19 Mar 2020

தப்புக் கணக்கு

செய்யு - 392        

            ஒரு பத்து பாஞ்சு நாள்ல முடிய வேண்டிய வேலையைச் சித்துவீரனை வெச்சு பாத்ததுல ஆறு மாச காலத்துக்கு இழுத்துட்டுப் போச்சு சுப்பு வாத்தியாருக்கு. ஒரு கட்டத்துல நாமளே எறங்கி வுட்ட கொறை, தொட்ட கொறையா இருக்குற வேலைய வுட்ட எடத்துலேந்து முடிச்சிடுவோமான்னு நெனைக்கவும் ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. புதுசா வேற ஆள மாத்தி அவனும் இதெ போல இழுத்தடிச்சாம்ன்னா இன்னமுமில்ல செரமமா போயிடும், அத்தோட ஆளெ மாத்திப்புட்டாருன்னு சித்துவீரன் பஞ்சாயத்தெ வெச்சிப்புட்டா அது வேறவொரு செரமமா போயிடும்னும் பல வெதமா பல தெசையிலேந்து யோசனைப் பண்ணிட்டுக் கெடந்தாரு. அப்பிடி இப்பிடின்னு மாத்தி மாத்தி நெனைப்பு வந்தாலும் எந்த வேலை எப்பப்போ முடியும்னு ஒரு கணக்கு இருக்கு, இந்த வேல இப்பிடி காலம் கெடந்து முடியும்னுத்தாம் இதுக்கு விதி இருக்குன்னு நெனைச்சுக்கிட்டு ஒரு முடிவெடுக்காமாலும் இப்பிடியும் அப்பிடியும் அல்லாடிக்கிட்டுக் கெடந்தாரு.
            "இனுமே இந்த வூட்டுக்குன்னு எதாச்சிம் தண்ட மாரடி வேலயப் பாத்தா நாம்ம சும்மா இருக்கா மாட்டேம்! கொலகாரியா மாறிடுவேம்! வூட்டயே ரண்டு பண்ணிட்டுத்தாம் மறுவேல பாப்பேம்!"ன்னு வெங்கு சொல்ற அளவுக்கு நெலமெ ஆயிடுச்சு. வேல இழுத்துக்கிட்டுப் போறதெப் பத்திக் கோவப்பட்டு ஆவப் போறதென்ன? நயந்துப் பேசித்தாம் காரியத்தெ சாதிச்சாவணும்னு சுப்பு வாத்தியாரு சித்துவீரன்கிட்டே அது இதுன்னு தாஜாவெப் பண்ணிக் கொண்டு வருவாரு. இதுக்குன்னு சித்துவீரனோட பட்டறைக்கு சாயுங்காலமா பொழுது மசங்குற ஆறு மணி வாக்குல கெளம்பிப் போனா, ராத்திரி ஒம்போது மணிக்கு மேலத்தாம் வருவாரு. நாலு நாளு இப்பிடித் தொடர்ச்சியா போயிப் பேசுனா சித்துவீரன் மறுநாள்லேந்து ரெண்டு நாளைக்கு வேலைக்கு வருவாம். பெறவு பாத்த வேலைய அப்பிடியேப் போட்டுப்புட்டு மனம் போன போக்குல எங்கயாச்சிம் போயிடுவாம். மறுபடியும் பழைய குருடி, கதவெ தெறடி கணக்கா சுப்பு வாத்தியாரு போயி நிப்பாரு.
            வேல ஆடிக்கொரு தடவெ, அமாவாசைக்கு ஒரு தடவெங்ற மாதிரிக்கி நடந்துக்கிட்டுக் கெடந்துச்சு. அந்த வேலைக்கும் சுப்பு வாத்தியாரு ஆயிரத்தெட்டு ஆலோசனைக சொல்லணும். வழக்கமாக பீரோலுக்குன்னு இருக்குற அளவுல சுப்பு வாத்தியாரு சித்துவீரனெ வெச்சிப் பீரோல கோக்கல. ரொம்பப் பெரிசா அதெ கோக்கச் சொன்னாரு. ரொம்ப பெரிசுன்னா அரைப் பத்தாயம் அளவுக்கு இருந்துச்சு அந்த பீரோ. அதுக்குத் தகுந்தாப்புல அளவுகள வெச்சிக் கோக்கணும் அந்தப் பீரோல. ஏம் இப்பிடி ஒரு பீரோவ கோக்கணும்னு சுப்பு வாத்தியாரு நின்னாருன்னா, வெட்டுன வேப்ப மரத்துலேந்து கெடைச்ச மரச்சட்டமும், பலவைகளும் ஒண்ணரை பீரோல செய்யுற கணக்குக்கு இருந்துச்ச. அதுல ஒரு பீரோவ செஞ்சுப் போட்டா மிச்ச அரை பீரோலுக்கான சட்டமும், பவவைகளும் அப்பிடியே கெடந்துப் போயிடும்ங்றதுக்காக இருந்த அத்தனைக்கும் கணக்குப் பண்ணி அதுக்கேத்தப்படி ரொம்ப பெரிசா செய்யச் சொன்னாரு.
