8 Mar 2020

டும் டும் மேளம் கொட்டட்டும்!

செய்யு - 381

            விகடுவுக்கும் ஆயிக்கும் கல்யாணம் பண்றதெப் பத்தி ரெண்டு பக்கமும் கலந்துகிட்டாங்க. விகடுவோட தாய்மாமனான வீயெம் மாமாவுக்கு எந்த மனக்கொறையும் வந்துப்புட கூடாதுன்னு ஒரு நெனைப்பு. அதால சாமிமலெ ஆச்சாரிகிட்டே கலியாணம் சம்பந்தமா எந்த விசயமா இருந்தாலும் அதெ வீயெம் மாமாகிட்ட பேசிக்குங்கன்னு சொல்லிப்புட்டாரு சுப்பு வாத்தியாரு. அதாங் ஒரு தாய்மாமனுக்குக் கொடுக்க வேண்டிய மருவாதின்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சிட்டாரு. பொண்ணு தரப்பு தாய்மாமன்கள்ல ஒருத்தரு சேலத்துலயும், இன்னொருத்தரு சென்னையிலயும் சர்க்காரு உத்தியோகத்துல இருந்ததால அவுங்களால ரொம்ப மெனக்கெட முடியல. அவுங்க சாமிமலெ ஆச்சாரியையே எது செஞ்சாலும் சம்மதங்ற முடிவுல, பாத்து செய்ய வேண்டியதெ தோதுக்கு ஏத்தாப்புல செஞ்சிக்கிட சொல்லிட்டாங்க.
            அப்பத்தாம் சாமிமலெ ஆச்சாரி வீயெம் மாமாகிட்டே பொண்ணுக்கு இன்னும் சடங்கு சுத்தலங்ற சங்கதியே சொல்றாரு. வயசுக்கு வந்தப் பொண்ணுக்குச் சடங்கு சுத்துறதுங்றது ஒரு நடைமொறை. அதெ ஒரு பெரிய விஷேசமா ஏற்பாடு பண்ணி ஒறவுக்காரங்க எல்லாத்தியும் அழைச்சி தாய்மாமனெ சீர் சனத்தி மொய் எல்லாம் செய்ய வெச்சி கொண்டாடுறது ஒரு வழக்கம். பொண்ணுக்கு சடங்க சுத்துனப் பிற்பாடுதாம் முகூர்த்த ஓலைய எழுதணும்னு இன்னொரு நடைமொறை வெச்சிருக்காங்க. பொண்ணுக்கு சடங்கு சுத்துறதுல ஒரு செலவு, முகூர்த்த ஓலையில ஒரு செலவு, கலியாணத்துல ஒரு செலவுன்னு மூணு செலவு உண்டாவுறதெ யோஜனெ பண்ணிப் பாத்த வீயெம் மாமா, அதுக்கு ஒரு யோஜனெ சொல்லிச்சிப் பாருங்க.
            "எதுக்கு ஒரு காசியில முடிய வேண்டிய சோலிய மூணா பிரிச்சி மூணு காசிய செலவ பண்ணணுங்றேம்? தேவையில்லாதது அத்து. கலியாணத்துக்கு மொத நாளு சாயுங்காலமா சடங்கெ சுத்தி, அத்து முடிஞ்ச கையோட ஓலைய எழுதிப்புடலாம். அதாங் ரண்டுப் பக்கமும் நல்லா கலந்தாயிடுச்சில்லா. பெறவென்ன ஓலை எழுதுறக்கு தண்டச்செலவு பண்ணிக்கிட்டு. அத்து ஒரு சம்பிரதாயம், அம்மாம்தாம், அத்து பண்ணாம கல்யாணத்தெ பண்ணக் கூடாதுன்னு. கலியாண மண்டபத்தெ கலியாணத்துக்கு மொத நாளு மத்தியானத்திலேந்து பிடிச்சாவணும். அதுலயே சடங்கு, ஓலை ரண்டையும் முடிச்சி மறுநாளு கலியாணத்தெ முடிச்சிட்டா செலவு கொறைஞ்சிடும் பாருங்க. மிச்சமாவுற காசிய பொண்ணு புள்ளைககிட்ட கொடுத்தா அத்துங்க எதாச்சிம் சந்தோஷமா ஒரு செலவெ பண்ணிக்கிம் பாருங்க!" அப்பிடின்னிச்சி வீயெம் மாமா.
