8 Mar 2020

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 12

செங்காந்தள் அறிவுத் திருவிழா – 12
செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களை நோக்கிய மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியாகும்.

பனிரெண்டாவது செங்காந்தள் அறிவுத் திருவிழா திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், தென்காரவயல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 02.03.2020 (திங்கள்) அன்று மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு பள்ளியிலாவது ஒரு அறிவுத் திருவிழாவையாவது கொண்டாட வேண்டும் என்பது செங்காந்தள் அறிவுத் திருவிழாவின் முக்கிய இலக்கும் நோக்கமும் ஆகும்.
பல்வேறு காரணங்களினால் 11 வது அறிவுத் திருவிழாவை 29.08.2018 இல் கொண்டாட இயன்றதோடு சரி, அதன் பின் 12 வது அறிவுத் திருவிழாவை ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பிற்பாடு தற்போது இம்மாதம்தான் கொண்டாட இயன்றது.
ஒவ்வொரு மாதமும் புத்தகங்களோடு பள்ளிகளுக்குச் செல்லும் போது, அன்றைய நாளில் அறிவுத் திருவிழாவைக் கொண்டாட இயலாத வண்ணம் பள்ளிகளில் முக்கியமான வேறு பணிகள் அமைந்து விடுவதும், பள்ளிகளில் இந்த நாளில் அறிவுத் திருவிழாவைக் கொண்டாடலாம் என குறிக்கப்படும் அந்த நாட்களில் புத்தகங்களோடு சென்று காட்சிப்படுத்த முடியாத நிலைமையும் மாறி மாறி அமைந்ததில் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எம்மாதமும் அறிவுத் திருவிழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
இச்சூழலுக்கு ஒரு மாற்றாக அறிவுத் திருவிழாவைக் கொண்டாட விரும்பும் பள்ளிகளில் புத்தகங்களை ஒப்படைத்து, அவர்களுக்கு உகந்த ஒரு நாளில் கொண்டாடிக் கொள்ளும் யோசனையை முன் வைத்தோம். அத்தோடு மாணவர்களுக்கு, ‘நான் விரும்பும் புத்தகம்’, ‘நான் விரும்பும் கவிஞர்’ ஆகிய இரு தலைப்புகளில் பேச்சுப் போட்டியையும், கட்டுரைப் போட்டியையும் நடத்திப் புத்தகப் பரிசுகள் வழங்கும் யோசனையையும் முன் வைத்தோம். புத்தகப் பரிசுகளையும், அதற்கான சான்றிதழ்களையுத் தர அகத்தியர் இலக்கிய மன்றம் முன்வந்தது.
இந்த யோசனை அறிவுத் திருவிழாவை நடாத்துவதில் புதிய மாற்றத்தைத் தந்தது. அதன்படி பள்ளிகளில் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு, பள்ளிகளில் அவர்களுக்கு உகந்த ஒரு நாளில் அறிவுத் திருவிழாவை நடத்திக் கொள்ளும் யோசனையைத் தன்னார்வமாக ஏற்றுக் கொண்டு, மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியான செங்காந்தள் அறிவுத் திருவிழாவை நடாத்த முன் வந்தார் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், தென்காரவயல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் க. தர்மராஜ் அவர்கள்.
மிகச் சிறப்பாக பனிரெண்டாவது அறிவுத் திருவிழாவை ஆசிரியர் க. தர்மராஜ் அவர்கள் தம் ஆசிரியத் தோழமைகளோடு கைகோர்த்துத் தம் பள்ளியில் நடாத்தித் தந்தார்கள். அறிவுத்திருவிழாவோடு ஆசிரியர் க. தர்மராஜ் அவர்கள் தம் பள்ளியை எழிலோடும், பசுமையோடும், தூய்மையோடும், ஒழுங்கோடும் பராமரிக்கும் பாங்கையும் கண்டு வியந்தோம்.
அறிவுத் திருவிழாவை அவர் நடாத்தியப் பாங்கோடு, அவர் பள்ளியின் பாங்கையும் கீழே இணைப்பில் உள்ள காணொலியில் நீங்கள் காணலாம்.
            பனிரெண்டாவது செங்காந்தள் அறிவுத் திருவிழாவின் மூலம் 52 புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்த்துள்ளோம். அத்துடன் அறிவுத் திருவிழா நடக்காத இந்த ஒன்றரை ஆண்டுகளில் பள்ளிகளின் தேவைகளுக்காகவும், பரிசுகளுக்காகவும் புத்தகங்களை செங்காந்தள் மூலமாக புத்தக ஆர்வலர்கள் வாங்கிக் கொண்டே இருந்தனர். அப்படி வாங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 419 ஆகும். ஆக 471 புத்தகங்களை 11 வது அறிவுத் திருவிழாவிலிருந்து 12 வது அறிவுத் திருவிழா வரை கொண்டு சேர்த்துள்ளோம்.
செங்காந்தள் அறிவுத் திருவிழாவின் இலக்கு ஒரு லட்சம் புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்ப்பதாகும். அவ்விலக்கில் செங்காந்தள் பயணித்துள்ள இலக்கின் தூர கணக்கு :
அறிவுத் திருவிழாவின் இலக்கு
ஒரு லட்சம் புத்தகங்கள்
11 வது அறிவுத் திருவிழா வரை அடையப்பட்ட இலக்கு
2751 புத்தகங்கள்
12 வது அறிவுத் திருவிழாவில் அடையப்பட்ட இலக்கு
471 புத்தகங்கள்
12 அறிவுத் திருவிழா வரை
அடையப்பட்ட இலக்கு
3222 புத்தகங்கள்
அடைய வேண்டிய இலக்கு
96778 புத்தகங்கள்
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் 12 வது செங்காந்தள் அறிவுத் திருவிழாவை நடாத்துவதில் துணை நின்ற தென்காரவயல் பள்ளிக்கும், அப்பள்ளியின் தலைமையாசிரியர் க. தர்மராஜ் உட்பட அப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கும், மாணவர்களுக்கான புத்தக பரிசோடு, சான்றிதழ்களை வழங்கும் அகத்தியர் இலக்கிய மன்றத்துக்கும் செங்காந்தள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...