7 Mar 2020

பொண்ணு நல்லா இருக்கா?!

செய்யு - 380

            என்னடா இது! பரீட்சையில கூட இம்மாம் கஷ்டமா கேள்விய கேக்க மாட்டாம். அப்பிடி ஒரு கேள்விய கேக்குறாங்களேன்னு யோசிச்சுப் பாத்தாம் விகடு. அப்பங்காரரும், அம்மாக்காரியும் வந்துப் பாத்துப்புட்டு, பெறவு நம்மள அழைச்சிட்டு வந்து காட்டுனா, அதுதாங் நமக்கேத்த பொண்ணா இருக்குமுன்னு அவனா மனசுக்குள்ள சட்டுபுட்டுன்னு ஒரு கணக்கெ போட்டுக்கிட்டு எந்தப் பதிலையும் சொல்லாம தலைய ஒரு ஆட்டுத்தாம் ஆட்டுனாம் தலையாட்டிப் பொம்மை மாதிரிக்கி. தஞ்சாவூரு ஜில்லாவுல வந்து பொண்ணப் பாத்துப்புட்டு தஞ்சாவூரு தலையாட்டி பொம்மை மாதிரிக்கி தலையாட்டலன்னா எப்பிடிங்கிற மாதிரிக்கித்தாம் இருக்குது அவ்வேம் தலையெ ஆட்டுறது.
            "அதாங் பைய்யேம் பிடிச்சிட்டுன்னு சொல்லிப்புட்டாம். மேக்கொண்டு பேச வேண்டியதெ பேசிப் போடுங்க!" அப்பிடிங்கிது இப்போ அந்த ஊருக்காரப் பெரிசுளும், பொண்ணோட தாய்மாமனுங்களும்.
            "ன்னா வேணும்னு சொல்லுங்க. பண்ண தயாரா இருக்காம சாமிமலெ ஆச்சாரி! ஆயி தவமா தவமிருந்து பெத்தப் பொண்ணு. அத்து பொறந்த பிற்பாடுதாங் வூடு கட்டுனேம், அத்து பொறந்த பிற்பாடுதாங் நாலு எடத்தெ வாங்கி வூட்ட கட்டிப் போட்டு தஞ்சார்ல வாடகைக்கி விட்டுருக்கேம், அத்து பொறந்த பிற்பாடுதாங் கொல்லம்பட்டியில கடெ வெச்சி பெரிய ஆளா ஆனேம், அத்து பொறந்த பிற்பாடுதாம் எல்லாம் நமக்கு"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "ஆம்மா! அத்து பொறந்த பிற்பாடுதாங் மாப்புள்ளைய பாத்து இப்போ கலியாணமும் பண்ணி வைக்கப் போறேம்ன்னு அதையுஞ் சேத்துக்க வேண்டியதுதாங்!"ன்னு முருகு விகடுவோடு காதோட காதா சொல்ல அவனுக்குப் பொண்ணு எப்பிடி இருக்குறதுங்றது இப்போ மறந்து சிரிப்பு வந்துப்புடுச்சி. இதெ பாத்துப்புட்டு ஊருக்கார பெரிசு ஒண்ணு, "பாரும்வே! இப்போவே மாப்பிள்ளைக்கி சிரிப்பாணியாயிடுச்சி மாமனாரு பெரிசா செய்யப் போறாம்ன்னு!" அப்பிடிங்கிது. விகடு சிரிச்சதுக்கான காரணம் ஒண்ணா இருக்கு, அதெ அர்த்தம் பண்ணுற ஊருக்கார சனங்களோட காரணம் வேறொன்னா இருக்கு. இதுக்குத்தாம் பொது எடத்துல பொதுவா எந்த உணர்ச்சியையும் காட்டாம அம்முகுளியா இருக்கணும் போலருக்குன்னு நெனைச்சிக்கிறாம் விகடு.
            "ஒஞ்ஞ பொண்ணுக்கு நெறைவா என்ன பண்ணணும்னு நெனைக்கிறீங்களோ அதெ பண்ணி அனுப்பிவிடுங்க! கட்டுன பொடவையோட பொண்ண அனுப்புனாலும் சரித்தாம். எஞ்ஞ அத்தானும் அக்காவும் ஒண்ணுஞ் சொல்லாது"ங்குது வீயெம் மாமா.
