10 Mar 2020

பாப்பா பொறந்திருக்கு!

செய்யு - 383        

            ஒரு பெரசவம்ங்றது ஆயிரம் போர்க்களத்துக்குச் சமம்தாம் போலருக்கு. ரெண்டு எடத்துலயும் கத்தியோட உபயோகம் இருக்கு. அந்தக் கத்தியிலேந்து தப்பிப் போழைச்சி வாரதுங்றது ஒரு போராட்டம்தாம். போர்களத்துக் கத்தி ஒரு உசுர கொல்லப் பாக்கது. பெரசவ ஆபரேஷன் தியேட்டரு கத்தி ஒண்ணுக்கு ரெண்டா ரெண்டு உசுர காப்பாத்தப் பாக்குது. ரெண்டு எடத்துலயும் கத்திய எதிர்கொண்டு பொழைச்சி வாரவங்க வீரர்கள்தாம். களத்துல எறங்குற வீரர்களா இருக்குறவங்க தெகிரியமா அதெ சமாளிச்சி வர்றாங்க. அதெ பாக்குறவங்க மயக்கமடிச்சி விழுந்துடுவாங்க. அப்பிடி மயக்கமடிச்சி விழுந்துடுவாம் போலருக்கு ஆபரேஷன் தியேட்டரு மின்னாடி நின்னுகிட்டு இருக்குற விகடு. குரலு தழுதழுத்துப் போவுது.
            "டாக்கடரு போயிட்டாங்களா?"ங்றாம் விகடு.
            "இப்பத்தான்ன உள்ளார போனாங்க."ங்றாங்க சுத்தி இருக்குறவங்க.
            "ஆயி எஞ்ஞ?"ங்றாம் அடுத்ததா.
            "ஸ்ட்ரச்சர்ல் வெச்சி இப்பத்தான உள்ளார கொண்டு போனாங்க!"ங்றாங்க அதுக்கும் சுத்தியில இருக்குறவங்க.
            எதையும் கவனிச்சி உள்வாங்கிக்கிற மனநெலைய சுத்தமா இழந்துப் போயி சின்னக் குழந்தைங்க கேள்வி கேக்குறாப்புல ஆயிட்டாம் விகடு. ஒரு கட்டத்துல மயங்கிக் கீழே விழ போனவனெ பக்கத்துல இருக்குற ஆளுங்க தாங்கிப் பிடிக்குறாப்புல ஆயிடுச்சி.
            ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளயும், வெளியிலயும் போயிட்டு இருக்குற செவிலிப்பொண்ணு ஒண்ணு இதையெல்லாம் பாத்துட்டுத் திட்டிட்டு வேற போவுது. "ஆபரேஷன் ஆவுற பொண்ணே தைரியமா இருக்கு. ஏம் சார் ஒங்களுக்கா டெலிவரி ஆவப் போவுது? ஒங்க ஒய்ப்புக்குத்தானே. அவுங்களே இப்போ தைரியமா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க இப்பிடி ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டு எல்லாரையும் பயமுறுத்திக்கிட்டு இருக்கீங்க. நல்லா ஆவப் போற டெலிவரியைக் கெடுத்து விட்டுடுவார் போலருக்கு. இவர்ர இங்க நிக்க விடாதீங்க. பிடிச்சி ஓரமா அப்பிடி உக்கார வையுங்க! இந்த மாதிரி ஆளுகள பர்ஸ்ட் ஐ.சி.யு.ல சேத்துட்டுதாங் அவுங்களோட ஒய்ப்புகளுக்கு டெலிவரிய பாக்கணும் போலருக்கு!"ன்னு அந்தச் செவிலிப்பொண்ணு சொல்லிட்டு ஒரு மொறைப்பு மொறைச்சிட்டுப் போவுது.
