20 Mar 2020

காளை மாடு ஒண்ணு! கன்னுக்குட்டிகள எண்ணு!

செய்யு - 393        

            வீயெம் மாமாவுக்குக் கல்யாணம் ஆயி ஏழெட்டு வருஷத்த கடந்திருச்சு. கோகிலா மாமிக்கு வவுத்துல ஒரு புழு பூச்சி ஜனிக்கலன்னு ஊரெல்லாம் பேச்சா கெடந்திச்சு. சாமியாத்தா சாவுற வரைக்கும் அதுக்கும் அது ஒரு கவலையாத்தாம் இருந்துச்சு. சாமியாத்தா பெத்த பொண்ணு, புள்ளைங்க எல்லோரட புள்ளைங்களோட பேரப் புள்ளைங்களையும் கையில தூக்கிப் பாத்திடுச்சி. அதுக்கு வீயெம் மாமா மூலமா பேரப்புள்ளைய கையில தூக்கிப் பாக்குற மட்டும் இல்லாம போயிச் சேந்திடுச்சு. வீயெம் மாமா வூடு பூரா பூனைகளாவும் பூனைக்குட்டிகளாவும், திண்ணை முழுக்க நாய்களாவும், நாய்க்குட்டிகளாவும், கொல்லை பூராவும் மாடுகளாவும் கன்னுகளாவும் நின்னுகிட்டு இருந்திச்சு. கோகிலா மாமி பூனைக்குட்டிகள ஒவ்வொண்ணுத்தையும் தூக்கி வெச்சிக்கிட்டு புள்ளைங்க போல கொஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நாய்குட்டிங்க ஒவ்வொண்ணுத்தையும் மடியில தூக்கி வெச்சிக்கிட்டு அதுகளுக்கு பீடிங் பாட்டுல்ல மாட்டுப்பால்ல ஊத்திக் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. கொல்லையில அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டுக் கெடந்த கன்னுக்குட்டிகளோட கொழந்தைங்க போல வெளையாடிக்கிட்டுக் கெடந்துச்சு.
            ஆடு மாடுகளோட வெவசாயம் நடந்துகிட்டு கெடந்த நாட்கள்ல பாத்தீங்கன்னா ஒவ்வொரு வூட்டுலயும் பசு மாடுகள வுட காளை மாடுங்கத்தாம் ஒறுப்பா மெரட்டலா வளரும். ஏரு பூட்ட, மாட்டு வண்டியில பூட்ட, காளைக்குப் போடன்னு காளை மாடுங்களோட உபயோகம் அதிகம் அப்போ. காளையிலயும் வெள்ளைக்காளை, செவலைக் காளை, கருப்புக் காளைன்னு ஊருக்குச் சில காளைங்க கலை கட்டி நிக்கும். கொம்பு பாக்குறதுக்கு அம்சமா ரெண்டு பக்கமும் அளவெடுத்து வளைச்சது போல அழகா, அதே நேரத்துல மெரட்டலா இருக்கும். அந்தக் கொம்புக்கு அடிச்சு வெச்சிருக்குற பெயிண்ட வெச்சே அந்தக் காளைய வெச்சிருக்கிறவங்க என்ன கட்சின்னு கண்டுபிடிச்சிடலாம். அப்பிடி காளை மாட்டுக் கொம்புல பெயிண்டு அடிச்சி கட்சிய வளத்த காலம்லாம் ஒண்ணு உண்டுன்னா நீங்க நம்புவீங்களா? அந்தக் காளைங்க ஒவ்வொண்ணும் புள்ளைங்கள கண்டுப்புட்டா சீறுற சீறு இருக்கே இப்போ நெனைச்சாலும் பயமாத்தாம் இருக்கு. அதோட திமிலும், திமிரும் அப்பப்பா நெனைக்கிறப்பவே நெஞ்சுக்குள்ள ஒரு நடுக்கம் பரவுது.