            அதுவும் நல்ல யோசனையாத்தாம் பட்டதால அத்து சம்பந்தமா சாமிமலெ ஆச்சாரி சுப்பு வாத்தியாருகிட்டே கலந்துகிட்டாரு. சரி அப்பிடின்னா நாமளே சோசியரப் பாத்து கலியாணத் தேதிய நிச்சயம் பண்ணிகிட்டு பத்திரிகைய அடிச்சிப்புட்டு வீயெம் மாமா சொன்ன மாதிரிக்கிப் பண்ணிக்கிடலாம்னு ஒரு முடிவெ பண்ணிக்கிட்டாங்க. அது ரெண்டாயிரத்துப் பத்தாவது வருஷம். ஆவணி மாசத்துல கலியாணத்த வெச்சிப்புடவோம்னு முடிவெ பண்ணிக்கிட்டு சோசியர்கிட்டெ கலியாணத்துக்குன்னு ஒரு தேதிய வாங்காம, நாலைஞ்சு தேதிய ஆவணி மாசத்துல வாங்கிகிட்டு, எந்தத் தேதிக்கு மண்டபம் கெடைக்குதுன்னு பாத்துக்கிட்டு, அந்தத் தேதிக்குக் கலியாணத்தெ வெச்சிக்கிறதுன்னு முடிவு பண்ணிக்கிட்டாங்க.
            கலியாண மண்டபத்தெ பிடிக்குறதுங் செரமமாப் போயிடுச்சி. ஒரத்தநாட்டுல மண்டபத்தெ பிடிக்க முடியாத அளவுக்கு அத்தனையும் புக் ஆயிருந்துச்சு. தஞ்சாரூலத்தாம் மண்டபத்தெ பிடிக்க வேண்டியதா போச்சுது சாமிமலெ ஆச்சாரிக்கு. அங்கயும் அம்புட்டு சுலுவா மண்டபம் அமையல. அத்து ஆவணி மாசங்றதால ஆடி மாசத்துக்குப் பெறவு கலியாணத்தப் பண்றதுக்குன்னே ஒரு பெருங்கூட்டம் மண்டபத்தெ மொய்ச்சுக்கிட்டு நின்னுச்சு. அதெ சமாளிச்சி மண்டபத்தெ பிடிக்கிறது பெரும் வேலையா போயிடுச்சி. கடைசியா தஞ்சாரூ நாஞ்சிக்கோட்டை ரோடு பர்வீன் தியேட்டருக்கு எதுத்தாப்புல இருந்த சுந்தரம்ஸ் விழாப்பொழில்ங்ற மண்டபம்தாம் அமைஞ்சிது. ஆவணி ஏழுன்னு கலியாணத் தேதி இதுதாம்ன்னு நிச்சயமானதும் மித்த மித்த வேலைகள ரெண்டுப் பக்கமும் பாக்க ஆரம்பிச்சாங்க.
            சடங்கு, முகூர்த்தோலை, கலியாணம்னு மூணையும் ஒண்ணாக்கிப்புடலாங்ற வீயெம் மாமாவோட யோசனையில மயங்கிப் போனவருதாம் சாமிமலெ ஆச்சாரி. மாப்புள்ளையோட தாய்மாமேம் அபாரமான மூளைக்காரனா இருப்பாம் போலருக்கேன்னு நெனைச்சிக்கிட்டாரு. "மாப்புள்ள வூட்டு தாய்மாமான இருக்கிறவேம் வழக்கமா பொண்ணு வூட்டுக்குச் செலவ இழுத்து வுடுவாம். இவ்வேம் வித்தியாசமா பொண்ணு வூட்டு செலவ கொறைச்சில்லா பண்ணி விடுறாம். இப்பிடி பொண்ணு வூட்டுக்குக் கைங்கர்யம் பண்ணுற மாப்புள வூட்டு தாய்மாமானெச் சும்மா வுடக் கூடாது. எதாச்சிம் செஞ்சி சந்தோஷம் பண்ணணும்"னு நெனைச்சிப்புட்டாரு சாமிமலெ ஆச்சாரி.