            அப்பிடி அவரு சொன்னப்ப தலைய தலைய ஆட்டிக்கிட்டு, அதையெல்லாம் நல்லா பண்ணிப்புடலாம்னு சொன்ன சித்துவீரன், வேலைய ஆரம்பிச்சிச் செய்ய செய்ய புதுப்புது சந்தேகமா கேக்க ஆரம்பிச்சிட்டாம். அப்பத்தாம் சுப்பு வாத்தியாருக்குச் சந்தேகமே தட்டிச்சு, "இந்தப் பயலுக்கு வேல தெரியுமா? தெரியாதா? இவனெ நம்பி இம்மாம் பெரிய வேலைய ஆரம்பிச்சிட்டோமே! முழுசா வேல தெரியாதவங்கிட்டே வேலய ஒப்படைச்சிட்டோமே? வேலையக் கெடுத்துட்டான்னா என்ன பண்றது?"ன்னு ஒரு கட்டத்துல கலங்கிப் போயிட்டாரு.
            சுப்பு வாத்தியாரு எதெ நெனைச்சிக் கலங்குனாரோ அதுக்குத் தகுந்தாப்புல சம்பவங்களும் நடந்துச்சு. பீரோலுக்கு அளவு வெச்சி உள்கூட கோத்து, அந்த உள்கூட்டுக்குள்ள இருக்குற சட்டங்களுக்கு எடையில பலவையச் செருவிச் செய்யுற பீரோ பாக்குறதுக்கு அழகாவும், பெலமாவும் இருக்கும். அப்பிடி சட்டங்களுக்கு எடையில செருவுற பலவைய சரியா அளவெடுத்து, காடியெல்லாம் சரியா எடுத்து, அதுக்கு எடையில பெவிக்கால்ல போட்டு ஒட்டி சட்டங்களுக்கு எடை எடையே மரஆணியப் போட்டு இறுக்கணும். அதுல தப்பு நடந்துப் போச்சுன்னா பலவைகளோட பலவையா சட்டம் போயிச் சரியா சேராம துருத்திக்கிட்டு நின்னு பீரோ முழுசா அடைபடாம அங்கங்க ஓட்டை ஓட்டையா தெரியும். அப்பிடி ஆனா திரும்ப செஞ்ச வேலையப் பிரிச்சிப்புட்டு, பலவைகள வெளியில எடுத்து, காடியெல்லாம் சரி பண்ணி திரும்ப உள்ளார வெச்சி அடிக்கணும். பெவிக்கால்ல வெச்சி ஒட்டுன எடத்துல எல்லாம் தண்ணிய வுட்டுத் தேக்கி ஒட்டைப் பிரச்சாவணும். வேல மெனக்கெட்ட வேல, ரெட்டிச்ச வேலயும் கூட. அப்பிடில்லாம் ரெட்டிச்ச வேலையப் பாக்குறாப்புல பண்ணிப்புட்டாம் சித்துவீரன். சுப்பு வாத்தியாரு அதுல ரொம்பவே நொந்துப் போயிட்டாரு. ஒரு வழியா அப்பிடியெல்லாம் பாத்துத்தாம் பீரோ வேல முடிஞ்சிச்சி.

            மரவேலையில கதவு போடுறதுல்லதாம் எல்லா சாமர்த்தியமும் இருக்கு. பூட்டித் தொறக்குறப்ப கதவு சரியா அணைஞ்சி பொருந்திப் போவணும். இல்லாட்டிப் பூட்டித் தொறக்குறது பெரும்பாடா போயிடும். அத்தோட கதவுக்குப் போடுற தாழ்ப்பாளு, பேட்லாக்கு, உள்பூட்டு எல்லாம் சரியா பொருந்திப் போவணும். சித்துவீரன் கதவெப் போடுறான்னா ஒரு கதவுக்கு ஒரு நாள எடுத்துப்பாம். சரியா அளவெடுத்து கூறெடுத்து வாங்கியிருந்தா ஒரு கதவெ போட்டு முறுக்கிட்டு வாரதுக்கு பத்து நிமிஷம் கூட ஆவாது. ஆனா அந்த வேலை புரியாட்டி நாள் கணக்குல செஞ்சாலும் வேல சரிபட்டு வாராது. எப்பிடியோ சித்துவீரனெ ஒரு எடுபிடி மாதிரி வெச்சிக்கிட்டு சுப்பு வாத்தியாரு மேஸ்திரி தச்சரெ போல நின்னு வேலய முடிச்சிக்கிட்டாரு.