            என்னைக்கு ஏரு ஒழிஞ்சுப் போயி அந்த எடத்துக்கு டிராக்கடரு வந்திச்சோ, டயர் வண்டிங்க போயி அந்த எடத்துக்கு டாட்டா ஏஸ் வண்டி வந்திச்சோ, பசு மாடுகளுக்கு காளை போடுறது மாறிப் போயி அதுகளுக்கு ஊசி போடுறதுக்கு அஞ்சு ஊருக்கு சேர்த்தாப்புல மாட்டாஸ்பத்திரி வந்திச்சோ அன்னிக்கே காளைங்க அழிஞ்சு வர்ற பட்டியல்ல இருக்குற மிருகங்களோட பட்டியல்ல வந்திடுச்சு. இன்னிக்கு தேதியில இங்க யாரும் காளைக் கண்ணுங்கள காளைகளா வளக்குறதில்ல. பசு மாடு கன்னு போடுறது கிடேரிக் கன்னா இருந்தா நல்லா பாலைக் கொடுத்து நறுவிசா அதெ ஒரு மாடா வளப்பாங்க. அதுவே காளைக் கண்ணா பொறந்துச்சுன்னா அத்து என்ன பாவம் செஞ்சுச்சோன்னோ நெனைக்கிறாப்புல, பாலையும் கொடுக்காம, போஷாக்கையும் பண்ணாம வயித்துத் தள்ளிக்கிட்டு பரிதாபமா நிக்குறாப்புல வளப்பாங்க. அந்த வளப்பும் ஒரு வருஷம் ஆனா அதிகெம். அதுக்குள்ள கறிகாரன பாத்து வித்துப்புடுவாங்க. மொறையான காளை மாட பாக்கணும்னா சினிமா பாடத்துலயோ, டிவியிலயோ பாத்தாத்தாம் உண்டு. அந்தக் கொறையத் தீக்குறது போலவே கோகிலா மாமி ஒரு காளைக் கண்ண வளத்துச்சுப் பாருங்க. சுத்துப்பட்டுல எவனும் அந்த மாதிரியான காளைய வளக்கல. காளை மாடுன்னா எப்பிடி இருக்குமுன்னு ஒரு கொழந்தைக் கேட்டுச்சுன்னா வீயெம் மாமா வூட்டுக்கு அழைச்சிட்டுப் போயி அந்தக் காளை மாட்டைக் காட்டலாம் அப்பிடி வளத்துச்சு.
            வீயெம் மாமா வூட்டப் பத்தி ஊருல இப்போ ரெண்டு வெதமான பேச்சு உண்டாச்சி. ஒண்ணு வீயெம் மாமாவோட வூடு கொழந்தையில்லாத வூடுன்னும், ரெண்டு வீயெம் மாமாவோட வூடு காளை மாடு உள்ள வூடுன்னும். "இப்பிடி எவளாச்சிம் காளை மாட்டெ பசு மாட்டெ போல வளப்பாளா? அந்தச் சிறுக்கிக்குப் பைத்தியம் பிடிச்சிப்புட்டா ன்னா? கொழந்தை இல்லங்ற ஏக்கத்துல இப்பிடிக்கி அவ்வே காளைய வளத்துக்கிட்டு நிக்குறாளா? என்ன எழவோ நம்ம ஊர்லதாம்டி இப்பிடிக்கான கூத்துல்லாம் நடக்கும்!"ன்னு சனங்க ஒவ்வொண்ணும் பேச ஆரம்பிச்சிடுச்சுங்க.