            "இந்தப் பேச்சுல்லாம் செல்லுபடியாவாது. ன்னா வேணும்னு லிஸ்ட் போட்டு சொல்லிப்புடணும். மொத பொண்ணு. மொத தேவ இத்து இந்த சாமிமலெ ஆச்சாரிக்கு."ங்றாரு சாமிமலெ ஆச்சாரி கொரல ஒசத்தி.
            "ச்செரி! அப்பிடின்னா சொல்லிப்புட வேண்டியதுதாங். நகெநட்டு ஒரு இருவது செஞ்சிடுங்க. கட்டிலு, பீரோ, சாமாஞ் செட்டுன்னு செய்யுற சீரு சனத்தியெ பண்ணி கலியாணத்தையும் முடிச்சி வுட்டுப்புடுங்!"ங்குது வீயெம் மாமா.
            "அதல்லாம் வாணாம்!"ன்னு வாயெடுக்குறாங் விகடு.
            "இந்தாருப்பா! இவனெ அழைச்சிக்கிட்டு மொதல்ல வெளியில போ! பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லீட்டீல்ல. இனுமே பெரியவங்க நாஞ்ஞ பேசிப்பேம். கெளப்பிட்டுப் போ வெளியில!"ன்னு முருகுகிட்டெ சொல்லுது வீயெம் மாமா.
            முருகு விகடுவ கெளப்பிக்கிட்டு வெளியில வர்றாம்.
            "ஏம் இப்பிடி?"ங்றாம் விகடு.
            "அதெல்லாம் அப்பிடித்தாங். தாய்மாமனுவோ அப்பிடி ஒரு ரவுசுத்தனத்தெ பண்ணிட்டுத்தாம் நிப்பானுங்க. மாப்ளதாம் பெரிசுன்னு இந்தப் பக்கம் பேசுவானுவோ, பொண்ணுத்தாம் பெரிசுன்னு அந்தப் பக்கம் பேசுவானுவோ! எஞ்ஞ அலைஞ்சாலும் இப்பிடி ஒரு மாப்பிள்ளையப் பிடிக்க முடியாதுன்னு இவனுவோ பேசுவானுவோ. அதெ கணக்குக்கு எஞ்ஞ தேடி அலைஞ்சாலும் இப்பிடி ஒரு பொண்ண பிடிக்க முடியாதுன்னு அவனுங்க பேசுவானுவோ. அப்பிடில்லாம் பேசலன்னா அதெல்லாம் பொண்ணு பாக்குற கணக்குலயே சேத்துக்கிட மாட்டோனுவோ. இத்து ஒரு பொழப்பு. ஒண்ணும் பண்றதுக்கில்லே. கல்யாணம் முடியற வரைக்கிம் இப்பிடித்தாம் சண்டியரு கணக்கா முறுக்கிக்கிட்டுப் பேசிட்டுத் திரிவானுவோ. பேசுறதெ பேசட்டும். நாம்ம பெறவு பாத்துக்கிடலாம். அவுங்க ஒண்ணுமே செய்யாட்டியும் ஏஞ் செய்யலன்னு நீயி கேக்கவாப் போறே? யில்லே ஒம்மட அப்பங்காரரோ, அம்மாக்காரியோ கேக்கவா போவுது. சபைங்றது அப்பிடித்தாம். அதெ வுடு. இம்மாம் செய்யணும்னு இந்தப் பக்கம் நிக்குறதும், நாம்ம அதெ தாண்டிச் செய்வேம்னு அந்தப் பக்கம் நிக்குறதையும் காட்டுமிராண்டித்தனமா பண்ணிட்டுக் கெடப்பானுவோ இவனுங்க. வேற பேச வேண்டியது எதாச்சிம் இருந்தா பேசு."ங்றாம் முருகு.

            "வேறென்ன... அத்து வந்து... நீயி பொண்ணப் பாத்தியா? எப்பிடி இருக்கு?"ங்றாம் விகடு இப்போ பொண்ணு ஞாபவம் வந்து.
            "அட கருமத்‍தெ! அதுக்குத்தாம்டா வந்தே! அதெ பாக்காம என்னத்தெ பாத்தே?"ங்றாம் முருகு.