            ஒரு கால் மணி நேரம் ஆயிருக்கும். திட்டிட்டுப் போன செவிலிப் பொண்ணு ஆபரேஷன் தியேட்டர்லேந்து வெளியில வந்தது, மொதல்ல விகடுவுக்குப் பக்கத்துல வேகமா வருது. வந்தது மூலையில உக்காந்திருந்த விகடுவோட தலையில நங்குன்னு ஒரு குட்டெ வெச்சது. "இப்பிடியா ஆஸ்பிட்டல்ல கலவரம் பண்றது? ஒங்க ஒய்ப்புக்கு டெலிவரி ஆயிடுச்சு. பாப்பா பொறந்திருக்கு. இதெ நாஞ் சொல்லக் கூடாது. டாக்டர் வந்துதாம் சொல்லணும். ஒங்க நிலை பொறுக்க முடியாம நான் சொல்றாப்புல ஆவுது. நார்மல் டெலிவரி. ஆபரேஷன் தியேட்டருக்கு வந்து நார்மல் டெலிவரி ஆவுறது ரொம்ப ரேர் கேஸ். அப்பிடி இந்த ஆஸ்பிட்டல்ல இது வரைக்கும்  ரெண்டு கேஸ்க்குத்தாம் ஆயிருக்கு. ஒங்க ஒய்ப்பு மூணாவது கேஸ். இனிமேலாவது எங்களப் போட்டு டென்ஷன் பண்ணாம ரிலாக்ஸா உக்காருங்க! அடுத்த குழந்தை பெத்துகுறாப்புல இருந்தா ப்ளீஸ் ஒங்க ஒய்ப்ப பெத்துக்கச் சொல்லாதீங்க. தயவு பண்ணி நீங்க பெத்துக்குங்க. அதாம் உங்கள சுத்தி இருக்குறவங்களுக்கும் நல்லது, நாட்டுல இருக்குற ஆஸ்பிட்டல்களுக்கும் நல்லது!" அப்பிடின்னு சொல்லிட்டுப் வேக வேகமாப் போவுது அந்தச் செவிலிப் பொண்ணு.
            இப்பத்தாம் மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கு விகடுவுக்கு. அதுவரைக்கும் இருந்த பதற்றம், படபடப்புல்லாம் போன எடம் தெரியல. பெரசவ வலி கண்டப்போ வூட்டுக்குப் போன் பண்ணிச் சொன்னது. இப்போ பாப்பா பொறந்த சேதிய வூட்டுக்குப் போன் பண்ணிச் சொல்றாம் விகடு. சுப்பு வாத்தியாரு எதிர்முனையில இருக்காரு.
            "யப்பா! பாப்பா பொறந்திருக்குப்பா!"ங்றாம் விகடு.
            "ரொம்ப சந்தோஷம்டா யம்பீ! நாஞ்ஞளும் கெளம்பிக்கிட்டுத்தாம் இருக்கேம். வந்துடுறோம்!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
            ஆபரேஷன் தியேட்டர்லேந்து ஆஸ்பிட்டலு ரூமு ஒண்ணுக்குக் கொண்டார அப்பிடி இப்பிடின்னு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சி. கொழந்தையப் பெத்துப் போட்ட களைப்புல ஒறங்கிக் கெடக்குறா ஆயி. பாப்பா பக்கத்துல ஆய் ஓய்ன்னு அழுதுகிட்டும், கையி, கால ஆட்டிக்கிட்டும் பக்கத்துல படுத்துக் கெடக்கு. பாக்குறதுக்கு ரொம்ப சின்ன கொழந்தையா இருக்கா பாப்பா. மொகம் யாரோட சாடையில இருக்குன்னு ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டு இருக்காங்க. மொதல்ல அப்பனோட மொகம்தாங்றாங்க. பெறவு அப்பனப் பெத்த ஆயாளோட மொகம்தாங்றாங்க. அப்பிடி இப்பிடின்னு பல வெதமா பேசிக்கிட்டு, அங்க இங்க ஓடி டீத்தண்ணி, பிஸ்கோத்து, துண்டு துணி, மருந்து மாத்திரைக, ஆஸ்பிட்டலுக்குக் கட்ட வேண்டிய ரூவாயி அது இதுன்னு வாங்கிக்கிட்டும் பண்ணிக்கிட்டும் இருந்ததுல நேரம் போனது தெரியல.
            அதுக்கு இடை இடையில ஒறவுக்காரவுங்க, ஊருக்காரவுங்கன்னு எல்லாருக்கும் போனப் போட்டு, "பாப்பா போறந்திருக்கு! பாப்பா பொறந்திருக்கு! பாப்பா பொறந்திருக்கு!"ன்னு டமுக்கு அடிக்காத கொறையா ரூமுக்கு வெளிய இருக்குற வரண்டாவுல அங்கயும் இங்கயும் நடந்துகிட்டு சொல்லிக்கிட்டுக் கெடந்தாம் விகடு. இதுலயே அஞ்சாறு மணி நேரம் ஆயிருக்கும். இந்த சோலியிலயே வூட்டுக்குப் போனப் போட்டுச் சொன்னோமே, யாரும் இன்னும் காங்கலயேங்ற நெனைப்பே இல்லாமப் போயிடுச்சு விகடுவுக்கு. அப்பத்தாம் சுப்பு வாத்தியாரு செய்யுவோட எதிர்ல வந்து நிக்குறாரு. நாம்ம சொன்ன நேரத்துக்குக் கெளம்பியிருந்தாலும் மூணு மணி நேரத்துல வந்திருக்கலாமே, இம்மாம் நேரம் கழிச்சி வந்திருக்காங்களேன்னு நெனைக்கிறாம் விகடு. அந்த நெனைப்புலயே விகடு அம்மாக்காரிய சுத்திலும் பாக்குறாம். காங்கல.