            பாலெ கறந்து கொடுத்து காசு பாக்குறது கோகிலா மாமிக்குப் பிடிக்காது. பாலெ வித்தா அதெ வாங்குறவங்களுக்கு விக்குறவங்களோட வூட்டு லட்சுமி போயிடும்னு அதோட நம்பிக்கெ. அதால அது பால விக்காது. யாராவது கேட்டாலும் கொடுக்காது. வூட்டுல இருக்குறது வீயெம் மாமா, கோகிலா மாமின்னு ரெண்டு பேருங்க. அவுங்க ரெண்டு பேத்து மட்டும் கறக்குற பால்ல எம்மாம் பால குடிக்கிறது? அவுங்களும் குடிச்சி வூட்டுல இருக்குற நாய்க்குட்டி, பூனைக்குட்டிங்க குடிச்சது போக மிச்சமாக ஆரம்பிச்சிச்சு பாலு. கறந்து எதுக்குப் பாலை வீணடிக்கணும்னு தேவையான பால கறந்துகிட்டு மிச்சமிருக்குற பாலையெல்லாம் கன்னுகுட்டிகளே குடிக்கட்டும்னு வுட்டதுல ஒவ்வொரு கன்னுகுட்டியும் ஒரு வருஷத்துக்குள்ள, ஒண்ணரை வருஷத்துக்குள்ள பெரிய மாடா வளந்து நிக்குற அளவுக்கு வளந்துச்சுங்க. அப்பிடி வளந்த மாடுகள்ல ஒண்ணுதாம் அந்தக் காளை.
            ஆடு வளத்தா அதெ கறிக்கு வித்து காசு பாக்கலாம். பசு மாட்டெ வளத்தா பால வித்து காசு பாக்கலாம். காளைய வளத்து எப்பிடிக் காசு பாக்கறதுன்னுதாம் எந்த சனமும் காளைய வளக்குறதில்ல. ஆனா ஒரு சிலருக்குக் காளைய வளக்குறதுல யோகம் இருக்கு. வீயெம் மாமாவுக்கு அப்பிடி ஒரு யோகம் இருந்துச்சு. ஊரு முழுக்க மாட்டாஸ்பத்திரியில போயி சினை ஊசி போடுற வழக்கம் இருந்தாலும், இன்னும் இங்க கிராமத்துல காளைக்குக் போடுற வழக்கமும் இருந்துக்கிட்டுத்தாம் இருக்குது. வீயெம் மாமா வூட்டுல காளை மாடு இருக்குற சங்கதியெ கேள்விப்பட்டு காளைக்குப் போடறதுக்குன்னே எந்தெந்த ஊர்லேந்தோ கெளம்பி ஒரு கூட்டம் வர ஆரம்பிச்சிச்சு. வர ஆரம்பிச்சதுன்னா அது எப்பிடிங்கிறீங்க? டாட்டா ஏஸ்ல பசு மாட்டெ ஏத்திக்கிட்டுக் கொண்டு வர்ற அளவுக்கு தூரத்து ஊர்லேந்தும் வர ஆரம்பிச்சிட்டாங்க. வீயெம் மாமாவோட காளைக்கு பெரிய கிராக்கியா போயிடுச்சு. ஒரு நாளைக்கி அப்பிடிக் காளைய போடுறதுல எரநூறு, முந்நூறு, ஐநூறுன்னு சம்பாதிக்க ஆரம்பிச்சிக்கு வீயெம் மாமா வூட்டோட காளை.

            காளை போடுறதுக்குத் தகுந்தாப்புல மூங்கில்ல கிட்டியெல்லாம் போட்டு கொல்லை ஓரமா அதுக்கு ஏத்த மாதிரி ஏற்பாடுகள பண்ணி வெச்சிருந்துச்சு வீயெம் மாமா. அதோட நேரம் பாருங்க காளைக்குப் போட வந்த சனங்களோட பசு மாடுக எல்லாம் நல்ல செனைப் புடுச்சி கிடேரி கன்னுகளா போட ஆரம்பிச்சிடுச்சு. போடுற கன்னுகுட்டிக ஒவ்வொண்ணும் மானு குட்டிக போல அம்புட்டு அழகா அமைஞ்சிப் போனதுல இந்தச் சங்கதி காத்துல கிருமி பரவுறது போல பரவ ஆரம்பிச்சிடுச்சு. பொதுவா ஒரு நாளைக்கி ஒரு காளை மாட்டெ ஒரு பசு மாட்டோட சேர வுடறப்பத்தாம் சரியா செனைப் புடிக்கும். வேணும்னா ரெண்டு மூணு போட வுடலாம். அப்பிடி போட வுட்டு மூணுல ரெண்டு செனை பிடிச்சா பெரிய விசயம். வீயெம் மாமாவோட காளை ஒரு நாளைக்கி எத்தனெ பசு மாடுங்க வந்தாலும் அத்தனை மேலயும் பாஞ்சு பாஞ்சு ஏறிச்சு. அது பாஞ்சு பாஞ்சு ஏறுனெ அத்தனையும் செனை புடிச்சிது பாருங்க அதெ என்னன்னு சொல்றது? பொழுது விடியுறதுக்கு மின்னாடியே கூட்டம் கூட்டமா பசு மாடுகள ஓட்டிக்கிட்டும், டாட்டா ஏஸ்ல வெச்சிக் கொண்டாந்துக்கிட்டும் இருக்க ஆரம்பிச்சாங்க சனங்க. வீயெம் மாமாவுக்கு மரதச்சு வேலையைய வுட்டுப்புடலாங்ற அளவுக்கு சம்பாத்தியம் வர ஆரம்பிச்சிது.