            இப்பிடி வேலையில கோட்டை வுடுறப் பயலெ எப்பிடி தேடி வந்து நாலு பேரு வேலைக்கிக் கூப்புறானுவோன்னு சுப்பு வாத்தியாரு தெகைச்சிப் போயிட்டாரு. பயலோட சாமர்த்தியம் அப்பிடி. சித்துவீரனெ பொருத்த மட்டுல அவ்வேம் வூட்டுக்குன்னு வந்து வேலையப் பார்த்தது சுப்பு வாத்தியாருக்கு மட்டுந்தாம். அவரு வூட்டுல வந்துதாம் வேலயப் பாக்கணும்னு கண்டிஷனா சொல்லிப்புட்டாரு. சட்டங்களையும், பலவைகளையும் பட்டறைக்குக் கொண்டு போயி வேலையப் பாத்துக் கொண்டு வார்றேம்னு சித்துவீரன் சொன்னப்போ, "யப்பாடி! நீஞ்ஞ எம்மாம் மெதுவா வாணாலும் வேலயப் பாருங்க. கேக்குற கூலிய தர்றேம். பன்னெண்டு தச்சுல இந்த வேலய முடிக்கலாம். நீங்க பாஞ்சு தச்சு எடுத்துக்கிட்டாலும் பரவாயில்ல. ஆனா வேல நம்ம வூட்டுலத்தாம் நடக்கணும்!"ன்னாட்டாரு.
            இவனுங்கள நம்பி சட்டங்களையும், பலவைகளையும் கொடுத்துப்புட்டு, அதெ இவனுங்க அதெ மாத்தி வேற சட்டங்களையும், பலவைகளையும் போட்டு பெயிண்ட அடிச்சிப்புட்டா மாறுனதெ கண்டுபிடிக்க முடியாதுன்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சுக்கிட்டு அப்பிடிச் சொன்னாரு. கொல்லையில இருந்த வேப்ப மரம் வேறயா. அது ஞாபவமா நம்ம வூட்டுல பீரோவா நிக்கணும், நம்ம ஆளுகள நம்பிக் கொடுத்தா அதுல பீரோவ செஞ்சி வேற ஒருத்தனுக்கு வித்துப்புட்டு, வேற ஒரு மரத்துல செஞ்ச பீரோவ நம்ம வூட்டு மரத்துல செஞ்சதா கொண்டாந்து நிப்பாட்டிப் புடுவானுங்கறது அவருக்கு நல்லாவே தெரியும்ங்றதால சுப்பு வாத்தியாரு இந்த விசயத்துல ரொம்ப பிடிவாதமா நின்னாரு. சுப்பு வாத்தியாரோட பிடிவாதத்தால சித்துவீரனால ஒண்ணும் பண்ண முடியல. சர்தாம் ஒரு மொறை இப்பிடி ஒரு வூட்டுக்குப் போயித்தாம் வேலயச் செஞ்சிப் பாப்போம்ன்னு சித்துவீரனும் அதுக்குச் சம்மதப்பட்டு வந்துட்டாம்.
            வந்தப் பிற்பாடுதாம் ஏம் இந்த வேலைக்கி வந்தோம்னு அவனுக்கு ஒரு நெனைப்பு வருது. இந்தப் பயலெ கொண்டாந்து ஏம் வேலைய ஆரம்பிச்சோம்ன்னு சுப்பு வாத்தியாருக்கு ஒரு நெனைப்பு வருது. சொம்புல தண்ணியக் கொண்டுக்கிட்டுப் போயி பேண்டுட்டு இருக்குறப்ப, இந்தத் தண்ணியையா சொம்புல கொண்டாந்தோம்ன்னு நெனைச்சு என்னா பண்றது? சொம்புல கொண்டாந்த தண்ணிய வெச்சி காரியத்தெ முடிச்சிட்டுக் கெளம்பிட்டே இருக்கணும் இல்லையா! சுப்பு வாத்தியாரு சொன்னபடிக்கி வேலைய்ப பாக்க சித்துவீரனுக்குப் பிடிக்கல. சித்துவீரனெ வெச்சி வேலையப் பாக்க சுப்பு வாத்தியாருக்கும் பிடிக்கல. ஆனா பேசியாச்சே, அதுக்குப் பங்கம் வந்துடக் கூடாதுன்னு நெனைச்சிக்கிட்டு ரெண்டு பேரும் காலத்தெ கடத்தியாவது சோலிய முடிச்சாங்க.