            "எங்க யம்மா?" அப்பிடிங்றாம்.
            "அத்தெ பெறவு சொல்றேம்! பாப்பாவப் பாக்கணும் மொதல்ல!"ங்றாரு சுப்பு வாத்தியாரு. யம்மா எங்கேன்னு பதிலச் சொல்றதுக்கு எம்மாம் நேர ஆவப் போவுது? அதெ சொல்லிட்டே பாப்பாவப் பாக்கலாமேன்னு நெனைச்சிக்கிறாம் விகடு. அது செரி பின்னாடி மெதுவா கூட நடந்து வந்துகிட்டு இருக்கலாம். அப்பங்காரரு பேத்தியப் பாக்கணும்ங்ற துடிப்புல வேகமா நடந்து வந்திருக்கலாம். அப்பிடின்னா அம்மாகாரிக்கு அப்பிடி ஒரு துடிப்பு எப்பிடி இல்லாம போயிருக்கும்? இப்பிடில்லாம் மனசுல எண்ணம் ஓடுது விகடுவுக்கு.
            ரூமுக்குள்ள வந்து பேத்திய பாத்த சுப்பு வாத்தியாருக்கு மொகமெல்லாம் பூத்துப் போவுது. "பாக்குறதுக்கு அப்பிடியே ஒஞ்ஞ யம்மா மாதிரியே இருக்குடாம்பீ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பாப்பா அழகா இருக்குண்ணே!"ங்றா செய்யு.
            கொஞ்ச நேரம் அதுக்குப் பக்கத்துலயே இருந்து ரசிச்சுப் பாத்துக்கிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு மெல்ல வெளியில வர்றாரு. அவரு வெளியில வர்றதப் பாத்துட்டு விகடுவும் வெளியில வர்றாம். அவரோட மொகத்துல ஒரு தவிப்புத் தெரியுது. வெங்குவ அழைச்சிட்டு ஏம் வரலேங்றதுக்குக் காரணத்தெ எப்பிடிச் சொல்றதுன்னு மண்டெய போட்டுக் கொடைஞ்சிட்டுக் கெடக்குறது தெரியுது.
            சுப்பு வாத்தியாரு இப்பிடி ஆரம்பிக்கிறாரு. "யம்மாவப் பத்தித்தாம் ஒமக்கும் தெரியும்லடாம்பீ!"ங்றாரு.
            எதுக்கு இப்பிடி ஒரு கேள்வியக் கேக்குறார்ன்னு தெரியாம முழிக்கிறாம் விகடு.