            எள்ளு புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்குன்னு பால் கறக்குற பசு மாட்டுக்குத்தாம் சனங்க வாங்கிப் போடும்ங்க. காளை மாட்டுக்குப் அது மாதிரிக்கிப் போட்டதெல்லாம் ஏரு பூட்டுன, வண்டிப் பூட்டுன காலத்தோடயே முடிஞ்சிப் போச்சு. அந்தக் காலத்தெ திரும்ப கொண்டாந்துச்சு வீயெம் மாமா. அதோட காளைக்குத் தெனமும் எள்ளுப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்குன்னு வாங்கிப் போட்டுச்சு. அத்தோட அந்தக் காளை மாட்டுக்கு தெனமும் புல்லறுத்துப் போடுறதுக்குன்னு ஒரு ஆளையும் வேற சம்பளத்துக்குப் போட்டுச்சு. நாளாவ நாளாவ சுத்துப்பட்டுல இருக்குற அத்தனெ பசு மாடுகளோட ரூட்டுக் காளையனா வீயெம் மாமா வூட்டுக் காளைதாம் இருந்துச்சு. எந்த வூட்டுல மாடு கன்னு போட்டாலும் அதுக்கு வீயெம் மாமாவோட காளைத்தாம் காரணமா இருந்துச்சு. மாட்டாஸ்பத்திரில செனை ஊசி போடுறதுங்றது கிட்டதிட்ட கொறைஞ்சுப் போச்சு. மாட்டாஸ்பத்திரியில போடுற செனை ஊசியில செனைப் பிடிச்சாலும் பிடிக்கலாம், செனைப் பிடிக்காட்டியும் பிடிக்காம போவலாம். ஆனா வீயெம் மாமாவோட காளையப் போடுறதுல அப்பிடி இப்பிடில்லாம் கெடையாது. காளைக்குப் போட்டா கன்பார்மா கன்னுக்குட்டின்னு இருந்துச்சு.
            அந்தக் காளைய அவுக்குறதிலேந்து, வயக்காட்டுப் பக்கம் காலாற கொண்டுட்டுப் போயிக் கொண்டுட்டு வரதிலேந்து, குளத்துக்குள்ள அடிச்சிவுட்டு வைக்கல கையில பிடிச்சிக்கிட்டுத் தேய்ச்சி நல்லா குளிப்பாட்டி வுடுறதிலேந்து, காளைக்குப் போடுறதுக்குக் கொண்டாரதிலேந்து, திரும்ப கொண்டுப் போயி கட்டுறது வரைக்கும் அத்தனெ வேலையும் கோகிலா மாமித்தாம் செஞ்சிச்சு. வீயெம் மாமாவுக்கு எல்லாத்தையும் மேம்பார்வெ பாத்துக்கிட்டுக் காசெ வாங்கி பையில திணிச்சிக்கிறதுதாம் வேல. சாதாரணமா யாரைப் பாத்தாலும் சீறுற அந்தக் காளை கோகிலா மாமிகிட்டெ மட்டும்தான் பொட்டிப் பாம்பாய் அடங்கி வரும். அந்தக் காளைய பாக்குறதுக்கு பாதி யானையப் பாக்குறாப்புல கருப்பா கரு கருன்ன முடிய வெச்சிக்கிட்டு, அந்த முடியில ஒரு பளபளப்புன்னா அம்மாம் பளபளப்பா இருந்துச்சு.
