாக்கடருமாருங்க. முருகுவுக்குப் பொறந்தது ஆம்பள புள்ள. அதுல ஒரு சந்தோஷம் முருகுவோட அம்மாவுக்கு, கொழந்தையும் சித்திரைக்கு மின்னாடியே பொறந்துட்டு, அத்தோட ஆம்பள புள்ளையாவும் அமைஞ்சிடுச்சின்னு.
            இந்தச் சேதி தெரிஞ்ச பிற்பாடு வெங்குவுக்கும் அப்பிடி ஒரு ஆசெ. நம்மட மவனுக்கும் ஆம்பள புள்ளையா பொறக்கணும், அதுவும் ஆடி மாசத்துக்கு மின்னாடியே பொறக்கணும்னு. ஆனா கொழந்தைப் பொறக்குற தேதிய கணக்குப் பண்ணிப் பாத்தாக்க சரியா ஆடி மாசத்துல வருது நாளு. "ஆடி மாசத்துக்கு மின்னாடியே, அஞ்ஞ கொல்லம்பட்டியில சொல்லிக் கத்தியே வெச்சி ஆபரேஷனப் பண்ணச் சொல்லுடமா மவனே!"ன்னு ஒத்த கால்ல நிக்க ஆரம்பிச்சிடுச்சி வெங்கு.
            "அப்பிடில்லாம் கொழந்தெ பொறக்கக் கூடாது யம்மா! நீயி பேசாம யிரு!"ங்றாம் விகடு.
            "கொழந்தெ பொறக்குறப்ப பொறக்கட்டும். அதென்ன ஆடி மசாத்துல பொறக்கக் கூடாதுன்னுகிட்டு? கொழந்தெ நல்ல வெதமா பொறக்குறத பாப்பீயா! அத்து பொறக்குற நாளு, கெழம, மாசம்னு பாத்துகிட்டு!"ன்னு சுப்பு வாத்தியாரும் வைஞ்சாரு.
            "அதெல்லாம் முடியா. ஆடி மசாத்துல கொழந்தெ பொறந்தா குடும்பத்தல்ல ஆட்டி வெச்சிப்புடும்பாவோ! அதாங் கொழந்தெ இப்போல்லாம் கத்தியெ வெச்சி ஆபரேஷன் பண்ணித்தாம்ன்னா பொறக்குது. ஊரு ஒலகத்துல பண்ணாததையே நாம்ம சொல்லிப்புட்டேம்?"ன்னு வெங்கு அதுக்கு ஒரு அழுகைய வைக்குது.
            இதென்னடா வம்பாப் போச்சுன்னு இந்தச் சேதியக் கேள்விப்பட்டு வயித்துல கத்தியான்னு அழுவ ஆரம்பிச்சிடுச்சு ஆயி அப்பவே. "வயித்துல கத்திய வைக்குறதுன்னா ச்சும்மாவா? ஒடம்ப வளைச்சி முதுகுத்தண்டுல மயக்க ஊசிய போடுவாங்களாம்ல. அந்த ஊசியப் போட்டுக்கிட்டவங்களுக்குப் பின்னாளுல முதுகுவலி, இடுப்பு வலியில்லாம்லா வந்துப்புடுமாம்லா. ஒடம்பெல்லாம் வேற ஊதிப் போயிடுமாமுல்லா. அத்தெ போட்டு கத்திய வைக்காட்டி ன்னா? அத்தையேங் இப்பிடி பிசாத்துப் பண்ணுறாங்க? சொகப்பெரசவம்தான்ன நல்லது. அவுங்க மட்டும் ஒங்களையும், ஒங்க தங்காச்சியையும் ரண்டு கொழந்தையையும் வூட்டுலத்தாம்னா சொகப் பெரசவமா பெத்துப் போட்டாங்க! அவுங்க ஒரு ஊசிய போடுறதுக்குள்ள டாக்கடர்ரையே ஒதைச்சித் தள்ளுன கதையெல்லாம் நமக்குத் தெரியாதுன்னு நெனைப்புட்டாங்களா? நாம்ம வூட்டுலயேத்தாம் கொழந்தைய பெத்துப்பேம்"ன்னு ஆயி அழுவையில ஒரு கதா காலட்சேபத்த வைச்சதெல்லாம் விகடுவோட ஞாபவத்துல இப்போ வந்துப் போவுது.