            "அத்து வந்துடாம்பீ! ஒம்மட சோக்காளி முருகுவுக்கு சிங்கம் பொறந்துச்சுல்லா. அத்தே கணக்குக்கு ஒமக்கும் சிங்கம் பொறக்கும்னு நெனைச்சிக்கிட்டுக் கெடந்திருக்கும் போலருக்கும்டா ஒஞ்ஞ யம்மா! நீயி போன போட்டு ஆயிக்குப் பெரசவ வலின்னு சொன்னப்பல்லாம், கெளம்பிட்டுத்தாம்டா இருந்துச்சி ஒஞ்ஞ யம்மா. பெரசவம் ஆன பொண்ணுக்கு அத்தெ எடுத்துக்கணும், இதெ எடுத்துக்கணும்னு ஒண்ணொண்ணா எடுத்துகிட்டுக் கெடந்துச்சு. பாப்பா பொறந்திடுச்சுன்னு நீயி போனப் போட்டுச் சொன்னதெ சொன்னதும் ஆளு சொணங்கிப் போச்சுடா. அப்பிடியே உக்காந்ததுதாங். நாமளும் எவ்வளவோ சொல்லிப் பாத்தேம். நாம்ம மொத புள்ள ஆம்பளெ புள்ளையத்தாம்னே பெத்தேம், எம்மட வூட்டக்கு வந்திருக்கே ஒண்ணு அத்து மட்டும் எப்பிடி பொம்பளப் புள்ளையாப் பெத்துச்சுன்னு சொல்லி ஒரே அழுக்காச்சியா போச்சு. அதெ சமாதானம் பண்ணி அழைச்சிட்டு வார முடியல்லடாம்பீ! அதுலயே நேரம் ஆயிப் போச்சு. செரி இதுக்கு மேல வேலைக்கி ஆவதுன்னு நாமளும், ஒந் தங்காச்சியுமா கெளம்பி வந்துப்புட்டேம்டா யம்பீ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
             "ஏம்ப்பா! யம்மாவோட யப்பாக்காரரு தாத்தாவுக்கு ஆறு பொண்ணு பொறந்தப் பெறவுதான ஆம்பளெ புள்ளையே பொறந்துச்சு. யம்மாவே பொம்பளப் புள்ளையாத்தானே பொறந்துருக்கு. தங்காச்சி செய்யு பொம்பளப் புள்ளதானே. பெறவென்ன? பாப்பா பொறந்தா ன்னா? சிங்கமா பொறந்தா ன்னா?"ங்றாம் விகடு.
            "அத்தெல்லாம் சொல்லிட்டேம்டாம்பீ! அத்து கேக்குறாப்புல யில்ல. கொழந்தெ ‍பொறக்குறதுக்கு மின்னாடியே எம் மவனுக்கு ஆம்பளெ சிங்கந்தாம் பொறக்கும்னு அக்கம் பக்கத்துல சொல்லிட்டுக் கெடந்திருக்கும் போலருக்கு. இப்ப பாப்பா பொறந்ததும் அதால அதெ ஏத்துக்க முடியல. சொல்லிப் பாத்தாச்சி. கேக்குறாப்புல தெரியல. கொஞ்ச நாளு ஆவட்டும் வுடு. அதுவா மாறிக்கும். நாம்ம எதாச்சிம் சொல்ல சொல்ல வம்புத்தாம் வளரும்." அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்தென்ன பொம்பளயா இருக்குறவங்களே பொம்பளப் புள்ளய விரும்பலன்னா... நமக்கும் ஒண்ணும் புரியவே மாட்டேங்குதுப்பா! ஆம்பளெப் புள்ளத்தாம் வாரிசா? பொம்பள புள்ள வாரிசு கெடையாவா? பொம்பளப் புள்ள இல்லன்னா எப்பிடி ஆம்பளப் பயெ ஆம்பள வாரிசையே பெத்துப்பாம்?"ங்றாம் விகடு.
            "அத்தையெல்லாம் சொல்லி வெளங்க வைக்க முடியாதுடாம்பீ! அததுவா மாறுனாத்தாம் உண்டு! கொஞ்சம் நெதானமாத்தாம் இருந்தாவணும். தாண்டி தலைகுப்புற வுழுவுறதால நெலமையச் சரி பண்ணிட முடியாது. நீயி ஒண்ணுஞ் சொல்ல வாணாம். எல்லாம் அத்துவா மாறிப் போயிடும்டாம்பீ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் சரிப்பா! அப்பாயி வந்து பேத்தியப் பாக்கலன்னு சொல்ல மாட்டாங்களா?"ங்றாம் விகடு.
            அதுக்கு பதிலச் சொல்ல முடியாம மவுனமாவுறாரு சுப்பு வாத்தியாரு. அப்பங்காரர சங்கடப்படுற மாதிரிக்கிக் கேள்வியக் கேட்டுப்புட்டோமோன்னு சங்கடமாவுறாம் விகடு. மேக்கோண்டு அதெப் பத்தி வேற எதையும் பேசிக்கல ரண்டு பேரும்.