            ஒலகத்துல எதுவும் நல்லா ஒரு கால கட்டம் வரைக்கும் போவும் போலருக்கு. ஏம் எல்லா காலகட்டத்துக்கும் அத்து நல்லாவே போவாதான்னு கேட்டாக்கா, அப்பிடி நல்லா போறதுக்கு மனசுல ரொம்ப பொறுமெ வேணும். நெதானமும் அமைதியும் ரொம்ப ரொம்ப வேணும். அது இல்லன்ன நல்லா போறது நாசமா போறதுக்கு சம்பந்தப்பட்ட மனசே காரணமாயிடும்.
            மனுஷங்க எல்லாரும் ஒரே மாதிரியாவா இருக்காம்? கையில இருக்குற வெரலுங்க மாதிரி, காலுல்ல இருக்குற வெரலுங்க மாதிரித்தாம் மனுஷங்களும். எல்லாத்துக்கும் நாக்குதாம் ஒரே மாதிரியா இருக்குமே தவுர, ஒவ்வொரு நாக்கும் ஒரே மாதிரியாவா பேசும்? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வெதமாத்தாம் பேசும். அதெ தாங்கிக்குற பொறுமையும், நெதானமும் மனசுக்கு இருந்தா ஒருத்தனுக்கு நடக்குற நல்ல காலத்தெ எவனாலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த மனசு இல்லன்னா ஒருத்தனுக்குக் கெட்ட காலத்தெ கொண்டு வாரதுக்கு யாரும் தேவையில்ல. அவனே போதும்.
            காளைக்குப் போடுறதுக்கு காளைய அவித்துச்சுன்னா கோகிலா மாமி காளை போடுறது முடியுற வரைக்கும் அதையே வெறிச்சிப் பாத்துக்கிட்டு நிக்கும். எத்தனெ பசு மாடுங்க வர்ருதோ அத்தனைக்கும் போடுற வரைக்கும் பச்ச தண்ணி பல்லுல படாது அதுக்கு. சில நாட்கள்ல காளை போடறது முடிஞ்சி சாப்பாடு ஆவுறதுக்குப் பத்து பதினோரு மணி ஆவுறதும் உண்டு. அம்மாம் நேரமும் காளை பசு மாட்டுல ஏறுதெ பாத்துக்கிட்டு நிக்கும். வர்றவேம் போறவெம் எல்லாம் ஒரு மாதிரிக்கா பேசுவாம்? ஒவ்வொரு மாதிரியா பேச ஆரம்பிச்சாம்.
            "ன்னா இந்த பொம்முனாட்டி காளைய போட வுட்டுட்டு இம்மாம் வெறிப்பா பாக்குது?"ன்னு மொதல்ல பேசிருக்காம் ஒருத்தம்!
            "அதெ ஏம் கேக்குற மாப்புள? இந்தப் பொட்டச்சிக்குக் கொழந்தெ கெடையாது தெர்யுமா?" அப்பிடின்னிருக்காம் பக்கத்துல நின்னுகிட்டு இருந்தவேம்.
            "அதாங் இவ்வே இந்தப் பார்வெ பாக்குறாளா?" அப்பிடின்னிருக்காம் அவ்வேம்.
            "கலியாணம் ஆயி ஏழெட்டு வருஷமா ஆவப் போவுது மாப்புள. எப்பிடி இருக்கா பாத்தியா பொழங்காத பாத்திரத்தெ போல பளபளன்னு?" அப்பிடின்னிருக்காம் இவ்வேம்.
            "அதாங் இப்பிடி நிக்குதா பொட்டெ?" அப்பிடின்னிருக்காம் அவ்வேம்.
            காளைக்கு மாட்டை வுட்டுக்கிட்டு காசைக் கையில வாங்கிட்டு நின்னுகிட்டு இருக்குற வீயெம் மாமாவுக்கு இந்தப் பேச்செல்லாம் காதுல வுழுந்துகிட்டு இருக்கு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...