            ஒரு வேளை சுப்பு வாத்தியாரு சட்டங்களையும், பலவைகளையும் கொண்டு போயி சித்துவீரனோட பட்டறையில போட்டு இருந்தா பாக்குக்கோட்டையிலேந்து வாங்கியாந்த பீரோவ பத்து நாளுக்குப் பெறவு கண்ணுல காட்டி, அதாங் நீங்க மரத்தெக் கொடுத்து, நாம்ம கோத்த பீரோன்னு சித்துவீரன் சுப்பு வாத்தியாரு தலையில கட்டியிருப்பாம். அதுக்கு வழியில்லாம போயிடுச்சு.
            நெலை, சன்னலு கோக்குறதெல்லாம் எங்கக் கோத்து வைக்கணுமோ அங்கப் போயி வேலையப் பாத்துக் கோத்து வைக்குறதாங் மின்னாடி இருந்த வேலைமுறை. இப்போ அதுவும் மாறிப் போச்சுது. வூடுகள்ல போயி வேலை பாக்குற மொறையே இல்லாமப் போச்சு. எல்லாத்தையும் அளவெடுத்துக்கிட்டுப் போயி பட்டறையில வெச்சித்தாம் செய்யுறாங்க. பட்டறையில் செஞ்சதெ டாட்டா ஏஸ்ஸ ஒண்ண பிடிச்சி எங்க கொண்டாந்து வைக்கணுமோ அங்க கொண்டாந்து வெச்சிடுறாங்க. இப்பிடி மாறிப் போன வேலைமுறை சித்துவீரனுக்கு ரொம்ப வசதியாப் போச்சுது. நெலை சன்னலு வேலைன்னா வேலை தெரிஞ்ச நாலைஞ்சு ஆச்சாரிகள கொண்டாந்துப்புடுவாம். அவுங்கள வெச்சிக்கிட்டு நல்ல வெதமா கோத்துக்கிட்டு, இவ்வேம் மேம்பார்வெ பாக்குறவனெப் போல நின்னுக்கிட்டு அவனுக்கும் ஒரு கூலிய சேத்துக்கிட்டு, வேலைக்கு அழைச்சாந்த ஆச்சாரிகள்கிட்டேயும் கொடுக்குற கூலியிலேந்து ஒரு கமிஷனெ வெட்டிக்கிட்டு அவ்வேம் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டுக் கெடந்தாம்.
            சித்துவீரனெ வெச்சி வேலையப் பாத்ததுல நடந்த ஒரு நல்லதுன்னா, அவ்வேம் இழுத்தடிச்ச இழுப்புல, இனுமே வூட்ட விரிவாக்கம் பண்ற வேலையில எறங்க மாட்டேம்னு சுப்பு வாத்தியாரு வெறுத்துப் போனதுதாம். சுப்பு வாத்தியார்கிட்டே வேலையப் பாத்தலு சித்து வீரனுக்கு நடந்த ஒரு நல்லதுன்னா அவ்வேம் சுப்பு வாத்தியார்ரப் பத்தி நல்லா புரிஞ்சிக்கிட்டதுதாம். ஒரு பிரச்சனைன்னா அதெப் பத்தி வாயைத் தொறக்காத அப்புராணிய இருந்துக்கிட்டு, அந்தப் பிரச்சனைய சரி பண்ணிக்கிறவார சுப்பு வாத்தியாரு இருக்குறதெ அவ்வேம் நல்லா புரிஞ்சிக்கிட்டாம். இந்த மாதிரியான ஆளுங்களெ பிரச்சனைக்குரிய ஆளுங்களோட கோத்து விட்டா, பிரச்சனையில்லாம போயிடும்ன்னு அவ்வேம் ஒரு மனக்கணக்கையும் அப்போ போட்டுக்கிட்டாம்.
            பிரச்சனை பண்ற ஆளுங்களோட பிரச்சனை பண்ற ஆளுங்களைக் கோத்து விட்டா அது பெரும் பிரச்சனையா ஆயிடும். பிரச்சனை பண்ற ஆளுங்களோட பிரச்சனை பண்ணாத ஆளுங்களைக் கோத்து விட்டாத்தாம் நெலமைய சமாளிக்க முடியும். சேர்ற ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு மல்லுக்கு நின்னா சுத்தி இருக்குறவேம் பாடு திண்டாட்டமா போயிடும். ரெண்டுல ஒண்ணு பதிவிசா இருந்தா பதிவிசா இருக்குறதுக்கு மட்டும் திண்டாட்டமா போவும், சுத்தி இருக்குறவங்களுக்கு அதெ பத்தியே பேசிப் பேசிக் கொண்டாட்டமா போவும்.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...