            சாமிமலெ ஆச்சாரியே நல்லா கட்டிலு, பீரோவ கோக்குற ஆளுன்னாலும், மாப்புள்ளயோட தாய்மாமனான வீயெம் மாமாவ சந்தோஷம் பண்றதுன்னு கங்கணத்தக் கட்டிக்கிட்டு, "யே யப்பாடி! நீந்தாம்னே தாய்மாமேம்! நீயே ஒம் மருமவனுக்கு ஏத்தாப்புல கட்டிலு, பீரோவ்வெ அம்சமா கோத்துக் கொடேம்!" அப்பிடின்னிட்டு அதுக்கு உண்டான காசியத் தூக்கிக் வீயெம் மாமா கையில கொடுத்துட்டாரு. அவரு கொடுத்த காசிக்கு கட்டிலு, பீரோவ தேக்கம் சட்டம், பலவையில கோக்க முடியும்னாலும், வேங்கம் சட்டம், பலவையில கோத்துக் கொடுத்திச்சி வீயெம் மாமா. தேக்கம் பலவையில கோக்க வேண்டிய மரச்சாமானுகள வேங்கை பலவையில கோத்தாக்கா நூத்துக்கு நாப்பது ரூவா செலவு கொறையும். நூத்து ரூவாயி காசியில முடிய வேண்டிய வேலைய அறுவது ரூவாயில முடிச்சிடலாம்.
            "தேக்கம் பலவையில கோத்திருப்பீயேன்னுல பாத்தேம்!"ன்னு அதெ சிரிச்சிக்கிட்டே கேட்டும் பாத்தாரு சாமிமலெ ஆச்சாரி.
            "தேக்கம் பலவைய வுட வேங்கம் பலவைத்தாம் பெலம். அத்துவும் இத்து மலேசியன் வேங்கம்ல்லா! தேக்கத்த வுட ஒரு நூலு மேலல்லா!" அப்பிடின்னு அதுக்கு ஒரு பதில சொல்லிச்சி வீயெம் மாமா. அந்தப் பதிலக் கேட்டதும், செரியாப் போச்சு, இனுமே இதெப் பத்தி பேசுறதுல அர்த்தம் இல்லங்ற மனநிலைக்கு வந்துப்புட்டாரு சாமிமலெ ஆச்சாரி.

            இப்பிடி கலியாண சோலிப் பத்தி பேசுறதுக்கும், கட்டிலு பீரோ வேல எப்பிடி ஆயிருக்குன்னு பாக்குறதுக்கும் சாமிமலெ ஆச்சாரி ஊரு ஆளு ஒருத்தரெ டிவியெஸ் சாம்புக்குப் பின்னாடிப் பிடிச்சிப் போட்டுக்கிட்டு, கொல்லம்பட்டியிலேந்து காலைக் கருக்கல்லயே பொழுது விடிஞ்சி சூரியன் முகத்தே காட்டுறதுக்கு மின்னாடியே வந்து வீயெம் மாமா வூட்டுல முகத்தெ காட்டிப்புடுவாரு. வீயெம் மாமா அப்பத்தாம் இவரு வந்து, எழுப்பி வுட்ட பிற்பாடு எழும்பும். அப்பிடியெல்லாம் வந்துப் பாத்து செஞ்ச பீரோவும், கட்டிலும் சாமிமலெ ஆச்சாரியப் பொருத்த வரைக்கும், அந்த வேல சுமாரு ரகம்தாம்.
            "ஏம்டாப்பா இவனெப் போயி இதெ கோக்க விட்டோம்?"னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாரே தவுர வெளியில சொல்லல. கொஞ்சம் நுணுக்கமா பாக்க வேண்டிய வேலைக்கு ஏத்த நிதானம் வீயெம் மாமாவுக்குப் பத்தாது. எந்த வேலையா இருந்தாலும் அது கொண்ட வேகத்துக்குப் பாக்குற ஆளு அது. அத்தோட கொடுத்த காசிக்கு ஏத்த பண்டமில்லன்னும் சாமிமலெ ஆச்சாரிக்கு இன்னொரு மனவருத்தமா போயிடுச்சி. அதெ சுப்பு வாத்தியாருகிட்டெ சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டுக்கிட்டாரு சாமிமலெ ஆச்சாரி.