            "அத்தே சொன்னாங்க! கத்திய வைக்கணும்னு. அவுங்க அப்பிடிச் சொல்லிருக்கக் கூடாது. அதாங் அவுங்க வாக்கு அப்பிடியே பலிக்கப் போவுது!"ன்னு வேற சொல்லி இப்போ ஆஸ்பிட்டல்ல அழுவுறா ஆயி. அவ அழுவ அழுவ விகடுவுக்கும் கண்ணுல தண்ணியா வருது. புருஷங்காரன் பொண்டாட்டிக்காரிக்குப் பிரசவம் ஆவுறப்ப பக்கத்துல இருக்குறது ஆயிரம் பலம்னாலும், அத்து புருஷங்காரனுக்கு ஆயிரம் பலவீனம். மனசுக்குள்ள ஒடைஞ்சிப் போயிடுவாம் புருஷங்கார்ரேம். பொண்டாட்டிக்காரியும் பொழைக்கணும், பொறக்குற கொழந்தையும் நல்ல வெதமா பொறக்கணும்னு தவியா தவிச்சிப் போயிடுவாம். இதெ பக்கத்துல இருந்து பாக்குற ஒருத்தேம் சென்மத்துக்கும் இன்னொரு கொழந்தைக்கி ஆசைப்பட மாட்டாம். அந்த அளவுக்குப் பொண்டாட்டிக்காரி ஒடம்பால கஷ்டத்தெ அனுபவிச்சிடுவான்னா, புருஷங்கார்ரேம் மனசால கஷ்டத்தெ அனுபவிச்சிடுவாம். ஒடம்பு படுற கஷ்டத்துல மனசு எங்க இருக்காதுன்னு தெரியாம, மனசு அதுலயே போயிடும் புள்ளய பெக்குற பொண்டாட்டிக்காரிக்கு. மனசு படுற கஷ்டத்துல அந்த மனச எங்கயும் வைக்க முடியாம, அது படுற கஷ்டத்தெ சுமந்துகிட்டு அந்த மனசோட புருஷங்கார்ரேம் இருக்குறது இருக்கே, கொடுமையிலும் பெருங்கொடுமெ அது.
            மழைப்பேறும் மகப்பேறும் மகாதேவம் கூட அறிய முடியா ஒண்ணுன்னு கிராமத்துல சொல்லுவாங்க. இப்போ என்னான்னா இந்த நாளுல்ல இந்த மணி நேரத்துல கொழந்தை பொறக்கும்ன்னு திட்டம் பண்ணியே சொல்லிப்புடுறாங்க. அதால வர்ற கோளாறுத்தாம் முங்கூட்டியே கத்திய வைக்குறதும், கொழந்தைய வெளியில எடுக்குறதும். அத்தோட ஒரு சில டாக்கடருமாருங்க அப்பிடிக்கி நல்ல நேரம், நாளு, நட்சத்திரம்ல்லாம் பாத்து கத்திய வெச்சி கொழந்தைய வெளியிலயும் எடுத்துப்புடுறாங்க. இப்பிடிக்கா சேதின்னு சனங்களும் கொழந்தை நல்ல நேரத்துல பொறந்தா நல்லதுதாம்னேன்னு நெனைச்சிக்கிட்டு அலையுதுங்க. இப்போ மழைப்பேறையும், மகப்பேறையும் கூட ஓரளவுக்குக் கணிச்சிச் சொல்லிடுறாங்க. அதுக்காக பெய்யுற மழைதானே பெய்யும், பொறக்குற கொழந்தைதானே பொறக்கும். அத்தெ எப்பிடி மாத்த முடியும்?
            நேரம் ஆவ ஆவ பெரசவ வலி அதிகமாயிட்டே போவுது ஆயிக்கு. நின்னுகிட்டும், நடந்துகிட்டும் இருந்தவ முடியான்னு சொல்லி படுத்துகிட்டா. சுகப்பெரசவமா ஆக்கலாம்னு முயற்சிப் பண்ணிக்கிட்டு இருந்த சகோதரிக இதுக்கு மேல முடியாங்ற மாதிரிக்கி முகத்தெ காட்டுறாங்க.
