21 Mar 2020

தேன்மொழியின் 'கூனல் பிறை' சிறுகதைத் தொகுப்பு - ஓர் எளிய அறிமுகம்

தேன்மொழியின் 'கூனல் பிறை' சிறுகதைத் தொகுப்பு
- ஓர் எளிய அறிமுகம்

            திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேன்மொழி வேதியியல் மற்றும் வரலாற்றுப் பட்டதாரி. கலைவரலாறு குறித்த முனைவர் பட்டம் பெற்றவர். அவரது தேர்ந்த சிறுகதைத் தொகுப்பு 'கூனல் பிறை'
            தேன்மொழியின் 'கூனல் பிறை' சிறுகதைத் தொகுப்பு கவித்துவ மொழியால் ஆன சிறுகதைத் தொகுப்பு. சங்க இலக்கிய மொழியைச் சிறுகதைகளாகப் புனைய முயன்றால் எத்தகைய ஒரு மனச்சூழலுக்குள் சிக்குவோமா அப்படியொரு மனச்சூழலுக்குள் சிக்க வைப்பவைகளாக தேன்மொழியின் சிறுகதைகள் அமைகின்றன.
            இத்தொகுப்பின் சிறுகதைகளுக்கான தலைப்புகள் பலவும் சங்க இலக்கிய சொல்லாடல்களை மீட்கொணர்பவைகள் போன்ற தோற்றத்துடன் இருப்பதைச் சங்க இலக்கிய எழுத்திற்கான ஒரு சாட்சியமாகச் சொல்லலாம். நாணல்காடு, பாழ்வாய் உலகு, கூனல் பிறை, தீம்பழம், சூலகக்காடு என்று எத்தனையோ தலைப்புகளை அதற்குச் சான்றாகக் காட்டலாம்.
            எந்த ஒரு முடிவை நோக்கியும் நகர்த்த எத்தனிக்காத இயல்புவாதம் இச்சிறுகதைத் தொகுப்பின் ஆகச் சிறந்த பலம். அதே நேரத்தில் யசோதரா, ஆரியமாலா ஆகிய சிறுகதைகள் மூலம் பெண்ணியப் பார்வை குறித்த ஒரு மீட்டுருவாக்கத்தையும் செய்ய முனைகிறார் தேன்மொழி. வரலாறு மற்றும் புராணப் பின்னணிகள் கொண்ட சிறுகதைகளைப் பெண்ணியப் பார்வையில் மீள் உருவாக்கம் செய்வதன் மூலம் தன் சிறுகதைகளுக்கான களத்தைக் கட்டமைக்க முயல்கிறார் தேன்மொழி. பெண்களாலான உலகில் பெண்களுக்கான மறுக்கப்படும் உணர்வுகளையும், உரிமைகளையும் சில கதைகளில் உரையாடல்களாக முன்னகர்த்திச் செல்கிறார்.
            ஆகச் சிறந்த அன்பிற்கான ஒரு பாதையை உருவாக்குவதைத் தன் கதைகள் மூலமாகப் பேசி அப்பாதைக்கான தடத்தைக் காட்டிச் செல்கிறார். தேன்மொழியின் சிறுகதைகளில் மகள்கள் அப்பாவின் மீது செலுத்தும் அன்பும், பாம்புகளின் மேல் காட்டும் பரிவும் இதுவரை நாம் காணாத ஒரு புதிய உலகை கண்முன் விரியச் செய்கின்றன.
            காவிரி கழிமுகப் பகுதிகளே அநேகமாக தேன்மொழியின் வாழ்விட அனுபவப் பகுதிகளாக இருக்கக் கூடும். அவ்வகையில் வண்டல் இலக்கியத்தின் சிருஷ்டிகர்த்தாக்களில் அவர் முக்கியமான ஒரு பெண் படைப்பாளியாகிறார். சங்க இலக்கியத்திலும், வண்டல் இலக்கியத்திலும் காணப்படும் நிலவியல் குறித்தான சித்தரிப்புகள் தேன்மொழியின் படைப்புகளில் குறைவு எனினும், அந்நிலவியல் சித்திரங்கள் உளவியல் சித்திரங்களாக மாற்றமடைந்து பல சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு சிறுகதையிலும் தேன்மொழி ஓர் ஆழ்ந்த உளவியல் கட்டமைப்புக்குள் வாசகரை உள்ளிழுக்கிறார். ஒவ்வொரு கதையின் வாசிப்பின் முடிவிலும் ஒரு தத்துவார்த்த தன்மையை வாசகரே அறிய முடியாத வகையில் கதைகளின் வாயிலாக உள்நுழைக்கிறார். இத்தகைய தத்துவார்த்த தன்மையும், உளவியல் கட்டமைப்பும் சில கதைகளைத் தீவிரத்தன்மைகள் கொண்டவைகளாகக் காட்டிய போதிலும் இயல்புவாதத் தன்மையின் எதார்த்தத்தை எந்த இடத்திலும் மீறி விடாமல் கதைகளை நகர்த்திக் கொண்டு மெனக்கெடுகிறார் தேன்மொழி.
            'பூர்வபெளத்தன்' எனும் சிறுகதையின் மூலம் நிகழ்கால ஆணவக்கொலையை மீட்டுருவாக்கம் செய்யும் இடத்தில் தேன்மொழி தன் சமகாலத்தின் எந்த பிரச்சனையையும் தன் தொகுப்பில் விட்டுவிடவில்லை என்பதை அழுத்தமாக நிறுவுகிறார்.
            தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பில் அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பு இறைந்து கிடக்கிறது. அன்புக்காக ஏங்கித் தவிக்கும் பெண்கள் நிறைந்து இருக்கிறார்கள். பேய்களை விரும்பும் சிறார்கள் இருக்கிறார்கள். பாம்புகளை நேசிக்கும் மகள் இருக்கிறாள். பைத்தியக்காரத்தாயைப் பரிவோடு காத்து நிற்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். பேரன்களால் கைவிடப்பட்ட பாட்டி இருக்கிறாள். குழந்தைகளின் தனிமை ஏக்கங்கள் கவிந்து கிடக்கின்றன. அப்பாவுக்காக முதிர்ச்சியோடு நடந்து காட்ட நினைக்கின்ற மகள் இருக்கிறாள். தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் பால்ய நதியில் சுழித்தோடும் தேன்மொழியின் நினைவலைகள் பொங்கிப் பிரவகிக்கின்றன.
            எல்லாவற்றிலும் மேலாக ஒவ்வொரு கதையிலும் மனிதமும், அதைச் செலுத்தும் அன்பும் தேன்கூட்டில் நிரம்பியிருக்கும் தேனைப் போல நிறைந்து இருக்கிறது. அதைத் தேன் போன்ற கவித்துவ மொழியோடு சொன்ன விதத்தில் தான் ஒரு தேன்மொழி என்பதை இறுதியாக நிறுவி விடுகிறார் எழுத்தாளர் தேன்மொழி. அந்த வகையில் பெண்ணிய எழுத்தாளர்களின் தவற விடக் கூடாத சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றாக இருக்கிறது தேன்மொழியின் 'கூனல் பிறை'.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...