            இப்பிடிக்கா பேத்திப் பொறந்தத பாக்க வாரததோட, கொழந்தெ பொறந்து பதினாறுக்கும் வர முடியாதுன்னு பிடிவாதமா இருந்துப்புட்டு வெங்கு. அதுல ஆயி உட்பட விகடுவோட மாமனாரு சாமிமலெ ஆச்சாரி, மாமியாக்காரிக பவளம், திலகம், மச்சாங்கார்ரேம் யோகமலெ, மச்சினி பாப்பு வரைக்கும் மனவருத்தமா போச்சுது. ஆளாளுக்குப் போயி எல்லாரும் சமாதானம் பண்ணித்தாம் பாத்தாங்க. வெங்கு சமாதானம் ஆவணுமே. ஆவல. ஆறு மாசத்துக்குப் பிற்பாடுதாம் ஆயிய பொறந்த வூட்டுலேந்து புகுந்த வூடான திட்டைக்குக் கொண்டு வந்தாங்க. அது வரைக்கும் பேத்தியோட நெறம் கருப்பா, சேப்பா, பேத்தியோட மொகம் வட்டமா இருக்கா? நீட்டா இருக்கா? எப்பிடி இருக்கு என்னான்னு பாக்காம அழுத்தமாவே இருந்துப்புட்டு வெங்கு. எப்பிடி இப்பிடி ஒரு அழுத்தம் அதோட மனசுக்குள்ள வந்ததுன்னு பாக்கறப்ப தெகைப்பத்தாம் இருக்கு.
            வூட்டுக்குக் கொண்டாந்த அன்னிக்கும் ஆரத்தி எடுத்து உள்ளார அழைச்சிட்டு வந்தது செய்யுத்தாம். வூட்டுக்கு வந்தப் பாப்பாவையும், மருமவளையும் வந்துப் பாக்க முடியான்னு ரூமுக்குள்ளயே உக்காந்துப்புட்டு வெங்கு. ஆளாளுக்கு வந்து எவ்வளவோ சொல்லிப் பாக்குறாங்க. ஆளு மசியுறாப்புல இல்ல. ஊருகாரவுகளும் எவ்வளவோ சொல்லிப் பாக்குறாங்க, "மொத புள்ள பொட்ட புள்ளயாத்தாம்டிப் பொறக்கணும் வெங்கு. அப்பத்தாம் மவ்வேம் காசிய சேத்து பொண்ண நல்ல வெதமா கட்டிக் கொடுக்கணும்னு சூதானமா இருப்பாம். மொதல்ல பொண்ணு பொறந்தா லட்சுமியே வந்துப் பொறந்தாப்புல ஆச்சே!" அப்பிடின்னு. அவுங்க அப்பிடிச் சொல்றதுக்குல்லாம் சேத்து வெங்கு கேக்குது, "ஓம் மவனுக்குல்லாம் மொத புள்ளே ஆம்பள புள்ளத்தானே பொறந்திருக்கு!" அப்பிடின்னு. அப்பத்தாம் கவனிச்சிப் பாக்குறப்ப திட்டையில விகடு இருக்குற தெருவுல எல்லாருக்கும் ஆம்பளெ புள்ளையா பொறந்துக் கெடக்குறது தெரியுது. "ஊருல எல்லாத்துக்கும் ஆம்பள புள்ள பொறக்குறப்போ, நம்மட வூட்டுக்கு மட்டும் இப்பிடியாச்சே!"ன்னு அழுவுது வெங்கு. அத்தோட விடல, அது பாட்டுக்கு பேசிக்கிட்டும், அழுதுகிட்டும் கெடக்குது.
            "எல்லா வூட்டுக்கு வந்த மருமவக்காரிகளும் ஆம்பளெ புள்ளையத்தாம் பெத்துப் போட்டுருக்காளுவோ! நாம்ம ஒண்ணுத்தெ அதிசயமா பிடிச்சிட்டு வந்தோம்ல கொல்லம்பட்டியிலப் போயி. இவ்வே ஒருத்தித்தாம் யாருமில்லாத ஊர்ல அதிசயமா புள்ளையப் பெத்துக்கிட்டு மாதிரிக்கிப் பொட்டப் புள்ளயெ பெத்துட்டு வந்திருக்கா!" அப்பிடிங்கிது மறுக்கா மறுக்கா வெங்கு அழுதுகிட்டே. இப்பிடி யம்மாக்காரி பேசுறதுக்கு ஆத்திரப்படுறதா? அவ்வே அழுவுறதப் பாத்துப் பரிதாபப்படுறதான்னு ஒண்ணுஞ் சொல்ல முடியாம நிக்குறாம் விகடு. மனசுக்குள்ள கடுப்பும் தாங்க முடியல. "புள்ளையில ன்னா ஆம்பளப் புள்ளே? பொம்பளப் புள்ளே? எல்லாம் புள்ளத்தாம்!"ங்றாம் விகடு. அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம் மூசுமூசுன்னு திரும்பத் திரும்ப அழுதுகிட்டே மூஞ்சைத் திருப்பிக்கிது வெங்கு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...