            அந்தச் சகோதரிக கத்திய வெச்சி ஆபரேஷனப் பண்ணித்தாம் கொழந்தைய எடுத்தாவணும்னு சொல்லி அதுக்குச் சம்மதிக்கிற பத்திரங்கள கொண்டாந்து நீட்டி விகடுகிட்ட ‍கையெழுத்துக் கேக்கறாங்க. அப்பிடி என்னத்தாம் அதுல எழுதியிருக்குன்னு, அந்தப் பத்திரங்களப் படிச்சிப் பாக்க பாக்க பயமா இருக்கு. கத்திய வெச்சி பண்ணுற பெரசவத்துல ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனாக்கா அதுக்கு சம்பந்தப்பட்ட டாக்கடருமாரோ, ஆஸ்பிட்டலோ நிர்வாகமோ பொறுப்ப ஏத்துக்க முடியாதுன்னும், அதுக்குச் சம்மதப்பட்டாத்தாம் கத்திய வெச்சி ஆபரேஷன்ன பண்ண முடியும்னு அதுல எழுதியிருக்கு. அதெ கொஞ்சம் படிச்சிப் பாத்திருப்பாம் விகடு.
            "ஆர அமர படிச்சிப் பாக்குறதுக்கெல்லாம் நேரமில்ல மிஸ்டர். ஜஸ்ட் பார்மலிட்டிஸ் ஒன்லி. டோன்ட் ஒர்ரி அபெளட் தட் டூ மச். டாக்டருக்குக் கால் பண்ணியாச்சி. ஷி இஸ் கம்மிங். நீங்க சைன் வெச்சாத்தாம் ஒங்க ஒய்ப்‍பெ ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போவோம்!"ங்றாங்க அந்தப் பத்திரத்தெ கொடுத்து, ‍கையோட பேனாவையும் கொடுத்துக் கையெழுத்தக் கேக்குற அந்தச் சகோதரி.
            "ஒண்ணு யோசிக்காதீங்க யம்பீ! நல்ல வெதமாத்தாம் நடக்கும். வெரசா கையெழுத்தப் போட்டுக் கொடுங்க. இஞ்ஞ இருக்குற மாதாவுக்கு ஒரு பொடவைய வாங்கிச் சாத்துறேம்னு வேண்டிக்கிடுங்க. வேண்டிக்கிட்டு கையெழுத்தப் போடுங்க! இஞ்ஞ பொறக்குற எல்லா கொழந்தையும் மாதாவோட கொழந்தைங்க. மாதா கைய வுட்டுப்புட மாட்டா!" அப்பிடிங்குது கூட வந்த மாமியாரு பவளம்.
            விகடு எந்தக் காலத்துல எந்தக் கடவுள வேண்டுனாம்? கடவுளு இல்லன்னு ஒரு முடிவுக்கு வந்து நாளாச்சு. செரி நமக்காக இல்லாட்டியும் பொண்டாட்டிக்காகவும், பொறக்கப் போற புள்ளைக்காகவும் வேண்டிக்குறதில்ல தப்பு எதும் இருக்கா ன்னா ஒரு யோசனே ஓடுது அவனுக்கு. அதையும் முழுசா யோசிக்கவும் முடியல, யோசிக்காம இருக்கவும் முடியல. ஒரே கொழப்பமா இருக்கு. அந்தக் கொழப்பத்துல நெத்திய சுருக்குனா, "ரொம்ப யோசிக்காதீங்க பிரதர். ஒண்ணும் ஆவாது ஒங்க ஒய்ப்புக்கு. ஆஸ்பிட்டல் பார்மாலிட்டிஸ்ன்னு சிலது இருக்கு. அதுக்கெல்லாம் ஒத்துழைப்புக் கொடுத்தாத்தாங் குயிக்கா அடுத்தடுத்ததப் பாக்க முடியும். இப்பிடி ஒவ்வொண்ணுத்துக்கும் திங் பண்ணிக்கிட்டே இருந்தா திங் பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியதுதாங். ப்ளீஸ்! சைன் பண்ணிக் கொடுங்க!" அப்பிடிங்கிறாங்க அந்தச் சகோதரி. எப்பவும் நாம்ம நெனைக்கிறது ஒண்ணாவும், மத்தவங்க அதெ நெனைச்சிக்கிறது ஒண்ணாவும்தாம் இருக்கு.