            "நாந்தேம் சொன்னேம்ல! நீஞ்ஞளே கோத்துப்புடுங்களேன்னு. சொல்ல சொல்ல கேக்கமா நீஞ்ஞதானே பணத்தெ தூக்கிக் கொடுத்துப்புட்டீங்க!"ன்னு சங்கடப்பட்டுகிட்டாரு சுப்பு வாத்தியாரு. "மாப்ளயோட தாய்மாமனா இருக்காம்லா. கலியாணத்துல அத்துச் சரியில்லே, இத்துச் சரியில்லன்னு முறுக்கிக்கிட்டு நின்னாம்னா சோலியாப் போயிடும் பாருங்க. அதுக்கு யோஜெனப் பண்ணித்தாம் சந்தோஷம் பண்ணாப்புல போயிடுமேன்னு நெனைச்சிக்கிட்டு பண்ணேம். அப்பிடிப் பண்ணது தப்பாப் போச்சு. பீரோவ தொறந்தா கைப்பிடி கையோடு வருது. மேல வெச்ச பீடிங்கெ சரியா தைக்கல. அதெ மேல தொட்ட கீழே கழண்டுகிட்டு வுழுவுது. வேலைப்பாடும் கம்மித்தாம். செரி விடுங்க பாத்துக்கிடலாம். அதுக்கு அமைப்பு அம்புட்டுத்தாம்!"ன்னாரு சாமிமலெ ஆச்சாரி ஆறுதல் பண்ணிக்கிடுற மாதிரிக்கி. பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நல்ல வெதமா கட்டிலு, பீரோவ செஞ்சிக் கொடுக்கணும்னு நெனைச்ச அவரோட ஆசையில அவருக்குத் திருப்திப்பட்ட மாதிரிக்கி வேல அமையலங்றது கடெசி வரைக்கும் ஒரு மனவருத்தமாவே போயிடுச்சி.
            அத்து ஒண்ணையே பாத்துக்கிட்டு இருந்தா மித்த வேலைக என்னாவுறது. கலியாண ஏற்பாடுகள பண்ணியாவணும். அதுக்கு முக்கியமா பத்திரிகைய அடிச்சி ஒறவுக்காரவுங்களுக்கும், ஊருகாரவுங்களுக்கும் கொடுத்தாவணுமே. கல்யாணப் பத்திரிகைய அடிச்சி ரண்டே நாள்ல கையில வாங்குறதுன்னு முடிவெ பண்ணிக்கிட்டு அப்பிடியே பண்ணாங்க.
            இருவீட்டார் அழைப்பாவே கலியாணப் பத்திரிகை தயாராச்சு. பத்திரிகைய அப்பிடியே போட்டா கலியாணமே முடிஞ்ச மாதிரித்தாம் இல்லியா.
            கலியாணப் பத்திரிகை இப்பிடித்தாம் இருந்துச்சு.
ஓம் விராட் விஸ்வ ப்ரம்மனே நமக
அருள்மிகு ஐயனாரப்பர் துணை
திருமண அழைப்பிதழ்
அன்புடையீர்! வணக்கம்!
            நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம் ஆவணி மாதம் 07 ஆம் நாள் (23.08.2010) திங்கட்கிழமை திருவோணம் நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், திட்டை கிராமம்
திரு. சா. சுப்பு - வெங்கு இவர்களின் குமாரன் திருவளர்ச்செல்வன்
விகடபாரதிக்கும்,
தஞ்சாவூர் மாவட்டம், கோனூர் நாடு, கொல்லம்பட்டி கிராமம்,
திரு ந. சாமிமலை - பவளம், திலகம் இவர்களின் குமாரத்தி திருநிறைச்செல்வி
ஆயிக்கும்
திருமணம் செய்வதாய் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் மேற்படி திருமணம் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள சுந்தரம்ஸ் விழாப்பொழிலில் நடைபெறும் திருமணத்திற்கும், உடன் நடைபெறும் நாகவல்லி முகூர்த்தத்திற்கும் தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் வேண்டுகிறோம்.
தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்,
            ந. சாமிமலை ஆச்சாரி,                                                    சா. சுப்பு ஆசிரியர்,
            பவளம்,                                                                                வெங்கு,
            திலகம்.
தங்கள் நல்வரவை நாடும் இனிய உறவும், இதய நட்பும்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...