            "அந்த ஆல்பத்தெ பாத்துட்டு இருந்த நேரத்துல பொண்ண கொண்டாந்து உக்காத்திப்புட்டாங்க. அதெ நாம்ம கவனிக்கலெ. நாம்ம கவனிக்கிறப்போ அத்து எழுந்துப் போயிடுச்சி. பொண்ணு நல்லாத்தான்னா இருக்கு?"ங்றாம் விகடு.
            "அடப் பாவியோளா! பொண்ணு எப்பிடி இருக்கான்னே தெரியாம இஞ்ஞ ஒருத்தம் நிக்குறாம். அத்து தெரியாம மாப்பிள்ளைக்கு இன்னது பண்ணு, அன்னதெ பண்ணுன்னு நின்னுகிட்டு இவனுவோ இருக்கானுவோ. அப்பிடி இவுனுவோ எதச் சொன்னாலும் அதெ தாண்டிச் செய்வேம்ன்னு அவனுவோ தாண்டி தலைகுப்புறாப்புல விழுவுறானுவோ. எலே பொண்ண மறுபடி வேணும்னா வாரச் சொல்லிடாலாம்லா!"ங்றாம் முருகு.
            "அதெல்லாம் வாணாம். கலியாணமே நடந்துட்டாப்புல பேச்சு நடக்கிது. நீயி வேற குண்டெ தூக்கிப் போட்டுட்டு வந்திடாதில்லா. பொண்ணு நல்லாருக்கில்லா!"ங்றாம் விகடு.
            "அதாம்டா சொல்றேம். நீயி கட்டிக்கப் போற பொண்ணு, அத்து நல்லா இருக்கா இல்லியான்னு நீதாம்டா முடிவெ பண்ணும். அதெ வுட்டுப்புட்டு எங்கிட்டெ பொண்ணு ந்நல்லா இருக்கா இல்லியான்னு கேட்டாக்க நாம்ம என்னத்‍தெ சொல்றது? ஏம்டா இப்பிடி நமக்குன்னு வந்து வாய்குதியேளே? நல்ல மாமனாருடா ஒன்ற மாமனாரு. பொண்ணெ காட்டற நேரத்துல ஆல்பத்தெ காட்டி ஒங் கண்ணுல மண்ணத் தூவிட்டுப் போயிட்டாரு! நீயும் பேமேன்னு ஏமாந்துப் போயிட்டே. ஒந் தலையெழுத்து முடிவாயிடுச்சி. அதாங் பொண்ணு. அதுக்கு நீந்தாம் மாப்ளே. தப்பிக்க வழியில்ல. மாட்டிக்கிட்டாங் மாப்புள மாட்டிக்கிட்டாங்"ங்றாம் முருகு.
            இங்க இவுங்க இப்படி பேசிட்டு இருக்குறப்போ, அங்க காரசாரமா செய்வினை, கொடுப்பினைன்னு என்னனென்னவோ பேச்சு நடக்குது. ரெண்டுப் பக்கத்துலயும் தாய் மாமனுங்க தோளுல துண்டெ போட்டுக்கிட்டு முறுக்கிக்காத கொறைக்கி பேசிக்கிறாய்ங்க. அதெ தாண்டி சாமிமலெ ஆச்சாரி அவரோட பேர்ர மூச்சுக்கு முந்நூறு தடவெ சொல்லிச் சொல்லி முறுக்கிக்கிறாரு. கடைசியா எல்லாம் ஒருவாறா முடிஞ்ச பிற்பாடு சாப்பாடு நடக்குது. அப்பிடி சாப்பாடு நடக்குறப்பயும் விகடு கேக்கறாம் முருகுவப் பாத்து, "பொண்ணு பரவாயில்லல்லா!"ங்றாம். "எலே அந்தப் பொண்ண வாரச் சொல்லியே சாப்பாட்டா போடச் சொல்றேம்டா! ந்நல்லா நீயே பாத்துகிட்டு நல்லா இருக்கா, இல்லியான்னு முடிவெ பண்ணிக்கடா! இப்பிடி ஆவும்ணு தெரிஞ்சா ஒங் கூட பொண்ண பாக்க வந்திருக்கவே மாட்டேம்டா!"ங்றாம் குசுகுசுன்னு.