            அதுக்கு மேல எதையும் யோசனை பண்ண முடியல விகடுவால. மனசும் அறிவும் இருக்கே அத்து இப்பிடித்தாம் ஆபத்தான நேரத்துல கூட சிலதெ விட்டுக் கொடுக்காம போராடும் போலருக்கு. ஒரு ஆபத்து அவசரத்துக்குக் கூட கடவுள வேண்டிக்க வுட மாட்டேங்குது. அதுல பூந்து ஒரு கொழப்பத்தெ உண்டு பண்ணுது. அத்துச் செரி கடவுள் இல்லன்னு முடிவு பண்ணதுக்குப் பெறவு இல்லாத கடவுள்கிட்டெ என்னத்தெ போயி வேண்டிக்கிடறதுன்னு டக்குன்னு ஒரு பொறி எங்க இருந்தோ வந்து மனசுக்குள்ள அடிக்கிது விகடுவுக்கு. இத்த யோசிச்சுப் பாக்கறதுக்கான்ன நேரமாடா இத்து முட்டாப் பயலேன்னு அப்பின்னும் இன்னொரு பக்கத்துல இன்னொரு மனசு திட்டியும் தீர்க்குது அவனெ.
            இதுக்கு மேல எந்த யோசனையும் கெடையாதுன்னு, செரித்தாம் பேனாவ வாங்கிக் கையெழுத்துப் போடுவோம்னு நெனைச்சா கையெழுத்தே மறந்துப் போனது போல இருக்கு விகடுவுக்கு. எத்தனையோ வருஷம் கண்ணெ மூடிட்டுப் போட்ட கையெழுத்து இப்பிடியா மறந்து போனது போல ஆயிடும்னு அந்த நேரத்துலயும் ஆச்சரியமா இருக்கு. கண்ணெ மூடிட்டுப் போடுற கையெழுத்த அதே போலவே கண்ணெ மூடிட்டுப் போட்டுவோம்னு, அந்தச் சகோதரி சொல்லுற எடத்திலல்லாம் ஏதோ கிறுக்குறாம். அப்பிடிக் கிறுக்குறது அவ்வேம் கையெழுத்துத்தானான்னு அவனுக்கே சந்தேகமா இருக்கு. மனசுக்குள்ள இருக்குற பதற்றம் அப்பிடியே நடுக்கமா கை வழியா எறங்கி கோழிக்கால்ல கட்டி விட்ட பேனா கிறுக்கித் தள்ளுறாப்புல எதையோ கிறுக்கித் தள்ளுறது நல்லாவே தெரியுது. விகடுவோட கையெழுத்த முன்ன பின்ன அந்தச் சகோதரி பாத்திருந்தாங்கன்னா, ஒழுங்கா ஒங்க கையெழுத்தப் போடுங்கன்னுத்தாம் சொல்லிருப்பாங்க.
            பொதுவா கையெழுத்துன்னாவோ கிறுக்கித் தள்ளுறதுதாங்ன்னு ஒரு நெனைப்பு எல்லாருகிட்டயும் இருக்குறதால அந்தச் சகோதரியும் இதுதாங் விகடுவோட கையெழுத்துன்னு நெனைச்சி வாங்கிகிட்டு இருந்திருப்பாங்க போல. அவுங்க சொன்ன எடத்துல எல்லாம் கையெழுத்த போட்டு முடிச்சி பிற்பாடுதாம் ஸ்ட்ரெட்சர்ல படுத்துக்கிட்டு வலியில துடிச்சிக்கிட்டு இருக்குற ஆயியெ ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போறாங்க.
            ஆபரேஷன் தியேட்டரு எங்க இருக்குன்னா அது மேல இருக்கு மூணாவது மாடியில. லிப்ட்ல வெச்சித்தாம் மேல கொண்டு போவணும். இவுங்க அங்க கொண்டு போறப்ப, "எஞ்ஞ கொண்டு போறீயே?"ங்றாம் விகடு.
            "மேல கொண்டு போறோம்! ஆபரேஷன் தியேட்டரு மூணாவது மாடியில இருக்குங்க பிரதர். அநாவசியமா எதையாவது கேட்டுக்கிட்டே இருக்காதீங்க. சைலண்ட்டா வாங்க"ங்றாங்க அந்தச் சகோதரிக.
            இங்க வழக்கு மொழியில மேல போறதுன்னா செத்து பரலோகம் போறதையல்லா மேல போறதுன்னு சொல்லுவாங்க. அப்பிடில்லா அந்தச் சகோதரிங்க மேல கொண்டுப் போறோம்ன்னு சொல்லுற வார்த்தையே சரியில்லாம சொல்லுறாங்களேன்னு ஒரு நிமிஷம் துடிச்சிப் போறாம் விகடு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...