            "அப்பிடில்லாம் பண்ணிப் புடாதே. நீயி நல்லா இருக்குன்னு ஒத்தெ வார்த்தெ சொன்னாக்கா கொறைஞ்சாப் போயிடுவே?"ங்றாம் விகடுவும் குசுகுசுன்னு.
            "என்னெ அங்கே மாப்ளே பைய்யேம் ஏத்தோ சொல்ல வாயெடுக்குறாப்புல? செய்முறைப் பத்தலேன்னா இன்னுஞ் செய்ய தயார்ரா இருக்காம் இந்தச் சாமிமலெ ஆச்சாரி! என்ன வேணுமாம் கேட்டுச் சொல்லுங்க மாப்புள்ளெ சிநேகிதனே?"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "இவ்வேம் ஒருத்தேம்! எதுக்கெடுத்தாலும் சாமிமலெ ஆச்சாரி சாமிமலெ ஆச்சாரின்னுகிட்டு. எலே விகடு ஒந் தலையெழுத்துடா நீயி மாப்புள்ளையா வந்த பிற்பாடு சாமிமலெ ஆச்சாரி, சாமிமலெ ஆச்சாரிங்ற வார்த்தையையே ஒரு நாளைக்கி நூறு தடவெ கேக்கணும்னு ஒந் தலையில சாவம் எழுதியிருக்குடா!"ங்றாம் விகடுவோட காதோட காதாக குசுகுசுன்னு.
            "என்ன வேணுமாமாம் மாப்புள்ளைக்கி? கேட்டுச் சொல்லணும்!"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி மறுக்காவும்.
            "ம்! சொரைக்காயில உப்புப் பத்தலையாம். கொஞ்சம் கொண்டாந்து போட்டா சவுரியமா இருக்கும்."ங்றாம் முருகு.
            "மாப்புள்ள வூட்டுக்காரச் சனங்களுக்குக் குசும்பு சாஸ்திதாம் போலருக்கு!"ங்றாங்க கொல்லம்பட்டிக்காரவுக.
            ஒரு வழியா சாப்பாடுல்லாம் முடிஞ்சி வேனு கெளம்புது. "மாப்ள ன்னா சொல்றாரு?"ங்றாரு வேலங்குடி சின்னவரு முருகுகிட்டே.
            "சாப்பாட்டுல வெச்சாங்களே ஜிலேபி! அத்து கடையில வாங்குனதா? வூட்டுல செஞ்சதான்னு கேக்குறாம்!"ங்றாம் முருகு.
             "யே யப்பாடி ஒஞ்ஞ குசும்பு ஒலக மகா குசும்புடா மக்கா!"ன்னு சிரிச்சிக்கிட்டே ஒண்ணுஞ் சொல்லாம ஒதுங்குறாரு வேலங்குடி சின்னவரு.
            "பாத்தியா மாப்புள பைய்யா? வேறென்ன?"ங்றாம் முருகு.
            "பொண்ணு ந்நல்லா இருக்குத்தானே?"ங்றாம் விகடு சொன்னதெ சொல்லுற கிளிப்புள்ள போல.
            "பார்ரேம் இப்போ! பொண்ண கொண்டாங்கன்னு வேனுல கொண்டாந்து ஏத்தலே!"ன்னு வீம்பா எறங்கப் போன முருகு கையப் பிடிச்சி இழுத்து வேனுக்குள்ள உக்கார வைக்கிறாம் விகடு.
            "ன்னா கெளம்புலாம்ல!"ன்னு கொரல கொடுக்குறாரு வேனு டிரைவரு. வேனு முன்னாடி போய்கிட்டு இருக்கு. விகடுவோட மனசு பின்னாடி போயிட்டே இருக்கு. பொண்ணு எப்பிடி இருக்கும்ன்னு. கடவுளு வந்து தரிசனம் கொடுத்தாராம், அந்த நேரத்துலயும் பூசாரியையே பாத்துட்டு இருந்தானாம்ன்னு சொல்லுவாங்கயில்ல. அப்படியாயிடுச்சு விகடுவோட நெலமெ. பாக்கப் போனது பொண்ண, பாத்துட்டு வந்தது பொண்ணோட அப்பங்கார்ரேம் கொடுத்த ஆல்பத்தெ.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...